புதன், அக்டோபர் 19, 2016

42. திராவிட இயக்க ஒவ்வாமையைப் பகடி செய்யும் விமர்சனப் பார்வை



42. திராவிட இயக்க ஒவ்வாமையைப் பகடி செய்யும் விமர்சனப் பார்வை

(இந்நூல் என் வாசிப்பில்தொடர்)


மு.சிவகுருநாதன்



  (கருப்புபிரதிகள் வெளியீடாக டிசம்பர், 2011 இல்  வந்த தோழர் வே.மு.பொதியவெற்பன் எழுதிய ‘திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்’ என்ற விமர்சனக் கட்டுரை நூல் குறித்த பதிவு.)

    படிப்பதற்குச் சற்றுக் கடினமான, தனித்துவமிக்க மொழி நடைக்குச் சொந்தக்காரர் வே.மு.பொதியவெற்பன். அவர் எழுதிய ஒரு நீண்ட பகடி விமர்சனக் கட்டுரை, வேறு 3 கட்டுரைகள் கருப்புப்பிரதிகள் வெளியிட்ட இந்நூலில் காணக்கிடைக்கிறது. “திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் மீதான மருத்துவப் பரிசோதனை அறிக்கை சுமார் 100 பக்கங்களாக விரிகிறது. 5 வது கட்டுரை பனுவல் பிறந்த பின்புலத்தை விவரிக்கிறது.

    “அங்கதச் சுவையோடு விரிந்த விவாதங்களுக்கு அழைப்பை விடுக்கும் இந்நூலை உடன்பட இயலாக் கருத்துகளால் நிராகரிக்க இயலவில்லை”, என நீலகண்டன் பதிப்புரையில் குறிப்பிடுகிறார். 

    திருவாரூர் தங்கராசு, வே.ஆனைமுத்து, சின்னக்குத்தூசி, ஓவியா, மயிலை சீனி. வேங்கடசாமி, எஸ்.வி.ராஜதுரை. வ.கீதா, தொ.பரமசிவன், க.இராமசாமி ஆகியோருக்கு நூல் படைக்கப்பட்டுள்ளது. இன்று திராவிட இயக்கம் கொண்டாட மறந்த, ஒதுக்கி வைத்த பெயர்களில் சில. இதையேகூட இன்றைய திராவிட இயக்கங்களின் விமர்சனமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். 

    ஜெயமோகன், தமிழவன் ஆகியோரின் திராவிட இயக்க காழ்ப்புணர்வை அவரது சொற்கள், அவற்றிற்கு எதிராக பலர் சொல்லிய கருத்துகள் இடையிடையே பொதியின் கருத்துக் கிண்டல் என நீள்கிறது பக்கமெங்கும்.  

    இன்றும்கூட எதிர்கொள்ளும் சக மனிதர்கள் மீது காழ்ப்பை உமிழும் ஜெயமோகனது (துயரர் 1, இனி ஜெ.மோ.) மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் தீர்வு “குணப்படுத்த இயலாவண்ணம் முற்றிய கையறுநிலை”, என்று வரையறுக்கிறது (பக். 11). இது எழுதப்பட்டு ஆண்டுகள் பலவானாலும் ‘விகடன் தடம்’ ஜெ.மோ. நேர்காணலைப் படித்தவர்கள் இந்த உண்மையை உணரக்கூடும். 

   துயரர் -2 தமிழவன் அந்தளவிற்கு மோசமில்லை. எனவே அவருக்கு ஹோமியோபதி பரிந்துரைக்கப்படுகிறது (பக்.12). அதனால்தான் “அதிகமாக சர்ச்சிக்கவும், வளர்த்தெடுக்கப்பட வேண்டியவும் ஆன பிராந்தியங்களை முன்வைக்கும் தமிழவன், பிற மரபுகளின் ஒருங்கிணைவுக்குரிய பொருத்துசங்கிலிகள் நம்மரபில் இருப்பதனையும் நமக்குக் கண்டுணர்த்துபவராகின்றார். அவருடனான உரையாடலுக்க்கான சாத்தியமானவராகவே நீடிக்கிறார்”, (பக். 128) என்று பிறிதோரிடத்தில் சொல்கிறார். 

    “முந்தீர்மானமான அகவயநோக்கில் (subjectivity) அணுக முற்படாமல், புறவயநோக்கில் (objectivity) அணுகத்தலைப்பட்டு ஆய்வின்முடிவில் தேடலின் பொருளை வந்தடைவதே சரியான காய்தல், உவத்தல் அற்ற ஆய்வுச் செந்நெறியாக அமையவல்லதாகும்”, (பக். 160) என்று குறிப்பிடும் பொதி, இந்திய தருக்கமுறையில் புரட்டல்வாதம் மற்றும் மார்க்சிய நோக்கிலான ‘கருத்துக் குருட்டுநோய்’ பற்றியும் குறிப்பிடுகிறார்.

     பொதிகைச்சித்தர் கீழ்க்கண்ட ஏழு திராவிட இயக்க ஒவ்வாமைகளைச் சுட்டுகிறார் (பக். 165).



  • சங்கத்தமிழ்மரபையும்  நவீனத்துவமரபையும் அறியொணா வட்டத்தொட்டி ரசனை மரபு.
  • வாய்மொழிமரபைப் புறக்கணிக்கும் பண்டித மரபு.
  • இலக்கியமரபைப் புறக்கணிக்கும் நாட்டார்மரபு
  • சித்தர்மரபை மறுதலிக்கும் ஆகமச்சைவ, வடகலைவைணவ மரபு.
  • பக்தியிலக்கிய, கலைக்கொடைகளை அறியொணா வறட்டு நாத்திகமரபு.
  • மானுட வாழ்வின் மதவெளியின் வகிபாகத்தை மறுதலிக்கும் பகுத்தறிவின் பயங்கரவாதமரபு.
  • மரபு யாவற்ரையுமே ‘மதக்கரை’யின் பேரால் மறுதலிக்கும் நிராகரிப்பரசியலின் எதிர்மரபு. 


   ஜெ.மோ. வகையறாக்களின் நிராகரிப்பு அரசியலோடு, அ.மார்க்ஸ் போன்ற இந்திய மரபை இந்துத்துவ கரையின் பேரால் நிராகரிக்கும் வழியினருடன் எதிர்கொள்ளவேன்டிய தர்மச்சங்கட இக்கட்டு நேர்வதைச் சொல்கிறார். அ.மார்க்ஸ் பின்நவீனத்தின் மூலம் பகுத்தறிவின் பயங்கரவாதத்தைப் பேசியவருந்தானே! இந்த ஒவ்வாமைகளில் சில திராவிட இயக்கமும் கைக்கொண்டதல்லவா! இவை திராவிட இயக்கத்திற்குள் உள்ள  ஒவ்வாமைகள் தானே!

      “தமிழர்களுக்குச் சிந்தனைமரபு கிடையாதென”, இ.பா. மற்றும் ஜெ.மோ. ஆகியோர் சொன்ன கால்ந்தொட்டே அவர்களை எதிர்கொண்டுவரும் நிலையைக் குறிப்பிடுகிறார். பொதியை எதிர்மறை குரு எனக் குறிப்பிட்டு, ‘சொல் புதிது’ இதழில் தொடர்ந்து எழுத வேண்டியதன் விளைவு இந்நூல் எனத் தெளிவுபடுத்துகிறார் (பக். 167). 

     ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு அப்பால் சுட்டிக்காட்டும்படியான திராவிட இயக்க வரலாற்றாசிரியர்கள் ஒருவர்கூட இல்லை என்கிற  ஜெ.மோ, வின் ஒவ்வாமைக்கு, வே.ஆனைமுத்து தொடங்கி செந்தலை பசு.கவுதமன் ஈறாக ஒரு நீண்ட பட்டியலை வழங்கியிருக்கிறார் (பக். 89, 90).  

   ஆரியம் X திராவிடம் என்ற இருமை எதிர்வை முன்வைத்து இங்கு நிகழ்ந்தப் பிரச்சனைப்பாடுகளை   இரண்டாவது கட்டுரை ஆராய்கிறது. இதில்  தமிழவனை உரையாடலுக்கு சாத்தியமானவராக கண்டடைகிறார். ஜெ.மோ. உரையாடலுக்குச் சாத்தியமற்றவர் என்பதோடு கூடவே,  அவருக்காக இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் வீணடித்திருக்க வேண்டியதில்லை என்று சிலர் கருதலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் உள்ள இவ்வகையான ‘கள்ள மவுனங்கள்’ அய்யத்திற்குரியவை. எனவே பொதியின் இச்செயல் மிகுந்த பாராட்டிற்குரியது. 

    ‘விதி சமைக்கும் அதிமனிதரும் விஷ்ணுபுரம் வட்டத்தொட்டியும்’ (பக். 129) என்ற கட்டுயில் ஜெ.மோ. வின் சுயமோகத்தைக் கட்டுடைக்கிறார். ‘இன்றைய காந்தி’ எழுதுகிற ஜெ.மோ. இன்றைய காந்தியர்கள் சட்டீஸ்கர் மாநில ஆதிவாசிகள் சிக்கலில் எடுத்துள்ள நிலைப்பாடுகள், அணுகுமுறைகள் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் ‘காந்தியின் பொம்மைக் குரங்குகளாய் மவுனம் சாதிப்பது எடுத்துக்காட்டப்படுகிறது (பக். 135). 

     ‘பாரதி பரம்பரையும் பெரியார் பரம்பரையும்’ என்கிற கட்டுரையில், “சமூகமறுமலர்ச்சி என்கிற குவிமையத்தில் வ.ரா.வை மைய அச்சாகக் கொண்டியங்கிய பாரதி பரம்பரையும்; சமூகநீதி, சுயமரியாதை எனும் ஆதாரங்களில் பெரியாரியத்தை மையமாகக் கொண்டியங்கும் திராவிட பரம்பரையும் ஒன்றுபடும் முரண்படும் புள்ளிகளைச் சுட்டுகிறார் (பக். 148).

    பாரதியைக் கொண்டாடி நின்ற பாரதிதாசன், பாரதி மரபை மீறி நின்றவர். நவீனத்துவவாதிகள் மத்தியில் பாரதிதாசனை இனங்காண முடிந்த புதுமைப்பித்தனே பாரதி, பாரதிதாசன்  மரபுகளை மீறித் தம்மரபை முன்னெடுத்தவர், என்றும் பாரதிதாசனின் ஆளுமையின் சிறப்பியல்புகள் தனியே விதந்தோதப்படவேண்டியவை என்றும் கணிக்கிறார். பெரியார் பரம்பரையை முன்னெடுப்பது யார், இன்றைய அரசியற்களத்திலுள்ள வெற்றிடம் குறித்தும் பேசத்தான் வேண்டும். 

     பன்முகப் பார்வைகளை உள்ளடக்கிய ஓரு விவாத உள்ளீடாய் அமைக்கப்பட்ட, மையமின்றி ‘நான்’ அழிந்த பின் நவீனத்துவப் பிரதியாக கட்டமைக்கப்பட்ட இந்நூல், இன்னும் விரிவான அளவில் பேசப்படவேண்டும். ஜெ.மோ. வுக்காக இல்லாவிடினும் திராவிட இயக்கம் மற்றும்  பெரியாருக்காகவது இது சாத்தியப்படவேண்டும். கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்கவும், எதிர்காலத்தை முன்னெடுக்கவும் இது உதவும். ஆனால் அதற்கான வாய்ப்புகள், முன்னெடுப்புகள் இன்னும் தமிழில் பெரும்பாலும் இல்லை என்பதே வேதனையான உண்மை.
  

திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் (கட்டுரைகள்)
வே.மு.பொதியவெற்பன்

பக்கங்கள்:   173

விலை: ரூ. 120 

முதல் பதிப்பு: டிசம்பர்,  2011 

வெளியீடு:

கருப்புப்பிரதிகள்,
பி 55 பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை,
சென்னை – 600005.
பேச: 9444272500

மின்னஞ்சல்: karuppupradhigal@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக