வெள்ளி, ஜனவரி 16, 2026

ஓர் எரிமலைச் சாம்பலின் பயணம்!

 

ஓர் எரிமலைச் சாம்பலின் பயணம்!

மு.சிவகுருநாதன்

 


 

          ஆப்பிரிக்கா கண்டத்தின் எத்தியோப்பியா நாட்டில் அஃபார் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி (Hayli Gubbi)  எனும் எரிமலை 2025 நவம்பரில் வெடித்து, பெரிய அளவிலான சாம்பல் மற்றும் கரும்புகையை வெளியேற்றியது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா எரித்திரியா, சூடான், தெற்கு சூடான் ஆகிய நாட்டையொட்டி அமைந்துள்ள நாடாகும். எரிமலைச் சாம்பலும் புகையும் ஏமன், ஓமன், செங்கடல், அரபிக்கடல் வழியே நீண்ட தூரம் அதாவது 4,000 கி.மீ. பயணித்து பாகிஸ்தான், இந்திய நிலப்பகுதி வரை பரவுகிறது. இதன்மூலம் இந்த எரிமலை வெடிப்பின் வீச்சை நாம் உணர முடிகிறது. உலகமே எதிர்பாராத நிகழ்வாக இது நடந்திருக்கிறது.

       சுமார் 10,000-12,000 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்த உறங்கும் எரிமலை சாம்பல் புகையை உமிழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் எரிமலைக் குழம்பான லாவாவின் பரவல் இல்லையென்றாலும் சாம்பல் மேகங்கள் பரவியதால் தொலைவிலுள்ள இந்தியாவிலும் விமானப் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது. 14 கி.மீ. உயரத்திற்கு மேலெழும்பிய சாம்பல் புகை பரவியதால்  விமானங்கள் நிறுத்தப்பட்டன. இந்தச் சாம்பலில் கலந்திருக்கும் கற்கள், கண்ணாடி மற்றும் உலோகத்துகள் விமான எஞ்சினுக்குள் சென்று அடைத்துவிடக்கூடும்.

       சாம்பல் மேகங்கள் பல்வேறு  பாதிப்புகளை  உண்டாக்கும். சாம்பல் புகை 4,000 கி.மீ. வரை பயணித்து வடஇந்தியப் பகுதியை அடைந்தது வியப்பாக பார்க்கப்படுகிறது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகையில் கந்தக டை ஆக்சைடு போன்ற சூழலைச் சீரழிக்கும் வாயுக்களும் நிரம்பியுள்ளன. இவற்றால் உயிரிகளுக்கும் சூழலுக்கும் பல்வேறு பிரச்சினைகள்  ஏற்பட்டன. இவற்றில் கதிரியக்க தனிமங்களின் துகள்களும் நிறைந்திருக்கும் வாய்ப்புகள் மிகுதி. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், உரிய ஆய்வுகள் போன்றவை நடைபெறவில்லை என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

        பொதுவாக எரிமலைகளிலிருந்து எரிமலைக் குழம்பு வெளியேறும் காலம் மற்றும் அதன் செயல்பாடுகளைக் கொண்டு செயல்படும் (Active Volcanoes), உறங்கும் (Dormant Volcanoes), செயலிழந்த எரிமலைகள் (Extinct Volcanoes) என  மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மேலும் வடிவ அடைப்படையிலும் வகைப்பாடுகள் உண்டு. கூட்டு எரிமலைகள் (Composite volcanoes), கேடய எரிமலைகள்  (Shield volcanoes), கூம்பு எரிமலைகள் (Cinder Cone volcanoes), பிளவு எரிமலைகள் (Fissure volcanoes),  பெரும் பள்ள எரிமலைகள் (Caldera volcanoes) என்றும் இவற்றைப் பிரிப்பர்.

      உலகில் மூன்று முக்கியமான எரிமலைப்பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை பசிபிக் நெருப்பு வளையப்பகுதி (The Cirum Pacific Belt / Pacific Ring of Fire), மத்திய கண்டப்பகுதி (The Mid Continental Belt) , மத்திய அட்லாண்டிக் பகுதி (The Mid Atlantic Belt) ஆகியனவாகும். ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை மத்திய கண்டப்பகுதியில் காணப்படும் உறங்கும், கேடய வகையைச் சார்ந்ததாக அறியப்படுகிறது. இந்த எரிமலை திடீரென்று செயல்படும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.  இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகமில்லை என்றாலும் இதன் காரணமாக ஏற்படும் பருவநிலை மாற்றம், காற்று மற்றும் சூழலியல் மாசு, கதிரியக்கம் போன்ற இதன் நீண்டகாலப் பாதிப்புகளை உலகம் கணக்கில் கொள்வது அவசியம். இதனால் புவியில் படியும் சில கனிமங்கள் தாவரங்களுக்கு உகந்தது என்றாலும் பாதிப்புகளே மிகுதியாக இருப்பதையும் உணரலாம்.  


 

     இந்தியாவில் அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள பாரன் தீவு (Barren Island) எரிமலை செயல்படும் ஒன்றாக உள்ளது. நார்கண்டம் தீவு (Narcondam Island), தக்காணப் பொறிகள் (Deccan Traps) போன்றவை செயலற்ற எரிமலையாக்க் கணிக்கப்படுகின்றன. இருப்பினும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கடலடி எரிமலைகள் உருவாகும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. எரிமலை, காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளிலும் கரிசனங்களிலும் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம் என்பதே வருத்தமளிக்கும் உண்மையாகும்.

         நமது நாடு ஒப்பீட்டளவில் பிற நாடுகளைவிட எரிமலைப் பாதிப்புகள் குறைவாக உள்ள பகுதி என்றாலும் அதையும்விட பெரிய சூழலியல் பாதிப்புகளை உண்டாக்கும் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொள்கிறோம். இந்த நேரத்திலாவது நாம் விழிப்படைவது நமது உயிர்க்கோளத்திற்கு அவசியமானதாகும். தலைநகர் தில்லி உள்ளிட்ட வடஇந்தியப் பகுதிகள் காற்று மாசால் ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இவ்வாண்டு எரிமலைச் சாம்பல் புகையும் இத்துடன் இணைந்துள்ளது.  

        வடஇந்திய காற்று மாசுக்குக் காரணம் அறுவடை செய்த தானியங்களின் வைக்கோலை எரிப்பதால் ஏற்படுவதாகும். வாகனப்புகை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. நீதிமன்றங்கள் எவ்வளவோ உத்தரவிட்டும் வேளாண் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க இயலவில்லை. எனவே தில்லி போன்ற பெருநகரங்கள் அதிகளவிலான காற்று மாசால் முடங்கிப் போய்விடுகின்றன. இந்தியா போன்ற வெப்பமண்டல, மித வெப்ப மண்டல நாடுகளில் தீயிடுதலைக் கொண்டாட இயலாது. ஆனால் இங்கு தீயிடுதல் பண்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

        நோய்த் தொற்றுள்ள மருத்துவக் கழிவுகளைத் தவிர எஞ்சியவற்றை பாதுகாப்பற்ற முறையில் காற்றில் எரிப்பது பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். இது குறித்து விழிப்புணர்வு இந்திய சமூகத்தில் உருவாக்கப்படவில்லை. வெறும் சட்டங்களாலும் நீதிமன்ற உத்தரவுகளாலும் இதை அமல்படுத்க்திவிட முடியாது. மக்களின் மனநிலைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். தமிழ்நாட்டிலும் கரும்பு சாகுபடியில் அதன் தோகைகளை வயல்வெளிகளில் எரிக்கும் பழக்கம் நீடிக்கிறது. இதை வேண்டாமென்று வேளாண்துறை சொன்னாலும் யாரும் கேட்க முனைவதில்லை. இது காற்று மாசை மட்டுமல்லாது புவிக்கோளத்தின் பல்லுயிர்த் தொகுதிகளுக்கும் இவை கேடாக மாறுகின்றன


 

       சூழலைக் காக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக விதைக்கப்பட்டுள்ளது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும். நடைமுறையில் பலர் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். நகரங்களில் வீட்டு வாசலிலாவது ஒன்றிரண்டு மரங்களை நட்டுப் பராமரிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இதன் இலைச் சருகுகளைத் தீயிட்டு கொளுத்தும் நடைமுறையை பலர் கைக்கொள்கின்றனர். இவற்றை அப்படியே விட்டால்கூட எளிதில் மண்ணுக்கு உரமாகும். தூய்மை என்ற பெயரில் இவற்றை நெகிழி உள்ளிட்ட குப்பைகளுடன் சேர்த்து எரிப்பதால் சூழலும் மனிதர்களும் அடையும் தீமைகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்த இலைச் சருகுகளைக் குழிகளில் இட்டு உரமாக மாற்றும் முறை மிகவும் எளிதானது. இது சாம்பலைவிட தாவரங்களுக்குச் சத்தானது மட்டுமின்றி காற்று மாசையும் பெருமளவு குறைக்கும். பொங்கலுக்கு முதல்நாள் போகி என்று சொல்லி அனைத்தையும் எரிக்கும் புதிய பழக்கம் நம்மை ஆட்கொண்டுள்ளது. நகரம் சார்ந்த பகுதிகளில் தாவர இலைச்சருகுகள், நெகிழி உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து எரித்து அன்றாடம் போகி கொண்டாடப்படுகிறது!

      தீபாவளி போன்ற பண்டிகை மற்றும் கொண்டாட்டங்களில் வெடிக்கும் வெடிகள், பட்டாசுகள் போன்றவற்றில் தீய விளைவுகளையும் இந்தியச் சமூகம் உணராமலிருப்பது வேதனையைத் தருவதாகும். எரிமலை வெடிப்பை தவிர்க்க இயலாது.  ஆனால் காட்டுத் தீ போன்றவை உருவாகாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். பட்டாசுகளால் உண்டாகும் காற்று, ஒலி, ஒளி மாசுகள் புறக்கணிக்கக் கூடியவை அல்ல. பசுமைப் பட்டாசு என்பதெல்லாம் ஏமாற்று வேலையாகும். நாமும் பிற உயிரினங்களும் உயிர்வாழ மிகவும் அவசியமான காற்று, நீர், மண் போன்றவை மாசடைய அனுமதிப்பது தற்கொலைக்கு ஈடானதாகும். இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வது ஒருபுறம் என்றால் நம்மால் பேரிடர் உருவாகாமல் தடுக்க முனைவதும் இன்றியமையாத ஒன்றாகும்.

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் ஜனவரி 2026