புதன், ஜூன் 12, 2019

சமூகச்சீர்திருத்தங்களில் தமிழகத்தின் முன்னோடிப்பங்கை பாடநூல்கள் மறுக்கலாமா?


சமூகச்சீர்திருத்தங்களில் தமிழகத்தின் முன்னோடிப்பங்கை பாடநூல்கள் மறுக்கலாமா?


மு.சிவகுருநாதன்


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 11)





      பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் தொகுதியின் வரலாறு பாடத்தில் 5 -வது பாடம் ’19 ஆம் நூற்றாண்டின் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்’ என்ற பாடம் உள்ளது. வழக்கம்போல இப்பாடத்தில் தலைப்பே சிக்கலுக்குரியது. சமய சீர்திருத்தங்களுக்கு அதிக இடம், பக்கங்களை ஒதுக்கிவிட்டு ‘சமூக சீர்திருத்தம்’ என்பதை முதலில் போட்டுக்கொள்வதால் என்ன பயன்?

     புதிய பாடநூல் பணிகள் தொடங்கியபோது அப்போதைய பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ‘தமிழ், தமிழர், தமிழ்நாடு’ என்பதை மையமாகக் கொள்வோம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். வழமையான வடபுலப்பார்வையில் (தில்லிப் பார்வை) சீர்திருத்த இயக்கங்கள் எனும் போர்வையில் இந்துமதத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவாகச் செயல்பட்ட இயக்கங்களைப் பெரிதாகப் பட்டியலிட்டுவிட்டு, தமிழகச் சிந்தனையாளர்களை ஒதுக்குவதும் தனியே பிரித்தளிப்பதும் வருணமுறைக்கு நிகரானதாக உள்ளது. பிறகு எப்படி புதிய சிந்தனை மாற்றம் உண்டாகும்?  

 5. 1 வங்காளத்தில் தொடக்ககால சீர்திருத்த இயக்கங்கள்
(அ) ராஜா ராம்மோகன் ராய், பிரம்ம சமாஜம்
(ஆ) மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்
(இ) கேசவ் சந்திர சென்னும் இந்தியாவின் பிரம்ம சமாஜமும்
(ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
(உ) பிரார்த்தனை சமாஜம் (ஆத்மராம் பாண்டுரங், எம்.ஜி.ரானடே)

5. 2 இந்து புத்தெழுச்சி இயக்கம்

(அ) சுவாமி தயானந்த சரஸ்வதி மற்றும் ஆரிய சமாஜம்
(ஆ) இராமகிருஷ்ண பரமஹம்சர், ராமகிருஷ்ணா மிஷன்
(இ) சுவாமி விவேகானந்தர்
(ஈ) பிரம்மஞான இயக்கம்
(உ) அன்னிபெசன்ட் – பங்களிப்பு
5. 3 சாதி எதிர்ப்பு இயக்கங்கள்
(அ) ஜோதிபா பூலே – சாவித்திரிபா புலே
(ஆ) நாராயண குரு
(இ) அய்யன்காளி

5. 4 இஸ்லாமிய சீர்திருத்தங்கள்

(அ) சர் சையது அகமது கான்
(ஆ) அலிகார் இயக்கம்
(இ) தியோபந்த் இயக்கம்

5. 5 பார்சி சீர்திருத்த இயக்கம்

5. 6 சீக்கியர் சீர்திருத்த இயக்கம்
(அ) நிரங்கரிகள்
(ஆ) நாம்தாரிகள்

5. 7 தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்
(அ) இராமலிங்க சுவாமிகள்
(ஆ) வைகுண்ட சுவாமிகள்
(இ) அயோத்தி தாசர்

   ‘மேல்சாதியினர்க்கிடையேப் பணியாற்றிய அதே வேளையில்’ (பக்.79) ‘உயர்சாதியினர் மட்டும் அணியும் ஆடைகள்’, ‘உயர்சாதியினர் பயன்படுத்தியதும்’ (பக்.82), ‘உயர்சாதியினரின் கடுமையான எதிர்ப்புகளிடையே’ (பக்.84), ‘உயர்சாதியினர் ராஜ்ஜியமாக விளங்கிய அச்சிட்டு வெளியிடும் இதழியலை’ (பக்.85),  என்று ‘மேல்சாதி’, ‘உயர்சாதி’ எனும் ஆதிக்கச் சொல்லாடல்கள் பாடமெங்கும் நிறைந்து கிடக்கின்றன. ‘உயர்த்தப்பட்ட சாதி’, ‘தாழ்த்தப்பட்ட சாதி’ அல்லது ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்று பயன்படுத்த பாடநூல்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

    இராமலிங்க சுவாமிகள், வைகுண்ட சுவாமிகள், அயோத்தி தாசர் ஆகிய மூன்று சிந்தனையாளர்களை இறுதியாக தமிழ்நாட்டு சீர்திருத்தவாதிகள் எனத் தனியே அறிமுகம் செய்வது சரியல்ல. இந்திய அளவிலான சீர்திருத்தவாதிகளுடன் இணைத்து இன்னும் விரிவாக அறிமுகம் செய்யப்பட வேண்டும். சீந்திருத்தவாதிகளுள் பலவகையுண்டு. மத, சாதி எல்லைக்குள் நின்று சீர்திருத்தம் பேசியவர்கள், சாதி மறுப்பை முதன்மைப்படுத்தியவர்கள், மதத்தில் நின்று தீண்டாமை போன்ற சாதிக்கொடுமைகளை எதிர்த்தோர் எனப் பல தன்மைகள் உண்டு. இத்தகைய சீர்திருத்தவாதிகள் அவர்களது சீடர்கள் பின்னாளில் அவர்களை சாதி, மதப்பிரிவுகளுக்குள் அய்க்கியமாக்கினர்.  

     குறிப்பாக சாதி எதிர்ப்பு இயக்கங்களில் ஜோதிபா பூலே – சாவித்திரிபா புலே, நாராயண குரு, அய்யன்காளி ஆகியோருடன் தமிழக சீர்திருத்தவாதிகள் இணைக்கப்பட வேண்டும். தில்லியில் தயாரிக்கப்படும் நூல்களில் இவர்களுக்கு இடமிருக்காது. தமிழ்நாட்டிலும் ஏன் கடைசி இடம் வழங்க வேண்டும்? இவர்களது சிந்தனைகளை இந்தியா முழுதும் கொண்டு சேர்ப்பதை விடுத்து, ‘தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்’ எனக்குறுக்குவது சரியாகுமா? இவர்கள் அனைவருமே வாழும் காலங்களில் இந்தியா முழுமைக்குமான சீர்திருத்தவாதியாக இருக்கவில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இவர்களது கருத்தியலை முன்னெடுக்க முடிந்தது. 

    மேலும் இவர்களை எப்படி வரிசைப்படுத்துவது? பிறந்த ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தலாம். ராஜா ராம்மோகன் ராயில் அப்படித்தான் தொடங்குகிறது. ஆனால் இறுதியில் மாறிவிடுவது ஏன்? வள்ளலாருக்கு (ராமலிங்க அடிகள்) முன்னதாக வைகுண்ட சுவாமிகள் இடம்பெறவேண்டும். இவர்களுக்கு அளிக்கப்படும் ‘சுவாமிகள்’ எனும் பின்னொட்டு  வைதீகத்துடன் இணைத்துப் பார்க்க வைக்கிறது. ‘சாமிகள்’ என்பதுகூட சரியாக இருக்கலாம். சாதிக்கு எதிராக செயல்பட்ட இவர்களை சாதிக்குள் நுழைத்துவிட்டனர். அருட்பா x மருட்பா விவாதப்போரில் வள்ளலாரின் சீடர்களது சொற்றொடர்கள் அவரது கருத்தியலை எவ்வாறு உள்வாங்கியுள்ளனர் என்பதை உணர்த்தும்.

 சாதி எதிர்ப்பு இயக்கங்கள்

(அ) ஜோதிபா பூலே (1827 – 1890)
(ஆ) நாராயண குரு (1854 – 1928)
 (இ) அய்யன்காளி  (1863 – 1941)

தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்

(அ) இராமலிங்க சுவாமிகள் (1823 – 1874)
(ஆ) வைகுண்ட சுவாமிகள் (1809 – 1851)
(இ) அயோத்தி தாசர் (1845 – 1914)

    சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் அடிப்படைவாதிகளால் மிக மோசமான எதிர்கொள்ளப்பட்டன. எதிர்வினைகள் பலவழிகளில் இருந்தன. மகாத்மா ஜோதிபா புலே - சாவித்திரிபா புலேவை சனாதானிகள் இவ்விதமே எதிர்கொண்டனர். பிற்காலத்தில் மகாத்மா காந்தி, தந்தை பெரியார் போன்றோரையும் சனாதனம் இவ்வாறுதான் எதிர்கொண்டது. இங்கு சீர்திருத்தங்களைப் பேசவேண்டுமா, அல்லது எதிர்ப்புகளையா? 

     வள்ளலாரின் சமத்துவ சிந்தனை ஏன் ‘தீவிர’ சிந்தனையாகிறது? வருண ஆதரவு இயல்பான சிந்தனை; வருண (சாதி) மறுப்பு தீவிர சிந்தனை. இது எத்தகைய மனபோக்கை வெளிக்காட்டுகிறது?  அவர் என்ன தீவிரவாதியா? அதனால்தான்  நந்தனைப்போல எரித்துப் படுகொலை செய்யப்பட்டாரோ! அயோத்திதாசர் ‘தீவிர தமிழ்அறிஞர்’ (Radical Tamil Scholar) என்பதும் இவ்வழியில் யோசிக்க வைக்கிறது. இன்றுள்ள பொருள்கோடலுக்குத் தக்கவாறு மாற்றுச்சொற்களை யோசிக்க வேண்டும்.   

     “அவருடைய (வள்ளலார்) தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை ஆழமாகப் புண்படுத்தியதால் அவர்கள் வள்ளலாரின் பாடல்களை ‘மருட்பா’ (அறியாமையின் பாடல்கள்) எனக் கண்டனம் செய்தனர்”, (பக்.84) என்று ‘மருட்பா’வை பாடநூல் முதன்மைப்படுத்துகிறது.

     ஜோதிபா புலேவை ஏன் மகாத்மா என்று அறிமுகம் செய்யவில்லை. இந்தியாவின் முதல் மகாத்மா அவர். சாவித்திரி பா என்பதே சரி; சாவித்திரி பாய் அல்ல. இதைப்போலவே கஸ்தூரிபா; கஸ்தூரி பாய் அல்ல. ‘பா’ என்னும் பின்னொட்டு அன்பைக் குறிக்கும் சொல்லாகும். (பார்க்க: ஜோதிராவ் புலே – தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், பாரதி புத்தகலாயம்) 

   வள்ளலார் பாடப்பகுதியில் ‘A free feeding house’ என்பதை ‘இலவச உணவகம்’ (பக்.84) என்று மொழிபெயர்க்கின்றன. அன்னச்சத்திரம், தர்மசாலை போன்றவற்றிற்கு இச்சொல் இணையானது அல்ல. 

    அய்யன் காளியின் அறிமுகமாக, “பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரளம் படுமோசமான சாதிப்பாகுபாடுகளால் பீடிக்கப்பட்டிருந்தது”, (பக்.82)  இவ்வரி எதோ கேரளாவில் மட்டும் சாதிப்பாகுபாடு, தீண்டாமையும் உச்சத்தில் இருந்தது என்பதுபோல தொனிக்கிறது. சாதிக்கொடுமைகள் இந்தியாவெங்கும் தலைவிரித்தாடியதுதானே உண்மை. தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் இல்லையா?  

   “He initiated a new knowledge practice by using journalism as a tool to make inroads into the print public sphere, which, was hitherto an upper caste domain”. (page: 76) 

   “அதுவரையில் உயர்சாதியினரின் ராஜ்ஜியமாக விளங்கிய அச்சிட்டு வெளியிடும் இதழியலைத் தனது கருவியாகக் கொண்டு அயோத்திதாசர் ஒரு புதிய அறிவைப்பரப்பும் முறையை முன்னெடுத்தார். (பக்.85) 

   இது என்ன மொழிபெயர்ப்பு?   ‘அச்சிட்டு வெளியிடும் இதழியல்’ என்னே கண்டுபிடிப்பு! இந்த மொழிபெயர்ப்புகளுக்கு ‘சாகித்ய அகாதெமி’ போன்ற உயரிய பரிசுகள் அளித்து சிறப்பு செய்ய வேண்டும்! “உயர்த்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கத்தில் / கைகளில் / பிடியில் இருந்த அச்சு ஊடகம் / இதழியல்” என்று சொல்ல ஏன் முடியவில்லை? 

   அயோத்தி தாசர் குறித்த பாடப்பகுதியின் ஒரு பத்தி தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களில் கீழே தரப்படுகிறது.

      “Pandithar Iyothee Thassar founded the  Advaidananda Sabha to raise the voice for the temple entry of the "untouchables". In 1882, John Rethinam and Iyothee Thassar established a movement called, Dravida kazahagam and launched a magazine called Dravida Pandian in 1885. He founded the Dravida Mahajana Sabha in 1891 and organised the First Conference of association at Nilgiris. He started  a weekly journal, Oru Paisa Tamilan, in 1907 and published it until his dismise in 1914”. (page:76)   

     “ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார். 1882இல் அயோத்திதாசரும் ஜான் திரவியம் என்பவரும் "திராவிடர்க்கழகம்" எனும் அமைப்பை நிறுவினர். மேலும் 1885இல் "திராவிட பாண்டியன்" எனும் இதழையும் தொடங்கினார். "திராவிட மகாஜன சபை" என்ற அமைப்பை 1891இல் நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார். 1907இல் "ஒரு பைசா தமிழன்" என்ற பெயரில் ஒரு வாராந்திரப் பத்தரிக்கையைத் தொடங்கி அதை 1914இல் அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார்”. (பக்.85)

   ‘சபை’ ஆங்கிலம் சென்று திரும்பும்போது ‘சபா’ ஆகிவிடுகிறது. ‘John Rethinam’ என்பது மொழிபெயர்ப்பில் எப்படி ‘ஜான் திரவியம்’ ஆனது? 

   Rev.John Rethinam கிறித்தவப் பாதிரியார். பல்வேறு பள்ளிகள் தொடங்கி கல்வி மற்றும் சமூகப்பணியாற்றியவர். சமூகப்பணிகள் செய்தவர்களை உரிய மதிப்புடன் எழுதுவதுதானே முறை? அருட்திரு ஜான் ரத்தினம் என்றே குறிப்பிட வேண்டும். இங்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ‘பாரத ரத்னா’ எனும் பட்டம் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ அடைமொழியாகச் சேர்த்துகொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் வழங்கப்படுகிறது. பாடநூல் அதைப்பின்பற்றுவதில்லை. (எ.கா. பாரத ரத்னா CNR ராவ் – பக்.179, 10 அறிவியல்) இவர் பாரத ரத்னா பட்டம் / விருது பெற்றவர் எனச்சொல்வது வேறு. பெயருக்கு முன்னதாக அடைமொழியாகப் பயன்படுத்துவது வேறு.

    அயோத்திதாசர் நடத்திய வார இதழின் பெயர் ஒரு பைசா தமிழன் அல்ல; ஒரு பைசாத் தமிழன். ஜூன் 19, 1907 தொடங்கப்பட்ட இதழ் அடுத்த ஆண்டே (ஆக. 26, 1908) ‘தமிழன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வரலாற்று நிகழ்வுகளும் கருத்துகளும் கலைத்துப் போடப்பட்டுள்ளன. (பின் நவீனத்துவ அணுகல் முறையோ!) 

   1891 இல் ரெட்டை மலை சீனிவாசனுடன் இணைந்து  ‘திராவிடர் மகாஜன சபை’யைத் தொடங்குகிறார். 1861 – 1891 இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனைவரும் ‘இந்துக்கள்’ எனப் பேரடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அதனால்தான் 1891 கணக்கெடுப்பில் ‘சாதியற்ற தமிழர்கள்’ எனப்பதிவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  

     19 ஆம் நூற்றாண்டு சமூக சீர்திருதங்களுடன் தொடர்புடைய பொக்காலா லட்சுமி நரசு, ம.சிங்காரவேலர், ரெட்டமலை சீனிவாசன் போன்றோரும் சென்னை இலெளகிக சங்கம், சாக்கிய பவுத்த சங்கம் போன்ற இயக்கங்களும் தத்துவவிவேசினி போன்ற இதழ்களும் ஏன் தொடர் புறக்கணிப்பிற்கு உள்ளாகின்றனர்? இந்து புத்தெழுச்சி இயக்கங்களைக் கொண்டாடும் மனநிலையும் ஏன் சமூக, சாதி எதிர்ப்பு இயக்கங்களைப் புறக்கணிக்கும், அவதூறு கக்கும் அணுகுமுறையும் மாற்றப்பட வேண்டும். 

    இதேபோல் வடபுலத்தில் புறக்கணிக்கப்படுவது ‘சண்டாளர் இயக்கம்’ எனப்படும் நாமசூத்திரர்கள் இயக்கம். 1892 ஹரிசந்த் தாகூர் ‘மதுவா’ என்ற வைணவப்பிரிவின் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தார். 1887 இல் இவரது மறைவுக்குப்பின் மகன் குருசந்த் ‘சண்டாளர்கள்’ எனும் இழிவு நீக்க நாமசூத்திரர்கள் என்ற பெயர் மாற்றத்துடன் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. 

      சென்னை இலெளகிக சங்கம் வெளியிட்ட தத்துவவிவேசினி இதழைத் தொகுத்த பேரா. வீ.அரசு அவர்களின் ‘புதிய புத்தகம் பேசுது’ நேர்காணலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன. (நேர்காணல்: வ.கீதா)

    “இந்து சுயக்கியானிகள் சங்கம்   (Hindu Free Thought Union) என்னும் அமைப்பு 1878-_-1888 காலங்களில் தமிழ்ச்சூழலில் செயல்பட்டது. 'இந்து' எனும் சொல் இந்தியர்களைக் குறிக்கும். இந்து மதத்தைக் குறிக்காது. சுயக்கியானிகள் என்பது சுயசிந்தனையாளர்கள். ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்ட சுயசிந்தனையாளர்கள்  (Free Thought Movement) அமைப்புகளின் தாக்கத்தால் இவ்வமைப்பு சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பின்னர் 1886இல் சென்னை இலௌகிக சங்கம் (Madras Secular Society) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தத்துவவிவேசினி மற்றும் The Thinker இதழ்கள் வழி நாம் பெறும் வரலாற்றுத் தகவல் இது. தத்துவவிவேசினி இதழ் பற்றிய தகவல்கள் மிக மேலோட்டமாகச் சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சென்னை இலௌகிக சங்கத்தின் இதழ்கள் தத்துவவிவேசினி, The Thinker ஆகியவை  என்பதை  முதன்மைப்படுத்தி முதல்முதல் இந்த ஆறு தொகுதிகளின் மூலம் பதிவு செய்கிறோம். இந்தத் தகவல் தமிழ்ச் சமூக வரலாற்றில் இதுவரை அறியப்படாதது. மேலும் இவ்வமைப்பு நாத்திகக் கருத்துச் சார்பில் செயல்பட்டது என்பது மிக முக்கியம்.

      தமிழ்ச்சூழலில் மட்டும்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனிய காலத்தில் நாத்திக இயக்கம் செயல்பட்டுள்ளது. வங்காளம் போன்ற பகுதிகளில் சமயசீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சமய மறுப்பு எங்கும் பேசப்படவில்லை. தமிழ்ச்சூழலில் செயல்பட்ட சென்னை இலௌகிகசங்கம், அனைத்து மதங்களையும் மறுத்தது. மதவழிப்பட்ட கடவுள் கோட்பாட்டை மறுத்தது.  பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறாத  மிகவும் முற்போக்கான செயல்பாடு தமிழ்ச்சூழலில் நடைபெற்றது என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.

      இலௌகிக சங்கத்தில் செயல்பட்ட உறுப்பினர்கள் இரண்டு வகையாகச் செயல்பட்டார்கள். நேரடியாகத் தங்களது பெயரை வெளிப்படுத்திக்கொண்டு எழுதியவர்கள், பெயர்களை வெளிப்படுத்தாமல், முன்னெழுத் துக்களை மட்டும் போட்டுக் கொண்டும் புனைப்பெயர்களிலும்  எழுதியவர்கள் இன்னொரு பிரிவினர். முதல் பிரிவினரை ஆங்கிலத்தில் Active member என்றும் அடுத்த பிரிவை Passive Member என்றும் அழைத்தனர். 'கிருஷ்ணகிரி உண்மை விரும்பி' எனும் புனைப்பெயரில் மிகஅதிகமாக ஒருவர் எழுதியுள்ளார். இவர்களைக் குறித்த அடையாளங்களைக் கண்டறிவது கடினம். ம.மாசிலாமணி, பு.முனுசாமி நாயகர்,   அ.முத்துசாமி முனிவர், தி.சி.நாராயணசாமிப்பிள்ளை,  திரிசிரபுரம் புத்தூர் வையாபுரிப் பிள்ளை எனச் சில பெயர்களில்  கட்டுரைகள்  வெளிவந்துள்ளன. மிகுதியான  கட்டுரைகளுக்குப் பெயர் இல்லை.

     இவர்களில் இரண்டு முக்கியமான ஆளுமைகளை அறியமுடிகிறது. ஒருவர் ம.மாசிலாமணி, மற்றொருவர் இலட்சுமி நரசு. இவர்பின்னர் மிகச்சிறந்த பௌத்த அறிஞராக அறியப்பட்டு, அம்பேத்கரால் பெரிதும் மதிக்கப்பட்ட திரு.பி.எல்.நரசு எனும் இலட்சுமிநரசு ஆவார், சென்னை இலௌகிகச் சங்கத்தின் கிளை அமைப்பான இந்து மால்தூசியன் சங்கத்தின் (The Hindu Malthusian League) செயலாளராகச் செயல்பட்டுள்ளார். இவ்வமைப்பின் பிறிதொரு கிளை அமைப்பான சிறுபத்திரிகா பிரகடந சங்கம் (The Free Thought Tract Society)மூலம் சிறுவெளியீடுகள், புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன. இவ்வமைப்பின் முதல்வெளியீடாக 1885இல் 'வருணபேதச் சுருக்கம்' எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. இந்நூலின் சிறிது விரிவுபடுத்தப்பட்ட வடிவம் 1900 இல் 'வருணபேத  விளக்கம்' எனும் பெயரில் வெளிவந்துள்ளது. 1926இல் கோலார், சித்தார்த்த புத்தக சாலை மூலம்  மேற்குறித்த  1900 வருட நூல் மறு அச்சு செய்யப்பட்டுள்ளது. இந்நூலை முதல் தொகுதியில் இணைத்துள்ளேன். மநுதர்மத்தை மறுத்து; சாதியை மறுத்து எழுதப்பட்டது  இந்நூல்.

      தத்துவவிவேசினி  மற்றும் The Thinker  இதழ்களில் சாதியத்திற்கு எதிரான பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதழ்களில் எழுதியோர், தங்கள் பெயர்களுடன் சாதி அடையாளங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவ்விதம் பயன்படுத்துவதைக் கண்டித்து தத்துவ விவேசினி இதழில் ஒரு கட்டுரை வந்துள்ளது. நாத்திகம்  பேசுபவர்கள் சாதி மறுப்பாளர்களாகவும் இருப்பது அவசியம் என்னும் பொருளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மதமறுப்பை எந்த அளவிற்குப் பிரச்சாரம் செய்தார்களோ அந்த அளவிற்கு சாதிமறுப்பு குறித்தும் எழுதியுள்ளனர். மனிதத் தன்மைக்கு எதிரானது சாதி என்ற பொருளில் அமைந்த கட்டுரை தத்துவவிவேசினியில் (07.10.1883) உள்ளது. இவர்கள் வெளியிட்ட நூலை, தமிழ் பௌத்த மரபைச் சார்ந்தவர்கள் மறுஅச்சு செய்து பரப்பியுள்ளதைத் தமிழகச் சாதி ஒழிப்பு மரபிற்குச் சென்னை இலௌகிகச் சங்கத்தின் பங்களிப்பாகக் கருதலாம்”. (‘புதிய புத்தகம் பேசுது’ மாத இதழ்) 

   
(அச்சு நூல் வந்தபிறகே விரிவான விமர்சனங்கள் எழுதமுடியும். நன்றி.) 


                       (இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக