புதன், மார்ச் 16, 2022

சாரதா என்கிற அக்கம்மா

சாரதா என்கிற அக்கம்மா

 

(தோற்றம்: 30-06-1940 -  மறைவு:  01-01-2022)

 

மு.சிவகுருநாதன்

 


 

 

01

          அன்றும் மளிகைக்கடைகளில் கடலைமிட்டாய், முறுக்கு, பிஸ்கட் போன்ற பல்வேறு தின்பண்டங்கள் இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி கெஞ்சியபிறகும் கொஞ்சமும் விடுவதாக இல்லை. “எனக்குப் பலாச்சுளைதான் வேணும்”, என்று மேலும் கீழும் குதித்து அடம்பிடிக்கத் தொடங்கியதைக் கண்டவுடன் கடையை அப்படியே விட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு முத்துப்பேட்டையை நோக்கி மிதிக்கத் தொடங்கினார். பலாச்சுளை வந்தபிறகுதான் அவளது அடம் நின்றது. இது எப்போதும் நடக்கின்ற நிகழ்வுதான். எனவே அவரது முகத்தில் கோபமோ சலிப்போ இல்லை. பலாச்சுளையைக் கொடுத்துவிட்டு எப்போதும்போல மளிகைக்கடை வியாபாரத்தைக் கவனிக்கலானார்.

           ஜாம்பவானோடை  முத்துப்பேட்டையிலிருந்து சில கி.மீ. தூரத்திலுள்ள ஒரு கிராமம். புகழ்பெற்ற முத்துப்பேட்டை தர்கா இங்குதான் உள்ளது. அவரது நான்கு சகோதரிகளில் மூத்தவரை தகட்டூரிலும் அடுத்தவரை திருக்குவளைக்கட்டளையிலும் மணம் முடித்திருந்தார். மற்றவர்கள் மாங்கோட்டை நத்தம், தொண்டியக்காடு ஆகிய ஊர்களில் பின்னாளில் திருமணம் செய்தனர்.  இந்த இரண்டாவது சகோதரி ராஜாமணியின் மூத்த மகள்தான் சாரதா; உறவினர்கள் அழைப்பது சாரதம். திருக்குவளைக்கட்டளை தேங்காய் வியாபரம் செய்துவந்த வசதியான குடும்பத்தைச் சேர்ந்த  வண்டு முனியன் மகன் வ.மு.முருகையன் (வானா மூனா) அவர்களுக்குத் திருமணம் செய்திருந்தார். அவ்வூரிலுள்ள பங்காளி வகையறாக்களில் முத்தவர்; அவருக்குப் பிறந்த முதல் மூத்த பெண்ணாதலால் அதிக செல்லம். கறார் மற்றும் துடுக்குத்தனத்துடன் வளர்கிறார். கேட்டதைக் கொடுக்க வேண்டும்; சொன்னதைச் செய்ய வேண்டும் என்று எல்லாரையும் மிரட்டும் தொனியிலும் அனைவரும் பயப்படும்படியாகவும் அவரது செயல்பாடுகள் அமைகின்றன. ஓரளவு வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் படிப்பதற்குப் பள்ளிக்கூடமில்லை. ஆண்களே படிக்காதபோது பெண்களை வேறிடங்களில் படிக்க வைக்கும் நிலை அன்றில்லை. இருப்பினும் அவர் வீட்டிலேயே எழுத, படிக்கவும், கையொப்பமிடவும் கற்றுக்கொண்டார். படிக்காமல் இருக்கும்போதே இவ்வளவு திறமையாக செயல்படக்கூடியவர் படித்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருப்பார் என்று அவரது உடன்பிறவாத் தம்பிகளில் ஒருவரான திரு அ.சோமசுந்தரம் நினைவு கூர்கிறார். அன்றைய குடும்பங்களில் மூத்தப்பெண்கள் அம்மாக்களின் சுமைகளைப் பகிர்ந்துகொண்டவர்கள். இவர்கள் பாதி அம்மாக்கள்; எனவே ‘அக்கம்மா’ என்று அழைப்பதுண்டு. பங்காளிக் குடும்பப் பிள்ளைகளுடன் இணைந்து வளர்ந்ததால் அவர்களுடன் சேர்ந்து சித்தப்பாக்களை அண்ணன் என்று அழைத்தப் பழக்கம் இறுதிவரை தொடர்ந்தது. இவ்வளவு காலத்திலும் அம்மா இதுதான் வேண்டுமென்று என்றும் அடம்பிடித்துப் பார்த்ததில்லை.


 

02

          அவரது ஊரில் அன்று பள்ளிக்கூடங்கள் இல்லை. வாய்ப்புள்ள ஆண் குழந்தைகள் வெளியூர் சென்று படித்தனர். பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி இல்லாமற்போனது. தம்பி மு.தியாகராஜன் வாய்மேடு சென்று தொடக்கக்கல்வியை முடிக்கிறார். பின்னர் குருக்கத்தி ஆதாரப் பயிற்சிப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தார். உடனடி பணி வாய்ப்பு இல்லாமல் தேக்கமடைந்திருந்த காலம். நீண்ட காலக் காத்திருப்புக்குப் பின் திருவாரூர் வா.சோ. ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்தார். அம்மா வீட்டிலேயே எழுதப்படிக்க மட்டும் கற்றுக்கொள்கிறார். கையொப்பமிடவும் நாளிதழ் வாசிக்கவும் அவரால் முடிந்தது. இருப்பினும் பள்ளி சென்று படிக்க இயலவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. அடுத்த தம்பி காசிநாதன் சிறுவயதில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, அடுத்துப் பிறந்த தங்கைக்கு அக்குழந்தையின் நினைவாக தம்பி குழந்தைக்குக்  காசியம்மாள் என்று பெயரிட்டதாக கூறுவார். இவர்கள் அனைவரும் அம்மாவுக்கு முன்னதாக இயற்கை எய்தினர்.  பாட்டி இராஜாமணி துளசியாப்பட்டினம் அவ்வையார் (பெருமாள்) கோயிலுக்குச் சென்றிருந்தபோது மாரடைப்பால் (02/01/1994) உயிர் நீத்தார். மாமா வ.மு.மு.தியாகராஜன் 1999 லிலும் தாத்தா வ.மு.முருகையன் 2001லிலும் முத்துப்பேட்டை சின்னம்மா காசியம்மாள்  2019லிலும் முடிவெய்தினர். தாத்தாவை இறுதிக்காலத்தில் அம்மாவே கவனித்துக் கொண்டார்.


 

03

       வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் கிராமத்தில் கா.சந்தானம் – சிவக்கொழுந்து தம்பதிக்கு கடைக்குட்டியாகப் பிறந்தவர் அப்பா. ஆண்கள் 4 பெண்கள் 3 என்று மொத்தம் 7 குழந்தைகள். அத்தைகளில் ஒருவரான கண்ணம்மாளை அண்ணாபேட்டை வைத்திலிங்கம் அவர்களுக்கு மணம் முடித்தனர். அவர்களது குடும்பத்தை நடுஅய்யா வீடு என அழைப்பது வழக்கம். பழங்கால ஓட்டு வீடு அவர்களுடையது. அப்பா மிகுந்த போராட்டங்களுக்கிடையே தனது எட்டாம் வகுப்பை கரியாப்பட்டினத்தில் நிறைவு செய்து தஞ்சாவூரில் ஆதாரப் பயிற்சிப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடிக்கிறார். சில மாதங்கள் தனியார் பள்ளியில் பணியாற்றிய அவருக்கு அச்சூழலைத் தொடர இயலவில்லை. எனவே பள்ளிகள் இல்லாத தனது அக்கா ஊரான அண்ணாப்பேட்டையில் பள்ளி தொடங்க முடிவு செய்கிறார். அந்த பழங்கால ஓட்டு வீட்டுத் திண்ணையில் பள்ளி (1952) தொடங்கப்படுகிறது. அப்போதைய பெரும்புயலில் வீழ்ந்த தென்னை, பனைமரங்களையும் அருகேயுள்ள இடத்தையும் வாங்கி  புதிய பள்ளி கட்டப்பட்டு வ.உ.சி. உதவித் தொடக்கப்பள்ளி என்ற பெயருடன் 1954 முதல் அங்கீகாரத்துடன் செயல்படத் தொடங்கியது. தொடக்கத்தில் நிறைய ஆசிரியர்களுடன் செயல்பட்ட பள்ளி பிற்காலத்தில் 4 பேர் என்ற நிலையை எட்டியது.


 

04

        அப்பாவின் சமவயதுக்காரர்கள், ஏன் அதிக வயதுடையவர்கள் அவரிடம் படித்துள்ளேன், மிகவும் கண்டிப்பானவர் என்று கூறுவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். இவர் எப்படி நம் அப்பாவிடம் படித்திருக்க முடியும் என்று வியப்படைவதுண்டு. பள்ளிக்கூடம் இல்லாத நிலையில் புதிதாகப் பள்ளி தொடங்கியபின் பள்ளிக்குச் செல்லாமலிருந்த மற்றும் திருமணமாகாத ஆண்கள் அனைவரும் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டு எழுதப்படிக்கக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட பின்னாளைய வயது வந்தோர் கல்வி அன்றே செயல்படுத்தியுள்ளனர். ஆசிரியர்கள் காலையில் நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாமல் ஊருக்குச் சென்று மாணவர்களை திரட்டிச் செல்வார்களாம்! இல்லையென்றால் அவர்களாகப் பள்ளிக்கு வருவது கடினம். 


 

05

       பள்ளி தொடங்கி தம்பி தன்வீட்டில் தங்கியபிறகு இங்கேயே மணம் முடித்துவைக்க விரும்பினார் அத்தை. எனவே பக்கத்து ஊரான திருக்குவளைக்கட்டளைச் சேர்ந்த வானா மூனாவின் (வ.மு.முருகையன்) மூத்த பெண் சாரதாவைப் பெண்பார்த்து மணம் (1958) முடித்தார்கள். அப்போது அம்மாவுக்கு 18 வயது. நாங்கள் சாரதா என்றாலும் ஊரில் சாரதம் என்றே அழைத்தனர். சுயமரியாதைத் திருமணம். திருத்துறைப்பூண்டி தனித்தமிழறிஞர் வி.பொ.பழனிவேலனார் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக அறிந்தோம். அன்று சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாத காலம். 1983 இல் எங்கள் வீட்டில் மாமா தியாகராஜனுக்கும் சுயமரியாதைத் திருமணமே நடந்தது. இப்பகுதிகளில் பெரும் ஆரவாரமில்லாமல் மிகவும் எளிமையாகப் பார்ப்பனர்கள் இன்றி சுயமரியாதைத் திருமணங்கள் நடத்துவதுதான் வழக்கமாக இருந்தது. எங்கள் குடும்பத்துத் திருமணங்களும் அவ்வாறே நடந்தன. அப்பா இல்லாத நிலையிலும் எனது திருமணம் பேரா.அ.மார்க்ஸ் தலைமையில் (2010) நடந்தது. இன்று இத்தகைய திருமணங்கள் பெருமளவு குறைந்துள்ளன. வருங்காலங்களிள் இத்திருமணங்கள் முற்றாக நீங்கி பார்ப்பனீயச் சாஸ்திரத் திருமணங்கள் மட்டுமே இருக்கும் என்கிற நிலை உள்ளது. சற்றுப் பொருளாதார நிலை மேம்பட்டவர்கள் நடத்தும் தமிழ் மறை மற்றும் சைவத் திருமணங்கள் மிகவும் கேலிக்கூத்தாக உள்ளதையும் காண முடிகிறது. 


 

06

         மணம் முடித்தபின் சில ஆண்டுகள் கரியாப்பட்டினத்தில் குடித்தனம். அப்பா ஞாயிறு விடுமுறைகளில் மட்டும் கரியாப்பட்டினம் செல்வார் என்று நினைக்கிறேன். சனி விடுமுறை இல்லையா என்று கேட்கலாம். பள்ளியிலேயே கிராம அஞ்சலகம் செயல்பட்டது. அதன் தலைவராக (BPM) அப்பாவே இருந்ததால் ஞாயிறு மட்டுமே விடுமுறை என்றானது. கரியாப்பட்டினத்தில்  இரு பெரியாப்பாக்களின் குடும்பங்கள் இருக்கின்றன. அங்கு பாட்டி ச.சிவக்கொழுந்து, அத்தை ச.காமாட்சி ஆகியோர் இருந்தனர். இரண்டாவது பெரியப்பாவின் குடும்பம் (கா.ச.இராமையா) அண்ணாப்பேட்டையில் வசித்தது. முதல் மற்றும் மூன்றாவது பெரியப்பாக்கள் முறையே கா.ச.பக்கிரி, கா.ச.முருகையன் (கே.எஸ்.எம்.) கரியாப்பட்டினத்தில் இருந்தது. 


 

07

        1959 இல் முதல் குழந்தையாக மூத்த அக்கா தமிழரசி பிறந்தார். அம்மாவின் உடல்நிலை தீவிரமாக பாதிப்படைந்தது. நீண்ட நாள்கள் திருத்துறைப்பூண்டி, தஞ்சை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இனி பிழைக்கமாட்டார் என்றே எண்ணக்கூடிய நிலை இருந்தது. தாத்தா வ.மு.முருகையன் மிக எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். தென்னங்கள்ளை மிகவும் விரும்பி அருந்துவார். அப்போதெல்லாம் “பட்டுக்கோட்டை, பாபநாசம்”, என்று தொடங்கி தமிழகத்து ஊர்ப்பெயர்களைப் பட்டியலிடும் நீண்டப்பாடல் உள்ளிட்ட பல பாட்டுகளைப் பாடுவார். இவற்றைப் பதிவுசெய்யாமல் விட்டுவிட்டோம். பழைய கருப்பு, வெள்ளைப் படங்களில் பிடித்த கதாபாத்திரங்கள் தோன்றும்போதும் உடன் அழுகை பீறிடும்.

        அம்மாவின் உடல்நிலை குறித்து மிகவும் வருத்தமடைந்த அவர், பக்கத்து ஊர் சோதிடரை அணுகி அம்மாவின் பனையோலையில் எழுதப்பட்ட சாதகக் குறிப்பைக் காட்டி அழுதிருக்கிறார். ஒரு கண் பார்வையில்லாத மாற்றுத் திறளாளியான அவர் தாத்தாவையும் அவரது குடும்பத்தையும் நன்கு அறிந்தவர். அவரிடம் காலை வேளைகளில் மட்டுமே சோதிடம் பார்க்க இயலும். மாலையில் ‘தண்ணி’யில் மிதக்கக் கூடியவராக இருப்பார். அந்த பனையோலைச் சுவடியை வாங்கிப் பார்த்துவிட்டு, “நீ ஒண்ணும் கவலைப்படாதே. எண்பது வயது வரைக்கும் உன் பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாது. கடல்ல தூக்கிப் போட்டாலும் திரும்பி வந்துரும்”, என்று சொல்லி தாத்தாவை ஆறுதல் படுத்தியிருக்கிறார். அவ்வார்த்தைகள் சோதிடமோ, ஆறுதலோ தெரியவில்லை. ஆனால் அம்மா எண்பதையும் கடந்துவிட்டார். 


 

08

      நோய்ப்படுக்கையிலிருந்து மீண்டு வந்தாலும் குடும்பங்களில் ஏற்பட்ட சிக்கல்கள், தன்முனைப்புப் பிரச்சினைகள் என இவர்களது வாழ்வில் அலையடித்தது. இரண்டாவதாக ஆண் குழந்தையாக மு.சட்டநாதன் (1962) பிறந்தபிறகு சிக்கல் அதிகமாகி குடும்பத்தில் புயல் வீசி மீண்டும்  ஒன்று சேர்ந்தனர். அதன் பின்னும் வழக்கமான குடும்பச் சச்சரவுகள் வந்த போதிலும் குழந்தைகள், குடும்பம், உறவினர்கள் என அனைவரையும் பேண கடுமையாக உழைத்துக் கொண்டேயிருந்தார். அடுத்து மு.செந்தில்நாதன் (1964), மு.மங்கையர்க்கரசி (1968), மு.இராமநாதன் (1970) என குழந்தைகளைப் பெற்றார். நான் கடைக்குட்டி (1973). கடைக்குட்டி என்று அன்று யாரேனும் சொல்லும்போது  உடனே அழுதுவிடுவேன். அப்போது அது என்னவோ கிண்டல் போல் தோன்றும். 


 

09

         பள்ளிக்கூடத்திற்கு அருகிலே ஒரு கூரைவீடு கட்டப்பட்டு அதில் எங்களது குடும்பம் வசிக்கத் தொடங்கியது. எங்களுக்கு வீடு, பள்ளி இரண்டிற்குமான இடைவெளிகள் முற்றாகத் தகர்ந்தன. எங்களது பகல்பொழுதுகள் பெருமளவு பள்ளியிலேயே கழிந்தன. அப்பா, அம்மா இருவரும் முன்கோபிகள். மேலும் அப்பா கண்டிப்பிற்கு பெயர் போனவர். எனவே வீட்டிலும் அவரை ஆசிரியராகவே கண்டோம். அம்மா மட்டும் இல்லையென்றால் எங்களுக்கு வீட்டின் வாசனை கொஞ்சம்கூட கிடைத்திருக்காது. மிக அருகில் அத்தை வீடு; சற்று நடந்து செல்லும் தூரத்தில் தாத்தா வீடு. இவையெல்லாம் வேதாரண்யம் - பட்டுக்கோட்டை சாலையை விட்டுச் சற்று உள்ளே அமைந்திருக்கும்.

         பின்னர் வேதாரண்யம்-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை ஓரத்தில் இடம் வாங்கப்படுகிறது. அதில் நிலக்கடலை சாகுபடி செய்வதுண்டு. அங்கு ஒரு குடிசை ஒன்று கட்டப்பட்டு அத்தை காமாட்சி அங்கு தங்குகிறார். துளசியாப்பட்டினம் - சரபோஜிராஜபுரம் நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் பெரியக்காவும் அவருடன் உதவியாகத் தங்கிக் கொள்கிறார். ஐந்தாவது பிள்ளையான மு.இராமநாதன் பிறந்த பின் 1971க்குப் பிறகு குடும்பம் நிரந்தரமாக மெயின்ரோட்டுக்கு  இடம் பெயர்கிறது. 


 

 10

      நான் பிறந்து (1973) வளர்ந்தது இப்போதிருக்கும் ஓட்டுவீட்டுக்கு அருகிலிருந்த கூரை வீட்டில்தான். அந்த வீட்டின் முகப்புத் திண்ணை  மட்டுமே இன்று மீதமிருக்கிறது. நான் பிறப்பதற்கு முன்பே பாட்டி சிவகொழுந்து மரணமடைந்தார். எனக்கு சரியாக நினைவு தெரிவதற்கு முன்பே காமாட்சி அத்தை இறந்துவிட்டார். கண்ணம்பாள் அத்தை வீட்டுடன் உறவில் விரிசல்  ஏற்பட்டது; பேச்சுவார்த்தைகள் இல்லை. எனவே அம்மாவிற்கு உதவி செய்ய இராஜாமணிப் பாட்டியைத் தவிர யாருமில்லை. வீடு, குழந்தைகள், ஆடு-மாடுகள், சாகுபடி என பலவற்றையும் கவனிக்கவும் உதவி செய்யவும் வேண்டியிருந்தது. அம்மா உட்கார்ந்து சாப்பிடக்கூட நேரமின்றி இவற்றைக் கவனிப்பதிலேயே குறியாக இருந்தார். அப்பாவிடம் நெருங்கப் பயப்படும் நாங்கள் அம்மாவிற்கு பல சமயங்களில் உதவிகள் செய்தோம். நான் இங்கிருந்து சிறிய அக்கா மு.மங்கையர்க்கரசி, சிறிய அண்ணன் மு.இராமநாதனுடன் 3 வயதிலிருந்தே பள்ளிக்குச் சென்று அவர்களது வகுப்பில் உட்கார்ந்து ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருப்பேன். தலைமையாசிரியர் தகட்டூர் திரு சிங்காரம் அவர்கள் நாள்தோறும் எனக்கு மிட்டாய் வாங்கி வருவார். 


 

11

        அம்மா எதையும் திருத்தமாக, சுத்தமாக தாமே செய்ய வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவர். மேலும் அப்பாவைப்போல எப்போதும் கறார்த்தன்மையுடன் நடப்பவர். அம்மா என்பதால் அவற்றிலும் அன்பு வெளிப்படையாக இருக்கும். அப்பாவிடமும் அன்பு மறைந்து கிடக்கும்; ஆனால் எப்போதாவதுதான்  அது வெளிப்படும்.

        அம்மா மீன் கழுவ எடுத்துக்கொள்ளும் நேரம் ரொம்ப அதிகமாக இருக்கும். மீண்டும் மீண்டும் அலசிச் சுத்தம் செய்துகொண்டிருப்பார். சிறிய மீனாக இருந்தாலும் அவற்றின் உள்ளேயிருக்கும் சிறிய கரும்புள்ளியைக்கூட நீக்கிக் கொண்டிருப்பார்.

        மசாலா அறைக்க மிளகாயின் காம்புகள், சீரகம்-சோம்பில் இருக்கும் சிறிய குச்சிகளையும் நீக்கிவதைக் கவனித்திருக்கிறேன். இப்போதெல்லாம் கடைகளில் பொருள்களை வாங்கி அப்படியேப் பிரித்துக் கொட்டி மசாலா அறைப்பதைப் பார்க்கிறேன். இன்று விதை நீக்கப்பட்ட பேரிச்சைகளில்கூட அதன் காம்புக்குமிழ் அப்படியே உள்ளது. புளியைக் கொட்டை மற்றும் காம்பை நீக்கிப் பத்திரப்படுத்தும் அழகே தனி. வேகவைத்த கொண்டைக்கடலையின் தோலை நீக்கித்தான் உண்பார். இன்று எனது இளைய மகள் கயல்நிலாவும் அதைத்தான் செய்கிறார்.

      அன்று கிடைத்த சாதாரண, எளிய பொருள்கள் மற்றும் காய்கறிகள், மீன்கள் (மடவா, மன்னா, பால கெண்டைகள், கெழுத்தி) மிகச்சுவையாக சமையல் செய்து எங்களுக்கு அமுதாகப் படைத்தவர். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதியதைப்போல, அம்மா சமையலுடன் அன்பையும் சேர்த்துச் சமைத்தவர். அதன் ருசிக்கு ஈடிணை கிடையாது.


 

12

       எட்டாம் வகுப்புக்குப் பிறகு அம்மா-அப்பாவைப் பிரிந்திருக்க நேரிட்டது. 9, 10 வகுப்புகளை பள்ளங்கோயில் செயின்ட் ஜான் டி பிரிட்டோ (தூய அருளின்பர்) உயர்நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப் படித்தேன்.  ஓவ்வொரு சனி, ஞாயிறும் வீட்டுக்கு வரத்தோணும்; ஆனால் விடமாட்டார்கள். மாதத்தில் இரண்டு   சனி, ஞாயிறு ஊருக்கு வந்துவிடுவேன். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் தொலைபேசி இல்லை. ஏதாவது முக்கியத் தகவல் என்றால் கடிதம் போடுவார்கள். அதை தலைமையாசிரியரான பாதிரியார் அந்தோணிசாமி படித்துவிட்டு குறிப்பு எழுதி அனுப்புவார். மாங்கோட்டை சித்தப்பா திரு பாலையன் இறந்ததை அஞ்சலட்டையில் தெரிவித்து அடுத்த வாரம் ஊருக்கு வரவும் என்று அப்பா எழுதியிருந்தார். “படிக்கிற புள்ளய கெடுக்காதே”, என்று அதில் குறிப்பெழுதி இருந்தார் ஃபாதர். நான் அழுது அடம்பிடித்து அடுத்தவாரம் துக்கத்திற்குச் சென்று திரும்பினேன்.

       நான் ஊருக்குப் போகாத வாரங்களில் அப்பா, அப்போது காட்டுமன்னார்கோயிலில் ஆசிரியப்பயிற்சி படித்துக் கொண்டிருந்த நடு அண்ணன் செந்தில்நாதன், சிறிய அண்ணன் ஆகியோர் வந்துப் பார்த்துச் செல்வார்கள். அம்மா வந்ததில்லை; எனவே அவரைப் பார்க்க நான்தான்  செல்லவேண்டும். அந்த வாரத்திற்காகக் காத்துக் கிடப்பேன். இரண்டாண்டுகள் ஓடியபிறகு +1, +2 வகுப்புகளை வீட்டிலிருந்தே படித்தேன். எனக்கான மதிய உணவு தாயரித்து அளிக்கச் சிரமப்படுவார். அம்மா நலமில்லாத சில நாள்களில் மதிய உணவின்றிப் பள்ளி செல்வேன். அங்கு டாடா டீ ஸ்டாலில் காபி, குட் டே பிஸ்கட் மட்டும்  மதிய உணவாகும். அதன் பிறகு ஆசிரியப்பயிற்சி, பின்னர் திருவாரூரில் வேலை என்றானபோது சனி, ஞாயிறு வீட்டுக்குச் செல்வது தொடர்கதையானது.  

      1995 இல் பணிக்குச் சென்றபிறகு வீட்டுக்குத் தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டது. “அம்மாகிட்ட பேசுறதுக்காக இவன் போன் வச்சுருக்கான்”, என்று அப்பா கிண்டல் பண்ணுவார். அடிக்கடி போன் வேலை செய்யாமல் போய்விடும். அப்போதெல்லாம் கஷ்டமாக இருக்கும். ஊருக்குச் செல்லமுடியாவிட்டாலும் தினமும் போனில் தொடர்புகொள்ளுவது வாடிக்கையானது. அப்பா இறந்த 16 ஆண்டுகளில் நான் போனில் அம்மாவிடம் பேசாத நாள்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இனி அம்மாவிடம் என்றும் பேச முடியாது! 


 

13

      சுமார் 2000 லிருந்து அப்பா-அம்மா இருவருக்கும் தஞ்சை செல்வம் நகரிலிருக்கும் டாக்டர் ஜி.மூர்த்தி அவரகளிடம் (ஜி.எம். ஹாஸ்பிட்டல்) சிகிச்சை பெற்றோம். ஊரிலிருந்து மருத்துவரைப் பார்க்க வரும்போது எனது வருகைப்பதிவு கட்டாயமிருக்கும். ஒன்றிரண்டு நாள்கள் தவறவிடும்போது மனசு வலிக்கும். அப்பாவைக் கவனிப்பதால் தொடர் மருந்துகள் எடுப்பதை அம்மா தவிர்த்து வந்தார். அப்பா மறைந்த 2005க்குப் பிறகுதான்  தொடர் சிகிச்சை மற்றும் மருந்திற்கும்  அம்மா உடன்பட்டார். தாங்கமுடியாதத் தலைவலியால் தொடர்ந்து அல்லலுற்றார். பல்வலியும் இருந்தது. பற்கள் இரண்டை அகற்றியது அதிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது. இதயத்திலிருந்த பிரச்சினை அவ்வளவு பெரிதாக இல்லாவிட்டாலும் டாக்டரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டியிருந்தது. 60 வயதிற்குமேல் சர்க்கரை கூடியது. அதற்கும் மருந்தும் சிலநேரங்களில் இன்சுலினும் தேவைப்பட்டது.

       இது எல்லாவற்றையும்விட அவரைத் துன்பப்படுத்தியது கண் பிரச்சினை என்பதே உண்மை. கண்புரை (Cataract) நோய் 15 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டாலும் அதற்கான  அறுவைச் சிகிச்சை அவர் தவிர்த்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் பக்குவமாக எடுத்துக்கூறி டாக்டர் மூர்த்தியின் ஆலோசனையின்படியும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு மற்றொரு இதயநோய் நிபுணரிடம் சோதனை மற்றும் ஆலோசனை பெற்றபிறகும் 5 வாரங்கள் கழித்து வருமாறு சிகிச்சையைத் தவிர்த்து எங்களை திருப்பி அனுப்பிவிட்டனர். கூடவே கண் அழுத்தக் குறைபாடும் (Glaucoma) சேர்ந்துகொண்டது. திருவாரூர், வண்டாம்பாளையம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என பல கண் மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைத்தபோதும் அதை செய்ய இயலாமல்போனது பெரும் சோகமானது. கண்ணில் வலி, எரிச்சல், கூச்சம் அதிகமிருப்பதாகச் சொல்லி தனது வாதைகளை எப்போதும் வெளிப்படுத்தியவாறே இருந்தார். வேறு எதைக் காட்டிலும் கண் பிரச்சினையே அவரதுப் பெரிதும் பாதித்ததாகச் சொல்லலாம். 


 

14       

         அந்த ஓட்டுவீட்டின் நடுஅறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக படுத்த படுக்கை. சிறிய அக்கா மு.மங்கையர்க்கரசி அம்மாவை உடனிருந்து கவனித்துக் கொண்டார். அவர் இல்லையென்றால் என்னவாகியிருக்கும் என்று சொல்லத் தோன்றவில்லை. அவரது இரண்டுகள்      மகன்கள் (பா.பாரதி, பா.சிவா), மருமகள் அனுசுயா பாரதி என ஊரில் இருக்கும்போது  அம்மாவைக் கவனித்துக் கொண்டனர். வாராவாரம் என்னால் செல்ல இயலவில்லை. கொரோனா காலத்தில் அம்மாவை அதிகம் சென்று பார்க்க இயலவில்லை. பொது முடக்கத்தின்போது சுமார் 70 நாள்கள் அம்மாவைப் பார்க்க இயலாமல் இருந்தேன். மாதமிருமுறை அல்லது ஒருமுறை என்று செல்வதுதான் இயலும் காரியமாக இருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார் அம்மா.

        அங்கு செல்லும்போது அவருடன் இருக்கும் சில மணி நேரங்கள்  மறக்க  இயலாதவை. பொதுவாகக் கோயிலுக்கு வழிபாட்டு நோக்கில் செல்லாத எனக்கு அம்மாவைப் பார்த்துத் திரும்புவது பிடித்தமான ஒன்றாக இருந்தது. ஆனாலும் நினைத்தபோது சென்ற பார்க்காத துயரம் வலிக்கவே செய்கிறது. வீடெங்கும் நிறைந்திருந்த அம்மா இல்லாத வீட்டைக் காண்பது கடினமாக உள்ளது. அம்மா மறைந்த பிறகு 15/01/2022 சனியன்று வீட்டுக்குச் சென்றேன். முற்றிலும் அமைதியான வீட்டில் அம்மா மட்டும் இல்லை. எனக்கு வீடே இல்லாததுபோலத் தோன்றியது. பிறிதொரு முறை சென்றபோதும் அம்மா இல்லாத அந்த வீட்டின் வெறுமையை  உணர்ந்து அதிர்ந்தேன்.

 


 

15                                                                                                                                                       

  எங்கள் ஊரான அண்ணாப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட திருக்குவளைக்கட்டளை,  ராஜாங்கட்டளை என எப்பகுதியிலும் பட்டா நிலங்கள் கிடையாது. எல்லாம் கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமானவை. எனவே வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்க இயலாது. கையில் பணமிருந்தால் வீடு கட்டலாம். 2005இல் பெரியண்ணன், அண்ணி  (திரு. மு.சட்டநாதன், திருமதி. இரா.மல்லிகா) ஆகியோரின் பொருளாதார உதவியுடன் வீட்டுமனை வாங்கி வங்கிக்கடனும் பெற்று  தியானபுரம் (விளமல்) கூட்டுறவு நகரில் வீடுகட்டத் தொடங்கினேன். ஊரில் கட்டவில்லையே என்கிற வருத்தம் இருந்தாலும் அப்பா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மூன்றுமுறை வந்து பார்த்தார். அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்ததால் வீட்டுவேலைகள் பூர்த்தியாகும் முன்பே பால் காய்ச்சினோம். 2005 நவம்பர் 19 இல் அப்பா மறைந்தார். டிசம்பரில் வீட்டுவேலைகள் நிறைவடைந்தன. 

 

        அம்மாவிற்கு திருவாரூர் தியானபுரம் (விளமல்)  வீட்டில்  என்னுடன் இருக்க  பெருவிருப்பம் இருந்தது. சில வாரங்கள், நாள்கள் என கொஞ்சம்தான்  இங்கு வந்து தங்கிருந்தார். படுத்த, படுக்கையாக இருக்கும் போது என்னைத் திருவாரூர் உனது வீட்டுக்கு அழைத்துப்போ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். என்னால் இயலவில்லை; அதற்கான சூழலும் இல்லை. அது குற்ற உணர்வாய் வாழ்நாள் முழுதும்  உறுத்திக்கொண்டே இருக்கும். 


 

16

     ஒன்றிரண்டு ஆண்டுகளைத் தவிர அம்மா தன் வாழ்க்கையின் ஏறத்தாழ முழுமையும்  தான் பிறந்த ஊரிலேயே வாழ்ந்து முடித்தவர் அம்மா. அவரது வாழ்வில் ஒருசில ஆண்டுகளைத் தவிர பெரும்பகுதி முழுதும் அண்ணாப்பேட்டை – திருக்குவளைக்கட்டளையில் வாழ்ந்து முடித்திருக்கிறார்.  இது பலருக்கும் கிடைக்காத பெருவாய்ப்பாகும். 80 வயதைக் கடந்து ஆயிரம் பிறை கண்டு நிறைவாய் வாழ்ந்தவர். ஆனால் இறுதிக்காலத்தில் அவரது உடல்நிலை மற்றும் அவர் பட்ட இன்னல்கள் வேதனையானது. 


 

 

17

        இறுதிக்காலத்தில் அவரது நினைவுகள் ஒரே சீராக இல்லை. தனது அப்பா-அம்மா இருந்தால் என்னை இப்படி விட்டுவிடுவார்களா? என்ற கேள்வியை அவர் பலமுறைக் கேட்டவாறே இருந்தார். அப்பா-அம்மா பார்க்க வரவில்லை என்பது அவரது நினைவு தப்பிய ஆதங்கமாக இருந்தது. அவர் தனது தாய்-தந்தையிடம் கொண்டிருந்த அபரிமிதமான அன்பை வெளிப்படுத்தினார். அப்பாவும் அம்மாவும் வந்துப் பார்த்துவிட்டுச் சென்றார்கள் என்று அப்போதைக்குக் கூறிச் சமாளிக்க வேண்டியிருந்தது. எங்களது அப்பாவும் (2005 இல் இறந்த) வரவில்லை என்றும் பலமுறை சொல்லிவந்தார். ஒருமுறை அப்பா சென்னை சென்றுள்ளார் என்றுகூறிச் சமாளித்தேன். உடனே “இல்லை வந்துவிட்டராம்”, என்று மறுமொழி சொன்னார். துளசியாப்பட்டினம் கடைக்குச் சென்றிருக்கிறார்; வந்து விடுவார், என்றேன். மேலும் உனக்கு 80 வயது அப்பாவுக்கு 90 வயதாகிவிட்டது, எனவே வருவது சிரமமாக இருக்கும், என்றுகூறித் தப்பித்தேன். சில நேரங்களில் இவ்வாறு பேசினாலும் அவர்கள் எல்லாரும் போய்விட்டார்கள், எனக்கு மட்டும் ஏனிந்த சாவு வரவில்லை?, என்று அழும்போது என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்போம்.   


 

18

      ஒரு காலத்தில் ஆடு, மாடு விவசாய வேலைகள் என அனைத்திலும் உதவி செய்த அம்மா தனது 50 வயதிற்குப் பிறகு உணவு சமைப்பதற்கே சிரமப்பட வேண்டி இருந்தது. விறகடுப்பில் சமைப்பது கூடுதல் சுமையாக வேறு இருந்தது. எரிவாயு அடுப்பில் சமைக்கச் சற்று பயமிருந்தது. ஒருவழியாக அவரது பயத்தைப் போக்கி, 1995 க்குப்பிறகு எரிவாயு இணைப்பு பெற்றோம். அதன்பிறகு  சமைக்கும் பணியை ஓரளவு எளிதாகச் செய்ய முடிந்ததாக அவரே சொல்லியிருக்கிறார். அப்பா இதெல்லாம் விரும்ப மாட்டார். பாத்திரம் கழுவுவதற்கான தண்ணீர் வசதியைச் செய்து தரமுடியவில்லை. எரிவாயு அடுப்பே அவரது பணிகளை விரைவாக்கிச் சற்று ஓய்வெடுக்க உதவியது. 


 

 

19

  

        அம்மாவிடம் நாள்தோறும் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவது பல்லாண்டாக வழக்கமான ஒன்று. சில நாள்களில் இருமுறைகூட பேசிவிடுவேன். அந்தப் பழக்கத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை. இன்றும் அம்மாவிற்கு போன் செய்யவில்லையே என்று அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். இனி அம்மாவிடம் எப்படிப் பேசமுடியும்?  

 


20

       எங்கள் வீட்டில் இரண்டு பெண்மக்கள், அதாவது எனக்கு இரண்டு சகோதரிகள் (மு.தமிழரசி, மு.மங்கையர்க்கரசி). எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் (சி.கவிநிலா, சி.கயல்நிலா). இவர்களிடம் இனி அம்மாவைக் காணமுடிவது ஓரே ஆறுதலாக இருக்கிறது.     

                                                                                                                                     

நினைவுகள் என்றும் அழிவதில்லை…


 

 

    (அம்மா திருமதி மு.சாரதா 01/01/2022 அன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கான நினைவோடை இது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக