வியாழன், செப்டம்பர் 25, 2014

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் - உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் - உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

முத்துப்பேட்டை
செப் 23, 2014.

குழுவில் பங்குபெற்றோர் :  
                       
பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி
மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி,
முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை,
அபு ஃபைசல், பத்திரிகையாளர், சென்னை.



    முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தை ஒட்டி முஸ்லிம்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்படுவது கடந்த 20 ஆண்டு காலமாகத் தொடர்கதையாகி விட்டது. எங்கள் குழுவே இது தொடர்பாக இதற்கு முன் நான்கு முறை இங்கு வந்துள்ளது. எங்களின் பழைய அறிக்கைகள் இந்த வரலாற்றை விரிவாகக் கூறுகின்றன.

      எங்களின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளதை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் விநாயகர் ஊர்வலப் பாதையை மாற்றுவதொன்றே இதற்குத் தீர்வு என்பதையும் ஆணையாக இட்டுள்ளது. எனினும் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருவதுபோல மன்னார்குடி சாலை வழியாக ஊர்வலம் திருப்பப் படுவது ஒன்றே இதற்கான தீர்வு.   ஆனால் இது இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்துத்துவ சக்திகள் அதை நடைமுறைப்படுத்த விடுவதுமில்லை. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் வன்முறையைத் தடுக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்காததால் ஆண்டுதோறும் பிரசினை தொடர்கிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வந்தாலே இங்கு வாழும் முஸ்லிம்கள் அச்சம் பதட்டம் இழப்புகள் ஆகியவற்றைச் சந்திப்பதும் தொடர்கிறது. வன்முறையின் பலன்களை வன்முறையாளர்களே அனுபவிப்பது என்னும் கொடுமையும் தொடர்கிறது. இன்று முத்துப்பேட்டை பேரூராட்சி இடைத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெறத் துவங்கியுள்ளதை வேறெப்படி விளங்கிக் கொள்வது?



      இந்த ஆண்டும் ஊர்வலத்தில் முஸ்லிம் வீடுகள் தாக்கப்பட்டதை அறிந்து எங்கள் குழு மீண்டும் இங்கு வந்து நேற்று மாலை முழுவதும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டது. பா.ஜ.க மாவட்டத் தலைவர் பேட்டை சிவாவுடனும், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணபதி மற்றும் புலனாய்வு அதிகாரி சண்முகவேல் ஆகியோருடனும் பேசியது. இன்று காலை திருவாரூர் மாவட்ட ஏ..டி.எஸ்.பி அனார்கலி பேகம் அவர்களுடன் விரிவாகப் பேசியது.

சம்பவம்

      சென்ற செப்டபர் 3 அன்று விநாயகர் ஊர்வலத்தை ஒட்டிப் பெரிய அளவில் வெளி மாவட்டங்களிலிருந்து காவல்துறையினர் மற்றும் ஆயுத ரிசர்வ் படையினர் கொண்டு வந்து குவிக்கப் பட்டுள்ளனர். மதியம் 12 மணி முதல் ஊர்வலப் பாதையில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் காவல்துறை கெடுபிடிகள் கடுமையாக இருந்துள்ளன. யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. பள்ளிவாசல்களிலும் கூட தொழுகை நேரம் தவிர பிற நேரங்களில் யாரும் இருக்க அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகமே அன்று முழுவதும் ஒட்டு மொத்தமாக சிறைக் கைதிகள் போல நடத்தப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் எப்போதும்போல அவர்கள் சொன்ன நேரத்தைத் தாண்டி சுமார் 8மணி அளவில் பழைய பஸ் ஸ்டான்ட் அருகே வந்தபோது இரவுத் தொழுகைக்காக பாங்கு ஒலித்துள்ளது. காவல்துறையினர் ஊர்வலத்தை நிறுத்தியுள்ளனர். உடனடியாகக் கூட்டத்தில் தலைமை ஏற்று வந்து கொண்டிருந்த பா.ஜ.க செயலாளர் கருப்பு (எ) முருகானந்தம் முதலானோர் காவல்துறையினர் முஸ்லிம்கள் வீட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டுத் தமக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி மைக்கில் முழங்கத் தொடங்கியுள்ளனர்.

   மீண்டும் ஊர்வலம் நகர அனுமதிக்கப் பட்டபோது பழைய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ரயில்வே கேட் வரை இரு பக்கங்களிலும் உள்ள முஸ்லிம் வீடுகள் மீது ஊர்வலத்தினர் கல் வீசித் தாக்கத் தொடங்கியுள்ளனர். சுமார் 10 வீடுகளில் சன்னல் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்ததை எங்கள் குழு கண்டது. என்ன நடக்குமோ என்கிற அச்சத்துடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு முஸ்லிம்கள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

      இப்படியான கல் வீச்சுக்கள் நடந்தபோது காவல்துறைக் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் மற்றும் மூன்று மாவட்டக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இருந்த காவற் படையினர் அதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளதை. வீடியோ பதிவுகள் காட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் சாலையின் இரு மருங்கிலும் கயிறுகள் கட்டப்பட்டு ஊர்வலம் கட்டுக்குள் செல்லுவதற்கு வழி செய்யப்பட்டிருந்தது. அத்து மீறி முஸ்லிம் வீடுகள் பக்கம் நகர்வோர் உடனடியாக அங்கு நின்றிருக்கும் காவலர்களால் தடுக்கப்பட்டு கயிறுகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளவும் அது வசதியாக இருந்தது. இம்முறை அதுவும் இல்லை என்பதும் ஏன் அது இம்முறை கடை பிடிக்கப்படவில்லை என்பதும் தெரியவில்லை. ஊர்வலத்தில் செல்வோர் முஸ்லிம் வீடுகளின் மீது எறிவதற்காக சாலையில் கிடக்கும் கற்களைப் பொறுக்குவதையும் வீடுகளின் மீது வீசுவதையும் காட்டும் வீடியோ பதிவுகள் உள்ளன.
  
      அடுத்த நாள் (செப் 4) வீடுகள் தாக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.முத்துப்பேட்டை காவல் நிலையம் மு.த.அ.எண் 361 முதல் 368 வரை உள்ள அறிக்கைகளை எம் குழு பர்வையிட்டது.இ.த.ச 143, 188, 506 (2), பி.பி.டி சட்டம் 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கருப்பு (எ) முருகானந்தம், ராஜேந்திரன், மகேஷ், குமரப்பா, குமரவேல் ஆகியோர் தலைமையில் வந்த ஊர்வலத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

      அடுத்த நாள் காலை சுமார் 4 மணி அளவில் கொய்யா மகால் அருகில் உள்ள எல்சன் ஷேக் தாவூது என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடை வைத்துள்ள மணி என்பவரின் கடைக்குள் ஷட்டரைத் தூக்கி பெட்ரோல் தோய்த்த எரியும் துணி ஒன்று உள்ளே வீசப் பட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைதுள்ளன. முஸ்லிம்கள் மீது பழி வர வேண்டும் என இது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் கடை வைத்துள்ளவர் இந்துவானாலும் கடை முஸ்லிம் ஒருவருடையது என்பது குறிப்பிடத் தக்கது.

      அன்று மதியம் 11 மணி அளவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருப்பு உட்பட சுமார் ஆறு பா.ஜ.க மற்றும் இந்துத்துவத் தலைவர்கள் திடீரென முத்துப்பேட்டைக் காவல் நிலையத்திற்குள் புகுந்து எங்கள் மீது ஏன் வழக்குத் தொடுத்துள்ளீர்கள், எங்கள் ஆட்களை ஏன் கைது செய்கிறீர்கள், முடிந்தால் எங்களைக் கைது செய்யுங்கள் எனச் சவால் விட்டுள்ளனர். தாங்கள் அவ்வாறு காவல் நிலையம் சென்றதை பா.ஜ.க மாவட்ட நிர்வாகி பேட்டை சிவா எங்களிடம் ஏற்றுக் கொண்டார். முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ளவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக யாரோ சில சுமார் 10 பேர்களைத் தற்போது பெயருக்குக் கைது செய்துள்ளனர். வன்முறைகளுக்குக் காரணமான கருப்பு உள்ளிட்டோர் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நடமாடிக் கொண்டுள்ளனர்.

     காவலுக்குக் கொண்டுவரப்பட்ட காவல்துறையினர் மேற்கொண்ட சில பாலியல் அத்துமீறல்கள் இம்முறை வெளிவந்துள்ளன. காவலர்கள் பெண்கள் தனியாக உள்ள வீடுகளில் புகுந்து தண்ணீர் கேட்பது முதலான பாவனைகளில் அங்குள்ள பெண்களிடம் சில்மிஷங்கள் செய்துள்ளனர். சுமார் 50 நிகழ்வுகள் இவ்வாறு நடந்துள்ளன என ஒருவர் எங்களிடம் தெரிவித்தார்.  பெண்கள் தொடர்பான பிரச்சினை என்பதால் பலரும் இதைப் பெரிதாக்காமல் மனசுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அவமானத்தில் நொந்து போயுள்ளனர். இவற்றில் சில பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. (எ.கா: ‘காக்கி உடையில் வந்த கயவர்கள்’, நக்கீரன், செப் 20 – 23). ஆகஸ்ட் 4 அன்று இரவு பட்டறைகுளம் பகுதியில் உள்ள துப்புரவுப் பணியாளர் தெருவில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த ஒரு காவலர் சரோஜா எனும் பெண்ணிடம் வம்பு செய்ய அவரை உடனடியாக அப்பகுதி மக்கள் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்புவிக்க, அவர்கள் அந்தக் காவலரைத் தப்புவித்துள்ள செய்தி பத்திரிக்கையில் வந்துள்ளது.

      செப் 8 அன்று பழைய தியேட்டர் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து வம்பு செய்த திருத்துறைபூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சந்திரசேகர் என்பவரை அப்பகுதி மக்கள் தாக்கியபோது அவர் தையல் எந்திரத்தின் மீது விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு முத்துப்பேட்டைக் காவல்துறையினர் முஸ்லிகள் மீது வழக்குப் போட்டு அச்சுறுத்தலைத் தொடங்கியுள்ளனர்.  வீடுகளில் கல்லெறிந்து சேதம் விளைவித்ததற்காக வன்முறைக்குக் காரணமான சிலர் கைது செய்யப்பட்டதற்கு ‘பாலன்ஸ்’ பண்ணுவதற்காக இப்படி முஸ்லிகள் சிலர் மீது பொய் வழக்குப் போட்டு தொல்லை செய்கின்றனர். அதோடு இப்படிச் சில முஸ்லிகள் மீது வழக்குப் போட்டு மிரட்டினால்தான் அவர்கள் தாங்கள் கொடுத்துள்ள புகார்கள் பற்றி ஒன்றும் பேசாமல் இருப்பார்கள் எனவும் காவல்துறை கருதுவதாகத் தெரிகிறது. “எங்களுக்குக் கொஞ்சம் முஸ்லிம்கள் வேணும்” என ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

     இப்படிப் பாதிக்கப்பட்ட சிலரையும் நாங்கள் சந்திக்க முடிந்துள்ளது. நெய்யக்காரத் தெருவிலுள்ள அன்சாரி என்பவர் காவலர் சந்திரசேகர் தாக்கப்பட்ட வழக்கில் 506 (2) பிரிவில் கைது செய்யப்பட்டு நேற்று மாலைதான் பிணையில் வெளி வந்துள்ளார். சந்திரசேகரைத் தாக்கியவர்களில் ஒருவர் என இத்ரிஸ் என்பாரைத் தேடி வந்தவர்கள். இத்ரிஸ் கனி என்கிற பெயரைத் தவிர அச் சம்பவத்தோடு வேறு தொடர்பே இல்லாத அன்சாரியின் தம்பி வீட்டில் ஆகஸ்ட் 6  இரவில் காம்பவுன்ட் சுவர் ஏறிக் குதித்து கதவுகளைத் தட்டி அட்டகாசம் செய்துல்ளனர். இத்ரிஸ் அப்போது ஊரில் இல்லை. மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரது சகோதரி மகனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்ரிசின் அண்ணன் அன்சாரி கைலி பனியனுடன் காவல் நிலையம் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டு ரிமான்ட் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் சுவாமிநாதன்தான் காம்பவுன்ட் சுவரேறிக் குதித்தவர்.

     கல்கேணித் தெருவில் உள்ள காதர் ஹுசேன் என்பவர் சந்திரசேகர் தாக்கப்பட்ட போது சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு என்ன நடக்கிறது எனப் பார்க்கச் சென்றுள்ளார். அவரைத் தேடி வருவதாகச் சொல்லி  11ந் தேதி இரவு 12.45 மணி அளவில் அவரது மனைவி ரம்ஜான் பேகமும் மகளும் தனியாக இருந்தபோது எஸ்.ஐ சுவாமிநாதன் மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி குணசேகரன் தலைமையில் வந்த காவலர்கள் வெளி கேட் மற்றும் வீட்டுக் கதவுகள் உடையும்படி சேதப் படுத்தி பெண்களை அச்சுறுத்தியுள்ளனர். காதர் ஹுசேன் தான் கைது செய்யப்பட நேருமோ என அஞ்சி இப்போது தலைமறைவாக உள்ளார். காதர் ஹுசேனிடம் முன்னதாக குணசேகரன் பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
இந்தப் பிரச்சினையில் தற்போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட அன்சாரி மட்டுமல்லாமல் ஆசாத் நகர் மீரா ஹுசேன், கொய்யாத் தோப்பு ஹலீல் ரஹ்மான் எல்லோருமே அப் பிரச்சினையில் எந்தவகையிலும் சம்பந்தப்படாதவர்கள்.

      பெண்களிடம் காவலுக்கு வந்திருந்தவர்கள் செய்த சில்மிஷங்கள் குறித்து ஒரு காவல் அதிகாரி, “பாதுகாப்புக்கு இவன்களைக் கொண்டு வந்தால், இவன்களிடம் இருந்து ஜனங்களைப் பாதுகாக்க வேண்டி இருக்கு” என அலுத்துக் கொண்டதையும் சிலர் எங்களிடம் கூறினர்..

  காவல்துறைக் கண்காணிப்பாளருடன் எங்களுக்குத் தொடர்பு கிடைக்காததால் திருவாரூர் மாவட்ட ஏ..டி.எஸ்.பி அனார்கலி பேகம் அவர்களிடம் பேசினோம். ஊர்வலப் பாதையை மாற்றுவது தொடர்பான நீதிமன்ற ஆணை குறித்த தகவல்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை எனவும் தற்போது அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் அடுத்த ஆண்டு அது நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும் எனவும் கூறினார். முஸ்லிம் வீடுகளைத் தாக்கியபோது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அதிகாறிகள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். அப்பாவிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அடுத்த ஆண்டு வெளியூர்களிலிருந்து விநாயகர் ஊர்வலத்திற்கு ஆட்கள் கொண்டு வருவதையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



எமது பார்வைகளும் பரிந்துரைகளும்
  1. இப்படி ஆண்டுதோறும் முத்துப்பேட்டை வாழ் முஸ்லிம்கள் அஞ்சிக் கிடப்பதும், ஊர்வலம் முடியும் வரை அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க நேர்வதும் மிகவும் வேதனைக்குரிய ஒன்று. வெளியிலிருந்து ஒரு பெருங் கும்பல் அசிங்கமாகப் பேசி கல்வீசித் தாக்கும்போது உள்ளே அடைந்து கிடக்கும் இளம் பிள்ளைகளின் மனம் எத்தனை பாடுபடும், அது பிற்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கவலை அரசுக்கும் நிர்வாகத்திற்கும் இல்லாதது வேதனை. ஊர்வலத்தில் செல்பவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது எனத் தாங்கள் சொல்லியிருந்த போதும் பாங்கு ஒலிக்கும்போது தடுத்து நிறுத்தப்பட்டதால் சிலர் வன்முறையில் ஈடுபட நேர்ந்து விட்டது எனப் பேட்டை சிவாவும் ஏற்றுக் கொண்டார்.
  2. இப்படியான அச்சம் முஸ்லிகள் மத்தியில் நிரந்தரமாக எற்படுத்தப் பட்டுள்ளதைப் பயன்படுத்திச் சில காவல்துறையினர் மிரட்டல்கள், லஞ்ச ஊழல்கள், பணம் கேட்டுத் தொல்லை செய்தல், பொய் வழக்குப் போடுதல், பெண்களிடம் சில்மிஷம் முதலியவற்றைச் செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது.
  3. இந்த நிலைமையைத் தடுப்பதற்கான ஒரே வழி ஊர்வலப் பாதையை பட்டுக்கோட்டை சாலையிலிருந்து மாற்றி மன்னார்குடி சாலை வழியாக அனுப்புவதுதான். அரசும் மாவட்ட நிர்வாகமும் இதை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். எங்களிடம் பேசிய பேட்டை சிவா எக்காரணம் கொண்டும் ஊர்வலப் பாதையை மாற்றுவது என்கிற விஷயத்தில் எந்தச் சமரசமும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.
  4. இம்முறை ஊர்வலத்தினர் தாக்கியபோது பார்த்துக் கொண்டு அமைதி காத்த காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப் பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கருப்பு முதலானவர்கள் மீது மு,த.அ பதிவு செய்யப்பட்டிருந்த போதும், காவல் நிலையத்திற்கு வந்து அவர்கள் சவால் விட்ட பின்னும் அவர்கள் கைது செய்யப்படாமல் அனுப்பப் பட்டது குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் காவலர் சந்திரசேகரனைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட அப்பாவிகள் வழக்கிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
  5. ஊர்வலத்தில் வன்முறை செய்பவர்கள் பெரும்பாலும் வெளியிலிருந்து கொண்டு வரப்படும் ஆட்கள்தான். இம்முறை நாகப்பட்டினம், மீமிசல், ஒரத்தநாடு, நீடாமங்கலம் முதலான ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இது தடை செய்யப்பட வேண்டும்.
  6. இருபதாண்டுகளுக்கும் மேலாக விநாயகர் ஊர்வல வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இதன் சகல பரிமானங்களையும் ஆய்வு செய்யவும், நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
  7. இவ்வாறு அடிக்கடி மத வன்முறைகள் நடைபெறும் பகுதிகளில் காவல்துறையில் போதிய அளவில் சிறுபான்மையினர் நியமிக்கப்பட வேண்டும் என சச்சார் ஆணையம் பரிதுரைத்துள்ளது. இது இம்மாவட்டத்தில் குறிப்பாக முத்துப்பேட்டை பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தவிரவும் இத்தகைய பகுதிகளில் காவல் நிலையங்களில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். 

தொடர்பு : 

அ.மார்க்ஸ், 
தய்.கந்தசாமி,
 27/7, ஏ.எஸ்.என். காம்ப்ளெக்ஸ், 
திருத்துறைப்பூண்டி- 614 713.  
செல்: 
+91 94441 20582, 
+91 9486912869

நன்றி: அ.மார்க்ஸ்

ஞாயிறு, ஜூலை 20, 2014

தருமபுரி கைதுகள் : இன்று வெளியிடப்பட்ட எங்களின் கூடுதல் அறிக்கை

தருமபுரி கைதுகள் : இன்று வெளியிடப்பட்ட எங்களின் கூடுதல் அறிக்கை


[இன்று மீண்டும் எம் குழு தருமபுரி சென்றது. தற்போது அங்கு கைது செய்யப்பட்டுள்ள  எட்டு பேர்களில் அறுவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டமும் (NSA) போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அந்த ஆணை, போலீஸ் காவலில் இந்த அறுவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த இணைப்புடன் எங்கள் அறிக்கையை தருமபுரியில்  இன்று (ஜூலை 18) வெளியிட்டோம்.  காவல் துறைக் காவலில் கொண்டு செல்லப்பட்ட இந்த அறுவரும் கடும் சித்திரவதைகளுக்குப் பின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே நாங்கள் வெளிட்டுள்ள அறிக்கை முன்னதாக முகநூல் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக இன்று வெளிடப்பட்டுள்ள அறிக்கை மட்டும் இங்கே.]

இணைப்பு

1. சென்ற ஜூலை 10, 2014 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு விவேகானந்தன் முன்னதாகக் கைதுசெய்யப்பட்ட சக்தி, சந்தோஷ் முத்லான ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார் [எஸ்.சி.(தே.பா.ச) எண் 10/ 2014]..

இந்த ஆணையில் ஜூன் 28 அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சக்தி உள்ளிட்ட அறுவரும் 27 அன்று இரவு 11.30 மணிக்கு நத்தம் காலனியில் கூடி அடுத்த நாள் காலையில் மதியழகன் என்ன்பவரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் அவர்களில் மூவர் (சந்தோஷ், சங்கர், அதியமான்) தருமபுரியில் போலீஸ் காவலில் இருந்தனர். மற்ற மூவர் (சக்தி, துரை, அசோக்) அவர்களைத் தேடி தருமபுரி காவல் நிலையத்திற்கு, கவல்துறை எஸ்..பி.சி.ஐ.டி சிங்காரம் அறிவுறுத்தியபடி, வந்து கொண்டிருந்தனர். பின்னிரவு 12 மணி வாக்கில் அவர்களும் கைது செய்யப்பட்டனர். எனவே இந்த நேரத்தில் அவர்கள் நத்தம் காலனியில் சதி செய்துள்ளனர் என்பது அப்பட்டமான பொய்.

28ந்தேதி காலை 5 மணிக்கு நாய்க்கன் கொட்டாயில் மூவரும், பிறகு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தங்கன் குட்டையில் மூவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக ஆட்சியரின் ஆணையில் குறிப்பிடப் படுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் அறுவரும் போலீஸ் காவலில் இருந்துள்ளனர்.

தங்கள் வீடுகள் தாக்கப்பட்டதற்காக ஆத்திரமுற்று, அதற்குக் காரணமான சாதியினரைக் கொலை செய்ய வேண்டி. ஆயுதப் பயிற்சிக்காக, சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்ட துடி அமைப்பில் சேர்ந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்ததாகவும் மாவட்ட ஆட்சியரின் ஆணை கூறுகிறது. சமூகப் பணி செய்யும் துடி அமைப்பு எவ்வாறு ஆயுயதப் பயிற்சி அளிக்க முடியும் அந்த அமைப்பிற்கும் நக்சல்பாரி அமைப்பிற்கும் என்ன தொடர்பு, அல்லது அதையே ஒரு நக்சல்பாரி அமைப்பாக மாவட்ட ஆட்சியர் கருதுகிறாரா என்பவற்றிற்கு எந்த விளக்கமும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் கடும் சித்திரவதையின் அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளன.

ஆக மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் (without applying his mind), காவல்துறையின் கூற்றை அப்படியே ஏற்றுத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புக் காவல் அதிகாரத்தைத், தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என இக்குழு கருதுகிறது. இதை அரசும் மத்திய உள்துறைச் செயலகமும் கணக்கில் கொண்டு இந்த ஆணைக்கு ஒப்புதல்வழங்கக் கூடாது என இக் குழு வேண்டிக் கொள்கிறது.

2. சென்ற ஜூலை 14ந் தேதிய சென்னை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஒரு மேற்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மேலதிகாரிகளுக்குப் புகார் செய்துள்ளதாகவும், அது தொடர்பாக உளவுத் துறையினர், தாங்கள் அவரது தொலை பேசியை ஒட்டுக் கேட்கவில்லை, அவரது டிரைவரின் தொலைபேசியைத்தான் ஒட்டுக் கேட்டதாகக் கூறுவதாகவும் ஒரு செய்தி வந்தது. இந்த டிரைவர் அடிக்கடி காவல்துறை வாகனத்தை சேலத்திற்கு ஓட்டிச் சென்றது குறித்துப் புகார் வந்ததாகவும், அப்படி ஓட்டிச் சென்றது சுங்கச் சாவடி சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளதாக உளவுத் துறையினர் சொல்வதாகவும் அச் செய்தி கூறுகிறது.

இது தொடர்பாக ‘சவுக்கு’ எனும் ஒரு சமூக ஊடக வலைத் தளம் சில புகார்களை முன்வைக்கிறது. . காவல்துறையில் உள்ள குழு மோதல்கள் இதற்குப் பின்னணியாக உள்ளதெனவும், அந்த எஸ்.பி வேறு யாருமல்ல தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்தான் எனவும் அது கூறுகிறது. தவிரவும் காவல்துறை வாகனம் தினந்தோறும் அஸ்ரா கார்கின் மைத்துனி கீர்த்தி ஶ்ரீ என்பவரை தருமபுரியிலிருந்து அவர் எம்,டி படிக்கும் சேலம் வினாயகா மிஷன் மருத்துவமனைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிடுகிறது. இந்த மருத்துவமனையின் கிட்னி ஊழ;லை விசாரித்த ஒரு அதிகாரி எவ்வாறு அதே மருத்துவமனைக் கல்லூரியில் தன் மைத்துனியை அதிகத் தொகை கொடுத்துப் பெறக்கூடிய ஒரு மேற்படிப்பில் சேர்த்தார் என்கிற அய்யத்தையும் அது முன் வைக்கிறது.

இவை  உண்மையா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது எங்களது நோக்கத்திற்கு உட்பட்டதல்ல. ஆனால் தன் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகப் புகார் கொடுத்த அதிகாரி அஸ்ரா கார்க்தான் எனில் அவருக்கும் காவல்துறை மேல்மட்டத்திற்கும் இடையே உள்ள பிளவுக்கும் இந்தக் கைதுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இன்று இந்தக் கைது நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொண்டு மீண்டும் நக்சல்பாரி இயக்கம் இப்பகுதியில் உயிரூட்டப் படுவதாகப் பீதியைக் கிளப்புவது அவருக்குப் பயன்படலாம்.. தான் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தவர்களைக் கைது செய்யும் முக்கிய பணியில் உள்ளபோது இப்படி மேலதிகாரிகளால் பழி வாங்கப் படுவதாக ஒரு கருத்தை உருவாக்க இந்த உற்சாகம் காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

எப்படி ஆயினும் இத்தகைய அய்யங்கள் உள்ள சூழலில் தமிழகக் காவல்துறை இவ்வழக்கைப் புலனாய்வு செய்தால் நீதி
கிடைக்காது எனவும், மேலும் பல அப்பாவி தலித்கள் பழிவாங்கப்படுவதற்கும், இரு சமூகங்களுக்கும் இடையே உள்ள பகை அதிகரிக்கவுமே இது வழி வகுக்கும் எனவும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்.

எங்களைப் பொறுத்த மட்டில் வன்முறை அரசியலையும், அதற்கென ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதையும் கண்டிக்கிறோம். அது குறித்துப் புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு பொறுப்புள்ளதையும் ஏற்கிறோம். ஆனால் இந்தப் பொறுப்பு பழி வாங்கும் நோக்கில் யார் மீதும் பயன்படுத்தப்படக் கூடாது எனவும், அதைவிடவும் இது இரு சமூகங்களுக்கு இடையே உள்ள பகையை அதிகரிக்கப் பயன்படுத்தப் படக் கூடாது என்பதிலும் கவலை கொள்கிறோம்.

எனவே நாங்கள் கோருகிற நீதிபதி விசாரணையில் இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்டல் புகாரும் உள்ளடக்கப்பட்டு விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறோம். நக்சல்பாரித் தொடர்புகள் குறித்த விசாரணை தேவை எனில் வேறு புலனாய்வு முகமைகள் மூலமாக அது செய்யப்பட வேண்டும் என்கிறோம்.

ஜூலை 4 அன்று இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொலை செய்யும் நோக்குடன் ஆயுதங்களுடன் சென்ற கதை முற்றிலும் பொய் என்பதால் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பான முன் குறிப்பிட்ட முதல் தகவல் அறிக்கை முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.

நன்றி:  அ.மார்க்ஸ்

புதன், ஜூலை 09, 2014

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு அறிக்கை

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள்  

                                   உண்மை அறியும் குழு அறிக்கை


(பகுதி I )
                                                                                                                                                                சென்னை.                                                                                                                                                  ஜூலை 9, 2014

இந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்:

1.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (Peoples UNion for Human RIghts), சென்னை,
2.வி.சீனிவாசன், சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை,
3.பேரா ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயக முன்னணி (Peoples Democratic Front), பெங்களூரு,
4.பேரா. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,
5.வழக்குரைஞர் ஏ. சையதுஅப்துல் காதர், மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights), மதுரை,
6.வினோத், சேவ் டமில்ஸ் இயக்கம் (Save Tamils Movement)), பெங்களூரு,
7.ஷ்ரீலா மனோகர், சமூக ஆர்வலர், சென்னை.

      தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆயுதப் போராட்ட அமைப்புகளில் இணைந்துள்ளதாகவும், இளவரசன் நினைவு நாளன்று அப்பகுதி வன்னிய சாதியைச் சேர்ந்த சில முக்கியமானவர்களைக் கொல்லச் சதி செய்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் சென்ற மாத இறுதியில் செய்திகள் வெளிவந்தன. அதை ஒட்டி அதே வாசகங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கண்டன அறிக்கையும் வெளி வந்தது. நத்தம் காலனி தலித் மக்கள் அக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்ததோடு காவல்துறை அத்துமீறல்களால் தாங்கள் துன்புறுத்தப் படுவதாகவும் கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, மா-லெ இயக்கங்கள் ஆகியனவும் இக் கைதுகளைக் கண்டித்திருந்தன.

இந்நிலையில் இது குறித்த உண்மைகளைக் கண்டறியும் நோக்குடன் எமது குழுவினர் சென்ற ஜூலை 5 மற்றும் 8 தேதிகளில் தருமபுரி வந்திருந்து நத்தம் காலனி மக்களையும் அதிகாரிகளையும் சந்தித்தோம்.

கைது செய்யப்பட்டுள்ள துரையின் மனைவி செல்வி (37), சங்கர், அசோக் ஆகியோரின்  சகோதரி சுமதி (27), சந்தோஷின் தாய் சாலம்மா, சக்தியின் மனைவி தமிழ்செல்வி, கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ளோர், கைது நடவடிக்கைகளின்போது நேரில் இருந்த வி.சி.க பொறுப்பாளர் பழனிச்சாமி மற்றும் பல நத்தம் காலனி மக்கள் ஆகியோரைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டோம். ஆயுதப் பயிற்சி அளித்ததாகக் காவல்துறையால் குற்றம் சாட்டப்படும் ‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு, அதன் காப்பாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கிறிஸ்துதாஸ் காந்தி, இளவரசன் நினைவு நாளன்று கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ரஜினிகாந்த், அன்று இரவு தாக்கப்பட்ட அவரது வாகனத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு அவர்களது விளக்கங்களையும் பெற்றுக் கொண்டோம்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் கருத்துக்களை அறிவதற்காக ஜூலை 5 அன்று முழுவதும் முயன்றும் ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளரைச் சந்திக்க இயலவில்லை. ஒரு ஐந்து நிமிடச் சந்திப்புக்கு அனுமதி வேண்டிப் பலமுறை வேண்டியும் இருவரும் பதிலளிக்கவில்லை. வீடுகளுக்குச் சென்று அனுமதி கேட்ட போதும் சாத்தியமாகவில்லை. மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு வேலைச் சுமை இருக்கத்தான் செய்யும் என்பதை ஏற்று, எங்களுக்குச் சிரமமாயினும் மீண்டும் எல்லோரும் நேற்று தருமபுரி சென்று இருவரையும் சந்திக்க முயன்றோம். வழக்கமாக விரிவாகப் பேசக் கூடிய கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அவர்கள் “இது தொடர்பாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனது புலனாய்வு அதிகாரியைச் சந்தியுங்கள்” என்பதோடு முடித்துக் கொண்டார். புலனாய்வு அதிகாரியான கிருஷ்ணஅபுரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) காந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர், தான் கஸ்டடியில் உள்ள கைதிகளின் விசாரணையில் உள்ளதாகவும் தன்னை இப்போது சந்திக்க இயலாது எனவும் பதில் அளித்தார். நாளையேனும் சில நிமிடங்கள் பேச அனுமதி கோரி, மீண்டும் இன்று காலை நாங்கள் தொடர்பு கொண்டோம். “முதல்நாள் இரவே எல்லோரையும் கைது செய்துவிட்டு அடுத்த நாள் அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யச் சென்றபோது பிடித்ததாகப் பொய் வழக்கு போட்டுள்ளீர்களே” என முதல் கேள்வியைக் கேட்டவுடனேயே, அதை மறுக்காமல், “இதெல்லாம் நேரிலதான் பேச முடியும். இப்ப எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. தாங்க்ஸ்” எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார்.

கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த சந்தோஷ், துரை, சக்தி ஆகியோரை ‘கஸ்டடி’ எடுக்கக் காவல்துறையினர் ஜூலை 5 அன்று தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தனர். அப்போது அவர்களைப் பார்க்க முடிந்தது எம் குழுவில் இருந்த வழக்குரைஞர் அப்துல் காதர் அவர்களிடம் உரையாடினார். நேற்று அவரும் சேலம் வழக்குரைஞர் அரிபாபுவும் சேலம் சிறையிலுள்ள அதியமான், அசோகன், மைகேல்ராஜ், திருப்பதி ஆகியோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டனர். கைது செய்யப்பட்டோரின் வழக்குரைஞர்கள் தருமபுரி கபிலன், இராமமூர்த்தி ஆகியோரிடம் வழக்கு நிலை குறித்து விரிவாக விசாரித்தோம். நேற்று நத்தம் காலனிக்குச் சென்று மக்கள் எல்லோரையும் சந்தித்தோம்.

கைதுகள் குறித்துக் காவல்துறை சொல்வது

கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷின் வாக்குமூலத்தை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எண் 122/2014, கிருஷ்ணாபுரம் காவல் நிலையம், நாள் 28.06.2014) கூறப்படுவது: 1.ஜூலை 28 அன்று காலை 5.00 மணி அளவில் நாய்க்கன் கொட்டாய் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பல்சார் இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னப்பையன் மகன் சந்தோஷ் (22), சிவலிங்கம் மகன் அதியமான் (22), கோபால் மகன் சங்கர் (35) ஆகியோர் சந்தேகமான முறையில் தப்ப முயன்றனர். பிடித்து விசாரிக்கையில் பிடிபட்ட சந்தோஷ் தானாகவே முன்வந்து தாங்கள் அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க தலைவரும் 2012 நத்தம் காலனித் தாக்குதலுக்கு முக்கிய காரனமானவராகத் தாங்கள் கருதுபவருமான மதியழகனைக் கொல்வதற்காக வீச்சரிவாள்களுடன் சென்றதை ஒத்துக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். 2. இளவரசன் நினைவு நாளன்று மதியழகனைக் கொலை செய்ய, சங்கர் சக்தி, துரை, அசோகன்  எல்லோரும் சேர்ந்து சதித் .திட்டமிட்டு ஜூன் 28 காலை இரு குழுவாகப் பிரிந்து சென்றதாக ஒத்துக் கொண்டனர். இன்னொரு குழுவில் சங்கரின் சகோதரன் அசோக், ஊர்க்கவுண்டர் சக்தி, ஊர் முக்கியஸ்தர் துரை ஆகியோர் துப்பாக்கி வெடிகுண்டு சகிதம் கந்தன் குட்டை பக்கம் காத்திருந்தனர். பின்னர் இவர்களும் கைது செய்யப்பட்டனர். 3. இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் கிடைத்த பின்னணியாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படுவது: 2012 தாக்குதலுக்குப் பின் நத்தம் காலனிக்குப் பலரும் வந்து ‘ஆறுதல்’ சொல்லிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளான காளிதாஸ், சந்திரா ஆகியோர் அங்கு வந்து, தீவிரவாத இயக்கங்களின் பின்னணியோடு ஆயுதப் பயிற்சி எடுப்பது மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறினர், 4. அந்த அடிப்படையில் ‘துடி’ அமைப்பின் மூலம் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 50 பேர்களுக்கு (27 பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப் படுகின்றன.) 2013 தொடங்கி அரக்கோணம், சென்னை மெரினா பீச், கந்தன்குட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு வகை ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 5. இறுதியில் காளிதாஸ் சந்திரா இருவரும் ஒரு நாள் இரவு நத்தம் காலனி வந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு வீச்சரிவாள்கள்,மூன்று பைப் வெடிகுண்டுகள் ஆகிவற்றைத் தந்து சென்றனர். 6.ஆயுதப் பயிற்சி தொடங்கி  வன்னிய சமுதாயத்தின் முக்கிய தலைவர்களைக் கொல்வது வரைக்குமான திட்டம்  தீட்டப்பட்ட பின் இதற்கான செலவுகளுக்காக வீடு கொளுத்தப்பட்டதற்கு அரசு அளித்த இழப்பீட்டுத் தொகையிலிருந்து இம் முன்று தலித் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிதி வசூலிக்கப்பட்டது.

இப்படியான குற்றச்சாட்டைக் கோவையாக முன்வைக்கும் முதல் தகவல்.அறிக்கை, ‘கைப்பற்றப்பட்ட’ மேற்படி ஆயுதங்கள், ‘துடி’ அமைப்பு தாங்கள் ஆயுதப் பயிற்சி எடுத்ததை ‘ஒத்துக் கொண்டு’ வெளியிட்ட ஒரு அறிக்கை முதலானவற்றைக் கைப்பற்றிய வழக்குச் சொத்துக்களாகக் காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சொல்லப் படுவது

வாக்குமூலம் 1: கைது செய்யப்பட்ட சங்கர் மற்றும் அசோக்கின் சகோதரி சுமதி (27): எனது தம்பி அசோக் ஆசிரியர் பயிற்சி முடிச்சிட்டு மெடிகல் ரெப்ரசென்டேடிவா வேலை பார்க்கிறான். கைது செய்யப்பட்ட என் அண்ணன் அசோக் பி.எஸ்சி முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கான் .27ந்தேதி மதியம் 2 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் மொபைல் போன்ல கூப்பிட்டு ஏதோ பேசணும்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னாரு. சங்கர் போனான். ராத்திரி 10 மணி வரைக்கும் ஒரு தகவலும் இல்ல. போனையும் எடுக்கல. மதியம் 12 மணிக்கே அதியமானையும், மாலை 6 மணிக்கு சந்தோஷையும் இப்பிடி அழைச்சுட்டுப் போயி அவங்களும் வீடு திரும்பல. அப்புறம் ராத்திரி 10 மணிக்கு மேல சிங்காரம் போன் பண்ணி ஊர் ஆட்கள் வந்து மூணு பேரையும் அழைச்சிட்டுப் போங்கன்னாங்க. 14 ஆம்பளைங்க 5 பொம்பளைங்க புறப்பட்டுப் போனோம். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனா அலஞ்சு, கடைசியா B1 ஸ்டேஷனுக்குப் போனோம். அங்கே போனா 12 மணி வாக்கில ஊர்க் கவுண்டர் சக்தி, முக்கியஸ்தர் துரை, அசோக்கு இந்த மூணு பேரையும் புடிச்சு வச்சுக்கிட்டாங்க. எல்லாரையும் அடிச்சு ஜெயிலுக்குக் கொண்டு போய்ட்டாங்க.

வாக்குமூலம் 2: கைது செய்யப்பட்ட சங்கரின் தாயும் சின்னப்பையனின் மனைவியுமான சாலம்மா: 27ந்தேதி (ஜூன்) 12 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரமும் பூபாலன் போலீசும் வந்து துரை, சக்தி, அசோக் மூணு பேரு போன் நம்பரும் கேட்டாங்க. கொஞ்ச நேரத்தில எம் மவன் சந்தோஷை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி போன் வந்துது. எங்க குடும்ப கேஸ் ஒண்னு தொடர்பா விசாரணைன்னு சொன்னாங்க. நான் விளையாடப் போறேன், நீ போம்மான்னு அவன் சொன்னான். நான் போயிட்டு வந்தப்போ சந்தோஷைக் காணோம். நடு ராத்திரில போலீஸ் ஸ்டேஷன் போனப்பதான் அவனும் கைதாயிருக்கிறது தெரிஞ்சுது. கைது செஞ்ச எல்லாரையும் ரொம்ப அடிச்சிருந்தாங்க. சேலம் ஜெயில்ல அவங்கள நாங்க பாக்கப் போயிருந்தபோது அவங்களால நிக்க கூட முடியல.அவங்கள ஆஸ்பத்திரியில சேக்கணும்னு கேட்டுகிட்டோம். ஆனா அதுவும் நடக்கல.
வாக்குமூலம் 3: துரை என்னும் துரைக்கண்ணுவின் மனைவி. செல்வி: ஊர்ல மூணு பேர (சங்கர், அதியமான், சுரேஷ்) காணோம்னு ராத்திரி 10 மணிக்கு மேல குண்டல்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் அலைஞ்சிட்டு கடைசியா B1 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். என் கணவர் துரை ஊர் முக்கியஸ்தர். அவுரு, ஊர்க்கவுண்டர் சக்தி அப்புறம் அசோக் மட்டும் வாங்கன்னு சொல்லி அவங்களையும் கைது பண்ணிட்டாங்க. அது தெரியாம நாங்க வீட்டுக்குத் திரும்பினோம். காலையில (ஜூன் 28) 4 மணிக்கெல்லாம் நத்தம் காலனிய சுத்தி நூத்துக் கணக்கில போலீசு. என் கணவர் துரையை விலங்கு போட்டு இழுத்துட்டு வந்தாங்க. வீட்டுல மணல் கொட்டி வச்சிருந்தோம். “எடுடா, எடுடா” ன்னு போலீஸ் அவரைப் போட்டு அடிச்சாங்க. அவர் காயல்காரரு. ஆஸ்த்மா வியாதிக்காரரு. என்னாத்தங்க எடுக்கிறதுன்னு கேட்டேன். என் கண்ணு முன்னாடி அவர் கையை முதுகுக்குப் பின்னாடி வளைச்சு அடிச்சாங்க. அப்புறம் அவரை இளவரசன் சமாதிப் பக்கம் இழுத்துட்டுப் போனாங்க. எஸ்.பி அஸ்ரா கார்கும் இருந்தாரு. கொஞ்சம் போலீஸ் வந்து என்னிட்ட “கடப்பாறை, மண்வெட்டி குடுடி” ன்னாங்க. இங்க இல்ல அப்படீன்னேன். கவர்மன்ட் குடுத்தது இருக்குல்ல, அதைக் குடுடீன்னு வாங்கிட்டுப் போனாங்க. என் கணவர்ட்ட “இங்கதானடா ஆயுதங்களப் புதைச்சு வச்ச வச்ச, தோண்டி எடுடா”ன்னு சத்தம் போட்டாங்க. அப்புறம் அவங்களே லேசாத் தோண்டி, அவங்க கொண்டு வந்த துப்பாக்கிய அங்கே இருந்து எடுத்தமாதிரி காட்டினாங்க. என் 15 வயசு மகன் ஆனந்தை சமந்தாகுப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போயி “எங்கடா உங்க அப்பன் ஆயுதங்களப் புதைச்சு வச்சிருக்கான்?” னு மிரட்டுனாங்க. அவனைக் காலரைப் பிடிச்சுத் தூக்கி “உங்கொப்பனை என்கவுன்டர்ல போட்டுத் தள்ளிடுவோம்”னு பயமுறுத்துனாங்க. என் கணவர் துரை பொடாக் கைதியா இருந்தவருதான். ஆனா இப்பஎந்த அரசியல் பக்க்கமும் போறதுல்ல. யாரோடவும் தொடர்பு இல்ல. ரொம்ப உடம்பு சரி இல்ல மாஓயிஸ்டுகள் யாரும் இங்க வர்றதில்ல. 13 வருசத்துக்கு முன்னாடி வந்ததுதான். ‘துடி’ங்கிற அமைப்பைச் சேர்ந்தவங்க எங்க புள்ளைங்களப் பள்ளிக் கூடத்தில சேப்பாங்க. வேற எந்த அரசியலும் பேசுனதே இல்ல.

கைது செய்யப்பட்டு சேலம் சிறையிலுள்ள அதியமான் (22): ஆறாவது வரை படிச்சிருக்கேன். ஜூன் 27ந்தேதி எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் எங்க சவுன்ட் செட் பத்திப் பேசணும்னு அழைச்சாரு. முதல்ல தருமபுரி ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுரம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. அங்கே SP, ASP, DSP, Q Branch DSP, SBCID எல்லாம் இருந்தாங்க. என்னை ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. 2013 ஏப்ரல் 5,6 தேதிகள்ல நீர்ப்பெயல்ல ‘துடி’ அமைப்பு நடத்துன அரசாணை 92 பற்றிய விழிப்புணர்வு முகாம்ல பங்கேற்றேன். இந்த ரண்டு நாள்ல ஒரு தடவை மெரினா பீச்சுக்கு ‘ரிலாக்சேஷனுக்கு’ கூட்டிட்டுப் போனாங்க. வேற யாரையும் நான் சந்திச்சதில்ல. கொலை முயற்சி பண்ணோம்னு சொல்றதெல்லாம் பொய்.

கைது செய்யப்பட்டுச் சிறையிலுள்ள சங்கர் (35): பி.எஸ்சி வரை படிச்சிருக்கேன். பால் சொசைடி பொருள்கள விக்கிறேன். காச நோய்க்கு கவர்மன்ட் ஆஸ்பத்திரில தர்ற மருந்த சாப்பிடுறேன். 27ந்தேதி சிங்காரம் 144 தடை உத்தரவு பற்றிப் பேசணும்னு கூப்பிட்டாரு.முதல்ல B1 ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுராம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. ஜட்டி கூட இல்லாம அம்மணமா விட்டு என்னை அடிச்சாங்க. என்னமாதிரி ஆயுதப் பயிற்சி எடுத்தேன்னு கேட்டு கடுமையா அடிச்சாங்க. நான் எந்தப் பயிற்சிக்கும் போனதில்ல. துடி அமைப்போட கல்விப் பயிற்சிக்கும் போனதில்ல.

கைது செய்யப்பட்டுள்ள அசோகன் (22): M.A, B.Ed படிச்சிட்டு மெடிகல் ரெப் ஆக இருக்கேன். 28ந் தேதி காலை 12.30 மணிக்கு (27 நள்ளிரவு) எங்க ஊர் பையன்கள காணாம்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரிக்கப் போனபோது துரை, சக்தி இவங்களோட என்னையும் பிடிச்சுட்டாங்க. ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. ஆயுதப் பயிற்சி பத்தித்தான் கேட்டாங்க. யாரெல்லாம் பயிற்சி எடுத்தாங்கன்னு கேட்டாங்க. நான் எதுக்கும் போனதில்ல. துடி கல்விப் பயிற்சிக்கும் கூடப் போனதில்ல.

கைதாகியுள்ள திருப்பதி (20) இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் மாணவன். குடிப்பட்டியிலுள்ள அத்தை வீட்டுக்குப் போயிருந்த போது ஜூன் 29 காலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர். ஜட்டியுடன் அடித்து மற்றவர்களைக் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டுள்ளனர். இவர் துடி கல்விப் பயிற்சிக்குச் சென்றுள்ளார். ‘துடி’ அமைப்பில் பொறுப்பு வகித்த மைகேல் ராஜ் (22) பி.ஏ முடித்து ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளார், ஜூலை 4 காலை நாராயணபுரத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். இவரையும் ஆடையின்றி அம்மணமாக நிற்க வைத்து அடித்துள்ளனர்.

இவர்கள் யாருமே காளிதாசையோ சந்திராவையோ சந்தித்ததில்லை என்கின்றனர். ஆயுதப் பயிற்சி குறித்து எல்லோரிடமும் எஸ்.பி அஸ்ரா கார்க் விசாரித்துள்ளார்.

சுருக்கம் கருதி மற்றவர்களின் வாக்கு மூலங்களை இங்கு தவிர்க்கிறோம். எல்லோரும் ஒன்றை உறுதியாகச் சொன்னார்கள். இங்கு ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுகிறவர்கள் யாரும் வந்ததில்லை. ‘துடி’அமைப்பு கல்வி தொடர்பான பிரச்சினைகள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது கல்விக் கட்டணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை என்கிற அரசாணை எண் 92 பற்றிப் பிரச்சாரம் செய்தல் தவிர வேறெதுவும் செய்ததில்லை. அவர்கள் முயற்சியில் தம் பகுதியைச் சேர்ந்த சில மாணவர்களுக்குப் பொறியியல் மற்றும் பட்டப் படிப்பு வாய்ப்புக் கிடைத்தது, அவ்வளவுதான் என்றனர்.

Part  I

சமீபத்திய கைது நடவடிக்கைகள் : நடந்தது இதுதான்

நேரடி சாட்சிகள் பலரையும் விசாரித்து நாங்கள் அறித்த உண்மைகள்: 1. ஜூன் 27, மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிக்குள் அதியமான், சங்கர், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டனர். தன்னை பத்து போலீஸ்காரர்கள் ரவுண்டு கட்டி அடித்து அவர்கள் சொன்னபடி வாக்குமூலம் எழுதிக் கையெழுத்திட வைத்தனர் என்று சந்தோஷ் எங்களிடம் கூறினார். இவர்களை அழைத்துச் செல்ல வாருங்கள் என வஞ்சகமாக B1 போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அங்கே சக்தி, துரை, அசோக் ஆகியோரையும் கைது செய்து அவர்களையும் கடுமையாக அடித்து ஒரே மாதிரி வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. பின்னர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த 27 பேர்களில் திருப்பதி என்கிற பாலிடெக்னிக் படிக்கும் மாணவனை குடிப்பட்டி என்னுமிடத்தில் கைது செய்தனர். ஜூலை 5 அன்று கொண்டாம் பட்டியைச் சேர்ந்த மைக்கேல் ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் துடி அமைப்பில் செயல்பட்டவர்.

ஆக இது வரைக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 8 பேர். முதல் தகவல் அறிக்கை எண் 122/2014; கிருஷ்ணாபுரம் காவல் நிலையம்;நாள் ஜூன் 28,2014. குற்றப் பிரிவுகள: இ.த்.ச பிரிவுகள் : 120 (பி),153 (ஏ), 153 (ஏ ஏ): இந்திய ஆயுதச் சட்டம் பிரிவுகள்: 25 (1) (ஏ) மற்றும் 27; 1908ம் ஆண்டு வெடி பொருட்கள் சட்டம் பிரிவுகள் 4 மற்றும் 5.

இவர்களில் முதல் அறுவரும் கைதானதற்கு அடுத்த நாள் பெங்களூரு சென்ற காவற் படையினர் நத்தம் காலனியச் சேர்ந்த நால்வரைப் பிடித்து விசாரித்துப் பின் விட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகுதிகளைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் பெங்களூரில் வேலை செய்யும் இடங்களில் கண்காணிப்பது தொடர்வதாகவும், இதனால் மாஓயிஸ்ட் பயம் ஊட்டப்பட்டு இப்பகுதி தலித் இளைஞர்கள் பெங்களூருவில் வேலை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் எம்மிடம் கூறினர்.
இப்படிப் பலரும் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நத்தம் காலனி மக்கள் ஜூலை 4 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி தங்கள் குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை ஒப்படைப்பதாக அறிவித்தனர். இனி கைது ஏதும் நடக்காது, ஆனால் தேடப்படும் மற்றவர்களை ஒப்படையுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்குப் பின்னும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு என்பவரை துணைக் கண்காணிப்பாளர் நீலகண்டன் என்பவர் தொலைபேசியில் விசாரித்துள்ளார். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின் அந்த அதிகாரி அவரை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார். காவல் நிலையத்திற்கு வருகிறவர்கள் கைது செய்யப்படும் நிலை இருப்பதால் பாரதி பிரபு செல்லவில்லை. உடன் அவரது சகோதரர்கள் கந்தவேலு, சண்முகம் சகோதரர் மகன் பாலகுமார் ஆகியோரை இழுத்துச் சென்று மிரட்டி பின் விட்டுள்ளனர். தற்போது பாரதிபிரபுவும் அவ் அமைப்பைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக அறிகிறோம். 

Part  II

‘துடி’ அமைப்பு : ஒரு குறிப்பு

துடி அமைப்பை ஒரு வன்முறை அமைப்பாகவும், ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் பெரிய அளவில் ஒரு பயங்கரவாத அமைப்பு என்கிற ஒரு பிம்பத்தை தருமபுரி காவல்துறை இந்தக் கைதுகள் மூலம் கட்டமைத்துள்ளது. துடி அமைப்பையும் இடதுசாரி ஆயுதப் போராட்டக் கருத்தியலை நத்தம் இளைஞர்கள் மத்தியில் விதைத்தவராகக் காவல்துறையால் சொல்லப்படும் காளிதாஸ் மற்றும் சந்திரா ஆகியோரையும் ஒரே அமைப்பினர் போலச் சித்திரிக்கின்றனர்.. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை விரிக்கும் கதையின் முதல் அங்கம் காளிதாஸ் – சந்திரா வருகை மற்றும் ஆயுதப் போராட்டம் குறித்த அவர்களின் ஊக்க உரையோடு முடிகிறது என்றால் இரண்டாம் அங்கம் துடி அமைப்பு ஆயுதப் பயிற்சி அளிப்பதோடு தொடங்குகிறது.

ஆனால் ‘துடி’ அமைப்பை அது தொடங்கிய 2002 முதல் நெருக்கமாகக் கவனித்து வருபவர்கள் நாங்கள். தலித் மாணவர்களின் கல்வி தவிர வேறு எதிலும் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. மிக்க மரியாதைக்குரிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கிருஸ்துதாஸ் காந்தி அவர்கள் தொடக்கம் முதல் இன்று வரை அதன் காப்பாளராக இருந்து வருகிறார். நேற்று காலை நாங்கள் அவரிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறியதாவது:

கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்; “எங்கள் அமைப்பு முழுக்க முழுக்க தலித் இளைஞர்கள் மார்க்சீயம், தமிழ்த் தேசியம் முதலான எந்தக் கருத்தியலின்பாலும் ஈர்க்கப்பட்டு வீணாகாமல், குறிப்பாக எக் காரணம் கொண்டும் ஆயுதப் போராட்டம் பக்கம் சாயாமல், கல்வியிலும் அம்பேத்கர் சிந்தனையிலும் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டது. கடவுள் பிரச்சினை, காதல் திருமணம் தொடர்பான அரசியல் எதிலும் அம் மாணவர்களின் கவனம் திரும்பக் கூடாது என்பதே எங்கள் கவலை. அப்படியான ஒரு இயக்கத்தை ஆயுதப் பயிற்சி அளித்தது எனச் சொல்வதைப்போல ஒரு அபத்தம் வேறு எதுவுமே இல்லை” என ஆணித்தரமாகச் சொன்னர். காந்தி அவர்களின் இக்கருத்தில் உடன்பாடு இல்லாதவர்களுங் கூட அவர் சொன்னவை அவரளவில் உண்மையானவை என்பதை அறிவர்.

‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு கூறியது: “நாங்கள் இந்திய அரசு,தமிழக அரசு ஆகியவற்றுடன் இணைந்து தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்தோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையானவை. மத்திய அரசின் ‘இளைஞர்களின் வளர்ச்சிக்கான ராஜிவ் காந்தி நிறுவனத்தின்’ (RGIYD) நிதி உதவியுடன் நாங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். தமிழக அரசின் ‘ஆதி திராவிட நலத் துறை’யுடன் இணைந்து அரசாணை 92 குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்துள்ளோம். மேல் மருவத்தூருக்கு அருகில் உள்ள நீர்ப்பெயல் கிராமத்தில் அருட் பணியாளர்கள் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோரின் உதவியோடு நாங்கள் நடத்திய கல்விப் பயிற்சியில் 70 மாணவிகளும், 50 பையன்களும் பங்கு பெற்றனர். இவர்களில் 12 பேருக்கு எஞினீரிங் படிப்பில் இடம் கிடைத்தது. இருவரை லயோலா கல்லூரியில் சேர்த்தோம். ரிலாக்சேஷன் மற்றும் psychological counciling”கிற்காக ஒரு முறை மெரீனா பீச்சுக்கு இவர்களை அழைத்துச் சென்றது உண்மை.
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் ‘தமிழ்ப் பண்பாட்டில் பவுத்தம்’ என்கிற தலைப்பில் ஆய்வு செய்த பாரதி பிரபு தாங்கள் செய்த கல்விப் பணிகளை மிக விரிவாகச் சொன்னார். நத்தம் பகுதியிலும் அவர்கள் இப்படி தலித் மாணவர்கள் மத்தியில்  கல்விப் பணி செய்து வந்ததை நாங்களும் கவனித்து வருகிறோம். சென்ற 2013 ஜூன் 8 அன்று கூட தருமபுரி பெரியார் மன்றத்தில் அரசாணை  92 குறித்த விழிப்புணர்வுக் கூடலை நடத்தியதை அறிவோம். வி.சி.க, மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அவர்கள் இதைச் செய்தனர்.

இப்படி நிறையச் சொல்லலாம். துடி போன்ற ஒரு அமைப்பை ஆயுதப் போராட்டத்துடன் தொடர்பு படுத்டுவதைப் போல ஒரு அபத்தம் எதுவும் கிடையாது என எம் குழுவும் உறுதியாகக் கருதுகிறது.

இது தொடர்பாக எஸ்.பி அஸ்ராகார்க் அவர்களிடம் நாங்கள் பேசத் தொடங்கியவுடன், “அதில் கவனமாக இருக்குமாறு நான் என் புலனாய்வு அதிகாரியிடம் சொல்லியுள்ளேன்” என்றார்.

காவல்துறை அவிழ்க்கும் கதையில் உள்ள முரண்பாடுகளும் பொய்களும்

1. கைது செய்யப்பட்டுள்ள முதல் ஆறு பேர்களும் ஜூன் 27 மதியம் 12 மணிமுதல் நள்ளிரவு வரை கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு ஊர் மக்கள் நேரடி சாட்சிகளாக உள்ளனர். B1 நிலையத்தில் ஊர் மக்களுக்கும் காவல் துறைக்கும் விவாதம் நடந்துள்ளது. இது தொடர்பான உரையாடல்கள் செல்போன்கள் மூலமாக ஊர் மக்களுக்கும் எச்.பி அஸ்ரா கார்க் மற்றும் சி.பி.சி.ஐ.டி சிங்காரம் ஆகியோருடக்கும் இடையில் நடந்துள்ளது. இப்படி காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்கள் ஜூன் 28 காலை 5 மணிக்கு கையில் ஆயுதங்களுடன் பா.ம.க மதியழகனைக் கொல்லச் சென்ற போது நாய்க்கன்கொட்டாய்க்கு அருகில் பைக்கிலும் கந்தன் குட்டைக்கு அருகிலும் கைது செய்யப்பட்டனர் என்பது முற்றிலும் பொய்.

2. நத்தம் கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது கைப்பற்றப்பட்டது? ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை? இது தொடர்பாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இருட்டாக இருந்ததால் உங்களை அழைக்கவில்லை என்று எஸ்.பி பதிலளித்துள்ளார். இது ஒரு பதிலா? அப்படியானால் எந்த இரவு அது நடந்தது?

3. கடந்த பல மாதங்களாக அப் பகுதிக்கு தீவிரவாதிகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும் காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இளவரசன் நினைவு நாள் வரும் வரை காத்திருந்தனர்?

4.இளவரசன் சமாதிக்கு அருகில் கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது சமாதிக்கு வருபவர்களை மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா? இளவரசன் சமாதி அருகில் ஆயுதத்தை துரை புதைத்து வைத்தார் என்றால் அதை சிசிடிவி படம் எடுக்கவில்லையா?

5.மெரீனாவிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா? தருமபுரி காவல்துறை ஒரு வேளை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத் துறைகளைக் கிண்டல் செய்கிறதா?

6.துடி அமைப்பு வெளியிட்டுள்ளதாக் ஒரு துண்டறிக்கையை காவல்துறையினர் காட்டுகின்றனர். தேதி,முகவரி இல்லா இந்தத் துண்டறிக்கை ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுவதோடு நூறு பேர் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கிறது. மக்கள் மத்தியில் வினியோகிக்கப்படும் ஒரு துண்டறிக்கையில் யாராவது தம் அமைப்பில் எத்தனை பேர் ஆயுதப் பயிற்சி எடுத்தனர் என்றெல்லாம் அச்சிடுவார்களா?

எமது பார்வைகள்

1. 2012ல் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராமங்களில் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பின் பல அமைப்பினரும் அங்கு அடிக்கடி சென்று வதுள்ளனர். நாங்கள் கூட மூன்று முறை அங்கு சென்று வந்துள்ளோம். கடும் போலீஸ் கண்காணிப்பு, உளவுத்துறை இருப்பு முதலியன அங்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையால் கடுமையாகத் தேடப்படும் ஆயுதப் போராளிகள் யாரும் அங்கு வந்து செல்வதற்கு வாய்ப்பில்லை. அப்படி வந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இளவரசன் முதலாம் ஆண்டு விழாவை ஒட்டி இந்தக் கைது செய்துள்ளதற்கு உள் நோக்கம் இருப்பதாகவே கருதுகிறோம். முதலாம் ஆண்டு கடுமையாக நடவடிக்கை எடுத்து ஒடுக்கிவிட்டால் பின் எப்போதும் இளவரசன் சமாதியை மையமாக வைத்து தலித் இளைஞர்கள் ஒருங்கிணையமாட்டர்கள் என்ப்பதற்காக அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ள சதியாகவே நாங்கள் இதைக்கருதுகிறோம். தாங்கள் காவல்துறை அனுமதி மறுப்பை மீறி நீதிமன்றத்தில் அனுமதி ஆணை பெறுவதற்கு முயற்சித்தது பிடிக்காமல்தான் எஸ்.பி அஸ்ரா கார்க் தம்மிடம் இப்படி மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார் என நாங்கள் சந்தித்த மக்கள் அனைவரும் கூறினர். அஸ்ரா கார்க் மீது தலித் மக்கள் மிக்க நம்பிக்கை வைத்திருந்ததை நாங்கள் அறிவோம். மதுரை வில்லூர் போன்ற இடங்களில் அவர் சாதிக் கலவரங்களைக் கையாண்டதை நாங்களும் கூடப் பாராட்டியுள்ளோம். ஆனால் இந்தப் பிரச்சினையில் அவர் இந்த நம்பிக்கைகளை முற்றாக இழந்துள்ளார். விரிவாக எங்களுடன் பேசக்கூடிய அவர் எங்களைத் தவிர்த்ததும் பேச மறுத்ததும் அவரிடம் எங்கள் கேள்விகளுக்குப் பதிலில்லை என்பதையே காட்டுகிறது. எனினும் இந்தக் கைதுகள் மற்றும் தீவிரவாதப் பிரச்சாரங்களை அஸ்ராகார்க் என்கிற ஒரு அதிகாரியின் ‘ஈகோ’ பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. இதற்குப் பின் அரசு மற்றும் காவல்துறை மேல்மட்ட அதிகாரம் ஆகியன உள்ளன என்றே கருதுகிறோம்.

2.கடுமையான சாதிப் பிளவு (polarisation) நடந்துள்ள ஒரு பகுதியில், இந்த அடிப்படையிலேயே ஆதிக்க சாதியினர் ஒரு தேர்தல் வெற்றியைச் சாதித்து, வெற்றிப் பெருமிதத்துடன் திரியும் சூழலில் இப்படி தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்து முக்கிய ஆதிக்க சாதித் தலைவர்களையும், பா.ம.கவினரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், கொலை செய்யப் பயங்கர ஆயுதங்களுடன் வந்தபோது தாங்கள் கைது செய்ததாகவும் அப்பட்டமான ஒரு பொய்யை ஊடகங்களின் துணையோடு தருமபுரி மாவட்டக் காவல்துறை பிரச்சாரம் செய்வதை நாங்கள் மிகவும் கவலையுடன் நோக்குகிறோம். குறிப்பாக முன்னதாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டுக் காவலில் இருந்தவர்கள் துப்பாக்கி, வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் அகிதம் ஒரு பா.ம.க தலைவரைக் கொல்லப் போனார்கள் என்பது நூற்று சதம் பொய். இது சாதிப் பகையை மேலும் வளர்க்கும்.

எதிர்பார்த்ததுபோலவே இதைப் பயன்படுத்தி பா.ம.க தலைவர்கள் இராமதாஸ் அன்புமணி ஆகியோர் உடனடியாக அறிக்கைகள் விட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அரசும் காவல்துறையும் உணர்ந்துதான் செய்கின்றனவா, இல்லை அவர்களின் நோக்கமே இப்படிச் சாதிப் பகையை மூட்டுவதுதானா? ஆதிக்க சாதியினரின் நினைவு நாட்களை அரசே கொண்டாடும் நிலையில் தலித் மக்களின் இதகைய முயற்சிகளை ஏன் இத்தனை கடுமையாக ஒடுக்க வேண்டும்? முதலமைச்சர் அவர்கள் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

3. தலித் மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் ‘துடி’ போன்ற ஒரு

நன்றி: அ.மார்க்ஸ்

சனி, மே 31, 2014

வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டிய சாதி வன்முறை – உண்மை அறியும் குழு அறிக்கை

வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டிய சாதி வன்முறை – 

                     உண்மை அறியும் குழு அறிக்கை


கடலூர்
மே 30, 2014

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், குமராட்சி ஒன்றியத்தில் உள்ள வடக்கு மாங்குடி கிராமத்தில் சுமார் 400 வன்னியர் குடும்பங்களும் நூறு தலித் (பறையர்) குடும்பங்களும் வாழ்கின்றன.  நாடாளுமன்றத் தேர்தல் நடந்த அன்று (24–04–2014) இரவு ஏழு மணி வாக்கில் அங்கு  நடைபெற்ற சாதி வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் தாக்கப்பட்டன. தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் தற்போது இருவர் இறந்துள்ளனர். இன்னும் அக்கிராமத்தில் அமைதி திரும்பவில்லை. இது குறித்த உண்மைகளை அறியவும் அக்கிராமத்தில் அமைதி திரும்புவதற்கான வழி முறைகளைக் கண்டறியவும் இப்பகுதியில் இயங்குகிற ‘சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டணி’யின் பொறுப்பாளர் திரு.எஸ்.சுந்தர் அவர்கள் ஒரு உண்மை அறியும் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று கீழ்க்கண்டவாறு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

குழு உறுப்பினர்கள்

பேரா. அ. மார்க்ஸ், மனிதஉரிமைகளுக்கானமக்கள்கழகம் (PUHR), சென்னை,
கோ. சுகுமாரன், மக்கள்உரிமைக்கூட்டமைப்பு (FPR). புதுச்சேரி
வழக்குரைஞர்க. கவுதமன், சிதம்பரம்,
வழக்குரைஞர்க. கேசவன், குடியுரிமைப்பாதுகாப்புமையம் (CPCL) சென்னை,
இரா. பாபு, இளைஞர்களுக்கானசமூகவிழிப்புணர்வுமையம் (SASY), கடலூர்,
ஆர். தனவந்திரன், ஏகாதிபத்தியஎதிர்ப்புஇயக்கம், சீர்காழி,
தே. மகேஷ், திராவிடர்விடுதலைக் கழகம், மயிலாடுதுறை,
எம். அன்பு,  திராவிடர்விடுதலைக் கழகம், மயிலாடுதுறை.

   இக்குழு உறுப்பினர்கள் நேற்று வடக்கு மாங்குடி சென்று இரு தரப்பு மக்களையும் சந்தித்து விரிவாகப் பேசினர். பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் மற்றும் சேதமாக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டனர். வன்னியர் மக்கள் தந்த மனுக்களையும் பெற்றுக் கொண்டனர். முதல் தகவல் அறிக்கை, இறந்தவர்கள் இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை, பாதிக்கப்பட்டோருக்கு அரசு அளித்துள்ள உதவி தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றையும் சேகரித்துக் கொண்டனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராம் அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் மிகவும் விளக்கமாக எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார். முன்னதாக இக்குழுவைச் சேர்ந்த பாபு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப் பட்டவர்களையும் சிதம்பரம் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி அமுதா சிவானந்தம் அவர்களையும் சந்தித்து வந்தார்.

பின்னணி

      வடக்கு மாங்குடி கிராமத்தில் வன்னியர் பகுதியை ஒட்டி சுமார் 100 மீட்டர் தொலைவில் தலித் குடியிருப்பு அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தீவைப் போல இது வன்னியர் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. தலித் மக்களின் வீடுகளை ஒட்டி வன்னியர்களின் சுடுகாடு உள்ளது. பிணங்கள் எரிக்கப்படும்போது அங்குள்ள தலித் வீடுகள் அனைத்திலும் துர் நாற்றம் மட்டுமல்லாமல் புகையும் சூழும் நிலையில் இச் சுடுகாடு அமைந்துள்ளதை பஞ்சாயத்து மற்றும் அரசு நிர்வாகங்கள் எவ்வாறு இதுகாறும் அனுமதித்து வந்துள்ளன என்பது எங்களுக்கு விளங்கவில்லை. தற்போது பிரச்சினைக்குப் பின் காவல்துறை அளித்த அழுத்தத்தின் காரணமாக அதற்குப் பின் இறந்த இரு வன்னியர்களின் உடல்கள் அங்கு எரிக்காமல் புதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் படம் எடுத்துக் கொண்டோம்.

   தலித் மக்களில் ஒருவரைத் தவிர பிறர் யாருக்கும் வீட்டு மனைகளைத் தவிர வேறு சொத்துக்கள் இல்லை. அவர்கள் தம் வாழ்வாதாரத்திற்கு வன்னியர்களையே சார்ந்துள்ளனர். அவர்கள் வெளியூர் செல்வதாயினும், பில்ளைகள் பள்ளிக்குச் செல்வதாயினும் வன்னியர் குடியிருப்புகளைக் கடந்தே செல்ல வேண்டும். அப்போது பேன்ட் அணிந்து செல்லும் மாணவர்களை அமட்டுவது, மாணவிகளைக் கிண்டலடிப்பது முதலான நிலை எப்போதும் உள்ளதாக தலித் மக்கள் அனைவரும் ஒத்த குரலில் புலம்பினர். தவிரவும் தலித் குடியிருப்பிற்கு அருகிலுள்ள சுடுகாட்டிற்குப் பிணத்தை எடுத்துச் செல்லும் போது பாடைகளில் சுற்றியுள்ள பூமாலைகளை தலித் வீடுகள் மீது வீசுவது, வாண வெடிகளை அந்தப் பக்கமாக எறிவது, தாரை தப்பட்டைகளை உரக்க முழக்கி அச்சுறுத்துவது முதலியன தொடர்ந்து நடந்து வந்துள்ளன. கண்ணுசாமி என்பவரின் மனைவி செல்வி (60) என்பவர் மீது இவ்வாறு எறியப்பட்ட வாணம் ஒன்று அவரது காலில் தொடை வரை எரித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததை எங்கள் குழு படம் எடுத்துக் கொண்டது.

   தலித் மக்கள் மலம் கழிக்கச் செல்வதானாலும் ஆடு மாடுகளை மேய்ப்பதானாலும் வன்னிய மக்களுக்குச் சொந்தமான வெளிகளுக்குத்தான் செல்ல வேண்டும். அபோதெல்லாம் சில நேரங்களில் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் உண்டு. இன்றைய பிரச்சினைக்குப் பின் கிராம சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கட்டப்பட்டு தண்னீர் வசதிகள் இல்லாது மூடப்பட்டிருந்த ஒரு கழிவறை தற்போது பயன்படுத்தப்படும் வகையில் சீர்திருத்தப் பட்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். தற்போது பெண்கள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதாகவும், அப்படியும் அங்கு குளிப்பதற்கு வசதி இல்லை எனவும் கூறப்பட்டது.

   தலித் மக்களுக்கான சுடுகாடு சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. அதற்குப் பாதை கிடையாது. மழைக் காலத்தில் பிணங்களைத் தூக்கிச் செல்வது மிகவும் பிரச்சினை. எனினும் எந்த மாற்றையும் வசதிகளையும் அரசு இது தொடர்பாகச் செய்து தரவில்லை. இது தொடர்பாக வன்னிய மக்களிடம் பேசும்போது அவர்கள் அந்தப் பாதை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் வடிகால் பகுதி எனவும் அவ்வழியே சாலை அமைக்கப்பட்டால் நீர் வழியமுடியாமல் தேங்கும் நிலை ஏற்படும் எனவும் கூறினர். தலித் மக்களுக்கான இச்சுடுகாட்டை ஒட்டியுள்ள நிலங்களில் செங்கல் அறுப்பது முதலான வடிவங்களில் வன்னியர்கள் ஆக்ரமிப்புச் செய்துள்ளதாகவும் தலித் மக்கள் குற்றம் சாட்டினர்.

   நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இத் தொகுதியில் மோதிரச் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும். பா.ம.க சார்பில் மாம்பழம் சின்னத்தில் சுதா மணிரத்தினம் அவர்களும் போட்டியிட்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சந்திரகாசி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

   நெடுநாளாகக் கனிந்து கொண்டிருந்த இந்த தீண்டாமைப் பகை இன்று தேர்தலில் வக்களிப்பது தொடர்பான ஒரு பிரச்சினையை ஒட்டி ஒரு சாதி வன்முறையாக வடிவெடுத்துள்ளது.

சம்பவம்

     ஏப்ரல் 24 அன்று வாக்குப் பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகள் முதலியன கொண்டு செல்லப்பட்ட கையோடு இரவு ஏழு மணி வாக்கில் தலித் குடியிருப்பிற்கு அருகாமையிலிருந்த ட்ரான்ஸ்ஃபார்மர் அணைக்கப்பட்டுப் பெருங் கூச்சலுடன் சுமார் அறுபது எழுபது பேர் அடங்கிய கும்பலொன்று தலித் மக்கள் வசித்த பகுதியில் இரும்பு பைப் மற்றும் தடிகள், அருவாள்கள் ஆகியவற்றுடன் கொச்சையான சொற்களில் சாதி சொல்லித் திட்டிக் கொண்டு பெருங் கூச்சலுடன் நுழைந்துள்ளது.

   வெறித்தனமாக நுழைந்த இக்கும்பலைக் கண்டவுடன் தலித் இளைஞர்களும் வயது வந்த ஆண்களும் தப்பித்து ஓடியுள்னர். எஞ்சிய வயதானோரும் பெண்களும் மட்டும் அஞ்சி நடுங்கிய வண்ணம் அங்கிருந்துள்ளனர். அவர்கள் கம்புகளாலும் இரும்புத் தடிகளாலும் தாக்கப்பட்டுள்ளனர். வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த கிரைன்டர்கள் முதலியன அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள ஒரே சற்றுப் பெரிய கான்க்ரீட் வீடு விடுதலைச் சிறுத்தைகளின் முகாம் தலைவர் தம்பிதுரை (த/பெ நாகூரான்) யுடையது. அதற்குள் நுழைந்து இரும்பு பீரோவை உடைத்துள்ளனர். கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன.

   வன்முறை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் வந்து குவிந்து நிலைமையைக் கட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

   ஆனால் காவல்துறை வருவதற்குள்ளான இந்த இடைப்பட்ட சுமார் 45 நிமிடங்களில் குறைந்தபட்சம் பத்து பேர்கள் கடுமையாகத் தக்கப்பட்டனர். அதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். சிதம்பரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட எட்டு பேர்களில் இந்த நால்வரும் கடலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் ஜிப்மெருக்கு அனுப்பப் பட்டனர். இவர்களில் அய்யாக்கண்ணு மகன் பழனி (80) தாக்கப்பட்ட 13ம் நாள் வீடிற்குக் கொண்டுவரப்பட்டு மரணம் அடைந்தார். சிவக்கொழுந்து மனைவி பாப்பா (65) சரியாக ஒரு மாதம் கழித்து ஜிப்மெர் மருத்துவமனையில் இறந்தார். இவர்களுக்கு வெளிக்காயங்கள் இருந்தது பிரேத பரிசோதன அறிக்கையில் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  .

    வாசல்களில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் இரு டாடா ஏஸ் வாகனங்கள் அடித்துச் சேதப்படுத்தப்பட்டன. பல வீடுகளில் கிரைன்டர், மிக்சி முதலியன நொறுக்கப்பட்டுள்ளன. ஒரு குடிசை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

  தம்பிதுரையின் வீடு சேதப்படுத்தப்பட்டது தவிர உடைக்கப்பட்ட பீரோவிலிருந்த 3 பவுன் சங்கிலி ஒன்றும் வாசலில் பம்புடன் இணைக்கப்பட்டிருந்த மோட்டார் ஒன்றும் வன்முறையாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

   தாக்குதல் நடந்த அடுத்த நாள் (ஏப்ரல் 26) இரவு வன்னியர்களுக்குச் சொந்தமான இரு மோட்டார் கொட்டகைகள் எரிந்துள்ளன. அவற்றில் இருந்த விதை நெல் முதலியனவும் எரிந்துள்ளதாக வன்னியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தலித் மக்களே அதைச் செய்தனர் எனவும் குறிப்பான சில பெயர்களைச் சுட்டியும் வன்னியர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மறுத்த தலித் மக்கள் இதை வன்னியர்களே செய்து விட்டுத் தம் மீது பழி போடுகின்றனர் எனக் கூறுகின்றனர்.

மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

  அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சென்ற ஏப்ரல் 25 அன்று பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (குற்ற எண் 114/14) மற்றும் மே 17 அன்று தாக்கல் செய்யப்பட்ட  சட்டப் பிரிவுத் திருத்த அறிக்கை ஆகியவற்றில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இ.த.ச 1147,148,294 (பி), 324,323,307,379,436, 302 3 of PPD act, SC St Act திருத்தப்பட்ட அவசரச் சட்டம் 2014  3(1)(r), 3(1)(s), 3(1)(0), 3(2)(va) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   ஏப்ரல் 25 அன்று 25 பேரும், 26ல் ஒருவரும், மே 19ல் ஒருவரும், 23ல் மூவரும் ஆக 30 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 78 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 48 பேர் தேடப்பட்டு வருவதாகவும் வழக்கை விசாரித்து வரும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்கள் குறிப்பிட்டார். மற்றவர்களைக் கைது செய்வதில் ஏன் இந்தத் தாமதம் எனக் கேட்டபோது மூன்று படைப் பிரிவுகள் அமைத்துத் தேடி வருவாதாகவும் விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவதாகவும் அவர் கூறினார்.

   முதல்நாள் கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருந்தும் இன்று பிணையில் வெளி வந்துள்ளனர். மற்றவர்களும் இன்று இச் சட்டத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் தற்போது இருவர் இறந்துள்ளதால் இ.த.ச 302, 307 வது பிரிவுகளின் கீழ் பிணை பெற வேண்டியுள்ளதால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. எனினும் அவர்களும் இந்தப் பிரிவுகளிலும் பிணை பெற்று விரைவில் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

   தமது மோட்டார் கொட்டகைகள் எரிக்கப்பட்டதாக வன்னியர்கள் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

     மே 23 அன்று நடந்த அமைதிக் கூட்டத்தில் தலித் மக்கள் மட்டுமே கலந்து 
கொண்டுள்ளனர்.. நாங்கள் விசாரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் வந்து தலித் மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

   இறந்து போன இருவர் குடும்பங்களுக்கும் தலா 1,85,000 ரூபாயும், பிற காயம்பட்ட ஒவ்வொருவருக்கும் 2500 முதல் 5,000 ரூபாய் வரையும், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டவர்களுக்கு 3,000 முதல் 8,000 வரையிலும், எரிந்த மற்றும் தாக்கப்பட்ட வீடுகளுக்கு 2,500 முதல் 5000 ரூபாய் வரையும் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் கூற்று

   இரு தரப்பிலும் நாங்கள் பலரையும் சந்தித்தோம். ஆண்கள், பெண்கள் இளைஞர்கள் என ஒவ்வொரு தரப்பிலும் சுமார் 50 பேர்கள் எங்கள் முன் வாக்குமூலங்கள் அளித்தனர். அவர்களின் பெயர்கள் இங்கே தவிர்க்கப்படுகின்றன. வன்னியர் தரப்பில் எழுத்து மூலமாகவும் வாக்கு மூலங்கள் அளிக்கப்பட்டன.

   தலித் மக்கள் கூறியது: “மாம்பழத்துக்கு ஓட்டுப் போடமாட்டீங்களான்னு சொல்லி அசிங்க அசிங்கமா திட்டிகிட்டே வந்து அடிச்சாங்க. எங்க பசங்க பேன்ட் சர்ட் போட்டுட்டு ரோடு வழியாப் போக முடியாது. பள்ளிக் கூடத்துக்குப் போற பொம்புளப் புள்ளங்களை வன்னியர் தெரு தாண்டுற வரைக்கும் யாராவது கூடவே பெரியவுங்க கொண்டு போய் விட வேண்டி இருக்கு. டீக்கடைகள்ல எங்களுக்கு டவரா செட்டிலதான் டீ குடுப்பாங்க. பஸ்சில அவங்க ஏறி உட்காந்தப்புறந்தான் நாங்க ஏறணும். இப்ப அவங்க எங்களுக்கு வேல கொடுக்கிறதுல்ல, எங்க ஆடு மாடுங்களை மேய்க்க விடமாட்டேங்குறாங்க. நாங்க எல்லாத்தையும் பக்கத்து கிராமங்கள்ல இருக்கிற எங்க சொந்தக்காரங்க வீடுகளுக்கு ஓட்டி விட்டுட்டோம் நாங்க இந்த ஊருல தொடர்ந்து இருக்க முடியாது. எங்க புள்ளைங்களாவது பயமில்லாம வாழ ஏதாவது வழி செய்யணும். சிதம்பரம் பை பாஸ் ரோட்ல இருக்கிற கூத்தங் கோயில்ல எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கணும். நாங்க எல்லாரும் அங்கே போயிடுறோம்.”

    இவற்றைச் சொல்லும்போது சிலர் அழுதனர். எல்லோர் கண்களிலும் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது. ஓட்டுக் கேட்க வந்த பா.ம.கவினரிடம் சம்பந்தம் வச்சுக்கலாமா என தலித் யாரோ ஒருவர் கேட்டதால்தான் இவ்வளவும் நடந்துள்ளது என அவர்கள் சொல்கின்றனரே என நாங்கள் கேட்டபோது அப்படியெல்லாம் எதுவும் நடக்கவே இல்லை என உறுதியாக மறுத்தனர். அதே போல வன்னியர்களின் இரு மோட்டார் கொட்டகைகள் எரிக்கப்பட்டதற்குத் தாங்கள் காரணம் இல்லை, அவர்களே எரித்துக் கொண்டு விட்டுத் தம் மீது புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினர். போலீஸ் காவல் உள்ள போது நாங்கள் எப்படி அதைச் செய்திருக்க முடியும் என்றனர். வன்னியர்களைப் போலீஸ் தேடிக் கொண்டுள்ளபோது அவர்கள் மட்டும் இதை எப்படிச் செய்திருக்க முடியும் என நாங்கள் கேட்டபோது, அவங்க எல்லாம் பக்கத்துக் கிராமங்கள்லதானே ஒளிஞ்சிருக்காங்க, ராத்திரியில வந்து எரிச்சிருப்பாங்க என்று பதில் வந்தது.

  வன்னியர் தரப்பில் இத்தகைய தீண்டாமை ஒதுக்கல்களில் முன்நிற்பவர்களாக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்கள் தமிழ்மாறன், தன ராஜேந்திரன், இன்றைய தலைவர் செந்தில், மற்றும் லோகநாதன், ஆசைமணி, முத்துக்குமரன், ராஜசேகரன், கபிலன் முதலானவர்களின் பெயர்களைக் கூறினர்.

   வன்னியர் தரப்பில் கூறியது: “இதுவரைக்கும் எங்க கிராமத்துல எந்தப் பிரச்சினையும் வந்தது இல்லை. இப்ப ஓட்டுக் கேக்கப் போனபோது அவங்க பசங்க யாரோ ஏதோ பொண்ணு தருவீங்களான்னு சொன்னதா சொல்றாங்க. அன்னைக்கு ராத்திரி எங்க ஆளுங்க இதைக் கேக்கப் போனபோதுதான் பிரச்சினை. ரொம்பப் பேரு போகல. ஒரு இருவது முப்பது பேரு போயிருப்பாங்க. ஆனா எழுபது பேருக்கும் மேல கேஸ் போட்டுத் தேடுறாங்க. இந்தப் பிரச்சினைக்குச் சம்பந்தமே இல்லாத இஞ்சினீரிங் படிக்கிற கதிரவன், விஜயபாலன், கலைச்செல்வன் அப்புறம் விஜயேந்திரன் மாதிரி மாணவர்களை எல்லாம் புடிச்சுக் கைது பண்ணி இருக்காங்க. வெளியூர்கள்கள்ல வேல செஞ்சுட்டுருக்கவங்களை எல்லாம் கேஸ்ல சேத்திருக்காங்க. அப்பாவிங்கள கேஸ்ல இருந்து விடுவிக்கணும்.”

   நிறையப் பெண்கள் முன்வந்து எங்களிடம் பேசினர், தங்களின் மோட்டார் கொட்டகைகள் எரிக்கப்பட்டது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் குறை கூறினர். ஏப்ரல் 24 அன்று தங்கள் தரப்பில் கொஞ்சப் பேர்கள் சென்று தாக்குதல் நடத்தியதை ஏற்றுக் கொண்ட அவர்கள், எனினும் இறந்து போனவர்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனவும், அவர்கள் கீழே விழுந்து இறந்திருக்கலாம் எனவும் கூறினர். ஏன் நீங்கள் இப்போது தலித் மக்கள் யாருக்கும் வேலை கொடுக்கவில்லை எனக் கேட்டபோது இப்பத்தான் எல்லாம் நடந்திருக்கு. எங்கள் ஆம்பிளைகளே இன்னும் வீடு திரும்பல. .அவங்க வந்து விவசாய வேலைகளைத் தொடங்கினாதான நாங்க அவங்களுக்கு வேலை கொடுக்க முடியும் என்றனர்.

   அன்றைய தாக்குதலில் நேரடியாகப் பங்கு பெறாத சிலரும் கைது செய்யப்பட்டிருப்பதை தலிப் தரப்பிலும் ஏறுக்கொண்டனர். இது குறித்துத் துணைக் கண்காணிப்பாளரைக் கேட்டபோது இந்த வன்முறையை நியாயப்படுத்தி இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த வகையில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அவ்வளவு பேரும் குற்றவாளிகளே எனவும் தாங்கள் அப்பாவிகள் யாரையும் கைது செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

1. வடக்கு மாங்குடியில் இதுவரை பெரிய சாதி மோதல்கள் நடைபெறாவிட்டாலும் பல்வேறு வடிவங்களிலும் தீண்டாமை ஒடுக்குமுறைகள் அங்கு தொடர்ந்து இருந்து வந்துள்ளன. நாலாபுறமும் ஆதிக்க சாதியினரால் சூழப்படுள்ள இம்மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  தேர்தலை ஒட்டிய இன்றைய தாக்குதல் இந்த அச்சத்தை மிகுதிப்படுத்தியுள்ளது. இனிமேலும் இந்தக் கிராமத்தில் வாழ இயலாது என்று முடிவெடுக்கும் நிலைக்கு இன்று அவர்கள் வந்துள்ளனர். தலித் மக்களுக்குத் தனிக் குடியிருப்பு வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கட்டத்தில் வைத்த கோரிக்கையை இன்று அவர்கள் ஒரு கையறு நிலையில் தன்னிச்சையாக வைக்க நேரிட்டுள்ளனர். அமைதிக் கூட்டத்திலும் அவர்கள் இக் கோரிக்கையை வைத்துள்ளனர் சுற்றிலும் ஆதிக்கச் சாதியினரால் சூழப்பட்டுள்ள நிலையும், சாதி வெறி அரசியல் ஒன்று இங்கு கட்டமைக்கப்ப்டுகிற சூழலும் இன்று தங்களின் பாரம்பரிய வாழிடத்தை விட்டுவிட்டு வெளியேறும் நிலைக்கு த்லித் மக்களைத் தள்ளியுள்ளது கவலை அளிக்கிறது. இந்த அச்சத்தைப் போக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. தாக்குதல் நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் 78 பேர்கள் இருந்தும் மாதம் ஒன்றாகியும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 48 பேர்கள் இன்னும் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. தருமபுரியில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட பலர் பின்னர் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் கைது செய்யப்படாமல் போனது போல இங்கும் நிகழக் கூடாது. தேடப்படுகிற பலரும் அருகிலுள்ள கிராமங்களிலேயே ஒளிந்துள்ளதாகத் தெரிகிறது. மூன்று தேடுதல் படைகள் அமைத்தும் அவர்களைக் கைது செய்ய இயலவில்லை எனச் சொல்வது நம்பும்படியாக இல்லை. காவல்துறை உடனடியாகப் பிறரையும் கைது செய்ய வேண்டும்.

3. இந்தத் தாக்குதலுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்ததில் முழுச் சமூகத்திற்கும் பொறுப்புள்ளது எனக் காவல்துறை சொல்வது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. எனினும் முற்றிலும் தொடர்பில்லாத சில மாணவர்களும், வெளியூரில் இருந்த சிலரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என வன்னியர் தரப்பில் சொல்லப்படுவதால் காவல்துறையினர் இதைத் தீர விசாரித்து அதில் உண்மை இருந்தால் அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கலாம். அதேபோல இப்போது வழக்கில் சேர்க்கபடாதவர்களில் யாரும் வன்முறையின் பின்னணியில் இருந்துள்ளனரா எனத் தீர விசாரித்து அப்படி இருந்தால் அவர்களும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

4. ஆதிக்க சாதியினரின் சுடுகாடு உடனடியாக தலித் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப் பட வேண்டும் தலித் மக்களின் சுடுகாட்டிற்குச் செல்லும் பாதை நீர் வடிகாலைப் பாதிக்காத வகையில் உடனடியாகச் சீர்திருத்தப்பட வேண்டும். தலித் மக்கள் பயன்படுத்துவதற்கு இன்னும் அதிக அளவில் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் உடனடியாகக் கட்டித் தரப்பட வேண்டும். தலித் மக்களுக்குக் கட்டித் தரப்பட வேண்டிய சுமார் எட்டு தொகுப்பு வீடுகளின் பணி கட்டுமானப் பொருட்கள் வழங்கப் படாமையினால் நின்று போயுள்ளது. உடனடியாக அவற்றை வழங்கிப் பணிகளை நிறைவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.

5. சுற்றிலும் ஆதிக்கச் சாதியினரால் சூழப்பட்டுள்ள தலித் மக்கள் தற்சார்பு பெற அவர்களுக்கு நிலம் அளிக்கப்படுதல் அவசியம். குடும்பம் ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் அளிக்கும் திட்டம் இங்கு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை நூறு நாள் வேலைத் திட்டம் முதலியவரற்றை தலித் மக்களுக்கு உடனடிப் பயன் அளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். தற்போது இவ்வேலைத் திட்டத்தில் பங்குபெற்றவர்களுக்கு இரு மாத ஊதிய பாக்கி இருப்பதாகத் தலித் தரப்பில் கூறப்பட்டது. அது உடனடியாக வினியோகிக்கப்பட வேண்டும்.

6. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு முன் ஜாமீன் அளிக்கப்படக் கூடாது என விதி இருந்தும் அவர்களுக்கு முன் ஜாமீன் அளிப்பதும், கைது செய்யப்பட்டவர்கள் எளிதில் பிணையில் விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது வருந்தத்தக்கது. நீதிமன்றங்களும் இதற்கு ஒத்துழைப்பது வேதனை அளிக்கிறது. தற்போது திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்பு அவசரச் சட்டத்தில் (2014) வன்முறையாளர்களைப் பிணையில் விடுதலை செய்யும் போது பாதிக்கப்பட்டவர்களிடம் இவ்வாறு விடுதலை செய்வதால் தங்களுக்கு ஏதும் அச்சுறுத்தல் உள்ளதா என அவர்களின் கருத்தைக் கேட்க வேண்டும். எனினும் இவ்வாறு கேட்கப்படாமலேயே இப்போது கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நாங்கள் கேட்டபோது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எளிதில் இனிப் பிணையில் விடுதலை ஆகாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகத் துணைக் கண்காணிப்பாளர் பதிலுரைத்தார். திருத்தப்பட்ட அவசரச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநிலக் காவல்துறைத் தலைமை இச் சட்டப் பிரிவுகளை விளக்கி உரிய சுற்றறிக்கைகளை உடனடியாகக் காவல் நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

7. தலித் மக்களுக்கு வேலை கொடுக்க மறுப்பது, வன்னியர் பகுதி வழியே தலித் மாணவ மாணவிகள் செல்வதற்கு அச்சம் நிலவுவது, தலித் மக்கள் ஆடு மாடுகள் மேய்ப்பதற்குத் தடை என பல பிரச்சினைகள் உள்ளன. இத்தகைய அச்சங்களைப் போக்கும் வண்ணம் இரு தரப்பினரையும் கூட்டி அமைதிப் பேச்சு வார்த்தை ஒன்றை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

 தொடர்பு: 

அ.மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
அடையாறு, 
சென்னை- 600020.   
செல்: 94441 20582, 9894054640

நன்றி: அ.மார்க்ஸ்

மேல்மங்கலம்,உத்தபுரம் சாதி வன்முறைகள் – உண்மை அறியும் குழு அறிக்கை

                 மேல்மங்கலம்,உத்தபுரம் சாதி வன்முறைகள் – 

                               உண்மை அறியும் குழு அறிக்கை

                                                                                                                                                                                 மதுரை,
                                                                                   மே 19, 2014.

  தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஆண்டிப்பட்டி சாலையில் வடுகப்பட்டியை ஒட்டி உள்ள ஊர் மேல்மங்கலம். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஊர்களை ஒட்டி அமைந்துள்ள ஊர் இது. ஏப்ரல் 6 அன்று இரவு அவ்வூரைச் சேர்ந்த, ஆனால் தற்போது வெளியூரில் வசிக்கும் நண்பர் ஒருவரிடமிருந்து பதட்டத்துடன் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள அருந்ததிய மக்களின் வீடுகளை அவ்வூர் ஆதிக்க சாதியினர் எரித்துள்ளதாகவும், மக்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நண்பர் கூறினார்.
அடுத்த நாள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திலுள்ள உத்தபுரம் கிராமத் திருவிழாவில். நீதிமன்ற ஆணையை மீறி அவ்வூர் ஆதிக்க சாதியினர் அதே ஊரைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற காவல்துறை மற்Ruம் வருவாய்த் துறை அதிகாரிகளை அவ்வூர் ஆதிக்க சாதியினர் கல்லெறிந்து தாக்கிய செய்தியையும் அறிந்தோம்

    அடுத்தடுத்த நாட்கள் நாளிதழ்களிலும் இவை தொடர்பான செய்திகளைக் கண்ட எங்கள் குழுவினர் சென்ற ஏப்ரல் இறுதியில் மேல்மங்கலம் சென்று இது தொடர்பாக விசாரிக்க முனைந்தபோது காவல்துறையினர் எங்களை அனுமதிக்க மறுத்தனர். காவல்துறைக் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசியும் எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

   சென்ற சில மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் நடுப்பட்டி கிராமத்தில் அருந்ததிய மக்கள் தாக்கப்பட்டது குறித்த உண்மைகளை அறிய நாங்கள் சென்றபோதும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் இரு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடையே உள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்யச் சென்றபோதும் இவ்வாறே காவல்துறையினர் எங்கள் முயற்சிகளைத் தடை செய்துள்ளனர்.

    மிக்க நடுநிலையுடன் பிரச்சினைகளை ஆய்வு செய்து வெளியிடப்படும் எங்கள் அறிக்கைகள் நீதிமன்றங்களாலேலேயே முக்கிய ஆவணங்களாக பலநேரங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இப்படியான உண்மை அறியும் குழுக்களை அமைத்து செயல்படுவதற்கு முன்னோடியாக விளங்குபவர் மகாத்மா காந்தி அடிகள்தான். ஜாலியன்வாலா பாக் படுகொலையின் போது மோதிலால் நேரு அவர்கள் காந்தி தலைமையில் அப்படி ஒரு குழுவை நியமித்தார். மிக நடுநிலையான அற்புதமான அந்த அறிக்கை அக்காலத்திலேயே தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கி வெளியிடப்பட்டது.

    பரமக்குடி துப்பாக்கிசூடு குறித்த இது போன்ற ஒரு ஆய்வைத் தடை செய்ய தமிழகக் காவல்துறை நீதிமன்றத்தை அணுகியபோது நீதியரசர் இராமசுப்பிரமணியம் அவர்கள் அம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, மனித உரிமை அமைப்புகளின் இத்தகைய செயல்பாடுகள் ஒரு மூன்றாவது புலனாய்வு முயற்சி எனவும் உண்மைகளை அறிய இவை உதவி புரிகின்றன எனவும் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

   இந்தப் பின்னணியில் நாங்கள் இம்முறை நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தோம். எங்கள் மனு [W.P. (MD) NO. 6750 of 2014] நீதியரசர் இராம சுப்பிரமணியம் அவர்கள் முன் விசாரணைக்கு வந்தபோது ஏற்கனவே அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டதாகவும் நாங்கள் இவ்வூர்களுக்குச் செல்வது அந்த அமைதியைக் குலைக்கும் எனவும்  அரசு வழக்குரைஞர்  வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதியரசர் அரசியல்சட்டத்தின் 19 (1) (e) பிரிவின்படிஅங்கு செல்வது எங்களின் அடிப்படை உரிமை என்பதைச் சுட்டிக்காட்டினார். இன்று அங்கு நிலவும் அமைதி குலையக் கூடாது என அரசு தரப்பில் சொல்வது புரிந்து கொள்ளக் கூடியதுதான் என்றபோதிலும் இந்த அமைதி இயற்கையாக உருவானதா இல்லை மேலிருந்து திணிக்கப்பட்டதா என உறுதி செய்யும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. ஒரு மூன்றாவது தரப்பு இதை உறுதி செய்வது உண்மையில் காவல்துறையின் பணிக்கு ஒரு நற் சான்றாகவே அமையும். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் காவல் மற்றும் வருவாய்த்துறையினரே இது போன்ற மூன்றாம் தரப்பினரை அப்பகுதிகளுக்குச் சென்று வர அழைப்பு விடுத்து உண்மைகளை அறியச் செய்வது நல்லது எனக் கூறி மேற்குறித்த இரு கிராமங்களுக்கும் எங்கள் குழு சென்று வர அனுமதிக்குமாறு ஆணையிட்டார் (ஏப்ரல் 29, 2014).

     இதன்படி சென்ற மே 14 அன்று மேல்மங்கலம் கிராமத்திற்கு நேரிற் சென்று இரு தரப்பு மக்களையும், ஜெயமங்லம் காவல் நிலைய ஆய்வாளர் தெய்வம் என்பவரையும் சந்தித்தோம். தேனி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேஷ் ஐ.பி.எஸ் அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததால் தொலை பேசியில் தொடர்பு கொண்டு விரிவாகப் பேசினோம்.

   மாலையில் உத்தபுரம் கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தோம். காவல்துறை அதிகாரிகள் மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்ததால் சந்திக்க இயலவில்லை. விவரங்கள் வருமாறு:

எங்கள் குழுவினர் :

    மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தை (People’s Union for Human Rights) சேர்ந்த பேரா. அ.மார்க்ஸ், வழக்குரைஞர் ரஜினி மற்றும் கு.பழனிச்சாமி, தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பைச் (National Confederation of Human Rights Organisations) சேர்ந்த வழக்குரைஞர் ஏ.சையத் அப்துல் காதர், ஆதித் தமிழர் பேரவையின் மாநிலத் துணைச் செயலாளர் விடுதலை வீரன் ஆகியோர்.

மேல்மங்கலம்

    அருந்ததிய மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட காமாட்சி மகன் முத்துவேலு (39), பழனிச்சாமி மகள் காவியா (7), பழனி மனைவி பாண்டியம்மாள் (35), முத்தையா மனைவி காளியம்மாள் (80), கருப்பன் மனைவி நாகம்மாள் (70), முருகன் மனைவி முத்துப்பழனி (28), அழகுமணி மனைவி ஈஸ்வரி (39) உள்ளிட்ட பலரையும் சந்தித்தோம். அருந்ததிய மக்களின் உறவு முறைத் தலைவர் எஸ்.எம்.முருகன் மற்றும் ஆதித் தமிழர் பேரவையின் மாவட்டத் தலைவர் வீர பாண்டியன் ஆகியோர் விரிவாகத் தம் மக்கள்மீது நடைபெற்ற தாக்குதல் பற்றிக் கூறினர், எரிக்கப்பட்ட வீடுகள், கொளுத்தப்பட்ட அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும் பார்வையிட்டுப் புகைப் படங்களும் எடுத்துக் கொண்டோம்.

   மேல்மங்கலம் கிராமத்தில் அம்பலக்காரர், கள்ளர், மறவர், ஆசாரி, பிள்ளமார், செட்டியார் ஆகிய ஆதிக்க சாதியினர் மத்தியில் சுமார் 100 அருந்ததியக் குடும்பங்கள் வசிக்கின்றன. ஆதிக்க சாதியினர் மொத்தத்தில் 1000 தலைக்கட்டு எனக் கூறப்படுகிறது. நிலமனைத்தும் கள்ளர், தேவர், அம்பலக்காரர் முதலான ஆதிக்க சாதியினருக்கே சொந்தம். அருந்ததிய மக்கள் இவர்களிடம் கூலி வேலை செய்து வாழ்கின்றனர். சுமார் 7 பேர் துப்புரவுப் பணி செய்கின்றனர். படித்தவர்கள் யாருமில்லை.
22 ஆண்டுகளுக்கு முன் பாண்டி என்கிற அருந்ததிய இளஞர் ஒருவர் அகம்படியர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஒண்டு ஊரை விட்டு ஓடியுள்ளார். அதன் பிறகு இன்றுவரை அவர் ஊர் திரும்பவில்லை.

   அதற்குப் பின் இன்று மேல்மங்கலம் கிராமத்து அருந்ததிய சாதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் பாலுச்சாமியின் மகன் சுரேஷ் (32) என்பவர் அதே ஊரை சேர்ந்த நாட்டார் கள்ளர் சாதியச் சேர்ந்த முத்துலட்சுமியைக் காதலித்து வந்துள்ளார்.  ஏப்ரல் முதல் வாரத்தில் இருவரும் ஊரை விட்டுச் சென்று எங்கோ வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

     ஏப்ரல் 3 அன்று நாட்டார் கள்ளர் சாதியச் சேர்ந்த மலைச்சாமி, பால்கார மணி, செல்லப்பாண்டி,  சுப்பையர அம்பலகாரர் மகன் முருகன் முதலானோர் அருந்ததிய உறவு முறைத் தலைவர் ஜி.எம்.முருகனைச் சந்தித்து உடனடியாகத் தம் பெண்ணைக் கொண்டு வந்து ஓப்படைக்குகுமாறு எச்சரித்துள்ளனர். முருகன் ஒப்புக் கொண்டு ஒருவார கால அவகாசம் கேட்டு வந்துள்ளார்.

    உறவுமுறைக் கூட்டத்தைக் கூட்டி அவர் பேசியபோது சுரேஷின் பெற்றோர், தம் மகன் சுரேஷும் முத்துலெட்சுமியும் இருக்குமிடம் தமக்குத் தெரியாது எனவும், எனவே தாங்கள் எதுவும் செய்ய இயலாது எனவும் கூறி விட்டனர். ஒரு கட்டத்தில் விவாதம் முற்றி சுரேஷின் சகோதரன், முருகனுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதற்கிடையில் ஆதிக்க சாதியினரின் மிரட்டலால் அருந்ததியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள அல்லிநகரம் கிராமத்தில் சுரேஷும் முத்துலட்சுமியும் இருப்பதாகக் கேள்விப்பட்டு 6 ந்தேதி காலை முருகன் அங்கு சென்று விசாரித்துள்ளார். தமிழ்ப் புலிகள் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்களிடமும் கேட்டுள்ளார். எதுவும் பயனின்றி ஊர் திரும்பியுள்ளார்.

    அன்று மதியம் புரோட்டா வாங்கக் கடைக்குச் சென்ற கருப்பசாமி என்கிற அருந்ததியச் சிறுவன் (17) ஒருவனை ஆதிக்க சாதி இளைஞர்கள் அடித்து அனுப்பியுள்ளனர். இது குறித்து முருகன் ஆதிக்க சாதித் தலைவர்களிடம் போனில் பேசிய போது சின்னப் பையன்கள் செய்து விட்டதாகவும், கண்டிப்பதாகவும் சமாதானம் சொல்லியுள்ளனர்.

   அன்று மாலை 6 மணி அளவில் அருந்ததியச் சாதியச் சேர்ந்த முருகுபாண்டி (35) என்பவர் குடித்துவிட்டு வந்து கள்ளர் சாதிப் பெண்ணைத் தம் சாதிப் பையன் அழைத்துச் சென்றதைப் பற்றி ஏதோ பெருமையாகப் பேசியுள்ளார். முருகுபாண்டி இவ்வாறு குடித்துவிட்டு வந்து மனைவியை அடிக்கக் கூடியவர் எனவும் யாருக்கும் கட்டுப்படாதவர் எனவும் முருகன் குறிப்பிட்டார்.

    முருகுபாண்டியின் பேச்சில் ஆத்திரமுற்ற கள்ளர், தேவர் முதலான ஆதிக்க சாதியினர் சுமார் 6.30 மணி வாக்கில் அருந்ததியர் வசிக்கும் சத்திய நகர் பகுதிக்குச் சென்று வீடுகளைத் தாக்கியுள்ளனர். முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும் தற்போதைய சொசைடி தலைவரும் நாட்டார் கள்ளர் சாதியில் முக்கியமானவருமான மலைச்சாமிடம் முருகன் இது குறித்து முறையிட்டபோது, “நான் போய் அவர்களை அமட்டி வைக்கிறேன்” எனச் சொல்லிச் சென்றுள்ளார்.

   ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான ஆதிக்க சாதியினர் ஆண்களும் பெண்களுமாய்த் திரண்டு வந்து மேல்மங்கலம் அருந்ததியர் பகுதியைத் தாக்கியுள்ளனர். ஆறு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம். தாக்கியவர்கள் அருந்ததியர்களின் கடவுளரையும் விட்டுவைக்கவில்லை. கூரை வேய்ந்த இரு ‘வீர் சின்னம்மாள்’ கோவில்களும் எரிக்கப்பட்டுள்ளன.

   முத்துவேல் என்பவர் ஏழு குழந்தைகளை அழைத்துச் சென்று ஒரு வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்துள்ளார்.  பின் அந்த வீடும் எரிக்கப்பட்டுள்ளது நல்ல வேளையாக அவர்கள் அனைவரும் தப்பியுள்ளனர். எனினும் முத்துவேலுவிற்குத் கையில் தீக்காயம்பட்டுள்ளது. ஈஸ்வரி என்பவரின் காது அறுக்கப்பட்டு அதிலிருந்த கம்மலும் பறிபோயுள்ளது. பல வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டுள்ளன. தங்கள் வீட்டிலிருந்த பணமும் எரிக்கப்பட்டுவிட்டதாகவும், பறி போய்விட்டதாகவும் முத்துப்பழனி என்னும் பெண்ணும் முத்துவேலுவும் கூறினர். கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் வந்த காவல்துறையினர் தீயை அணைத்துள்ளனர்.

   இது குறித்து ஆதிக்க சாதியினரில் முக்கியமானவரான முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மலைச்சாமியிடம் நாங்கள் பேசியபோது தாங்கள் தாக்குதல் நடத்தியதை அவர் மறுக்கவில்லை. முருகுபாண்டியின் பேசில் ஆத்திரமுற்று அப்படி நடந்துவிட்டது என்றார், தங்கள் சாதிப் பென்ணை அழைத்துச் சென்ற சுரேஷின் குடும்பமே அப்படிப்பட்டதுதான் என்றார். சுரேஷின் அப்பா வேறொரு ஊரில் தான் தேவர் எனச் சொல்லி அச் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றதாகவும் கடைசி நேரத்தில் தாங்கள் சென்று அவர் ஒரு மாதாரி என்பதைச்  சொல்லித் திருமணத்தை நிறுத்தியதாகவுக் குறிப்பிட்டார். சுரேஷ் – முத்துலட்சுமி காதலைப் பொறுத்த மட்டில் முத்துலட்சுமியை  ஒப்படைத்து விட்டு சுரேஷ் கேரளா பக்கம் போய்விடுவதுதான் சரியாக இருக்கும். அல்லது முத்துலெட்சுமியை விட்டுவிட்டு அவன் வேறு பெண்ணைக் கட்டிக் கொண்டு ஊருக்கு வரலாம் என்றார்.

      ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 20 பேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது (குற்ற எண்: 60 / 2014). வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 3(1) (10), 3 (2) (5) முதலான பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பிணையில் விடுதலை செய்ய இயலாது. ஆனால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது என உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்து அந்த அடிப்படையில் வன்கொடுமையாளர்கள் பிணையில் விடுதலை கோருவதும் அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்வதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.. இங்கும் கைது செய்யப்பட 20 பேர்களும் ஒரே வாரத்தில் பிணையில் விடுதலை ஆகியுள்ளனர்.

    அருந்ததியர் சாதியைச் சேர்ந்த முருகு பாண்டியின் மீது இ.த.ச 307 வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு (குற்ற எண் 59) இன்னும் அவர் சிறையில் உள்ளார்.

   எரிக்கப்பட்ட 5 வீடுகளுக்கு 2500 முதல் 5000 வரை இழப்பீடும் துணி மணிகளும் பாத்திர பண்டங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. காயமடைந்த ஐவருக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி 60,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவாகியுள்ளது.  பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2 வீடுகள் கட்டித் தர உள்ளதாகவும் காவல்துறைத் தரப்பில் சொல்லப்பட்டது.

    இந்த இழப்பீடு முதலியவை எல்லாம் கூட எங்களைப் போன்றவர்கள் நீதிமன்றத்தை அணுகிய பின்னரே மேற்கொள்ளப்பட்டது என்பதும், அரசுத் தரப்பில் அதுவரை எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அருந்ததியர்களைத் தாக்கிய ஆதிக்க சாதியினர் தமிழக அமைச்சரவையில் மிகவும் செல்வாக்குள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சாதியைச் சேர்ந்தவர்கள். சிலர் உறவினர்களும் கூட. அதனால்தான் அரசு நடவடிக்கைகளில் இந்த மெத்தனம் காணப்பட்டது எனவும் தாக்கியவர்கள் எளிதில் பிணையில் விடுதலை பெற முடிந்துள்ளது எனவும் ஒரு கருத்தும் அந்த அடிப்படையில் அருந்ததியர்கள் மத்தியில் ஒரு அச்சமும் நிலவுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

   அருந்ததியர்களைப் பொருத்த மட்டில் அவர்கள் தங்கள் பிழைப்பிற்கு ஆதிக்க சாதியினரையே நம்பியுள்ளனர். தற்போது அவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. நியாய விலைக் கடையில் வேலை செய்த ஒருவரையும் கூட வேலையை விட்டு நிறுத்தி விட்டனர். துப்புரவுப் பணியாளர்கள் ஏழு பேர் மட்டும் அந்தப் பணி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடுகளுக்குப் புல் பிடுங்கவும் கூடத் தங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றார் சக்திவேல் என்பவர்.

    எல்லாவற்றிற்கும் மேலாகக் கடும் அச்சம் அருந்ததியர்கள் மத்தியில் நிலவுகிறது. அஞ்சி ஓடிபோன பலர் இன்னும் வீடு திரும்பவில்லை.

   நிவாரணப் பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பாளர் குறிப்பிட்டார். வன்முறையாளர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டதைப் பற்றிக் கேட்டபோது, நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது என்றார். வேலை கொடுக்காமல் சமூகப் புறக்கணிப்பு செய்யப்படுவதைப் பற்றிக் கேட்டபோது சுமார் 50 பேருக்குத் தான் அருகிலுள்ள கோவில் ஒன்றில் தற்காலிக வேலை வாங்கித் தந்துள்ளதைக் குறிப்பிட்டார். தினம் 200 ரூபாய்க் கூலியில் ஒரு வார காலத்திற்கு அந்த வேலை தரப்பட்டுள்ளது. அதற்குப் பின் அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

உத்தபுரம்

    இங்கு கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டதை ஒட்டி இந்திய அளவில் கவனம் பெற்ற ஊர் இது. இவ் ஊருக்கு நாங்கள் செல்வது இது நான்காவது முறை.

   சுவர் இடிக்கப்பட்டதாக உலக அளவில் செய்தி பரப்பப் பட்டுள்ள போதிலும் இன்றளவும் அவ்வழியே வண்டிகள், ஆட்டோக்கள், லாரிகள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே சுவர் இடிக்கப்படும் முன் இப்பகுதியில் வாழும் பட்டியல் சாதியினர் எததகைய கஷ்டங்களையும் அவமானங்களையும் அனுபவித்தார்களோ அவை இன்னும் தொடர்கின்றன.
பேருந்து நிறுத்தம் கட்டப்படுவது தொடர்பான கோரிக்கை மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது.

  இன்னொரு முக்கிய கோரிக்கையான முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் வழிபடும் உரிமை என்பது பட்டியல் சாதியினருக்கு இன்னும் மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தெளிவான ஆணையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை இட்டிருந்தும் பிள்ளைமார் சாதியினர் அதை அனுமதிக்கவில்லை.

    இந்த ஆண்டு திருவிழாவின் போது பொங்கல் வைத்து சாமி கும்பிட ஆவன செய்ய வெண்டும் எனப் பட்டியல் சாதியினர் (தேவேந்திர குல வேளாளர்கள்) சென்ற மாதத் தொடக்கத்தில் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர். பொங்கல் வைக்க வேண்டாம், சாமி கும்பிட ஆவன செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதை இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

   இது தொடர்பாக சென்ற ஏப்ரல் 7 ந்தேதியன்று ஆர்.டி.ஓ, தாசில்தார், டி.எஸ்.பி ஆகியோர்  பேச்சுவார்த்தை நடத்த உத்தபுரம் வந்துள்ளனர். முதலில் தேவேந்திரர்கள் சார்பாக சங்கரலிங்கம் பேசி விட்டுச் சென்றுள்ளார். அடுத்து கோவில் நிர்வாகத்தைக் கையில் வைத்துள்ள பிள்ளைமார்களிடம் பேச இருந்தபோது அதிகாரிகள் அமர்ந்திருந்த கட்டிடத்தின் மீது பிள்ளைமார்கள் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். அதிகாரிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே பிரச்சினையாகி பேச்சுவார்த்தை நின்றுள்ளது. கோவில் பூட்டப்பட்டுள்ளது. திருவிழா நடக்கவில்லை. கல்வீசியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிய பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தேவேந்திரர்கள் சமாதானப் படுத்தப்பட்டுள்ளனர். இரு தரப்பினர் மத்தியிலும் சுமுக உறவில்லாமல் கனிந்த பகையுடன் நிலைமை தொடர்கிறது.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

   பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ள ஒரு முக்கிய அம்சம். அதை வரவேற்கிறோம். ஆனால் பிரச்சினை அத்தோடு முடிவதில்லை. பாதிக்கப்படும் பட்டியல் சாதியினர் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்குவது அரசின் கடமை. மேல்மங்கலத்தைப் பொருத்த மட்டில் இந்த அச்சம் இன்னும் போக்கப்படவில்லை. இன்று அங்கு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் அமைதி போலித்தனமான ஒன்று.  இதை அரசும் காவல்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தாக்கியவர்கள் அனைவரும் இன்று பிணையில் வெளி வந்து தைரியமாக நடமாடுகின்றனர். அருந்ததியர் வீதி வழியே தான் ஆதிக்க சாதி இளைஞர்கள் திறந்த வெளியை நோக்கி விளையாடச் செல்கின்றனர். நாங்கள் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் கிண்டலும் கேலியுமாக அச்சுறுத்தும் வகையில் அவ்வழியே சென்று வந்ததைக் கண்டோம்.

1.அருந்ததியர் பகுதியை ஒட்டி நிரந்தரமாக அங்கு காவல்துறை அவுட் போஸ்ட் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

2. வன்கொடுமைக்குக் காரணமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்யக் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டு வழக்கைக் கவனமாக நடத்தி குற்றவாளிகளுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலுள்ள அதிகபட்சத் தணடனையைப் பெற்றுத் தர காவல்துறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3. அருந்ததிய மக்களுக்கு வேலை மறுக்கப்படுவது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி சமூகப் புறக்கணிப்புக் குற்றம். இது தொடருமானால் இச்சட்டப் பிரிவுகள் பயன்படுத்தப்படும் எனவும் இப்பகுதி வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்கப்படும் எனவும் விளம்பரப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. ஆதிக்க சாதியினரின் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில் மதுபானங்கள் விற்கப்படுவதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்துக் காவல்துறை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தாக்குதலின்போது அருந்ததியர் வீடுகளிலிருந்த பணம் முதலியன பறிபோயுள்ளதாகச் சிலர் கூறினர். இது உண்மையா என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. அருந்ததியர்களுக்கு நிரந்தர வருவாய் வரும் வகையில் சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் முதலிய சாத்தியமான வேலை வாய்ப்பு வழி முறைகளை அரசு கண்டறிந்து நடைமுறைப் படுத்த வேண்டும்.

     உத்தபுரத்தைப் பொறுத்த மட்டில் ஆண்டுகள் பலவாகியும் பிரச்சினைகள் தொடங்கிய இடத்தில் அப்படியே தேங்கி நிற்கின்றன. அரசைப் பொறுத்த மட்டில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் விருப்புறுதி கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

1. சுவர் இடிக்கப்பட்ட இடத்தை அகலப்படுத்தி அங்குள்ள எதற்கும் பயனற்ற கிணற்றை மூடி வண்டி, லாரிகள், டிராக்டர்கள் செல்ல வழி வகுக்க வேண்டும். பாதையில் போக்கு வரத்திற்கு இடைஞ்சலாக வேண்டுமென்றே அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகள் முதலியன அகற்றப்பட்டு உறுதியான சிமின்ட் சாலை அமைக்க வேண்டும்.

2. முத்தாலம்மன் கோவில் அற நிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இதை நாங்கள் தொடர்ந்து எம் அறிக்கைகளில் வற்புறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

3. ஏப்ரல் 7 அன்று பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகளைத் தாக்கியதோடு பேச்சுவார்த்தைகள் நடைபெற விடாமல் தடுத்தது கடுமையான குற்றம். இதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குத் தொடராதது கண்டிக்கத் தக்கது. குற்றவாளிகள் கண்டறியப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டும்.

தொடர்பு : 

அ.மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
சென்னை-600 020. 
செல்:94441 20582, 94432 94892.

நன்றி: அ.மார்க்ஸ்