திங்கள், ஜூன் 17, 2019

தலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்

தலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்

                                     மு.சிவகுருநாதன்

(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 13)



       பெயரின் முன்னெழுத்துகளை  (initials) ஆங்கிலத்தில் எழுதுவது. தமிழ்நாட்டிலுள்ள விநோதப் பழக்கங்களுள் ஒன்று. பல்லாண்டுகளாகத் தொடரும் இப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக பாடநூல் தொடக்கப்புள்ளி வைத்துள்ளது. நம் பெயரைக் கேட்கும் இடங்களில் தமிழில் பதிவு செய்யப்படும்போதுகூட, தமிழில் சொன்னாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படாமல் முன்னெழுத்து மட்டும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படும் நடைமுறை இங்கு பொதுவான ஒன்று. இதற்கான காரணங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியது. 

    தற்போது கிரந்த எழுத்துகள் இல்லாமல் பெயரிடுவதில்லை என்கிற புதிய கொள்கையே தமிழகத்தில் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெழுத்தைப் பற்றி கவலைப்படுவதேன்? என்று கேட்பது புரிகிறது. பெயர் நமது உரிமைகளுள் ஒன்று. மொழிப் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவர் தன்னுடைய பெயரை எவ்வாறு பயன்படுத்துகிறாரோ, அப்படியே பாடநூல் உள்ளிட்ட எதிலும் பயன்படுத்துவது சிறப்பு. முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா (J. Jayalalithaa) ஆங்கிலத்தில் எழுதும் தனது பெயரில் ஒரு எழுத்தைக் கூடுதலாக்கிக் கொண்டதிலிருந்து  ஆங்கில ஊடகங்கள் அதை  அப்படியே இன்றும் கடைபிடிக்கின்றன. ஆங்கில வழியில் அதை ஏற்று எழுதியுள்ளனர். ஆனால் தமிழில் அத்தகைய கண்ணியமோ, நேர்மையோ தேவையில்லை போலும்!



     பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பாடங்களில் இந்தியப் பிரதமர்கள், குடியரசுத்தலைவர்கள், தமிழக முதல்வர்கள் பட்டியல் உள்ளது. இவற்றில்  பிரதமர்கள், குடியரசுத்தலைவர்கள் ஆகியோரின் பெயர்களின் முன்னெழுத்துகள் தமிழில் ஆனால் தமிழக முதல்வர்கள் பட்டியலின் நிலை வேறு. இங்கு வேண்டுமென்றே முன்னெழுத்துகள் ஆங்கிலமாக உள்ளன. பட்டியல்கள் பின்வருமாறு

பாடம் 2  மத்திய அரசு - இந்திய பிரதமர்கள் பட்டியல்

1. திரு. ஜவகர்லால் நேரு 1947 - 64
2. திரு. லால் பகதூர் சாஸ்திரி 1964 - 66
3. திருமதி இந்திரா காந்தி 1966 - 77
4. திரு. மொரார்ஜி தேசாய் 1977 - 79
5. திரு. சரண் சிங் 1979 - 80
6. திருமதி. இந்திரா காந்தி 1980 - 84
7. திரு. ராஜீவ் காந்தி 1980 - 89
8. திரு. வி.பி. சிங் 1989 - 90
9. திரு. சந்திரசேகர் 1990 - 91
10. திரு. பி.வி. நரசிம்ம ராவ் 1991 - 96
11. திரு. அடல் பிகாரி வாஜ்பாய் பாய் 1996
12. திரு. டி. தேவகவுடா 1996 - 97
13. திரு. ஐ.கே குஜ்ரால் 1997 - 98
14. திரு. அடல் பிகாரி வாஜ்பாய் 1998 - 2004
15. திரு. மன்மோகன் சிங் 2004 - 14
16. திரு. நரேந்திர மோடி 2014 முதல்       (பக்.199)

    அடல் பிகாரி வாஜ்பாய் என்று முழுப்பெயரை எழுத விரும்பும் ஆவல் மிக்கவர்கள்  வி.பி. சிங் ஏன் கண்டுகொள்வதில்லை? அடல் பிகாரி வாஜ்பேயீ என்பதே சரியானது, இது போகட்டும்.  வி.பி. சிங், ஐ.கே குஜ்ரால் ஆகிய இருவரது பெயர்கள் மட்டும் ஏன் சுருக்கி எழுதப்படுகின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங், இந்தர் குமார் குஜ்ரால் என்றல்லவா எழுதப்பட்டிருக்க வேண்டும். அடல் பிகாரி வாஜ்பேய் – ஐ  ஏ.பி. வாஜ்பாய் என்று எழுதமுடியாமற்போனது ஏன்?  ஹெச்.டி. தேவகௌடா ‘டி. தேவகௌடா’ என்றாகிவிட்டார்.  
 

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

1. திரு. ராஜேந்திர பிரசாத் 1950 - 1962
2. திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1962 - 1967
3. திரு. ஜாகிர் உசேன் 1967 - 1969
4. திரு. வி.வி. கிரி 1969 - 1974
5. திரு. பக்ருதீன் அலி அஹமத் 1974 - 1977
6. திரு. நீலம் சஞ்சீவி ரெட்டி 1977 - 1982
7. திரு. கியானி ஜெயில் சிங் 1982 - 1987
8. திரு. ஆர். வெங்கடராமன் 1987 - 1992
9. திரு. சங்கர் தயாள் சர்மா 1992 - 1997
10. திரு. கே.ஆர். நாராயணன் 1997 - 2002
11. திரு. அ.ப.ஜ. அப்துல் கலாம் 2002 - 2007
12. திருமதி பிரதீபா பாட்டீல் 2007 - 2012
13. திரு. பிரனாப் முகர்ஜி 2012 - 2017
14. திரு. ராம் நாத் கோவிந்த் 2017 முதல்     (பக்.202)

    குடியரசுத்தலைவர்கள் பட்டியலிலும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பெயரைப்போல வி.வி. கிரியின் பெயர் ஏன் நீட்டி எழுதப்படவில்லை? சங்கர் தயாள் சர்மாவை எஸ்.டி. சர்மா என்று எழுதியிருக்கலாம் அல்லவா! ஒத்த வரையறைகளை அனைவருக்கும் பொதுவாகக் கொள்வதுதான் சிறப்பு. 

     ஜாகீர் உசேன், ஜாகிர் உசேன் இவற்றில் எது சரி? அப்துல் கலாம் என்ற பெயரில் (அ.ப.ஜ. – ஆவுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன்) அ.ப.ஜ. என்று எழுதலாமா? பிரனாப் முகர்ஜியை இதுவரையில் பிரணாப் முகர்ஜி என்றுதானே எழுதிவருகிறோம்? 

    பாடம் 3  மாநில  அரசு:  1947-லிருந்து பதவி வகித்த தமிழக  முதலமைச்சர்கள் பட்டியல்

திரு. O.P. இராமசாமி - 1947 – 1949
திரு. P.S. குமாரசாமி ராஜா - 1949 – 1952
திரு. C. இராஜகோபாலாச்சாரி - 1952 – 1954
திரு. K. காமராஜர் - 1954 – 1963
திரு. M. பக்தவச்சலம் - 1963 – 1967
திரு. C.N. அண்ணாதுரை - 1967 – 1969
திரு. M. கருணாநிதி - 1969 – 1976
திரு. M.G. இராமச்சந்திரன் - 1977 – 1987
திருமதி ஜானகி இராமச்சந்திரன்- ஜனவரி 1988
திரு. M. கருணாநிதி - 1989 – 1991
செல்வி J. ஜெயலலிதா - 1991 – 1996
திரு. M. கருணாநிதி - 1996 – 2001
செல்வி J. ஜெயலலிதா - 2001
திரு. O. பன்னீர்செல்வம் - 2001 – 2002
செல்வி J. ஜெயலலிதா - 2002 – 2006
திரு. M. கருணாநிதி - 2006 – 2011
செல்வி J. ஜெயலலிதா - 2011 – 2014
திரு. O. பன்னீர்செல்வம் - 2014 – 2015
செல்வி J. ஜெயலலிதா - 2015 – 2016
திரு. O. பன்னீர்செல்வம் - 2016 – 2017
திரு. எடப்பாடி K. பழனிசாமி - 2017 மு்தல்      (பக்.216)


     தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும்  ஜெயலலிதாவும் முன்னெழுத்துகளை ஆங்கிலத்தில் எழுதினார்களா? தங்களது கையொப்பங்களில் மு.கருணாநிதி, ஜெ,ஜெயலலிதா என்றே இட்டனர். மேலும் கு.காமராஜ் என்று தமிழில் கையெழுத்திட்டவரை மரியாதைக்காக என்று K. காமராஜர் என்று மாற்றுவது சரியா?

   சமூகத்திற்கு முன்மாதிரியான செய்திகள் கல்வியில் மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டும். பாடநூல்கள் அவர்களைப் பின்னோக்கி இழுக்கக்கூடாது.

    குடிமையியல் அலகு 3 இல் “மாநில அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் சம நீதி கண்ட சோழன் சிலை” (பக்.222) படத்துடன் வெளியாகியுள்ளது. நீதிமன்றங்களைப் பற்றிச் சொல்ல வேறு எதுவும் கிடைக்கவில்லையா? திருவாரூரில் கூட ‘மநுநீதிச்சோழன்’ மணிமண்டபம் உண்டு. திருவள்ளுவர் சிலை போன்று தமிழன்னைக்கும் சிலை வைக்கும் வேலை நடக்கிறது. இவை தமிழ்நாட்டின் அன்றாட அரசியல் நிகழ்வுகள்.

       எதையும் படிக்காமல் பா.ரஞ்சித்தின் முதலாம் ராஜராஜன் குறித்த பேச்சுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்று கூக்குரலிடுவோர்  ‘மநுநீதிச்சோழனுக்கும்’ ‘ராமர் பாலத்திற்கும்’ (ஆதம் பாலம்) ஆதாரங்கள் எங்கே என்று ஏன் கேட்கவில்லை? ஆதாரம் கேட்கும் நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்திலுள்ள இச்சிலை பற்றி கவலைப்படாது ஏன்? இந்தச் சிலையைக் காட்டி உயர்நீதிமன்றத்தை அறிமுகம் செய்யும் தேவை பாடநூலுக்கு ஏன் ஏற்பட்டது? 

    ‘மநுநீதிச்சோழன்’ புராணம் வருணாஸ்ரமத்தை, மநு நீதியைப் பரப்ப உருவாக்கப்பட்ட தொன்மம். இவற்றை பெரியார் தவிர்த்த திராவிட இயக்கத்தினர் பிறர் இன்னும் பிடித்துத் தொங்கும் நிலை தமிழக அவலங்களுள் ஒன்று. இதைப் பற்றியும் பலமுறை எழுதியாகிவிட்டது. குடவோலை முறை எனும் ஒரு குறிப்பிட்ட சாதியின் திருவுளச்சீட்டு முறைக்கு மக்களாட்சி முத்திரைக் குத்துவது போன்ற பல்வேறு அநியாயங்கள் இங்குண்டு.  இதைப்போலவே இந்து ராசபுத்திர சொல்லாடல்களுக்காக உற்பத்தி செய்யப்பட்டதே ‘ராணி பத்மாவதி’ என்கிற தொன்மம்.

   தமிழகத்தில் இல்லாத சட்டமன்ற மேலவை (சட்ட மேலவை) இவ்வளவு நீட்டி முழக்க வேண்டுமா? கீழவை, மேலவை ஆகிய சொற்களுக்கு மாற்றுச் சொற்கள் (மக்களவை, மாநிலங்களவை போல) காணவேண்டும். அதுவரையில் அசெம்பிளி, கவுன்சில் என்று சொல்வதுகூட தவறில்லை என்று தோன்றுகிறது. ஆங்கிலத்திலும் ‘Upper House, Lower House’ என்று சொல்வதும் சரியல்ல? காலந்தோறும் மாறுவதுதான் மொழி. பாகுபடுத்தும் சொற்களுக்கு மொழியில் இடமில்லை.  ராஜினாமா, பிரபலம் போன்ற வழக்கொழிந்த சொற்களைப் பயன்படுத்துவது ஏன்?

(இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக