சனி, ஜூன் 22, 2019

நம்பிக்கைகள் அறிவியலாகுமா?


நம்பிக்கைகள் அறிவியலாகுமா? 

மு.சிவகுருநாதன்

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 17)



        நான்காம் வகுப்பு  அறிவியலின் உடல்நலம் குறித்த பாடப்பகுதியில்  ‘வேம்பு பல்துலக்கி’ எனும் தலைப்பில் கீழக்கண்ட பத்தி இடம்பெறுகிறது.
 
     “இந்திய கிராம மக்களின் பிரகாசமான புன்னகைக்கும் 
ஆரோக்கியமான பற்களுக்கும் வேப்பங்குச்சிகளை  பல்துலக்கியாகப் பயன்படுத்தி வருவதே காரணம் என  ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியர்கள் தங்கள்  ஈறுகள் மற்றும் பற்களை நலமாக வைத்துக் கொள்ள  வேப்பங்குச்சிகளின் ஒரு முனையைக் கடித்துப் பல்துலக்கி  போன்று செய்து பயன் படுத்துகின்றனர்”. (பக். 89)



     வேப்பங்குச்சி பல்துலக்கச் சிறந்தது என்று எந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்? ‘பதஞ்சலி’ பாபா ராம் தேவ் கண்டுபிடித்திருப்பாரோ? வேம்பின் மருத்துவக் குணங்கள் வேறு; அதைப் பல்துலக்கும் குச்சியாகப் பயன்படுத்துவது வேறு. இதனால் பல் துலக்கப் பயன்படுத்தலாம் என்பது அறியாமை அல்லது நம்பிக்கையே.

    வேம்பின் மருத்துவக் குணங்களைக் கண்டு அதைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அதையே ‘சர்வரோக நிவாரணி’யாக பல் துலக்கும் ‘பிரஷ்’ ஆகப் பயன்படுத்துவதைப் பரிந்துரைப்பது மூடநம்பிக்கையே. இம்மாதிரியான் நம்பிக்கைகள் பொதுத்தளத்தில் எங்கும் நிறைந்துள்ளன.

    விண்வெளி இயற்பியலில் பட்டம் பெற்று இஸ்ரோவில் பணியாற்றிய அப்துல்கலாம் ‘அனைத்துத் துறை விஞ்ஞானி’யாக மாற்றியது இத்தகைய நம்பிக்கைதான். அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா ரேஞ்சுக்கு சில மணி நேரங்களில் கூடங்குளம் அணு உலையை ஆய்வு செய்து, உடனே 30 பக்கத்திற்கு மேற்பட்ட விரிவான அறிக்கை வெளியிட்டு இந்த அணு உலை பாதுகாப்பானது என நிறுவ முடிந்தது. 



     இம்மாதிரியான நம்பிக்கையின் தொடர்ச்சியே ‘இஸ்ரோ’ கஸ்தூரிரங்கன் மாபெரும் கல்வியாளராக உருமாறி, குழுவின் தலைவராக இருந்து புதிய கல்விக் கொள்கை 2019 வரைவை வெளியிட்டிருப்பது. பல்துறை அறிவும் ஆற்றலும் பொதிந்துள்ள இடமாக ‘இஸ்ரோ’ மாறியிருப்பது இந்திய மூடநம்பிக்கைகளின் உச்சம். இந்த விஞ்ஞானிகள் ராக்கெட், செயற்கை மாதிரிகளை எடுத்துகொண்டு, அரசு செலவில் திருப்பதி ஏழுமலையானிடம் ஓடுவது அவர்களது மூடநம்பிக்கை. இவர்களை நம்பிக்கெடுவது மக்களின் மூடநம்பிக்கை. 



    அரசுகளுக்கு இது தெரியாததல்ல. இவர்களை முகமூடிகளாகப் பயன்படுத்தித் தங்களது இந்துத்துவ கருத்தியலை உள்நுழைப்பதுதான் முதன்மைப் பணி. அவற்றை மிகச்சரியான முறையில் செய்து முடிக்கின்றனர். கல்வி ஒன்றும் இஸ்ரோ ஆய்வுக்களமல்ல என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. எனவே மக்கள் இந்த முகமூடிகளை நம்பி எளிதில் மயங்கி விடுகிறார்கள். 



     கூடங்குளத்தில் அமைக்கப்படும்  அணுக்கழிவு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லையென தமிழக அமைச்சரும் விஞ்ஞானியுமான ஒருவர் நற்சான்று அளித்ததை தொலைக்காட்சிகளில் கண்டு களித்திருப்பீர்கள். இம்மாதிரியான விஞ்ஞானிகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதே  பெரும்பேறுதான்!  
 
    “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்ற பழந்தொடரினால் இவ்வாறு எழுதப்படுவது அபத்தம். இங்கு வேல் என்பது வேம்பைக் குறிக்காது, மாறாக கருவேலங்குச்சியைக் குறிக்கும். இவற்றில் மருத்துவப்பலன் இருக்கிறதா என்பதைவிட கைகளால் பல் துலக்குவதற்கு மாற்றாக பல் ஈறுகளைப் புண்படுத்தாத மென்மையான இயற்கையான பல் துலக்கியாகப் பயன்படுவதே சிறப்பு. இந்த வகையில் வேம்பு பயன்பட இயலாது என்பதே உண்மை.

     ‘ஆரோக்யா’ பால் விளம்பரப் படத்தைத் தவிர்த்து வேறு படங்களைப் போட்டிருக்க வேண்டும். (பக்.114) இந்திய பாரம்பரிய பசு ரகங்களின் படத்தைப் போடுவதே பொருத்தமானது. 



    ஏற்கனவே குறிப்பேடுகளில் அட்டைகளில் வெளியான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை பாடத்துடன் (பக்.90-92) இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது. சிலவற்றில் இன்னும் மேம்படுத்துவது நலம். அனைத்து வகுப்புகளில் இந்த தலைப்பில் கூடுதல் செய்திகளை இணைப்பது நல்லது.

   நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தை ‘ஐம்பூதங்கள்’ எனப் பீதியூட்டி மூடநம்பிக்கைகளை வளர்க்காமல் ஐந்து இயற்கைக் கூறுகள்  (பக்.136) என்று சொல்லியிருப்பதைப் பாராட்டலாம்.  

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக