திங்கள், பிப்ரவரி 16, 2026

திருவாரூர் மாவட்ட பண்பாட்டு நிலவியலின் தனித்துவமாக ‘ஏரோட்டம்’

   திருவாரூர் மாவட்ட பண்பாட்டு நிலவியலின் தனித்துவமாகஏரோட்டம்

    . ஜவகர்

 


            தமிழ் இலக்கியமரபுக்கு நெடுங்காலம் உண்டெனினும் அசலான நிலவியல் சார்ந்த பண்பாடு சார்ந்த மனித வாழ்வியல் மையத்திற்கு வருதல் என்பது இருபதாம் நூற்றாண்டின் நவீன இலக்கிய வடிவத்தில் என்று சொல்ல முடியும். மரபான புனைவெழுத்துமுறையின் வடிவ உள்ளடக்கங்களில் இத்தகு முறை சிறுபான்மை உண்டெனினும் இப்போக்கு மைய நீரோட்டத்திற்கு வராமல் போனதற்கு சமூக, அரசியல், சமய, பண்பாட்டு இறுக்கப் பின்னணிகளும் பழைய எடுத்துரைப்பு முறைகளும் காரணமாக இருக்கலாம். ஆனால், சுதந்திரமான உரைநடைவடிவப் புனைவெழுதுமுறை காலனிய நவீனமயமாக்கலின் கொடையாக அமைந்தது. உரைநடை எழுத்து, இதழியல் வளர்ச்சி, அச்சு ஊடகங்களின் வருகை, புதிய ஆங்கிலக் கல்வி, நவீன சமூக அரசியல் சட்டங்கள் முதலிய பல்வேறு போக்குகளினூடாக இந்திய, தமிழ்ச் சமூக மாற்றங்கள் நிகழ்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் ரொமாண்டிசிசத் தாக்கமும் 20ஆம் நூற்றாண்டின் புதுத்திறனாய்வின் தாக்கமும் தமிழில் பாரதி, பாரதிதாசன் என்றும் பின் பிச்சமூர்த்தி முதற்கொண்டும் பலரின் படைப்புகளைப் பார்க்க இயலும். .வே.சு. ஐயர், வேதநாயகம்பிள்ளை தொடங்கி புனைகதை வடிவம் வருவதையும் இதனூடாகப் பார்க்க இயலும். வரலாற்றுக் கதைகள், துப்பறியும் கதைகள், ஒழுக்கவியல் சார்ந்த கதைவடிவங்கள் என்கிற பேரிலான போக்குகள் ஒருபுறம் அமைந்தாலும் இன்னொருபுறம் சமூகவியல் சார்ந்த போக்குகள் என்ற நிலையும் தமிழில் ஏற்பட்டது என்றே கூறவியலும். மார்க்சியம், பெரியாரியம் முதலியவற்றின் தாக்கங்கள் இவற்றிற்கு அடிப்படையாக அமைந்தன. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் என சமூகவியல் சார்ந்த போக்குகளும் வளர்ந்தன


 

            தமிழ் இலக்கிய வெளி என்பதை நெடுங்காலமுதல் தொகுத்துப் பார்க்கையில் நவீன காலத்தில்தான் மனித வாழ்வோடு நெருக்கமாக உறவாடக்கூடியதாக மாறியிருக்கிறது.  சங்கக் கவிதைகள் மக்கள் வாழ்வியலைக் கூறியது என்பது ஒரு பகுதி உண்மையாக இருந்தாலும் மற்றொரு பகுதியினை விவாதத்தின் மூலம் அணுக வேண்டிய சூழல் இருக்கிறது. சமய இலக்கியங்கள் பின்னர் வந்தாலும்  அது மக்களுடன் நேரடி வாழ்வுடன் உறவாடியதா என்பதை விவாதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மண்ணோடு, மக்களோடு, வாழ்க்கையோடு உறவாடக்கூடிய எழுத்து முறை என்பது காலனிய ஆட்சியில் இருந்துதான் உருவாகிறது. அதன் அடித்தளமாக  காலனிய ஆட்சியின் நவீன சமத்துவச் சட்டங்களும் கல்வி முதலியனவும் இருந்தன.  காலனிய ஆட்சியில் இருந்த ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள், வட்டார மொழிகளையும், பேச்சு மரபுகளையும்‌ ஆவணப்படுத்தியுள்ளனர்.  எனவே வட்டார எழுத்து மரபு, புனைகதை வடிவம் என்பது மண் சார்ந்து மார்க்சியத்தின் ஊடாக இங்கே வந்தாலும் ‌அதன்‌முன் அடிப்படையாகக் காலனிய ஆட்சி ஆய்வாளர்கள் அதற்கான செயல்களைச் செய்துள்ளனர் என்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.‌

       கலை கலைக்காகவே, கலை வாழ்க்கைக்காகவே என்ற போக்கும் தமிழை ஆட்கொள்ளாமலில்லை. .நா.சு., தி.ஜானகிராமன், மௌனி, .சா.ரா. என்று ஒரு எழுத்து மரபு தஞ்சை எழுத்தாக முன்வைக்கப்படுகின்றபோது உழைக்கும் மக்களின் வாழ்வியல் அவர்கள் மொழியில் எழுதப்பட்டதா என்ற கேள்வியும் இன்னொருபுறம் எழுந்தது.    இவ்விடத்தில் சோலை சுந்தரபெருமாளின் தஞ்சைச் சிறுகதைகள் என்ற தொகுப்பு முக்கியமானதாக அமைகிறது.  தஞ்சைச் சிறுகதைகள் எவ்வாறு இருக்கின்றன, எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அத்தொகுப்பின்மூலம் உணர்த்தியிருக்கிறார்.  அதன்பின்னர், கீழைத் தஞ்சைமேலைத் தஞ்சை என்ற‌ எழுத்துகளின் போக்கு இணைந்து வண்டல் எழுத்து என்ற அடையாளமாக உருவாகியது. பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், கறுப்பின அரசியல்  என்று 80, 90 களுக்குப் பிறகு தமிழில் தீவிரமானதன் தொடர்ச்சியாக  இவ்வாறான போக்குகள் தீவிரமடைந்தன.  மக்களின் வாழ்வை, மண்ணை நோக்கி அவர்களின் மொழியில் இலக்கியம் உறவாடத் தொடங்கியது. இவ்வாறான நிலையில் இருந்து ஏரோட்டம் தொகுப்பு முக்கியத்துவமுடையதாகிறது.

      இத்தொகுப்பில் கலைஞர் மு.கருணாநிதி முதலாக தீசன் ஈறாக திருவாரூர் மாவட்ட எழுத்தாளர்களின் 34 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளின் கதைகள் இதில் உள்ளன. இத்தொகுப்பை நண்பர் சிவகுருநாதன் சிறப்பான முறையில் வரலாற்றுப் பொறுப்புணர்வுடன் கொண்டுவந்துள்ளார். ஆய்வு நோக்கில் சிறந்த முன்னுரை ஒன்றையும் எழுதியுள்ளார். இந்நூலை நன்னூல் பதிப்பகம் நண்பர் அப்துல்காதர் வெளியிட்டுள்ளார்.

            இத்தொகுப்பில் உள்ள கதைகள், திருவாரூர் மாவட்ட நிலவியல் சார் பண்பாடுகளையும் அவற்றின் மாற்றங்களையும் கூறுவதோடு பொதுநீரோட்ட, பெருங்கதையாடல்களின் கூறுகளுடன் உறவாடக்கூடியவையாகவும் இருக்கின்றன.

இத்தொகுப்பு குறியீட்டுத் தன்மையில் வேளாண்மையை முதன்மைப்படுத்தியும், நிலவியல் சார்ந்த, சமூகவியல் சார்ந்த, பாலினம் மற்றும் உளவியல் சார்ந்த சிக்கல்களைக் கூறும் விதமாக அமைந்துள்ளது என்பதைக் காண முடிகிறது. அதிலும் நிலவியல் சார்ந்த கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் கதை எழுதும் போது, வட்டார மொழியில் மட்டும் அமையாமல் அந்த நிலத்தையும், காலத்தையும், வாழ்க்கை முறையையும், வாழ்க்கை சிக்கல்களையும் சேர்த்து எழுதும் போது அசலான தன்மை உடையதாக அமைகிறது. இதற்கு முந்தைய தஞ்சை, திருவாரூர்ப் பகுதி எழுத்து என்பது அவ்வாறு அமையாமல் மேல்தளத்திலேயே மிதந்துகொண்டிருந்தது என்று கூறவியலும். இப்போக்கு தமிழின் நெடுங்காலமரபாகத் தொடர்ந்ததையும் கவனிக்க வேண்டும். திணையிலக்கியம் என்று நாம் முதன்மைப்படுத்தும் சங்கப்பாடல்கள்- மருதத் திணைக் கவிதைகள் இந்த மண்ணுடன் நெருக்கமாக அமையவில்லை என்று கூற இயலும். ஏனென்றால் அதில் அந்த நிலத்தைச் சார்ந்த உழைக்கும் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லை. மேல்நிலையாக்க கவிதை எழுதுமுறையியலில் அமைந்தவை, அதன்பிறகான போக்குகளிலும் இந்நிலையைக் காணவியலும். ஆனால், இக்கதைகளின் வெளி நிலத்தை எழுதுவதும் அதனுடன் பண்பாட்டு வாழ்வியலையும், வாழ்வியல் சிக்கல்களை எழுதுவதும்  என்ற நிலையில் தனித்துவமாக அமைகின்றன.

நிலவுடைமைக் கட்டுமானம், அதனுடன் சேர்ந்து செயல்படக்கூடிய வர்க்க, சாதிய கட்டமைப்பின் இணைவு அரசியலின்  போக்கிற்கு உதாரணமாக சோலை சுந்தரபெருமாளின் படைப்புகளைக் காணவியலும். பாரம்பரிய வேளாண்மைமுறை மாறி நவீன வேளாண்மைமுறை வருகின்றபோது ஏற்படக்கூடிய மாற்றங்கள்,  பசுமைப்புரட்சியினால் பூச்சிக்கொல்லி மருந்துகளின் வருகை, பாரம்பரிய விதைகள் அழிந்து வேளாண் அலுவலகத்தில் சென்று விதைகளைப் பெறுவது என்ற நிலை, இவ்வாறான அடிப்படைச் சிக்கல்களை முதன்மைப்படுத்தி இயற்கை, சமூக, பண்பாட்டு மாற்றங்களை முதன்மைப்படுத்தி  சோலை சுந்தரபெருமாள், இரா. காமராசு, சிவகுமார் முத்தய்யா முதலியோரின் கதைகள் அமைகின்றன.  இதைத்தான் நிலவியல் சார்ந்த பண்பாட்டு மாற்றங்கள் என்று கூற வேண்டும். 90களில் வந்த தாராளமயவதாத்தோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றைய வாழ்க்கை முறை தாராளமயத்தால், உலகமயத்தால் கட்டமைக்கப்பட்டது. இந்தத் திருவாரூர் மாவட்ட வண்டல் கதைகள், பழைய நிலவுடைமை மற்றும் சாதிய- வர்ணாசிரம அமைப்பின் தொடர்ச்சி, பசுமைப்புரட்சியின் விளைவு,  நகர்ப்புற வளர்ச்சி, புதிய தொழில் நிறுவனங்களின் வருகை, திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போவது, வேளாண்மை பாதிப்பு போன்ற பல்வேறு நிலைமைகளினூடாகச் சமூக மாற்றத்தையும் வாழ்வின் தவிப்பையும் ஒருங்கே எடுத்துரைக்கின்றன, இதன்மூலமாகப் பண்பாட்டு  உளவியல் சிக்கல்களை முதன்மைப் படுத்துகின்றன. இன்னொரு நிலையில் கூறுவதெனில், நிலவுடைமை அமைப்பு சோழர்காலம் தொடங்கி இன்று வரை அதன் எச்சங்களைக் கொண்டும் அதனால் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சிக்கல்கள் தீராத நிலையை உடையதாக ஒருபுறம் அமைந்தாலும் நவீனகால மாற்றங்கள் இவற்றை ஊடறுத்துச் செல்வதைக் கதைகள் முதன்மைப் படுத்துகின்றன.

கலைஞர்.மு.கருணாநிதியின்அணில்குஞ்சுபாபர் மசூதிப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்ட கதை. மைய நீரோட்டத்தின் மதவாத இருமை அரசியலை உள்ளார்ந்த நகையின் அழகியலோடு எடுத்துரைத்து, புறவடிவங்களின் ஆரவாரங்களை விமர்சிக்கிறது. தேன்மொழியின்கூனல்பிறைபெண்ணின் இருப்பு உளவியல் சிக்கலுக்குள்ளாகி,  குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குரியதாக மாறும் நிலையை முதன்மைப்படுத்துகிறது. ஆணாதிக்க அல்லது தந்தை வழிச் சமூகத்தில் பெண்ணிருப்பின் இடத்தை விசாரணைக்குட்படுத்துவதாக இக்கதை அமைகிறது. நவீனக் கல்வி, புதிய வேலை வாய்ப்புகள், பொருளாதார மாற்றங்கள் உருவாகும்போது பழைய சாதியக் கட்டுமானங்கள் நிலவுடைமைத் தன்மையுடன் தொடர்வதையும் அதன் சிக்கலை முதன்மைப்படுத்தும் நிலையில் அஜய்சுந்தரின்அதேசுமைகதை அமைகிறது. நிலவுடைமையையும் சாதியக் கட்டுமானத்தையும் ஒருங்கே எதிர்த்துப் போரிடும் நிலையிலான இவ்வாறான தன்மையில் சில கதைகள் அமைகின்றன. பள்ளிகளில் குழந்தைகளை ஆசிரியர்கள் வன்மத்தோடு நடத்துவதை விமர்சித்து குழந்தை உளவியலில் இருந்து அணுகவேண்டிய தேவையை வெளிப்படுத்துவதாக தீசனின்வலிக்குதுகதை அமைகிறது.

இச்சிறுகதைத் தொகுப்பில் மிக முக்கியமானதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் அமைந்த கதையென்றுஅம்மாவின் மன்னிப்பைக்குறிப்பிட முடியும். இதன் ஆசிரியர், திருவாரூரைச் சார்ந்தவரான திருநங்கை நேஹா. இவர், நாடகக் கலைஞராகவும் திரைப்பட நடிகராகவும் கேரள அரசு விருதினைப் பெற்றவராகவும் குயர் பப்ளிகேசனை நடத்துபவராகவும் இருக்கிறார்.  இவரின் கதை,  இத்தொகுப்பிற்கு அணி சேர்ப்பதாகவும் உள்ளடங்கிய தன்மையை (Inclusive), சமத்துவத்தைக் காட்டுவதாகவும்  இருக்கிறது. 2000 ஆண்டு கால தமிழ் எழுத்து வெளியில் ஆண்கள்தான் பெண்ணின் நிலையையும் எழுதிவருகிறார்கள். அதைக் கடந்து பெண்கள் எழுதவருவது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கியே.  பெண் எழுத்தும் பல போராட்டங்களைக் கடந்து இன்று நிலைபேறாக்கம் அடைந்துள்ளது. ஆனால் திருநங்கைகளின் எழுத்து இப்போதுதான் தமிழில் எழுதப்படுகிறது. அந்தவகையில், ரேவதியின் வெள்ளை மொழி, பிரியாபாபுவின் மூன்றாம் பாலினம் போன்ற  படைப்புகள் மிக முக்கியமானதாக அமைகின்றன. தமிழ் நவீன இலக்கியவெளியின் மீதான விசாரிப்பை இவை நிகழ்த்துகின்றன. அந்த வகையில் தமிழ்ச்  சிறுகதையின் உள்ளடக்கத்திற்கும் அதன் எடுத்துரைப்பு முறைக்கும் சவாலாக நேஹாவின்அம்மாவின் மன்னிப்புஅமைந்துள்ளது.   அக்கதையில் பாலா என்ற கதாபாத்திரம், வீட்டில் ஐந்தாவது ஆண் குழந்தையாக வளர்கிறான். பெண் உடைகளைப் போட்டுக்கொள்ளும் விருப்பம் உடையவராக இருக்கிறார். இதனால் வீட்டில் பிரச்சனை வருகிறது. கதையின் தொடக்கத்தில்பாலா -அவன்என்ற போக்கில் இருந்து கதையின் இடையில்பாலா- அவளாகமாறுகிறாள், தேவியாகிறாள். தமிழ்ச் சிறுகதையின் எடுத்துரைப்பு முறையில், கதைமொழியில், கதையின் அகவியல் மாற்றத்தில்  புரட்சியாக இது இருக்கிறது. பின்நவீன எழுத்துக்கள் இத்தகைய மாற்றங்களை முன்வைத்திருக்கின்றன, நிகழ்த்திப் பார்த்திருக்கின்றன என்றபோதும், வாழ்வின் நேரடியான  தளத்திலிருந்து துன்பியலின் சாட்சியாக அமைந்த இம்மாற்றம்  தமிழ் நவீன எழுத்தை, உயிர்ப்புடன்கூடிய புதிய பரிமாணத்தை, புதிய மொழிதலை உடையதாக மாற்றுகிறது. தமிழ்ச் சிறுகதை வெளியில் இதுபோன்ற புனைகதை வடிவம் இப்போதுதான் அசலான தன்மையுடன் வருகிறது என்று உறுதியாகக் கூற இயலும். திருநங்கையாக மாறும்நிலையில், ஆணாதிக்கக் குடும்பவெளி, சமூகவெளியின் நிலைகளை எடுத்துரைக்கிறது இக்கதை. தமிழின் இந்தப் புதிய போக்கை, திருவாரூர் மாவட்டச் சிறுகதைகள் கொண்டுள்ளன என்பதற்குச் சாட்சியாக இக்கதை அமைகிறது. தொகுப்பின் சமத்துவ அறவியல் நோக்கை இது காட்டுகிறது.  


 

        வேளாண் சமுகங்கள், உழைக்கும் மக்கள், தலித்துக்கள், மேய்ச்சல் சமூகம், புதிய பொருளாதார- நகர்சார் மக்கள் என்று பல்வேறு சமுக மக்களின் வாழ்வியல் சிக்கல்களும் போராட்டங்களும் எதிர்ப்புகளும் என்று கதைகள் பயணிக்கின்றன. இயற்கையும் ஆறும் பச்சைவெளிகளும் அவற்றினூடாக மக்களின் வாழ்க்கைப்பாடுகளும் எனக் கலந்து பல்வேறு தன்மைகளை உடையதாக அமைந்துள்ளன. சமுகத்தில் பல்வேறு போக்குகளை காலங்காலமாக மையச் சொல்லாடல்கள் வடிவமைத்துக் கொண்டு வருகின்றன. அவற்றின் இயங்கியல் அதிகாரப் படிநிலைகளையும் முரண்களையும் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது. இந்நிலையில், ஒடுக்கப்படும் புறந்தள்ளப்படும் வெளி மௌனமாக இனிக் கடந்துபோக இயலாது என்ற நிலையிலும் கதைகள் அமைகின்றன.  பழைய அதிகாரம் புதிய போக்குகள் வருகின்றபோது அவற்றை எதிர்கொள்ளமுடியாமல் திணறுகின்றபோது  புதிய வெளிச்சங்கள் மனித வாழ்வில் விழுவதைக் கதைகள் சொல்கின்றன. எனவே ஏரோட்டம் என்ற திருவாரூர் மாவட்டச் சிறுகதைத் தொகுப்பு வரலாற்றை  மௌனமாகக் கடந்து செல்லாமல்  மௌனத்தை உடைப்பனவாக, ஏற்கனவே சொல்லப்பட்ட புனைகதைகளை மறுத்து, நிலவியல் பண்பாட்டு வெளிகளைச் சார்ந்த எழுத்தாக, சமத்துவத் தன்மையை நோக்கியதாக அமைகிறது. தமிழ்ச் சிறுகதைவெளியில் திருவாரூர் மாவட்டத்தின் தனித்துவமும் பொதுநீரோட்டத்தோடு இணையும் விலகலின் தன்மைகளையும் அறியும் சாட்சியாக இச்சிறுகதைகள் உள்ளன.  திருவாரூர் மாவட்ட நிலவியல், நீரியல் சார்ந்த பண்பாடும் அவற்றுடன் இணைந்த வாழ்வியலும் இத்தொகுப்பில் உயிர்ப்பாய் உள்ளன. தமிழ்ப் புனைகதை வெளியின் பல்வேறு போக்குகளுடன் உறவாடியும் விலகி தனித்தன்மையுடன் பயணிப்பதையும்  அவற்றின் சமூக, அரசியல், பண்பாட்டியல் பின்னணிகளையும் இத்தொகுப்பை முன்வைத்து விரிவாக ஆராய வேண்டும். நிலவியல் சார் பண்பாட்டுப் பன்மைத்துவவெளியின் தனித்தன்மையை முன்னிறுத்தும் சொல்லாடல்களை வடிவமைப்பதில் இத்தொகுப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

o    க. ஜவகர் - திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழக பேராசிரியர்

நூல் விவரங்கள்:

ஏரோட்டம்  (திருவாரூர் மாவட்டச் சிறுகதைகள் அன்றும்இன்றும்)

தொகுப்பு: மு.சிவகுருநாதன்

வெளியீடு: நன்னூல் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி

விலை: ரூ. 500

தொடர்புக்கு: 9943624956

நன்றி: காக்கைச் சிறகினிலே… ஜனவரி 20026 (15 ஆம் ஆண்டு தமிழ் திருநாள் சிறப்பிதழ்)

மற்றும் பேரா.க.ஜவகர்

வெள்ளி, பிப்ரவரி 13, 2026

ஆரவல்லி மலைக்கு ஆபத்து!

 

ஆரவல்லி மலைக்கு ஆபத்து!

மு.சிவகுருநாதன்


 

           இந்தியாவின் மிகப்பழமையான மலைத்தொடர் ஆரவல்லி மலைத்தொடர் (Aravalli Range) ஆகும். இம்மலைத் தொடர் வடமேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அரியானா, டெல்லி, வரை நீண்டுள்ளது. அபு மலையிலுள்ள இதன் மிக உயரமான சிகரம் குரு சிகார் (Guru Shikhar) ஆகும். இதன் உயரம் 1723 மீட்டர். இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் ஒப்பிடுகையில் இம்மலையின் உயரம் குறைவு. இமயமலைத்தொடரிலுள்ள உலகத்தில் மிக உயரமான சிகரம் 8848 மீ.; இந்தியாவின் உயரமான சிகரம் காட்வின் ஆஸ்டின் (K2)   8611 மீ. மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரிலுள்ள ஆனைமுடி 2635 மீ., தொட்டபெட்டா 2637 மீ. கிழக்குத் தொடர்ச்சி மலையிலுள்ள உயரமான சிகரம் சோலைக்கரடு (1620 மீ) ஆகும்.  உயரம் குறைவாக உள்ளதால் இவற்றைக் குன்றுகள் என்றும் சொல்வதுண்டு. இவற்றைவிட உயரம் குறைவாகவும் அகலமானப் பரப்பையும் கொண்டவை பீடபூமி என்றும் அழைக்கப்படுகின்றன. உலகின் கூரை என்றழைக்கப்படும் திபெத் பீடபூமி விதிவிலக்காக 4500 மீ. உயரமுடையது.

          180-320 கோடி ஆண்டுகள் பழமையான இம்மலைத்தொடர் மடிப்பு மலை (Fold Mountains) வகையைச் சார்ந்தது. உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் இது ஒன்றாகும். இமயமலை இளம் மடிப்பு வகையைச் சேர்ந்தது. பழங்காலத்தில் இமயமலையை விட மிகவும் உயரமாக இருந்த ஆரவல்லி மலைத்தொடர், புயல், மழை, காற்று, மண்ணரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் உயரம் குறைந்துவிட்டது. இருப்பினும் பல கோடி ஆண்டுகளாக நடக்கும் நிலத் தட்டுக்களின் (tectonic plates) நகர்வு, அழுத்தம் ஆகியவற்றையும் கடந்து, பல புவியியல் செயல்பாடுகளையும் தாங்கி ஆரவல்லி மலையும் தென்னாப்பிரிக்காவிலுள்ள பார்பர்டன் மலையும் இயற்கையின் அதிசயங்களாகத் திகழ்கின்றன.

           உயரம் குறைவாக இருப்பதால் ஒன்றும் குறைவில்லை. இதனால் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு கிடைக்கும் நன்மைகள் பல. மிகவும் பழமையான ஆரவல்லி மலைத்தொடரில் மண்டியுள்ள புதர்க்காடுகளால் ஆண்டுக்கு, இப்பகுதியில் 50 முதல் 70 செ.மீ. வரை மழை கிடைக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனம் மேலும் விரிவாகி கிழக்கே தில்லி வரை பரவுவதைத் தடுக்கிறது. இக்குன்று இல்லையென்றால் தார்ப்பாலைவனம் கங்கைச் சமவெளி வரை நீளும் அபாயம் இருக்கிறது. இதனால் மணற்புயல்களும் தடுக்கப்படுகின்றன. ஏற்கனவே காற்று மாசால் அவதியுறும் தில்லி ஆரவல்லி மலை அழிக்கப்பட்டால் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும். எனவே இமயமலையைப் போல இப்பகுதிக்கு ஓர் இயற்கை அரணாக விளங்குகிறது. பாலைவனத்தின் மழைக்காலக் காற்றை இந்தியாவிற்குள் கொண்டு வந்து மழைப் பொழிய வைத்து, சபர்மதி, லூனி, சம்பல், பனாஸ் போன்ற பல ஆறுகளுக்கு நீராதாரமாக உள்ளது. பாறையிடுக்குகளின் வழியே மழைநீர் உட்புகுந்து நிலத்தடி நீரை செறிவூட்டுகிறது. இப்பகுதி 22 காட்டுயிர்க் காப்பகங்களையும், மூன்று புலிகள் வாழிடங்களையும் உள்ளடக்கிய பகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சமணப் பள்ளிகளும் இந்துக்கோயில்களும் நிறைந்த பகுதி என்பதைக்கூட இவர்கள் காண மறுக்கின்றனர். உயரத்தை வைத்து இவற்றை மதிப்பீடு செய்வது மடமை. எனவே சதுப்புநிலம், கடற்கரை, சமவெளி, பீடபூமி, குன்று, மலை என எதுவாகினும் அந்த இயற்கைத் தோற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய மனித சமுதாயத்தின் கடமையாகும். 

         மணற்கல், சுண்ணாம்புக்கல், பளிங்குக்கல், கிரானைட் ஆகியவையும், ஈயம், துத்தநாகம், தாமிரம், தங்கம், டங்ஸ்டன் போன்ற கனிமங்கள் நிறைந்த பகுதியாதலால் சுரங்கப் பணிகளாலும் நகரமய ரியல் எஸ்டேட் தொழிலாலும் பெருமளவு சூழலியல் பாதிப்புக்கு ஆட்பட்டுள்ளது. இங்கு சட்டத்திற்குப் புறம்பான சுரங்கப் பணிகளைத் தடுத்து, மலைத்தொரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை சூழலியர்களால் பல்லாண்டான முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது.

      ஆரவல்லி மலைத்தொடர் சுரங்கங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து உச்ச நீதிமன்றம், அதன் பாதுகாப்பிற்காக உயர் அதிகாரக் குழுவை அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதற்கென ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழு வழங்கிய வரையறைகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதுவே பிரச்சினைக்கு ஆதாரமாக உள்ளது. 

           100 மீ. (328 அடி) அல்லது அதற்கு அதிகமான உயரம் கொண்ட குன்றுகள் மட்டுமே ஆரவல்லி மலைகளாக கொள்ளப்படும் என்றும், 500 மீட்டர் இடைவெளிக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட மலைகள் இருந்தால் மட்டுமே அது மலைத் தொடராக கருதப்படும் என்றும் ஒன்றிய அரசு நிபுணர் குழு அளித்த அறிகையின் வரையறையை ஏற்று நவம்பர் 20 இல் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

            இந்திய வன ஆய்வு நிறுவனத்தின் (FSI - Forest Survey of India) புள்ளிவிவரப்படி, ராஜஸ்தானில் உள்ள 12,081 ஆரவல்லி மலைக்குன்றுகளில் 1,048 (8.7%) மட்டுமே 100 மீட்டர் மற்றும் அதற்கும் அதிக உயரம் கொண்டவை என்பதால் எஞ்சியவற்றை சுரங்க மாஃபியாக்களிடம் விட ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் மேற்கண்ட வரையறையைப் பூர்த்தி செய்யாத 91.3% ஆரவல்லி மலைகள் சட்டப்படியான மலைகள்இல்லை என்பதால், அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியின் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், பல்லுயிர்த்தன்மை போன்றவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  இந்த எதிர்ப்பை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனது முந்தைய உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. ஒன்றிய அரசுக் குழுவின் அறிக்கையில் குறைபாடுகளைக் கண்டறியவும், அறிக்கையை மறுபரிசீலனை செய்யவும் மேலும் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது. ஆரவல்லி மலைத்தொடரின் வரையறைகள், அனைத்துவகை மலைகள் மற்றும் குன்றுகளின் விரிவான அறிவியல் மற்றும் புவியியல் மதிப்பீடுகளைத் துல்லியமான அளவீடு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்மூலம் சூழலியல் ஆர்வலர்களுக்கு தற்காலிக நிம்மதி உண்டாகியிருக்கிறது.

        சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விரிவான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் மூலம் இதன் பாதிப்புகளைப் பட்டியலிட்டுள்ளார். பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் தொடர்ந்த மக்கள் இயக்கங்களினால் மட்டுமே இப்பிரச்சினையை தீர்க்க முடியும்.

         ஆரவல்லி மலைத்தொடரில் அழிக்கப்பட்ட காடுகளில் 81% ராஜஸ்தானையும், 15.8% குஜராத்தையும், 1.7% அரியானாவையும், 1.5% தில்லியையும் சேர்ந்தவை என ஒன்றிய அரசு ஒத்துக்கொள்கிறது. மறுபுறம் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், “ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் 90% பகுதி என்றும் மொத்தம் உள்ள 1.44 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் 0.19% பகுதியில் மட்டுமே சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இப்புதிய வரையறை மலைத்தொடருக்கு வலுவான பாதுகாப்பை வழங்குகிறது என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். ஒன்றிய அரசின் இரட்டை வேட நாடகத்திற்கு மேலும் ஒரு உதாரணத்தைக் காணலாம்.        

           ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு "தாயின் பெயரில் ஒரு மரத்தை நடுவோம்" என்ற பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வழக்கம்போல தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை தாயுடன் இணைந்து மரக்கன்று நட்டு, அதை ஒளிப்படமெடுத்து, இணையத்தில் பதிவேற்றி, சான்றிதழ்களை பெறும் சடங்குகளை வெற்றிகரமாக செய்து முடித்தது. ஒருவரே எத்தனை படங்களை வேண்டுமானாலும் பதிவேற்றலாம் என்று சொல்லி சாதனை இலக்கை எட்டியது. ஆண்களுடன் சேர்ந்து படத்தை பதிவேற்ற முடியாமல், வீட்டில் பெண்கள் இல்லாத குழந்தைகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

           மேலும் தில்லி அரசின் மின்சாரப் பேருந்து சேவைகளையும் தொடங்கி வைத்து, தில்லி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் முழங்கினார். இதனைத் தொடர்ந்து, ‘ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டம்தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2007 இல் ஆப்பிரிக்காவில் செனகல் (மேற்கு) முதல் ஜிபூட்டி (கிழக்கு) தொடங்கப்பட்ட ஆப்பிரிக்காவின் 'பெரிய பசுமைச் சுவர்' திட்டத்தை முன்னோடியாகக் கொண்டது. போர்பந்தரிலிருந்து பானிபட் வரை நீளும் இந்தப் பசுமைப் பட்டைத் திட்டம், மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் 29 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இயல் (பூர்வீக) தாவரக் காடுகளை வளர்த்து பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் முயற்சியாகச் சொல்லப்படுகிறது. இதன்முலம் ஆரவல்லி மலையை மீட்டெடுத்து மேற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பாலைவனங்களில் இருந்து வரும் காற்று மாசைத் தடுக்கும் என்றும் முழங்கினர்.

          சொல்வது ஒன்று, செய்வது வேறு என்பதுதான் இவர்களுடைய நிலைப்பாடாகும். கார்ப்பரேட் நலன்களுக்கு மத்தியில் இவர்களிடம் சுற்றுச்சூழல் அக்கறைகளுக்கு இடமில்லை. எனவே மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயற்கையைப் பாதுகாக்கவும் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. 10 மீ ஆழம் இருந்தால்தான் அது ஆறு; 100 மீ ஆழம் இருந்தால்தான் அது கடல்; 5 அடி உயரம் இருந்தால்தான் மனிதன் என்றுகூட விரைவில் வரையறைகள் உருவாக்கப்படலாம். எதற்கும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நமக்கும் சூழலுக்கும் நல்லது!

நன்றி: பொம்மி’ – சிறுவர் மாத இதழ் பிப்ரவரி 2026