திங்கள், ஜூலை 26, 2021

தமிழறிஞர் இரா. இளங்குமரன் அவர்களுக்கு அஞ்சலி!

 தமிழறிஞர் இரா. இளங்குமரன் அவர்களுக்கு அஞ்சலி!


மு.சிவகுருநாதன்

 


    1980 களின் இறுதி மற்றும் 1990 களின் தொடக்கத்தின் எனது பள்ளியிறுதி வகுப்புகளில் இருந்த காலகட்டம். அப்போது ஐராவதம் மகாதேவன் ஆசிரியப் பொறுப்பில் இன்றுடன் ஒப்பிடுகையில் 'தினமணி' வெகுசிறப்பாக வந்துகொண்டிருந்தது. அறிவிலுக்குத் 'தினமணிச்சுடர்'; தமிழுக்குத் 'தமிழ்மணி' என இணைப்பிதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. எனது வாசிப்பை விரிவுபடுத்தியதில் இவற்றிற்கு முதன்மைப் பங்குண்டு.

      அன்றைய காலத்தில் சில ஆண்டுகள் தனித்தமிழ் உணர்வுகளால் உந்தப்பட்டு சுறவம், காரிக் கிழமை என்றெல்லாம் தமிழ் மாதம், கிழமைகளை எழுதிக் கொண்டிருந்தேன். இன்று நினைத்தால் நகைச்சுவையாக உள்ளது. பிறருக்கு எழுதும் கடிதங்களில் இவற்றைக் குறிப்பது பெருவழக்கமாக இருந்தது.

      தமிழ்ப்பாவை - மதுரை, தமிழ்ப்பொழில், வெல்லும் தூய தமிழ் - புதுச்சேரி, செந்தமிழ்ச்செல்வி, குறளியம் என்ற பல தனித்தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு சந்தா (கட்டணம்) செலுத்தி வாங்கிப் படித்து வந்தேன். குறளியம் இதழை புலவர் இரா.இளங்குமரன் அவர்கள் நடத்தி வந்தார்.

     எனது ஊருக்கு அருகேயுள்ள வாய்மேடு மேற்கில் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராக இருந்த திரு இராமு அவர்கள் திருக்குறள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவரது வீட்டுவாயிலில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்திருந்தார். அவரும் தமிழாசிரியர் புலவர் வை.பழனிவேலன், தலைமையாசிரியர் வை.மாரிமுத்து, தலைமையாசிரியர் இராம. இளங்கோவன் (இவர்களனைவரும் எனது நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்) ஆகியோரும் இணைந்து ஏற்பாடு செய்த தமிழறிஞர் இரா.இளங்குமரன் கலந்துகொண்ட ஒரு நிகழ்வு வாய்மேடு திரு தமிழொளி அவர்களின் நியூட்டன் பயிற்சி மையத்தில் நடந்தது.

      அந்தக் கூட்டத்திற்கு துளசியாப்பட்டினம் நண்பர் தெ.சேகர் அவர்களுடன் சைக்களில் சென்று கலந்துகொண்டு, இரா.இளங்குமரன் அவர்களின் உரையைக் கேட்டும், பின்னர் அவர்களுடன் உரையாடியும் அவரது சில நூல்களை வாங்கிக் கொண்டும் வந்தது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.

      அதன்பிறகு நமது வாசிப்பு பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் என்ற திசையில் பயணிக்கத் தொடங்கியது. நிறப்பிரிகை, நிகழ் என்ற புதிய இதழ்கள் நம்மைக் கொள்ளை கொண்டன.

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னைக் கவர்ந்த அந்தத் தமிழறிஞர் இரா. இளங்குமரன் தனது 92 வது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது தமிழ்ப்பணிகளுக்கு நெஞ்சார்ந்த பாராட்டையும் மறைவிற்கு அஞ்சலியும் செலுத்துகிறேன்.

வியாழன், ஜூலை 22, 2021

பாடநூல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்!

பாடநூல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்!

 மு.சிவகுருநாதன்

 


     தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் லியோனியின் கருத்துகளையொட்டி இன்றைய தலையங்கம் (ஜூலை 21, 2021) எழுதப்பட்டுள்ளது.

      முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இக்கழகம் பாடநூல்கள் அச்சாக்கம், விநியோகம் உள்ளிட்ட வேறுசில பணிகளுக்குப் பொறுப்பான அமைப்பாகும். பாடநூல்கள் உருவாக்கம், திருத்தங்கள் போன்றவற்றைச் செய்யும் அதிகாரம் மிக்க அமைப்பு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) ஆகும். எனவே லியோனியின் கருத்துகள் எந்தளவு ஏற்கப்படும என்பது கேள்விக்குரியது.

     முன்பு கருப்பு மை கொண்டு மறைக்கப்பட்டவை அனைத்தும் அரசியல் சார்பு கருத்துகள் அல்ல என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

       மு.கருணாநிதி பற்றிய பாடங்கள் என்றதும் அவருக்கு முன்பும் பின்பும் ஆட்சி செய்த முதல்வர்கள் பற்றிய பாடங்கள் வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இங்கு காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பாடங்கள் இடம் பெற்றதுண்டு. இவை சில நேரங்களில் மாற்றியமைக்கப்படுவதுண்டு.

       அரசியல் தலைவர்களைப் பற்றிய பாடங்கள் இடம் பெறக்கூடாது என்பதைவிட நடுநிலையான பார்வையோடு அவர்கள் அணுகப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். உயர்கல்விப் புலங்களில் கூட இந்த நிலைமை இல்லாதது நமது அமைப்பின் அவலமாகக் காண வேண்டியுள்ளது.

     இம்மாதிரியான அரசியல் பேச்சுகளை விடுத்து பாடநூல்களின் குறைபாடுகள் குறித்து விவாதிக்க முன்வரவேண்டும். ஆனால் அது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

      இப்போதிருக்கும் பாடநூலில் பல இடங்களில் ஒன்றிய அரசின் பெருமிதங்களும் பிரச்சாரங்களும் நிரம்பியுள்ளன. மாநில அரசின் பாடநூல் ஒன்றிய அரசின் சாதனை விளக்கக் குறிப்பாக இருப்பது கொஞ்சம் வியப்பாகவே உள்ளது.

 குழந்தைகளுக்கு ஒவ்வாத மொழிநடை,

மொழியாக்கக் குளறுபடிகள்,

தவறானத் தகவல்கள்,

அறிவியலுக்குப் புறம்பான செய்திகள்,

மூடநம்பிக்கைகள்,

போலிப் பெருமிதங்கள்,

சோழப்பெருமைகள்,

குடவோலை முறையை ஜனநாயகமாக முன்னிறுத்துதல்,

வேதப் பெருமைகள்,

மநு நீதிப் புகழ்ச்சிகள்,

வெறுப்பரசியல்,

பெரும்பான்மைவாதம்,

சிறுபான்மையினருக்கு எதிரான செய்திகள்,

அவைதீக மரபுகள் - சிந்தனைகளைத் திரித்தல்,

வரலாற்றை ஒரு சார்பாக அணுகுதல்

        எனப் பல்வேறுப் பிழைகளுடன் குழந்தைகளிடம் பாடநூல்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்வதற்கோ அல்லது அவற்றிற்கு முகம்கொடுக்கவோ முன்வராமல் லியோனி என்கிற ஒரு அரசியல்வாதியின் பேச்சுகளுக்கு முதன்மை தருவது சரியல்ல.

      புதிய பாடநூல்கள் குறித்தப் போலிப் பெருமிதக் கொண்டாட்டங்களை விடுத்து அவற்றை முறையாக ஆய்வு செய்து, திருத்தி வழங்கிட உங்களைப் போன்ற ஊடகங்கள் குரலெழுப்ப வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கும் கல்விக்குமான பங்களிப்பாகும்.

 (ஜூலை 21, 2021 இல் வெளியான "பள்ளிப் பாடநூல்கள் அரசியல் கட்சிகளின் பிரச்சார அறிக்கைகள் அல்ல", என்ற 'இந்து தமிழ் திசை'யின் தலையங்கம் குறித்த எதிர்வினை.)

சனி, ஜூலை 17, 2021

இவர்களைத் திருத்தவே முடியாது!

 இவர்களைத் திருத்தவே முடியாது!

மு.சிவகுருநாதன்

 


     கொரோனாப் பெருந்தொற்றால் பள்ளிகள் திறக்க இயலாமல் மூடிக்கிடக்கின்றன. பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்களுக்கே இணைய வகுப்புகள் சாத்தியமாகாதபோது, அரசுப்பள்ளிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

     இந்நிலையில் அவர்களது ஒரே வழிமுறையாகவும் அரசால் வலியுறுத்தப்படுவதுமாக இருப்பது 'கல்வித் தொலைக்காட்சி' மட்டுமே. ஆனால் அதில் இடம்பெறும் பாடங்கள் குழந்தைகளைக் கவரும் வண்ணம் இல்லை. இவற்றைப் பார்ப்பது 'பொதிகை'த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது போன்று மிகக் கடினமான ஒன்றாகும்.

        இதில் பாடமெடுக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் எவ்வித முகபாவங்களுமின்றி எந்திரத்தனமாகப் பாடங்களை ஒப்பிக்கின்றனர்.

     பாடநூலில் சரியாக இருந்தால்கூட அவற்றை இவர்கள் விட்டுவைக்க மாட்டார்கள் போலும்! தாங்கள் நினைக்கும் பிழையானக் கருத்துகளை இவர்கள் அப்படியே வெளியிடுகின்றனர். இதைப்போன்றே விரைவுத் துலங்கல் குறியீட்டுக் (QR Code) காணொளிகளிலும் அபத்தங்கள் இடம்பெறுவதைப் பலமுறைச் சுட்டியுள்ளேன்.

     பாடநூல்களையே பொதுச்சமூகம் கண்டுகொள்ளாதபோது இத்தகையக் காணொளிகளைக் கண்டு அவற்றை விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. குழந்தைகள் இவற்றைக் கண்டும் கேட்டும் அப்படியே மனத்திலிருத்திக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இத்தகைய காணொளிகள் ஏன் சரிபார்க்கப்படாமல் அரசின் சார்பில் வெளியிடப்படுகின்றன என்பதும் கேள்விக்குரியது.

    புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் - புவியியல் பாடப்பகுதியில் 'மக்கள் தொகையும் குடியிருப்புகளும்' என்ற பாடத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்தி இந்தியாவின் தேசிய மொழி, ஆட்சி மொழி என்றுத் தவறாகக் குறிப்பிட்டதை எனது கட்டுரை ஒன்று சுட்டிக்காட்டியது. இக்கட்டுரை எனது 'கல்வி அபத்தங்கள்' (பன்மை வெளியீடு) நூலிலும் உள்ளது.

 அக்கட்டுரையின் இணைப்பு கீழே:

 http://musivagurunathan.blogspot.com/.../blog-post_87...

     பின்னாளில் அத்தவறு சுற்றறிக்கை மூலமும் அடுத்தப் பதிப்பிலும் திருத்தம் செய்யப்பட்டது.

     இன்றைய (16/07/2021) கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் - குடிமையியல் பகுதியின் முதல்பாடமான 'பன்மைத் தன்மையினை அறிவோம்' என்ற பாடத்தை ஆசிரியர் ஒருவர் நடத்தினார்.

     அதில் அவர், "இந்தி இந்தியாவின் தேசியமொழி." என்று பலமுறைக் குறிப்பிட்டார். இந்திய அரசு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் (8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள்) ஒன்றிய அரசு (இந்திய அரசு) மாநிலங்களுடன் தொடர்பு கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

      அண்மைக்காலங்களில் ஒன்றிய அரசு இந்தியில் கடிதங்கள் அனுப்பியது பலமுறை சர்ச்சைக்குள்ளானது. அதையும் இவர் அறியவில்லை போலும்! 'கோவின்' இணையம் உள்ளிட்ட, ஒன்றிய அரசின் எதிலும் தமிழின் இடம் போராடிப் பெறுவதாகவே உள்ளது. ஆனால் நாம் இந்தியைத் தொடர்ந்து இவ்வாறு சொல்லித்தருவது அபத்தமல்லவா!

     இப்பாடப்பகுதியில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின்படி 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது", (பக்.196) என்றே இடம் பெறுகிறது. ஆனால் ஆசிரியர் இங்குத் தேவையற்றத் தவறான கருத்தைத் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார்.

        ஒன்றிய அரசிற்கு தேசிய மொழி, ஆட்சி மொழி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. அதுவும் இந்தி மட்டுமல்ல; ஆங்கிலமும் இந்தியும் இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக உள்ளன. இதைப்போல மாநில அரசுகளுக்கும் பெரும்பாலும் அந்தந்த மாநில மொழியும் ஆங்கிலமும் மாநில அலுவல் மொழிகளாக இருக்கின்றன.

          அந்தந்த மாநில மொழிகளில் ஒன்றிய அரசு தொடர்பு கொள்வதில்லை. இந்தி இல்லாத மாநிலங்களில் ஆங்கிலத்தில் தொடர்புகொள்வதுதான் நீண்டகால நடைமுறை. இந்தியைத் திணிக்க ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள மறுக்கின்றனர். இன்றுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளில் அனைத்து மொழிகளிலும் தருவது சிரமமான காரியமல்ல.

      எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளுகளுக்கும் உரிய முதன்மை (ஆட்சி மொழி - தொடர்பு மொழி) வழங்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக நீடிக்கிறது. எவ்விதப் புரிதல்களும் இல்லாமல் ஒன்றிய அரசின் திணிப்புகளுக்கு ஏற்ப இவ்வாறு குழம்புவதும், குழப்புவதும் அவர்களது ஆதிக்க மனநிலைக்கு மிகவும் வசதியாக உள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

வரலாற்றெழுதியல் அவலம்!

 வரலாற்றெழுதியல் அவலம்!

மு.சிவகுருநாதன்

 


      இன்றைய (14/07/2021) 'இந்து தமிழ் திசை' நாளிதழில் பேரா. கா.அ.மணிக்குமார் "இந்திய வரலாற்றில் தென்னிந்தியாவுக்கு இடமில்லையா?" என்ற கட்டுரை எழுதியுள்ளார்.

அதன் இணைப்பு:

 https://www.hindutamil.in/news/opinion/columns/693024-south-india-role-in-indian-history.html

      புராணக்கதைகளை வரலாறாக முன்வைப்பது அன்றைய ஏற்றத்தாழ்வான சமூகக் கட்டுமானத்தை நியாயப்படுத்தும் முயற்சி, எனச் சந்தேகப்பட வைக்கிறது என்கிறார். கல்விக்கொள்கை மற்றும் பல்வேறு செயல்பாடுகள் வழியே கடந்த ஏழாண்டிலும் முந்தைய ஏ.பி.வாஜ்பாயி காலத்திலும் நிருபித்த உண்மைகளை இன்னும் எத்தனைக்காலம் வெறுமனே சந்தேகம் என்று கடந்துசெல்வது சரியா?

     வரலாற்றில் செய்யப்படும் மறைப்புகள், திரிபுகள் கவனம் பெறுவது அவசியம். இந்துத்துவம் பாடநூல்களைத் தங்களுக்கு ஏற்றபடி எழுதிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவதும் விமர்சிப்பதும் முதன்மையானது. அந்த வகையில் இக்கட்டுரையை வரவேற்கிறேன்.

     இக்கட்டுரையாளரைப் பாடக்குழுத்தலைவர் மற்றும் பாடநூலாசிரியராகக் கொண்டுத் தயாரிக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் 1806 வேலூர்ப் புரட்சி (பக்.74) குறிப்பிடப்படுகிறது. அதே பாடநூலில் 1857 பெருங்கலகம், கலகம், கிளர்ச்சி (பக்.83) என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இது ஏன்?

     மேலும் இப்பாடநூலில் பாளையக்காரர்கள் புரட்சி என்ற பெருந்தலைப்பின் கீழ் வீரபாண்டிய கட்டபொம்மனின் கலகம், மருது சகோதரர்களின் கலகம் என்றே குறிப்பிடுகிறார்கள். பாடத் தலைப்பில் மட்டும் புரட்சி என்று எழுதினால் போதுமா?

     அவர்களைப் போல நாமும் வீம்புக்கு இவ்வாறு பாடங்கள் எழுதுவது சரியாகுமா? 1806 வேலூர்ப் புரட்சியைப் போன்று 1857 இந்தியப் புரட்சி அல்லது வட இந்தியப் புரட்சி என்று சொல்ல மறுக்கும் மனத்தடைகளுக்கு என்ன காரணம் என்பதை அறிய விரும்புகிறேன்.

 இன்னொரு எடுத்துக்காட்டு:

      தமிழக அரசின் எட்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் 'மக்களின் புரட்சி' (பக்.39-50) என்றுப் பெருமையாகத் தொடங்கி, பாளையக்காரர் புரட்சி, வேலூர் கலகம் (1806), பெரும்புரட்சி (1857), புரட்சிக்கான காரணங்கள், கலகத்தின் தோற்றம், புரட்சியின் போக்கு, கலகம் அடக்கப்படுதல், கலகத்தின் தோல்விக்கான காரணங்கள், கலகத்தின் விளைவுகள் என முடிகிறது. இது என்ன வகையான வரலாற்றெழுதியல்?

     இப்பாடநூலின் (8 ஆம் வகுப்பு) ஆசிரியராக கட்டுரையாளர் இல்லை. இருப்பினும் தமிழக வரலாற்றுப் பாடநூல்களில் இம்மாதிரியான பல்வேறு அபத்தங்களைக் காண முடியும்.

 

செவ்வாய், ஜூலை 13, 2021

விரிவும் ஆழமும் தேடிய பயணங்கள்

 

விரிவும் ஆழமும் தேடிய பயணங்கள்

சீனி. சந்திரசேகரன்

 

 

(‘தினம் ஒரு புத்தகம்என்ற தலைப்பில் எனது ‘கல்விக் குழப்பங்கள்’ – பாரதி புத்தகலாயம் மார்ச் 2017 - நூல் பற்றி வாட்ஸ் அப்பில் வந்த பதிவு.)

 

 


 

     இந்தப் புத்தகத்தில் 50 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் சிறிய கட்டுரைகளாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த ஒவ்வொன்றையும் எழுத நூலாசிரியர்  (மு.சிவகுருநாதன்) பல புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும். இதில் நூலாசிரியரின் பல்லாண்டு கால வாசிப்பனுபவம் பளிச்சிடுகிறது.

 

நூலிலிருந்து…

 

  • உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும்குடவோலை முறை’யை சோழர் காலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக வரலாற்றுப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு சபை முழுதும் பிராமணர்களுக்கானது என்பதையும் இந்த குலுக்குச்சீட்டில் பிராமணர்கள் பெயரைத் தவிர வேறு எவரும்  இடம்பெற வாய்ப்பு இல்லை மற்றும் சீட்டு எடுப்பவன் கூட பிராமணச் சிறுவன் என்கிற உண்மைகள் மிகக் கவனமாகத் திட்டமிட்டு மறைக்கப்படுவதை நூலாசிரியர்குடவோலை முறை ஜனநாயகமா?”. என்னும் கட்டுரையில் கசடற விளக்குகிறார்.
  •  “பொற்கால சோழப்பேரரசு தமிழ் மொழிக்குச் செய்தது என்ன?”,  மற்றும் இன்ன பிற கட்டுரைகள் சோழப் பேரரசு பற்றி நமது  புரிதல்களில் புது வெளிச்சம் பாய்ச்சுகிறது. 
  •   புத்தர் ஏன் துறவறத்தைத் தேர்வு செய்தார்?”,  என்ற கட்டுரையில்  புத்தர்  துறவறம் மேற்கொண்டதற்கான காரணங்கள் எவ்வாறு பசி, பிணி, சாவு என திரிக்கப்பட்டுள்ளன என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார். 
  •        தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியின் சாதனைகள்”, என்னும் கட்டுரை நமது பாடப் புத்தகங்கள் பட்டியலிட்டுள்ள பார்வையிலிருந்து புதிய பரிமாணத்தைத் தருகிறது
  •      குமரி (லெமூரியா) கண்டத்தின் இருப்பு பற்றி கேள்வி எழுப்பும் கட்டுரை, சமஸ்கிருதம் மட்டும்தான் வடமொழியா? என்னும் கட்டுரை  போன்றவை எல்லாம் சிறிய கட்டுரைகள்தான், ஆனால் விரிவும் ஆழமும் தேடிய பயணங்கள் அவை.
  •   அறிவியல் புத்தகத்தில் உள்ள குறைகளையும் ஆழ்ந்து ஆராய்ந்து தவறுகளை சுட்டிக்காட்டி உள்ளது மிகவும் சிறப்புற உள்ளது.
  •     நிலக்கடலையா? வேர்க்கடலையா? என்று கேள்வி எழுப்பி நிலக்கடலையே என நிறுவியுள்ளது சிறப்பு
  •        ஈசலின் வாழ்காலம்’  கட்டுரை, ஈசலின் ஆயுள் ஒரு நாள் என்னும் பொதுவான அறிதலுக்கு முடிவுரை எழுதி உள்ளது.
  •    சந்தன மரம் ஒரு வேர் ஒட்டுண்ணித் தாவரம்”, என்னும் கட்டுரை நமது பாடப்புத்தகத்திலுள்ள தகவல்களை விட அதிக செய்திகளை நமக்கு வழங்குகிறது.
  •    கல்வி சார்ந்த  துறைகளில்  சிறப்புற பணியாற்ற விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள புத்தகம்.

 

நன்றி: சீனி. சந்திரசேகரன்