வியாழன், நவம்பர் 05, 2020

தவறான முடிவு...

தவறான முடிவு...

 

மு.சிவகுருநாதன்

 

         கருத்துக் கணிப்பு நடத்தி 9, 10, +1, +2 வகுப்புகளைத் தொடங்குவது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 09/11/2020 பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுமாம்!

      அந்தந்த பள்ளிகளில் பெற்றோர்கள் கருத்துக்கேற்ப பள்ளிகள் இயங்குமாம்! இது ரொம்ப அபத்தமாக உள்ளது.

      கோவிட் 19 தொற்றுக்காக மக்கள் யாரும் ஊரடங்கு கேட்கவில்லை. மருத்துக் குழு அறிக்கை அடிப்படையில்தான் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்புகளும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

       பொது மக்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் அவசியமில்லை என்று நினைக்கக் கூடும். அதை அரசு அப்படியே ஏற்றுக் கொள்ளுமா? டாஸ்மாக், திரையரங்கம் போன்றவை திறக்க இதைப் போன்ற ஒரு முடிவை அரசு ஏன் எடுக்கவில்லை?

     கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறந்தபிறகு கோவிட் 19 தொற்று அதிகமாகியிருப்பதைப் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்நிலையில் கருத்து கேட்பு அடிப்படையில் பள்ளிகளை இயக்குவது என்பது மிகவும் தவறான முடிவு.

        ஒன்றிய அரசு சொல்லிவிட்டது என்கிற காரணம் ஏற்கக்கூடியது அல்ல. கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் மாநிலங்களை உதவிகள் செய்வதையோ, சரக்கு மற்றும் சேவை வரிப் பங்கை அளிக்கக்கூட மறுக்கும் ஒன்றிய அரசை காரணம் கூறி தப்பித்துக் கொள்ள இயலாது. பெருந்தொற்று அதிகமானால் அதனால் ஏற்படும் பல்வேறு இடர்களை மாநில அரசும் மக்களும்தான் எதிர்கொள்ள வேண்டும். மத்திய அரசு வேடிக்கை பார்க்கும்; கைதட்டச் சொல்லும், விளக்கேற்றச் சொல்லும், பூத்தூவ விரும்பும்.

     பள்ளிகளில் பெரும்பாலும் கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை. எத்தனை பள்ளிகளில் தண்ணீர் வசதிகளுடன் கழிவறை உள்ளது? எத்தனைப் பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்?

     வெறும் தெர்மல் ஸ்கேனர் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு கோவிட் 19 தொற்றைக் கண்டறிந்து விடமுடியாது; தடுக்கவும் முடியாது.

     சமூகப்பரவல் இல்லை என்றுதான் இதுகாறும் சொல்லி வருகின்றனர். கடைவீதிகள், பேருந்துகள் மற்றும் பொதுவிடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது என்று நம் கண்ணை மூடிக்கொண்டு வேண்டுமானால் நம்பலாம். முதல் அலை முடிந்துவிட்டதாகவும் தெரியவில்லை. எனவே இரண்டாவது அலை எப்போது தொடங்கும் என்று சொல்லவியலாது.

      வடகிழக்குப் பருவமழைத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான தமிழகப் பகுதிகளுக்கு இதுவே மழைகாலம். இக்காலத்தில் பல்வேறு மழை சார்ந்த நோய்கள் ஏற்படும். கோவிட் 19 தொற்றுக் காலத்தில் அவற்றைச் சமாளிப்பது கூடுதல் சவால்.

    7 மாதங்களாக குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிக்க முடியாத பெற்றோர் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேறுவழியின்றி விரும்பலாம். அரசு பொதுத்தேர்வு இருக்கிறது என்கிற பயம் வேறு அவர்களை வாட்டி வதைக்கும். அதற்கெல்லாம் அரசு உரிய முடிவெடுக்க வேண்டும்.

    பாடக்குறைப்பு பற்றியே இன்னும் முடிவெடுக்காத பள்ளிக் கல்வித்துறை மழைக்காலத்தில் பள்ளிகளை ஏன் விரைந்து திறக்க விரும்புகிறது? இதன் பின்னணியில் கல்வி வியாபாரிகள் இருக்கின்றனர். என்னதான் ஆன்லைன் வகுப்புகள் என்றாலும் இன்னும் முழுமையாக இன்னும் கல்லாப்பெட்டி நிரம்பவில்லை போலும்! அதற்காக அரசு இவ்வளவு மெனக்கெட வேண்டாம்.

    மழை மற்றும் பண்டிகைக் காலம் வருவதாலும், இந்தக் கல்வியாண்டின் 5 மாதங்கள் முடிந்துவிட்டதாலும் இன்னும் ஒரு அல்லது இரு மாதங்கள் பொறுமை காப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

    எல்லாவற்றிற்கும் நிபுணர் குழுவைக் கைகாட்டி விட்டு இதை மோசமான முடிவுகளை எடுத்து, பின்விளைவுகள் மோசமானால் யார் பொறுப்பேற்பது? அரசும் கல்வித்துறை உரிய பொறுப்பேற்றுக் கொள்ளுமா?

    அரசும் பள்ளிக் கல்வித்துறையும்  குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உயிருடன் விளையாட வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக