வெள்ளி, ஜூலை 03, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: ஒரு பன்முகப் பார்வை

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்:

ஒரு பன்முகப் பார்வை

மு.சிவகுருநாதன்

          2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பெரும்பாலான கணிப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தொங்கு சட்டமன்றம் (Hung Assembly) அமைய வாய்ப்பில்லை என்றும் கருதப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்த்திராத நிலையில் நடிகர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக 107 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக வந்து, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் (13 இடங்கள்) ஆட்சியமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி அமைச்சரவையில் பங்கு பெறுவதாகவும் அடுத்தடுத்த தேர்தல்களில் தவெகவுடன் கூட்டணி என்றும் அறிவித்த நிலையில் பிற கட்சிகள் குடியரசுத் தலைவர் ஆட்சி வழியாக ஒன்றிய பாஜகவின் தலையீட்டைத் தவிர்க்கவே வெளியிலிருந்து ஆதரவு என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்தன. அடுத்து காட்சி மாற்றமாக விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியன கூட்டணி அமைச்சரவையில் பங்கு பெற்றுவிட்டது.

         அஇஅதிமுக கூட்டணி மூன்றாவது இடத்தைப் பெற்று அக்கூட்டணியில் இடம்பெற்ற பாஜக ஓரிடத்தில் மட்டும் வெற்றி பெற்றாலும் உண்மையில் இதை பாஜகவிற்கான வெற்றியாகவும் பார்க்க இயலும்.  காங்கிரஸ் இல்லாத இந்தியா, இரு கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்பதே பாஜகவின் நோக்கமாகும். எனவே அதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் கழகங்கள் மீண்டு வந்தாலும் விசிக, நாதக போன்றவை மீளுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுக, அதிமுக இரண்டும் தங்களது தோல்வியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. திமுக அதற்கான பணிகளைத் தொடங்கினாலும் அவர்களது கூட்டணி கலைந்து போயிருக்கிறது. மறுபுறத்தில் அதிமுகவை முற்றாக தவெக விழுங்கும் சூழல் தமிழக அரசியல் களத்தில் குதிரை பேரத்தை அரங்கேற்றியுள்ளது. 

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல்

         இந்தத் தேர்தலில் தமிழருவி மணியன் போன்றவர்களின் பங்கேற்பு  இல்லாத குறையை விசிகவின் திருமாவளவன் போக்கிவிட்டார் என்றே சொல்லலாம். தேர்தல் கூட்டணியில் அதிக இடம் கோருதல், ஆட்சி-அதிகாரத்தில் பங்கு என்று அடிக்கடி குறிப்பிடுதல், காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிடுகிறேன்  என்கிற அறிவிப்பு, உடனடியாகப் பின்வாங்குதல், தேர்தலுக்குப் பின் தமிழகத்தின் அரசியல் களம்  மாறும் என்ற கணிப்பு, துணை முதல்வர் என்ற கட்சியினர் பேச்சு, பிறகு ஏன் துணை முதல்வர்? எனக்கு முதல்வர் பதவிக்கான தகுதி இல்லையா? எனக் கேட்டல், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் என்னை கூட்டணி அரசிற்கு முதல்வராக அழைத்தனர், தமிழ்நாடு பட்டியலின முதல்வரை ஏற்க இன்னும் தயாராகவில்லை என்றெல்லாம் அவரும் கட்சியினரும் பேசி ஊடகங்களின் தலைப்புச் செய்திகளுக்குத் தீனி போட்டனர். தவெக அரசுக்கான ஆதரவை அளிக்க நீண்ட அவகாசம் எடுத்துக் கொண்டார்.

         விஜய் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு தோல்வியடைந்த சில திரைமரைவு பேரங்களை மீண்டும் தலைப்புச் செய்தியாக்கினார். உயர்மட்ட மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் திருமாவளவனுக்கு வழங்கப்பட்டது. இதுதான் இடதுசாரிகள் தவிர்த்த அனைத்து கட்சிகளிலும் எடுக்கும் ஜனநாயக முடிவு! இறுதியில் எல்லோரும் ஆட்சியதிகாரத்தின் பங்குபெற விரும்புகிறார்கள், ஆனால் நான் வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன், என்றார். 

        விசிக தலைவரின் இந்த சறுக்கல் பின்னடைவு 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகக் கருத இடமுண்டு. ‘லாட்டரிமார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவை விசிகவில் இணைத்தவுடன் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கினார். இவருக்காகவே நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பொதுத்தொகுதியை கேட்டதாகவும்  சொல்லப்பட்டது.  திமுகவை விமர்சிப்பது, கூட்டணியை உடைப்பதே ஆதவ் அர்ஜுனா பணி என்பதை அவரது செயல்பாடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. அம்பேத்கர் பற்றிய நூல் வெளியிட்டுச் சர்ச்சை, திமுகவை மிகக்கடுமையாக விமர்சிப்பது போன்றவற்றிற்காக அவரை வேண்டாவெறுப்பாக வெளியேற்றவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.  அவர் தவெகவில் இணைந்தாலும் விசிகவை திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் விசிகவை பிரிக்க பெரியளவில் முயற்சிகளைச் செய்தார்.

       இவற்றைக் கண்டும் காணாததுபோல் தொல்.திருமாவளவன் வெறும் பார்வையாளராக மாறினார். விசிக வாக்குவங்கியின் ஏற்பட்ட சரிவு ஒருபக்கமும் சரியான முடிவெடுக்காமல் குழம்பதும் பிறரைக் குழப்புவதும்   அவரது அரசியல் பயணத்தில் சறுக்கல்களை உண்டு பண்ணியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.இன் வளர்ப்புப் பிள்ளை விஜய் என்றவர் இறுதியில் அவரது அமைச்சரவையில் கட்சியை இணைத்துக் கொண்டார். 1990களில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் எழுச்சியைதென்திசையில் முளைத்த செஞ்சுடர்என்றெல்லாம் எழுத்தாளாரும் இதழாளருமான கவிதாசரண் கணித்தார். ஆனால் அவர் இன்று பாஜக அணியில் நெருக்கமாகி தனது செல்வாக்கை இழந்து நிற்கிறார். அதைப்போல ஒரு நிலைமை இன்று திருமாவளவனுக்கும் ஏற்பட்டுள்ளதை ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலின் பின்னடைவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

            தவெகவைக் காரணம் காட்டி தங்களது பேர வலிமையை திமுகவிடம்  காங்கிரஸ்,  விசிக ஆகிய இரண்டும் காட்டின. இதனால் இவை கூட்டணியிலுள்ள பிற கட்சிகளைவிட சற்றுக் கூடுதலான இடங்களைப் பெற்றன. இருப்பினும் விசிக திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றியது. ஆனால் காங்கிரசும் ராகுல் காந்தியும் கடைசி வரை திமுகவை ஓரங்கட்டி தவெகவிற்கு மறைமுக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். ராகுல் காந்தி மு..ஸ்டாலினுடன் இணைந்து தேர்தல் பரப்புரை செய்வதை விரும்பவில்லை. திமுக காங்கிரஸ் ஒருகட்டத்தில் தேவையின்றி தூக்கிச் சுமந்தது. பிரவீன் சக்கரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் திமுகவிற்கு எதிராகவே களமாடினர்.

       திமுகவின் நடவடிக்கைகளில் சில வியப்பாகவும் அமைந்தன. தேமுதிகவிற்கு 10 சட்டமன்ற இடங்களையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் வழங்கி தனது கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியை ஒருசேரப் பெற்றது. மதிமுக, மனித நேய மக்கள் கட்சி போன்றவற்றை திமுக சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்தியது. இதனால் தேர்தலுக்குப் பின்னர் இவர்களால் அணி மாறி அமைச்சரவையில்  இடம்பெற இயலாத கவலைகள் அவர்களது பேச்சில் வெளிப்பட்டன. தேர்தல் அரசியல் பாதையில் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கான வாய்ப்பை இத்தேர்தல் அளித்துள்ளது.

பாஜக எதிர்ப்புப் பாவனையில் தவெக.

            பாஜகவை கொள்கை எதிரி என தவெக தலைவர் ஜோசப் விஜய் பிரகடனம் செய்தார். இவர்களது பார்வையில் கொள்கை எதிரி என்றால் வெறும் காகிதப்புலி போலும்! அவர்களது நிலைப்பாடுகள் எதையும் இதுவரையில் தவெக துளிகூட எதிர்க்கவில்லை. எஸ்..ஆர்., ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், மணிப்பூர் கலவரம், நீட் எதிர்ப்பு, நீட் வினாத்தாள் கசிவு, பெட்ரோல்டீசல்எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, மும்மொழிக் கொள்கை, கல்விநிதி மறுப்பு, நிதிப்பகிர்வில் பாரபட்சம், இந்தித் திணிப்பு, தமிழ்ப் பண்பாட்டு சிதைப்பு, திருப்பரங்குன்றம் விவகாரம், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் என எதற்கும் வாய் திறக்க மட்டோம் என்று சபதமேற்றுவிட்டு   பாஜகவை கொள்கை எதிரி என்று கதைப்பதை அவரது ரசிகர்கள் நம்பலாம். தமிழ்நாட்டில் நீண்டகாலம் இவ்வாறு காலந்தள்ள முடியாது.

        உண்மையில் பாஜகவும் தவெகவும் இயல்பான கூட்டாளிகள். இவர்களிருவரும் மக்களாகிய நம்மை முட்டாளாக்கி ஏமாற்றிக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. தவெக தொடங்கியுடன் நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் கொள்கை எதிரியுடன் களமாடவில்லை என்பதிலிருந்தே நமக்கு விளங்குவது இதுதான். 2026 இல் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிராக களமாடியவர்கள் புதுச்சேரியில் ஆளும் என்.ரெங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டணி அரசை விஜய் விமர்சிக்கவில்லை என்பதும் அவரது இரட்டை வேடத்தை உணர்த்தும். திமுகவை வீழ்த்த பாஜக அனுப்பிய ராக்கெட்தான் விஜய். இதை திமுக எவ்வளவு உணர்ந்திருந்தது என்பது அவர்களதுபென்’ (PEN - Populus Empowerment Network)  நிறுவனத்திற்கே வெளிச்சம்.

        பாஜகவும் அதன் கூட்டாளிகளான சங் பரிவார் கும்பல்களும் பல்லாண்டாக தமிழகத்தில் ஊடுருவி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது முதன்மை நோக்கம் திராவிட இயக்கங்களை ஒழித்துக் கட்டி தமிழ்நாட்டில் இந்துத்துவ ஆட்சியமைப்பதுதான். இதற்கென அவர்கள் பல உத்திகளைக் கையாள்வது வாடிக்கையாகும். 1970களில் எம்.ஜி.ராமச்சந்திரனை களமிறக்கி திமுகவை உடைத்து அதிமுக ஆட்சியமைத்ததில் (1977) இவர்களுக்குப் பெரும்பங்குண்டு. அடுத்து பிராமண எதிர்ப்பு இயக்கத்தில் ஜெ.ஜெயலலிதாவின் பிராமணத் தலைமையால் சில காலம் மகிழ்ந்திருந்தனர்.

        ஒன்றியத்தில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசுக்குப் பிறகு நேரடியாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக மாநிலங்கள் இடதுசாரிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை தங்களது ஆளுகைக்குக் கொண்டுவர பல்வேறு வகையான உத்திகளையும் செயல்திட்டங்களையும் வகுத்தனர். இதற்கென பல இடங்களில் அரசு எந்திரத்தையும் அதிகாரத்தையும் வளைக்கத் தொடங்கினர். தமிழ்நாட்டில் கூட்டணி என்ற பெயரில் திமுகவும் (மு.கருணாநிதி) அதிமுகவும் (ஜெ.ஜெயலலிதா) இந்த பாசிச வலதுசாரி சக்திகளை வளர்த்துவிடுவதில் பெரும்பங்காற்றின. கூட்டணியில் பொதுச் செயல்திட்டம் இருந்தாலும் இவர்களது மறைமுக பாசிசச் செயல்திட்டங்கள் தடைபடவில்லை.  இவர்களது தயவு கிடைக்காத நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு   அதிமுகவை கைப்பற்ற நினைத்துத் தோல்வியடைந்தனர். இந்த வெற்றிடத்தில் அண்ணாமலையை இறக்கி தனியே  வெல்லவும் முயன்று பார்த்தனர்; அதில் அவர்களுக்கு வெற்றி கைக்கூடவில்லை. இன்று அண்ணாமலை தனி அமைப்பு தொடங்குவதும் இதன் நீட்சிதான்.  

ஆளுநர்கள் மூலம் ஆதிக்கம்

      திராவிட இயக்கங்களுடன் கூட்டணி வைத்து வெல்வதைக் காட்டிலும் அவர்களை ஒவ்வொருவராக வீழ்த்துவதே வலதுசாரிகளின் நோக்கமாக உள்ளது. அதிமுகவை கூடிக் கவிழ்ப்பதும் ஆளும் திமுகவை ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் மூலம் நெருக்கடிகளை உண்டாக்குவதும் அவர்களது வேலைத் திட்டமாக இருந்தது. ஜெயலலிதாவிற்கு  பிறகு ஆளுநர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதும் திராவிட இயக்கத்தை வீழ்த்துவதும் பாஜகவின் முறைமுகத் திட்டங்களில் ஒன்றாகும்.

      2016 இல் ஜெயலலிதா மறைவிற்குப்பின் வி.கே.சசிகலா முதல்வராகப் பதவியேற்கவிடாமல் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் (மகாராஷ்டிரா) ஓடி ஒளிந்துகொண்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வழங்காமலிருந்த உச்சநீதிமன்றம் திடீரென்று வி.கே.சசிகலாவை சிறைக்கு அனுப்பியது. அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என பிளவடைந்த நிலையில் ஆளுநர் இருவரையும் சேர்த்து வைத்து அரசியல் கடமையை (பாஜக உத்தரவை) நிறைவேற்றினார். இதைப் போன்றதொரு நிலை  பத்தாண்டுகளுக்குப் பிறகு 2026லும் ஏற்படும் என்பதை உணர்ந்த பாஜக அரசு இம்முறையும் கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பளித்துக் காத்திருந்தது.

        வித்யாசாகர் ராவ், பன்வாரிலால் புரோகித், ஆர்.என்.ரவி, ஆர்.வி. அர்லேகர் ஆகியோர் இங்கு திட்டமிட்டு ஆளுநர் பணிக்காக அன்றி பாஜக பணியாட்களாகச் செயல்பட அனுப்பப்பட்டவர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளாத நிலையில் திமுக போராட்டங்களை முன்னெடுத்தது.  ஆர்.என்.ரவி ஐந்தாண்டு காலமும் திமுக அரசிற்கு மட்டுமல்ல; தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் நெருக்கடி தந்தார். இதற்கான நேரடியாகவும் நீதிமன்றங்களில் நீண்ட சட்டப் போராட்டத்தையும் திமுக நடத்தி வெற்றியும் பெற்றது.  ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தனிபெரும்பான்மை பெற்ற கட்சியான தவெகவை ஆட்சியமைக்க அழைப்பதில் காலதாமதம் செய்து குதிரை பேர அரசியலை ஊக்குவித்தார். தற்போது கேள்வி கேட்க ஆளில்லை என்பதையறிந்து திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசும் முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவியின் திருப்பணிகளுக்கு மீண்டும் அடிக்கல் நாட்டியுள்ளார். இவையெல்லாம் தவெகவிற்கோ முதல்வர் விஜய்க்கோ ஒரு பொருட்டல்ல.

     தவெகவில் இருக்கும் பலர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பின்புலம் கொண்டவர்கள். கே..செங்கோட்டையன் கூட தில்லியில் அமீத்ஷாவை சந்தித்த பின்தான் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். தேர்தல் ஆணையம், சிபிஐ, சென்சார் போர்டு போன்றவை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுகவே காரணம் என்பவர்கள் பாச(சிச) பாஜகவை எப்படி எதிர்க்கத் துணிவார்கள்? வேறுவழியின்றி எதிர்க்கத் துணிந்துவிட்டால்கூட மிரட்டிப் பணிய வைக்க ஒன்றிய அரசின்  சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, ஆளுநர் என பலவுண்டு. இந்த போலி நடிப்பு மக்கள் மத்தியில் விரைவில் அம்பலப்பட்டுப் போகும். ஊழலுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து  அவர்களை தூயமையானவர்களாக பாஜக மாற்றுவதைப் போல தவெகவும் தமிழ்நாட்டின் ஊழல் வெளுக்கும் எந்திரமாக மாறியுள்ளது. பாஜகவும் தவெகவும் எதிரிகள் அல்ல; உண்மையில் பாசிசப் பங்காளிகள் என்பதை காலம் நிருபிக்கும்.  

திமுக அதிமுகவின் எதிர்காலம்?

          திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது மிகவும் மோசமான நிலைப்பாடு என்பதில் அய்யமில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் இல்லாத இந்த முடிவிற்கு செயல்வடிவம் தர எண்ணிக்கை பலமில்லை. மேலும் தனிப்பெரும் கட்சி என்கிற அடிப்படையில் தவெகவை ஆட்சியமைக்க வழிவிடுவதே ஜனநாயகத்திற்கு உகந்தது. இதன் பின்னணியில் யார் இருந்தாலும் கடும் கண்டனத்திற்குரிய ஒன்றாகும். தனிப்பெரும்கட்சி என்று உரிமை கோராமல் காங்கிரசின் 5 இடங்களையும் அடுத்து அமமுகவின் ஒரு இடத்தையும் சேர்த்து எண்ணிக்கை காட்டியது போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.  இருப்பினும் ஆளுநரின் தேவையற்ற காலதாமதம் கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் உத்தரவால் இது நடந்திருக்க வாய்ப்புள்ளது.

       காங்கிரசைத் தொடர்ந்து திமுக கூட்டணியிலிருந்து சிபிஐ, சிபிஎம், இயூமுலீ, விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவால் (107+13=120) அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டிய போதிலும்  அதிமுகவை உடைத்து ஆதரவு பெற வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்று ஆராய வேண்டியுள்ளது. எதிர்க்கட்சியாக கூட இல்லாமல் 43 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவை பிளக்கும் வேலைகளில் தவெக ஈடுபட்டு குதிரை பேர, சோஃபா அரசியலை மேற்கொண்டது மிக மோசமான சூழலாகும். வாக்கெடுப்பில் பெரும்பான்மை இருந்தும் அதை உயர்த்திக் காட்டவேண்டும் என்று அதிமுகவின் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தரப்பின் ஆதரவைப் பெற்றது முதிர்ச்சியற்ற அரசியல் நிலைப்பாடாகும். தகுதி இழப்பு வரும் என்று தெரிந்தும் இத்தகைய அரசியல் தற்கொலை முடிவை எடுக்க தூண்டியது ஆராயப்பட வேண்டியதாகும்.

         நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலகியவுடன் உடனடியாக அவர்களை தவெக  இணைத்துக்கொண்டது. இதில் இவ்வளவு அவசரம்  காட்ட வேண்டிய தேவையிருக்கவில்லை. அரசியல் அனுபவமில்லாத பலர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் அவர்கள் தங்களது அரசியல் சாசனப் பொறுப்புகளை உணர்ந்து மக்களுக்கு கடமையாற்ற வேண்டிய நிலையில் வெறும் விளம்பர மற்றும் மடைமாற்றும் உத்தியாக இவைகள் நடந்தேறின. “தவெக தான் புதிய அதிமுக”, என்று ஆதவ் அர்ஜுனா சொல்வதும் தவெகவிற்கும் திமுகவிற்கும்தான் போட்டி”, என்று முதல்வர் விஜய் சொல்வதும் அவர்களது நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானது. இவர்கள் நினைப்பதுபோல் அதிமுக, திமுக போன்ற கட்சிகளை ஒழித்துவிடுவதெல்லாம் நடக்காத காரியம். ‘பஞ்ச்சினிமா வசனங்கள் ரசிகர்களை இன்பமடையச் செய்ய மட்டுமே பயன்படும். இன்னும் ஐந்தாண்டுகளில் திமுக தரப்பிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நிலையும் ஏற்படலாம்.  

        அதிமுக, திமுக ஆகிய பொறுப்பான கட்சிகள் தங்களது கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து நடக்கவில்லை என்பது இங்கு நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை விலக்கிக் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமி (அதிமுக) 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக அணியில் சேராமல் ஒரு பரந்த அளவிலான கூட்டணியைக் கட்டமைத்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் பாஜக, திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். மாறாக விஜயின் தவெக வரும் வரும் எதிர்பார்த்துக் காத்திருந்தது கட்சியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்திவிட்டது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்  சி.வி.சண்முகத்திற்கு சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு  வழங்கியது தவறு. அவர் பதவி விலகியதால் மாநிலங்களவையில் அதிமுகவின் அங்கீகாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக விரைந்து எம்.பி. பதவியைவிட்டு விலகினார். அந்த எம்.பி.பதவியை தவெகவிடமிருந்து காங்கிரஸ் பெற்றுவிட்டது.

         இதைப்போல திமுகவும் (தஞ்சாவூர், திருப்பூர், நாகர்கோயில், ஓசூர்) நான்கு மேயர்களைப் போட்டியிட வைத்து தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி வழங்கிவிட்டு பதவிக்காலம் முடியும் முன்பே வேறு தேர்தலில் வாய்ப்பு வழங்குவது மிகவும் மோசமான நடைமுறையாகும். கட்சியில் ஒருவருக்கே இவ்வாறு வாய்ப்புகள் வழங்குவதால் அதிருப்தி ஏற்படும். அதுவும் மேயர்கள் பலரும் சட்டமன்ற உறுப்பினர்களைவிட அதிகளவில் மக்கள் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அவரைவிட்டால் ஆளில்லை என்று விஜயகாந்த் பட பாணியில் செயல்படுவது கட்சித் தொண்டர்களிடையே அவநம்பிக்கையை விதைக்கிறது. வேட்பாளர் தேர்வில் அனைத்து கட்சிகளும் சாதி அடிப்படையை நம்பியுள்ளது பேரவலம். அதுவும் ஆதிக்க சாதியினருக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

      இந்தியத் தேர்தல்களில் இரு தொகுதிகளில் போட்டியிடும் முறையைத் தடை செய்ய வேண்டும். ஒரு தொகுதியில் பதவி விலகுவதால் இடைத்தேர்தல் செலவீனங்கள், மக்களின் சிரமங்களுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. நரேந்திர மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, .ஜோசப் விஜய்  போன்ற பலர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் நடைமுறைக்கு முடிவு கட்டி சட்டமியற்ற வேண்டும். விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என்று இரு தொகுதியில் போட்டியிட்டதற்குப் பதிலாக வேறு ஒருவரை நிறுத்தியிருந்தால் அவர்களுக்கு ஒரு எண்ணிக்கையாவது கூடுதலாக கிடைத்திருக்கும்; இடைத்தேர்தலும் தவிர்க்கப்படும். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகவைத்து இணைப்பவர்களிடம் இத்தகைய நேர்மையை எதிர்பார்க்க இயலாது.

        இரு திராவிடக் கட்சிகளிலும் மன்னராட்சிக் காலத்தில் பிரபுக்கள் இருந்ததைப்போல மாவட்டச் செயலாளர்கள் குட்டி மன்னர்களாக வலம் வருகின்றனர். இவர்களது  முறைகேடுகள் எல்லை மீறிச் செல்கின்றன. கட்சித்தலைமையால் இவர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் வளர்ச்சி தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. தற்போது சற்று வளர்ந்திருக்கும் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு இடையூறு செய்கின்றனர். திமுகவில் இதுவரையில் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தவில்லை என்றாலும் தலைமையை மீறிச் செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கைகளை மீறிய பேச்சிலும் செயலிலும் ஈடுபடுகின்றன. .பொன்முடி, .ராசா, ஆர்.எஸ்.பாரதி போன்றோர் நாலாந்தர பேச்சாளர்கள் போல் மாறிவிடுகின்றனர். பெண்களைப் பற்றிய அவதூறுப் பேச்சுகளைப் பார்க்கும்போது பெரியார் சிந்தனைகளை இவர்கள் எவ்வாறு உள்வாங்கியுள்ளனர் என்பது விளங்குகிறது. பெரியார் கருத்தியல் இளைஞர்களிடம் சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறோம். இவர்களிடமே சேரவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.  

       தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதைவிட இங்குள்ள கட்டமைப்பைக் குலைக்கும் வேலைகளுக்கே பாஜக முதன்மை தருகிறது. சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார கட்டுமானங்கள் அனைத்தையும்  சிதைத்தொழிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அந்த வகையில் வலதுசாரி தமிழ்த்தேசிய அரசியல்வாதியாக சீமான் வளர்க்கப்படுகிறார். பெரியார் கொள்கைகளை வீழ்த்த பெரியார் பெயரைச் சொல்லிக் கொள்ளும் விஜய் களமிறக்கப்பட்டுள்ளார். அண்ணாமலையை தனிக்கட்சி தொடங்க வைத்து இம்மாதிரியான குலைப்பு, தடுப்பாட்டங்களை பாஜக தொடந்து நடத்தும். இவற்றையெல்லாம் தாக்குப் பிடித்துதான் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் இங்கு இயங்க வேண்டும்.  அதற்கேற்ற வகையில் இவர்கள்  தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

        இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் பாஜக விரும்பியபடி அதிமுக சிதைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாஜக எதிர்ப்பால் திமுகவும் பாஜக ஆதரவால் அதிமுகவும் வீழ்ந்துள்ளது. பாஜகவை விலக்கினால் அதிமுக மீண்டெழும். இதன் மறுதலையாக பாஜகவுடன் இணைந்தால் திமுக வலுப்பெறும் என்று சிலர் நினைப்பதைப் போலத் தெரிகிறது. இது அழிவுப்பாதையாகும். பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி சேரும் முடிவை திமுக எடுக்காது என்று நம்புவோம். இந்தியா கூட்டணியில் எப்போதும் குழப்பங்கள் உண்டு. பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு விரிசல்கள் மோசமாகியுள்ளது. வருங்காலங்களிலும் காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் இந்தியா கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வருமானால் இந்திய ஜனநாயகம் புதைகுழிக்குள் சென்றுவிடும். தங்கள் கட்சியை மட்டுமல்ல; நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவை மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது.      

வாரிசு அரசியல்பிம்ப வழிபாடுசூப்பர் மேன் அரசியல்

                மன்னராட்சி, வாரிசு அரசியல், தீயசக்தி, ஊழல் என்றெல்லாம் திமுகவைக் குற்றஞ்சாட்டி தவெக வென்றுள்ளது. வாரிசு அரசியல், ஊழல் எல்லாம் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது. ஊழல் எதிர்ப்பு என்று அட்டைக் கத்தி சுழற்றும் பாஜக கடந்த 12 ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஊழல் புரிந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள், ரபேல் என்று அடுக்கடுக்கான ஊழல்கள் செய்தும் அவற்றை நீதிமன்றங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட யாரும் கண்டுகொள்ளாத நிலை இன்று உள்ளது. 2004-2014 காலகட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத மிகைப்படுத்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழலுக்காக இயக்கம் நடத்திய அன்னா ஹசாரே இருக்குமிடம் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியை அகற்றவே இத்தகைய இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. ஊழல் இல்லாத அரசு, துறை, மாநிலம் என்று எதுவுமே இல்லை. இந்த ஊழல்வாதிகளை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் கண்டறிந்து, மிரட்டி கட்சியில் இணைத்து அவர்களை ஊழலற்றவர்களாக சலவை செய்யும் எந்திரமாக பாஜக உள்ளது. அதன் தமிழகக் கிளையாகச் செயல்படும் தகுதி தவெகவிற்கு உண்டு என்பதை தங்களது செயல்பாடுகளின் வழியே நிருபிக்கின்றனர்.

       பல்வேறு கட்சியிலிருந்து  சேர்க்கப்பட்ட ஊழல்வாதிகளையும் சுய ஒழுக்கம் இல்லாத நபர்களைச் சேர்ந்த கட்சி எப்படி தூய சக்தியாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பானது. தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் இடத்திற்கு லாட்டரி மன்னன்மார்ட்டின் நகர்ந்தது எப்படி என்றெல்லாம் சிந்திக்க வேண்டிய தேவையிருக்கிறது. பாஜகவிற்கும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நிதிகளை வாரி வழங்கிய இந்த லாட்டரி கம்பெனிஒரே சமயத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் கோலோச்சத் தொடங்கியுள்ளது. விஜய் அமைச்சரவையில் ஆனந்த் இரண்டாவது இடம் என்றாலும் முதலமைச்சரவை விட பெரிய அதிகார மையமாக மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா மாறியிருக்கிறார். நகைமுரணாக முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் திமுக போலில்லாமல் பல அதிகார மையங்கள் இருக்காது என்றார். திமுக, விசிக, தவெக என்ற இவரது பயணத்தில் கொட்டிய கோடிகளின் மதிப்பைக் கணக்கிட்டால் தூயசக்தியின் முகம் வெளிப்படும். இவர் விசிகவைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியுற்று தற்போது தவெகவைக் கைப்பற்றியுள்ளார் எனலாம்.

       மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவில் இணைந்து லால்குடி தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவிற்கு வாக்களித்த 25 எம்.எல்..க்களில் இவரும் ஒருவர். பிறர் கட்சிப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இவர் இன்னும் நீக்கப்படவில்லை. இதிலிருந்து இவரது அதிகார வரம்பு புலனாகிறது. இவரது மகன் ஜோஸ் மார்ட்டின் லஜக என்ற கட்சியைத் தொடங்கி புதுச்சேரியில்  எம்.எல்.. ஆகியிருக்கிறார். இக்குடும்பத்தின் நோக்கம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரியை மீண்டும் கொண்டு வருவதாகும். மேலும் டாஸ்மாக் மூலம் மது விற்பனையை தனியாருக்கு மாற்றும் நோக்கமிருப்பதும் புலப்படுகிறது. மதுவை ஒழிக்கும் எண்ணம் துளியுமில்லை. இதற்காக எந்த எல்லைகளையும் தாண்டுவதாக தமிழக அரசியற்களம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

        தவெக வாரிசு அரசியலை, மன்னராட்சியை எதிர்ப்பதாக மார்தட்டுகிறது. மோதிலால் நெரு, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜூவ் காந்தி, ராகுல் காந்தி என ஐந்தாவது தலைமுறைத் தலைவருடன் கூட்டணி அமைச்சரவையை அமைத்துவிட்டு வாரிசு அரசியலைப் பேசுவது நல்ல நகைச்சுவை. முதன்முதலாக தங்களுக்குக் கிடைத்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்திக்கு அளித்துள்ளது தேர்தலுக்கு முன்பு நடந்த திரைமரைவு பேரங்களை அம்பலப்படுத்துவதாக உள்ளது. இந்தியாவில் இடதுசாரிகள் தவிர்த்து அனைத்துக் கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு. அடுத்தகட்டத்  தலைவர்கள் உருவாகாமல் தடுப்பது கதாநாயக, பிம்ப வழிபாட்டு நடைமுறையாகும். இது அனைவருக்கும் பொதுவானது. தவெகவில் விஜய்க்குப் பிறகு யார் வருவார் என்று கேள்வியெழுப்பினால் இதற்கு விடை கிடக்கும்.  

       கட்சியில் பல்வேறு கட்டங்களில் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தலைமைக்கு வருவதில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்திய அளவில் நேருவின் மரணத்திற்குப் பிறகு (1964) லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். ஆனால்  திடீரென்று அவர் மறைந்ததால்  இந்திரா காந்தி பிரதமராக்கப்பட்டார். இதில் காமராசரின் பங்கு முதன்மையானது. இந்த பாணி இந்திரா காந்தி  படுகொலைக்குப்பின் (1984) ராஜூவ் காந்தியைப் பிரதமராக்குவதில் முடிந்தது. அடுத்த கட்ட தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால் பெரிதாக எதிர்ப்பைக் காட்டவில்லை. இவர்கள் ஏதோ ஒருவகையில் தங்களது தலைமைத்துவத்தைச் சுருக்கிக் கொண்டு நேருவின் குடும்பத்திற்கு பணி செய்து கிடப்பதே சரியென்று நினைத்துவிட்டனர்.

     தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். 1963இல் காமராஜர் பதவி விலகி பக்தவத்சலம் முதல்வரானர். அறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு (1969) அடுத்தகட்ட தலைவர்களுள் ஒருவராக இருந்த  கலைஞர் மு.கருணாநிதி தலைமைக்கு வந்தார். அதைப்போல எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு (1987) நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஒருவர் முதல்வராகியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு தரப்பு ஜானகி ராமச்சந்திரனிடமும் மறுதரப்பு ஜெயலலிதாவிடமும் சரணடைந்தது. கவர்ச்சி, பிம்ப வழிபாடு, சூப்பர் மேன் மனநிலை போன்றவை இம்மாதிரியான முடிவுகளுக்குள் தள்ளிவிடுகிறது.  முதல் தரப்பின் முயற்சி தோல்வியில் முடிய, இரண்டாம் தரப்பில் கையில் கட்சியும் ஆட்சியும் வந்தது.

      ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப்பின் (2016) இந்த மனநிலைக்கேற்ற தலைவரின்றி கட்சி இன்றுவரைத் திண்டாடுகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டுத்தலைமை ஒரு கட்டத்தில் தோல்வியில் முடிந்தது. ஈபிஎஸ் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தாலும் கட்சியில் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இப்போதிருக்கிற சூழலில் அதிமுகவை வழிநடத்தத் தகுந்தவராக இருக்கிறார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிட்ட பிறகு அவருக்குச் சிக்கல் இல்லை என்பதே உண்மை. ஆனால் தவெக பாஜக ஆணைப்படி அதிமுகவை சிதறடித்துவிட்டது. உண்மையான எதிரி யார் என்று கணிக்கத் தவறிவிட்டோம் என்று திமுக சொல்வதைப்போல அதிமுக இந்த உண்மையை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

        திமுகவில் மு..ஸ்டாலின் உடனடியாக உயர்பதவிக்கு வரவில்லை என்றாலும்கூட வாரிசு அரசியல் என்பதை மறுக்கமுடியாது. வைகோ உள்ளிட்ட வேறு ஒருவர் தலைமைப் பொறுப்புக்கு வருவது திட்டமிட்டே தடுக்கப்பட்டது எனலாம். ஆனால் கடும் போராட்டங்களுக்குப் பிறகே மு..ஸ்டாலின் பதவியைப் பெற முடிந்தது. அடுத்த தலைமுறையான உதயநிதி எவ்வித தடையுமின்றி எளிதில் துணை முதல்வராக ஆக முடிந்தது. கட்சிக்குள் இதுகுறித்த விவாதங்கள் எழுந்திருக்க வேண்டும். தலைவர்கள் சுயமின்றி பிம்ப வழிபாட்டில் முடக்கியிருப்பதால் இத்தகைய சூழல் ஏற்படுகிறது. மேலும் எம்ஜிஆர், முக.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்களை வளரவே விடவில்லை.

     வட்டாரத் தலைவர்கள் ஜமீன்தார்களைப்போல  குட்டி அரசர்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் தங்களையும் சுருட்டிய சொத்துகளையும் பாதுகாப்பு கவசமாக வாரிசு அல்லது சூப்பர்மேன் அரசியலுக்கு நுழைந்து சுகமடைவர்களாக இருக்கின்றனர். இத்தகைய சூழல் நாட்டில் ஜனநாயகத்தை வேரறுத்துவிடும். கதாநாயக பிம்ப வழிபாடு, திரைக் கவர்ச்சி, மீட்பர் வருவார் என்று ஏங்கும் அரசியல் மனநிலை  மக்களின் பொதுப்புத்தியிலும் படிந்துவிடுகிறது. இதை மாற்ற கருத்தியல் பரப்புரைகள், அரசியல் பயிற்சிகள் தொடர வேண்டும். பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்கள் அன்றைய காலத்தின் வீச்சோடு நவீன சிந்தனைகளையும் உள்வாங்கிப் பயணிக்க வேண்டும். 

மக்கள் நலக் கருத்தியல் சார் அரசியலின் நிலை

               இனி வருங்காலங்களில் மக்கள் நலக் கருத்தியல் அரசியலில் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரே நாளில் அண்ணாமலையும் லதா ரஜினிகாந்தும் மக்கள் இயக்கம் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் இவர்கள் காட்டும் கரிசனம் நம்மை புல்லரிக்க வைக்கிறது. இன்றைய தலைமுறையிடம் சித்தாந்தம் தோற்றுப்போகும், என்று அண்ணாமலை திருவாய் மலர்கிறார். கோட்பாடே இல்லாமல் மக்களுக்காகச் சிந்திக்கிறோம் என்று ஏமாற்றுகிறார்கள். உண்மையில் இவர்களுக்கு இந்துத்துவம்என்கிற பாசிசக் கோட்பாடு உள்ளது. ‘சனாதனம்என்ற பாசிசக் கருத்தியலும் இதன் ஓர் அங்கம். மக்கள் நலனுக்கும் நாட்டு நலனுக்கும் இக்கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்புமில்லை.

        ரஜினிகாந்த் அவரது இயக்கத்திற்கு தன்னை அழைத்ததாக  பெருமைப்படுகிறார் அண்ணாமலை. அவரது அமைப்பிற்கு பாஜக ஆள் சப்ளை செய்தது. அப்படி வந்தவர்தான் அர்ஜூன மூர்த்தி. தவெகவிற்கும் நிர்மல் குமார் போன்றவர்களை சப்ளை செய்தனர். பாஜகஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் தற்போது அண்ணாமலை இயக்கம் தொடங்குகிறார். ஆதவ் அர்ஜுனா திருமாவளவனிடன் ஆசிபெற்று தவெகவில் இணைந்ததைப்போல  மோடி, அமீத்ஷாவின் ஆசியுடன் ஆர்.எஸ்.எஸ்.இன் இன்னொரு கிளையமைப்பு அண்ணாமலையால் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு இவர்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது.

       இன்றைய இளைஞர்களிடம் அரசியலற்ற தன்மை எனும்மாயாவாதம்பரவி வருகிறது. இதற்குள்ளும் ஒருவகையான அரசியல் இருக்கத்தான்  செய்யும். அரசியலற்ற செயல்பாடு என்று எதுவும் இருக்க இயலாது. இது சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளி  ஊழலை மட்டுமே பேசி மக்களைத் திசை திருப்பிக் கவர்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு அன்னா ஹசாரேவின் இயக்கம் இதைத்தான் செய்தது. தொடர்ந்து 3 முறை பாஜகவை அரியணையில் அமர்த்தியது இத்தகைய போக்கின் வெளிப்பாடுதான். இதில் மதவாதம், இனவாதம், மொழிவெறி, ஊழல், ஆதிக்க உணர்வு போன்ற பாசிச செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. பாசிஸ்ட்களின் ஊழல்கள் இப்போது யார் கண்ணிலும் படுவதில்லை. மக்களை மந்தைப்படுத்தவும் பாசிசவாதிகள் தங்களைச் சந்தைப்படுத்தவும் இந்த மனநிலை உதவுகிறது. சமூக ஊடகங்களில் மூழ்கியுள்ள இளைஞர்களை பாசிஸ்ட்கள் எளிதில் வசப்படுத்தி விடுகிறார்கள். இதன் விளைவே இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் அரங்கேறியுள்ளது.

      இதற்கு இன்றைய இளைஞர்களை மட்டும் குறை சொல்வதில் பலனில்லை. இதற்கான பொறுப்பை ஒட்டுமொத்த சமூகமும் எடுத்துக் கொள்ள வேண்டும். 1980கள் வரை இந்த நிலை இல்லை. 1990களுக்குப் பிறகு சூழல் பெரிதும் மாறியுள்ளது. உலகமயம், நவதாரளவாதம், நவகாலனியச் சூழல் பல்வேறு விளைவுகளைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் புதிய சூழலுக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை பலர் புறக்கணித்துவிட்டனர். மக்கள் நலன் சார்ந்த இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு, சமூக நீதி இயக்கங்களும் அமைப்புகளும் இதில் அடக்கம். பாசிச சக்திகள் முன்பைவிட விரைவாக வளர்ந்து வருவதையும் அவர்களை எதிர்கொள்ள வழக்கமான உத்திகள் பலனளிக்காது என்பதை உணராதது பெருங்குறையாகும்.

        இத்தகைய மாற்றங்கள் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளிலிருந்தான் இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் எல்லாம் உருவாயின. தீவிர இந்துத்துவவாதிகள் இவற்றில் இணைந்தாலும் காங்கிரஸ் தனது மென்மையான இந்துத்துவப் போக்கை (Soft Hindutva) கைவிடாமல் தொடர்ந்து கடைபிடித்தது. மகாத்மா காந்தி படுகொலை (1948), பாபர்மசூதி இடிப்பு (1992) ஆகிய இரண்டு கொடுமைகளுக்குப் பிறகும் காங்கிரஸ் விழித்துக் கொள்ளவில்லை. இந்த இரண்டும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் நடந்தது; இவை போன்ற கொடுமைகளைத் தடுக்கவும் காங்கிரஸ் தவறியது.

          இந்தச் சீரழிவின் ஒரு புள்ளியாக அப்துல்கலாம் அவர்களைக் குறிப்பிடலாம். இது பலருக்கு அதிர்ச்சியளிக்கலாம். அவர் தனிப்பட்ட வகையில் நேர்மை மற்றும் கண்ணியமிக்க மனிதராக இருக்கலாம். வாஜ்பாய் போலின்றி தன் அக மற்றும் புற வாழ்விலும் கண்ணியமாக வாழ்ந்தார். சமூக மனிதனாக அவரது செயல்பாடுகள் இளைஞர்களை சுயம்நலமிக்க, எப்படியாவது தன்னை மட்டும் காத்துக் கொள்ளக்கூடிய, அடுத்தவர்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல், வெறும் போட்டியில் முந்துகிற தன்னிலைகளை உருவாக்க காலந்தோறும் உழைத்தார்.  வல்லரசு போன்ற மாயைச் சொல்லாடல்களை இளைஞர்களிடம் கடத்தி உண்மைகளை மறைக்க உதவினார். இதை அவர் மட்டும் செய்யவில்லை. நமது கல்வியமைப்பும் இதைத்தான் செய்தது. இவற்றின் விளைச்சலான இளைஞர்களை மட்டும் குறை சொல்வதில் பலனில்லை. 

       2002 குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை மறைக்க அப்துல் கலாம் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவி (2002-2007) வழங்கப்பட்டது. அவர் இப்பதவியை ஏற்க மறுத்து தனது நேர்மையைப் பறைசாற்றியிருக்கலாம். ஆனால் கே.ஆர்.நாராயணன் பதவியிலிருந்தபோது திறக்க மறுத்த சாவர்க்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்துவைத்து பாஜகவிற்கு நன்றிக்கடன் செலுத்தினார். இவரது தேர்வை எதிர்த்த இடதுசாரிகள் இந்திய தேசிய ராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான லெட்சுமி சேகலை வேட்பாளராக நிறுத்தினர். 2002இல் ஒருமனதாக தேர்வு செய்யப்படாத நிலையில் 2007இல் ஒருமனதாக தன்னைத் தேர்வு செய்ய ஆசைப்பட்டார். அவரது சுயநலப்போக்கு இதில் வெளிப்பட்டது. இவரைப் போன்றவர்களதான் இளைஞர்களின்ரோல் மாடலாகமுன்னிறுத்தப்படுகிறார்களே தவிர லெட்சுமி சேகல் போன்றவர்கள் அல்ல.

          தை அல்லது மெரினா புரட்சி என்றழைக்கப்படும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டங்கள் தமிழ் மொழியுணர்வு, இன உணர்வு அடிப்படையில் திரட்டப்பட்டவை. இவற்றை புரட்சி என்பதெல்லாம் வெறும் பாவனைதான். தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுவுலை, மீத்தேன் திட்டம், பரந்தூர் விமான நிலையம், நீட், பிஎம் ஶ்ரீ திட்டம் மூலம்  போன்ற இந்தித் திணிப்பு போன்ற தமிழ்நாட்டைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றுக்கு ஜல்லிக்கட்டைப் போல பெருதிரள் அணி திரட்டல்கள் இல்லை என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       இதைப்போன்றே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பொறுப்பற்ற கருத்துகளுக்கு எதிராகத் தோன்றியுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) கருதலாம். இருப்பினும் இவர்கள் வெறும் இணையப் போராட்டம் மட்டும் செய்யாமல் நீட் வினாத்தாள் கசிவு போன்ற சமூகப் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தித் தெருவில் இறங்கிப் போராடி வருவதைப் பாராட்டியாக வேண்டும். இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டிலும் கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியின் அநீதிகளை எதிர்க்கும் இயக்கம் இப்போதாவது தோன்றியிருப்பதை நேர்மறையாக அணுக வேண்டும்.

         ஒன்றிய அரசு இவர்களை முடக்க அனைத்து வழிகளிலும் முயல்கிறது.  எனவே இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையும் பொறுப்புமாகும். இதன்மூலம் இவர்களை சரியான கருத்தியல் பாதைக்குத் திருப்பிவிடவும் வாய்ப்பிருக்கிறது. அன்னா ஹசாரேவின் சீடரான அரவிந்த் கெஜ்ரிவால் கிரேன் பேடி போல் பாஜகவில் இணையாமல் அவர்களை எதிர்த்துக் களமாடிக் கொண்டுள்ளார். அதைப்போல வட இந்தியாவில் ஓங்கி ஒலிக்கும் இந்த இயக்கம் சரியான பாதையுடன் வெற்றியடைய வேண்டும். காங்கிரஸ்  மீதான நம்பிக்கைப் பொய்த்துப்போன நிலையில் மாநிலக் கட்சிகளின் வானவில் கூட்டணியும் உருவாகி இம்மாதிரியான ஜனநாயக இயக்கங்களுடன் இணைவது இன்றைய முதன்மைத் தேவையாக உள்ளது. உலக நாடுகள் பலவற்றில் நடந்துள்ள மாற்றங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் எதிர்த்திசையில் பயணிப்பதை உணர்த்துகிறது. அதனால் நாம் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.