சனி, மார்ச் 03, 2012

அரசியல், இலக்கியம், சமூகத்துடன் ஒன்றாமல் தனித்தியங்குவதா கலைகள்?

சிற்றிதழ் அறிமுகம் : - மணல்வீடு - 18. 
அரசியல், இலக்கியம், சமூகத்துடன்  ஒன்றாமல் தனித்தியங்குவதா கலைகள்? 
                                                                                                        -மு. சிவகுருநாதன்சிறு பத்திரிகைகள் என்று சொல்லப்பட்டவையெல்லாம் பெரிய கார்ப்பரேட் பத்திரிக்கைகளாக மாறி வரும் நிலையில் 'மணல் வீ'டு' போன்ற ஒன்றிரு சிற்றிதழ்கள் வெளி வருவது பாராட்டக்கூடிய ஒன்று.  ஜனவரி 2012-ல் மணல்வீட்டின் 18-வது முதல் 72 பக்கங்களில் மலர்ந்துள்ளது.
 ஜெயமோகனை விழாவிற்கு அழைத்த காரணத்தால் தோழர் பொதியவெற்பன் பிணங்கிக் கொண்டு இனி மணல்வீட்டில் எழுதுவதில்லை என்று சொன்னதாக  தலைவாசல் பகுதியில் ஆசிரியர் மு. ஹரிகிருஷ்ணன் பதிலளித்திருக்கிறார்.  
            ஒருவரது அரசியல் நிலைப்பாடுகளில் முரண்படுவதால் மாற்று உள்ளுறைகளை மறுத்து நிராகரிப்பது, தொடர்பறுப்பது, புறக்கணிப்பது எல்லாம் அறிவு நேர்மையற்ற செயல் என்றும் அரசியல், இலக்கியம், சமூகம் சார்ந்த வி­யங்களில் ஜெயமோகனிடம் தனக்கு ஒவ்வாமை உண்டு என்றும் கலைகள் பற்றிய அவரது அவதானிப்பு தனக்கு அணுக்கமாக இருக்கிறதென்றும் ஹரிகிருஷ்ணன் தெரிவிக்கிறார். ஜெயமோகனிடம் ஏதாவது அறிவு நேர்மை இருக்கிறதா? 
 அரசியல், இலக்கியம், சமூகத்துடன் எவ்வித ஒட்டுறவு இல்லாமல் தனித்தியங்குவதுதான் கலையா என்பதை மு.ஹரிகிருஷ்ணன்தான் நமக்கு விளக்க வேண்டும்.  ஒழுக்கசீலர்கள், உயர்குடி பிறந்தோர் பட்டியலில் ஜெயமோகன் வருகிறார் போலும்!.  உயர்குடியா - உயர்த்தப்பட்ட குடியா - மொழி கூட களங்கப்பட்டுதானே கிடக்கிறது! இவ்விஷ­யத்தில் நான் தோழர் பொதி பக்கமே நிற்கிறேன்.  
        ஜெயமோகன் பற்றி அவரது தொண்டரடிப்பொடிகள் உருவாக்கியிருக்கும் பிம்பங்களுக்குள் மு.ஹரிகிருஷ்ணனும் சரணடைவதை பொதியைப் போலவே என்னாலும் ஏற்றுக் கொள்ளவியலவில்லை.  எனினும் 'மணல்வீடு' போன்ற சிற்றிதழை இதற்காக நிராகரிக்க முடியாது.  எனவேதான் இந்த அறிமுகப் பதிவு செய்யப்படுகிறது.

இவ்விதழில் வெளியாகியுள்ள கூத்துக்கலைஞர் கூலிப்பட்டி சுப்ரமணி வாத்தியாரின் வாய்மொழிப் பதிவு 'தாவரத்து நெல்லுஞ்சேரி, தாசியோட ஒறவுஞ்சேரி' குறிப்பிடத்தக்கது.  ''வடிகட்டி எழுதப்பட்டவைதான் வரலாறு. முட்டியில் ஊறியிருக்கும் பதநீரே முழு ருசியானது.  பூச்சி பொட்டுக்களோடு பொங்கும் நுரை தள்ள பருகுமின்பம், அருந்தியவர்களுக்குத் தானே தெரியும்!'' என்ற பின்குறிப்பு நிதர்சனத்தை வெளிக்கொணர்கிறது.

பொதிகைச் சித்தரின் வெட்டவெளிப் பக்கங்களில் 'விதி சமைக்கும் அதி மனிதரும் விஷ்ணுபுரம் வட்டத் தொட்டியும்' பொதி தன்னுடைய வழக்கமான பாணியில் ஜெயமோகனின் பிம்பங்களைக் கலைத்துப் போட்டுள்ளார்.  அவர் அளிக்கும் மேற்கோள்கள் கட்டுரையை விழுங்கிவிடும் அபாயமிருக்கிறது.  எனவே இவற்றைக் குறைத்தல் நன்றெனத் தோன்றுகிறது.  
      ஜெயமோகனை விழாவுக்கும் அழைப்போம்; இந்த மாதிரியான விமர்சனங்களையும் வெளியிடுவோம் என்று ஆசிரியர் இதன் மூலம் சொல்வதாக இருக்கிறது.  இக்கட்டுரையை வெளியிட்ட பிறகு இனி ஜெயமோகன் உங்கள் விழாக்களுக்கு வரப்போவதில்லை என்பதே என் முடிவு.  பல மணல்வீடு இதழ்களில் மூலம் பொதியின் கட்டுரையும் மணல்வீட்டில் ஓர் அடையாளமாக ஆகிப் போன நிலையில் அவரும் தன் முடிவை மாற்றிக் கொள்வாரென்று நம்புகிறேன்.

இந்த இதழில் நோவித் பார்சி நாடக மொழி பெயர்ப்பு ஒன்றும், பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' நாவல் விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.  
சு. வேணுகோபால், கணேசகுமாரன், சு. செங்குட்டுவன் ஆகியோரின் சிறுகதைகள் மூன்று வெளியாகியுள்ளது. 

சூரியநிலா,  வா.மு.கோமு,   அன்பாதவன், தேவேந்திர பூபதி, இசை, 
பா. வெங்கடேசன், பிரேம பிரபா ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.  கவிதைத் தேர்வு மிகவும் இணக்கமாக உள்ளது.  வா.மு.கோமு சிறுகதையில், நாவல்களில் சொல்வதைத்தான் தனது கவிதைகளிலும் மீளச் சொல்கிறார்.  கவிதைகளின் பாடுபொருள் சலிப்பிற்குப் பதிலாக பலருக்கு சுவாரசியத்தை வரவழைக்கக் கூடும். 


சிற்றிதழ்கள் அருகிவரும் சூழலில் மிகுந்த சிரமப்பட்டாவது இதழைக் கொண்டு வர ஹரிகிருஷ்ணன் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது வாழ்த்துக்கள்.  இதழ் தொடர்ந்து வெளிவர வேண்டியது தமிழ்ச் சூழலில் மிகவும் அவசியமான ஒன்று.

மணல்வீடு - இரு மாத இதழ்
ஜனவரி 2012. விலை ரூ. 50. ஆண்டு சந்தா ரூ. 100.  
ஆசிரியர்: மு. ஹரிகிருஷ்ணன்
தொடர்பு முகவரி: 
ஏர்வாடி, 
குட்டப்பட்டி - அஞ்சல், 
மேட்டூர் வட்டம், 
சேலம் மாவட்டம்.  
செல்: 9894605371.  
மின்னஞ்சல்: manalveedu@gmail.com 
                www. kalarie.in

2 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

தாமதமாக இருந்தாலும் நட்சத்திர வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்துக்கள்.

மு.சிவகுருநாதன் சொன்னது…

எனது பதிவு குறித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.

தோழமையுடன்...

மு.சிவகுருநாதன்

கருத்துரையிடுக