யுகமாய் நிலைத்து நிற்கும் யுக புருஷரின் வரலாறு
முனைவர் பே.சக்திவேல்
(‘எல்லோருக்குமான காந்தி’ நூல் அறிமுகம்)
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் முழுப் பெயரைக் காட்டிலும் காந்தி எனும் பெயரே இந்த உலகத்தால் நன்கறியப்பட்ட பெயர். சிலர் காலத்தால் உருவாக்கப்படுகிறார்கள். காலம் முடிந்த பின் மறக்கப்படுகிறார்கள். சிலர் காலத்தை உருவாக்குகிறார்கள். காலங்கள் கடந்தும் தொடர்ந்து நினைவு கூறப்பட்டு வருகிறார்கள். காந்தி இதில் இரண்டாம் வகையினர். குஜராத்தின் வணிகப் பாரம்பரியம் கொண்ட குடும்பமொன்றில் பிறந்து, இறுதிவரை தன் வாழ்க்கையையும் வாக்கையும் வணிகமாக்காமல் சத்தியத்தின் புத்திரனாய் வாழ்ந்தவர். தன் வாழ்நாளில், தான் வரித்துக்கொண்ட கருத்தியலிலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் சிறிதும் வழுவாமல் வாழ்ந்து மறைந்த மகாபுருஷர் என்பதால்தான் இன்று 'மகாத்மா' எனும் பெயரும் அடையாளமும் காந்தி ஒருவருக்கே உரித்ததாகிவிட்டன. உயர்ந்த நிலையை எட்டுவதற்குக் காரணமாக இருந்தவை அவரின் கருத்தியலும் வாழ்வியலும்தாம் என உறுதியாகக் கூறிவிடலாம்.
காந்தியின் வரலாறு என்பது ஒரு தனிமனிதரின் வரலாறன்று; அது இந்தியாவின் வரலாறு. இந்தியச் சமூகத்தின், இந்தியப் பொருளாதாரத்தின் மேம்பாடு சார்ந்து காந்தி கண்ட கனவு என்பது இந்திய மண்ணின் மீதும் இந்திய மக்களின் மீது அவருக்கிருந்த அக்கறையைப் புலப்படுத்தவல்லவை. காந்தியின் வரலாற்றை நுணுகிப் பார்த்தால் அதுவரை எளிய, லௌகீக சமரசங்களுக்குட்பட்டவராய்த் தெரியும் காந்தி, 1915இல் இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் வேறொரு நிலைக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இந்தியாவுக்கு மட்டுமின்றி இந்த உலகத்திற்கே ஒரு முன்மாதிரியற்ற முன்மாதிரியாகத் தெரியத் தொடங்குவதை அவதானிக்க முடியும்.
1915ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காந்தியின் இந்திய வாழ்க்கை அவரை ஓர் உதாரண புருஷராக்கியது. எதுவிடத்தும், யாவரிடத்தும் காந்தி 'பிளவு' 'அழித்தொழிப்பு' எனும் சிந்தனைகளை விதைக்கவேயில்லை. எல்லோரிடத்திலும் இணக்கத்தையே வலியுறுத்தினார், அதையே தன் இலக்காகவும் கொண்டிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் அவர் கொண்டிருந்த நோக்கென்பது மேற்குறித்த பின்னணிகளில்தாம் அமைந்திருந்தன.
சாதி, சமயம், கடவுள், கடவுள்நெறி, வழிபாடு என்பன குறித்தெல்லாம் அவர் கொண்டிருந்த கருத்தியல்கள் தனித்துவமானவை. யாரும் பின்பற்றியொழுகத் தக்கவை. ஏனெனில் அவை, சமூக நல்லிணக்கம் எனும் ஒன்றைப் புள்ளியை நோக்கிய பயணமாகவே இருந்தன. இந்த நிலையில் இந்தியாவின், இந்திய மக்களின் நலனுக்கு எது சரியானதெனக் கருதினாரோ அதையே செயல்படுத்தவும், பேசவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவும் உழைத்தார்.
வரலாற்றுப் பக்கங்களில் எந்த ஒரு மனிதனும் விமர்சனத்திற்கும் தூற்றுதலுக்கும் அப்பாற்பட்டவனல்லன். இது காந்திக்கும் நேர்ந்தது. ஆனால், அவர் இவற்றையெல்லாம் கவனப்படுத்தாமல் அனைவரின் நலன் சார்ந்து, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கையே கைக்கொண்டார். இங்குத்தான் அவர் தன் வாழ்வின் பெரிதாகக் கடைப்பிடித்த ஆகச்சிறந்த விழுமியங்களான சத்தியம், அகிம்சை முதலான விழுமியங்கள் அவருக்குத் துணை நின்றன. தீங்குகளைக் கண்டும் காணாமலும் கடந்து போகாமல் அவற்றைச் சமூகநலன், மக்கள்நலன், நாட்டு நலன் எனும் அடிப்படைகளிலே அணுகினார்.
இப்படிச் சத்தியத்தின் வழியில் நின்று அனைத்தையும் அணுகிய காரணத்தால்தான் நூற்றாண்டு கடந்தும் இந்திய மக்களின் மனங்களில் இன்றும் உயிர்ப்புடன் வாழ்கிறார். காந்தி, இந்தியாவில் வாழ்ந்த காலத்திலும், இந்திய மண்ணிலிருந்து மறைந்த பின்னரும் அவர்மீது வைக்கப்பெற்ற விமர்சனங்கள் ஏராளமானவை. இவ்வாறே எதிர்நிலையில்நின்ற காந்தியைச் சித்திரிக்கும், அடையாளம் காட்டும் போக்குகளும் இந்த மண்ணில் நிலவின; நிலவி வருகின்றன. இத்தகைய போக்குகளில் உறைந்து கிடக்கும் பொய்ம்மைகளை அகற்றி மெய்ம்மைகளை எடுத்துரைக்க வேண்டியது சமூக நலனில் அக்கறை கொண்டிருப்போரின் தலையாய கடமை எனலாம்.
இந்தக் கடமையை மிகச் சிறப்பாகச் செய்திருப்பதற்கான சான்றுதான் மு.சிவகுருநாதன் எழுதியுள்ள ‘எல்லோருக்குமான காந்தி' எனும் நூல்.
"பாடநூல்கள் தலைவர்களையும் ஆளுமைகளையும் மிகவும் மொண்ணையாக அறிமுகம் செய்கின்றன. காந்தி இந்தியாவிற்குக் கத்தியின்றி ரத்தமின்றிச் சுதந்திரம் வாங்கித் தந்தார் என்பதாக, இவர்களது சொல்லாடல்கள் அமைகின்றன. அத்துடன் கட்டமைக்கப்பட்ட பிம்பம் ஒன்றை அவர்கள் மீது சுமத்தி வைப்பது இவர்களுக்குப் போதுமானதாக உள்ளது. இது காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்ற அனைத்து ஆளுமைகளுக்கும் நடக்கக்கூடியதாக இருக்கிறது. இவற்றை மட்டும் தேர்வுகளுக்காக வாசிக்கும் குழந்தைகள் புதிய பார்வைகளையும் திறப்புகளையும் பெறுவது சாத்தியமில்லாது போகிறது. பாடநூல்களைத் தாண்டி விரிவாக வாசிக்கும்போதுதான் விரிவான கண்ணோட்டம் உண்டாகிறது. அந்த வகையில் காந்தி பற்றிய அறிமுகத்தைத் தரவே இந்தத் தொடர் எழுதப்பட்டது” என்றும்,
"இது காந்தியைப் பற்றிய ஆய்வு நூல் அல்ல. அவரது வாழ்க்கைச் சரிதத்தை வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் விதமாக எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பாகும்” என்றும் இந்நூல் எழுதப்பட்ட நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுவதால் எந்த முன்முடிவுகளுமின்றிக் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தயாரான மனநிலையை ஏற்படுத்தி விடுகிறார் நூலாசிரியர் மு.சிவகுருநாதன். இதன் வாயிலாக இந்த நூலை எழுதிய நோக்கத்தில் வெற்றி பெற்று விடுகின்றார்.
இந்த நூல் அணிந்துரை, முன்னுரை ஆகிய பகுதிகளுடன் இளமைக்காலம், இங்கிலாந்தில் காந்தி, தொடரும் சோதனை முயற்சிகள், பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி, இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி, காந்தியின் தென்னாப்பிரிக்கப் பயணம், தென்னாப்பிரிக்காவில் காந்தி, தென்னாப்பிரிக்காவில் காந்தியின் சத்தியாகிரகம், இந்தியாவில் காந்தியின் தொடக்ககால சத்தியாகிரகங்கள், சத்தியாகிரகமும் படுகொலையும், காந்தியும் ஒத்துழையாமை இயக்கமும், சட்டமறுப்பும் உப்புச்சத்தியாகிரகமும், காந்தியின் நிர்மாணத் திட்டங்களும் எதிர்ப்பும், இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும், மகாத்மாவின் இறுதிநாள்கள், கொலைச்சதியின் பாதை, காந்தியின் ரத்த வாரிசுகள், மகாத்மாவின் கொள்கை வாரிசுகள் எனும் பதினெட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
இந்த வைப்புமுறை காந்தியின் வாழ்க்கையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 'காந்தி' எனும் யுகபுருஷராய் நின்று நிலைத்துப்போன வரலாற்றை அறியப் பெரிதும் உதவுகிறது. சிக்கலற்ற எடுத்துரைப்பும், எளிமையான சொற்பயன்பாடும் வாசிப்புக்குச் சுவையூட்டுகின்றன. ஒரு கதைசொல்லும் போக்கிலமைத்துக் கொண்ட நூலின் நடை, பக்கங்கள் தோறும் புலப்படுவது சோர்வின்றிப் படிப்பதற்கான உற்சாகத்தைக் கூட்டுகின்றது. புனைவுகளை வாசிக்கும்போது அவற்றில் ஏற்படும் திருப்பங்களும், படைப்பாளி கையாளும் உத்திகளும் வாசகரை எளிதில் ஈர்த்துவிடும். ஆனால் அசலான ஒரு வரலாற்றைச் சொல்லும்போது கற்பனை, உவமை, திருப்பங்களை எழுத்தாளன் தான் விரும்பியவாறு இட்டு நிரப்பிவிட முடியாது. எனவே, இத்தகைய வரலாற்றை விவரிப்பதில் எழுத்தாளன் இடர்ப்பட வேண்டியிருக்கும். ஆனால் மு.சிவகுருநாதன் இந்த இடரில் சிக்கி நின்றுவிடாமல் மிக நேர்த்தியாகவும், செறிவாகவும் எடுத்துரைத்துள்ள பாங்கு தேர்ந்த எழுத்தாளரின் அடையாளமாகி விடுகின்றது.
இந்த வகையில், இந்த நூல் பெரிதும் ஈர்க்கும் தன்மையுடையதாகியிருப்பதை இங்குக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. இந்த நூலின் முதல் பதினாறு தலைப்புகள் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சுவையாக விவரிக்கின்றன என்பது உண்மைதான். ஓர் எழுத்தாளனின் பணி இத்துடன் முடிந்துவிடுவதன்று. இங்குத்தான் நூலாசிரியர் மு.சிவகுருநாதன் தன்னைச் சமூக அக்கறையுள்ள எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொள்கிறார். காந்தியின் வரலாற்றைச் சொல்லி இந்த நூலை நிறைவு செய்யாமல், காந்தியின் இரத்த வாரிசுகள் என ஒரு பகுதியையும் மகாத்மாவின் கொள்கை வாரிசுகள் என ஒரு பகுதியையும் சேர்த்துள்ள நிலையில்தான் இந்த நூல் முழுமை பெறுகிறது. எந்த ஒரு மனிதனும் தன்னுடைய வம்சத்தையும், கருத்தியலையும் விட்டுச் செல்வது இயல்பானதுதான். குறிப்பாக காந்தி எனும் மகாத்மாவின் வாழ்க்கையே இதற்குச் சான்றாக அமைகிறது. இந்த வகையில், காந்தியின் இரத்த வாரிசுகள், கொள்கை வாரிசுகள் குறித்து இந்நூல் கவனப்படுத்தியுள்ளது மிகச்சிறப்பானது.
நூலை நிறைவு செய்யும்போது, "இன்றைய நவீன உலகில் காந்தியவாதிகள் கதராடை உடுத்தியும் காந்தியைப் போன்று அரையாடையிலும் இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப்புற அடையாளங்கள் மட்டும் காந்தியத்தைப் பிரதிபலிப்பதாக அமையாது. இந்த மாதிரி வேடமிடும் பலர் நம்மில் வாழ்கிறார்கள். சித்தர்கள் மரபில் பித்தர்கள், எத்தர்கள் பலர் நுழைந்ததைப் போன்று காந்திய மரபிலும் போலிகள் பலவுண்டு. உண்மை, அன்பு, எளிமை, அகிம்சை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், அறம் சார்வாழ்வு, மது உள்ளிட்ட போதை விலக்கம், தனிமனித ஒழுக்கம் போன்றவை காந்தியத்தின் சில கூறுகளாகும். இவற்றை முடிந்தளவிற்கு நம் வாழ்வில் பின்பற்ற முயல்வதே மகாத்மா காந்திக்கு நாம் செய்யும் கைம்மாறாகவும் அஞ்சலியாகவும் இருக்க முடியும்” என நூலை நிறைவை செய்து, இதுதான் காந்தி எனும் மகாத்மா மனிதகுலத்திற்கு விட்டுச் சென்ற செய்தி, இதை உணர்ந்து கடைப்பிடித்து வாழ்வதுதான் காந்தி வாழ்ந்த வாழ்க்கையின் வெற்றி வளரிளம் பருவத்தினர்க்குத் தெளிவுபடுத்திவிடுகிறார் மு.சிவகுருநாதன்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள திரு.ஆர்.பட்டாபிராமன், "காந்தி குறித்த எந்த நூலும் படிக்காத ஒருவருக்கு, சிவகுருநாதன் நூல் கிட்டுமெனில், 'எல்லோருக்குமான காந்தி' நல்ல நுழைவாயிலாக இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக்கூற்று மிகச்சரியானது. ஏனெனில், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் படிக்கத் தொடங்கும் யாருக்கும் இந்த நூல் காந்தியின் வாழ்க்கை குறித்த தெளிவான சித்திரத்தை அளித்துவிடும். எனவே, தமிழில் காந்தியின் வாழ்க்கை குறித்த நூல்களில் இந்நூல் தனியிடமும் தனிக்கவனம் பெறும் என உறுதியாகச் சொல்லிவிடலாம்.
நூலாசிரியர் மு.சிவகுருநாதன் சமூக அக்கறை மிக்கவர். கல்வி, அரசியல், ஆளுமைகள், கலை, இலக்கியங்கள் குறித்து ஆழமான புரிதலும் நோக்கும் உடையவர். இதற்கு 'எல்லோருக்குமான காந்தி' எனும் நூலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
நூல் விவரங்கள்:
(எல்லோருக்குமான காந்தி / மு.சிவகுருநாதன் / 2026 / வெளியீடு: நன்னூல் பதிப்பகம், மணலி, திருத்துறைப்பூண்டி-610203 / தொடர்புக்கு: 9943624956 / பக்.198 / விலை ரூ.220)
நன்றி: முனைவர் பே.சக்திவேல்
நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ் ஏப்ரல் 2026






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக