புதன், ஜனவரி 13, 2010

நந்தன் கதை: ஒரு மறுவாசிப்பு:- மு. சிவகுருநாதன்

நந்தன் கதை: ஒரு மறுவாசிப்பு:- மு. சிவகுருநாதன்

வரலாற்றுக்கும் புனைவுக்குமான இடைவெளி சொல்லப்பட்ட / எழுதப்பட்ட / தொகுக்கப்பட்ட அல்லது சொல்லப்படாத / எழுதப்படாத / தொகுக்கப்படாத வரலாற்றின் இடைவெளியைப் போன்றது தான். புனைவுகளே வரலாறாக கட்டமைக்கப்பட்டிருக்கிற நிலையில் வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யவும், மறுவாசிப்பு செய்யவும் புனைவுகள் பெரும்பங்காற்ற முடியும். பழம் புனைவுகளை கேள்விக்குட்படுத்துவதும், புதுப்புனைவுகளை உருவாக்குவதும் வரலாற்றின் இடைவெளிகளைக் கடக்க / நிரப்ப பெரிதும் பயன்படும்.

அக்னியில் ஆகுதி பெய்து கடவுளை வழிபடும் வழக்கமுடையவர்கள் பிராமணர்கள் (ஆகுதி - யாகத்தில் வளர்க்கும் தீயில் இடப்படும் பொருள்) ஆகுதியாக, வரலாற்றின் பக்கங்கள் நெடுகிலும் நந்தன்களும் ராமலிங்கன்களும் தீயிட்டு எரிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நந்தன் கதை வரலாறா அல்லது புனைவா என்ற கருத்திற்குள் செல்லாமல் நந்தன் என்றொரு மனிதன் வாழ்ந்திருப்பானேயானால் அக்கால சமூகச் சூழல்களில் பின்னணியில் ‘மரக்கால்’ என்ற நாவலைப் படைத்துள்ளார் சோலை சுந்தரபெருமாள். ‘மரக்கால்’ ஒரு குறியீட்டுப் பெயர்; பல்வேறு உள்ளர்த்தங்கள் பொதிந்தது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமை, போராட்டமாய் இன்றும் தொடர்கின்ற நிகழ்வுகள். இக்குறியீடு நாவலில் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

நாவலைப்பற்றி பேசாமல் நாவல் என்ன பேசுகிறது என்று பார்ப்போம்.

“பிரம்மதேயங்கள் மக்களுக்கு எந்தக் குறையும் வைக்காமல் தான் செயல்படுகிறார்கள்”. சவுண்டிப் பார்ப்பனர்களுக்கு சிவாச்சாரிகளுக்கும், அந்தந்த குடும்பத்தினர்களுக்கு ஏற்றார்போல் பிரம்மதேயம் படியளந்துவிடும் (பக். 20). இரும்புக் கொல்லர்கள், மரத் தச்சர் மற்றும் கொத்தர்களுக்கு, அவரவர் செய்யும் வேலைகளுக்கு ஏற்றார்போல பிரம்மதேயம் படியளக்கிறது. அவர்களின் குடிசைகளைச் சீர் செய்ய தென்னை மட்டை, பாளை, மூங்கில்களை கட்டளை கொடுக்கிறது. கனகதாசியின் வசந்த விலாசத்தில் மட்டும் குச்சிப்பந்தம் எரியவிட 14படி பசு நெய் அளந்துவிடப்படுகிறது (பக்.22). ஆதனூர் பறையர்கள் தங்களுடைய குடிசைகளைப் பத்து அடி உயரக் குறுமாடி வைத்து குறுக்குவில் போட்டுக் கட்டிக் கொள்ள ஆதனூர் பிரம்மதேயம் அனுமதி தந்திருந்தது (பக்.23). இந்த சிறப்பு உரிமை பெற்றவர்கள் ரெண்டு படை சுவர் எழுப்பி அதன் மேல் மூங்கில் சாத்துப்போட்டுக் கட்டிக்கொள்ள முடியும். பிறர் கூம்பாக் கணக்கா சாத்து நிறுத்தி, கொப்பறையாகத்தான் குடிசை கட்டிக் கொள்ள வேண்டும் (பக்.23). நந்தன் கச்சலையை திருமணம் செய்ததற்கு, கட்டளைப் படியாக மஞ்சள் துணியோடு மஞ்சள் துண்டு கட்டிய கயிறுடன் பச்சரிசி, கருப்பொட்டி, தேங்காய் பழத்தோடு கூடிய பெரு மடக்கை, செவலை வளத்திக்கு (நந்தனின் தாய் தந்தை) வழங்கப்படுகிறது (பக்.25).

நந்தன் - கச்சலை, சோடி சேர்ந்ததும், பிரம்மதேயம் அவர்களைத் துணைக்குடிக்கான வழி வாகை செய்யக் கண்காணிகளுக்குக் கட்டளை பிறப்பித்திருந்தது (பக். 26). சிறுகாணி அம்பட்டனுக்கு பண்ணை அடிமைகளுக்கு கொடுக்கும் தினப்படி, பிரம்மதேயக் கட்டளையே கொடுத்துவிடும் (பக்.30). சூத்திரத்தெருவிற்கு தீவட்டிகள், அது அணையாமல் எண்ணெய் போட தலையாரி, சண்டாளர்கள் தீவட்டியிலிருந்து குச்சி பந்தங்களைப் பற்ற வைக்கும் உரிமை, புயல், மழை இருப்பினும் அரசமரத்தடி துவட்டி ஏற்றி வைக்கப்படுவதை உறுதி செய்யும் பிரம்மதேயம் (பக்.32). செட்டியாரின் முறையீடான தீர்வைக் குறைப்பு மற்றும் கூடுதல் சோற்றுப் பட்டைக்கு உடன் இணங்கும் பிரம்மதேயம் (பக்.33). பறையர்களின் தலைக்கட்டுக்கள் மாசம் முச்சூடும் கறி ஆக்க மிளகாய் செலவு குட்டானில் அளந்து வைக்கப்படுதல் (பக்.34) என்று பல்வேறு உரிமைகளை வழங்கியிருக்கிறது பிரம்மதேயம்.

‘பார்ப்பானுக்கு மூப்பன் பறையன் அவன் கேட்பார் இன்றி செத்தான்’ என்ற பழிபாவம் தன் இனத்திற்கு வந்துவிடக்கூடாதுங்கிறதில் உணுப்பாய் இருக்கும் மருதவாணம் பிள்ளை தலை எடுத்த பின்னர்தான் பண்ணை அடிமைகளுக்குத் கள்ளுபடி போட பிரம்மதேய அதிபரிடம் அனுமதி வாங்கினார். (பக்.101)

பண்ணையடிமைகளுக்கு உணவுக்குப்படி அளப்பதைப் போலவே ‘கள்ளும்’ வழங்க ஏற்பாடு செய்துள்ளார், மருதவாணம் பிள்ளை. மேலும், “இதுபோல மழை வெள்ளக் காலத்தில் தென்னை மர சாணர்கள் வடிக்கும் கள்ளை, சால்களில் நிரப்பிப்போட்டு இருப்பது சீறிக்கொண்டு கிடந்தாலும் இதுபோல மழை வெள்ளக்காலங்களில் கிடந்து லோலுபடும் இந்த பண்ணை அடிமைகள் உடம்பையும் மனசையும் சூடுபடுத்திக்கொள்ள, உடம்பு வலியை மறக்கடிக்கவும், கசாயம் காய்ச்சிக் குடிச்சிக்க வேண்டிய கசகசப்பட்டையையும், லவங்கப்பட்டையையும் கொல்லிமலை செட்டி மூலம் வாங்கி வைத்துக் கொண்டு மழைக்காலப்படியோடு இதுகளையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார் மருதவாணம்பிள்ளை (பக்.102).

இதுமாதிரி அளக்கவேண்டிய படிகளனைத்தும் அளந்தும், குடிசை போடவும், சாப்பிடவும் வழிவகை செய்கின்றன பண்ணை மாகாணங்கள். அவர்கள் செய்ய மறுத்தாலும் வாதாடிக் கேட்டுப்பெற மருதவாணம் பிள்ளை போன்ற வள்ளல்கள் இருக்கிறார்கள். இந்த பண்ணையடிமைகளுக்கு இது போதாதா? சிவதரிசனம் வேறு வேண்டுமாக்கும்.

திருப்பங்கூர் திரிலோகநாதரை தரிசிக்க பறையர் பண்ணையடிமைகளுக்கு பிரம்மதேய அதிபர் முத்துசாமி தீட்சிதர் அனுமதியும் அளிக்கிறார். இதைவிட வேறு என்ன வேண்டும்? காலந்தோறும் அடிமையாக்கிட இது போதாதா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மாட்டுப் பொங்கல் நாளில் சினைப்பிடிக்காத வறட்டு மாடுகள் மற்றும் பாரவண்டி, ஏருக்குப் பயன்படுத்தி பாடாவதியான மாடுகளை பறைச்சேரியின் தலைக்கட்டுக்கு அனுப்பி கறிபோட்டு பிரித்து பங்கிடும் பிரம்மதேயம் (பக்.180). மேலும், கணபோகத்தில் குடி உரிமையுள்ள அனைத்து சாதியினருக்கும் ஓட்டுவில்லை வீடுகளாகக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்ற திட்டப்படி ஓட்டு வீடுகள் கட்டப்பட்டது. அடிமைப் பட்டு கிடக்கும் பறையர் பண்ணை அடிமைகளையும், அவர்கள் பசி என்று நோவாமல் வயிற்றுச் சோற்றுக்கும் இடுப்புத் துணிக்கும் சத்திரம் கவனித்துக் கொண்டு இருக்கிறதோட குந்துமிடத்தையும் சேர்த்துப் பேசி முடிவு எடுத்துவிட வேண்டும் என்ற நினைப்பில் பேச்சை கிளப்பி விட்டிருக்கும் ஞானசம்பந்தப்பிள்ளை (பக்.115).

பிரம்மதேயம் பண்ணை அடிமைகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தது சனாதான தர்மம். பண்ணை அடிமைகளுக்குச் சலுகை காட்டப்பட்டதாகவும் படியளக்கப்பட்டதாகவும் நாவலில் காணமுடிகிறது. இதனால் ‘மரக்காலுக்கு’ போதிய முக்கியத்துவம் இல்லாமற் போகிறது.

வேத மதங்களுக்கெதிராக சைவ மதம் அனைத்துப் பிரிவுகளிலிருந்து சிலரைப் பொறுக்கியெடுத்து அறுபத்து மூவராக ஆக்கியிருப்பதை ஜனநாயகத் தன்மை கொண்ட விஷயமாக பார்ப்பது (பக்.5), சைவசமயக் கொடுமைகள், ஆதிக்கங்கள், வைதீகத் தன்மைகள், போன்றவற்றைப் பின்னுக்கு தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது. சைவத்தை வேத மதத்திற்குக்கெதிராகவும், பார்ப்பனீயத்துக்கு எதிரானதாகவும் கட்டமைப்பது மற்றொரு பார்ப்பனீயமாகவே மாறிவிடும். சைவத்தை அவ்வளவு ஞடிளவைiஎந ஆக பார்க்க வேண்டியதில்லை.

நாவலில் சைவ ஆதரவுக் கூறுகள் நிறைய இருக்கின்றன.

“ஓம், ஓம்” என்ற மந்திரத்தின் ஓசை வெளிப்படக் காற்றையே உட்கொண்டு காற்றையே வெளிப்படுத்தினார். சிவமே அவருள் குடிகொண்டது போல் மகாதேவ ஈஸ்வரரின் ஆலயத்தை அடையப் போகும் அவரை, அவர் கடந்த பின் போவாரின் மீது அவர் கவனம் மேலெழுந்தவாரியாகக் கூடபடவில்லை. இப்படி நடந்து ‘சிவ சிவ’ மந்திரத்தை ஆன்ம வெளியில் உள்ளடக்கிப் போகும் போது வெளிப்படும் அவரின் நடையில் கூட இன்று ஒரு மாற்றம் தெரிந்தது”.

“இந்த மண்ணில் சிவம் ஒன்றே இருந்தது. மன்னர்களிலிருந்து சாதாரணத் தொழில் வழி மக்கள் வரையிலும் சிவத்தையே போற்றி வணங்கினார்கள்” (பக்.221).

“அந்த வஞ்சகர்கள் சிவனையும் தங்களுடைய கடவுளர் என்று சுவீகரித்து சிவமதத்தை அழித்து சர்வமும் வேதமதமாக்கும் திட்டத்துடன் பல பிரம்மதேய அதிபர்களைத் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...” அந்தப் பரதேசியின் பேச்சைக் கேட்ட மருதனுக்கு சர்வமும் விளங்கிற்று (பக்.222).

“சைவப் பரதேசிங்க சனங்க கூடும் இடங்களில் எல்லாம் வேதமதத்துக்குக் காரவங்களை, கடுமையா சாடி தமிழ் மொழிதான் சிவனுக்கு உகந்த மொழின்னும் தெய்வ மொழின்னும் பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கிறத கொள்ளிடக் கரையில் கேட்டுக்கிட்டுதான் வந்திருக்கிறேன்....” (பக்.233).

நந்தன் கதையில் சைவத்திற்கு தானே முக்கியத்துவம் இருக்க முடியும்? என்று கேட்கலாம். ஆனால் அதே காலகட்டத்தில் இங்கு இருந்த பவுத்த, சமண மதங்கள் பற்றிய விவரணைகள் மிகவும் குறைவு.

“இப்போது இந்த திராவிட தேசத்தில் நீச சமண மதத்துறவிகள் பண்ணை மாகாணங்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நீச சாதிக்காரனுங்களை எல்லாரையும் ஒன்றுதிரட்டும் நோக்கத்தில் செயலில் இறங்கியிருக்கிறார்கள் என்பது ருசுவாகியிருக்கிறது” (பக்.76).

“அக்கம்பக்கமெல்லாம் சமணமத சாமியாருங்க கலகத்தைக் கௌப்பிவிட்டு குட்டையைக் குழப்பி மீன் புடிக்கிறானுங்க. நம்ம பிரம்மதேயத்துல சமணமதத் துறவிங்க இதைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கானுங்க.” (பக்.104).

“ராஜாங்கம், நீசனுங்களையெல்லாம் சமண மதத்தில் சேர்க்க தந்திர உபாயத்தைப் பத்தி யோசித்து வருகிறதாகவும் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக அதிகாரத்துக்கு கொண்டு வந்தா சமண மதத்தையும் பரப்ப முடியும்ன்னு சமணத்துறவிகள் சொன்னதையும் பரிசீலிக்கிறதாகவும் இருக்காம்” (பக்.233).

இவற்றையெல்லாம் சைவமேன்மை பேசப்பயன்படுத்தலாமே தவிர நடைமுறைப் பொருத்தப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

மருதவாணம் பிள்ளை பண்ணையடிமைகளுக்கு மட்டும் சலுகை காட்டியவரல்ல. முத்துசாமி தீட்சிதர் மற்றும் கனகதாசி என்று அவரின் கடைக்கண் (பக்.69) பார்வை பட்டோர் பட்டியல் நீண்டது. இதைப்போலவே சிவவடிவேலு உடையார், ஞானசம்பந்தம் பிள்ளை போன்ற சைவத் தொண்டரணியினர் சைவப்புகழைப் பரப்பி நிற்கின்றனர் நந்தனைவிட அதிகமாக.

“அவருக்கு ஒன்று என்றால் ‘சூ’ என்ற கூடிகொள்ள சாதிக்காரவங்க மட்டுமில்லாம மேலண்ட, வடவண்ட பறையர்த்தெரு சனங்களும் இருக்கு. இப்புடி ஒன்னடி முன்னடியா வாழறதுங்க ஞானசம்பந்தன் பிள்ளை கிழிக்கிறக் கோட்டைஇதுநாள் வரையிலும் யாரும் தாண்டினது இல்லை” (பக்.109).

பறையர்களும் வெள்ளாளர் உள்பட இதரச் சூத்திரர்களும் ‘ஒன்னடி முன்னடியா’ வாழுகிற சூழலில் பிரச்சினைக்கு வேலை ஏது? அவரவர்களுக்கு இட்ட வேலையையும், விதிக்கப்பட்ட அத்துக்களையும் தாண்டும் போது தான் சிக்கல் வருகிறது.

சிவவடிவேலு உடையார் பண்ணை அடிமைகளுக்கு உள்ள நித்தியப்படியை தவறாமல் அளந்து விடுகிறார். (பக்.109) “உடையான் ஒன்பது குடிக்கு “ஓடு” பிரிக்கிற உரிமையைத் தாரை வார்த்துக் கொடுத்துட்டு சாதி வெள்ளாளன் பார்த்துக்கிட்டு இருக்கமுடியாது,” என்று தன்னோட அங்காளி பங்காளியிடம் பேசும் சிவவடிவேலு உடையாரால் ஞான சம்பந்தம்பிள்ளையைத் தீண்ட முடிவதில்லை. (பக்.109).

“உடையாருங்க குடி ஒன்பதுன்னு சொன்னாலும் இன்னிக்கு வேளாளக் குடியில, பாதிய, தொட்டுட்டாங்க” (பக்.110) உடையாருக்கு பிள்ளைக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இவர்களை சைவம் ஒன்றிணைக்கிறது.

“எப்பவாவது இதுபோல அவசரமாய் ஊர் மன்றத்தைக் கூட்டும் போதெல்லாம் ஞானசம்பந்தம் பிள்ளை, சிவவடிவேலு உடையாரை நந்தவனத்துக்கு அழைத்துக் கொண்டு போய் உக்காந்து பேசியிருந்துவிட்டுத்தான் வருவார்.” (பக்.111)

இவர்கள் கூடி எடுக்கும் முடிவுதான் ஊர் மன்றம் எடுக்கும் முடிவு. பார்ப்பனீயத்திற்கு கொஞ்சமும் சளைத்ததில்லை இந்த சிவமதமும்.

நாவலில் கனகதாசி, அவள் மகள் நீலாம்பரி, தர்மவர்த்தினி, கேசி போன்ற தாசிகள் வருகிறார்கள். இதில் கேசி கனகதாசியின் துணையாக வருபவள். எடுபிடி வேலைகள் செய்யத்தொடங்கி இசை, தாளக்கட்டை தட்டி சுப்ரமணிய சிவாச்சாரியின் ‘தேவைக்கு’ உடன்பட்டு, அவள் இடத்திற்கு புதிய காணிக்கை வந்தபின், சுக்கிர வன்னியனால் வசப்படுத்திக் கொள்ளப்பட்டவள் (பக்.14). கேசியும் அவன் தோதுக்கு ஈடுகொடுத்துக்கொண்டு மிதிப்பட்டுக் கிடக்கும் கூளம் போலக் கிடந்தாள் (பக்.15).

“கனகதாசி பனிரெண்டு வயதைத் தொட்டதும் அவள் பூப்பெய்திய சடங்கைப் பிரம்மதேயமே கொண்டாடி சந்தோஷிக்க பிரம்மதேய அதிபர் ஏற்பாடு செய்திருந்தார்” (பக்.67) “மகன் வாலிப பருவத்தின் முறுக்கில் அவன் கனகதாசியின் கொள்ளை அழகிலும் உடம்பின் சூட்சுமத்திலும் லாகிரியை உண்டவன் போல”, (பக். 67) கிடந்த முத்துசாமி தீட்சிதருக்கு வாத்ய ஸ்யானரின் காம சூத்திரத்தின் வழிகாட்டலை அள்ளி வழங்கியவள்.

அவள் மகள், “நீலாம்பரி மாரில் இறுக்கலாகக் கட்டியிருக்கும் கரு நீலநிற கச்சை நெளிவு சுழிவுகளை அடக்கி வைத்துக் கொள்ளவில்லை. அவளின் திரட்சியான, அங்கலாவண்யங்களை முழுமையாக இறுக்கித் தன் வசப்படுத்த வாய்ப்பு இல்லாமல் ஒண்டிக் கிடந்தது” (பக்.68).

இந்த அழகை மகாதேவ ஈஸ்வரர் காண வேண்டுமல்லவா? அதற்குத்தான் சாயரட்சை காலத்தில் கனகதாசி செய்யும் சோடசோபசாரப் பூஜை; இப்பூஜை தாசியின் நிர்வாணத்தை ஈஸ்வரன் பெயரால் காட்சிப்படுத்துவது.அர்ப்பணம் முடிக்க அரை நாழிக்கு மேல் ஆகும் (பக்.70).

“கனகதாசியின் கூந்தலிலும் கழுத்திலும் மலர்ச்சரங்கள் மட்டுமே பற்றிருந்தன. மாரிலும் இடுப்பிலும் கட்டியிருந்த கச்சை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வெண்திரையில் கருவறை வாயில் சரவிளக்கின் ஒளியில் நிழலாகத் தெரிந்த கனகதாசியை அவள் பெற்று இருக்கும் நிர்வாணத் தோற்றத்தை ஓரளவுக்குப் பார்க்க முடிந்தது.” (பக்.70)

முத்துக்கள் பதித்த மயில் சிவிகையில் கனகதாசி, நீலம்பரி ஆகியோர் பவனிவரும் உரிமை முத்துசாமி தீட்சிதரால் அளிக்கப்பட்டது. சனாதானத்திற்கு எதிரானதாக கூறப்பட்டாலும் (பக்.67) முத்துசாமி தீட்சிதரால் காற்றில் பறக்கவிடப்பட்டது தாசிகளின் வாழ்வும் உரிமைகளும் கூடத்தான்.

தர்மவர்த்தினியும், “குழந்தைப்பாக்கியத்தை உனக்குக் கொடுத்து விட்டுத்தான் தைப்பிறப்பில் தில்லைவலத்தில் உள்ள உத்தமநாச்சியின் மகள் சிவகாமவல்லிக்கு பல்லக்கு பரிவாரம் அனுப்பி வைக்க இருக்கிறேன்”, என்று சிவவடிவேலு உடையார் சொல்லும்போது நெகிழ்ந்து போய் அவரின் முயக்கத்திற்கு ஈடுகொடுத்தாள் (பக்.120).

தர்மவர்த்தினி தன்னை வஞ்சித்து விட்ட சிவவடிவேலு உடையாரை பழிவாங்க நந்தனோடு சேருகிறாள். “அவனுள் இருந்த சிவநெருப்புப் பிளம்பு ஒன்று இரவை விழுங்கினது போல் புதுவாசலை திறந்துவிட்டிருந்தது. தர்மவர்த்தினி ஒரு எல்லையில் இருந்து மறு எல்லையை கடந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் மனம் புடைத்து திணறிக் கிடந்தாள் அவள் உடம்பு இரை விழுங்கியப் பறவைபோல நெகிழ்ந்து கிடந்தது” (பக்.141). நான்கு தாசிகளும் சுயமற்றவர்கள். பிரம்மதேய அடிமைகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. தர்மவர்த்தினி செய்கையை கலகமாக பார்க்க முடியவில்லை. நந்தனின் தோற்றமும் கண்டுகண்டான தேகமும் அவன் முகத்தில் தேங்கியிருக்கும் ‘சிவ’களையும் அவளை வசியப்படுத்தின (பக்.138). நீசப்பறையனை கூடுவதற்கு சிவலோகநாதனின் அருள் கிடைத்திருக்க வேண்டும்.

இவர்கள் நால்வரைத் தவிரவும் கணிகையர்த் தெரு யுவதிகள் முத்துசாமி தீட்சிதரைக் கண்டு கனவில் சல்லாபித்து தங்கள் ‘உடம்பு’ பெருகி வடிபவர்கள் (பக். 90). இவ்விடத்தில் மாதவி - மணிமேகலை கதையும் சொல்லப்படுகிறது.

வளத்தி (நந்தனின் தாய்), கச்சலை (நந்தனின் மனைவி), குட்டா (அக்கா மகள்) ஆகிய தலித் பெண்களைப் பற்றிய வருணனைகள் தாசிகளைப் பற்றி வருணனைக்கு எவ்விதமும் குறைவு வைக்கவில்லை.

“அவளைப் பாக்கும் போது பனிரெண்டைப் பெத்த உடம்பாகத் தெரியவில்லை. சுருக்கமோ, தளர்ச்சியோ இல்லாமல் திம்முன்னு இருந்தாள். அவள், தான் இன்னும் நாற்பது வயதைக் கூட தொடவில்லை என்று தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தாள்.” வளத்தி (பக்.24).

“பனிரெண்டு வயசில் மூப்பில் இருந்த நந்தனைப் பிடித்துக் கொண்டு ஆதனூருக்கு வந்தபோது இருந்த உடம்பு, அவள் சின்னசாதி செட்டியோடு ஓடும்போது, ஒருபிடி தூக்கலாயும், எடுப்பாயும் தான் தெரிந்தாள், “ கச்சலை (பக். 28).

“உன்னையே கட்டிக்கிறேன்னு நிக்கிற ஒக்கா மொவ குட்டா பொதபொதுன்னு வளர்ந்து வீராந்து நிக்கிறா... மொச்சை கண்ட நமப்புல உன்னையே சுத்திக்கிட்டு நிக்கிறவள சீராபேரா அடிச்சி வெரட்டிடாம, அவளை கட்டிக்கடா...” (பக். 47).

இந்த வருணனைகள் முத்துசாமி தீட்சிதர், மருதவாணம் பிள்ளை, ஞானசம்பந்தம் பிள்ளை, சாம்பசிவ குருக்கள், சிவவடிவேலு உடையார், ராமு மழவராயன், சுக்கிர வன்னியன் போன்றோரின் நீசப்பறைச் சாதிப் பெண்கள் பற்றிய எண்ணங்களுக்கு நிகரானது.

கோயில் கட்டளை அடிமைகள் தவில் வாசிக்கும் போது அவர்கள் கள் குடித்து வந்திருப்பதனால் இசைக் கருவிகளில் காட்டும் தடுமாற்றத்தைக் கேட்க முடிந்தது (பக்.89). மாட்டுத் தோல் கூட அவர்களுக்கு சொந்தமில்லாத போது கள் குடிப்பதும், இசையில் தடுமாறுவதும் எப்படி தவறாக இருக்கமுடியும்?

நாவலின் இறுதியில் கலகக்காரனான மருதன் நந்தனோடு சேருகிறான். அவனும் சேர்ந்து தில்லை செல்லும் முடிவெடுகிறான் பக்.224).

“நீ முதலில் மனுசனா வாழும் உரிமைக்காவ கலகம் பண்ணியிருக்கணும், நாங்க அதைச் செஞ்சோம். ஆனா, நீ சிவதரிசனம் காணும் உரிமைக்கு போராடியிருக்க”, என்று நந்தனை விமர்சிக்கிறான் மருதன் (பக்.216).

இருப்பினும் நந்தனின் முடிவை மாற்ற முடியாமல் அவனுக்கு உதவி செய்யப்போய் உயிரையும் விடுகிறான் மருதன். மருதனது கலகக்குரலும் நந்தனது சிவதரிசனத்தில் காணாமற் போய்விட்டது. இன்றும் கூட நந்தன்கள் தோன்றிக்கொண்டேயிருக்கிறார்கள். அக்னியில் ஆகுதியாக வீழ்ந்து மடிய.

“ஆரிய வேதமதக்காரர்கள் இந்த மண்ணில் காலடி வைக்கும்போது அவர்கள் தலைவன் கிருஷ்ணன்” என்று சைவப் பரதேசி கூறுகிறான் (பக்.221).

“குரு ஷேத்திரத்தில் கிருஷ்ணன் எதிரியின் பக்கத்தில் போரிடும் தனது மக்களாகிய யாதவர்களை குறி வைத்துப் பேசுகிறான்”(பக்.33. - மாயையும் யதார்த்தமும் - டி.டி. கோசாம்பி).

“பல்வேறு மரபினரே ஒன்றாகக் கருதத் தொடங்கியபோது இவர்களை ஒன்றிணைத்து கிருஷ்ணன் என்ற ஒரே மரபு உருவாயிற்று. ஆயினும் முற்றிலும் புதியதான ஒரு மரபை உருவாக்கும் பிரச்சினை இல்லை. ஏதாவது ஒரு வகையில் கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். பின்னர் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டனர் (பக்.34, மேலே குறிப்பிட்ட நூல்).

கிருஷ்ணன் யாதவர்களின் தலைவன். இவனும் பிராமனீயத்தால் உள்வாங்கப்பட்டான் என்று எண்ண இடமிருக்கிறது.

‘மரக்கால்’ நந்தன் கதையை ஒரு நோக்கில் மறுவாசிப்பு செய்கிறது. தொடக்கத்தில் கூறியது போல் இவை போன்ற புனைவுகள் பல்வேறு தளங்களில் மறுவாசிப்பு செய்யப்பட வேண்டும். நந்தன் கதையிலும் வேறுபட்ட வாசிப்புகள் சாத்தியமே.

சோலை சுந்தரபெருமாளின் இதர நாவல்களிலிருந்து ‘மரக்கால்’ சிறிது வேறுபட்டிருந்தாலும், முந்தைய நாவல்களின் பாதிப்பை பல்வேறு இடங்களில் உணர முடிகிறது. ‘நஞ்சை மனிதர்கள்’, தொடங்கி ‘மரக்கால்’ வரையிலும் பல பொதுத் தன்மைகள் இருக்கவே செய்கின்றன.

நாவலை வாசிக்கும் போது ஏற்படுகிற சலிப்பு நாவலின் வடிவம், அமைப்பு முறையை மாற்றி வேறொரு உத்தியாக மாற்றியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாவலாசிரியரின் தேடல், உழைப்பு, ஆர்வம் ஆகியன பாராட்டத்தகுந்தது. இவை போன்ற புனைவுகளை மறு கட்டமைப்பு செய்யும் கலை, இலக்கிய வடிவங்கள் தமிழில் நிறைய வெளிவரவேண்டும்.


(மரக்கால் (நாவல்) ஆசிரியர் : சோலை சுந்தரபெருமாள், வெளியீடு : பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பக்.287, விலை ரூ.130/-)

10 பேர் பலியான வேதாரண்யம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து உண்மை அறியும் குழு அறிக்கை.













10 பேர் பலியான வேதாரண்யம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து உண்மை அறியும் குழு அறிக்கை.

தொடர்புக்கு : மு. சிவகுருநாதன், 2/396 B கூட்டுறவு நகர், விளமல் - 613 701, திருவாரூர் மாவட்டம். செல் : 8122810010, 9842402010.

டிசம்பர் 03, 2009 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கரியாப்பட்டினம், கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி வேன் கத்தரிப்புலம் பனையடி குத்தகை குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளிக் குழந்தைகள் 9 பேரும், ஆசிரியை ஒருவரும் பலியானார்கள். இந்நிகழ்வு பற்றிய உண்மை நிலவரங்களை கண்டறிய.

மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR) திருவாரூர்.
த. மனோகரன், மனித உரிமை ஆர்வலர்
ச. இராஜேந்திரன், மனித உரிமை ஆர்வலர்
ஆகியோர்,

அடங்கிய மூவர் குழு டிசம்பர் 06,2009 அன்று விபத்து நடந்த இடம், கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி, விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உயிர் பிழைத்த குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், உயிரிழந்த பள்ளி ஆசிரியை சுகந்தியின் பெற்றோர், விபத்தை நேரில் பார்த்தவர்கள், மீட்புப் பணியில்
ஈடுபட்டோர் ஊர்பொதுமக்கள்போன்றோரைசந்தித்துஉரையாடியது.

எமது பார்வைகள்
:

01. குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், உறவினர்களும் இழப்பின் சோகத்தில் ஆட்பட்டு பேசவே இயல முடியாதவர்களாக உள்ளனர். வேன் உரிமையாளர் வீட்டின் எதிரே உள்ள பலியான ஹரிஹரனின் தந்தை குமார் மற்றும் உறவினர் சாலையில் ஓலமிட, வேன் உரிமையாளர் வீட்டை காவல் காக்கும் இரு காவலர்கள் “போலீஸ் வண்டி கொண்டு வந்து அனைவரையும் அள்ளிக்கொண்டு செல்வோம்” என்று மிரட்ட அவர்களது அழுகை, ஒப்பாரி இன்னும் அதிகமானது. காவலர்களின் இந்த மனிதாபிமானமற்ற செயல்பாட்டை எங்கள் குழு நேரில் கண்டது. சொற்ப இழப்பீடு, மேல் நடவடிக்கை இன்மை, அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்கு போன்றவற்றால் அம்மக்களின் வேதனை கூடிக் கொண்டே போகிறது. விபத்தில் இறந்த ஜெயசூர்யா, இளஞ்சூர்யா ஆகிய இரண்டு குழந்தைகளின் பாட்டி டிசம்பர் 07, 2009 விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

02. விபத்து நடந்த இடம் பனையடிகுத்தகை செம்மண் சாலை வேன் செல்லும் அளவிற்கு அகலமாகவே உள்ளது. அந்த இடத்தில் வளைவும் இல்லை; நேரான சாலையாகவே உள்ளது. வேன் டிரைவரின் கவனக் குறைவு, செல்போன் பேச்சு, வேனின் மோசமான நிலைமை, பிரேக் பிடித்தாலும் நிற்க வாய்ப்பில்லாத பட்டன் இல்லாத டயர் போன்ற காரணத்தால் தான் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து விபத்து நடந்த இடம் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த வேன் விபத்து நடக்கும் போது 20 குழந்தைகளுடன் இருந்திருக்கிறது. பள்ளியைச் சென்று அடையும் போது 75க்கு மேற்பட்ட குழந்தைகளுடன் செல்லும். அந்த மாதிரியான சூழலில் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

03. வேன் டிரைவர் மகேந்திரன், உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்திருப்பதாக சொல்லும் காவல்துறை பள்ளியின் தாளாளர் எஸ். தங்கராசன், வேன் உரிமையாளர் கார்த்திகேயன் போன்றோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தாளாளர் தம் வசம் இருந்த மோசமான இந்த வேனை விற்பனை செய்து, அதே வேனை பள்ளிக்கு இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். குழந்தைகளின் உயிர் குறித்து பள்ளி நிர்வாகமும், வேன் உரிமையாளரும் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. அரசுப்பள்ளியில் ஆசிரியராக உள்ள கார்த்திகேயன் சுமத்ரா என்ற தமது உறவினர் பெயரில் வேனை சொந்த உபயோகத்திற்கென பதிவு செய்து சட்டத்தை மீறி பள்ளிக்கு இயக்கி வந்துள்ளார்.

04. கலைவாணி மகா மெட்ரிக் பள்ளிக்கு 01.06.2009 முதல் அங்கீகாரம் இல்லை. அங்கீகாரத்தை புதுப்பிக்க கருத்துருக்கள் அனுப்பப்படவில்லை. வேன் பள்ளி மாணவர்களுக்கான உரிமம் பெறவில்லை. ஓட்டுநருக்கு உரிமம் இல்லை. வேன் இயக்கக் கூடிய நிலையில் இல்லை. இதுபோன்ற நிறைய ‘இல்லை’ களை மாவட்ட நிர்வாகம் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் ‘கண்டுபிடித்துச்’ சொல்லி வருகிறது. இதற்குக் காரணமாக எவர் மீதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 10 உயிர்கள் மாண்ட நிலையில் எந்தப் புகாரும் தரப்படவில்லை என்று காவல்துறை தரப்பு சொன்ன காரணத்தால் 05.12.2009 அன்று பாதிக்கப்பட்ட பெற்றோர் கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுவரையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படவில்லை. 05. நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. இரா. வீராசாமி அவர்களின் உத்தரவு (ந.க.எண். 11424/அ2/2009 நாள் : 04.12.2009) பள்ளியின் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது. தேவி மழலையர் பள்ளியின் அங்கீகாரம் 31.05.2009ல் முடிவடைந்துள்ளது. 01.06.2009 முதல் அங்கீகாரம் புதுப்பிக்க தஞ்சாவூர் மெட்ரிக் பள்ளி ஆய்வாளருக்கு உரிய கருத்துருக்கள் அனுப்பப்படவில்லை. விபத்து நடந்து விட்டதால் இப்பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச் சான்று அளித்து வேறு பள்ளியில் சேர்க்க தாளாருக்கும், கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் உண்டா? இப்பள்ளி கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 01.06.2009 முதல் அங்கீகாரம் இல்லாது செயல்பட்டது, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி) நாகை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தஞ்சை ஆகியோர் ஏன் பார்வையிட்டு கண்டுபிடிக்க முடியவில்லை? 10 உயிர்களை காவு கொடுத்தபிறகுதான்கண்டுபிடிக்கமுடிந்திருக்கிறது.

06. தாளாளர் எஸ். தங்கராசனின் பெரிய மாடி வீட்டு சந்துப் பகுதியில் மாட்டுத் தொழுவம் போன்று, பல நாடுகளில் தடை செய்யப்பட்ட சுற்றுச் சூழலுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய ‘ஆஸ்பெட்டாஸ்’ கூரை வேயப்பட்ட, மிகவும் பள்ளமான, மழை நீர் தேங்கி நிற்கக் கூடிய இடத்தில் இந்த மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயின்ற 460க்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் போதுமான இட வசதியோ, கழிப்பறை வசதியோ இல்லை. ஒப்பீட்டளவில் இப்பள்ளியை விட, நாகக்குடையான் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி போன்றவை வசதி மிக்கவை. பல்லாயிரக்கணக்கில் சேர்க்கைக் கட்டணமும், ரூ.500/- முதல் ரூ.1000/- வரையிலான மாதக் கட்டணமும் செலுத்திய பெற்றோர்களும் இந்த வசதிக் குறைவைப் பொருட்படுத்தவே இல்லை. விபத்தில் உயிரிழந்த இரண்டாம் வகுப்பு அஜய்-ன் புத்தகப்பையை பாட்டி காய வைத்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார். காப்பி நோட்டில் அஜய் கையெழுத்தின் முதல்வரி “கொடுமையை எதிர்த்து நில்”.

07. இறந்த குழந்தைகள் 3 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட பிஞ்சுகள். இந்த வயதில் 15, 20 கி.மீ தூரமும், அதற்கு மேலும் பயணம் செய்து தினமும் பள்ளியை அடைகிறார்கள். அவர்கள் காலை, மாலை இரு வேளையும், வாகனங்களில் இருக்கும் நேரம் சராசரியாக 3 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. காலை 7.30 க்கே கிளம்பி காலை, மதிய உணவுகளை சரியாக சாப்பிட முடியாத நிலையில், பல ஊர்களைச் சுற்றிக் கொண்டு 9 மணிக்கு அக்குழந்தைகள் பள்ளியை அடைய வேண்டியிருக்கும். ஆங்கில மோகத்தால், விளையாடித் திரிய வேண்டிய பிஞ்சு வயதில் புத்தகப் பொதி சுமந்து சிறைச்சாலை போன்ற கொடிய வதை முகாம்களான மெட்ரிக் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவலத்திற்கு பெற்றோர்களும் ஒரு காரணம்.

08. அரசின் கல்விக் கொள்கை தனியார் கல்வி முதலாளிகள் பெருக வாய்ப்பளிக்கிறது. ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ (SSA) தொடங்கப் பட்டதிலிருந்து புத்தகங்கள் இல்லை, அட்டை என்றவுடன் பல பெற்றோர்கள் அரசுப் பள்ளியிலிருந்து மெட்ரிக் பள்ளிக்கு குழந்தைகளை மாற்றத் தொடங்கி விட்டனர். பெயரில் மட்டும் இருக்கின்ற இயக்கம் ‘மக்கள் இயக்கமாக’ வளர்த்தெடுக்கப் படவில்லை. இது பற்றிய பரப்புரைகள் மக்களிடம் செய்யவில்லை. சமச்சீர் கல்வி என்கிற போதும் இந்நிலை அடுத்த ஆண்டும் தொடரவே செய்யும். பாடம் ஒன்றாக இருப்பினும் பயிற்று மொழி ஆங்கில வழிக்கு மட்டுமே வரவேற்பு இருக்கும்.

09. இப்பள்ளியின் தாளாளர் எஸ். தங்கராசன் அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டு மெட்ரிக் பள்ளியை நடத்தி வந்திருக்கிறார். இவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வாங்கியவர்; அரிமா சங்கத்திலும் உள்ளார். இவரின் சகோதரர் எஸ். சிவப்பிரகாசம் (காங்கிரஸ்) வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக உள்ளார். பினாமிகள் பெயரிலும், அரசியல் பின்புலத்தின் அடிப்படையிலும் இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தாளாளர் தற்போது ஓய்வு பெற்று விட்டாலும் அரசுப் பணியில் உள்ள அவரது மகன் செல்லப்பாவும், இப்பள்ளிப் பணிகளில் ஈடுபடுகிறார். செல்லப்பா இளம் அரிமா சங்கத்தில் உள்ளார். விருது, பதவி, பட்டங்களை சுமந்து கொண்டு, சட்டங்களை மீறியும் வளைத்தும் இவர்கள் 10 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குற்றச் செயல் புரிந்துள்ளனர்.

10. டிசம்பர் 02, 2009 நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. அடுத்த நாள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் அன்று விடுமுறை அளித்திருக்கலாம். விபத்துக்கு முன்பும், பின்பும் நாகை, மாவட்ட ஆட்சியர் சரிவர செயல்படவில்லை என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.

பரிந்துரைகள்

01. இறந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50,000/-ம், ஆசிரியைக்கு ரூ.1,00,000/-ம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது போதாது. எனவே, இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா 3 இலட்சமும், ஆசிரியையின் குடும்பத்திற்கு 5 இலட்சமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். 10 குடும்பங்களிலும் யாரேனும் ஒருவருக்கு கருணை அடிப்படையில்அரசுவேலைவழங்கவேண்டும்.

02. விபத்தில் குழந்தைகளைக் காப்பாற்றி தன்னுயிரை நீத்த ஆசிரியை செல்வி மா. சுகந்திக்கு வீர - தீரச் செயல் புரிந்தமைக்கான தமிழக அரசு விருது வழங்கப்பட வேண்டும். அவரது பெயரை மத்திய அரசின் குடியரசுத் தலைவர் பதக்கத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

03. பலியான குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகள் ஆகியோர் அதிர்ச்சி, துயரம், வலி போன்றவற்றிலிருந்து முழுமையாக விடுதலை பெற கவுன்சிலிங் போன்ற உளவியல் கிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.

04. இப்பள்ளிக் குழந்தைகளை, பெற்றோருடன் கலந்தாய்வு செய்து அருகேயுள்ள இதரப் பள்ளிகளில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும். இக்குழந்தைகளைச் சேர்க்கும் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.

05. வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அதைப்போல இப்பள்ளியின் தாளாளர் எஸ். தங்கராசன், வேன் உரிமையாளர் கார்த்திகேயன் போன்றோரையும் கைது செய்து தகுந்த பிரிவுகளின் படி குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

06. வேன் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, குற்றமிழைத்த வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர்கள் போன்றோர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

07. மெட்ரிக் பள்ளியை முறையாக ஆய்வு செய்து இந்த மாதிரியான விபத்துக்களைத் தடுக்கத் தவறிய கல்வித்துறை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்ந்த தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

08. அரசுப்பணி செய்பவர்களோ, அவரது பினாமிகளோ இந்த மாதிரியான மோசடி வேலைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்பள்ளி செயல்பட அனுமதிக்கக் கூடாது.

09. சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதோடு மட்டுமல்லாது எதிர்காலத்தில் இது போன்ற இழப்புகள் நிகழா வண்ணம் தடுக்க தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல் போன்ற தொலை நோக்குத் திட்டங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

வியாழன், ஜனவரி 07, 2010

வைணவம் - கீழை மார்க்சியம் - மாவோயிசம் என்ற கண்ணி வலையில் ஊடாடும் இந்துத்துவம் - மு. சிவகுருநாதன்

(எஸ்.என். நாகராஜனின் ‘கீழை மார்க்சியம் - வரலாறு, அரசியல், மெய்யியல்’ என்ற நூல் குறித்தான விமர்சனம்)

கிழக்கு- மேற்கு என்ற முரணடிப்படையில் மேற்கத்திய அறிவுச் செல்வங்கள் கேவலமானது, கீழைத்தேய செல்வங்கள் யாவும் உன்னதமானது. மேற்கில் மரபு இல்லை, கிழக்கில் நீண்ட பெரும் மரபு உண்டு. மேற்கத்திய புராணங்கள் மோசம், கிழக்கத்திய - இந்துத்துவ புராணங்கள் புனிதம், மேற்கத்திய விஞ்ஞானம், பகுத்தறிவு, ஆங்கிலம் ஆகியன இழிவானது. கிழக்கின் மெய்யியல் உயர்வானது. பண்பாடு அற்ற மேலை கொச்சை நாத்திக வாதம், கலாச்சாரம், மெய்யியல் சார்பு கொண்ட புத்திசாலித்தனமான ஆன்மீக வாதம் உடைய கீழைத்தேயம் என்றெல்லாம் கிழக்கின் பெருமை பேசப்படுகிறது.

கிழக்கில் அப்படி என்னதான் மரபு இருக்கிறது? சீனாவின் (பக். 555) நீண்ட மரபுத் தொடர்ச்சியில் இந்தியாவில்அதுவும் தென்கலை வைணவத்தின் பங்கு என்ன? மரபைத் தேடுதல் என்பது இனத்தூய்மைவாத பாசிசமாகவே அமையும் என்பதை வரலாற்றின் பக்கங்கள் நெடுகிலும் கண்டுள்ளோம். அப்படி மரபைத் தேடும்போது இந்தியாவிலுள்ள (மன்னிக்கவும்! பாரதத்திலுள்ள - காந்தி - பாரதம், ஆர்.எஸ்.எஸ். - பாரத வர்ஷம், அகண்டபாரதம் - எஸ்.என்.என். - பாரதம் எவற்றோடு கைகோர்க்கிறது?) அவைதீக சமயங்களையும் (ஆசீவகம், பவுத்தம், சமணம்) அதையும் தாண்டி தொல்குடி மரபு வரை சென்று நமக்கான மரபு எது? மார்க்சியம், லெனினிசம், மாவோயிசத்துடன் நெருக்கமாக இருக்கக் கூடிய மரபு எதுவென தேடல் நீளலாம். ஆனால் இத்தகைய தேடல் ஏதுமற்று தமிழ்மறை - தென்கலை - வைணவ - கைங்கர்ய மரபுடன் நின்று போவதன் மர்மம் என்ன? வைணவம் மட்டும் “சுயம்பு” வான மரபா? அதற்கு முன்னால் இங்கு எதுவும் இல்லையா?

சைவ - வைணவ மடங்களுக்கும் அத்வைதம் - விசிஷ்டாத்வைதத்துக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு இருக்க முடியும்? ஆழ்வார்களில் நிறையபேர் சூத்திரர் - தலித்கள் என்கிறார். (திருமங்கையாழ்வார் - கள்ளர், திருப்பாணாழ்வார் தலித்; பக் : 179). நாயன்மார்களில் கூட நந்தன் போன்று தலித்களும் சூத்திரர்களும் உண்டே! அதனால் சைவமும் முற்போக்கானது என்று கூறிவிடமுடியுமா? வைணவத்தில் சாதியம் இல்லை என்கிறார். ரொம்ப அபத்தமாக இருக்கிறது. இதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இவரது வைணவச் சார்பு பிறப்பால் ஏற்பட்டது என்பதை அவதானிக்க முடிகிறது. வைணவ மரபில் பிறந்து வளர்ந்தால்தான் மார்க்சியனாகவும், கம்யூனிஸ்டாகவும் மாறுவது எளிதாக இருந்ததென்கிறார். இந்த எளிமையான வேலையை அமைத்து வைணவர்களும் ஏன் செய்யவில்லை? வைணவச் சார்போடு இவர் பிறரை அணுகும் விதம் பாசிசமாகத்தான் இருக்கிறது. “சனி நீராடு - என்பதன் அர்த்தம் அனுபவப்பட்டவனுக்குத் தெரியும்” என்கிறார். இது பாசிசமின்றி வேறென்ன? இவர் பிறப்பு வழி வைணவராக இல்லாவிடில் வைணவத்திற்கும், மார்ச்சியத்திற்கு முடிச்சு போடும் வேலையை செய்திருப்பார் என்பது அய்யமே.

இராமாநுஜர் மேல்கோட்டையில் செய்ததை ஏன் திருவரங்கத்தில் செய்யமுடியவில்லை என வைணவரான இ.பா. நேர்மையாக கேட்கிறார் (பக். 574). ஆனால் இவரோ காந்தியால் முடியாததை 800 ஆண்டுகளுக்கு முன்பு சாதித்துவிட்ட பெருமிதத்துடன், மேல் கோட்டையில் ஆண்டுகளுக்கு ஒரு நாள் தலித்கள் கோவிலுக்குள் புக அனுமதி அளிக்கப்படுகிறது பற்றி பெருமைப்படுகிறார். ஆண்டுக்கு ஒரு நாள் நடக்கும் தேரோட்ட நிகழ்வுகள், பிறகு செய்யும் ‘சுத்தி’ சடங்குகள் எல்லாம் நமக்குத் தெரியாதா? தோழரின் வைணவப்பற்று சுஜாதா, கமல்ஹாசன் போன்றோர்களையும் விஞ்சி விடுகிறது.

காந்தியை உண்மையான வைணவன் இல்லை என்கிறார் (பக். 272), ஆதிசங்கரனை நம்பூதிரி பார்ப்பான் என்று காய்கிறார் (பக். 256). நேருவை பல இடங்களில் (பக்.203,240) காஷ்மீர் பார்ப்பான் என்று திட்டுகிறார். காந்தி, நேரு போன்றவர்கள் தென்கலை - தமிழ் வைணவ - கைங்கரிய பார்ப்பனாக இருந்தால் ஏற்றுக் கொள்வார் என்று கருத இடமுண்டு.

காந்தியை முட்டாள் சுட்டுக் கொன்றான் (பக்.279) என்கிறார். இதை எப்படி புரிந்து கொள்வது? பிரிவினை, அது தொடர்பான கலவரங்கள், காந்தியின் செயல்பாடுகள், ஆர்.எஸ்.எஸ்.இன் சதி, சூழ்ச்சி, கொலைவெறி, இந்துத்துவம் போன்ற எவ்வித பின்னணி புரிதலுமற்று சொல்லப்படுகிற மேற்கண்ட வாசகம் யாருக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள் மற்றுமுள்ள சங்பரிவார் கும்பலுக்கும் தோழருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது எனக் கேட்க வேண்டியுள்ளது. இந்நூலில் உள்ள மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ தொடர்பான சொற்களை எடுத்துவிட்டால் இந்துத்துவாதிகளுக்கு பயன்படும் ஒன்றாகக் கூட மாறி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. இது தெரிந்து தானே எஸ்.என்.என். நூற்களுக்கு விஜயபாரதத்தில் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்!

பெருமைப்படத்தக்க நீண்ட மரபும், பாரம்பரியமும் இல்லாதவர்கள் தமக்கான விடுதலை குறித்து சிந்திக்கக் கூடாதா? போராட வழியே இல்லையா? உங்களைப் போன்ற கலாச்சார பெருமைமிக்க (அதாவது பாசிச) தென்கலை - தமிழ் - வைணவ மரபில் இல்லாத ஒரு இனக்குழு தனக்கான விடுதலையை யாரிடம் கையேந்தி பெற வேண்டும்? அவர்களுக்கு விடுதலை வாங்கித் தரும் வேலையை வைணவம் மேற்கொள்ளுமா? அல்லது அவர்கள் இதனுடன் அய்க்கியமாக வேண்டுமா? என்றெல்லாம் கேள்வி எழுகிறது.

விஞ்ஞானத்திற்கு மட்டுந்தான் உரை தேவை. சமய நூலுக்கு உரை தேவையில்லை. இஸ்லாம், கத்தோலிக்கம், ப்ராஸ்ட்ஸ்டண்ட் போன்ற மதங்களில் பூசாரிகள் உருவாகிவிட்டதாகச் சொல்கிறார் (பக்.449). வைணவத்தில் எல்லாம் இருக்கிறது. இதில் இல்லாதது ஒன்றுமில்லை எனும்போது, இன்னும் என்னவெல்லாம் இருக்குமோ என்று அச்சமாக உள்ளது. எஸ்.என்.என். வைணவத்திற்கு உரையெழுதும் வேலையை மேற்கொண்டு தென்கலை தமிழ் - வைணவ கைங்கர்ய பூசாரியாக மாறினார் என்று தெரியவில்லை?

சுற்றுச்சூழல், பெண்ணியம் பேன்றவற்றைப் பற்றி இங்கு இதுவரையில் நிறைய விவாதிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுவாமிநாதனின் பொய், புரட்டு போன்றவை அம்பலப்படுத்தப்படத்தான் வேண்டும். ஆனால் சுற்று சூழலியர்களின் செயல்பாடுகள் பலவற்றில் இந்துத்துவவாதிகளுடன் இணக்கமான போக்கு, மதவாதம் பற்றிய புரிதலின்மை போன்றவற்றையும் விமர்சிக்க வேண்டியுள்ளது.

சர்தார் சரோவர் அணை, சேது சமுத்திரத் திட்டம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இந்துத்துவத்துடன் கொள்கின்ற உறவு மிகவும் எதிரிடையான நிலைப்பாட்டுக்கு வழிவகுத்து விடுகிறது. சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் நோக்கம் நிறைவேறினால் சரி, யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு மோசமானதொன்றாகும். ‘கற்பு’ பற்றிய பொதுபுத்தி சார்ந்த கதையாடல்களை எல்லாம் (பக்.201, 496) நிகழ்த்திவிட்டு பெண்ணியம், சுற்றுச்சூழலுக்கு பெண்களின் தலைமை பற்றியெல்லாம் விவாதிப்பது முரணாகவே இருக்கிறது. சூழலியம், பெண்ணியம் பற்றி பேசுமளவிற்கு கூட தலித்தியம் பற்றி பேச மறுக்கும் போக்கு உள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பே இராமாநுஜர் தலித்களை ஆலய நுழைவு செய்து விட்டார் என்று பெருமையடித்துக் கொள்வதில் என்ன பயன்? தலித்களின் இன்றைய நிலை என்ன? ஆலய நுழைவு இப்போது கூட சாத்தியமில்லையே! தலித்தியம் பற்றியெல்லாம் போகிற போக்கில் கருத்து சொல்வதை வேறுபடுத்தித்தான் பார்க்க வேண்டியுள்ளது.

பவுத்தம், சமணம் போன்ற அவைதீக சமயங்களையும், வைதீகத்திற்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் செயல்பாட்டையும் எப்படி பார்ப்பது? இவைகள் எல்லாம் ஏன் நடைபெற்றன? அன்பு வழியான வைணவம் ‘வைணவப் பேராசான்’ எஸ்.என். நாகராஜன் சொல்வது போல் இருந்திருந்தால் மேலை சொன்னவற்றுக்கு தேவையில்லாமற் போயிருக்குமே! அது ஏன் நடக்கவில்லை? இவற்றையெல்லாம் மேலே ஆங்கில அறிவால் ஏற்பட்ட வறட்டு நாத்திகவாதம் என்று எப்படி புறந்தள்ள முடியும்? இதற்கு எதிரிடையான கீழைத்தேய புத்திசாலித்தனமான ஆன்மீக வாதம் எங்ஙனம் செயல்படும்? புத்திசாலித்தனத்துக்கும், அறிவுக்கும் என்ன வேறுபாடு?

விடுதலை பிரிக்க முடியாது என்றே வைத்துக் கொள்வோம். பொருளை ஒழித்தால்தான் தொழிலாளியுடன் சேர்த்து முதலாளிக்கும் விடுதலை. இதையும் ஒத்துக் கொள்வோம். வைணவத்தை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் ஒழிக்காமல் பாறையனுடன் சேர்த்து பார்ப்பானுக்கு என்ன மாதிரியான விடுதலையைத் தர முடியும்? தீவிரமான வைணவப்பற்றைத் தவிர இதில் வேறெதையும் காணமுடியவில்லை.

தமிழில் 40,000 பழமொழிகள் இருக்கின்றன (பக்.516) என்று பெருமிதம் கொள்கிறார். இவைகள் யாரை நோக்கி, எதற்காக சுட்டப்பட்டன என்பதையும் வருணாஸ்ரம, சாதீயப் பின்னணி, சாதியடிப்படையிலான பார்ப்பன - பறைச்சேரிகள், இழிசனர் வழக்கு என்றெல்லாம் அடித்தட்டு மக்களின் மொழிகூட எள்ளி நகையாடப்பட்ட சூழலில் பழமொழிகளை வைத்து பழம் பெருமையை மட்டுந்தான் பேசமுடியும்.

மாவோவின் “முள்ளங்கி கம்யூனிஸ்ட்” க்கு தோழர் எஸ்.என். நாகராஜன் உதாரணமாகிப் போனதுதான் வரலாற்றின் அவலம் என்று நினைக்கிறேன். வெளியே மார்க்சிய, லெனினிய, மாவோயிய, கம்யூனிச சிவப்பு சாயம்; ஆனால் உள்ளேயிருப்பதோ வைணவ - இந்துத்துவ வேஷம். நூல் முழுமையும் தென்கலை - வைணவம் - கிழக்கு - சுயமாச்சார்ய மரபு - அன்பு வழி - மரபைத் தேடுதல் - விசிஷ்டாத் வைதம் - இராமாநுஜர் - புத்திசாலித்தனமான ஆன்மீகம் - கைங்கர்ய மார்க்கம் - பறையனுடன் சேர்த்து பார்ப்பனுக்கும் விடுதலை (பக்.191) - இவ்வாறான வலைப்பின்னலில் கம்யூனிச மூலாம் பூசப்பட்ட இந்துத்துவமே வெளிப்படக் காண்கிறோம்.

மார்க்சியம், ஹெகலியம், லெனினியம், ஸ்டாலினியம், மாவோயியம் போன்றவற்றைப் பற்றியும் மேலும் பகை முரண் நட்பு முரண், உற்பத்தி சக்தி உற்பத்தி உறவு பற்றியும் விவாதம் செய்துதான் நம்மையும் மார்க்சியத்தையும் செழுமைப்படுத்திக் கொள்ளவும், நமக்கான விடுதலைப்பாதையைத் தெரிவு செய்யவும் முடியும். ஆனால் இந்த புத்தகத்தில் முழுக்க முழுக்க மரபு, வேர் என்றெல்லாம் சொல்லி தென்கலை - தமிழ் வைணவம் பற்றியே விதந்தோதப்படுகிறது. மார்க்சியம், மாவோயியம் போன்றவற்றிற்கு வைணவ உரை எழுதும் போக்கு ரொம்ப அபத்தமாகப்படுகிறது.

தோழரின் கூற்றுப்படியே இந்நூலில் அறிவதற்கு ஒன்றுமில்லை. எனவே, இதைத்தூக்கி எறிந்துவிடலாம் (பக்.557) என்பதே என் நிலைப்பாடு. ஆனால் 578 பக்கங்கள் கொண்ட நூலுக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் என்றெண்ணும் போது மிகுந்த வருத்தம் உண்டாகிறது.

(மே 24, 2009 தஞ்சாவூரில் ‘தமிழ்வெளி’ நடத்திய திறனாய்வு அரங்க உரையின் திருந்திய வடிவம்)

முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் - உண்மை அறியும் குழு அறிக்கை.











திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டை நகரில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன் வைத்து நடைபெறும் மதக் கலவரத்தில் முஸ்லீம்களின் வீடுகள், கடைகள், தாக்கப்பட்டுவருகின்றன. மிகக் குறுகலான பள்ளிவாசல்கள் அமைந்துள்ள பகுதிகளைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்பது முஸ்லீம்களின் நீண்ட நாள் கோரிக்கை. சமூக நல்லிணத்தில் அக்கறையுள்ளள மனித உரிமை ஆர்வலர்கள் என்கிற வகையில் 1994 முதல் நாங்கள் அவ்வப்போது இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகிறோம்.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் நிகழும் என எதிர்பார்த்த முஸ்லீம் மக்கள் உயர்நீதி மன்றத்தை அணுகி மாற்றுப்பாதையில் ஊர்வலம் செல்ல ஆணையிடுமாறு வேண்டினர். நாங்கள் இதற்கு முன் அளித்த அறிக்கைகளும் நீதிமன்றம் முன் சாட்சியங்களாக வைக்கப்பட்டன. தலைமை நீதிபதி திரு. எச்.எல். கோகலே மற்றும் நீதிபதி திரு.டி. முருகேசன் அமர்ந்த முதல் பெஞ்ச் சென்ற ஆகஸ்டு 26ல் வழங்கிய தீர்ப்பில் (ரிட் எண்.17277/2009) கீழ்க்கண்ட உத்தரவுகளை நீதிமன்றம் இட்டிருந்தது.

1. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது எத்தகைய அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏற்ப மனுதாரர்கள் முன் வைத்துள்ள மாற்றுப் பாதையை செயல்படுத்துவதற்கு திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.

2. தொடர்புடைய எல்லோரையும் கூட்டி மாற்றுப்பாதையின் அவசியம் குறித்து வற்புறுத்த வேண்டும்.

3. ஒரு சிலரே பிரச்சனைகளுக்கு காரணம் இதனால் பல அப்பாவி மக்கள் பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகின்றனர். குடிமக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வருவாய் மற்றும் காவல்துறையிடம் உள்ளதால் அசம்பாவிதங்களை எதிர்காலத்தில் தடுக்கக் கூடிய எந்த ஒரு ஆலோசனையையும் அவர்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

4. மாற்றுப்பாதை ஏற்கப்பட்டால் ஊர்வலத்தின் போது எந்த வகையிலும் பிரச்சனைக்கு காரணமாகிறவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக இப்பிரச்சனையை கவனித்து வருகின்ற வகையில் இது ஒரு வரவேற்கத்தக்கத் தீர்ப்பு என கருதுகிறோம். எனினும் விநாயகர் ஊர்வலம் நடத்துவோர் இதை ஏற்க மறுத்துள்ளதாகவும், முத்துப்பேட்டையில் பதட்டம் நிலவுவதாகவும் பத்திரிக்கைகளில் செய்தி வந்ததையொட்டி ஊர்வலத்தின் போது என்ன நடக்கிறது என்பதை அறிய கீழ்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1) பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை.

2) கோ. சுகுமாரன், மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்சேரி.

3) தய். கந்தசாமி, வழக்குரைஞர், திருத்துறைப்பூண்டி.

4) மு. சிவகுருநாதன், மனித உரிமை ஆர்வலர், திருவாரூர்.

5) ம. இளங்கோ, பெரியார் திராவிடர் கழகம், புதுச்சேரி.

இக்குழு நேற்று (02.09.2009) மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை முத்துப்பேட்டையில் தங்கி நிலைமைகளை நேரில் கண்டறிந்தது. முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகக் கட்டிடத்தில் மேல்மாடியில் நின்று ஊர்வலத்தை நேரில் பார்வையிட்டது.

எமது பார்வைகளும் முடிவுகளும்

1) நீதிமன்றம் ஆணையிட்டது போல மனுதாரர்கள் முன்வைத்த மாற்றுப்பாதையை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அமுல்படுத்தவில்லை. பிரச்சினைக்குரிய பேட்டை பெரிய பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியான பட்டுக்கோட்டை சாலை வழியாக ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டது. முஸ்லீம்கள் இதை ஏற்காத போதும் நிர்வாகம் ஊர்வலத்தை அந்த வழியே செல்ல அனுமதித்தது. இது நீதிமன்ற ஆணைக்கும் அதன் நோக்கத்திற்கும் புறம்பானது.

2) பேச்சுவார்த்தைகளின் போது ஒரு கட்டத்தில் இந்து அமைப்புகள் சில மாற்றுப்பாதையை ஏற்றுக் கொண்டதாகவும், ஊர்வலத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்த போதும் கூட இந்து முன்னணி தலைவர் இராம. கோபாலன், முத்துப்பேட்டைக்கு நேரில் வந்து ஊர்வலத்தை நடத்த வற்புறுத்தியுள்ளார். ஊர்வலத்தை அவரே தொடங்கியும் வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் இதுபோன்ற பல மதக்கலவரங்களுக்கு காரணமான இராம. கோபாலனை இத்தகைய

பதற்றம் மிகுந்த சூழலில் காவல்துறை முத்துப்பேட்டைக்குள் அனுமதித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரிசா கந்தமாலில் சென்ற ஆண்டு நடைபெற்ற மதக்கலவரங்களின் போது பதற்றத்தைக் காரணம் காட்டி மத்திய உள்துறை இணை அமைச்சரையே மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காததை இக்குழு நேரில் கண்டுள்ளது. திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் இச்செயல் நேற்றைய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

3) பா.ஜ.க.வின் மாவட்ட தலைவரான கருப்பு (எ) முருகானந்தம் முத்துப்பேட்டையில் நடைபெறும் வன்முறைகளுக்கு காரணமாக உள்ளார். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னெச்சரிக்கை அடிப்படையில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் ஊர்வலம் மாற்றுப்பாதையில் செல்வதற்கும் வழிவகுக்கப்பட்டிருக்கும். ‘இம்’ என்றால் அரசியல்வாதிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கூட ஏவத் தயங்காத அரசு நிர்வாகம் கருப்பு (எ) முருகானந்தத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், காவல்துறை வாகனத்தின் மீது ஏறி நின்று பேசுவதற்கு அனுமதித்ததை நாங்கள் நேரில் கண்டோம்.

4) ஊர்வலத்தை இருட்டுவதற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நிர்பந்திக்காமல் இரவு 8 மணி வரை முஸ்லீம் தெருக்கள் வழியே ஊர்வலம் செல்வதற்கு அனுமதி அளித்தது நிர்வாகத்தின் கவனக்குறைவை வெளிப்படுத்துகிறது. பழைய பேருந்து நிலையம் அருகில் மாலை 6.05 முதல் 6.55 வரை ஊர்வலத்தினர் குழுமியிருந்து ஆர்ப்பாட்டம் செய்ததும் அனுமதிக்கப்பட்டது. “கரைப்போம் கரைப்போம் பேட்டையில் தான் கரைப்போம்” என அவர்கள் முழக்கமிட்டுக் கொண்டு நின்றனர்.

5) பேட்டை வழியாகச் செல்வதை காவல்துறையினர் தடுத்த போதிலும் ரயில்வே கேட் அருகில் ஊர்வலத்தினர் முஸ்லீம்களுக்கு எதிரான சில வன்முறையில் இறங்கியதை காவல்துறை தடுக்கவில்லை. ஊர்வலத்தில் சுமார் 500 பேர் இருந்தனர். கலவரத் தடுப்பு பயிற்சி பெற்ற காவல்துறையினர் சுமார் 400 பேர் இருந்தனர். இருந்தும் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. செக்கடிக் குளம் அருகில் ரஹ்மத் பள்ளி எதிரில் உள்ள முகமது ஜவால் ஹுசைன் என்பவரது வீட்டு கண்ணாடி சன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் பள்ளி, விருந்தினர் இல்லம், ரஹ்மத் பெண்கள் பள்ளிவாசல், முஸ்லீம்களுக்கு சொந்தமான பெஸ்ட் வாட்டர் சர்வீஸ், அப்பார்ட்மெண்ட்கள் முதலியவையும் தாக்கப்பட்டுள்ளன. இவற்றை காவல்துறையால் தடுக்க இயலவில்லை. முஸ்லீம் தரப்பில் காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

6) விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் முத்துப்பேட்டையிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. (செப்டம்பர் 01, 02, 03) மாணவர்களுக்கு மூன்று நாள் பாடஇழப்பு ஏற்பட்டுள்ளது. முத்துப்பேட்டை நகரில் நேற்றும் முழுவதும் கடைகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதி போல் காட்சியளித்தது. சுமார் 50 இலட்சம் ரூபாய் வரை வணிகம் தடைப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக அப்பகுதி மக்கள் குறிப்பாக முஸ்லீம்கள் இதையொட்டி பெருத்த பீதிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர். நோன்பு நேரத்தில் அவர்கள் நிம்மதியாக தங்கள் மதக்கடமைகளை நிறைவேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க நிலை. இதற்கு அரசு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.

7) எனினும் 15 ஆண்டு காலமாக ஊர்வலம் நடந்து வந்த பிரச்சனைக்குரிய பேட்டை பகுதி வழியே முதல் முறையாக ஊர்வலம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பெரிய அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதையும் இக்குழு பாராட்டுகிறது.

8) முத்துப்பேட்டையில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனை தங்களுக்கு தொடர்பு இல்லாதது என்பது போல் ஒதுக்கியிருப்பது வருந்தத்தக்கது. இது மறைமுகமாக கருப்பு (எ) முருகானந்தம் போன்றவர்களின் வன்முறைக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது. அரசியல் கட்சியினர் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

திருவாரூர். 03.09.2009.

தொடர்புக்கு :

அ. மார்க்ஸ்,

3/5, முதல் குறுக்குத் தெரு,

சாஸ்திரி நகர்,

அடையாறு,

சென்னை - 600 020.

செல் : 9444120582

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தடா சட்டத்தில் கர்நாடகா போலீசால் கைது - உண்மை அறியும் குழு அறிக்கை!


தொடர்புக்கு: .மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையார், சென்னை-600 020. செல்: 9444120582, 9894054640.


அதிரடிப்படையால் கொல்லப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கடந்த 4 மாதங்களாக கர்நாடக மாநில மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும் நோக்கத்துடன் கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த 9 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் வருமாறு:


  1. .மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.

  2. மு.சிவகுருநாதன், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.

  3. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

  4. பேராசிரியர் சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), தமிழ்நாடு.

  5. ஜி.சி.ஜெகதீஷ், சோஷலிசத்திற்கான புதிய மாற்று, பெங்களூரூ.

  6. டாக்டர் லக்ஷ்மிநாராயணா, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), பெங்களுரூ.

  7. மரிதண்டியா () புத்தா, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), மைசூரூ.

  8. ஆர்.மனோகரன், சிக்ரம், கர்நாடகா.

  9. பிரசன்னா, மாவட்ட மனித உரிமை ஒருங்கிணைப்பாளர், மைசூரூ.


இக்குழு, நேற்று (22.4.2009) மாலை மைசூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை சந்தித்தது. மேட்டுரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சென்ற டிசம்பர் 25 நள்ளிரவில் கர்நாடக போலீஸ் அவரைக் கைது செய்துள்ளது. சாம்ராஜ் நகர் முதன்மை அமர்வு நீதிபதி அளித்துள்ள வாரண்ட் அடிப்படையில் அவரையும் மேலும் நால்வரையும் (சீனிவாசன், பொன்னுசாமி, பசுவா மற்றும் டைலர் மணி) போலீஸ் அடுத்தடுத்து கைது செய்தது.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், ஆயுத மற்றும் வெடிமருந்துச் சட்டம் மற்றும் தடா சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த 4 வழக்குகளும் வனத் துறை அதிகாரி சீனிவாசன் கொலை வழக்கு (1991), ஷகீல் அகமது கொலை வழக்கு (1992), போலீஸ் எஸ்.பி. கோபால் ஒசூர் மீது தாக்குதல் வழக்கு (1993), பாலாறு வெடிகுண்டு வழக்கு (1993) என அழைக்கப்படுகின்றன.

முத்துலட்சுமியுடன் பேசிய அடிப்படையில் இந்த கைதுகள் குறித்த எங்கள் பார்வைகள் வருமாறு:

  1. இந்த 4 வ்ழக்குகளிலும் தொடர்புடைய சம்பவங்கள் 1991-க்கும் 1993-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவ்வழக்குகளில் 8 பெண்கள் உள்ளிட்ட 126 பேர் கைது செய்யப்பட்டனர். தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட்ட இவ்வழக்குகளின் இறுதியில் 109 பேர் குற்றமற்றவர்கள் என 9 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டனர். வெறும் 8 பேர் மட்டுமெ தண்டிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை பின்னர் உச்சநீதிமன்றத்தில் மரண தணடனையாக மாற்றபட்டது. இந்த நால்வரும் இன்றளவும் சிறையில் வாடுகின்றனர். இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன.



  1. இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதே அன்று தேடப்பட்டுக் கொண்டிருந்த வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமியை பிடித்துச் சென்ற அதிரடிப்படையினர் அவரை 2 ஆண்டுக் காலம் தமது பண்ணாரி முகாமில் சட்டவிரோத காவலில் வைத்திருந்தனர். பின்னர் அவர் இம்முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும், அவர் கணவர் கொல்லபடும் வரை கடும் கண்காணிப்பின்கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். நீதிபதி சதாசிவா விசாரணை ஆணையத்தின் முன்னும் அவர் தனது பாதிப்புகளைச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை.



  1. கடந்த 18 ஆண்டுகளாக அவர் மீது வாரண்ட் ஒன்று நிலுவையில் இருப்பதாக அதிரடிப்படையினர் சொல்லி வந்த போதும், இந்த வழக்குகள் தொடங்கி முடியும் வரை அவரை இவற்றில் வழக்குகளில் தொடர்புபடுத்தி விசாரிக்கவில்லை. 18 ஆண்டுகள் ஆனபின் இப்போது திடீரென அவரும் மற்ற நால்வரும் தற்போது நடைமுறையில் இல்லாத தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  1. இவ்வழக்குகள் நான்கும் 2001-ம் ஆண்டிலேயே விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுவிட்டன. இவ்வழக்குகளில் முக்கிய குற்றவாளியான வீரப்பன் 2004-ம் ஆண்டில் கொல்லப்பட்டும் விட்டார். ஒரு வழக்கு இவ்வாறு தன் தர்க்கபூர்வமான முடிவை எட்டிய பின்னர் மீண்டும் அதை தோண்டியெடுத்து புதுப்பித்துள்ளதை திட்டமிட்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக எமது குழு கருதுகிறது.



  1. வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் அவரது மனைவியான முத்துலட்சுமி அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை ஒன்றுதிரட்டி அதிரடிப்படையால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராடியுள்ளார். ஆண்டு தோறும் அவர் கணவர் கொல்லபட்ட தினத்தில் நட்த்தப்பட்ட மாநாடுகள் குறைந்தபட்சம் மூன்று. மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பலரும் அதில் கலந்துக் கொண்டுள்ளனர்.இம்மாநாடுகளில் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.


) அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அத்துணை பேருக்கும் இழப்பீடு வ்ழங்குவது.

) மனித உரிமை மீறலுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளைத் தண்டிப்பது.



  1. நீதிபதி சதாசிவா ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்பு தேசிய மனித உரிமை ஆணையம் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட 83 பேருக்கு இழப்பீடு வழங்க ஆணையிட்டது. இன்றைய தேதியில் 80 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளும் இதற்கென 2.8 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன. இன்னும் மூவருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.



  1. இங்கொன்றை குறிப்பிட வேண்டியுள்ளது. பொறுப்பு மிக்க மனித உரிமை அமைப்புகளின் கணக்கீட்டின்படி கூட்டு அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 100; வன்புணர்ச்சி செய்யப்பட்ட பெண்கள் 60; முடமாக்கப்பட்டோர் 300. எனவே, இன்னும் பல பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.



  1. இந்நிலையில், முத்துலட்சுமி இவ்வாறு பதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுப்பியது முற்றிலும் நியாயமானதே. இது மிகவும் அடிப்படையான மனித உரிமைக் கோரிக்கையே.



  1. முத்துலட்சுமி மற்றும் நால்வரையும் இவ்வாறு சிறையில் அடைத்திருப்பதையும் வழக்கை விரைவாக நடத்தாமல் வேண்டுமென்றே தாமதிப்பதையும் இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பருவமடைந்த இரண்டு பெண்களுக்குத் தாயான இந்த ஏழை விதவைக்குப் பிணை அளிக்க்க் கூடாது என கர்நாடக போலீஸ் மறுப்புத் தெரிவிப்பதை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.



  1. மனித உரிமை அமைப்புகளாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் கடுமையாக கண்டிக்கபட்டு, இன்று நீக்கப்பட்டுள்ள கறுப்புச் சட்டமான தடாவை கர்நாடக அரசு ஒரு ஏழை அபலைக்கு எதிராக பயன்படுத்தி இருப்பதையும் இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.



  1. முத்துலட்சுமியும், மற்றவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென இக்குழு கோருகிறது. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.



  1. கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது நடந்த பேச்சுவார்த்தைகளில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க இரு மாநில அரசுகளும் ஒத்துக் கொண்டன. ஒவ்வொரு மாநில அரசும் இதற்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கின. இந்நிதி இதுவரையில் பயன்படுத்தப்படவில்லை. அதிரடிப்படையால் பாதிக்கபட்டுள்ள எஞ்சியுள்ள பலருக்கும் இறந்துப் போனவர்களின் வாரிசுகளுக்கும் இத்தொகை பிரித்தளிக்கப்பட வேண்டுமென இக்குழு கோருகிறது.



  1. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தயக்கம் காட்டும் இந்த அரசுகள் தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பாதிக்கப்பட்டவர்களால் குற்றம்சாட்டப்பட்ட பல போலீஸ் அத்காரிகளுக்கு பல கோடி ரூபாய் வீரப்பரிசுகளும், பதவி உயர்வுகளும் வழங்கியுள்ளதை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட அதிரடிப்படையினர் சட்டத்தின்முன் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். குற்றம் நிரூப்பிக்கப்படுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.



  1. வழக்கு விசாரணை வேகமாக நடத்தப்பட வேண்டும். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பும் இல்லாமல் படித்துக் கொண்டிருக்கும் இரு பெண்களை மனதில் கொண்டு முத்துலட்சுமியை உடனடியாக பிணையில் விடுவதற்கு போலீஸ் மறுப்பு தெரிவிக்க கூடாது என இக்குழு கோருகிறது. ஏற்கனவே தமிழக போலீஸ் தொடுத்துள்ள வழக்கில் கைது செய்யாமல், சம்மன் அளித்து அழைத்த போது ஆஜராகி வழக்கு விசாரணையில் முத்துலட்சுமி ஒத்துழைத்து உள்ளதைக் இக்குழு சுட்டிக்காட்டுகிறது.



மைசூரூ 23.04.2009.


செவ்வாய், மார்ச் 03, 2009

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் மீது போலீசு தாக்குதல் - உண்மை அறியும் குழு அறிக்கை!











சில ஆண்டுகட்கு முன்னர் இன்றைய முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என்றார். ஈரல் மட்டுமல்ல இதயமும் சேர்ந்து அழுகிவிட்டது என்று சொல்லத்தக்க அளவில் சமீப காலத்தில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது கல்லூரி நிர்வாகம் காவல்துறைக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றது விமர்சனத்திற்கு உள்ளானது. இன்று யாருடைய ஆணையும் இன்றி உள்ள நுழைந்து தலைமை நீதிபதி (பொறுப்பு) வேண்டிக்கொண்டும் வெளியேறாமல் இரக்கமற்ற கொடுந் தாக்குதல் ஒன்றை வரலாறு காணாத வகையில் வழக்குரைஞர்கள் மீது மேற்கொண்டுள்ளது. காவல்துறையினரே பொதுச் சொத்துக்களையும் வழக்குரைஞர்களின் உடமைகளையும் கொடூரமாக அழித்துள்ளனர். இந்திய அளவில் இன்று பரப்பரபாகியுள்ள இச்சம்பவம் குறித்த உண்மைகளை அறிய தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய ஒரு உண்மை அறியும் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்:

1. பேரா. என். பாபையா, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.

2. பேரா. ஜி.கே. இராமசாமி, மக்கள் ஜனநாயக கழகம் (PDF), கர்நாடகம்.

3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, மனித உரிமைக் கழகம் (HRF), ஆந்திரா.

4. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

5. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), தமிழ்நாடு.

6. முனைவர். ப. சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை.

7. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி.

8. திரு. அயன்புரம் இராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய இரயில்வே, சென்னை.

9. திரு.மு. சிவகுருநாதன், மனித உரிமைளுக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.

10. திரு. நடராசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை.


இக்குழு உறுப்பினர்கள் சென்ற பிப்ரவரி 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தையும் அழிக்கப்பட்டுள்ள பொது சொத்துக்களையும் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்களைச் சந்தித்தனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிகிச்சைக்குப் பின் வெளியே அனுப்பப்பட்டுள்ள வழக்குரைஞர்களையும் சந்தித்தனர். சென்னைஉயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் திரு. பால் கனகராஜ், முன்னாள் தலைவர் திரு. கருப்பன், சென்னை சட்டக் கழகத் தலைவர் திரு.டி.வி.கிருஷ்ணகுமார், நீதிமன்றப் பதிவாளர் (மேலாண்மை) திரு.விஜயன், பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோரையும் சந்தித்தனர். பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினரும் வழக்குரைஞருமான பதர் சயீத் அவர்களுடனும் உரையாடியுள்ளார். தலைமைப் பதிவாளர் திருமதி.மாலா பதிவாளர் (நிர்வாகம்) ஆகியோர் பார்க்க மறுத்துவிட்டனர். பதிவாளர் விஜயன் எங்களைச் சந்தித்த போதும் பிரச்சினை விசாரணையில் உள்ளது எனச் சொல்லி எந்தத் தகவலையும் அளிக்க மறுத்துவிட்டார். தாக்குதல் மற்றும் பொருள் அழிவு குறித்து புகார்கள் ஏதும் தரப்பட்டுள்ளதா என்பது போன்ற சாதாரணத் தகவல்களையும் கூட, பொது நல நோக்கில் ஆய்வுக்கு வந்துள்ள சிவில் சமூக உறுப்பினர்களுக்குத் தருவதற்கு விசாரணை எந்த வகையில் தடையாக உள்ளது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. அதேபோல் நகர காவல்துறை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணனை எமது குழு பிப்ரவரி 27 மாலை தொடர்பு கொண்டபோது, குழு உறுப்பினர்களின் பெயர்களை எல்லாம் விளக்கமாகக் கேட்டுக் கொண்ட அவர், அரசு பேச அனுமதி அளித்தால்தான் பேச முடியும் என்றார். அவர் கூறியபடி இரவு 8 மணிக்குத் தொடர்பு கொண்டபோது தொலைபேசியை எடுக்கவே மறுத்துவிட்டார்.

இக் குழு உறுப்பினர் அ.மார்க்ஸ் சென்ற பிப்ரவரி 26 அன்று மதுரையில் சில வழக்குரைஞர்களையும் மதுரை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் திரு.ஏ.கே.ராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினார். சுப்பிரமணிய சாமியைச் சந்திக்க நாங்கள் முயற்சித்தபோது அவர் டெல்-யில் உள்ளதாகப் பதிலளித்தார்.

பின்னணி:

ஈழத்தில் இன்று இனவாத இலங்கை அரசு மேற்கொண்டுள்ள போர், அதனால் தமிழ் மக்கள் பெரிய அளவில் அழிக்கப்படுதல், இந்திய அரசு அதற்கு இராணுவ ரீதியான உதவிகளைச் செய்தல் ஆகியவற்றை எதிர்த்து தமிழக வழக்குரைஞர்கள் பெரிய அளவில் கடந்த ஜனவரி, 29 முதல் வேலை நிறுத்தம் செய்து போராடி விடுகின்றனர். மனித உரிமை நோக்கிலும், மனிதாபிமான அடிப்படையிலும் தமிழகம் தழுவி நடைபெறுகிற இன்றைய போர் எதிர்ப்புப் போராட்டங்களில் வழக்குரைஞர்களும், மாணவர்களும் முன்னணியில் இருப்பது அரசுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்து வந்தது. கல்லூரி மற்றும் விடுதிகளை மூடி மாணவர் போராட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியது போல வழக்குரைஞர்கள் போராட்டத்தை அரசால் முடிவுக்குக் கொண்டுவர இயலவில்லை. இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்குவது என்கிற முடிவை அரசு மேற்கொண்டது.

அரசின் இந்நிலைப்பாட்டின் முதல் வெளிப்பாடாக சென்ற பிப்ரவரி 4 நிகழ்ச்சிகள் அமைந்தன. அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் கூட்டமைப்பு தமிழ்நாடு தழுவிய பந்த்தை அறிவித்திருந்தது. அன்று கடைகளை அடைக்க வற்புறுத்தியதாக மூன்று வழக்குரைஞர் குழுக்களைக் காவல்துறையினர் தனித்தனியே கைது செய்தனர். இரு குழுக்களை மாலையில் விடுதலை செய்த காவல்துறையினர் போராட்டத்தில் முன்னணியிலுள்ள இளம் வழக்குரைஞர்கள் அடங்கிய ஒரு குழுவை மட்டும் ‘ரிமாண்ட்’ செய்வதற்காக அன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். அதை அறிந்த பிற வழக்குரைஞர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் பிணை கோரவும் பெருந்திரளாக, முழக்கங்களுடன் அவர்கள் சென்ற போலீஸ் வேனைப் பின்தொடர்ந்தபோது எவ்விதத் தூண்டலும் இன்றி காவல்துறையினர் மேற்கொண்ட தடியடிப் பிரயோகத்தில் வழக்கறிஞர் புகழேந்தியின் தலை உடைந்தது. வேறு சில வழக்குரைஞர்களும் அடிபட்டனர். தலையில் 5 தையல்களுடன் புகழேந்தி சென்னை பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேர்ந்தது. ‘ரிமாண்ட்’ செய்ய வேண்டியவர்களை ராஜராத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்று இரவு வெகு நேரம் கழித்து நீதிபதி ஒருவரை அழைத்து வந்து ரிமாண்ட் செய்ய முயற்சித்துள்ளனர்.

தொடர்ந்து ஈழ ஆதரவுகுற்ற நடைமுறைச் சட்டத் திருத்த எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிருத்தி வழக்குரைஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டம் தீவிரமாக செல்வதையும், கொடும்பாவி எதிப்பு முதலான வடிவங்கள் எடுப்பதையும் அரசும் காவல்துறையும் ஆத்திரத்துடன் கவனித்து வந்தன. இங்கொன்றைக் குறிப்பிடுவது முக்கியம். வழக்குரைஞர் தொழி-ல் இன்று இளம் வழக்குரைஞர்களின் வீதம் அதிகம். தவிரவும் ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள் தொழில் சமூகத்தின் மேற்தட்டுகளி-ருந்து வந்தவர்களாலேயே நிரப்பப்பட்ட நிலை இன்று மாறி அடித்தளச் சமூகத்தினர் பெரிய அளவில் பங்கேற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மனித உரிமைகள் சார்ந்த இன்றைய பிரச்சினையில் போர் நிறுத்தம் கோரியும் இந்திய அரசு போருக்கு உதவி செய்வதை எதிர்த்தும் நடத்திய இப்போராட்டத்தில் இத்தகைய இளம் வழக்குரைஞர்கள் முன்னணியில் நிற்பது யாரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அரசும், காவல்துறையும், பொதுவான மத்தியதர வர்க்க மனப்பாங்கும் இதைப் புரிந்து கொள்ள மறுத்தன.

இந்நிலையில்தான் சென்ற 17ந் தேதி நடைபெற்ற ஒரு சிறு சம்வத்தை வழக்குரைஞர்களுக்கு எதிராகக் காவல்துறை பயன்படுத்தியது. வழக்கம்போல அன்றும் வேலை நிறுத்தத்தில் உள்ள வழக்குரைஞர்கள், வேலை நடைபெறக்கூடிய நீதிமன்றங்களுக்கு எதிரில் முழக்கங்கள் இட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகம் ஒன்றில் நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றம் கே.சந்துரு முன்னிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை எடுத்துக் கொள்வதற்கு எதிரான ‘ரிட் அப்பீல்’ வழக்கு ஒன்று விசாரிக்கப்பட இருந்தது. மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சாமி அங்கு வந்து வழக்குரைஞர்கள் அமரும் மேடையில் (Dias) அமர்ந்தார். அவருடன் அவரது வழக்குரைஞர் ராதா மோகனும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தில் மட்டுமின்றி இது போன்ற வழக்குகளில் இடையீடு செய்வதை வழக்கமாக கொண்ட அவரைக் கண்டதும் வழக்குரைஞர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.

அவர்களின் கோபத்தைத் தூண்டும் வண்ணம் அவர் தனது வழக்குரைஞரிடம் இவர்களைப் பற்றி இழிவாகப் பேசியும் உள்ளார். முழங்கங்கள் தீவிரமானபோது யாரோ சிலர் சாமி மீது முட்டைகளை வீசியுள்ளனர். நீதிபதி சந்துரு கண்டித்த பின் வழக்குரைஞர்கள் கலைந்துள்ளனர். சுப்பிரமணியசாமியும் புகர் ஏதும் தராமல் வீடு சென்றுள்ளார். எனினும் பத்திரிகைகளில் இது செய்தியாகியது. நீதிபதி சந்துரு, நடந்த நிகழ்ச்சி குறித்து தலைமை நீதிபதிக்கு (பொறுப்பு) அறிக்கை ஒன்று அளித்துள்ளார். எனினும் அதில் எந்த வழக்குரைஞர்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. நடந்த நிகழ்ச்சி வருந்தத்தக்கதுதான். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதுதான். எனினும் இந்தச் சிறிய நிகழ்வை அதற்குரிய சட்டப்படி சந்திக்காமல் இதை முன்னிட்டு வழக்குரைஞர்களை வழிக்குக் கொண்டுவர அரசும் காவல்துறையும் முடிவு செய்தது தொடர்ந்த நிகழ்ச்சிகள் மூலம் உறுதியாகிறது.

பாதிப்படைந்த நபர் எந்தப் புகாரும் அளிக்காதபோதும் வழக்குரைஞர்கள் ரஜினிகாந்த், விஜேந்திரன், கினி இமானுவேல், புகழேந்தி, ஜெய்குமார், மனோகர், சிவசங்கரன், வடிவாம்பாள், செங்கொடி, கயல் (எ) அங்கயற்கண்ணி, ரவிக்குமார், பார்த்தசாரதி மற்றும் 6 பேர்கள் மீது இ.பி.கோ 147, 451, 355, 353, 333, 506(II), 294(B), 153(A), 307 மற்றும் 3(1) TNPPD சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 18-ந் தேதி அன்று இவர்களில் கினி இமானுவேலைக் கைதும் செய்தனர். மற்றவர்களையும் கைது செய்வதற்குக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில் சென்ற 19 முதல் வேலைநிறுத்தத்தை முடிந்துக்கொண்டு நீதிமன்றங்களுக்குச் செல்வது என்கிற முடிவை வழக்குரைஞர்கள் எடுத்தனர். அன்று நீதிமன்றம் இயங்கியது. மேற்கண்ட 20 பேரையும் கைது செய்ய காவல்துறை மும்முரமாக உள்ளதை அறிந்த தொடர்புடைய வழக்குரைஞர்கள் அதற்குத் தயாராக வந்தனர். எனினும் 17-ந் தேதி நிகழ்வின்போது தம்மை இழிவு செய்யும் வகையில் பேசிய சுப்பிமணிசாமியை விட்டுவிட்டு தம்மீது மட்டுமே இத்தகைய மோசமான பிரிவுகளில் வழக்கு மேற்கொள்ளபட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு, மேற்படி வழக்கில் ஏ1 ஆக உள்ள ரஜினிகாந்த், சுப்பிரமணியசாமி மீது புகாரளிப்பது என முடிவு செய்து, முன்னாள் தலைவர் கருப்பன் உள்ளிட்ட சுமார் 200 வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள பி4 காவல் நிலையத்திற்குச் சென்றனர். கடும் விவாதத்திற்குப் பின்னர் சுப்பிரமணியசாமி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீங்கள் கேட்டபடி அறிக்கை பதிவு செய்தாகிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேனில் ஏறுங்கள் என காவல்துறையினர் கெடுபிடி செய்தனர்.

இதற்கிடையில் சுமார் 200 லத்தி ஏந்திய போலீசார் பி4 காவல்நிலையம் அருகே கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 20 பேரும் அந்த இடத்தில் இல்லை. ஒரு சில வழக்குரைஞர்கள் தமது சங்கக் கட்டிடத்திற்குச் சென்று 20 பேரில் கைதானவர் ஒருவர் தவிர மீதியுள்ளவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து முழக்கமிட்ட வண்ணம் கைதாகலாம் என்கிற முடிவுடன் சங்க அலுவலகத்திற்குச் சென்றனர்.

இந்நிலையில் உதவி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்பிரமணி ஆகியோர் அங்கிருந்த சுமார் 15 வழக்குரைஞர்களை “ரவுண்ட் அப்” செய்து வேனில் ஏற்றினார். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டு முன்னேறிவர காவல்துறையினரின் வரலாறு காணாத கொடுந்தாக்குதல் தொடங்கியது. அப்போது நேரம் சுமார் மாலை 3.30 மணி.

தாக்குதல்:

உயர்நீதி மன்றத்தின் வாயில்களை அடைத்த காவல்துறையினர் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர். மேலும் அதிக அளவில் தாக்குதல் படை (SAF) கொண்டு வந்து குவித்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வளாகத்திற்குள் நின்றிருந்த
வழக்குரைஞர்கள் மற்றும் எல்லோரது வாகனங்களும் மூர்க்கத்தனமாக தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையினர் தமது வேன்களில் கற்கள் கொண்டு வந்ததை நேரில் பார்த்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூவர் எங்களிடம் கூறினர். நகர சிவில் நீதிமன்றம், குடும்பநீதி மன்றம், ஆகிவற்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன.

காயமடைந்த வழக்குரைஞர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வளாகங்களுக்குள் ஒடி ஒளிந்து கொண்டனர். நடப்பதை அறிந்த தலைமை நீதிபதி (பொறுப்பு), காவல்துறைஆணையரைத் தொடர்புகொண்டு படைகளை வெளியே அனுப்புமாறு கேட்டுக்கொண்டும் பயனில்லை. 4மணி சுமாருக்கு நீதிபதி சுதாகர் வெளியே வந்து தாக்குதலை நிறுத்த முனைந்தார். பின் தலைமை நீதிபதியும் வெளிவந்தார். இதனால் சுமார் 15 நிமிடங்கள் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ரத்தம் ஒழுகும் சுமார் 10 வழக்குரைஞர்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டனர். நீதிபதிகள் திரும்பியவுடன் காவல்துறையின் வெறியாட்டம் மீண்டும் தொடங்கியது. இம்முறை சுமார் 1மணி நேரம் மாலை 5.30 வரை தாக்குதல் நடந்தது. 5.30 மணி சுமாருக்கு நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் உள்பட 5 நீதிபதிகள் வெளியே வந்தனர். சமாதானம் செய்வதும் தாக்குதலை நிறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். ஆனால் இம்முறை நீதிபதிகளையும் விட்டுவைக்க காவல் துறையினர் தயாராக இல்லை. அவர்களும் தாக்கப்பட்டனர். நீதிபதி ஆதித்தன் அவர்கள் லத்தியால் தாக்கப்பட்டார். தலையிலும் காயம் அடைந்தார். மற்ற நீதிபதிகளும் தாக்கப்பட்டனர்.
ஆதித்தன் அவர்களைத் தாக்கும் போது “அவர் நீதிபதி அவரை அடிக்காதீர்கள்” எனக் கூவி பாதுகாப்புக்கு வந்த இளம் வழக்குரைஞர்கள் ஏழு பேர் கடுமையாகத் தாக்கப்பட்டு, ஒரு சிலர் மண்டை உடைந்து அப்போலோ மருத்துவமனையில் இருந்ததை குழு உறுப்பினர்கள் கண்டனர். நீதிபதி என்ற போது, “எந்த தேவடியா மகனா இருந்த என்னடா” என்று அடித்ததை அவர்கள் குறிப்பிட்டனர். பெண் நீதிபதி ஒருவரை, “நீதிபதியா இவ, ஆயா மாதிரி இருக்கா” எனச் சொல்லி அடித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகங்களுக்குள் புகுந்து கண்ணாடிக் கதவுகள், கணினிகள், நூலகங்கள், வழக்குரைஞர் அறைகள், வழக்கு மன்றங்கள் அனைத்தும் தாக்கித் தகர்த்து நொறுக்கப்பட்டன. கண்ணில்பட்ட கருப்பு வெள்ளை சட்டை அணிந்த வழக்குரைஞர்கள் ஒவ்வொருவரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.
மாலை 6.30 மணி வாக்கில் எப்படியோ தப்பி வெளியே என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்தவர்கள் எல்லாம் அடித்து தாக்கப்பட்டனர். சாலையில் துரத்தித் துரத்தி வழக்குரைஞர்கள் அடிக்கப்பட்டனர். பெண் வழக்குரைஞர்களை “தேவடியாச் சிறுக்கிகளா” எனக் கத்தி தாக்கியதாக ஒரு பெண் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

சாலையில் தங்களை விரட்டி விரட்டி அடித்ததைச் சொல்லும் போது வழக்குரைஞர் சுதாவின் கண்கள் கலங்கின. கயல் என்னும் பெண் வழக்குரைஞர் கடும் காயம்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுள்ளார். வழக்குரைஞர் அலுவலகங்கள் அதிகம் உள்ள தம்பு செட்டித் தெருவிலும் புகுந்து தாக்கியுள்ளனர்.

வழக்குரைஞர்களுக்கு சீருடை தைக்கும் கடை, செராக்ஸ் செய்து கொடுக்கும் டால்பின் செராக்ஸ் முதலிய கடைகளும் கூட உடைக்கப்பட்டன. அங்கிருந்தவர்களும் தாக்கப்பட்டனர். இரவு 7.00 மணிவரை வெறியாட்டம் தொடர்ந்தது.

எந்த அளவுக்கு காவல் துறையினர் வெறியோடு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லாம். பெண் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது தவிர, நீதிபதிகளும் பெண்களும் தம் வாழ் நாளில் கேட்டிராத வசவுகளால் இழிவுசெய்யப்பட்டது தவிர, குடும்ப நீதிமன்றம், வழக்குரைஞர் ஒய்வு பகுதியில் உள்ள குழந்தை காப்பகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சட்டக் கழகம் மற்றும் வழக்குரைஞர் சங்க அலுவலகளிலுள்ள நூலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலை இனப்படுகொலைகளின் போது நூலகங்கள் எரியூட்டப்படுவதை நினைவுறுத்துகிறது.

சென்னை சட்டக் கழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சோனி தொலைக்காட்சி, இரு செராக்ஸ் எந்திரங்கள், நூலக அரங்கம், சலவைக்கல் மேஜைகள் ஆகியவை அழிக்கப்பட்டதோடு 60 வயதான அதன் மேலாளர் ராஜகுருவும் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். மூன்று ஊழியர்களும் கூட தாக்கப்பட்டுள்ளனர். வழக்குரைஞர்கள் தவிர நீதிமன்ற ஊழியர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். தமது அலுவலகத்தி-ருந்து சில ஆவணங்களைக் காவல்துறையினர் தூக்கிச் சென்றதாகவும் ஒரு பெண் ஊழியர் எங்களிடம் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். ‘தமிழ் ஓசை’யைச் சேர்ந்த கார்த்திக் பாபு, ‘மக்கள் தொலைக்காட்சி’ யைச் சேர்ந்த ஜோதிமணி, சேதுராமன் மற்றும் ‘நக்கீரன்’ இதழைச் சேர்ந்த ஒருவர், ‘தமிழ்ச்சுடர்’ புகைப்படகாரர் எனப் பலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் (கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்) அடித்து நொறுக்கி நாசமாக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் வழக்குரைஞர்கள், பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் உறைந்துள்ளது. பொருள் இழப்புகளை விட இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அச்சம் கவலைக்குரியதாக உள்ளது. பல ஊழியர்கள் பேச மறுக்கின்றனர். சுதாகர் என்னம் இளம் வழக்குரைஞர் மாடியிலிருந்து சன்ஷேட் ஒன்றில் குதித்து இரு கரங்களும் கூப்பி நிற்கும் காட்சி யாரையும் கலங்க அடிக்கும். கைது செய்யப்பட்டு 6 நாட்கள் வரை காவலில் இருந்து விடுதலையாகியுள்ள வழக்குரைஞர் கினி எங்ளிடம் பேசியபோது காவல்நிலையத்தில் “கோட்டா” வழக்குரைஞர்கள் எனப் போராடுகிறவர்களை இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றவர்கள் எனக் கேலி செய்ததைக் குறிப்பிட்டார். சுமார் 83 வழக்குரைஞர்கள் முதல் அரசு மருத்துவமனையிலும் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் மருத்துமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர சொந்தப் பொறுப்பில் தனியார் மருத்துவமனைகளில் தங்கிச் சிகிச்சை பெற்றவர்கள், வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம்.

ஊடகங்களில் ஏதோ வழக்குரைஞர்களும் காவல்துறையினரும் சம அளவில் ஒருவரை ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டதாகக் காட்டப்பட்டது. முதற் கட்டத்தில் வழக்குரைஞர்களும் கூட சிறிது நேரம் கல்வீசியிருக்கலாம். ஆனால், கொடுந்தாக்குதலுக்குப் பின் அவர்கள் எல்லோரும் தம்மைத் தற்காத்துக் கொள்வதிலும், ஓடி ஒளிந்து கொள்வதிலும், அச்சத்தில் திகைத்துத் தப்புவதிலும்தான் குறியாய் இருந்துள்ளனர். இடையில் பி4 காவல் நிலையம் எரிக்கப்பட்டது. மேல் தோற்றத்தில் இது வழக்குரைஞர்கள் செய்தது போலத் தோன்றினாலும் அப்போது அங்கிருந்த சூழல், காவல் நிலையத்திற்கு முன்னதாகப் பெரிய அளவில் போலீஸ் மற்றம் தாக்குதல் படை குவிக்கப்பட்டிருந்தது. எனவே வழக்குரைஞர்கள் இதைச் செய்திருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. தலைமை நீதிபதி (பொறுப்பு), நீதிபதி தனபாலன், நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தமது ஆணையில் பதிவு செய்துள்ளபடி சம்பவத்தின் போதே பெண் வழக்குரைஞர்கள் பலரும் இதை மறுத்துள்ளனர். காவல்துறையே நிலையத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என்கிற ஐயமும் இன்று முன்வைக்கப்படுகிறது. இது தனியே விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாகச் சில இளைஞர்களை அரசும் காவல்துறையும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அடையாளம் காட்டுவதை எமது குழு மிகக் கவலையுடன் நோக்குகிறது. மிகவும் அடிப்படையான மனிதாபிமான நோக்கிலிருந்து நடத்தப்படுகிற ஒரு போராட்டத்தில் முன்னணியாக இருந்தார்கள் என்கிற ஒரே நோக்கிற்காகவும், மனித உரிமைகளுக்காகப் போராடக்கூடிய சில வழக்குரைஞர் அமைப்புகளில் இருக்கிறார்கள் என்பதற்காகவும் பழைய வழக்குகளை எல்லாம் தேடிப்பிடித்து எடுத்து தாதாக்களைப் போல காவல் துறையினர் இவர்களைச் சித்திரிக்கின்றனர்.
காவல்துறையினர் சொல்வதை அப்படியே ஏற்று “Gang of 20” என்பது போன்ற மொழியில் ஒரு சில பத்திரிகைகள் எழுதுவதும், படங்களை வெளியிடுவதும் வருத்தத்தை அளிக்கின்றன. அடிப்படை பத்திரிக்கை தருமங்களுக்கு இது முரணானது என்பதை எமது குழு வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறது.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்:

1. சட்டத்தின் காவலாளர்களான, தமது உரிமைகளையும் சட்டங்களையும் நன்கறிந்த வழக்குரைஞர்களே இவ்வாறு சென்னை போன்ற ஒரு பெரு நகரில் வைத்துத் தாக்கப்படுவார்களேயானால், ஏழை, எளிய பாமர மக்களின் கதி என்ன என்கிற கவலை உருவாகிறது. ஜனநாயக அரசு ஒன்றில் காவல்துறை இப்படி மேலும் மேலும் அதிகாரம் பெறுவதும், அரசு மட்டுமின்றி ஏனைய அரசியற் கட்சிகளும் அதைக் கண்டு கொள்ளாததும் கவலையளிக்கிறது. மதுரையில் உயர் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கையில் துப்பாக்கியை நீட்டி வழக்குரைஞர்களை நோக்கி வரும் புகைப்படம் எல்லா இதழ்களிலும் வெளிவந்துள்ளது. காவல்துறையின் ஈரலும் இதயமும் அழுகியிருப்பதற்கு இது ஒரு சான்று.

2. அமைதியாகப் போராடிக் கொண்டுள்ள வழக்குரைஞர்களைக் கைது செய்வதற்கு பெருங் கலவரங்களை ஒடுக்குவதற்காகப் பயிற்சி பெற்ற தாக்குதல் படை (SAF), அதுவும் இந்த அளவில் ஏன் குவிக்கப்பட்டது? இந்தப் படைக் குவிப்பிற்கு உத்தரவிட்டது யார்? தாக்குதலுக்கு உத்தரவிட்டது யார்? நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் அரசு பதிலளிக்கவில்லை? நீதிமன்றமும் ஏன் இதைக் கண்டுக்கொள்ளவில்லை? வெறும் 147 காவல்துறையினரே அன்று குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 122 பேர் காயமடைந்துள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு அரசு தன் வழக்கறிஞர் மூலம் தகவல் அளிப்பது எத்தனை அபத்தமானது. வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய பொய்யுரை இது.

3. முட்டை வீசியதாக குற்றம் சாட்டி கடும் பிரிவுகளின் கீழ் வழக்குரைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள அரசு, சுப்பிரமணிய சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க இத்தனை அவசரம் ஏன் காட்டப்படவில்லை?

4. நேர்மையாளராகப் பெயர் பெற்றுள்ள நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதையும், அதற்கு வழக்குரைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளதையும், இக்குழு வரவேற்கிறது .
5. அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும், ஒரு சில காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலை போதாது. தாக்குதலுக்கு காரணமானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ள கீழ்கண்ட அதிகாரிகள்

1. கே. ராதாகிருஷ்ணன், காவல்துறை ஆணையர்,
2. டி. ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஓழுங்கு),
3. ஏ.கே. விஸ்வநாதன், கூடுதல் ஆணையர்,
4. இராமசுப்பிரமணி, இணை ஆணையர்,
5. சந்தீப் ராய் ராத்தோர், இணை ஆணையர்,
6. சாரங்கன், துணை ஆணையர்,
7. பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்,
8. பன்னீர்செல்வம், துணை ஆணையர்

ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.

5. வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலகர்கள் மத்தியில் உறைந்துள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தவிர இழப்புகள் ஈடு செய்யப்படுவது அவசியம். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த காவல்துறையினர் அனைவர் மீதும் தமிழ்நாடு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது நடவடிக்கை (TNPPD Act) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவேண்டும். சட்ட அமைச்சரும் முதலமைச்சரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஒரு சில இளம் வழக்குரைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாதாக்கள் போல சித்திரிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்த முடிவின் அடிப்படையில் செயல்பட்ட ஒரு சிலரை மட்டும் இப்படித் தனித்துப் பழிவாங்க அரசும், காவல்துறையும் முயற்சிக்கக்கூடாது.