வியாழன், ஏப்ரல் 03, 2025

04. புத்தர் பற்றிய கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

04. புத்தர் பற்றிய கதைகள்

மு.சிவகுருநாதன்


 

               சித்தார்த்தர் வெளியுலகத் தொடர்பின்றி மிக ஆடம்பரமான அரண்மனையில் வளர்க்கப்பட்டார். ஒருகட்டத்தில் அவருக்கு ஆடம்பர வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது. பசி, மூப்பு, பிணி, இறப்பு  ஆகிய நான்கு துன்பங்கள் மக்களை வாட்டி வதைப்பதைக் கண்டு  துயரம் கொண்டார். மனித வாழ்க்கையின் துன்பம் சித்தார்த்தரை வெகுவாகப் பாதித்தது. இதிலிருந்து மனித இனத்தை மீட்க வழி காண விரும்பினார். எனவே தனது 29 ஆம் வயதில் மனைவி யசோதரையையும், மகன் ராகுலனையும் விட்டு வெளியேறி பெரும்துறவு மேற்கொண்டார்.

      மேற்கண்ட புனைவுக் கதையாடல் இங்கு தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. அறிவியலில் மட்டும் ஏன்? எதற்கு? எப்படி? என்று வினாக்கள் எழுப்பினால் போதாது. சமூகவியலிலும் இம்மாதிரியான வினாக்கள் எழவேண்டும். அப்போதுதான் பொய்மைகள் அம்பலப்பட்டு உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். இக்கதைகளில் ஏதேனும் நம்பகத்தன்மை இருக்க முடியுமா? புத்தர் பிறந்த சில நாட்களிலேயே அவரது தாய் மாயாதேவி இறக்கிறார். பிறகு சித்தி கவுதமியால் வளர்க்கப்பட்டார். (கவுதமி மாயாதேவியின் மூத்த சகோதரி என்றும் சொல்வர்.) புத்தர் 29 வயது வரையிலும் தாயின் மரணத்தையும் இறப்பு என்பதையும் அறியாமல் இருந்தாரா? அவர் வாழ்ந்த இடத்தில் யாருக்கும் உடல்நலம் பாதிக்கப்படவில்லையா, வயதானவர்கள் இல்லையா, போர்கள் (இனக்குழு மோதல்கள்) நடக்கவில்லையா, அவற்றில் யாரும் இறக்கவில்லையா? ஆண்டுகள் கடந்தால் மூப்பு ஏற்படும் என்பதையும் அவர் எப்படி உணராமல் இருக்கவியலும்?

       நான்கு காட்சிகள் போன்ற புராணக்கதைகளை ஒத்த செய்திகளை அண்ணல் அம்பேத்கர் அறிவுப் பூர்வமற்றது என மறுக்கிறார். புத்தரின் துறவிற்கான உண்மைக் காரணத்தையும் கண்டடைகிறார். போர் மறுப்பிற்கு அழுத்தம் தருகிறார். டி.டி.கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்ற வரலாற்று அறிஞர்களின் நூற்கள் வாயிலாகவும் இவற்றிற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இருப்பினும் பவுத்த நூல்களில் இவை தொடர்ந்து எழுதப்பட்டே வருகின்றன. மாற்று வரலாறுகளை எழுதிய மயிலை சீனி.வேங்கடசாமி பிற்காலப் பவுத்த நம்பிக்கைகளான இவற்றைப் பற்றி ஒன்றும் பேசாமல் கடந்து விடுகிறார்.

      இங்கு வரலாற்றிற்கும் புனைவிற்குமான இடைவெளிகளே இல்லை எனலாம். தமிழகத்தில் கல்கியின் நாவல்களைப் படித்துவிட்டு தமிழக வரலாறு எழுதுபவர்கள் அதிகம். புனைவை வரலாறாக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது மிகவும் வசதியாகவே இருக்கிறது. புனைவை வரலாறு ஆக்குவது மட்டுமல்ல; வரலாற்றை புனைவாக உற்பத்தி செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. உலக அளவில்  வரலாற்று ஆய்வுகளில் நாம் பின்தங்கியிருப்பதற்கு இதுவும் ஓரு காரணம்.

      கி.மு. 600வாக்கில் கங்கை பள்ளத்தாக்கில் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தனித்தனி சமூகக் குழுக்கள் அக்கம் பக்கமாய் நிலவினஎன்று சொல்கிறார் டி.டி. கோசாம்பி. (இந்திய வரலாறு ஓர் அறிமுகம்) புத்தர் வாழ்ந்த காலகட்டத்திற்கு முன்பு கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்தே  வடஇந்தியாவில் மகாஜன பதங்கள்எனும் இனக்குழு குடியரசுகள் 16 இருந்தன. அவைகள் பின்வருமாறு: 1. அங்கம் 2. மகதம் 3. கோசலம் 4. காசி 5. வஜ்ஜி 6. மல்லம் 7. கேதி 8. வத்சம் 9. குரு 10. பாஞ்சாலம் 11. மத்ஸ்யம் 12. சூரசேனம் 13. அஸ்மகம் 14. அவந்தி 15. காந்தாரம் 16. காம்போஜம். பின் வேதகாலத்திலும் கங்கைச் சமவெளியில் கோசலம், விதேகம், குரு, மகதம், காசி, அவந்தி, பாஞ்சாலம் போன்ற அரசுகள் தோன்றின. இவற்றில் அரசப் பதவி பரம்பரையானது. இதுவே முடியரசுகள் ஆகும். இவை இரண்டிற்கும் காலவேறுபாடு உண்டு.

     பரம்பரை முடியாட்சிக்குப் பதிலாக குடியாட்சி அரசாக விளங்கியதுதான் இவற்றின் சிறப்பு அம்சம். ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுக்கென்று  சங்கத்தை (கணங்கள் / கோத்திரங்கள்) ஏற்படுத்தியிருந்தன. இந்த சங்கத்திற்கு சன்ஸ்தகார்என்று பெயர். இச்சங்கம் தங்களது இனக்குழுத் தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. சங்கத்தில் வருண வேறுபாடின்றி வயதுவந்த ஆண்களும் பெண்களும்  இடம்பெற்றனர். புத்தர் வாழ்ந்த காலத்தில் நடப்பில் இருந்து வந்த பல்வேறு கணங்கள் குறித்த தகவல்கள் மூலம் பண்டையப் பொதுவுடைமைச் சமுதாயங்களின்  மிச்ச சொச்சங்களைக் காணமுடியும். பேரரசுகள் உருவாகாத இக்காலத்தில் புத்தர் பிற்காலச் சூழலுக்கேற்ப இளவரசர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார். இது உண்மையல்ல.

     பொதுவான பிரச்சினைகளில் சங்கத்தைக் கூட்டி விவாதித்து முடிவு எடுக்கவும் கருத்து வேறுபாடு இருக்கும்போது வாக்கெடுப்பு நடத்துவதும் வழக்கில் இருந்தன. சங்கத்தில் இடம் பெற்றிருந்த ஆண்-பெண் அனைவரும் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவைச் செயல்படுத்தும் அதிகாரம் சங்கத்திற்கு இருந்தது. எனவேதான் இதை குடியாட்சி அரசுகள் என்று நாம் வரையறுக்கிறோம். நம்மூரில் திருவுளச்சீட்டு குடவோலை முறையைத்தான் மக்களாட்சி என்று போலிப்பெருமை பேசித் திரிகிறோம்.

        ரோகிணி ஆற்று நீரைப் பங்கிடுவது குறித்து புத்தரது சாக்கிய இனக்குழுவிற்கு மற்றொரு இனக்குழுவாகிய கோலியர்களுக்கும் பகை உண்டாகிறது. இது குறித்து முடிவெடுக்க சாக்கிய இனக்குழுப் பேரவை கூட்டப்படுகிறது. கோலியர்கள் மீது படையெடுக்க வேண்டுமென பேரவையில் வலியுறுத்தப்படுகிறது. புத்தர் போர் வேண்டாம், பேசிப் பார்க்கலாம் என மன்றாடுகிறார். உடன் வாக்கெடுப்பு நடக்கிறது. அவரது  கருத்திற்கு ஆதரவில்லை. கோலியர்களுடன் போர் என முடிவிற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கிறது.  

       இனக்குழு மரபுப்படி இம்முடிவுகளை ஏற்காதவர்கள் அனைத்து இனக்குழு உரிமை மற்றும் உறவினர்களையும் விட்டு வெளியேறிவிடுவதுதான்  ஒரே வழி. எனவே புத்தர் தம் மனைவி மக்களைத் துறக்கிறார். இதுவே புத்தர் துறவறம் பூண்ட வரலாறாகும். இப்படி சமூகத்தை விட்டு வெளியேறி மாற்று வழிமுறைகள் பற்றிச் சிந்தித்த பலர் அன்று வாழ்ந்தனர். இவர்கள் பிராமண வேதங்கள், உபநிடதங்களுக்கு எதிராக நின்றதால் சிரமணர்கள் எனப்பட்டனர். இவர்கள் வருணத்தை மறுத்தல், வேள்விகளை எதிர்த்தல் மறுக்கப்பட்ட அனைவருக்கும் கல்வியளித்தல் போன்ற எதிர்க் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களிடமிருந்து உருவானவையே அவைதீக (heterodox) சமயங்களாகும். இவை  கடவுள் (இறை) மறுப்பு, வருண (சாதி) மறுப்பு, வேத (மறை) மறுப்பு, வேள்வி (சடங்கு) மறுப்பு ஆகியவற்றை எதோ ஒருவகையில் உள்ளடக்கமாகக் கொண்டன.

      சமணம் பவுத்தத்திற்கு முந்தைய இந்திய ஞான மரபு. அதில் இறுதி மற்றும் 24வது தீர்த்தங்கரர் மகாவீரர். பார்சவநாதர் 23வது தீர்த்தங்கரர். இவர் மகாவீரருக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சமண மரபுப்படி அதன் தோற்றம் மிகவும் ஆதிகாலம் என்று சொல்லப்படுகிறது. இம்மரபு கடவுள் கொள்கையை பொருட்படுத்தவே இல்லை. இவ்வுலகின் படைப்பாளியும், தார்மீக நெறியாளருமாக கடவுள் விளங்குகிறான் என்பதை கனவிலும் கருதவில்லை. சமணத்தின் செயல்பாடுகள் எவ்வளவு விந்தையாகத் தோன்றினாலும் அதன் நாத்திக உள்ளடக்கம் வியப்பைத் தருவதாகும்.  இது அன்றைய சிரமண மரபிற்கு ஓர் உதாரணமாகும்.

     கி.மு. 6 ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறு வகைப்பட்ட 62 தத்துவ, சமயப்பள்ளிகள் செழிப்புற்று  இருந்ததாக பிகநிதயா எனப்படும் பழமையான பவுத்த சமய நூல் குறிப்பிடுகின்றது. மேலும் சமண மரபு 363 பள்ளிகளைச் சுட்டுகிறது. இங்கு நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வைதீகத் தத்துவங்களைப் போல அனைத்தும் சமய நிறுவனமாக மாற்றப்படவில்லை. சமணம், பவுத்தம் கூட மகாவீரர், புத்தர் காலத்திற்குப் பின்பு நிறுவனமயமாக்கலுக்கு ஆட்பட்டது. இதில் பார்ப்பனீய வேத மதத்தின் சூழ்ச்சிகளும் உண்டு. தொடக்கக் கால பவுத்தம் பாலி, பிராகிருத மொழிகளை முன்னிலைப்படுத்தியது. பின்னால் மகாயான பவுத்தம் சம்ஸ்கிருதத்தையும் உயர்த்திப் பிடித்தது.

      புத்தர் பழைய மதங்களின் குருக்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு ஏதுவுமில்லை என்பதை உணர்ந்தார். துறவற  வாழ்க்கையே முக்தி அடைவதற்கான ஒரேவழி என வைதீக மதங்கள் சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால்  துறவறம் மேற்கொண்ட பின்னரும்  புத்தரால் உண்மைக்கான பொருளை உணரமுடியவில்லை. ஒருநாள் இரவு அவர் ஒரு போதிமரத்தின் கீழ் அமர்ந்து  தனது சந்தேகங்கள், தனிமை ஆகியவை  பற்றி சிந்தனை வயப்பட்டிருந்த வேளையில்  அவருக்கு உண்மை ஒளி கிடைத்தது. எல்லா இருப்புகளின் நிபந்தனையாக துன்பம் உள்ளது, பற்று மற்றும் ஆசைகளின் காரணமாகவே துன்பம் உண்டாகிறது, தன்னலம் - பற்று -  ஆசை ஆகியன நீக்கப்பட வேண்டியவை, இவற்றை அட்ட சீலத்தினால் (எண் வழி) வேரறுக்க முடியும் ஆகிய நான்கு உண்மைகளை உரைத்தார்.

         உண்மையைத் தேடிச்செல்ல மனிதனை சுதந்திரமாக்குவது, தீர விசாரித்தறிந்து  மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிவது, இயற்கை கடந்த தத்துவங்களைப் புறக்கணிப்பது  போன்ற புத்தரின் நோக்கங்கள் மனிதனைப் பகுத்தறிவுப் பாதைக்கு வழிநடத்துவதாக அமைபவை. பார்ப்பனீயம் வலியுறுத்தும் தர்மம், கர்மம் போன்றவற்றை தம்மா, கம்மா என தமது அறநெறியால் உடைத்துப் போடுகிறார். அவர்கள் இறைமயப்படுத்தியதை புத்தர் அறமயப்படுத்துகிறார். போரை வெறுத்தல், அகப்பகையை வெல்லுதல், ஒழுக்கத்தை வலியுறுத்துதல், சமத்துவச் சிந்தனை போன்றவை பவுத்த இலக்கியப் படைப்புகளில் முதன்மையாயின.

        புத்தர் கடவுளையோ, ஆன்மாவையோ நம்பவில்லை. எந்த ஒரு வேத நூலையும் ஒப்புக்கொள்ளவில்லை. நான்கு வருணங்களும் சமமானவை என்றார். சிலை வழிபாட்டிற்கு பவுத்தத்தில் இடமில்லை. புத்தர் மாட்டிறைச்சி உண்ணுவதைத் தவறாகக் கருதவில்லை. உணவிற்காக விலங்குகள் கொல்லப்படுவதை புத்தர் தடை செய்யவில்லை. யாகங்கள் மற்றும் சடங்குகளில் கொல்வது என்கிற ஒரே நோக்கத்திற்காக பலியிடுவதை அவர் எதிர்த்தார்; தடை செய்தார். பசுவிற்கு பவுத்த மதத்தில் தனி அந்தஸ்து இல்லை. அக்னியை வழிபடும் பிராமணர்கள் தங்களது வேள்விகளில் விலங்குகளைப் பலியிட்டும் அவற்றைத் தீயிட்டும் வந்த நடைமுறைகளை எதிர்த்தார்.

      பவுத்தத்தில் வழிபடுவதற்குரியவர் என்றோ, பிரார்த்தனை செய்து கொள்ளத்தக்கவர் என்றோ ஒருவரும் இல்லை.  அவதாரம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு கடவுளின் வாரிசுஎன்று பொருள். இதன் அர்த்தம் கடவுள் பிறப்பெடுக்கிறார் என்பதாகும்.  கிருஷ்ணன் தானே கடவுள் என்றும் கீதையை தனது வார்த்தை என்று கூறிக்கொள்கிறார். புத்தரோ தன்னை, கடவுள், கடவுளின் வாரிசு, அவதாரம், இறைத்தூதர், வழிகாட்டி, போதகர் என்று எந்த அடையாளங்களையும் சூடிக்கொள்ளவில்லை.

        புத்தரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும்போது, ஆனந்தன் சங்கத்தினருக்கு அறிவுரை வழங்க வேண்டினார். அதற்குப் புத்தர், “ஆனந்தா! சங்கம் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது? “நான்தான் சங்கத்தின் தலைவன். சங்கம் என்னை நம்பியிருக்கிறதுஎன்று எவன் நினைக்கிறானோ, அவன் அறிவுரைகள் கூறட்டும். நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஆனந்தா உனக்கு நீயே விளக்கா இரு”, என்று சொன்ன புத்தர், தன்னை ததாகதர் (வழிப்போக்கர்) என்றே சொல்கிறார். இவ்வழியே வந்து இப்படியே போனவர்; அவ்வளவுதான்.

     புத்தருக்குப் பின்னர் தலைமையிடத்தில் இருந்த உபாலி (சவரத்தொழிலாளி), சுனிதா (தாழ்ந்தப்பட்ட வகுப்பு), சதி (மீனவர் மகன்), நந்தா (இடையர் சாதி), பந்தகர்கள் (உயர்த்தப்பட்ட சாதிப் பெண்ணுக்கும் ஓர் அடிமைக்கும் பிறந்தவர்கள்), கபா (மான் வேட்டையாடி மகள்), புன்னா, புனிகா (அடிமைகள்), சுமங்களமாதா (பாய்முடையும் பெண்), சுமி (தச்சர் மகள்) ஆகியவர் மூலம் பிறப்பு, தொழில், சமூக அந்தஸ்து ஆகியவற்றில் ஒடுக்கப்பட்டிருந்த விதிகளையும் தடைகளையும் பவுத்தம் தகர்த்து எறிந்தது.

     புத்தரின் மறைவுக்குப் பின் ராஜகிருகத்தில் கூட்டப்பட்ட முதல் சபையில் நடத்தை விதிகள் வகுக்கப்பட்டன. பழமையான விதிகள் காலாவதியானவை என்று ஒரு தரப்பு எதிர்க்க, இரண்டாவது சபை அவர்களை ஏற்க மறுத்து சபையை விட்டு வெளியேற்றியது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட 10,000 பேர் மகாசங்கம்என்ற தனிச்சபை கண்டனர். இவர்கள் மகாயான முன்னோடிகள் பழமையாளர்கள் தேரவாதிகள் எனப்பட்டனர். இவர்கள் ஹீனயான முன்னோடிகள் ஆவர்.

              பவுத்தத்தின் இன்னொரு பிரிவான மகாயானம் கி.பி.முதல் நூற்றாண்டில் செல்வாக்கு பெற்றது. இவர்கள் தங்களை மாபெரும் ஊர்திஎன்று உயர்த்திக் கொண்டவர்கள் தேரவாதிகளை (ஹீனயானிகள்) கீழ்மையான ஊர்திஎனத் தாழ்த்தினர். புத்தகால தொடக்க வடிவங்களிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டனர். கடவுளின் இருப்பை பொய்ப்பிக்க முதல் மகாயான நூலை  நாகார்ஜூனர் எழுதினார். இவரது மாணவர்களால் இதன் உரைகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. பின்பு நேபாள மொழியில் பெயர்க்கப்பட்டது. இந்நூலில் நாத்திக உள்ளடக்கம் இருப்பினும் மாயாவாதத்தைப் பின்பற்றி நிற்பது பெருங்குறையாகப் பார்க்கப்படுகிறது.

       அசோகரின் ஆதரவில் கூட்டப்பட்ட மூன்றாவது சபையில் இரண்டு பிரிவுகள் தோன்றின. பழமைவாதிகளால் (தேரர்கள் அல்லது ஸ்தவிரர்கள்)  11 குழுக்கள் புத்த மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. வெளியேறியவர்கள் (சர்வாஸ்தி வாதிகள்) நாளந்தாவில் தஞ்சமடைந்தனர். பிறகு இவர்கள் மதுரா, காஷ்மீர், காந்தாரம் ஆகிய இடங்களில் பரவினர். இவர்கள் கனிஷ்கர் ஆதரவில் நான்காவது சபையைக் கூட்டி (கி.பி.100) அதில் பெருமளவில் இலக்கிய பணியாற்றினர். அது விபாசம்அல்லது மகாவியாபம்எனப்பட்ட அபிதம்ம வியாசம்எனப்பட்டது. அவர்கள் விபாசத்தின் சீடர்கள் என்ற பொருள்படும்  வைபாசிகர்கள் என அழைக்கப்பட்டனர். வைபாசிக வாதம் வலுவான தரவுகளின் அடிப்படையில் கடவுளின் இருப்பை ஆணித்தரமாக மறுக்கிறது.

           புத்தரின் போதனைகள் அவரது காலத்தில் வரி வடிவம் பெறவில்லை. அவர் பரி நிப்பாணம் அடைந்த பிறகு பாலி மொழியில் அமைந்த அவரது உரைகள் பல்வேறு காலகட்டங்களில் சீடர்களால் தொகுக்கப்பட்டன. அவைகள்தான் இன்றைய பவுத்தத்தின் மூலப் பிரதிகளாக இருக்கின்றன. புத்தரின் மறைவிற்குப் பிறகு அவரது நேரடி சீடரான மகா காசியபன் தலைமையில் 500 புத்த பிக்குகள் முதல் சங்கத்தில் கூடி புத்தரது போதனைகளைத் தொகுத்தனர்.

      100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைசாலியில் சப்பகாம மகாதேரர் (சர்வகாம மகாதேரர்) என்ற பிக்கு தலைமையில் கூடிய இரண்டாம் சங்கம் 700 பிக்குகள் புத்தர் பகவானின் நியமங்களை பரிசோதித்து முறைப்படுத்தியது. மாமன்னர் அசோகர் காலத்தில் பாடலிபுத்திரம் நகரில் கூடிய மூன்றாவது சங்கம், மொக்கலி புத்ததிஸ்ஸ என்ற பிக்குவின் தலைமையில்  1,000  பிக்குகள் ஆய்வு செய்து அபிதம்ம பீடகம் தொகுக்கப்பட்டது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் இலங்கை ஆலுலேனஎன்னுமிடத்தில் கூட்டப்பட்ட நான்காம் சங்கம், வினய பீடகம், சுத்த பீடகம், அபி தம்ம பீடகம் என திரி பீடகங்களை (முக்கூடைகள்) தொகுக்கும் பணியைச் செய்தது.

       பீடகம்என்றால் கூடை என்று பொருள். ஒரு பொருளை ஓரிடத்தில் வைக்கவும் கொண்டு செல்லவும் கூடை உதவுவதுபோல ஞானச் செல்வங்களான மெய்ப்பொருளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்பவை என்பதால் இவை பீடகம் எனப்பட்டன.

         பாலி மொழியில் இயற்றப்பட்ட பீடகங்கள் பவுத்த மதம் பரவிய நாடுகள் எங்கும் பரவியது. சீன, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. பிற்காலத்தில் அட்டகதாபோன்ற உரைநூற்களும் வெளியாயின. மூன்று பீடகங்களும் பல்வேறு உள்பிரிவுகளைக் கொண்டுள்ளன. வினய பீடகம் 5 உட்பிரிவாக உள்ளது. அவை: மகாவக்கம், கல்லவக்கம், பாசித்தியம், பாராஜிதம், பரிவாரம். தம்மசங்காணி, விபங்க, தாதுசுதா, புக்கல பண்ணத்தி, கதாவத்து, யமக, பட்டான ஆகிய 7 உட்பிரிவுகளைக் கொண்டது

       அபிதம்ம பீடகம். தீக நிகாயம், மஜ்ஜிம நிகாயம், சம்யுத்க நிகாயம், அங்குத்தர நிகாயம்,   குத்தக நிகாயம் போன்ற 5 பிரிவை உள்ளடக்கியது சுத்த பீடகம். இவைகள் ஒவ்வொன்றும் பெருநூல் தொகுப்புகளாகும். இவற்றில் சிறப்பு மிக்க தொகுப்பு குத்தக நிகாயம் ஆகும். இத்தொகுப்பில் 15 நூற்கள் அடக்கம். அவற்றில் தம்ம பதம், ஜாதகம் போன்றவை வருகின்றன.

          தம்ம பதம்பவுத்த அறத்தை வலியுறுத்தும் நூலாகும். இதில் 423 சூத்திரங்கள் உள்ளன. புத்தரது போதனைகளில் சிறப்பானது மனத்தைப் பண்படுத்துவதாகும். உலகினின்று தப்பியோட முனைதல் தவறு, துறவிக்குக் கூட தப்பித்தல் சாத்தியமில்லாதது. எனவே தப்பித்தல் அவசியமற்றது. உலகை மாற்றுவதும் அதை இனிமையாக்குவதையும் புத்தர் விரும்பினார். தம்மபத 3வது அதிகாரத்தில் 33லிருந்து 43 முடிய உள்ள சூத்திரங்கள் நிலையற்ற, நிதானம் இல்லாத, அங்குமிங்கும் அலைபாயக்கூடிய, ஆனால் கட்டுப்படுத்தக் கூடிய மனம் சிந்தனை தொடர்பானவை. நான்காவது அதிகாரம் மலர்கள் பற்றியது. இதில் 44 முதல் 59 முடிய உள்ள பாடல்கள் மலர்கள் பற்றிய உவமைகள் மூலமாக புத்த தம்மம் விளக்கப்படுகிறது.

        ஜாதகம் புத்தரின் முற்பிறப்புக் கதைகளைச் சொல்வது. பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு மிக்கது. புத்தருக்கு முன் எண்ணில் புத்தர்கள்தோன்றியதாகக் கருதுவது புத்த மரபு. போதி சத்துவர்களாகப் பல பிறவிகள் எடுத்தவர் புத்தர். இந்த போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாக புத்தர் சொன்ன கதைகளே புத்த ஜாதகக் கதைகள் என்னும் அறத்தை வலியுறுத்தும் கதைகளாகும். பாலி மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்தில் பேரா. ஈபி கோவெல் தலைமையில் மொழிபெயர்க்கப்பட்ட 537 ஜாதகக் கதைகள் உள்ளன. மயிலை சீனி. வேங்கடசாமி 13 புத்தர் ஜாதகக் கதைகளை மொழிபெயர்த்துள்ளார்.      

      இந்தியாவில் எல்லா தத்துவ மரபுகளும் கதைகளின் வாயிலாகவே பொதுவெளியைச் சென்றடைந்துள்ளன. அவற்றின் மூலமாகவும் தத்துவப் பரப்புரை நடந்துள்ளது. புத்தரைப் பற்றிப் பிற்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கதைகளும் பவுத்த அறத்தைப் போதிக்கும் கதைகளும் ஒன்றல்ல. இவையிரண்டிற்குமான வேறுபாடுகளை உணர்வது அவசியமானதாகும்.

-         வரலாற்றுக்  கற்பனைகள் தொடரும்.

 

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் ஏப்ரல் 2025