செவ்வாய், ஜனவரி 08, 2019

கற்றல் விளைவுகள் - ஒரு பார்வை


கற்றல் விளைவுகள் - ஒரு பார்வை

  
மு.சிவகுருநாதன்


       “இத்தனை ஆண்டுகளில் நான் பல துறைகளில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் கல்வித்துறை போல ஒரு காலனிய மனோபாவமுள்ள துறையை இதுவரை நான் பார்த்ததில்லை. உயரதிகாரிகளைப் பார்த்துத் தன் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ளும் துறையை நான் பார்த்ததில்லை. செயலரைப் பார்த்துத் துணைச் செயலர், துணைச் செயலரைப் பார்த்து இயக்குநர், இயக்குநரைப் பார்த்து மாவட்டக் கல்வி அலுவலர், அவரைப் பார்த்துப் பள்ளித் தலைமை ஆசிரியர், அவரைப் பார்த்து ஆசிரியர், ஆசிரியரைப் பார்த்து மாணவர்கள் எனத் தனக்கு மேலுள்ளவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதை அப்படியே கண்ணை முடிக்கொண்டு செய்யும் வழக்கம் வேறெந்தத் துறையிலும் இல்லை; எல்லாரும் யாரையோ பார்த்துப் பயப்படுகிறார்கள்”. 


– த.உதயச்சந்திரன், முன்னாள் தமிழகப் பள்ளிக் கல்விச் செயலர் (காலச்சுவடு 226, அக். 2018 நேர்காணலில் கூறியது.)  







       சென்ற ஆண்டின் இறுதியில் (டிச. 19, 20 – 2018) 6-8 வகுப்புக்களுக்கான கற்றல் விளைவுகள் (Learning Outcomes) இரு நாள் பயிற்சி (சமூக அறிவியல்) நடைபெற்றது. 

   மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) வரையறுத்துள்ள கற்றல் விளைவுகள் மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டும். தேசிய அடைவுச் சோதனைகளில் (PISA, NAS போன்றவை) தமிழக மாணவர்களின் பின்தங்கிய நிலையை மாற்ற இது உதவும் எனவும் கூறப்பட்டது. 

   இவ்விளைவுகளை மாற்றவோ, திருத்தவோ நமக்கு உரிமையில்லை என்றும் இவை குறித்து எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது. 

    இந்தியா முழுமைக்குமான பொதுவான கல்வி மற்றும் பாடத்திட்டம் என்பதே கேள்விக்குறியானது. ‘நீட்’ போன்ற போட்டித்தேர்வுகளைக் கொண்டு நாட்டு மக்களையும் இதில் உட்படுத்தும் சதி மெதுவாக அரங்கேறி வருகிறது. ‘நீட்’ எதிர்ப்பு, இந்தியா முழுமைக்கும் பொதுவான கல்வித்திட்டம் என்பதான குளறுபடிகளை (எகா: சபரிமாலா) கொண்டாடும் சூழலும் இங்குள்ளது. தரமான கல்விக்கு இவை அளவுகோல்களல்ல. இவை நமது புரிதல் எல்லைகளையும் கோடிட்டுக் காட்டுவது. 

   ‘நீட்’க்கானப் பாடத்திட்டம், பாடநூல்கள் என்று சென்றுகொண்டிருப்பது கல்வியில் நல்ல சூழல் இல்லை என்பதை உணர்த்துகிறது. மேலும் +1,+2 வகுப்புகளைப் புறக்கணித்து ‘கோச்சிங் சென்டரில்’ அய்க்கியமான பீகார் மாணவி ‘நீட்’ தேர்வில் முதலிடம் பெற்றதும் இதைத்தான் உணர்த்துகிறது. 

   சில ஆயிரம் பேருக்காக பல லட்சம் குழந்தைகளைப் பலியிடுவது ஏன்? பத்தாம் வகுப்பிற்கு பிறகே மேல்படிப்பைத் தேர்வு செய்யும் நிலை இருக்கும்போது முதல் வகுப்பிலிருந்து குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவது நியாயமா?

    ஒரு காலத்தில் தனிப்பயிற்சி நிலையங்கள் அதிகமிருந்தன. ஆசிரியர் பற்றாக்குறை என்ற நியாயமான காரணங்கள் கூட இருந்தன. அவை இன்று மறைந்துள்ளன. ஆனால் இன்று நாடெங்கும் ‘கோச்சிங் சென்டர்கள்’ காளான்கள் போலப் பெருகியுள்ளன. தனியார் சுயநிதிப் பள்ளிகளும் ‘கோச்சிங் சென்டர்’ முதலாளிகளும் கொள்ளையடிக்க வழிவகை செய்வதே அரசுகளின் கொள்கையாக உள்ளது. 

   பாடத்திட்டம், பாடநூல்கள் ஆகியவற்றை மட்டும் மாற்றினால் போதுமா? நமது தேர்வு முறைகள், வினாத்தாள் ஆகியவற்றையும் ‘நீட்’க்கு ஏற்ப மாற்றப்  போகிறார்களா? விரைவில் அதுவும் நடக்கும் போலும்! சுருக்கமான, விரிவான விடை எழுதும் முறை தவிர்க்கப்பட்டு முற்றிலும் பல்விடைத் தேர்வாக வினாக்கள் அமையும் வினாக்கள் இனி பள்ளித் தேர்வுகளில் இருக்கும். 

  HOT – Higher Order Thinking, MOT – Middle Order Thinking, LOT - Low Order Thinking என்றெல்லாம் பேசத்தொடங்குவது இதன் ஒரு பகுதியே. பல்விடைத்தேர்வில் மட்டுமே ஒருவரது திறனை முழுமையாக மதிப்பிட்டு விடமுடியும் என்பதைவிட அபத்தம் வேறு இருக்க முடியாது. (சிவப்பாயிருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப்போல!) 

    1990 களின் நடுவே பேரா. தவே அவர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவுகள் என்கிற முறை அமல் செய்யப்பட்டது. இப்போது வரும் இந்த கற்றல் விளைவுகளின் பின்னணி சுவாரசியமானது. உலக அளவில் நடத்தப்படும் PISA (Programme for International Student Assessment)  தேர்வில் இமாச்சல் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 73 இடங்களில் நடத்தினார்களாம்! அதில் தமிழக மாணவர்கள் மிகவும் பின்தங்கினராம்! (அணு உலைகள், மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களினால் தமிழக மக்களும் கல்வியில் தமிழகக் குழந்தைகளும் சோதனை எலிகளாக மாற்றப்படுகின்றனர்!) 

     எனவே பின்தங்கிய தமிழக மாணவர்களைத் தூக்கிவிட ஏணியாக வந்த திட்டமே இந்த கற்றல் விளைவுகள்! மனித வளம் மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ள இந்த விளைவுகள் இந்தியா முழுமையுமுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும், நீங்கள் பழைய, புதிய பாடநூல்கள் எதை எடுத்துக்கொண்டாலும் அச்சு பிசகாமல் அப்படியே இருக்குமென்று மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பெருமை பொங்க குறிப்பிட்டார். மேலும் இது குறித்து எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்று அப்படிச் செய்தால் அரசின் நடவடிக்கைகள் மிகக் கடுமையாக (17பி)  இருக்கும் எனவும் எச்சரித்தார்.

    இரண்டாம் நாள் பயிற்சிக்கு பங்கேற்பாளர்கள் அனைவருகும் இரு கற்றல் விளைவுகள் தரப்பட்டன. மறுநாள் இந்த கற்றல் விளைவுகளுக்கு செயல்பாடுகள் மற்றும்     HOT வினாக்கள்  (Higher Order Thinking) தயாரிக்கக் கட்டளையிடப்பட்டது. 

   சமூக அறிவியல் பாடத்திற்கு வகுப்புவாரியாக கற்றல் விளைவுகள் பட்டியலிடப்பட்டன. கீழே வகுப்புவாரியாக பட்டியல்: 

III    15
IV    15
V    13
VI    26
VII   34
VIII   32

    ஆறாம் வகுப்பில் 601 – 608 புவியியல், 609 – 619 வரலாறு, 620 – 625 குடிமையியல், 626 பொருளியல்

    எழாம் வகுப்பில் 701 – 712 புவியியல், 713 – 721 வரலாறு, 722 – 732 குடிமையியல், 733, 734 பொருளியல்

    எட்டாம் வகுப்பில் 801 – 809 புவியியல், 810 – 821 வரலாறு, 822 – 832 குடிமையியல், பொருளியல்  கற்றல் விளைவுகள் இல்லை.

 (ஆனால் பொருளியல் பாடங்கள் இருக்கின்றனவே! ஏன் விளைவுகள் இல்லை? உஸ்ஸ்ஸ்... யாரும் எதுவும் பேசக்கூடாது!! 17 பி தெரியுமா?)

   பாடத்திட்டம், பாடநூல் தயாரிப்போர்தான்   கற்றல் விளைவுகளையும் வடிவமைக்க முடியும். ஆனால் எக்காலத்தும் எப்பாடத்திட்டத்திற்கும் எப்பாடநூலுக்கும் பொருந்தும் கற்றல் விளைவுகளை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) வரையறுத்துள்ளது வியப்பு!

    சில திறன்கள் நமது பாடநூலில் இல்லாமலிருக்கலாம், அல்லது  வேறு வகுப்புகளில் இருக்கலாம். 6 -8 வகுப்புக்குரிய கற்றல் விளைவுகள் என்றாவது மொத்தமாகச் சொல்லி வைக்கலாம். ஆனால் இங்கு நடப்பதோ வேறு. இது இந்த வகுப்பிற்குரிய கற்றல் விளைவு. எந்தப் பாடநூலுக்கும் பொருந்தும் என கண்ணை மூடிக்கொண்டு நம்ப வைக்கப்படுகிறது. மேலிட உத்தரவை கடைபிடிப்பதுதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி என்று மிரட்டப்படுகிறது. முன்னாள் கல்வித்துறைச் செயலர் த.உதயச்சந்திரனின் கணிப்பு எவ்வளவு சரியானது என்று இப்போது விளங்கும். இப்படி பயமுறுத்தியே கல்வித்துறையை சீரழித்து வைத்திருக்கிறார்கள். 

  கற்றல் விளைவுகளுக்கு எடுத்துக்காட்டாக பயிற்சியின்போது எனக்கு அளிக்கப்பட்ட கற்றல் விளைவுகளையே எடுத்துக்கொள்வோம்.
  
01. கற்றல் விளைவு எண்:  607

மரபுசார்ந்த குறியீடுகளின் உதவியுடன் அளவைகள், திசைகள் மற்றும் பண்புகளைக் காட்டும் அருகாமைப்பகுதியின் வரைபடத்தினை வரைதல். 

02. கற்றல் விளைவு எண்:   719

கோயில்கள், கல்லறைகள் மற்றும் மசூதிகள் கட்டப் பயன்படுத்தப்படும் அமைப்பு மற்றும் வரலாற்றுக் காலத்தின் முக்கிய நிகழ்வுகளை நாடகம் / தனி நடிப்பு மூலம் வெளிப்படுத்துதல். 

   முதலாவது விளைவைப் பற்றிய பாடம் 6 – 8 இல் சமச்சீர் மற்றும் புதிய பாடநூலிலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவ புவியியல் பாடப்பகுதியில் ‘நிலவரைப்படத் திறன்கள்’ எனும் பாடத்தில் முறைக்குறியீடுகள் (conventional signs and symbols), பழுப்பு, வெளிர்நீலம், கருநீலம், பச்சை, கருப்பு, சிவப்பு, இளஞ்சிவப்பு ஆகிய நிறக்குறியீடுகள் மற்றும் வானிலைக் குறியீடுகள் குறிப்பிடப்படுகின்றன (புவியியல், பருவம்: III, பாடம்: 02).  



   இரண்டாவதில் இரு விளைவுகளை ஏன் ஒன்றாக்கினார்கள் என்பதும் விளங்கவில்லை. மேலும் “கோயில்கள், கல்லறைகள் மற்றும் மசூதிகள் கட்டப் பயன்படுத்தப்படும் அமைப்பு”, என்று சொல்வதேன்? இரு மத வழிபாட்டிடங்களுக்கு நடுவில் கல்லறை வருவதேன்? இதைக் கேட்டால் எவ்வித பதிலும் இல்லை. வழிபாட்டிடங்களில் ‘கல்லறை’யை இணைப்பது பொருத்தமானதா? ‘கோயில்கள், தேவாலயம் மற்றும் மசூதிகள்’ அல்லது ‘இடு/சுடுகாடு, கல்லறைகள் மற்றும் தர்ஹா’ என்று சொன்னால் ஒரளவு பொருத்தமாக இருக்கலாம். தர்ஹா வழிபாட்டை இஸ்லாம் ஏற்பதில்லை போன்ற சிக்கல்களும் இதில் உண்டு. 

   கல்வியில் பெரும் மாற்றம் வருவது கானல்நீரே. பெரும் அரசியல், சமூகப் புரட்சி ஏற்பட்டால்தான் அது சாத்தியமாகும் என்கிற நிலையே இன்றும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக