வெள்ளி, அக்டோபர் 30, 2020

எனது ஆறாம் வகுப்பு ஆசிரியர்

 

எனது ஆறாம் வகுப்பு ஆசிரியர்

 

மு.சிவகுருநாதன்

 

      திரு வி.மாரிமுத்து என்ற வி.எம்., நீலம் போடப்பட்ட வெள்ளை வேட்டிச் சட்டையுடன் இனிய முகத்துடன் எப்போதும் தோற்றமளிப்பவர். முழுக்கைச் சட்டையை அரைக்கையாக மடித்துவிட்டு, தலையைப் படிய  சீவி இருப்பார். அப்போதெல்லாம் சைக்கிளில்தான் வருவார். பிற்காலத்தில் டி.வி.எஸ். 50 வைத்திருந்தார்

 

      இவர்தான் எங்களது ஆறாம் வகுப்பு ஆசிரியர். ஒரு வாரத்திற்கு முன்பு அவரது ஊரான நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் வாய்மேடு  (கிழக்கு) என்கிற ஊரில் காலமான செய்தியைக் கேட்டு அதிர்ந்தேன். இனிய, எளிய அந்த ஆசிரியப் பெருந்தகைக்கு எனது அஞ்சலியும் இரங்கலும்.

 

     முதல் அய்ந்து வகுப்புகளை எனது தந்தையாரின் பள்ளிக்கூடத்தில்தான்  (..சி. உதவித் தொடக்கப்பள்ளி, அண்ணாப்பேட்டை) முடித்தேன். ஆறாம் வகுப்பிற்கு  வேறு பள்ளிக்கு   செல்ல வேண்டிய கட்டாயம், சரபோஜிராஜபுரம் (துளசியாப்பட்டினம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்றாக வேண்டும். இப்போது அப்பள்ளி மேனிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது

 

       முன்போ பள்ளிக்கும் வீட்டுக்கும் பெரிதான வேறுபாடுகள் இல்லை. அப்பா வீட்டிலும் ஆசிரியராகவே இருந்தார். எனது சிறிய அண்ணன் மு.இராமநாதன் எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு இடும்பாவனம் உயர்நிலைப் பள்ளிக்கு சென்றுவிட்டதால் தனியாக அப்பள்ளிக்குச் செல்ல மிகுந்த தயக்கமிருந்தது. இயல்பிலேயே பெருங்கூச்சமுடையவனாக இருந்தவன் வேறு

 

         தயங்கித் தயங்கி உள்ளே சென்றவனை முதல் நாளே தாங்கிக் கொண்டவர் வி.எம். என்ற வி.மாரிமுத்துஎங்களது குடும்பத்தையும் தந்தையாரையும் அறிந்திருந்ததால் மட்டுமல்ல; அனைத்துக் குழந்தைகளிடமும் இனிமையாக நடந்துகொண்டார். 1983-1986 என மூன்றாண்டுகள் அப்பள்ளியில் கழிந்தது. திரு கு.வைரக்கண்ணு தலைமையாசிரியராக இருந்தார். இவர் பின்னாளில் திருவாரூர் உதவித் தொடக்கக்கல்வி அலுவலராக இருந்தவர். சி.பழனிவேல், சந்திரசேகரன், தமிழாசிரியர் வை.பழனிவேல், இராம.இளங்கோவன், வி.வெற்றிச்செல்வன், அவையாம்பாள் என்று பலர் நினைவுக்கு வருகின்றனர். இதில் வெற்றிச்செல்வன் உடல்நலக்குறைவால் பணியிலிருக்கும்போதே இறந்து விட்டார். சந்திரசேகரன் வரலாற்றுப் பாடத்தைக் கதையாக விவரிப்பார்

 

      அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களே அனைத்துப் படங்களையும் நடத்துவர். தமிழ், ஆங்கிலம், கணக்கு என அவரே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார்.  2004 இல்தான் நான் பணியில் இருக்கும்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் கற்பிக்கத் தகுதியில்லை என்று அரசாணை வெளியிட்டு, பட்டதாரி ஆசிரியர்களை நியமித்தனர்.

 

       அவர் சொல்லிக் கொடுத்து மனப்பாடம் செய்த வள்ளலாரின் திருவருட்பா பாடலானபொன்னாகி மணியாகி”,  இன்றும் நினைவில் நிற்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடல்களை இசையுடன் பாடி நடத்துவார். அவரது கையெழுத்து மணி, மணியாக அழகாக இருக்கும். கணிதத்தில் அதிக ஈடுபாடு காட்டுவார். ஏதோ ஒரு பேச்சுப் போட்டிக்காகதலைவர் அவர்களே!”, தொடங்கி  நன்றி, வணக்கம்!”, ஈறாக தாளில் எழுதிக் கொடுத்து பேசச் சொன்னார். போட்டியில் பெயர் அழைக்கப்பட்டபோது மேடைக்குச் செல்லாமல் பின்வாங்கியது தனிக்கதை.

 

      நீண்டகாலம் அங்கு பணியாற்றினார் என்று நினைக்கிறேன். நான் ஒன்பதாம் வகுப்புக்கு பள்ளங்கோயில் ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளிக்கு விடுதியில் தங்கிப் படிக்கச் சென்றுவிட்டேன் (1986-1988). அவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வில் அருகிலுள்ள பிச்சைக் கட்டளை ..தொடக்கப்பள்ளியில் பணியாற்றினார். சைக்களில்தான் பள்ளிக்கு வருவார்; அதே வெள்ளுடையில்

 

       அன்று எங்களுக்குச் சீருடையெல்லாம் கிடையாது. வண்ண உடைகளில்தான் பள்ளி செல்வோம். துணிக்கடை மஞ்சள் பைதான் ஸ்கூல் பேக். அன்று கட்டைப் பைகூட கிடையாது. அதிக புத்தகங்கள் என்றால் பின்னப்பட்ட பிளாஸ்டிக் கூடை; தோளில் மாட்ட இயலாது. கைகளில்தான் எடுத்துச் செல்ல வேண்டும்.

 

      துளசியாப்பட்டினம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி. என்னுடன் இருவர் எட்டாம் வகுப்பு வரை படித்தனர். ஒருவர் ஹபீப்ஹான்; மற்றொருவர் மீரா உசேன். அவர்கள் கைலி அணிந்துதான் பள்ளிக்கு வருவர்; வெள்ளித் தொழுகைக்கு அரைநாள் விடுமுறை உண்டு. அது நன்றாகத்தான் இருந்ததுகெட்டாப் போயிற்று அன்று? இன்றுதான்  நிலைமை மோசமாக உள்ளது

 

        வி.எம்..சாருக்கு குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தன. அவற்றின் எந்தச் சுவடும் பள்ளியில் தெரிந்ததில்லை. எப்போதும் இயல்பாக புன்னகை தவழக்  குழந்தைகளை எதிர்கொண்டார். இது பலருக்கும்  வாய்க்காத ஒன்று.

 

      1992 இல் எனது ஆசிரியர்கள் வி. மாரிமுத்து, இராம. இளங்கோவன் போன்றோருடன் குறுகிய காலம் அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஆசிரியர் என்பதைக் கடந்து எங்களது தோழமை நெருக்கம் அதிகரித்தது

 

      எனது திருமணத்திற்கு வருகை தந்தார்ஊருக்குச் செல்லும்போது வாய்மேடு கடைத்தெருவில்  அடிக்கடி சந்தித்து உரையாடுவதுண்டு. ஒரு முறை  இணையருடன் சென்றபோது தேநீர்க்கடையில் பார்த்து உரையாடினோம். அப்போது பணி ஓய்வு பெற்றிருந்தார். சில ஆண்டுகளாக அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இனி அவரை பார்க்கவே முடியாது என்கிறபோது  மிகவும் வருத்தமாக இருக்கிறது.