செவ்வாய், மே 04, 2021

பாடநூல்களைக் கண்டுகொள்ளாத தன்மை அறிவுலக வீழ்ச்சி

 

பாடநூல்களைக் கண்டுகொள்ளாத தன்மை அறிவுலக வீழ்ச்சி

மு.சிவகுருநாதன்

 

(பேசும் புதிய சக்தி மே 2021 இதழ் வாசகர் குரல் பகுதியில் வெளியான எனது ‘கல்வி அபத்தங்கள்’ நூல் குறித்த  சிறு விளக்கம்.)

      ஏப்ரல் 2021 ‘பேசும் புதிய சக்தி’ இதழில் எனது ‘கல்வி அபத்தங்கள்’ நூல் அறிமுகம் வெளியிட்டமைக்கு மகிழ்ச்சியும் நன்றிகளும்.  

    “2011 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர்க்கல்வி முறையில் அறிமுகமான பாடநூல்களைக் குறித்து இந்நூல் கருத்துத் தெரிவிக்கவில்லை”, என்பதன் தொனி வேறு பொருளைத் தருவதாகக் கருதுகிறேன். அது தொடர்பான சிறு விளக்கம்.

    சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் பிழைகளற்றவை, உன்னதனமானவை என்ற ஒரு கருத்தும் இங்குண்டு. அவற்றிலும்  பல்வேறுப் பிழைகளும் குளறுபடிகளும் இருந்தன என்பதே உண்மை. இவற்றை எனது முந்தைய நூலான ‘கல்விக் குழப்பங்கள்’ (வெளியீடு: பாரதி புத்தகாலயம் – புக் ஃபார் சில்ரன், மார்ச் 2017) சுட்டிக் காட்டியது. ஒரு வகையில் இதன் தொடர்ச்சியே இந்தக் ‘கல்வி அபத்தங்கள்’ என்ற நூலாகும்.

     சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. மேலும் அது விமர்சிக்கக்கூடாத ஒன்றுமல்ல. அவற்றிற்கு மாற்றாக த.உதயச்சந்திரன் அவர்களது பொறுப்பில்  மிகுந்த ஆரவாரத்துடனும் போலிப் பெருமிதங்களுடனும் அறிமுகமாகி தற்போது நடைமுறையிலிருக்கும் பாடநூல்களை விமர்சிக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.     

     தற்போது அறிமுகமாகியுள்ள பாடநூல்களில் உள்ள சில நல்ல அம்சங்களுக்காக அவற்றைப் புகழ்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சில ஊடகங்கள் செயல்பட்டன. குறிப்பாக ‘இந்து தமிழ் தென் திசை’ போன்றவை குறைகளை எடுத்துக்காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து புகழ்பாடுவதை மட்டுமே விரும்பின. இம்மாதிரியானச் செயல்பாடுகளால் வருங்கால சமுதாயத்திற்கு நல்ல நூல்கள் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகிறது.

     எவற்றையும் உன்னதப்படுத்துவது அறிவைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு சமம். கல்வியில் இப்போக்கு மிக மோசமானது. தமிழ் அறிவுலகம் இதை வெறுமனே வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

      ஏப்ரல் 10, 2021 அன்று மாநிலத் தகவல் ஆணையம் 2011-2020 காலகட்டத்தில் பொறுப்பிலிருந்த ஆசிரியர் தேர்வு வாரியச் செயலாளர்கள் ஒன்பது பேரைக் கட்டாய ஓய்விற்குப் பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு அமைப்புகளின் அதிகார மமதையும் குறைபாட்டுடன் தயாரிக்கப்படும் இத்தகையப் பாடநூல்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது.

      பள்ளிக்கல்விப் பாடநூல்களைக் கொண்டுதான் போட்டித் தேர்வுகளுக்கான வினாக்கள் தயாரிக்கப்படுகின்றன. தவறான வினாக்கள், விடைக் குறிப்புகள், அவற்றிற்குரிய மதிப்பெண்கள் வழங்க மறுப்பு, வெளிப்படைத் தன்மையின்மை, உரிய விளக்கமளிக்காத அதிகாரத்துவ ஆணவப் போக்கு எனப் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. பல வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. தவறான வினாவிற்கு மதிப்பெண் வழங்கவும், பாடநூல் பிழைகளைத் திருத்தவும் நீதிமன்றங்களை நாடவேண்டிய அவலம் கொடுமையானது.

     இந்தத் தேர்வு வாரிய அதிகாரிகளைப் போன்றே, பாடநூல் தயாரிப்பிற்குப் பொறுப்பான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் (SCERT) சேர்ந்தவர்களும் பாடநூல் தயாரிப்பிலும் அதன் குறைகளைக் களைவதிலும் கவனம் செலுத்தாமல் அதிகார உணர்வுடன்  செயல்படுகின்றனர். இதனால் பாடநூல் குளறுபடிகளும் அவற்றில் வெளிப்படும் வெறுப்பரசியலும் வருங்கால சமூகத்தைப் பாழடிப்பதோடு போட்டித்தேர்வு எழுதும் இன்றைய இளைஞர்களும் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.  இதைக் கண்டுகொள்ளாத தன்மையை அறிவுலக வீழ்ச்சியாகவே உணர வேண்டியிருக்கிறது.

நன்றி: பேசும் புதிய சக்தி – இதழ் மே 2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக