வியாழன், பிப்ரவரி 08, 2024

சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை

 

 சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும்  அறவியல் பார்வை

 

மு.சிவகுருநாதன்

 

(நக்கீரனின்இயற்கை 24*7 - சுற்றுச்சூழல் வழிகாட்டி நூல்குறித்த அறிமுகப்பதிவு.)


 

         சூழலியல் கற்பிதங்களையும் அதன் பின்னாலிருக்கும் அரசியலையும் சூழலியல் அறத்தையும் 18 தலைப்புகளில் நுட்பமாகவும் சுருக்கமாகவும் அதே சமயம் மிகத் தெளிவாகவும் இந்நூலில் எழுதியிருக்கிறார் நக்கீரன்.  அறிவியல் என்ற பிரிவில்  ஆறாம் அழிவு, புடவி (பிரபஞ்சம்), உயிர்க்கோளம், பெருங்கடல், கடற்கரை, மணல், தண்ணீர், காற்று, ஒளியும் ஒலியும், காடு  ஆகிய 10 தலைப்புகளும்  அரசியல் பிரிவில்  மனிதர், நுகர்வு, மக்கள்தொகைப் பெருக்கம், நிதி அரசியல், சூழல் நீதி, ஃபேஷன் சுற்றுச்சூழல், குப்பை, சுற்றுச்சூழல் அரசியல்  ஆகிய 8 தலைப்புகளும்  இந்நூலில் இடம்பெறுகின்றன. இவையும் இவற்றினுள் இடம்பெறும் உட்தலைப்புகளும் நூலின் தன்மையை நமக்கு வெளிக்காட்டிவிடுகின்றன.  ஆறாம் அறிவு அழிவாக மாறுவதை எச்சரிக்கை செய்கிறது.

        இந்து தமிழ் திசைநாளிதழின் உயிர் மூச்சுபகுதியில் சனிதோறும்  இயற்கை 24x7’ என்ற தலைப்பில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். நக்கீரனின் நீர் எழுத்து, சூழலும் சாதியும், தமிழ் ஒரு சூழலியல் மொழி  போன்ற நூல் வரிசையில் இயற்கை 24x7க்கும் இடமுண்டு. ‘Save Nature’ என்ற போலிச் சூழலியல் முழக்கத்தை ஒரு சிறுமி தகர்ப்பதைச் சுட்டி நூல் தொடங்குகிறது. சூழல் அறத்தைப் பேசுவதால் அதனுள் இருக்கும் மோசடிகளையும் கற்பிதங்களையும் பேசாமல் இருக்க முடியாது. இதன்மூலம் சூழலியர் என்கிற போர்வையில் உலவும் பலரும் உள்பட கார்ப்பரேட்டுகளும் அரச முகவர்களும் அம்பலப்படுத்தப்படுகின்றன. இது சிலருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடும்; வேறு வழியில்லை.

              அரசு மற்றும் பெருவணிக நிறுவனங்களின் சேஃப்டி வால்வ்ஆகப் பணியாற்றிய ‘சூழலியலின் அன்னா ஹசாரே’ என்று அப்துல்கலாமை மிகச்சரியாக கணிக்கிறார். கடுகு, கத்தரிக்காய் போன்று மனிதர்களை மரபணு மாற்றம் செய்து குறுமனிதர்களை உருவாக்கப் பரிந்துரைக்கும் அறிவியல் பரிந்துரை ஒன்றைக் குறிப்பிட்டு இயற்கையின் குரலை செவிமெடுக்கவும் வலியுறுத்துகிறார். இயற்கை, காடு எல்லாம் வளர்ச்சிக்குத் தடை என்று பொதுப்புத்தியில் பதியவைக்க பெருமுயற்சிகள் நடைபெறுகின்றன. இவ்வாறான எழுத்துகள் அவற்றுடன் போராடுகின்றன.

        ஜேம்ஸ் லவ்லாக்கின் கையா: உலகே ஓர் உயிர்’, ரெய்ச்சல் கார்சனின்மௌன வசந்தம்’, ஜான் பெல்லமி ஃபாஸ்டரின்சூழலியல் புரட்சி’, பரிதியின் மாந்தர் கையில் பூவுலகு மேலும் பில் பிரையன், ஜாரெட் டயமண்ட் போன்றோரின் நூல்கள் என சூழலியல் நூல்களின் கருத்துகள் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்படுவதன் வாயிலாக புதிய வாசகர்களுக்கு இவற்றை மேலதிகமாக வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

        நக்கீரன் வழக்கம்போல் இந்நூலிலும் பல்வேறு புதிய கலைச் சொல்லாக்கங்களை உருவாக்கியிருக்கிறார். புடவி (பிரபஞ்சம்), மிதவி (பிளாங்டன்), பொழி (கழிமுகம்), நளிரி (.சி.எந்திரம்), நளிர் அரங்கம் (.சி.ஹால்)  ஆகியவை அவற்றுள் சில. தமிழ் இலக்கியங்களில்ருந்து சிலவற்றை மீட்டெடுக்கிறார். (.கா) எக்கி (பரிபாடல்), எக்கர் - ஆழிக்கிணறு (நற்றிணை), நீரகம் (கொன்றை வேந்தன்). ‘மறைநீர்போன்று இவையும் தமிழ் வழக்கில் நிலைக்கட்டும்.

       சுமார் 28% உயிர்வளியைத் தரும் அமேசான் அல்லது மழைக்காடுகளைஉலகின் நுரையீரல்என்கிறோம். சுமார் 70% உயிர்வளி கொடுக்கும்  புவியின் கருப்பைகடலை மறந்து குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டோம்.  நீலம் இல்லையேல், பச்சை இல்லை”, என்ற சில்வியா எர்ல் கருத்தை வெகு  இயல்பாக அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

      கடற்கரை மணல் திட்டுகள், மணற்குன்றுகள், மணல் மேடுகள் நிலத்தடி நன்னீர் தடுப்புச் சுவராக மாறி கடற்கரைக்கு நன்னீரை வழங்குகின்றன. இந்த இயற்கைச் செயல்பாட்டை இறைவனின் கருணை என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை அழித்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் வணிகத்திற்கு (RO) அடிமையாகி விட்டோம்.

      நுண்மிகளில் தீ நுண்மி, நல் நுண்மி என்பதெல்லாம் மனித மையப்பட்ட பார்வை. இயற்கையை இவ்வாறெல்லாம் அணுக இயலாது. இதைப்போலவே சூழல் மாசுகளுக்கு மனிதனை மட்டும் பொறுப்பாக்கி கார்ப்பரேட் மற்றும் அரசுகளை விடுவிக்கும் முயற்சிகளில் ஃபேஷன் சூழலியர்கள் ஈடுபடுகின்றனர். ஃபோர்டு நிறுவனம் போன்ற பெருநிறுவனங்கள் நிதி வழங்குகின்றன என்பதைஃபண்டு இலையேல், தொண்டு இல்லை”, என்று எளிமையாக விளங்க வைக்கிறது நூல்.

        மரபு சார்ந்த சூழலியர் பயிரினம், விலங்கினம் மட்டிற்காக போராடுபவர்கள்; மரபுசாரா சூழலியர் அழிவிலிருக்கும் விளிம்புநிலை மக்களுக்காகவும் போராடுபவர்கள் என்பதையும் தற்போது மூன்றாவது வகையினராக ஃபேஷன் சுற்றுச்சூழல் சேவையாளர்கள் அதிகமாக உள்ளனர். ‘தூய்மை இந்தியாவினர் இவ்வகையைச் சேர்ந்தவர்கள். காமன் மனிதரை பொறுப்பாக்கும் இவர்கள் கார்ப்பரேட் மனிதர்களைக் கண்டு கொள்ள மாட்டார். எனவே இவர்கள் யாருக்காக இயங்குபவர்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மரம் நடவும், விதைப்பந்து வீசவும், மிதிவண்டியில் செல்லவும், மின்சாரத்தை அணைக்கவும், மழைநீரை சேமிக்கவும் சொல்லும் இவர்கள் கார்ப்பரேட் குப்பைக்காடாக இந்தியா போன்ற நாடுகள் மாற்றப்படுவது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். இந்த ஃபேஷன் வருமானம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளதை நக்கீரன் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

        சுற்றுச்சூழல் கானகவியல் (Ecological Forestry), பசுமைப் பொருளியல் (Green Economics), சூழல் சாதியம் (Eco Castism), சார்பற்ற சுற்றுச்சூழலியம் (Secular Environmentalism)  போன்ற யாரும் கண்டுகொள்ளாத புலங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது.  உலக வங்கி, பன்னாட்டு நிதியம் எனும் அமெரிக்க வட்டிக்கடைகள் பற்றிய கூர்மையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. உலகவங்கி புகுந்த நாடும் ஐஎம்எஃப் புகுந்த நாடும் உருப்பட்ட வரலாறு இல்லை என்பதை அழுத்தத்திருத்தமாகப் பதிவு செய்கிறது.

       காற்று மாசு அமில மழைக்குக் காரணமாகிறது. ஸ்ட்ரான்சியம் 90 என்ற கதிரியக்கத் தனிமம் மண்ணில் நுழைந்து, நெல், கோதுமை போன்ற உணவுப் பயிரிகள் வழியே நம் உடலில்  ஊடுருவித் தங்குகிறது. இது நமக்கு புற்றுநோய் எனும் வாடகையைத் தருகிறது. இந்த வாடகை யாருக்கு வேண்டும்? என்கிற உயிர்ப்பான கேள்வியை நம்முன் வைக்கிறது இந்த நூல்.

           இயற்கை எனும் கணினி ஐந்து முறை டெலிட் பொத்தானை அமுக்கி இவ்வுலகை முழுமையாக அழித்ததை நினைவூட்டி நம்மை நூல் எச்சரிக்கிறது. வளிமண்டல வள்ளல், காடு ஒரு கார்பன் வங்கி என்ற தலைப்புகள் இயற்கையின் முதன்மையை விளக்குகின்றன. இவற்றுடன் கற்பிதங்களையும் பொய்மைகளை அகற்றப்பட வேண்டிய தேவையும் வலியுறுத்தப்படுகிறது. சூழலியல் குறித்த உலகின் மீது திணிக்கப்பட்ட கற்பிதங்களையும் மாயைகளையும் பல களங்களிலிருந்து தகர்க்கும் வேலையை நக்கீரன் சிறப்பாக தொடங்கியிருக்கிறார். இத்தகைய அறவியல்-அரசியல் பார்வை சூழலியல் போலிகளை அம்பலப்படுத்தவும் மக்களை விழிப்புணர்வூட்டவும் பெரிதும் உதவும்.

 

நூல் குறிப்புகள்:

 

இயற்கை 24X7 – நக்கீரன்

பக். 140, விலை: ரூ.170

முதல் பதிப்பு:  அக்டோபர் 2023

வெளியீடு:

காடோடி பதிப்பகம்,

6, வி.கே.என். நகர், நன்னிலம் – 610105,

திருவாரூர்மாவட்டம்.

அலைபேசி:  8072730977

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக