செவ்வாய், அக்டோபர் 06, 2026

நேபாளப் பேரிடர் உணர்த்தும் பாடங்கள்

 

நேபாளப் பேரிடர் உணர்த்தும் பாடங்கள்

மு.சிவகுருநாதன்


 

              ஆகஸ்ட் 26, 2026இல் நேபாள வட எல்லைப்பகுதியான ரசுவா  மாவட்டத்தின் கோசி, திரிசூலி நதிகளில் அளவுகடந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரம் பேருக்கு மேல் பலியாயினர்; பலரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த வெள்ளப்பெருக்கிற்கான காரணம் உடனடியாக தெரியாத நிலையில் அடுத்தடுத்து வெளியான செய்திகள் நம்மை அதிர்ச்சியடைய வைத்தன. 

         இதில் கோசி ஆற்றின் மீதிருந்த பாலங்கள், கரையோரம் இருந்த வீடுகள் மற்றும் கட்டடங்கள், அங்கிருந்த வாகனங்கள், உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தில் 1410 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 11 நீர்மின் நிலையத் திட்டங்கள் முற்றாக வெள்ளத்தால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 13750க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. அங்கு நிலவியல் அமைப்பே பெருத்த மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது. 

         நேபாள வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணம் என்று முன்னதாக சொன்ன  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட அதிர்வு 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளதை நில அதிர்வு தரவுகள், அதிர்வு அலைகள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றின் மூலம் கண்டறிந்ததாக விளக்கமளித்துள்ளது. பனிப்பாறை உடைந்தற்கான காரணத்தை விளக்கவில்லை. பனிப்பாறை ஏரி உடைப்பே திடீர் வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என்பதை நேபாள வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

       பேரிடரிலிருந்து மீள்வதற்கு நேபாளத்திற்கு பல்வேறு நாடுகள் உதவிகள் வழங்கி வருகின்றன. இந்தியா 10 டன் நிவாரண பொருட்களை உடனே நேபாளத்துக்கு அனுப்பியது. அதனைத் தொடந்து 37 டன் நிவாரண பொருட்களுடன் இரண்டாவது விமானத்தையும் அனுப்பியது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக குழுக்களை அனுப்ப இந்தியா, அமெரிக்கா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்த நிலையில் அவற்றை நேபாள அரசு  நிராகரித்துவிட்டது. தங்களது ராணுவம், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஆற்றலும், திறமையும் இருப்பதால், மீட்புப்பணிகளில் வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை என்றும் பிரதமர் பாலேந்திர ஷா அரசு முடிவு செய்துள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பின்னர், அந்நாட்டு அனுமதியுடன்  இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்கள் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

         முன்னதாக 2015 ஏப்ரல் 25இல் நேபாள கோர்கா மாவட்டத்தில் 7.8 ரிக்டர் அளவில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்; 23,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைதொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் மீட்பு குழுக்களை நேபாளத்துக்கு அனுப்பின. அளவுக்கதிகமாக ராணுவ விமானங்கள், உலங்கு வானூர்திகள் நேபாளத்தில் குவிக்கப்பட்டதால், அந்நாடு மோசமான தளவாட, நிர்வாக மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்பட்டது. அயல்நாட்டு மீட்புக் குழுக்களுக்கிடையில் போட்டிகள் மற்றும் அவர்களை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட சிரமங்கள், நிர்வாகச் சிக்கல்கள் போன்றவற்றில் ஏற்பட்ட அனுபவப் பாடத்தைக் கொண்டு  இம்முறை மீட்பு குழுக்களின் வருகையை நேபாள தடுத்துள்ளது. ஆனாலும் அயல்நாடுகளிலிருந்து பொருளாதார உதவியை எதிர்பார்க்கிறது. மீட்பு மற்றும் உதவிகளைக் காரணம் காட்டி ஒரு சிறிய நாட்டை வல்லாதிக்கம் எவ்வாறெல்லாம் சுரண்டும் என்பது இங்கு அறியவேண்டிய செய்தியாகிறது.



 

          ஓரிடத்தில் பல மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும்போது அப்பகுதியை ஒட்டி வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். இதைத் தவிர மிகக் குறுகிய நேரத்தில் பெய்யும் அதிகனமழை, நீரிடி எனும் மேக வெடிப்பு, நிலச்சரிவு, பனிப்பாறை ஏரி உடைப்பு (Glacial Lake Outburst Flood - GLOF) ஆகியவற்றால் ஏற்படும் வெள்ளம்  திடீர் வெள்ளப் பெருக்கு (Flash Floods) என்றழைக்கப்படுகிறது.

     உயர்ந்த மலைப்பகுதிகளில் பனி உருகிய நீர் பள்ளங்களில் இயற்கை அணையாகத் தேங்குகிறது. இவை உறுதியான பாறைகளால் ஏற்படுவதில்லை. பனிச்சேறு மற்றும் மணற்துகள்களால் இவை தற்காலிகத் தடுப்பாக உருவாகின்றன. இந்த ஏரி போன்ற அமைப்பில் பெரிய அளவிலான பனிப்பறைகள் உடைந்து விழும்போது இதன் கரைகளும் உடைந்து பெரும்வெள்ளம் உண்டாகிறது. இத்தகைய நிகழ்வுதான் தற்போதைய பேரிடருக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நிலநடுக்கம், அதிகமான மழைப்போழிவு, ஏரியின் வலுவற்ற கரைகள் சேதமடைதல் போன்ற காரணங்களாலும் வெள்ளப்பெருக்கு உருவாகும் சாத்தியம் உண்டு. இப்பகுதிகளை முன்கூட்டியே கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும் வசதிகளோ திட்டங்களோ இமயமலை அமைந்துள்ள நாடுகளிடம் இல்லை.

      மலைப்பகுதிகளில் வெள்ளநீர் கீழ்நோக்கி குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாகப் பாயும் போது அதன்வேகம் கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கும். நிலவியல்படி நேபாளம் அமைந்துள்ள இமயமலைப் பகுதியில் இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. நூற்றுக்கணக்கான பனியாறுகளைக் கொண்ட நேபாளம் தொடர்ந்து இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடாக மாறியுள்ளது. நேபாள நாட்டிற்கு திடீர் வெள்ளப் பெருக்குகள் ஒன்றும் புதிய செய்தியல்ல. 2025இல் கோசி ஆற்று வெள்ளம் நேபாளம் - சீனாவை இணைக்கும் ஒரு பாலத்தை  இழுத்துச் சென்றது. உத்தர்காண்ட், சிக்கிம், இமாச்சல்பிரதேசம், லடாக் போன்ற இந்தியப் பகுதிகளிலும் இந்த அபாயங்கள் நேரிட வாய்ப்புகள் உண்டு.

         இமயமலையின் செங்குத்தான சரிவுகளில் பாயும் ஆறுகளில் மழைக்காலங்களில் நீர் வேகமாகப் பள்ளத்தாக்குகளில் பாய்கின்றன. காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைவதால்  பனிப்பாறைகள் உருகி தற்காலிக  ஏரிகளை உருவக்குகின்றன. பனிப்பாறை உருகுதல் அதிகமாக இருக்கும்போது அதைத் தாங்கும் சக்தி இந்த இயற்கை அரணான மென்பாறைகளுக்கு இருப்பதில்லை. எனவே நிலச்சரிவு, பனிப்பாறை சரிவு, பனிப்பாறை ஏரி வெடிப்பு ஏற்பட்டவுடன் அங்குள்ள அதிக அளவிலான நீர்  கீழ்நோக்கி வெள்ளமாகப் பாய்கிறது. இந்த வெள்ளம் திபெத்தில் தொடங்கி நேபாளம் (திரிசூலி) வழியாக இந்தியாவிற்கும் வருகின்றது.  கோசி, கண்டகி ஆறுகள் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்குள்ளும் ஓடுகின்றன. இதனால் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்களும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.

         நேபாளத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கு இந்தப் பேரிடர் எச்சரிக்கையாக அமையும். இயற்கையை அதன் போக்கில் விடாமல் மனிதர்களும் அரசுகளும் வளர்ச்சி எனும் பேராசையால் அவற்றைச் சுரண்டும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இயற்கை நமக்கு பேரிடர்களைப் பரிசளிக்கும்போது அதிர்ச்சியில் உறைந்து போகிறோம். இதிலிருந்து நாம் பாடங்களை கற்கவேண்டும். இல்லையெனில் மனித சமூகத்தை பேரழிவிலிருந்து மீட்க முடியாது.

        இன்று வணிகமயம் உலகை ஆட்டுவிக்கிறது. ஆன்மீகச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என்ற பெயரில் பெரிய வணிக அமைப்புகள் உருவாகியுள்ளன. இவர்கள் அறமற்று எதையும் வணிகமாக்கத் துணிந்துள்ளனர். கார்ப்பரேட் சாமியார்களும் வணிக நிறுவங்களும் பேராசையால் மனிதர்களை பலி கொடுக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் சூழலியலைக் கெடுத்தும் யானை வழித்தடத்தை அழித்தும் ஒன்றிய அரசின் உதவியுடன் கோவையில் அமைந்துள்ள ஈஷா மையத்திலிருந்து புனித யாத்திரைக்கு அனுப்பப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த 80 பேர் இந்த வெள்ளத்தில் மாயமாகியுள்ளனர். கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறுவனம் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 57 பேரை  கைலாஷ் யாத்திரைக்கு அனுப்பி வைத்தது. இவர்களில் 20 பேர் மட்டும் உயிர் பிழைத்துள்ளனர். வானிலை நிலவரங்களை அறியாது சுற்றுலா ஏற்பாடுகளை வெறும் பணத்தாசை கொண்டு  ஏற்பாடு செய்வது மிகவும் மோசமானது. வானிலைப்படி நேபாள நாட்டிற்குச் சுற்றுலா செல்ல அக்டோபர், நவம்பர் மாதங்களே சரியானதாகும்.   நேபாளச் சுற்றுலாவுக்கு ஜூன் முதல் செப்டம்பர் முடிய பருவமழைக் காலத்தைத் தேர்வு செய்வது அபாயகரமானது மட்டுமின்றி தடுக்கப்பட வேண்டியது என்பதும் இதன்மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

           இறையாண்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் மட்டும் போதுமானதாக இருக்காது. இயற்கைப் பேரிடர்களை அறிவது, எச்சரிக்கைகளைப் பகிர்ந்துகொள்வது, பாதிப்புகளை தணிப்பது, நிவாரணப் பணிகளை இணைந்து மேற்கொள்வது போன்ற பல்வேறு ஒருங்கிணைப்பு நடவடிக்கை அவசியமானதாகும்.  இந்த வெள்ளத்தில் சீனா உரிய முன் எச்சரிக்கை விடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இரண்டாவது முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு சீனா எச்சரிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது.

      2013இல் உத்தர்கண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் புனிதத்தலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 6,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2023இல் உத்தர்கண்டின் ஜோஷிமத் பகுதியில் கட்டிடங்கள் புதையுண்ட நிகழ்வுகள் இமயமலைப் பகுதியின் பேரபாயங்களை இந்தியாவுக்கு உணர்த்தின. ஆனால் இவற்றிலிருந்து எத்தகைய பாடங்களை நாம் கற்றுள்ளோம் என்பது கேள்விக்குரியது.

      இளம் மடிப்புமலையான இமயமலையின் சரிவுகள் இயல்பாகவே நிலையற்ற தன்மை கொண்டவை. மேலும் இவை நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளவை. இமயமலைப் பகுதிகள் உலக வெப்பநிலை உயர்வு சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், சீனா, ஆப்கானிஸ்தான், மியான்மர் ஆகிய இமயமலையுடன் தொடர்புடைய நாடுகள் இந்த வெள்ளத்திலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். இனிவருங்காலங்களில் பேரிடரைத் தணிக்க உரிய முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.

        புவியை வெப்பமாக்குவதில் அனல்மின் திட்டங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. எனவே நீர்மின்சக்தி சூழலைக் கெடுக்காத ஒன்றாக அணுகப்படுகிறது. இருப்பினும் இதன் சூழலியல் பாதிப்புகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். நிலநடுக்கம், நிலச்சரிவு, பனிச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு நிகழும் இமயமலைப் பகுதிகளில் நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு நீர்மின்திட்டங்களை  செயல்படுத்தி வருகின்றன. தனியார் மின் நிறுவனங்களிடையே பெரும்போட்டி ஏற்பட்டு அரசுகளின் அனுமதியுடன் இயற்கை சூறையாடப்படுகிறது.  இந்தப் பெருவெள்ளத்தில் 11 நீர்மின் திட்டங்கள் முற்றாக அழிந்துபோயின. இந்த வெள்ளத்திற்குப் பிறகு சிக்கிம் மாநிலத்திலுள்ள அனைத்துப் புதிய நீர்மின் திட்டங்களையும் கைவிடுமாறு அம்மாநில இனக்குழு அமைப்புகள் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளன.

         சீனா டிசம்பர் 2024இல், உலகின் மிகப்பெரிய நீர்மின்சக்தித் திட்டமான  மேடக்கில் யர்லுங் சாங்போ ஆற்றில் ஐந்து அணைகள் கொண்ட ஒரு தொடர் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 60,000 மெகாவாட் திறன் கொண்ட 137 பில்லியன் டாலர் செலவழித்துக் கட்டப்படும் இந்த அணைகள் அமையும் பகுதியில் 2025இல் 7.7 ரிக்டர் அளவிலான பேரழிவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அணை அமையும் திபெத் பகுதியும் இமயமலைப் பகுதிகளும் அடிக்கடி நில அதிர்வு அபாயத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை.

       இந்தியாவும்  வங்காளதேசமும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த அணைகளால் ஏற்படும் பேரழிவுகளை எதிர்கொள்ள இந்தியா அருணாச்சலப் பிரதேசத்தில் "பாதுகாப்பு அணைகளைக்" கட்டத் திட்டமிட்டுள்ளது. ஓர் அணையின் உடைப்பை இன்னொரு அணையால் தடுக்க முடியும் என பொறியியல் வல்லுநர்கள் இந்திய அரசை நம்ப வைத்துள்ளனர். இதன் முதன்மை நோக்கமும் நீர்மின்சக்தி உற்பத்தி என்பதே உண்மை.

       டிரான்ஸ் மற்றும் பெரிய இமயமலைப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயரமான நிலப்பரப்புகளில் உள்ள சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களையும் சமூக-பொருளாதார நன்மைகளையும் உறுதி செய்வதற்காகவும் அருகிவரும் பனிச்சிறுத்தை மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் உள்ளிட்ட உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டும், உயரமான இமயமலைச் சூழல் அமைப்புகளில் உள்ள ஆல்பைன் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் காடுகளின் நிலையான மேலாண்மையை ஊக்குவிக்கவும் இமயமலைப் பாதுகாப்புத் திட்டத்தை (SECURE Himalaya Project)  இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (MoEFCC), ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமும் (UNDP) இணைந்து, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியின் (GEF) நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சூழல் பாதிப்பு நடவடிக்கைகள் நின்றபாடில்லை. இமயமலைப் பகுதியில் கட்டுப்பாடற்ற மலையேற்றம் உள்ளிட்ட சூழலைப் பாதிக்கும் முயற்சிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

      2010இல் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) உறுப்பு நாடுகள்  சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு  ஒப்புதல் அளித்தன. இந்த மாநாடு 2013இல் நடைமுறைக்கு வந்தது. செயல்படாமல் முடங்கியுள்ள இந்த முன்முயற்சிகள் மீண்டும் தொடங்கப்படவேண்டும். மேலும் இமயமலை தொடர்பானவற்றில் சீனாவுடனும் உரிய பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்.

     இம்மாதிரியானப் பேரழிவுகளை இந்தியாவும் எதிர்கொண்டுள்ளது. 2021 பிப்ரவரியில் இமயமலைப் பகுதியில் உத்தரகாண்டில் நந்ததேவி பனியாற்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்து பனிச்சரிவு மற்றும் பெருவெள்ளப் பேரழிவு உண்டானது.  கங்கையின் துணை ஆறுகளான தௌலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலக்நந்தா ஆறுகளில் பகல் நேரத்தில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு, உயரமான மலைப் பகுதிகளில் பரவலான பீதியையும் பெரும் பேரழிவையும் ஏற்படுத்தியது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டம் மற்றும் ரிஷி கங்கா நீர்மின் திட்டம் ஆகியன  சேதமடைந்தன. சமோலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, பனியாற்று ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (GLOF) ஏற்பட்டிருக்கலாம் என்று தொடக்கத்தில் வல்லுநர்கள் நம்பினர். இமயமலை அதன் இயல்பிலேயே மிகவும் பலவீனமானது என்பதும் அதன் பாதுகாப்பில் கவனம் தேவை என்பதையும் இது உணர்த்தியது.

       உத்தரகாண்டின் சமோலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பனியாற்று ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (GLOF) தூண்டப்படவில்லை என்று ஐசிஐஎம்ஓடி (ICIMOD) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா, நேபாளம் மற்றும் திபெத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 47 பனியாற்று ஏரிகள் இருப்பதையும் இவற்றில் 21 பனியாற்று ஏரிகள் நேபாளத்தில் அமைந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், நேபாளத்தில் 14 பனியாற்று ஏரி வெடிப்பு (GLOF) தொடர்பான நிகழ்வுகள் முன்பு ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

      நேபாளத்தைப் போன்றே பூடானிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பூடானில் அபாயகரமான 17 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பல முக்கிய நீர்மின் திட்டங்களை அழிக்கக்கூடிய அபாயம் உள்ளது.

         இந்தியா, சீனா போன்று அனைத்து நாடுகளும் சுயநலக் காரணங்களுக்காக இயற்கையை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன. உடனடி லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு தொலைநோக்குப் பார்வையின்றி செயல்படுகின்றன. பேரழிவுகளிலிருந்து பாடங்ளை கற்க மறுக்கின்றன. இந்நிலை நீடித்தால் உத்தர்காண்டின் ஜோஷிமத் போன்று இமயமலைப் பகுதிகள் மனிதர்கள் வாழமுடியாத இடமாக மாறும் அபாயத்தைத் தடுக்க முடியாது. இனியாவது நாம் விழித்தெழுந்து சூழலியல் நோக்கிற்கு முதன்மையிடம் தர வேண்டும்.

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் அக்டோபர் 2026

 

 

திங்கள், செப்டம்பர் 07, 2026

வீணாகக் கடலில் கலக்கும் நீர் எனும் கற்பிதம்

 

வீணாகக் கடலில் கலக்கும் நீர் எனும் கற்பிதம்

 

மு.சிவகுருநாதன்

 


 

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.   (குறள்-17)

        நமது நாட்டில் ‘அறிஞர்’களுக்குப் பஞ்சமில்லை. அவர்கள் எத்துறையிலும் பெரிய மேதைகளைப் போன்று கருத்துரைப்பர். அவற்றில் ஒன்று “வீணாகக் கடலில் கலக்கும் ஆற்று நீர்”. உண்மையில் இக்கருத்து அறிவியல் பூர்வமானதா, சூழலியல் புரிதலுக்கு உட்பட்டதா என்று கேட்டால் அறிவீனம் என்றுதான் பதில் சொல்ல இயலும். இக்கருத்து கற்பிதமாக உற்பத்தி செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இயற்கையின் நீர்சுழற்சி பற்றிய அறியாமையால் உருவான மிகவும் தவறான கற்பிதம் இது. கடலில் கலக்கும் ஆற்றுநீர் பூமியின் தட்பவெப்பநிலை, கடல்வாழ் உயிரிகளின் உணவு, நிலத்தடி நீர் மட்டம் ஆகியவற்றைச் சமநிலையில் பாதுகாக்கப் பெரிதும் பயன்படுகிறது. இதனால் கடல் வளப்பாதுகாப்பு முழுமையடைகிறது.

      இதற்கு மாறாக அணைகளைக் கட்டி ஆற்றுநீரை திசை திருப்பி பாசனம் மற்றும் தொழிலகங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினால் என்னவாகும் என்பதற்கு ஏரல் கடலும் சாக்கடலும் சான்றாக அமையும்.

            மத்திய ஆசியாவில் கஸகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஏரல் கடல் (Aral Sea) என்று சொல்லப்படும் உலகின் நான்காவது பெரிய உவர் நீர் ஏரி (Saline Lake) இன்று அரல்கம் பாலைவனமாக (Aralkum Desert) உருமாறியுள்ளது. ஏரல் கடலுக்கு முதன்மை நீராதாரமாக இருந்தவை அமு தர்யா (Amu Darya), சிர் தர்யா (Syr Darya) ஆகிய இரு ஆறுகளாகும். 1960களில் அன்றைய சோவியத் ஒன்றியத்தின்  பேராசை காரணமாக  பருத்தி மற்றும் நெல் விவசாயத்திற்காகவும் அருகிலுள்ள பாலைவனத்தை  விளைநிலங்களாக மாற்றவும் ஏரல் கடலுக்குச் செல்ல வேண்டிய நன்னீர் முழுவதையும் நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம்  திருப்பியது. இதனால் ஏரலுக்கு வரும் நீரின் அளவு முற்றிலும் நின்றுபோனது.

      எனவே ஏரல் கடல் ஒரு உள்நாட்டு மூடிய நீர்நிலையாக (Endorheic Basin) மாறியது. புதிய நீர் உள்ளே வரவும் நீர் வெளியேறும் வழிகளும் இல்லாமற்போனது.  கடும் வெப்பம் காரணமாக நீர் தொடர்ந்து ஆவியானதால் ஏரல் கடல் 90% அளவிற்கு ஏரியாகச்  சுருங்கியது. இந்த ஏரியின், நீர் வற்றியதால் 1980களில் வடக்கு ஏரல் கடல் (North Aral Sea), தெற்கு ஏரல் கடல் (South Aral Sea) என இரு தனித்தனி சிறிய ஏரிகளாகப் பிரியுமளவிற்கு நீர் குறைந்தது. மேலும் நீர் வற்றியதால் உவர்ப்பியத்தின் அளவு ஒரு லிட்டருக்கு 10 கிராமிவிலிருந்து 370 கிராம் வரை அதிகரித்த காரணத்தால் மீன்கள் உள்ளிட்ட உயிரிகள் செத்து  மடிந்தன. தற்போது. கிசில்கம் (Kyzlkum Desert) பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற நினைத்த காரணத்தால் புதிதாக அரல்கம் பாலைவனம் இன்று உருவாகியுள்ளது.   

     இன்று காய்ந்துபோன ஏரிப்படுக்கையில் எஞ்சிய உப்பும், விவசாயத்திற்குப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளும் காற்றில் கலந்து இப்பாலைவனப் பகுதியில் நச்சுப் புயல்களாக உருவெடுத்து மனிதர்களுக்கு கேடாக மாறியுள்ளது. கஜகஸ்தான் அரசு கோக்-அரல் (Kok-Aral Dam) அணையைக் கட்டி வடக்கு ஏரல் பகுதியை ஓரளவிற்கு மீட்டுள்ளது, ஆனால் தென்பகுதி முற்றிலும் பாலைவனமாக நீடிக்கிறது.

     இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சாக்கடலில் கலக்கும் ஒரே ஆறு ஜோர்டான் ஆறு மட்டுமே. இஸ்ரேல், ஜோர்டான் நாடுகள் வேளாண்மை, குடிநீர் மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக  ஜோர்டான் ஆற்றைத் திருப்பிவிட்டதால் இக்கடலில் கலக்கும் நீரின் அளவு பெருமளவு குறைந்துள்ளது.  ஜோர்டான் நதி நீர்வரத்து தடுப்பு, மழையளவு குறைதல், கடும் வெப்பம் போன்றவை காரணமாக நீர் ஆவியாகி, தாதுக்களும் உப்பும் அதிகளவில் தேங்கிய உவர் ஏரியாக மாறிப்போனது. இன்று கடல் மட்டத்திலிருந்து சுமார் 440 மீட்டர் ஆழத்தில் உலகின் மிகத்தாழ்வான நிலப்பகுதியாகச் சுருங்கியுள்ளது. மிக அதிகமான உப்புத்தன்மையினால் இதில் சில நுண்ணுயிரிகளைத் தவிர மீன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ முடிவதில்லை. மேலும் மனிதர்கள் மிதக்கும் அளவிற்கு இதன் உவர்ப்பியம் மிகுந்துள்ளது. எனவே இது சாக்கடல் (Dead Sea) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 


 

            சீனாவின் துயரம் என்று சொல்லப்பட்ட மஞ்சாளாற்றின் (ஹோவாங்கே) குறுக்கே பெரிய அணைகளைக் கட்டி நீரை கடலுக்குச் செல்லாமல் தடுத்துவிட்டது. இதனால் அதன் கழிமுகப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்து பாலைவனமாகியுள்ளது. அவற்றைச் சரிசெய்ய சீனா அணையில் தேக்கும் நீரைக் குறைத்துக் கொண்டு கடலுக்குத் திறந்துவிடுகிறது. இதிலிருந்து சீனா பாடம் கற்றாலும் தற்போது அண்டை நாடுகளை பாதிக்கும் திட்டங்களை கையெடுத்துள்ளது. இந்திய எல்லைக்கு அருகில் திபெத்தில் பிரம்மபுத்திரா (யார்லுங் சாங்போ) நதியில் பெரிய அணையைக் கட்டி மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) மூலம் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யவிருக்கிறது. இப்பகுதியில் 2017இல் 6.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மபுத்திரா நதியின் போக்கை மாற்றினால் பங்களாதேசம், இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும். நிலநடுக்கம் ஏற்பட்டால் உண்டாகும் பேரழிவுகளைக் கற்பனை செய்துகூட பார்ப்பது கடினம். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீர்ப்பகிர்வு ஒப்பந்தங்கள் ஏதுமில்லாததால் அருணாசலப் பிரதேச எல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் கட்டப்படும் அணையை ஒன்றிய அரசு வழக்கம்போல வேடிக்கை பார்க்கிறது. சீனா அருணாசலப் பிரதேசத்தை தங்களுடைய பகுதியாகவே கருதுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

          இவ்வாறு எல்லா ஆறுகளையும் பாசனம், குடிநீர், நீர்மின்சக்தி, தொழிற்சாலை போன்றவற்றிற்காகத் திருப்பிவிட்டால் உலகில் பல சாக்கடல்களும் அரல்கம் பாலைவனங்களும் உருவாகும். இதனால் உலகில் கடல்வளம் சீர்கெட்டு சூழல் பெரும் பாதிப்பிற்குள்ளாகும். இதனால் உலகின் சுற்றுச்சூழல் கேள்விக்குறியாகும்.

         ஆற்றுநீர் கடலுக்குள் செல்வதைத் தடுத்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? கடல் நீரின் வேதி இயல்புகள் மாற்றமடையும்.  கடல் நீரின் உப்புத் தன்மை அதிகமாகும். கடலின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறும். இது கடல் வாழ் உயிரிகளை மிகவும் பாதிக்கும். உலகின் பெரும் கடற்பரப்பில்  ஆண்டுதோறும் மழை பொழிகிறதே, அது போதாதா? என்று கேட்கலாம். ஆற்றுநீர் வழியாகவே கடல் வாழ் உயிரினங்களுக்கான உணவுப் பொருள்கள் வந்து சேர்கிறது. எனவே கடலில் வாழும் லட்சக்கணக்கான உயிரிகளின் உணவூட்டம் பாதிப்படையும்.

          மண்ணில் பெய்யும் மழைநீர் ஆற்றின் வழியே கடலுக்கு சென்றுசேரும்போது கழிமுகங்கள் உருவாகிறது. இவற்றிலுள்ள  நுண் சத்துக்கள் படிப்படியாக கடலில் சேர்ந்து கடல்வாழ் உயிரிகளுக்கு உணவாகும். இந்நீரில் ஆக்சிஜன் கரைந்திருக்கும். மேலும் கடல் வாழ் உயினங்களுக்குத் தேவையான பெருமளவு நைட்ரஜனையும் ஆற்றுநீர் கொண்டு சேர்க்கிறது. ஆற்று முகத்துவாரங்களில் மீன் வளம் அதிகமாக உள்ளது. கடல் வளப்பாதுகாப்பிற்கு ஆற்றுநீர் கடலுக்கு செல்வது அவசியம். 1,076 கி.மீ. நீளமுள்ள தமிழ்நாட்டின் கடற்கரையில் பல லட்சம் மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடல்வளமும் மீன்வளமும் பாதிப்படைந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு இயற்கைச் சூழலும் கெடும். கடல்வளம் என்பது மீனினங்களை மட்டுமல்ல, கடல் பாசிகள் உள்ளிட்ட தாவர வகைகளையும் குறிக்கும். இவை உயிர்க்கோளத்திற்கு ஆக்சிஜனை அளிப்பவை. மேலும் ஆறுகள் கொண்டு வரும் வண்டல் மண் கடலோரப் பகுதிகளையும், தீவுக்கூட்டங்களையும் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

       கடலில் உள்ள நீர் ஆவியாகி மேகமாக மாறி, நிலம் (மலை, காடு, பீடபூமி, சமவெளி) மற்றும் நீர்ப்பரப்புகளில் (கடல்)  மழையாகப் பொழிகிறது. நிலப்பரப்பில் பெய்த மழை ஆற்றின் வழியே சமவெளிகளில் பாய்ந்து கடலை அடைகிறது. இந்த நீர்சுழற்சி (Water Cycle) இயற்கையின் தொடர் நிகழ்வாகும். இந்த நீர்ச்சுழற்சியை முடக்குவது ஆபத்தானது. இந்த ஆறுகள் கொண்டுவரும் வண்டல் மண் மற்றும் ஊட்டச்சத்துக்களால் மீன்கள் மற்றும் கடல்வாழ் தாவர விலங்கினங்கள் பல்கிப் பெருகுகின்றன. மேலும் கடல்நீர் தொடர்ந்து ஆவியாவதால் அதிகமான உப்பு கடலில் படிகிறது. அதன்அளவைக் கட்டுப்படுத்தவும் ஆற்று நீரும் மழைநீரும் உதவுகிறது. உப்பின் அளவு அதிகரிக்கும்போது உயிரிகள் பாதிப்படையும்.   நதி நீரோட்டம் நிலத்தடி நீருக்கான ஓர் ஆதாரமாகும். இது தடுக்கப்பட்டல் கடலில் உவர்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரை மாசுபடுத்திவிடும். பொதுவாக இயற்கை எதையும் வீணாக்குவதில்லை; மனிதர்கள்தான் அதைச் செய்கிறோம். நதிநீர் ஓடும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வேளாண்மைக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு கல்லணை மற்றும் கீழ்பவானி கால்வாய்களில் தமிழக அரசு காங்கிரீட் தளம் அமைத்து சூழலைக் கெடுக்கிறது. மேகாதாது அணைக்குப் போட்டியாக ராசிமணல் அணையைக் கட்டுவதெல்லாம் தொலைநோக்கிலான தீர்வாக அமையாது.

    மேட்டூர் அணைக்கு கீழே பெரிய  அணைகள் கட்ட நிலவியல் அமைப்பு சாதகமாக அமையாது. கல்லணைக்கு முன்னதாக மேலணையும் (முக்கொம்பு) பின்பு கீழணையும் (அணைக்கரை) உள்ளன. இவைகள் நீரைப் பகிர்ந்து அனுப்ப உதவுகின்றன. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகளாகும். இப்பகுதியில் அணைகள் கட்டமுடியாது.  இங்கு தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது. 

     மனிதர்கள் மிகவும் பேராசை மிக்கவர்கள். பொதுவாக கல்லணையில் திறக்கும் நீர் கடைமடைப் பாசனப் பகுதிகளை எட்ட ஒரு வார காலம் பிடிக்கும். தடுப்பணைகளில் நீரைத் தேக்கினால் கடைமடைகள் பெரிதும் பாதிக்கப்படும். வட்டார அளவிலான நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் உண்டாகும். 

   ஏரி, குளம் போன்ற நீராதாரங்களை மீட்பதும் புதியவற்றை உருவாக்குவதும் தீர்வாக அமையும்.  ஏரி மாவட்டமான ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டுமல்ல; காவிரி டெல்டாவில் பல நூறு ஏரிகள் காணாமற்போய்விட்டன. கொள்ளிடத்தில் திறக்கப்படும் வெள்ள நீரைத் தேக்கவே    கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி வெட்டப்பட்டது.

    ஒரு ஆறு  உருவாகும் இடம் தொடங்கி  கடலில் கலக்கும் வரை அந்த ஆற்று நீர் ஓடும் பரப்பை ஒட்டி பல்வேறு  சூழியல் மண்டலங்கள் (Eco systems) உருவாகின்றன. ஆற்றின் இளநிலை, முதிர்நிலை, மூப்பு நிலை ஆகிய மூன்று நிலைகளிலும் இது நடக்கிறது. பள்ளத்தாக்குகள், அருவிகள், வண்டல் விசிறிகள், வெள்ளச் சமவெளிகள், குதிரைக் குளம்பு ஏரிகள், டெல்டாக்கள், கழிமுகங்கள் என பல இடங்களில் இத்தகைய மண்டலங்கள் அமைகின்றன. ஆற்றைத் தடுப்பது அல்லது அதன் நீர்வரத்தைக் குறைப்பது போன்ற செயல்பாடுகள் இயற்கையின் லயத்தையும் அதன் சங்கிலி அமைப்பையும் குலைப்பதாக அமையும். அரசோ மக்களோ இம்மாதிரியான முயற்சிகளுக்கு துணைபோகக் கூடாது. 

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் செப்டம்பர் 2026