சனி, மார்ச் 19, 2022

2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக ‘கல்வி அபத்தங்கள்’

 2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’

 

               ‘இந்து தமிழ் திசை’ பட்டியலிட்ட 2021 இன் கல்வி நூல்களில் ஒன்றாக  ‘கல்வி அபத்தங்கள்’ இடம்பெற்றது. அதன் குறிப்பும் உடன் இடம் பெற்ற நூல்களின் அறிமுகக் குறிப்பையும் இங்கு பதிவிடுகிறேன்.

-         மு.சிவகுருநாதன்

 


 

2021-ன் கல்வி நூல்கள் - ‘இந்து தமிழ் திசை’ – திசைகாட்டி

 

கல்வி அபத்தங்கள்

மு.சிவகுருநாதன், பன்மை, தொடர்புக்கு: 98424 02010

             தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் கழகம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புதிய பாடநூல்களில் உள்ள பிழைகளைப் பட்டியலிட்டு விவரிப்பதோடு அவற்றுக்கான திருத்தங்களையும் பரிந்துரைக்கும் நூல். எழுத்துப் பிழைகள், மொழிப் பயன்பாடு சார்ந்த பிழைகள், மொழிபெயர்ப்பு சிக்கல்கள், தகவல் பிழைகள், கருத்தியல் கோளாறுகள், ஒரே தகவல் அல்லது பெயர் ஒரே நூலில் வெவ்வேறு விதமாக இடம்பெற்றிருப்பதால் நேரிடும் குழப்பம் என அனைத்து வகையான பிழைகளையும் பட்டியலிடுகிறது. அதே நேரம் முந்தைய பாடநூல்களிலிருந்து புதிய நூல்கள் எந்தெந்த வகைகளில் மேம்பட்டிருக்கின்றன என்பதையும் விவரிக்கிறது.

 

கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0

ஆயிஷா இரா.நடராசன்,

பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044 – 24332424

 

        எந்திரமயமாக்கல், மின்சார உற்பத்திப் பெருக்கம், கணினிமயமாக்கல் ஆகிய மூன்று தொழிற்புரட்சி கட்டங்களைக் கடந்து இணையம், தகவல்தொழில்நுட்பவியல், செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், குவாண்டம் அறிவியல் எனப் பன்முகத் தொழில்நுட்பங்களால் சூழப்பட்டிருக்கும் நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் கல்வியில் நிகழ்ந்த அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்நூல் விவரிக்கிறது. கல்வித் துறையில் நிகழ்த்தப்பட வேண்டிய மாற்றங்களை, தகவமைப்புகளை முன்வைக்கிறது. டிஜிட்டல் யுகத்தின் பயனாலும் கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தாலும் பரவலாகியுள்ள இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்களை அலசுகிறது.

 

நிறத்தைத் தாண்டிய தேசம்

ச.மாடசாமி,

வாசல் பதிப்பகம், தொடர்புக்கு: 98421 02133

        பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்டிருந்த கயானாவில் பிறந்து, இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் விமானப் படையில் பணியாற்றி, அதற்குப் பிறகு லண்டனில் ஏழைக் குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய கறுப்பினத்தவர் ரிக் பிரைத் வைட். அவருடைய சுயசரிதை நூல் ‘To Sir With Love’. கறுப்பினத்தவரான பிரைத் வைட், பள்ளியில் மாணவர்களிடமும் சக ஆசிரியர்களிடமும் எதிர்கொண்ட இன ஒதுக்கலையும் அதைத் தாண்டி மாணவர்களின் மனங்களை அன்பால் வென்ற கதையையும் தன் சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். அதன் அடிப்படையில் மாடசாமி எழுதியிருக்கும் நூல் ‘நிறத்தைத் தாண்டிய தேசம்’.

 

கல்விச் சிக்கல்கள்: தீர்வை நோக்கி...

சு. உமா மகேஸ்வரி,

பன்மை வெளி, தொடர்புக்கு: 98408 48594

 

         அரசுப் பள்ளி ஆசிரியராக 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரான உமா மகேஸ்வரி, பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தக் கட்டுரைகள் தமிழக அரசுப் பள்ளிகளின் சிறப்புகளை விவரிக்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அரசுப் பள்ளிகளில் நிலவும் அசலான பிரச்சினைகளை கண்முன் நிறுத்தி, அவற்றைக் களைவதற்கான தீர்வுகளையும் முன்வைக்கின்றன. அனைவரும் அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் சூழலை உருவாக்குவதற்கான அக்கறையை வெளிப்படுத்துகின்றன.

பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல

இளவேனில்,

இளா வெளியீட்டகம், தொடர்புக்கு: 94990 41024

           இயன்முறை மருத்துவரான நூலாசிரியர், பள்ளிப் பருவத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் தனக்கு நேர்ந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த நாவலை எழுதியுள்ளார். தன் சொந்த அனுபவங்களைப் பதிவுசெய்வதன் வழியாக நம் பள்ளிக் கல்வி முறையில் இருக்கும் பல்வேறு சிக்கல்களை ஆசிரியர் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பள்ளிக்கூடங்கள் மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாக மாற்றுகின்றன, விளையாட்டு ஆர்வத்தை மழுங்கடிக்கின்றன, ஏட்டுக் கல்வியை மட்டுமே திறமையின் அளவுகோலாகப் பார்க்கின்றன என்பதையெல்லாம் உணர்த்துகிறது இந்த நாவல்.

 

நன்றி: இந்து தமிழ் திசை – திசைகாட்டி, ஜனவரி 25, 2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக