நேபாளப் பேரிடர் உணர்த்தும் பாடங்கள்
மு.சிவகுருநாதன்
ஆகஸ்ட் 26, 2026இல் நேபாள வட எல்லைப்பகுதியான ரசுவா மாவட்டத்தின் கோசி, திரிசூலி நதிகளில் அளவுகடந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரம் பேருக்கு மேல் பலியாயினர்; பலரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த வெள்ளப்பெருக்கிற்கான காரணம் உடனடியாக தெரியாத நிலையில் அடுத்தடுத்து வெளியான செய்திகள் நம்மை அதிர்ச்சியடைய வைத்தன.
இதில் கோசி ஆற்றின் மீதிருந்த பாலங்கள், கரையோரம் இருந்த வீடுகள் மற்றும் கட்டடங்கள், அங்கிருந்த வாகனங்கள், உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தில் 1410 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 11 நீர்மின் நிலையத் திட்டங்கள் முற்றாக வெள்ளத்தால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 13750க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. அங்கு நிலவியல் அமைப்பே பெருத்த மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது.
நேபாள வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணம் என்று முன்னதாக சொன்ன அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட அதிர்வு 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளதை நில அதிர்வு தரவுகள், அதிர்வு அலைகள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றின் மூலம் கண்டறிந்ததாக விளக்கமளித்துள்ளது. பனிப்பாறை உடைந்தற்கான காரணத்தை விளக்கவில்லை. பனிப்பாறை ஏரி உடைப்பே திடீர் வெள்ளப் பெருக்கிற்கு காரணம் என்பதை நேபாள வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
பேரிடரிலிருந்து மீள்வதற்கு நேபாளத்திற்கு பல்வேறு நாடுகள் உதவிகள் வழங்கி வருகின்றன. இந்தியா 10 டன் நிவாரண பொருட்களை உடனே நேபாளத்துக்கு அனுப்பியது. அதனைத் தொடந்து 37 டன் நிவாரண பொருட்களுடன் இரண்டாவது விமானத்தையும் அனுப்பியது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக குழுக்களை அனுப்ப இந்தியா, அமெரிக்கா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்த நிலையில் அவற்றை நேபாள அரசு நிராகரித்துவிட்டது. தங்களது ராணுவம், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான ஆற்றலும், திறமையும் இருப்பதால், மீட்புப்பணிகளில் வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை என்றும் பிரதமர் பாலேந்திர ஷா அரசு முடிவு செய்துள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பின்னர், அந்நாட்டு அனுமதியுடன் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்கள் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
முன்னதாக 2015 ஏப்ரல் 25இல் நேபாள கோர்கா மாவட்டத்தில் 7.8 ரிக்டர் அளவில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்; 23,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைதொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் மீட்பு குழுக்களை நேபாளத்துக்கு அனுப்பின. அளவுக்கதிகமாக ராணுவ விமானங்கள், உலங்கு வானூர்திகள் நேபாளத்தில் குவிக்கப்பட்டதால், அந்நாடு மோசமான தளவாட, நிர்வாக மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்பட்டது. அயல்நாட்டு மீட்புக் குழுக்களுக்கிடையில் போட்டிகள் மற்றும் அவர்களை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட சிரமங்கள், நிர்வாகச் சிக்கல்கள் போன்றவற்றில் ஏற்பட்ட அனுபவப் பாடத்தைக் கொண்டு இம்முறை மீட்பு குழுக்களின் வருகையை நேபாள தடுத்துள்ளது. ஆனாலும் அயல்நாடுகளிலிருந்து பொருளாதார உதவியை எதிர்பார்க்கிறது. மீட்பு மற்றும் உதவிகளைக் காரணம் காட்டி ஒரு சிறிய நாட்டை வல்லாதிக்கம் எவ்வாறெல்லாம் சுரண்டும் என்பது இங்கு அறியவேண்டிய செய்தியாகிறது.
ஓரிடத்தில் பல மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும்போது அப்பகுதியை ஒட்டி வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். இதைத் தவிர மிகக் குறுகிய நேரத்தில் பெய்யும் அதிகனமழை, நீரிடி எனும் மேக வெடிப்பு, நிலச்சரிவு, பனிப்பாறை ஏரி உடைப்பு (Glacial Lake Outburst Flood - GLOF) ஆகியவற்றால் ஏற்படும் வெள்ளம் திடீர் வெள்ளப் பெருக்கு (Flash Floods) என்றழைக்கப்படுகிறது.
உயர்ந்த மலைப்பகுதிகளில் பனி உருகிய நீர் பள்ளங்களில் இயற்கை அணையாகத் தேங்குகிறது. இவை உறுதியான பாறைகளால் ஏற்படுவதில்லை. பனிச்சேறு மற்றும் மணற்துகள்களால் இவை தற்காலிகத் தடுப்பாக உருவாகின்றன. இந்த ஏரி போன்ற அமைப்பில் பெரிய அளவிலான பனிப்பறைகள் உடைந்து விழும்போது இதன் கரைகளும் உடைந்து பெரும்வெள்ளம் உண்டாகிறது. இத்தகைய நிகழ்வுதான் தற்போதைய பேரிடருக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நிலநடுக்கம், அதிகமான மழைப்போழிவு, ஏரியின் வலுவற்ற கரைகள் சேதமடைதல் போன்ற காரணங்களாலும் வெள்ளப்பெருக்கு உருவாகும் சாத்தியம் உண்டு. இப்பகுதிகளை முன்கூட்டியே கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும் வசதிகளோ திட்டங்களோ இமயமலை அமைந்துள்ள நாடுகளிடம் இல்லை.
மலைப்பகுதிகளில் வெள்ளநீர் கீழ்நோக்கி குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாகப் பாயும் போது அதன்வேகம் கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கும். நிலவியல்படி நேபாளம் அமைந்துள்ள இமயமலைப் பகுதியில் இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. நூற்றுக்கணக்கான பனியாறுகளைக் கொண்ட நேபாளம் தொடர்ந்து இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நாடாக மாறியுள்ளது. நேபாள நாட்டிற்கு திடீர் வெள்ளப் பெருக்குகள் ஒன்றும் புதிய செய்தியல்ல. 2025இல் கோசி ஆற்று வெள்ளம் நேபாளம் - சீனாவை இணைக்கும் ஒரு பாலத்தை இழுத்துச் சென்றது. உத்தர்காண்ட், சிக்கிம், இமாச்சல்பிரதேசம், லடாக் போன்ற இந்தியப் பகுதிகளிலும் இந்த அபாயங்கள் நேரிட வாய்ப்புகள் உண்டு.
இமயமலையின் செங்குத்தான சரிவுகளில் பாயும் ஆறுகளில் மழைக்காலங்களில் நீர் வேகமாகப் பள்ளத்தாக்குகளில் பாய்கின்றன. காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி தற்காலிக ஏரிகளை உருவக்குகின்றன. பனிப்பாறை உருகுதல் அதிகமாக இருக்கும்போது அதைத் தாங்கும் சக்தி இந்த இயற்கை அரணான மென்பாறைகளுக்கு இருப்பதில்லை. எனவே நிலச்சரிவு, பனிப்பாறை சரிவு, பனிப்பாறை ஏரி வெடிப்பு ஏற்பட்டவுடன் அங்குள்ள அதிக அளவிலான நீர் கீழ்நோக்கி வெள்ளமாகப் பாய்கிறது. இந்த வெள்ளம் திபெத்தில் தொடங்கி நேபாளம் (திரிசூலி) வழியாக இந்தியாவிற்கும் வருகின்றது. கோசி, கண்டகி ஆறுகள் நேபாளத்திலிருந்து இந்தியாவிற்குள்ளும் ஓடுகின்றன. இதனால் பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்களும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.
நேபாளத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கு இந்தப் பேரிடர் எச்சரிக்கையாக அமையும். இயற்கையை அதன் போக்கில் விடாமல் மனிதர்களும் அரசுகளும் வளர்ச்சி எனும் பேராசையால் அவற்றைச் சுரண்டும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இயற்கை நமக்கு பேரிடர்களைப் பரிசளிக்கும்போது அதிர்ச்சியில் உறைந்து போகிறோம். இதிலிருந்து நாம் பாடங்களை கற்கவேண்டும். இல்லையெனில் மனித சமூகத்தை பேரழிவிலிருந்து மீட்க முடியாது.
இன்று வணிகமயம் உலகை ஆட்டுவிக்கிறது. ஆன்மீகச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என்ற பெயரில் பெரிய வணிக அமைப்புகள் உருவாகியுள்ளன. இவர்கள் அறமற்று எதையும் வணிகமாக்கத் துணிந்துள்ளனர். கார்ப்பரேட் சாமியார்களும் வணிக நிறுவங்களும் பேராசையால் மனிதர்களை பலி கொடுக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் சூழலியலைக் கெடுத்தும் யானை வழித்தடத்தை அழித்தும் ஒன்றிய அரசின் உதவியுடன் கோவையில் அமைந்துள்ள ஈஷா மையத்திலிருந்து புனித யாத்திரைக்கு அனுப்பப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த 80 பேர் இந்த வெள்ளத்தில் மாயமாகியுள்ளனர். கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறுவனம் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 57 பேரை கைலாஷ் யாத்திரைக்கு அனுப்பி வைத்தது. இவர்களில் 20 பேர் மட்டும் உயிர் பிழைத்துள்ளனர். வானிலை நிலவரங்களை அறியாது சுற்றுலா ஏற்பாடுகளை வெறும் பணத்தாசை கொண்டு ஏற்பாடு செய்வது மிகவும் மோசமானது. வானிலைப்படி நேபாள நாட்டிற்குச் சுற்றுலா செல்ல அக்டோபர், நவம்பர் மாதங்களே சரியானதாகும். நேபாளச் சுற்றுலாவுக்கு ஜூன் முதல் செப்டம்பர் முடிய பருவமழைக் காலத்தைத் தேர்வு செய்வது அபாயகரமானது மட்டுமின்றி தடுக்கப்பட வேண்டியது என்பதும் இதன்மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் மட்டும் போதுமானதாக இருக்காது. இயற்கைப் பேரிடர்களை அறிவது, எச்சரிக்கைகளைப் பகிர்ந்துகொள்வது, பாதிப்புகளை தணிப்பது, நிவாரணப் பணிகளை இணைந்து மேற்கொள்வது போன்ற பல்வேறு ஒருங்கிணைப்பு நடவடிக்கை அவசியமானதாகும். இந்த வெள்ளத்தில் சீனா உரிய முன் எச்சரிக்கை விடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இரண்டாவது முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு சீனா எச்சரிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது.
2013இல் உத்தர்கண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் புனிதத்தலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 6,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2023இல் உத்தர்கண்டின் ஜோஷிமத் பகுதியில் கட்டிடங்கள் புதையுண்ட நிகழ்வுகள் இமயமலைப் பகுதியின் பேரபாயங்களை இந்தியாவுக்கு உணர்த்தின. ஆனால் இவற்றிலிருந்து எத்தகைய பாடங்களை நாம் கற்றுள்ளோம் என்பது கேள்விக்குரியது.
இளம் மடிப்புமலையான இமயமலையின் சரிவுகள் இயல்பாகவே நிலையற்ற தன்மை கொண்டவை. மேலும் இவை நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளவை. இமயமலைப் பகுதிகள் உலக வெப்பநிலை உயர்வு சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூடான், சீனா, ஆப்கானிஸ்தான், மியான்மர் ஆகிய இமயமலையுடன் தொடர்புடைய நாடுகள் இந்த வெள்ளத்திலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். இனிவருங்காலங்களில் பேரிடரைத் தணிக்க உரிய முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.
புவியை வெப்பமாக்குவதில் அனல்மின் திட்டங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. எனவே நீர்மின்சக்தி சூழலைக் கெடுக்காத ஒன்றாக அணுகப்படுகிறது. இருப்பினும் இதன் சூழலியல் பாதிப்புகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். நிலநடுக்கம், நிலச்சரிவு, பனிச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு நிகழும் இமயமலைப் பகுதிகளில் நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு நீர்மின்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தனியார் மின் நிறுவனங்களிடையே பெரும்போட்டி ஏற்பட்டு அரசுகளின் அனுமதியுடன் இயற்கை சூறையாடப்படுகிறது. இந்தப் பெருவெள்ளத்தில் 11 நீர்மின் திட்டங்கள் முற்றாக அழிந்துபோயின. இந்த வெள்ளத்திற்குப் பிறகு சிக்கிம் மாநிலத்திலுள்ள அனைத்துப் புதிய நீர்மின் திட்டங்களையும் கைவிடுமாறு அம்மாநில இனக்குழு அமைப்புகள் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளன.
சீனா டிசம்பர் 2024இல், உலகின் மிகப்பெரிய நீர்மின்சக்தித் திட்டமான மேடக்கில் யர்லுங் சாங்போ ஆற்றில் ஐந்து அணைகள் கொண்ட ஒரு தொடர் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 60,000 மெகாவாட் திறன் கொண்ட 137 பில்லியன் டாலர் செலவழித்துக் கட்டப்படும் இந்த அணைகள் அமையும் பகுதியில் 2025இல் 7.7 ரிக்டர் அளவிலான பேரழிவு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அணை அமையும் திபெத் பகுதியும் இமயமலைப் பகுதிகளும் அடிக்கடி நில அதிர்வு அபாயத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை.
இந்தியாவும் வங்காளதேசமும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த அணைகளால் ஏற்படும் பேரழிவுகளை எதிர்கொள்ள இந்தியா அருணாச்சலப் பிரதேசத்தில் "பாதுகாப்பு அணைகளைக்" கட்டத் திட்டமிட்டுள்ளது. ஓர் அணையின் உடைப்பை இன்னொரு அணையால் தடுக்க முடியும் என பொறியியல் வல்லுநர்கள் இந்திய அரசை நம்ப வைத்துள்ளனர். இதன் முதன்மை நோக்கமும் நீர்மின்சக்தி உற்பத்தி என்பதே உண்மை.
டிரான்ஸ் மற்றும் பெரிய இமயமலைப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயரமான நிலப்பரப்புகளில் உள்ள சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களையும் சமூக-பொருளாதார நன்மைகளையும் உறுதி செய்வதற்காகவும் அருகிவரும் பனிச்சிறுத்தை மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் உள்ளிட்ட உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டும், உயரமான இமயமலைச் சூழல் அமைப்புகளில் உள்ள ஆல்பைன் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் காடுகளின் நிலையான மேலாண்மையை ஊக்குவிக்கவும் இமயமலைப் பாதுகாப்புத் திட்டத்தை (SECURE Himalaya Project) இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் (MoEFCC), ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமும் (UNDP) இணைந்து, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியின் (GEF) நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சூழல் பாதிப்பு நடவடிக்கைகள் நின்றபாடில்லை. இமயமலைப் பகுதியில் கட்டுப்பாடற்ற மலையேற்றம் உள்ளிட்ட சூழலைப் பாதிக்கும் முயற்சிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
2010இல் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க்) உறுப்பு நாடுகள் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு ஒப்புதல் அளித்தன. இந்த மாநாடு 2013இல் நடைமுறைக்கு வந்தது. செயல்படாமல் முடங்கியுள்ள இந்த முன்முயற்சிகள் மீண்டும் தொடங்கப்படவேண்டும். மேலும் இமயமலை தொடர்பானவற்றில் சீனாவுடனும் உரிய பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும்.
இம்மாதிரியானப் பேரழிவுகளை இந்தியாவும் எதிர்கொண்டுள்ளது. 2021 பிப்ரவரியில் இமயமலைப் பகுதியில் உத்தரகாண்டில் நந்ததேவி பனியாற்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்து பனிச்சரிவு மற்றும் பெருவெள்ளப் பேரழிவு உண்டானது. கங்கையின் துணை ஆறுகளான தௌலி கங்கா, ரிஷி கங்கா மற்றும் அலக்நந்தா ஆறுகளில் பகல் நேரத்தில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு, உயரமான மலைப் பகுதிகளில் பரவலான பீதியையும் பெரும் பேரழிவையும் ஏற்படுத்தியது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டம் மற்றும் ரிஷி கங்கா நீர்மின் திட்டம் ஆகியன சேதமடைந்தன. சமோலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, பனியாற்று ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (GLOF) ஏற்பட்டிருக்கலாம் என்று தொடக்கத்தில் வல்லுநர்கள் நம்பினர். இமயமலை அதன் இயல்பிலேயே மிகவும் பலவீனமானது என்பதும் அதன் பாதுகாப்பில் கவனம் தேவை என்பதையும் இது உணர்த்தியது.
உத்தரகாண்டின் சமோலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பனியாற்று ஏரி வெடிப்பு வெள்ளத்தால் (GLOF) தூண்டப்படவில்லை என்று ஐசிஐஎம்ஓடி (ICIMOD) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியா, நேபாளம் மற்றும் திபெத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 47 பனியாற்று ஏரிகள் இருப்பதையும் இவற்றில் 21 பனியாற்று ஏரிகள் நேபாளத்தில் அமைந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது. மற்றொரு அறிக்கையில், நேபாளத்தில் 14 பனியாற்று ஏரி வெடிப்பு (GLOF) தொடர்பான நிகழ்வுகள் முன்பு ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
நேபாளத்தைப் போன்றே பூடானிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. பூடானில் அபாயகரமான 17 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பல முக்கிய நீர்மின் திட்டங்களை அழிக்கக்கூடிய அபாயம் உள்ளது.
இந்தியா, சீனா போன்று அனைத்து நாடுகளும் சுயநலக் காரணங்களுக்காக இயற்கையை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன. உடனடி லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு தொலைநோக்குப் பார்வையின்றி செயல்படுகின்றன. பேரழிவுகளிலிருந்து பாடங்ளை கற்க மறுக்கின்றன. இந்நிலை நீடித்தால் உத்தர்காண்டின் ஜோஷிமத் போன்று இமயமலைப் பகுதிகள் மனிதர்கள் வாழமுடியாத இடமாக மாறும் அபாயத்தைத் தடுக்க முடியாது. இனியாவது நாம் விழித்தெழுந்து சூழலியல் நோக்கிற்கு முதன்மையிடம் தர வேண்டும்.
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் அக்டோபர் 2026



