வெள்ளி, ஜூன் 12, 2026

வதைகளின் கதை

 

வதைகளின் கதை

மு.சிவகுருநாதன்


 

              மாதவிடாய் பற்றி  இந்தச் சமூகத்தின் கற்பிதங்கள்  அதன் வலியைவிட மோசமாக நீளுகின்றன. மதம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் இந்த இயற்கை ஒழுங்கை தீட்டாக கற்பிதம் செய்து கூடுதல் வலியை ஏற்படுத்துகின்றன. இதை அப்படியே ஏற்கும் சமூகம்  பெண்ணின் வாதைகளைப் புரிந்துகொள்வதுமில்லை; பொருள்படுத்துவதுமில்லை. இதன் வலிகளைப் பலர் தங்களது படைப்புகளில் முன்வைத்துள்ளனர். பெண் வாழ்வில் எதிர்கொள்ளும் வலிகளை யதார்த்தமாக க.மூர்த்தி தனதுவதைமுகம்நாவலில் பதிவு செய்துள்ளார்.

         பெண்களின் அகநிலையினை எழுத்துக்களாக்கும் தருணங்களில் நான் எப்பொழுதும் என்னை எதிர்பாலின நிலைக்குள் கூடடைந்த பிறகே எழுதத் தொடங்குகிறேன்.  ஆணோடு கவர்ச்சியுற்று கூடத் தொடங்குகிறேன்.  அப்பொழுது எனக்குள் கனத்த மார்பகங்கள் பூக்கத் தொடங்குவதோடு.  எனக்கு அருகில் பசியில் கை கால்களை உதறி அழும் குழந்தைக்கு முலை ஈத்தக் கொடுக்கிறேன். பெண்ணுக்குள் கொப்பளித்துப் பெருகியோடும் இந்திரியத்தினை எனக்குள் ஒரு பெண் மடைமாற்றுகிற கணத்தில் எனது கருப்பை அவற்றினை எழுத்துக்களாக சூல்கட்டத் தொடங்குகின்றது”, என்ற முன்னுரைத்தலுடன் வெளியாகியிருக்கும் க.மூர்த்தியின் இந்நாவல் பெண் தன்னிலை சார்ந்த அவலங்களை வெகு இயல்பாக முன்வைக்கிறது.

         பஞ்சவர்ணம் கூத்துக் கலைஞர் ராஜலிங்கம் ஆகியோரின் ஒரே மகள் அல்லிப்பாவை நாவலின் முதன்மைப்புள்ளி. இவரது பார்வையில்தான் நாவல் நகர்கிறது. இவரது அம்மா பஞ்சவர்ணம் கிணற்றில் வீழ்பவர்களை தீயணைப்பு மீட்புப்படை வருவதற்கு முன்பாக தனியாளாக கிணற்றில் குதித்து மீட்பதால் நீர் சாகசக்காரி என்று வருணிக்கப்படுகிறார். அல்லிக்கு பாலூட்டுவதைப் பாதியில் வீட்டுவிட்டு கேட்கும் அபயக்குரலுக்கு செவிசாய்த்து ஓடுபவர். தனியார் பள்ளி வேனில் குழந்தைகளை அழைத்துவரும் சாதாரண ஊழியர். ஒருநாள் பள்ளிவேன் கிணற்றில் கவிழ நிறைய குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு இரு குழந்தைகளை அணைத்தபடி நீரில் இறந்துபோகிறார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கரியப்பட்டினம் மெட்ரிக் பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் (2009) பல குழந்தைகளைக் காப்பாற்றி இறந்த சுகந்தி டீச்சரை நினைவுபடுத்துகிறார். இதைப்போன்ற வரலாற்று நிகழ்வுகளில் நாவலில் ஆங்காங்கு பதிவாகின்றன. சாணிப்பால், சவுக்கடிக் கொடுமைகள், வன்கொடுமைகள், காணாப்பொணமாக்கப்படுதல், கூலிஉயர்வுப் போராட்டங்கள், நீடாமங்கலம் இழிவன்கொடுமை (1937), கீழவெண்மணிப் படுகொலை (1968),  என வரலாற்றின் பக்கங்கள் நாவலின் பக்கங்களில் வந்துபோகின்றன.

         நாவலின் போக்கில் சில நெருடல்கள் உள்ளன. “பிறகு கோர்ட் வழக்காக பெரியவர்தான் மூத்திரச் சட்டியை கையில் பற்றிக் கொண்டு அல்லாடினார்” (பக்.87) நீடாமங்கலம் கொடுமை நடந்தது 1937இல்; பெரியார் மூத்திரச் சட்டியுடன் அல்லாடியது 1970களில்


 

      வயல்காட்டு குடிசைக்குள் பிள்ளை குட்டிகளோடு படுத்து உறங்கிக்கொண்டிருந்த நாற்பத்தி நான்கு பேரை உயிரோடு கொளுத்தப்பட்டதற்கு நிவாரணம் தேடிக்கொள்வதைப் போல் இருப்பதாக நினைத்துக் கொள்வான்” (பக்.151) என்று வெண்மணிப் படுகொலை பற்றிய விவரிப்பு உள்ளது.  நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த உயிர்கள் அல்ல.  ஆதிக்க சாதியினரின் தாக்குதலுக்குப் பயந்து ராமய்யாவின் குடிசையில் ஒடுங்கிப்போய் சாம்பலான உயிர்கள் அவை.  ஓலைப்பாம்பு கடித்து விஷமேறி கால்விரலை எடுத்தல், கறையான் புற்றுகளை எறும்புகள் ஆக்ரமித்தல் போன்ற யதார்த்தமல்லாத செய்திகளும் நாவலில் பேசப்படுகின்றன. 

           பஞ்சவர்ணத்தின் தாய் தந்தை கதிர்வேலன்-சாந்தகுமாரி இருவரும் தஞ்சைப்பகுதிக்கு அறுவடைக் கூலியாய் வேலைக்குச் சென்றவர்கள். இவர்களது கதை அல்லிப்பாவையின் கனவாய் நாவலில் விரிகிறது.  அல்லிப்பாவை-நகுலன் கதையுடன் பஞ்சவர்ணம்-ராஜலிங்கம் கதையும் என மூன்று தலைமுறைகளின் கதை சொல்லப்பட்டுள்ளது. பஞ்சவர்ணத்தின் இறப்பை அடுத்து, அல்லிப்பாவைக்கு கருணையடிப்படையிலான பணி தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் கிடைக்கிறது. தனது மலையடிப்பட்டி கிராமத்திலிருந்து டோல்கேட் வந்து திருச்சி பால்பண்ணை தஞ்சாவூர் என்பதாக அவளது பணிக்கான பயணம் நீள்கிறது. உழைக்கும் அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வர்க்கப் பெண்களுக்கான வலிகளும் அவஸ்தைகளும் அச்சில் வடிக்க இயலாதவை. இதனுடன் அவளுக்கான மாதவிடாய் பெரும்போக்கு, நீர்க்கடுப்பு, சளித் தும்மலுடன் சிறுநீர் வெளியேறும் வதை, கருச்சிதைவு, மார்பகப் புற்றுநோய் என்று நாவல் முழுக்க வதைகளால் நிறைந்து வதைகளின் கதையாகிறது நாவல்.  

        அல்லிப்பாவையின் கதையுடன் மதிவதனி, ராஜநிலா, செல்லம் போன்ற பெண்களின் கதைகளும் இணைந்தே இருக்கிறது. தீர்க்கமான முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பது இவர்களுக்குள்ள ஒற்றுமையாகும். நீடாமங்கலம் இழிவன்கொடுமை குறித்த ஆவணங்களைத் தேடி வரும் நகுலனைப் பார்த்த மாத்திரத்திலேயே அல்லிக்குப் பிடித்து விடுகிறது. அப்பாவின் குரலுக்கு செவிசாய்க்காமல் நகுலனை விரும்பித் திருமணம் செய்கிறார். நகுலன் மனித உரிமைபோராளி என்றும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவன் என்றும் பின்னாளில் அறிந்துகொள்கிறார். ஆனால் வீட்டில் நகுலன் மனைவியின் உடல்நலம், விருப்பத்தைக்கூட அறியாதகாமப்பிசாசுவடிவமெடுக்கிறார். மேலும் காணாமற்போன இயக்கத் தோழர் மனைவியுடன் உறவு கொள்கிறார். கருக்கலைந்து, மார்பகப் புற்றால் ஒரு முலை அகற்றப்பட்ட நிலையில் நீக்கப்பட்ட கருப்பை நகுலனுக்கு பரிசளித்து அவளைவிட்டு நீங்குகிறார். பள்ளிப்பருவ நண்பன் கவிப்பிரியனின் நட்பு மீண்டும் பூக்கிறது


 

         அல்லியின் பேருந்துப் பயணத் தோழியான தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைசெய்யும் ராஜநிலா தான் விரும்பியே கூத்தை மாறனைத் திருமணம் செய்து கடும் அல்லலுக்கு ஆளாகிறார். மதிவதனி இயக்கத் தோழர் காளியப்பனின் மனைவி; இரு பெண்குழந்தைகளுடன் பீடி சுற்றிப் பிழைப்பை நடத்துபவர். காளியப்பனின் மறைவிற்குப்பின் இயக்கத் தோழர் பெருந்தகையை திருமணம் செய்துகொள்கிறார். அவருக்கு கவிதை எனும் அடுத்த பெண்குழந்தை பிறப்பை அறியுமுன்னர் பெருந்தொகை காணப்பொணமாக்கப்படுகிறார். பெருந்தகையின் தேடல் வழியே அல்லிக்கு நட்பாகும்  மதிவதனி, பெருந்தகையின் மரணத்தை அறிந்த இரவில் நகுலனுடன் இணைகிறார். அல்லியை நேரில் சந்திக்க இயலாது கடிதமெழுதிவிட்டு மூன்று குழந்தைகளுடன் வெளியேறுகிறார்.        கவிப்பிரியனின் மனைவி செல்லம் தன்னுடைய உடல்நலம் கருதி இரு குழந்தைகளுக்குப் பின்னர் கணவன் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் வெறுப்புற்று வேறொரு ஆண் துணையுடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்று விடுகிறார். இவர்களனைவரும் தீர்வைத்தேடி முடிவெடுத்துப் பயணிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக ஆண்கள் அவ்வாறாக இல்லை.

             காளியப்பன், பெருந்தகை, நகுலன் என்ற சமூகத்திற்காகப் போராடும் மூன்று இயக்கத் தோழர்கள் நாவலில் வருகிறார்கள். நீடாமங்கலம் இழிவன்கொடுமை (1937) நடந்த  காலகட்டத்தில் காளியப்பனின் அப்பா முனியப்பன் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர் என்ற தகவல் நாவலில் சொல்லப்படுகிறது (பக்.87). பிறரது இயக்கச் சார்பு பற்றிய குறிப்பில்லையென்றாலும் அதன்பிறகு தஞ்சைப்பகுதியில் மேலெழுந்த இடதுசாரி இயக்கங்கள் என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம். இந்த இயக்கத் தோழர்களின் வாழ்க்கையிலும் பொது அம்சங்கள் உண்டு. இவர்கள் குடும்பத்தைக் கவனிக்காதவர்; பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாதவர்கள். சமூகத்துடன் ஊடாடி அதைப் புரிந்துகொண்ட இவர்களால் தங்களது வாழ்க்கைத் துணையையும் குடும்பத்தையும் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதே பேரவலமாக இருக்கிறது. வீட்டில் அடுப்பெரிகிறதா, அனைவருக்கும் சோறு கிடைக்குமா என்ற கவலையில்லாமல்தோழர்களையும்அய்யாக்களையும் அடிக்கடி வீட்டுக்கு அழைத்துவரக்கூடியவர்கள். இதில் நகுலனின் பாலியல் விழைவு மோசமானதாக உள்ளது. மறுபுறத்தில் இயக்கத் தொடர்புகள், கொள்கைகள் ஏதுமற்ற கவிப்பிரியன் மனைவிக்காக செய்யும் செயல் அவள் பிரிவிற்குச்  செல்லும் நிலைக்குப் போய்விடுவதையும் காண முடிகிறது. இங்கு ஆண் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறான்.  

        பாலியல் வேட்கை, துய்ப்பு அனைவருக்கும் பொதுவாக இருப்பினும் இதன் அளவுகோல்கள் மாறுபடுகின்றன. இவை சமூகத்தால் கட்டமைக்கப்படுகின்றன; அவை வலிந்து திணிக்கப்படுகின்றன.   ஒடுக்கப்பட்ட பெண்களின் வலிகளைப் பேசும் பெண்ணிய நாவல் என்றாலும் ஆண்களும் இந்த சமூகக் கட்டுமானத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற உணர்வையும் நாவல் ஒருசேர உணர்த்துவதாக  கருதலாம். 

 

நூல் விவரங்கள்:

வதைமுகம் (நாவல்)

.மூர்த்தி

முதல் பதிப்பு: டிசம்பர் 2025

பக்கங்கள்: 208

விலை: ரூ.190

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.

தொடர்புக்கு: 044-26251968, 26258410

 

நன்றி: பேசும் புதியசக்திமாத இதழ் ஜூன் 2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக