செவ்வாய், ஜூன் 02, 2020

படிநிலைச் சாதியமும் தீண்டாமையும்


படிநிலைச் சாதியமும் தீண்டாமையும் 


 (நூலறிமுகம்… தொடர்: 046)


 மு.சிவகுருநாதன்  


(புலம் வெளியிட்ட, சி. லஷ்மணன்    கோ.ரகுபதி எழுதிய தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்’ என்ற ஆய்வு நூல் குறித்த பதிவு.)



      சாதியம், தீண்டாமை குறித்து பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. தீண்டாமை என்பது விலக்குதல் அல்ல; மாறாக விலகியிருத்தல், என்றெல்லாம் புதிய ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. (பார்க்க: சந்நியாசமும் தீண்டாமையும் – ராமாநுஜம், புலம் வெளியீடு, இது குறித்து பிறிதொரு நேரத்தில் பார்ப்போம்.)

    விகாஸ் அத்யாயன் கேந்திரா (மும்பை) நிதி நல்கையால் ‘புதிரை வண்ணார்’ குறித்த இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சி.லஷ்மணனும், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கல்லூரி விரிவுரையாளர் கோ.ரகுபதியும் இந்த ஆய்வைச் செய்துள்ளனர். தீண்டாமைக்குள்ளாகும் அடித்தட்டு தலித் குழுக்களால் (பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர்) தீண்டாமைக்குள்ளாகும் புதிரை வண்ணார் சமூகம் குறித்த ஆய்வுகள் பெரிய அளவில் நடைபெறவில்லை. அந்தளவிற்கு கவனம் பெறும் அமைப்பாகத் திரளவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். 

    இமயத்தின் கோவேறு கழுதைகள் (1994) வண்ணார் வாழ்வைப் பேசிய முதல் நாவல். அன்றைய கால அரசியல் சூழலில் தலித் எழுச்சி மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று இந்த நாவல் விமர்சிக்கப்பட்டது. இன்று சூழல்கள் எவ்வளவோ மாறியுள்ளன. அருந்ததியருக்கு அளிக்கப்பட்ட இள் ஒதுக்கீட்டை எதிர்ப்பதும், நாங்கள் தலித்கள் அல்ல; எங்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் மேழும்பும் காலமிது. 

    பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியருக்கு சேவை செய்துவரும் புதிரை வண்ணார் (தீண்டா வண்ணார்) என்ற சமூகம் இங்கு ஆய்வுக்குள்ளாகிறது. பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அதிகம் இல்லாத நிலையில் பெரும்பாலும் கள ஆய்வை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.

     ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய ‘பிண ஊர்வலம்’ என்ற தாழ்த்தப்பட்டோருக்கு சேவகம் செய்யும் வண்ணார் வாழ்வைப் பேசும் சிறுகதை பின்னிணைப்பாக உள்ளது. தலித் முரசு, புதிய கோடாங்கி ஆகிய தலித் சிற்றிதழ்கள் புதிரை வண்ணார் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டதைக் குறிக்கின்றனர். (பக்.22) எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் ‘உன்னதம்’ இதழும் ஒரு கட்டுரை வெளியிட்டதாக என்னுடைய நினைவுகளிலிருந்து சொல்ல முடிகிறது. (ஆண்டு, மாதம் தெரியவில்லை.) 

     “உயர் இனமோ தாழ்த்தப்பட்ட இனமோ எல்லாருக்கும் சாதி உணவைப் போன்றது, தண்ணீரைப் போன்றது. இந்தியர்கள் கோமணத் துணிகூட இல்லாமல் இருப்பார்கள். ஆனால் சாதி இல்லாமல் இருக்க மாட்டார்கள்”, (பக்.07) என்ற இந்த ஆய்வு நூல் நிருபிப்பதாக அணிந்துரையில் எழுத்தாளர் இமையம் குறிப்பிடுகிறார். 

   சாதியப் படிநிலையின் மையமாக புனிதம் X தீட்டு என்கிற முரணெதிர்வைச் சுட்டும்  லூயி தூமோ (Louis Dumont - Hemo Hierarchius), சாதிய மேலாண்மைக்கு நிலவுடைமையே முதன்மைக் காரணம் எனும் M.N. ஶ்ரீநிவாஸ் ஆகிய ஆய்வுகள் சுட்டப்படுகின்றன. (பக்.19)

   தீண்டத்தகாத சாதியினரிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மைக்கேல் மொபட் அளித்த பிரதிபலிப்பு (போல ஒழுகுதல்) மற்றும் கருத்தொற்றுமை கோட்பாட்டின்படி சில கருதுகோள்களை இவ்வாய்வு முன்வைக்கிறது. அவை,

  •  பிரதிபலிப்பு நிலமானிய முறையோடு ஒத்திருக்கிறது.
  •  நிலமின்றியும் சேவைச் சாதியைக் கொண்டிருக்க முடியும்.
  • நிலமற்றோரும் தீண்டத்தகாத சாதியினரும் தீண்டாமையைக் கடைபிடிக்கின்றனர். (பக்.20)

    சேவைச் சாதியினரின் பணி உற்பத்தியோடு தொடர்புடையது அல்ல; மாறாக சாதி மரபு அடிப்படையிலான பண்பாட்டு வகைப்பட்டதாகும். இவற்றை பொருளியல் மற்றும் கருத்தியல் பண்பாடு என வகைப்படுத்தலாம். 

     சிகை அலங்காரம் மற்றும் முகச் சவரம் செய்தல், உடை உடுத்துதல், அடையின் அழுக்கு நீக்குதல், இன்ப / துன்ப நிகழ்ச்சிகளில் வேட்டி, சேலையால அலங்கரித்தல், பாடை கட்டுதல், மாத்து விரித்தல் ஆகிய பொருளியல் பண்பாட்டிற்கும் பூப்படைந்த பெண்ணுக்கு நடக்கும் சடங்கில் ‘வண்ணான்’ சேலை கொடுத்தல், பூப்படைந்த மற்றும் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தப்படும் துணிகளின் தீட்டு நீக்குதல், வாய்க்கரிசி தூக்குதல், எழவு சொல்லப்போதல், பட்டம் கட்டுதல், பதினாறாம் நாளன்று ஈமச் சடங்கு செய்யப்பட்ட இடத்தில் நவதானியங்களை இட்டு முளைக்க விடுதல், உட்காருவதற்கான துணி விரிப்புகளைப் போடுதல், கோயில் திருவிழாவிற்கு தீப்பந்தம் தயாரித்துக் கொடுத்தல் ஆகியன கருத்தியல் பண்பாட்டிற்கும் உதாரணங்களாக எடுத்துக்காட்டப்படுகின்றன. (பக்.25)

      இந்தப் பணிகளுக்கு புதிரை வண்ணார்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் ‘கொத்து’ என்ற தானியமாகவோ ‘ஊர்ச்சோறு’ எனப்படும் உணவாகவோ வழங்கப்பட்டது. இறப்பு, மாதவிடாய் போன்ற ஒதுக்கப்பட்ட தீட்டு, அசுத்த நிகழ்வுகளே இவர்களது வாழ்வியலோடு பிணைக்கப்பட்டுள்ளது. 

     “இந்திய சாதியப் படிநிலை அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவற்கு அரசியல் அதிகாரமோ, சொத்துடைமையோ மட்டும் அவசியம் இல்லை என்பது தெளிவு. மரபு வழி சாதிய ரீதியான சமூகக் கட்டமைப்பும், புனிதம் - புனிதமின்மை, தூய்மை – அசுத்தம் ஆகியவையுமே ஆதிக்கத்திற்கான முக்கிய அடிப்படை”, (பக்.38) எனச் சொல்லப்படுகிறது.

   இந்தியச் சாதியமைப்பில் ஊர், சேரி என்ற பிரிவுகள் காணப்பபடுவதைப் போல, இங்கு ‘ஊர்’ என்ன்பது பள்ளர், பறையர், அருந்ததியர் குடியிருப்புகளும் ‘வண்ணாங்குடி’ என்பது வண்ணார்களின் இருப்பிடத்தையும் சுட்டுகிறது. பொதுவான இந்திய கிராம அமைப்பில் மேலத்தெரு – கீழத்தெரு, மேட்டுத்தெரு – பள்ளத்தெரு போன்ற சாதியக் கட்டுமானங்கள் உண்டு. இவை ஆதிக்க மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியின் வாழ்விடங்களாக வரையறுக்கப்பட்டவை. ஆற்று நீரோடைகளின் மேற்குப்புறம் ஆதிக்க சாதியினருக்கும் கிழக்குப்புறம் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டவையாக இருக்கும்; புதிரை வண்ணாருக்கும் அதே நிலைதான்.

    வேட்டியை  அவிழ்த்துவிடாமல் மடித்துக் கட்ட வேண்டும், மேல்சட்டை போடக்கூடாது போன்ற உடைக்கட்டுப்பாடுகளும் உண்டு. (பக்.43) பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், நீர் நிலைகளைப் பயன்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் உண்டு. (பக்.45) மரியாதையின்றி அழைத்தல், பாலியல் ஒடுக்குமுறை, சொத்துரிமை மறுப்பு, பள்ளிகளில் குழந்தைகள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்குதல் எனப் பல சாதியக் கொடுமைகள் இவர்கள் மீது காட்டப்படுகின்றன. 

    புலையர்களைப் போல தொட்டால் மட்டுமல்ல; பார்த்தாலே திட்டு என்ற நிலை இருந்தது. எனவே எதிரில் யாரும் வந்துவிடுவார்களோ என்கிற பயம் பகலில் இவர்களது நடமாட்டத்தைக் குறைத்தது. அங்கீகரிப்பட்ட எல்லைக்குள் வந்துவிட்டாலே அவர்கள் தீட்டாகிவிடுவர்.

   “நாயரிலிருந்து ஈழவன் பதினாறு அடிதூரமும் புலையன் இரண்டடி தூரமும் விலகி நிற்கவேண்டும். ஈழவனிலிருந்து புலையன் ஆறடியாவது விலகி நிற்க வேண்டும். ‘உள்ளாடன்’ என்று அழைக்கப்பட்ட மலைச் சாதியினர் பிராமணின் பார்வையில் பட்டாலே பிராமணன் அசுத்தமாகிவிடுவான்”, (பக்.59, மகாத்மா அய்யன்காளி – நிர்மால்யா, காலச்சுவடு வெளியீடு) 

    1940 களிலிருந்து சங்கம் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் அமைப்பாக மலரவில்லை. மாறாக அவை சிறுசேமிப்புச் சங்கமாகவே செயல்பட்டுள்ளன. 2000 இல் ‘தூத்துக்குடி மாவட்ட புதிரை வண்ணான் சமுதாய நலச் சங்கம்’, சமுதாயப் பிரச்சினைகளில் கவனம் கொள்ளத் தொடங்கியதும் குறிப்பிடப்படுகிறது. (பக்.61)

    சாதிச்சான்றுக்கான போராட்டம் தொடர்கிறது. அதில் இவர்கள் விட்டொழிக்க நினைத்த அவமானகரமான குலத்தொழிலைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது மோசமான நிலையாகும். இஸ்லாம், கிறித்தவம் போன்ற மதங்களுக்கு மாறியுள்ள நிலை இவர்களது வாழ்க்கையில் சற்று மேம்பாடு அடைய வைத்துள்ளது. 

    பொருளியல் மற்றும் கருத்தியல் பணிகள் வணிகமயமாகிவிட்டதால் கொத்து, ஊர்ச்சோறு போன்றவை இன்று வழக்கொழிந்துவிட்டன. செருப்பு அணிதல், ஆடைக்கட்டுப்பாடு போன்றவற்றில் மாற்றம் நடந்துள்ளது. இருப்பினும் அவர்களது வாழ்விடம் (வண்ணாங்குடி) தலித் குடியிருப்புகளை விட்டு ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளன. (பக்.100) 

    தலித் அல்லாத பிற சாதிகளிடம் உள்ள ஒடுக்குமுறையும்  தலித் இனக்குழுக்களில் உள்ள ஏற்றத்தாழ்வும் சமமானதல்ல. அப்படிச் சமமாகப் பார்க்கவும் கூடாது, பார்க்கவும் முடியாது. ஏனெனில் தலித்துகள் மீது, தலித் அல்லாதவர்கள் கொண்டுள்ள ஆதிக்கமும், ஒடுக்குதலின் தன்மையும், வீரியமும் மிகக் கொடூரமானது, என்று வேறுபடுத்திக் காட்டியும், இந்தப் படிநிலையைக் களைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளை தலித்களிடம் வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டுகிறது. (பக்.104)

     தலித் இயக்கங்கள் அமைப்புகள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியில் பிளவுண்டு கிடக்கின்றன. ஒருவகையில் ஆதிக்க சக்திகளுக்கு இது மிகவும் சாதகமான அம்சம். தலித் விடுதலை என்ற ஓரம்சத்தில் தங்களுக்குள்ள பகையுணர்வை மறுத்து / மறந்து பொதுத் திட்ட அடிப்படையிலாவது ஓர் ஒருங்கிணைவை ஏற்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.  
   
     சேவைத் தொழில் இல்லையென்றாலும் அனைத்து சமூக மக்களாலும் தீண்டமை கடைபிடிக்கக் கூடியவர்களாக ‘வாக்ரிகள்’ (நரிக்குறவர்கள்) உள்ளனர். இவர்களைப் பற்றிய மானுடவியல் ஆய்வுகள் வெளிவந்துள்ளன. (எ.கா. நரிக்குறவர்கள் இனவரைவியல் - கரசூர் பத்மபாரதி - தமிழினி வெளியீடு: 2004, வாக்ரிகளின் வாழ்வியல் - ஆ. குழந்தை - பயணி வெளியீடு: 2011) பழங்குடி பட்டியலுக்கு மாற்ற வேண்டி காத்திருக்கும் இம்மக்களின் வாழ்நிலையும் தீண்டாமையும் கூட ஆய்வு செய்யப்பட வேண்டியதாகும். 

நூல் விவரங்கள்:

தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்

சி. லஷ்மணன்    கோ.ரகுபதி

முதல் பதிப்பு: ஜூன் 2016

பக்கங்கள்: 120
விலை: 100 

வெளியீடு:

புலம்

அலைபேசி:  9840603499    9442890626

மின்னஞ்சல்:  pulam2017@gmail.com

(இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 01/06/2020 அன்று வெளியானது.)

நன்றி:  https://bookday.co.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக