செவ்வாய், நவம்பர் 01, 2016

05. பாடநூல்களில் மாயாவாதம்!


05. பாடநூல்களில் மாயாவாதம்!



- மு.சிவகுருநாதன்





       பள்ளிப் பாடநூல்களில் ஒரு பொதுவான அம்சமிருக்கிறது. இருப்பதை விடுத்து இல்லாத ஒன்றிடம் சரணடைவதுதான் அது. இது ஆதி சங்கரனின் மாயாவாதப் பாதிப்பு போலும்!



      பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் வங்கிப் படிவம் நிரப்புதல் என்றொரு வினா உண்டு. இதற்கு 5 மதிப்பெண்கள். வங்கியில் பணம் செலுத்தும், எடுக்கும் மாதிரிப் படிவங்கள் கொடுத்து நிரப்பச் சொல்கிறார்கள். நல்ல திறன் அடைவிற்கான முயற்சி என்று நீங்கள் பெருமைப்படுவது தெரிகிறது. கொஞ்சம் பொறுங்கள்!



      இப்படி ஒரு படிவத்தை இந்தியாவிலோ அல்லது தமிழகத்திலோ எந்த வங்கியிலும் காணமுடியாது. தமிழக அரசோ, தமிழாசிரியர்களோ விரைவில் தொடங்கவிருக்கும் வங்கிக்கான ‘செலானாக’ கூட இது இருக்கலாம். இப்போதுதான் வங்கிகளுக்கான உரிமம் மிக எளிதாகக் கிடைக்கிறதே! எனவே முயற்சித்துப் பார்க்கலாம். நகை அடகுக் கடையெல்லாம் வங்கியானதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி 


     தற்போது இருக்கின்ற வங்கியின் அல்லது அதே மாதிரியில் ஒரு செலான் அளித்து நிரப்பச் சொன்னால் மாணவர்களுக்குத் திறன் அடைவு உண்டாகுமா? தனித்தமிழ் அலங்காரத்துடன் ஒரு கற்பனைச் செலுத்துச் சீட்டின் மூலம் மாணவர்களிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்? “கல் தோன்றா, மண் தோன்றா காலத்து முன் தோன்றிய”, கனவுதான் தமிழ்ப் பாடமா? நடைமுறை வாழ்விற்கும் பொருத்தப்பாட்டிற்கும் வர மொழியை எப்போது சிறையிலிருந்து விடுவிக்கப் போகிறீர்கள்?



      ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் பகுதியில் ‘இந்திய ரூபாய் நோட்டு’ என்றொரு பாடம் உள்ளது. அதில் “நல்ல நோட்டா! கள்ள நோட்டா! கண்டுபிடிக்க சில வழிகள்”, சொல்லப்படுகின்றன. அந்த வழிகளில் ஒன்று வரிசை எண்கள் பற்றியது. அதன் ஆங்கில, தமிழ் வடிவங்கள் கீழே.



Number Panel



“Number Panels of the bank notes are printed in fluorescent ink. The space between the number is evenly distributed. A special, unique and distinct font is used. The same font is printed for all the denominations. These number will glow under u.v. lamp”.



(பக். 180, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)



வரிசை எண்கள்



     “புற ஊதா விளக்கொளியில் ஒளிரும் வண்ணம் ஒளிரும் மையினால் அச்சடிக்கப்பட்டுள்ளது. எண்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். எண்கள் சிவப்பு நிறத்தில் பெரிதாகப் பளிச்சென்று, தடிமனாக இருக்கும். 1000 ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல்பாகத்தில் கருநீல நிறத்திலும், இடப்புறத்தில் கீழ்ப்பகுதியில் சிவப்பு நிறத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்”.



(பக். 190, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, தமிழ் வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)



     இதன் மொழியாக்கம் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்களே படித்துப் பார்த்து இதன் அழகில் மெய் மறந்திடுக.

நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி


      இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) நாளிதழ்களில் பொதுமக்கள் நலன் கருதி படத்துடன் விளக்கமான விளம்பரங்களை வெளியிடுகிறது. மேலும் அதனிடைய இணையதளத்தில் 50, 100, 500, 1.000 ஆகிய ரூபாய் நோட்டுகள் பற்றிய சுவரொட்டிகளை தமிழ் உள்பட 12 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது. அவற்றில் ஒன்றை பாடநூலில் பயன்படுத்தி இது பற்றிய எளிமையான மற்றும் முழுமையான சித்திரத்தை மாணவர்களுக்கு வழங்கியிருக்க முடியும். ஆனால் அவற்றை நகலெடுத்து, சொந்தச் சரக்குபோல வழங்கும்போது பல்வேறு பிழைகள் உற்பத்தியாகின்றன.



      சீரான் பதிவு, நீர்க்குறியீடு, அடையாளக்குறி (மாற்றுத் திறனாளிகளுக்கு…), சாய்த்துப் பார்க்கையில் மாறும் நிறம், தடவி உணரும் அச்சு, மறைந்திருக்கும் மதிப்பு எண், நுண்ணிய எழுத்துகள், பாதுகாப்பு இழை, நகலெடுக்க முடியாத நவீனம், ஒளிரும் தன்மை, காகிதம், நிறம், அச்சிட்ட ஆண்டு என பல்வேறு ரூபாய் நோட்டின் இரு பக்கங்களிலும் உள்ள விவரங்கள் குறிக்கப்படுகின்றன. வரிசை எண்கள் பற்றி ஏதுமில்லை. ‘செலான்’ போல இவர்களாகக் கண்டுபிடித்த விடயமாகக் கூட இது இருக்கக்கூடும்.



      2015 மற்றும் அதற்குப் பிறகு அச்சான 100, 500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்கள் வித்தியாசமாக அச்சிடப்பட்டிருப்பதை படத்தில் காண்க.



      இறுதியாக, கல்வியில் சுயத்திற்கு இடமில்லையா? மாறாக சுயத்தை அழிப்பதுதான் கல்வியா? யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேச்சுப் போட்டிகளில் மனப்பாடம் செய்து ஒப்புவித்து, யாரோ எழுதிய புத்தகத்தை நகலெடுத்து கட்டுரைப் போட்டிகளில் எழுதிப் பரிசு பெற்று, வளர்த்தெடுக்கப்படும் பழக்கம் முனைவர் பட்ட ஆய்வு வரைக்கும் நீள்கிறது.



       இந்த நூல்களைப் படித்துத்தான் இந்த உரை தயாரிக்கப்பட்டது அல்லது கட்டுரை எழுதப்பட்டது என்று என்றைக்காவது சொல்ல வைத்திருக்கிறோமா? மேற்கோள் நூல் பட்டியல் அளித்து மாணவர்களுடைய வாசிப்பையும் அறிவையும் அகலிக்க, கல்வியும் பாடநூல்களும் ஏதேனும் செய்திருக்கிறதா? பிறகெப்படி சுதந்திரமான, விசாலமான, நேரிய ஆய்வுகள் வெளிவரும்? பாடநூல்கள் அறிவை விரிவாக்கும் கருவியாக இருத்தல் நலம். ஆனால் இங்கே மூடத்தனத்தின் உச்சத்தில் அல்லவா இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக