சனி, ஜனவரி 14, 2023

மகாத்மாவின் கதை - 01 

 

மகாத்மாவின் கதை - 01 

இளமைக்காலம்

மு.சிவகுருநாதன்


 

           இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதி இந்தியத் தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. மூன்றுபுறம் நீராலும் ஒருபுறம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதியை நாம் தீபகற்பம் என்கிறோம். இந்தியாவிலுள்ள மற்றொரு சிறிய தீபகற்பம் கத்தியவார் அல்லது சௌராஷ்டிரா ஆகும். இத்தீபகற்பத்தின் வடக்கே கட்ச் வளைகுடா மேற்கே அரபிக்கடல் கிழக்கு மற்றும் தென்கிழக்கே காம்பே வளைகுடா என மூன்றுபக்கம் கடலும் ஒருபக்கம் குஜராத்தின் இதர பகுதிகளும் உள்ளன. குஜராத்தின் போர்பந்தர், ராஜ்கோட், ஜாம்நகர், பவநகர், சுரேந்திரநகர், ஜூனகாத், அம்ரேலி ஆகிய பகுதிகளடங்கிய கத்தியவார் தீபகற்பம் தற்போது குஜராத்தின் 11 மாவட்டங்களாக உள்ளது.

       இப்பகுதியின் வணிகப் பாரம்பரியத்தின் வரலாறு நீண்டது. அகிம்சையையும் புலால் மறுப்பையும் வலியுறுத்திய அவைதீக சமயமான சமணத்தின் செல்வாக்கு இங்கு அதிகம். சமணம் வேளாண்மைக்கு எதிரான ஒரு வணிகச் சமயமாகவே அறியப்படுகிறது. இன்றைய ஈரானிலிருந்து (அன்று பாரசீகம்) புலம் பெயர்ந்த ஜொராஸ்டிரிய சமயத்தைச் சேர்ந்தவர்கள் மிகுதியாக வசிக்கும் பகுதியும் இதுவாகும். அவர்களுடைய பெர்சிய (பாரசீக)  மொழியடிப்படையில் இந்தியாவில் அவர்கள் பார்சிகள் என்றழைக்கப்படுகின்றனர். புத்த சமயமும் இந்து மதத்தின் சைவ, வைணவப்பிரிவுகளும் இஸ்லாமியர்களும் சேர்ந்தியங்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது.     

          மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் குடும்பத்தினர் அவரது  தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக குஜராத் கத்தியவார் சுதேச அரசுகளில்  முதல் அமைச்சர்களாக இருந்தனர். இவர்களைத் திவான் என்று அழைப்பர். திவான் (dewan) என்ற பாரசீகச் சொல்லுக்கு முதல் அமைச்சர் என்று பொருள். இந்தியாவில் அரேபிய, முகலாய மற்றும் சுதேச அரசுகளில் இப்பதவி உண்டு. நாட்டு விடுதலைக்கு முன்பு கத்தியவார் தீபகற்பம் எனப்பட்ட இப்பகுதியில் பல சுதேச அரசுகள் இருந்தன.

        காந்தியின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி எனும் கபா காந்தி ராஜ்கோட், வாங்கானேரி போன்ற சமஸ்தானங்களில் முதல் அமைச்சராக இருந்துள்ளார். அவர் அதிக படித்தவரல்ல; குஜராத்தியில் ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டும் படித்திருந்து, வரலாறு, புவியியல் அறிவு இல்லையென்றாலும் நடைமுறை அனுபவம் சார்ந்து சிக்கலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் நூற்றுக்கணக்கானவர்களை நிர்வகிக்கும் திறமையையும் பெற்றிருந்தார்.

          சொத்துகள் சேர்க்கும் ஆர்வமற்றவர் என்பதால் மிகக்குறைவான சொத்தை அவர் விட்டுச் சென்றார் என்று காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். கரம்சந்த் காந்திக்கு நான்கு மனைவிகள். ஒவ்வொரு மனைவியும் இறந்தபின் மறுமணம் செய்ய தொடர்ந்து அவர்களும் இறக்க, நான்காவதாக வாய்த்த புத்லிபாய் காந்தியின் தாயாராவார். அவருடைய முதலிரண்டு மனைவிக்கும் இரு பெண் குழந்தைகள்; புத்லிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்தன. அவற்றில் கடைசிப் பையனாக 1869 அக்டோபர் 2 இல் பிறந்தவர் காந்தி. தீவிர வைணவப் பற்றுடைய இவர்களது குடும்பம் சுதாமாபுரி எனப்படும் போர்பந்தரில் வசித்து வந்தது.

        காந்தியின் தாயார் புத்லிபாய் தவ ஒழுக்கம், மதப்பற்று மற்றும் பூசைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். படிப்பறிவு இல்லையென்றாலும் அனுபவ அறிவு மிக்கவர். சமஸ்தான விவகாரங்கள் அவருக்கு நன்றாகத் தெரியும். சமஸ்தானக் குடும்பப் பெண்கள் இவரிடம் அதிக மதிப்பு கொண்டிருந்தனர். சமஸ்தான மன்னர் தாகூர் சாஹிப்பின் தாயாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

         காந்தியை போர்பந்தரில் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படுகிறார். கடும் சிரமத்திற்கிடையே பெருக்கல் வாய்பாட்டை மனப்பாடம் செய்யும் நிலையில் அவரது ஞாபக சக்தியும் படிப்பில் ஆர்வமில்லாத மந்தபுத்தியும் இருந்ததாக அவரே குறிப்பிடுகிறார். காந்திக்கு 7 வயதிருக்கும்போது தந்தை ராஜஸ்தானிக் மன்றத்தில் உறுப்பினராவதற்காக ராஜ்கோட்டிற்கு அவரது குடும்பம் இடம் பெயர்கிறது. இம்மன்றம் சமஸ்தான மன்னர்களுக்கும் அவர்களுடைய இனத்தாருக்கும் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைக்கும் பணிகளில் ஈடுபட்டது.

         ராஜ்கோட் பள்ளியில் சேர்க்கப்பட்ட காந்தி 12 வயதில் உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார். பெரும் கூச்சத்தால் யாருடனும் பேசவோ, பழகவோ வாய்ப்பின்றி பாடங்களையும் புத்தகங்களையும் மட்டுமே தோழர்களாகக் கொண்டிருந்தார். கூச்சம் காரணமாக யாராவது கிண்டல் செய்வார்களோ என்று அஞ்சி ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்வதுதான் அவருடைய வழக்கமாக இருந்தது. இந்தப் பயிற்சியே விடுதலைப் போராட்டக் காலங்களில் பிறரை விட அதிவிரைவாக நடக்கவும் ஒருநாளில் 50 கி.மீ.க்கு மேல் நடக்கவும் அவரால் முடிந்தது. 

        பள்ளிப்படிப்பில் காப்பியடிக்கும் வித்தையை மட்டும் தன்னால் கற்றுகொள்ள இயலவில்லை என்கிறார். வேறு நூல்களைப் படிக்காவிட்டாலும் பாடநூல்களை அன்றாடம் முழுமையாகப் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் காந்தி. பாடநூல்களைத் தவிர்த்து பிற நூல்களைப் படிக்கும் ஆர்வமும் நேரமும் இல்லாத நிலையில், தற்செயலாக தந்தையார் வாங்கி வைத்திருந்தசிரவண பித்ரு பக்தி நாடகம்இவர் கண்ணில் பட்டது.  இந்நூல் இவரையும் பெரிதும் பாதித்தது. அடுத்துஅரிச்சந்திரன்நாடகம் காந்தியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இக்கதை உண்மையில் நடந்த ஒன்று என நம்பி, தனக்குள்ளாக அரிச்சந்திரனாக வாழத் தொடங்கினார். அரிச்சந்திரன் வரலாற்று நாயகனாக இருக்க முடியாது என பகுத்தறிவு பிற்காலத்தில் உணர்த்தியபோதும் அந்த வாழ்வியல் உண்மைகள் அவரது மனத்தை உருக்குவதாக அமைந்தன.

        அன்று கத்தியவார் பகுதியில் நிச்சயதார்த்தம், திருமணம் என்கிற இரண்டு சடங்குகளும் வழக்கில் இருந்தன. குழந்தைகளுக்குத் தெரியாமலேயே பெற்றோர்கள் நிச்சயம் செய்துகொள்வது வழக்கம். இது மீற முடியாத ஓப்பந்தமோ, இதனால் பெண் குழந்தைகள் விதவைகளாக்கப்படுவதோ இல்லை. திருமணத்திற்கு முன்பு யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் வேறு ஒரு நிச்சயதார்த்தம் நடக்கும். இது பலநேரங்களில் குழந்தைகளுக்குத் தெரியாமல் நடக்கும் சங்கதி. காந்திக்கு மூன்று நிச்சயதார்த்தங்கள் நடந்தன. முதலிரண்டு பெண்கள் இறந்துவிடவே மூன்றாவதாக கஸ்தூரிபாவை நிச்சயம் செய்தனர்.

       காந்தியின் இரு அண்ணன்களில் மூத்தவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அடுத்த அண்ணன் இவரைவிட மூன்று வயது பெரியவர். காந்தியைவிட  வயதில் மூத்த  பெரியப்பா மகனுக்கும் திருமணம் ஆகாமலிருந்தது. அவர்களுடன் சேர்த்து காந்திக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 1869 ஏப்ரல் 11 இல் பிறந்த கஸ்தூரிபா காந்தியைவிட சுமார் 6 மாதங்கள் மூத்தவர். எனவே இருவரையும் சமவயதுடையவர்கள் எனக் கருதலாம்.  

       திருமண நிகழ்விற்காக அவரது குடும்பம் ராஜ்கோட்டிலிருந்து போர்பந்தர் செல்கிறது. காந்தியின் தந்தையை தாகூர் சாஹிப் கடைசி நேரத்தில்தான் திருமணத்திற்கு செல்ல அனுமதிக்கிறார். ஐந்து நாள் பயணம் செய்யவேண்டிய 200 கி.மீ. தொலைவை விரைவாக அடைய ஏற்பாடு செய்யப்பட்ட குதிரை வண்டி குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகி தந்தை படுகாயமடைந்து வீடு திரும்புகிறார். இருப்பினும் நிச்சயக்கப்படி திருமணம் நடந்தேறுகிறது.

       கஸ்தூரிபாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது. அக்காலத்தில் இந்துப்பெண்களும் கோஷா எனப்படும்பர்தாஅணியும் வழக்கம் கொண்டிருந்தனர். பகலில் பெரியவர்கள் இருக்கும் கூட்டுக் குடும்பச் சூழலில் காந்தியால் தன் மனைவிக்குச் சொல்லிக் கொடுக்க  முடியவில்லை. தனியே ஆசிரியர் வைத்து கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிற்காலத்தில் எளிய குஜராத்தி மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்கிறார். அவரைப் படிப்பாளியாக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதாக காந்தி தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

       உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது அதாவது 14 வயதில் நடைபெற்றத் திருமணத்தால் அவரது படிப்பில் ஓராண்டு வீணானது. திருமணத்திற்குப் பிறகு காந்தியின் அண்ணன் படிப்பை முற்றாகத் துறக்கிறார். காந்தி மட்டும் மீண்டும் படிப்பைத் தொடர்கிறார். அன்றைய இந்துச் சமூகங்கள் பெண்களை முற்றாகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆண் குழந்தைகளுக்கும் படிக்கும்போதே திருமணம் செய்வித்து அவர்களது வாழ்வை வீணாக்கும் நிகழ்வுகள் ஏற்படுவதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.

        உயர்நிலைப்பள்ளியில் அவ்வளவாக மந்தத் தன்மையின்றி நடத்தை, படிப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டு பணப்பரிசுகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டது.  ஆனால் தனது திறமையின் மீது அவருக்கு மட்டும் பெரிய மதிப்பு உண்டாகவில்லை.

        உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் தோராப்ஜி எதுல்ஜி ஜிமி என்பவர் உடற்பயிற்சி, கிரிக்கெட் இரண்டையும் பள்ளியில் கட்டாயமாக்கினார். இவையிரண்டும் காந்திக்கு பிடித்தமில்லாதவையாக இருந்தன. அவருக்கிருந்த பெருங்கூச்சத்தின் காரணமாக இத்தகைய செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டதேயில்லை. படிப்பிற்கும் உடற்பயிற்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற தவறான எண்ணம் அவரிடம் இருந்தது. ஆர்வமின்மை, கூச்சம் ஆகியவற்றுடன் கூடவே அப்போது மூல நோயுற்றுப் படுக்கையிலிருந்த தந்தைக்கு ஆற்ற வேண்டிய பணிவிடைகளைச் செய்யவேண்டும் என்கிற உந்துதலும் அவருக்கு இருந்தது.  

      மாலை உடற்பயிற்சி வகுப்புக்குச் செல்ல காலதாமதமாகிவிட்டதால் தண்டத்தொகை விதிக்கப்பட்டது. பள்ளியில் கவனக்குறைவாக நடந்த முதலும் கடைசியுமான தருணம் இதுவாகும். இறுதியில் தண்டம் ரத்தானதும், தந்தையின் கடிதத்தின் பேரில் உடற்பயிற்சியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. நீண்டதூரம் நடக்கும் பழக்கம் இருந்ததால் அவர் உடல்வலிமைக்கு என்றும் குறைவில்லை.

      தனது கையெழுத்து மோசமாக இருக்கிறது என்ற வருத்தம் அவருக்கு உண்டு. பிறர் அழகாக எழுதும்போது அவருக்கு கூச்சமும் குற்ற உணர்வும் உண்டாகும். இளமையில் குழந்தைகள் நல்ல கையெழுத்திற்கு உரிய பயிற்சிகள் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை அவர் முன்வைக்கிறார். குழந்தைகளை முதலில் அவர்கள் விருப்பத்திற்கு சித்திரங்களை வரைய விடவேண்டும். பிறகு அவர்கள் எழுத்தைக் கற்கட்டும். அப்போதுதான் அவர்களது கையெழுத்து அழகாக அமையும் என வலியுறுத்துகிறார். மூன்று வயதிலேயே குழந்தைகளை எழுத்துகள் எழுதவைத்து கொடுமைப்படுத்தும் இன்றைய கல்விமுறைக்கு எதிரான கருத்தை அன்றே சொல்லியிருக்கிறார்.

      அவருடைய கையெழுத்து மோசமாக இருந்தால் என்ன? அவர் தன் வாழ்நாளில்  முழுநேர அறப்போராட்டங்களுக்கு நடுவிலும் பல்லாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்தவர். அனைவரிடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டவர். தனது இரு கைகளாலும் எழுதும் திறமை படைத்தவர். இந்தியச் சமூகம் இடக்கைக்கு எந்த வேலையும் அளிக்காமல் ஒதுக்கிய நிலையில் இடக்கையாலும் எழுதும் திறமையை வளர்த்துக்கொண்ட புரட்சியாளர் அவர்.

      அன்று நன்றாகப் படிக்கும் குழந்தைகளை குறிப்பிட்ட வயதிருந்தால் அவர்களை அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பும் பழக்கம் உண்டு. அதன்படி காந்தியின் திருமணத்தால் வீணான ஓராண்டை ஈடுசெய்ய அவரது ஆசிரியர் விரும்பினார். மூன்றிலிருந்து நான்காம் வகுப்பிற்கு (இப்போதைய நிலையில் 9 ஆம் வகுப்பு) மாற்றப்பட்டு, வடிவியல் கணிதம் படிக்க முடியாமல் சிரமப்பட்டு, மிகக்கடுமையாக உழைத்து கணிதத்தைச் சுவையானதாக மாற்றுகிறார்.

       இருப்பினும் அவருக்கு அடுத்த சிக்கல் சமஸ்கிருத மொழிப்பாட வடிவில் வந்தது.  கணிதம் போலில்லாமல் சமஸ்கிருதத்தில் ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்ய வேண்டும். சமஸ்கிருத ஆசிரியரின் கடுமையான பயிற்சிகளால் மனச்சோர்வடைந்தார். இதற்கு மாறாக பாரசீக மொழி கற்பித்த ஆசிரியரின் கண்டிப்பில்லாத தன்மை, அம்மொழியின் எளிமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி பாரசீக மொழி வகுப்பிற்கு சென்று விடுகிறார். இதை தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய சமஸ்கிருத ஆசிரியர் கிருஷ்ண சங்கர பாண்டியா காந்தியை அழைத்துப் பேசுகிறார். அவரது அன்புப்பிடியில் சிக்கி மீண்டும் சம்ஸ்கிருதம் கற்கிறார்.

       இந்தியாவின் கல்விமுறையில் தாய்மொழியுடன் இந்தி, சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, ஆங்கிலம் என எல்லாவற்றுக்கும் இடமிருக்கவேண்டும் என்று கருதுகிறார். பிற பாடங்களை அந்நியமொழியில் கற்காமல் தாய்மொழியில் கற்கும் நிலையிருந்தால் பலமொழிகளைக் கற்பது சிரமமாக இருக்காது என்பது அவரது எண்ணம். இந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளையும் உண்மையில் ஒரே மொழி என்றே சொல்லலாம். அதைப்போல பாரசீக, அரபு மொழிக்கும் நெருங்கிய உறவுண்டு. இந்தி, குஜராத்தி, மராத்தி, வங்காளி கற்க விரும்புவோர் சமஸ்கிருதத்தைக் கட்டாயம் பயில வேண்டும். அப்படியே உருதுமொழியைக் கற்க பாரசீக, அரபு மொழிகளைப் பயில்வது அவசியம் என்பது போன்ற கருத்துகளை வலியுறுத்துகிறார். இவை காந்தியின் தொடக்ககால கருத்தாக இருப்பினும் மொழி குறித்த அவரது ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்துகின்றன.

        பிற்காலத்தில் இந்தியாவிற்கு ஒரு பொதுவான மொழி தேவையென்ற சூழலில் காந்தி  இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை மறுத்து இந்துஸ்தானியைத் தேர்வு செய்தார். இந்தி, உருது மற்றும் பாரசீகம் கலந்த மக்களின் பேச்சுமொழி இந்துஸ்தானி என்பதே இதற்குக் காரணமாக இருந்தது. இம்மொழி இந்தி, உருது ஆகிய இருமொழிகள் பேசும் மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தது இதன் சிறப்பாகும். இதை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் குறியீடாகவும் அவர் கருதினார். இதன் அடிப்படையில் 1925இல் காங்கிரஸ் கட்சி இப்பகுதிகளில்  கட்சி செயல்பாடுகள் இந்துஸ்தானி மொழியிலும் பிற இடங்களில் ஆங்கிலமோ அல்லது உள்ளூர் மொழிகளோ பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால் இந்திய விடுதலைக்குப் பின்னால் (1949) மேட்டுக்குடி ஆதிக்கவாதிகளின் நிலைப்பாட்டிற்கேற்ப இந்திக்கு ஆதரவான நிலை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் உள்ளானது. எனவே அன்று பெருந்திரள் மக்களின் பேச்சு வழக்கிலிருந்த மக்கள் மொழியான இந்துஸ்தானி ஒதுக்கப்பட்டு, செயற்கையான சமஸ்கிருத அடிப்படைகள் கொண்ட இந்தி வளர்த்தெடுக்கப்பட்ட கதை இவ்வாறாக இருந்தது.

       குஜராத்தில் சமணம், வைணவம் இரண்டிலும் அசைவ உணவிற்கு இருந்த எதிர்ப்புப் பிற பகுதிகளைவிட சற்று அதிகம். ஆங்கிலேயரை எதிர்க்க மனத்துணிவும்  உறுதியும் வேண்டும். இதற்கு அசைவ உணவு மிக அவசியம் என்ற நண்பர் ஒருவரின்  தொடர் வற்புறுத்தலால் அசைவ உணவை சாப்பிடுகிறார். இரவில் விளக்கில்லாமல் காந்தியால் தூங்க முடிந்ததில்லை. காரணம் இருட்டைக் கண்டு பயம். பிசாசுகள், திருடர்கள், பாம்புகள் குறித்த பயமும் அதிகமாக இருந்தது. இம்மாதிரியான பயத்தையெல்லாம் அசைவ உணவு போக்கி உடலுறுதியைத் தரும் என்று அந்த நண்பர் காந்தியை நம்ப வைக்கிறார்.

       பிறகு மனப்போராட்டத்தின் விளைவாக இனி அசைவம்  உண்பதில்லை என்ற உறுதியான முடிவுக்கு வருகிறார். புகைத்தல், திருட்டு என சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக மனம் வருந்தி, தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் அளித்து தந்தையிடம் இன்னும் கூடுதல் நெருக்கமாகிறார்; அன்பு மிகுதியாகிறது. பொதுவாக மன்னிக்கும் குணமில்லாத கடும் முன்கோபியான தந்தை படுக்கையிலிருந்தபோது  காந்தியின் மன்னிப்புக் கடிதத்தைப்  படித்துக் கண்ணீர் சிந்துகிறார். தந்தையும் மகனும்  அழுகையால் இணைகிறார்கள். நான் ஒரு ஓவியனாக இருந்திருந்தால் மனத்தில் நிலைத்து நிற்கும் அக்காட்சியை சித்திரமாக வரைந்துவிட முடியும் என்கிறார்.

        மூல நோயால் உடல்நலம் குன்றியிருந்த தந்தையை கவனிக்கும் பொறுப்பை காந்தி, அவரது தாயார், வேலைக்காரர் ஒருவர் என மூவரும் மேற்கொண்டனர். புண்ணைச் சுத்தம் செய்து மருந்து வைத்துக் கட்டுவது, மருந்து கொடுப்பது, மருந்தை வீட்டிலேயே தயாரிப்பது, இரவு அவருக்குக் கால்பிடித்து விடுவது என்பது போன்ற பணிகளை காந்தி தொடர்ந்து செய்து வந்தார். ஒருநாள் தந்தையைக் காணவந்த சித்தப்பா அப்பாவின் கால்பிடித்துக் கொண்டிருந்தவரை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தூங்கச் சொல்லியிருக்கிறார். சிறிது நேரத்திலேயே 1885 இல் காந்தியின் 16வது வயதில் தந்தை மரணமடைகிறார். என் கரங்களில் அவரது உயிர் பிரியவில்லை என்ற மனவருத்தம் காந்திக்கு உண்டு.

     வைணவக் குடும்பமாதலால் அடிக்கடி விஷ்ணு (பெருமாள்) கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு நடப்பதாகக் கேள்விப்படும் ஒழுக்கக்கேடான செயல்களும் வீண் ஆடம்பரங்களும் காந்தியை ஈர்க்கவில்லை. எனவே விஷ்ணு கோயிலிருந்து அவரால் எதையும் பெற இயலவில்லை. கோயிலில் பெற முடியாததை குடும்பத்தின் வேலைக்காரப் பெண்மணியும் செவிலித் தாயுமான ரம்பா அவர்களிடம் பெற்றதாகக் கூறுகிறார். பிசாசுகள் பயத்தைப் போக்க ராமநாமத்தை உச்சரிப்பதே ஒரே தீர்வு என்று அவர் சொன்னார். அதுவே தனக்கு  வாய்த்த அருமருந்தாக கருதுகிறார்.

       போர்பந்தரில் இருந்தபோது அண்ணனுடன் ராமாயணம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது தொடர்ந்தது. ராஜ்கோட் வந்ததும் அப்பழக்கம் முடிவுக்கு வந்தது. தந்தை நோயுற்றிருந்த காலத்தில் லதா மகராஜ் என்ற ராமபக்தர் வீட்டிற்கு வந்து ராமாயணம்  வாசிப்பார். ராமநாமம் நோயைக் குணமாக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. பக்தி நூல்களில் மிகவும் முதன்மையானது துளசிதாசரின் ராமாயணமே என்பதே காந்தியின் கருத்து. 

        காந்தியை பெற்றோர் விஷ்ணு கோயிலுக்கு மட்டுமல்லாமல் சிவன், ராமர் கோயிலுக்கும் அழைத்துச் செல்வார்கள். சமணத்துறவிகள் அவரது தந்தையைக் காண வருவார்கள். காந்தி வீட்டில் உணவருந்தி சமயம், நாட்டு நடப்புகள் குறித்து விவாதிப்பார்கள் என்று காந்தி குறிப்பிடுகிறார். தந்தைக்கு முஸ்லீம், பார்சி நண்பர்களும் உண்டு. அவர்கள் தங்கள் சமயங்கள் குறித்து தந்தையிடம் பேசுவார்கள். அதை அவர் மதிப்புடனும் கவனமாகவும் கேட்பார். தந்தையாருக்கு பணிவிடை செய்யும் நேரத்தில் தனக்கு இத்தகைய வாய்ப்பு கிட்டியதைப் பெருமையாகக் கருதினார். இதனால் பிற சமயங்களை மதிக்கும் பண்பும், சகிப்புத் தன்மையும் தன்னுள் வளர்ந்ததை நினைவுபடுத்துகிறார்.

        விதிவிலக்காக அன்றைய காலத்தில் கிருஸ்தவம் மீது வெறுப்பு இருந்ததாகச் சொல்கிறார். அதற்குக் காரணமாக இந்துத் தெய்வங்களை நிந்தனை செய்தல், மதமாற்றம், இறைச்சி உணவு ஆகியவற்றைப் பட்டியலிடுகிறார். பிற சமயங்களிடம் சகிப்புத்தன்மை இருந்ததால் தனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாகக் கருத வேண்டாம். அந்தக் காலத்தில் மனுஸ்மிருதியை படித்தபோது அதிலுள்ள படைப்பு மற்றும் பிற கதைகள் எனக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. இவை என்னை ஓரளவு நாத்திகத்தை நோக்கிச் சாயச் செய்தது என்கிறார்.

        1887 இல் காந்திக்கு பதின்ம வகுப்புத் தேர்வுகள். இத்தேர்வு அகமதாபாத், மும்பை (பம்பாய்) ஆகிய இரு இடங்களில் நடக்கும். மும்பை செல்வது அதிக செலவாகும்.  எனவே குறைவான செல்வுடைய அகமதாபாத்தை கத்தியவார் மாணவர்கள் தேர்வு செய்வது வழக்கம். காந்தி முதன்முறையாக துணையின்றி ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத் சென்று தேர்வெழுதி வெற்றியும் பெறுகிறார்.

      தொடர்ந்து கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்றும் மருத்துவராக்க வேண்டும் என்றும் காந்தி குடும்பத்தினர் விரும்பினர். அப்போது பவநகர், மும்பை ஆகிய இடங்களில் கல்லூரிகள் இருந்தன. குடும்ப நிதிநிலைமைக்கேற்ப மும்பை செல்வது சரிவராது என்பதால் பவநகர் சமால்தாஸ் கல்லூரியில் சேர்கிறார். அங்கு பேராசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் புரியவில்லை; நான் இன்னும் கல்லூரிப் படிப்புக்கு பண்படுத்தப்படவில்லை என்று காந்தி கருதுகிறார். ஆறு மாதங்களில் வீடு திரும்புகிறார்.

        மருத்துவராகும் ஆசையும் காந்திக்கும் குடும்பத்திற்கும் இருக்கிறது. பிணத்தை அறுத்து சோதனை செய்வதை நம் தந்தை விரும்பவில்லை. உன்னை வக்கீல் ஆக்க வேண்டும் என்றுதான் அவர் நினைத்தார், என்று காந்தியின் அண்ணன் கூறுகிறார். காந்தியின்  குடும்ப நண்பர் மாவ்ஜி தவே, அவரைபோல நான் மருத்துவத் தொழில் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். நமது சாத்திரங்களும் அவ்வாறு கூறவில்லை. மருத்துவப் பட்டம் உன்னை திவானாக்காது. நீ பெரிய திவானாக வேண்டும். எனவே நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் இங்கு படித்து பி.ஏ. பட்டம் வாங்குவதைவிட இங்கிலாந்து சென்று மூன்றாண்டுகளில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுவிடலாம், என்று ஆற்றுப்படுத்துகிறார்.

       பயணம் மற்றும் படிப்புக்கான பணத்தைத் திரட்டுவது பெரிய சவாலாக உள்ளது. அதற்காக பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள். பணத்தைவிட சமய நம்பிக்கைகளே கப்பல் பயணத்தைத் தடுக்க முன் நிற்கின்றன. வெளிநாட்டுப் பயண முயற்சியை அறிந்த மோத் வணிகச் சாதியமைப்பு காந்தியை அழைத்து விசாரிக்கிறது. காந்தி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். எனவே சாதிச் சங்கம் காந்தி சாதிவிலக்கம் செய்வதோடு வழியனுப்பத் துறைமுகம் செல்வோருக்கும் அபராதம் விதிக்கப்போவதாக எச்சரிக்கிறது.

         குடும்பப் பெரியவர்களுக்கு  சமய நம்பிக்கைகளை விட காந்தி மது,  இறைச்சி உணவைப் பயன்படுத்தி விடுவாரோ என்ற அச்சமே தயக்கத்திற்கான காரணமாக உள்ளது. இறுதியாக காந்தி தனது  அன்னையிடம் மது, மாது, இறைச்சி ஆகிய மூன்றையும் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்து அனுமதி வாங்கி விடுகிறார்.

       ராஜ்கோட்டிலிருந்து ஒரு இளைஞர் முதல் முறையாக கப்பலில் வெளிநாடு பயணிக்கவிருக்கிறார். உயர்நிலைப்பள்ளியில் பிரிவு உபசார நிகழ்வு கூட நடத்தப்படுகிறது. முதல் கடற்பயணம், கடல் கொந்தளிப்பு, புயல் போன்ற  பல தடங்கலுடன் அந்த நாளுக்காக காந்தி மும்பையில் காத்துக் கிடக்கிறார். ஒருவழியாக 1888 செப்டம்பர் 4 இல் மும்பையிலிருந்து கப்பல் இங்கிலாந்து புறப்பட்டது.

(தொடரும்.)

குறிப்புகள்:

·         காந்தி பிறந்த அக்டோபர் 2 (1869) 2007 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை 'உலக அகிம்சை நாள் என அறிவித்து கொண்டாடி வருகிறது.

·         ஜனவரி 9, 1916 தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய நாள்வெளிநாடு வாழ் இந்தியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

·         ஜனவரி 30, 1948  காந்தி படுகொலை செய்யப்பட்ட துக்க நாளை இந்தியாதியாகிகள் நாளாகஅறிவித்தது.

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் - ஜனவரி 2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக