வியாழன், மே 06, 2021

பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் போன்றவற்றை தமிழ்த்தேசியர்கள் எதிரியாகக் கட்டமைப்பது ஏன்?

 பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் போன்றவற்றை தமிழ்த்தேசியர்கள் எதிரியாகக் கட்டமைப்பது ஏன்?

 மு.சிவகுருநாதன்



       தோழர் த.ரெ.தமிழ்மணி ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் (ஏஜிகே) அவர்களது சாதி மறுப்புச் சிந்தனைகளை 'சாதி ஒழிய சாதி' என்னும் குறுநூலாகப்  பதிப்பித்துள்ளார். நல்ல முயற்சிகள், தொடரட்டும், வாழ்த்துகள். இக்குறுநூலின் பதிப்புரையில் அவர் கீழ்க்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 

         "தோழர் மு.சிவகுருநாதன் அவர்களால் வெளியிடப்பெற்ற 'ஏஜிகே எனும் போராளி' (2020) என்னும் தொகுப்பு நூலில் "அவரது பெயரிலுள்ள கிரந்த எழுத்தை உச்சரிக்க விரும்பாதவர்கள் அவரது இக்கருத்துகளை எவ்வளவு தூரம் முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயம் இருக்கிறது" (முன்னுரை) எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு இவ்விடத்தில் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

       ஒரு போராளி தம் வாழ்நாளின் கடைசியில் என்னவாக இருக்கிறார் என்பதைக் கொண்டே அவரைப் பற்றிய முடிவுக்கு நாம் வரவேண்டும். திராவிடர் கழகம், பொதுவுடமைக் கட்சி என்ற நிலை கடந்து இறுதியில் தமிழர் தன்மானப் பேரவை என்ற தமிழ்த்தேசிய அமைப்பைத் தொடங்கினார். அந்த வகையில் ஐயா தம் பெயரை அகோக என்றும் அ.கோ.கசுத்தூரிரெங்கன் என்றும் தமிழர் தன்மானப் பேரவையிலும், பேரவை பங்கு வகித்த தமிழ்த் தேசிய முன்னணியிலும் பயன்படுத்தினார். 'மடலுரையாடல்' நூலில்கூட அகோக (ஏஜிகே) (2008) என்றே இருப்பதைக் காணலாம். தமிழ்த்தேசிய நோக்கிலும், இந்திய அரசின் கிரந்தத் திணிப்புக்கு எதிராகவும் அவர் தம் பெயரில் கிரந்தத்தைத் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது". (பக்.08, சாதி ஒழிய சாதி)

     ‘ஏஜிகே எனும் போராளி’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சி.அறிவுறுவோன் ‘அ.கோ.கத்தூரிரங்கன்’ என்றும் த.ரெ.தமிழ்மணி ‘அ.கோ.கசுத்தூரிரெங்கன்’ என்றும் பயன்படுத்தி இருப்பார்கள். சி.அறிவுறுவோன் ஏஜிகேயின் கருத்தியல் அடிப்படைகளை முற்றாக மறுத்து பெரியாரியம், மார்க்சியம் ஆகியவற்றுக்கு எதிர்நிலையில் ஏஜிகேவை நிறுத்தியிருப்பார். குறிப்பாக அதன் மீதான விமர்சனமாகவே கிரந்தம் இங்கு சுட்டப்பட்டது. இந்த எதிர்வினையிலிருந்து சி.அறிவுறுவோன் கருத்தில் தோழர் தமிழ்மணி முற்றிலும் உடன்பாடு கொள்வதாகவே கருத வேண்டியுள்ளது. எனது கருத்துகளின் முன்-பின் பகுதிகளை மறைத்துவிட்டு, கிரந்தச் சிக்கலை மட்டும் முன்னிலைப்படுத்துவதும் இதை உறுதி செய்வதாக உள்ளது. அந்த முன்-பின் பகுதிகள் கீழே தரப்படுகிறது.

    தமிழ்த் தேசியத்திற்கும் பெரியாரியத்திற்கும் தொடர்பு கிடையாது. எனவே பொதுவுடமையோடு தமிழ்த் தேசியத்தை ஏஜிகே இணைத்தது சரிதான். இதன் மூலம் அவரது காத்திரமான பங்கையும் (தமிழ்த் தேசியம்) காத்திரமற்ற தன்மையையும் (பெரியாரியம்) பிரித்தறிய முடியும், என்கிறார்  தோழர் சி.அறிவுறுவோன்.

    தமிழ்த் தேசியத்துடன் பெரியாரியம், மார்க்சியம் இரண்டிற்கும் ஒட்டோ, உறவோ இருக்க இயலாது என்பதே தமிழ்த் தேசியர்கள் பலரது நிலையாக உள்ளது. இவற்றை இணைக்க இயலும் என்று ஏஜிகே சொல்கிறார்; முயன்றும் பார்த்திருக்கிறார். அவரது பெயரிலுள்ள கிரந்த எழுத்தை உச்சரிக்க விரும்பாதவர்கள் அவரது இக்கருத்துகளை எவ்வளவு தூரம் முன்னெடுப்பார்கள் என்பதில் அய்யம் இருக்கிறது. தமிழ்த் தேசியம் மறைமலையடிகள் வழியில் தனித்தமிழ் இயக்கமாகவோ அல்லது ம.பொ.சி. வழியிலோ பயணிக்குமென்றால் அது பெரியாரியத்தையும் மார்க்சியத்தையும் எந்தளவிற்கு உள்வாங்கும் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலாது”. (பக்.10, எனது முன்னுரை – ஏஜிகே எனும் போராளி) 

   இதற்கு ஏஜிகேவே நேரடியாகப் பதில் சொல்லியிருக்கிறார்.

     “பெரியாரீயம் ஒரு பூர்ஷ்வா சித்தாந்தம், அதற்கும் மார்க்சீயத்திற்கும் சம்மந்தமில்லை, அது வர்க்க போராட்டத்திற்கு எதிரானது. அதன் கடவுள் மறுப்பும் பார்ப்பன எதிர்ப்பும் புரட்சிக்கு எதிரானது என மார்க்ஸீய வியாப்பாரிகளான பல சில சிவப்புகளும், மார்க்ஸீயம் வேறு, பெரியாரீயம் வேறு, இந்தியாவில் மார்க்ஸீயம் எடுபடாது. அது அந்நிய நாட்டு சித்தாந்தம், உலக சித்தாந்தம் பெரியாரீயம் தான். அதனை இந்தியா பூராவும் உலக முழுவதும் எடுத்துச் செல்வதே இப்போதைய உடனடிப் பணி எனப் பெரியார் நாமாவளிகளான பல கருப்புகளும் தான் மக்களைக் குழப்புகிறார்கள்”. (பக்.47, மடலுரையாடல்)

     மேலும் சி.அறிவுறுவோன் “இனிச் சாதி ஒழிப்பில் பெரியாரியத்தையும் (அம்பேத்காரியத்தையும் கூட) சுரண்டல் ஒழிப்பில் பொதுவுடைமை இயக்கத்தையும் இணைத்துச் செயல்படுவது என்பது என்னைப் பொறுத்தவரை சரியாகப் படவில்லை”. (பக்.76, ஏஜிகே எனும் போராளி) என பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் என மூன்றையும் நிராகரிக்கிறார். அதற்கு ஏஜிகேவை துணை கொள்கிறார். இது எப்படிச் சரியாகும்? தோழர் சி.அறிவுறுவோன் இன்றைய பெரும்பாலான தமிழ்த் தேசியர்களின் நிலைப்பாட்டையே பிரதிபளிக்கிறார்.

     முன்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் செயல்பட்ட தோழர் பெ.மணியரசன் தமிழ்த் தேசியத்திற்கு வந்தபோது தனது அமைப்பின் பெயரை ‘தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி (ததேபொக) என்று வைத்திருந்தார். பிற்காலத்தில் இப்பெயரிலுள்ள பொதுவுடைமை மற்றும் மார்க்சியக் கருத்தியல் மீது கொண்ட காழ்ப்பால் அமைப்பின் பெயரைத் ‘தமிழ்த் தேசியப் பேரியக்கம்’ என்று மாற்றிக்கொண்டார். இவர் பெரியாரை முற்றாக மறுப்பதும் குறிப்பிடத்தக்கது. அறிவுறுவோன் இவரது கருத்தியலையே அப்படியே ஏற்கிறார். தமிழ்த் தேசிய முன்னணியின் தோல்விகளுக்கு இத்தகைய கருத்தியல் முரண்பாடுகளும் குழுவாதமும் காரணமாக அமைந்தன. தியாகு போன்றோர் மார்க்சியத் தமிழ்த்தேசியர்களாக இருக்கின்றனர். பலர் தமிழ்த் தேசிய முகமூடியுடன் சாதிவெறியர்களாக வலம் வருகிறார்கள்.

      ஏஜிகே “திராவிடர் கழகம், பொதுவுடமைக் கட்சி என்ற நிலை கடந்தோ” அல்லது அவைகளை மறுத்தோ தமிழ்த் தேசியக் கருத்தியலுக்கு வரவில்லை. இரண்டு கருத்தியல்களை உள்வாங்கி அதன் ஒருங்கிணைப்புடன் தமிழ்த்தேசியத்தைக் கட்ட முனைந்தவராகவே நாங்கள் அடையாளம் காண்கிறோம். மாறாக பெ.மணியரசன் போன்றவர்கள்   இவ்விரண்டு கருத்தியல்களை முற்றாக மறுப்பவர்கள். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வேறுபட்ட புள்ளிகளைக் கொண்டே நாம் ஏஜிகேவை நேர்மறையாக அணுக வேண்டியுள்ளது.

       2000 இல் ஏஜிகே தமிழ்த் தேசியத்திற்கு வந்தது உண்மைதான். அது எத்தகையது என்பதே நமக்கு முதன்மையானது. பெரியாரியத்துடன் இணைந்த மார்க்சியத்தையே செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியம் என்று அறிமுகம் செய்தார். இங்குள்ள இடதுசாரிகள், கி.வீரமணி போன்ற பெரியாரியர்களுடன் அவருக்கு முரண்பாடு இருந்தது. அவர்கள் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஆனால் அவை கருத்தியல் சார்ந்ததாக இல்லை. ‘தமிழர் தன்மானப் பேரவை’ மற்றும் ‘தன்மானம்’ இதழ்ப் பெயர்கள் நமக்கு உணர்த்துவது பெரியாரின் சுயமரியாதைக் கருத்தியலே. இது ஒரு வகையில் பெரியாரின், சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியே. மார்க்சிய அடிப்படையில் பெரியாரியக் கருத்துகளை சற்று உயர்வாகத் தூக்கிப் பிடித்தார்.

    இன்று பெரும்பாலும் தமிழ்த்தேசியம் சாதித் தேசியமாகத் தேங்கிப்போயுள்ளது. தலித்கள் உள்பட யாவர் மீதும் தெலுங்கன், வடுகன் என்று முத்திரையிடுவதும் சாதியம், தீண்டாமை, வன்கொடுமைகள் எதையும் கண்டுகொள்ளாமல் ஈழத்தமிழர் ஆதரவு என்ற ‘தொலைதூரத் தேசிய’மாகவும் மாறிப்போயுள்ளது. இது அவர்களுக்கு வருவாய் ஈட்டும் நல்வாய்ப்பாகவும் அமைகிறது.

        2009 இறுதிக்கட்ட ஈழப்போருக்குப் பின்னும் இந்நிலை தொடர்கிறது. பக்கத்தில் நடக்கும் சாதி ஆணவக் கொலைகள், வன்கொடுமைகள், தேநீர்க்கடைத் தீண்டாமை, தனிச் சுடுகாடு போன்றவற்றைவிட ஈழ ஆதரவும் ஜல்லிக்கட்டும் அவர்களுக்கு இலகுவான இலக்காக (soft target) அமைகிறது. சாதியம் நிரம்பி வழியும் ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என்று கொண்டாடுவோர் எப்படி சாதியை ஒழிக்கமுடியும் என்பது கேள்விக்குறி.

     ‘தை எழுச்சி’ என்றும் ‘மெரினாப் புரட்சி’ என்றெல்லாம் வெகுவாகச் சிலாகிக்கப்படும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பெருந்திரள் மக்கள் திரண்டது வரவேற்கத்தக்கதுதான். இருப்பினும் கூடங்குளம், மீத்தேன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை, தலித்கள் மீதான கொடுமைகள் போன்றவற்றில் பெருந்திரள் மக்கள் திரளாமல் தடுத்தது எது என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஈழ ஆதரவு நிலைப்பாட்டைப்போல மொழி, பண்பாடு என்ற பெயரில் கூடுவது சாதி ரீதியாக இருக்கும் சமூகங்களுக்கு மிக எளிதான ஒன்றாக உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.   

       கிரந்த எதிர்ப்பும் தவிர்ப்பும் அவ்வாறானதே. இன்று இது பிரச்சினையே அல்ல. காலப்போக்கில் இச்சொற்கள் மறைந்து தமிழ்ச்சொற்கள் இயல்பாக உருவாகும். அதற்கான அடிப்படைகள் இங்குண்டு. இதைக்காட்டிலும் களைய வேண்டிய பிரச்சினைகள் பல இங்கிருக்கின்றன. அவற்றை விட்டுவிட்டு செத்த பாம்பை அடிக்கும் வேலையை தமிழ்த் தேசியர்கள் எப்போதும் செய்ய நினைப்பதும் ஒரு விளம்பர உத்தி மற்றும் எளிய இலக்கு சார்ந்த நோக்கமாகவே இருக்கிறது.

     நடுத்தர பூர்ஷ்வா வர்க்கம் சற்று அதிகமான நிலையில் தமிழ் எழுத்துகளில் பெயரிடுதல் என்பதே இல்லாமற்போகும் அவலம் ஏற்படலாம். விசிக தலைவர் திருமாவளவன் தனித்தமிழ் பெயர் மாற்றத்தை முன்பு இயக்கமாக முன்னெடுத்தார். தமிழில் பெயர் மாற்றி வைத்துக் கொண்டால் சாதி இழிவும் இன இழிவும் நீங்கி விடுமா என்ன? குடியரசுத்தலைவரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும் கருப்பான திராவிடர்களை தருண் விஜய்கள் சகித்துக் கொள்வதும் தொடரத்தானே செய்யும்?

     இங்கு என்னுடைய வாழ்பனுபவம் ஒன்று: குழந்தைகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள்? என்று தமிழ்த் தேசிய நண்பர் ஒருவர் வினவினார். மூத்த பெண் கவிநிலா; இளையவள் கயல்நிலா என்றேன். கயல்நிலா அழகான தமிழ்ப்பெயர், கவிநிலாவை ‘பாநிலா’ என்றுதான் வைத்திருக்க வேண்டும், ‘கவி’ என்பது தமிழல்ல, என்று பரிந்துரை செய்தார். லேசான புன்னகை புரிந்தேன். இன்னொரு சராசரி சாதகத் தமிழன் இதே கேள்வியைக் கேட்டு எனது பதிலைக்கூட எதிர்பார்க்காமல் ராசி, எண் கணிதப்படிதானே வைத்துள்ளீர்கள்? என்று அப்பாவியாகக் கேட்டார், ஆமென்றேன். இல்லாவிட்டால் அவர் வருத்தப்படுவார் போலிருந்தது.  இவையிரண்டிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

     ஏஜிகே 1932 இல் பிறந்தவர். அவருடைய எழுத்துகளில் பல இடங்களில் இவை இயல்பாக வந்துபோகின்றன. இவற்றைக் குறையாகக் காண முடியாது. பெயரிலுள்ள கிரந்த எழுத்தை நீக்குவது மட்டும் தீர்வாகுமா? ஏஜிகே என்ற ஆளுமையே ஒரு மிகக்குறுகிய வட்டார அளவில் சுருக்கப்பட்டதை நாமறிவோம். அ.கோ.க. என்பதும் கூட அவரைப் பரவலாக சென்றடையக்கூடிய வாய்ப்பைத் தடுக்கும்.

     ‘மடலுரையாடல்’ நூலில் பெயர்களைத் தவிர்த்து பல்வேறு சொற்கள் கிரந்த எழுத்துகளுடன் இருப்பதைக் காணலாம். பெயரை மட்டும் மாற்றி எழுதிவிட்டால் போதும் என நினைப்பது தமிழ்த் தேசியத்தில் கருத்தியல் போதாமை மற்றும் தெளிவின்மையை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

  சில எடுத்துக்காட்டுகள்: எஜமானம், ஜீவனம், ஜீவிதம், ஜீவியம், ஊர்ஜிதம், பெரியாரிஸ்ட், மார்க்ஸீயம், ஜனநாயகம், அஸ்திவாரம், ரோஷம், ஜீரணம்,  ஜாதி, ஒரிஜினல், நிஜம், லஜ்ஜை, இஷ்டம், சாஸ்திரம், அனுஸ்டானம், ஜாதகம், தோஷம், திவஷம், வருஷாப்பியம், கர்ணபூஷணம், பரஸ்பரம், பொக்கிஷம், அராஜகம், துஷ்பிரயோகம், வெகுஜனம் இன்னும் பல.    

     அண்மையில் காலமான தோழர் வே.ஆனைமுத்து (1925-2021) பெரியாரியம், மார்க்சியத்துடன் அம்பேத்கரியத்தை இணைத்தவர். இவரது இயக்கத்தின் பெயர் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியாகும். ஏஜிகே, வே.ஆனைமுத்து போன்றோரைத்தான் பின் – பெரியாரியராக (Post–Periyarist) அணுகமுடியும்; ஆசிரியர் கி.வீரமணியை அல்ல. கருத்தியல்கள் தேங்கிய குட்டையாக இருக்க முடியாது. அது ஓடும் நதியைப் போன்றது. அது தன்னையும் மாற்றிக்கொண்டு தான் சார்ந்தவற்றையும் மாற்றும் பண்பு கொண்டது. இத்தகையப் புரிதல், தெளிவு ஏற்படும்போது நமது பயணம் முன்னோக்கியதாக அமையும். ஏஜிகேவின் பெரியாரிஸ்ட் வரையறைகள் இதைத்தான் சொல்கின்றன.  

      தமிழ்த்தேசியர்கள் குறித்த எனது நிலைப்பாடாக அந்நூலின் இடம் பெற்றுள்ள எனது கட்டுரையின் சில பகுதிகளைத் தருகிறேன்.

      “இறுதியாக, 2000 இல் உருவான புதிய சூழலுக்கேற்ப ‘தமிழ் தேசிய’ அரசியலுக்கு வந்தடைகிறார். ‘தமிழர் தன்மானப் பேரவை’ எனும் அமைப்பைக் கட்டுகிறார். ‘இணைமிகு தோழா!’ என்கிற விளி அவரது தோழமை உணர்வை மட்டுமல்லாமல் கருத்தியல் தெளிவு, அமைப்பாக்கம் போன்றவற்றை நமக்குச் சுட்டி நிற்கிறது.

    மார்க்சிய, லெனினிய, மாவோயிய, பெரியாரிய இயக்கங்களின் உடைவுகளுக்குப் பஞ்சமில்லை. இதற்குக் கருத்தியல் முரண்பாட்டைவிட தனிநபர் அல்லது குழுவாதம், செயல்பாடுகள், புரிதல்கள் ஆகியவற்றை காரணமாகக் கூறலாம். 

    தமிழ் தேசிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கு, கருத்தியல் உருவாக்கம் ஆகியவற்றில் பல்வேறு சிக்கல்கள் உண்டு. மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம் ஆகிய கருத்தியல் அடிப்படையிலிருந்து தமிழ் தேசியம் பேசுவோருக்கும் பிறருக்குமான வேறுபாடுகளைத் தெளிவாக அவதானிக்கவும் பிரித்தறியவும் முடியும்.

    2009 இறுதிக்கட்ட ஈழப்போருக்குப் பிந்தைய தமிழ் தேசிய இயக்கங்களின் அபரிமித வளர்ச்சி, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டிச் செழிக்கும் ஒற்றை நோக்கம் கொண்டதாக மாறியுள்ளது.  ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்ற கருத்தாக்கம் நீண்ட விவாதத்திற்குட்படுத்தப்பட்ட தமிழ்ச்சூழலில் இன்று தமிழ்த் தேசியம் பேசுவது புதிய பாணி (Style) ஆகியுள்ளது. மேலும் இதில் சாதியமும் பிறரை (Others) வெளியேற்றும் (Exclusive) அம்சங்கள் துருத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) தமிழ் தேசிய வரையறை ஒன்றை ஏஜிகே முன்மொழிகிறார். “அந்நிய, அண்டை இனங்களாயிருந்தால் தவிர எம்மதத்தைச் சேர்ந்தவராயினும் தமிழகத்திலுள்ளோர் தமிழர்களே. இதுவே, வரலாற்றுப் போக்கில் தமிழின அடையாளமாகும்”, (பக். 10, கருத்து – செயல் அறிக்கை) இந்த வரையறையிலிருந்து பார்ப்பனர்களை (ஆரியர்கள்) மட்டும் விலக்குகிறார். தேசியம் கற்பிதம் மட்டுமல்ல; பலவகைகளில் சிக்கலானதும் கூட.

     தமிழ்த் தேசிய அரசியலில் பாசிசத் தன்மை நிறைந்த சொல்லாடல்கள், பெரியாரை அந்நியராகவும் தமிழ் விரோதியாகவும் நிறுத்தும் போக்கு, திராவிடக் கருத்தியல் குறித்த தலைகீழ் பார்வை, இந்துத்துவக் குரலை வேறு மொழியில் வெளிப்படுத்துதல் ஆகிய தன்மைகள் துலக்கம் பெறும் நிலையில் இவற்றிலிருந்து ஏஜிகே வேறுபடும் புள்ளிகளை இனங்காணுதல் அவசியம். இன்றைய மதவெறி அரசியலிலிருந்து சமூகத்தைக் காக்க இது தேவை.

    ஆனால் இங்கு தமிழ்த் தேசிய அடையாள அரசியல் ஒருபடித்தானதாக இல்லை. மாறுபட்ட தமிழ் தேசியக் கருத்தியல் உள்ளவர்களுடன் சேர்ந்து தமிழ் தேசிய முன்னணி ஒன்றையும் கட்டுகிறார்கள். கருத்தியல் முரண்களால் அதுவும் தோல்வியில்  முடிகிறது. கருத்தியல் தெளிவு, ஒருங்கிணைவு இல்லாத  கொள்கைகளற்ற தமிழ்த் தேசியக் கூட்டிணைவுகள் தோல்வியில் முடிகின்றன. இதிலிருந்து யாரும் பாடங்கற்றதாகத் தெரியவில்லை. வெறும் தன்முனைப்பு உந்தித் தள்ளும் இடமாக இன்று தமிழ்த் தேசியக் களம் கிடக்கிறது”. (பக்.101&102, மு.சிவகுருநாதன் - ஏஜிகே எனும் போராளி) 

 

நன்றி:  www.panmai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக