செவ்வாய், ஜூன் 09, 2020

தமிழ்நாட்டின் சாதி அரசியலும் ஆய்வு அரசியலும்


தமிழ்நாட்டின் சாதி அரசியலும் ஆய்வு அரசியலும்


 (நூலறிமுகம்… தொடர்: 050)



மு.சிவகுருநாதன்  


(பேரா. கா.அ. மணிக்குமார் எழுதிய முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்’  என்ற நூல் குறித்த பதிவு.)




    பேரா. கா.அ. மணிக்குமாரின் ‘Murder in Mudukulathur: Caste and Electoral Politics in Tamil Nadu’ என்னும் ஆங்கில நூலை ச. சுப்பாராவ் தமிழாக்கியுள்ளார். முதுகுளத்தூர் கலவரங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் ஏதும் இல்லாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதி மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலுக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. கலவரத்தில் தொடர்புடைய இரு பிரிவுகளும் இன்று அரசியலில் முன்பைவிட கூடுதல் செல்வாக்கு பெற்றிருப்பதும் அவர்களால் ஆய்வுகள் எப்படி எதிர்கொள்ளப்படும் என்கிற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்த வகையில் இந்நூல் முயற்சி பாரட்டிற்குரியது. 


    முன்னுரை, முடிவுரை நீங்கலாக, எதிர்பாராத படுகொலை, படுகொலைக்கு முன், அரசாங்கத்தின் தலையீடும்  அதன் விளைவுகளும், நம்பிக்கையில்லாத் தீர்மானமும் காங்கிரஸின் எதிர்வியூகமும் என்ற நான்கு தலைப்புகளில் இவ்வாய்வு நிகழ்த்தப்படுகிறது. மேலும்  இப்படுகொலையின் வரலாற்றுப் பின்னணியை அறிவதற்காக ‘தேவர்கள், பள்ளர்கள், நாடார்கள் குறித்து..’ என்ற பகுதி தமிழில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 

   “தேவர்களுக்கும் பள்ளர்களுக்கும் இடையிலான பதட்டம் இன்றளவும் தொடர்வதால், இப்புத்தகத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை”, (பக்.11) என்று முன்னுரை மதிப்பிடுகிறது. மேலும், இப்பகுதியில் அடிக்கடி நிகழும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுகளுக்குக் காரணமான பிரச்சினைகளை ஆராய்ந்து, அரசு அவற்றிற்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களும், தலித் செயல்பாட்டாளர்களும் எதிர்பார்க்கிறார்கள். சம்பந்தப்பட்ட இரு பிரிவுகளையும் அவற்றின் வரலாற்றுப் பின்புலத்தில் புரிந்துகொண்டு, இப்பகுதியின் மோதல்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண அரசிற்கு இந்த நூல் உதவும்”, (பக்.12) என்று கணிக்கிறது. 

    “இராமநாதபுரம் வன்முறை பற்றி எழுதப்பட்டது மிகக்குறைவு. டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதிய ‘முதுகுளத்தூர் பயங்கரம்’ (1958) தினகரன் எழுதிய ‘முதுகுளத்தூர் கலவரம்’ (1958) ஆகிய சமகால தமிழ்ப் படைப்புகள் முழுமையானவை எனக் கருதமுடியாது. ஏனெனில் அவை காங்கிரஸ் மற்றும் காமராஜரின் தீவிர ஆதரவாளர்களால் எழுதப்பட்டவை. முத்துராமலிங்கத் தேவர் பற்றியும், இம்மானுவல் சேகரன் பற்றியும் போற்றி எழுதப்பட்டவை நிறைய உள்ளன. ஆனால் அவை ஒருதலை பட்சமானவை. இந்த ஆய்வின் நோக்கம் சம்மந்தப்பட்ட இரு ஆளுமைகளை மதிப்பீடு செய்வதல்ல. மாறாக, அடிப்படைத் தரவுகளைக் கொண்டு, 1957 ஜாதி மோதலுக்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியைக் கூறி, வன்முறை நின்றபிறகு நிகழ்ச்சிகளின் போக்கையும் சமகால தமிழ்நாட்டில் ஜாதி அடிப்படையிலான அரசியலையும் விவரிப்பது”, (பக்.10) என முன்னுரையில் வரையறுக்கப்படுகிறது. 


     ஆனால் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய தரவுகளும் செய்திகளுமே இந்த நூலில் துலக்கம் பெறுகின்றன. மாறாக இம்மானுவல் பற்றிய தகவல்களும் பதிவுகளும் மிகவும் குறைவு. பின்னிணைப்பிலும் இதே நிலைதான்.

    இவ்வாறாக கறார் தன்மைகளுக்கு நடுவே, “அரசாங்கம் அவரைத் தண்டிக்க வேண்டும்  என்பதில் குறியாக இருந்ததாக”, (பக்.124) என்ற கிருஷ்ணசாமி ரெட்டியாரின் வார இதழ் கட்டுரைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை? தேவருக்கு உட்கார நாற்காலி வழங்கச் சொல்வது, தனது நாற்காலியை வழங்குவது, அவரது இயல்புகளைப் போற்றிப் பாடுவது என நீள்கிறது. இது அவரது அரசு வழக்கறிஞர் பணிக்கும் இந்த ஆய்வுக்கும் அணி செய்வதாக இல்லை. 

    இம்மானுவல் சேகரன் (1924-1957)  படுகொலை செய்யப்பட்ட போது அவரது வயது 33. “இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று தமது சொந்த கிராமத்திற்கு வந்து, தனது சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்”, (பக்.169) என்று சொல்லப்படுகிறது. இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக இருந்த இம்மானுவல் 1952 இல் 28 வயதில் பதவி விலகியே முழுநேரச் சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். 

   “தலித் சமூகத்தவரான அமைச்சர் பி.கக்கனின் வேண்டுகோளின்படி, 1954ல் இம்மானுவல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்”, (பக்.170) எனினும் ‘சேதுவாத்தியார்’ என்றழைக்கப்பட்ட தனது தந்தையார் வேதநாயகத்துடன் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டதும், இந்திய தேசிய ராணுவத்தில் இணைய விரும்பி காங்கிரஸ் கட்சியிருந்து விலகியிருந்த நிலையில் நேதாஜியின் மரணத்திற்கு பின் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாக தமிழவேள் நூலில் குறிப்பிடுகிறார். (சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்) 28.06.1957 அன்று கூட, நேதாஜி படையுடன் வரப்போகிறார்”, என்று சொல்லிக் கொண்டிருந்த முத்துராமலிங்கத் தேவரும், இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சூழல்களின்படி இந்திய ராணுவத்தில் இணைந்த இம்மானுவல் சேகரனின் செயல்பாடும் அரசியலும் புரிந்துகொள்ள வேண்டியது. 

      “சேது வாத்தியார் கிறித்தவம் தழுவிய பிறகு ‘வேதநாயகம்’ வாத்தியாரானார். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்றுக் கொடுத்து வந்ததால் ‘வாத்தியார்’ என்று சிறப்பாக அழைக்கப்பட்டார். தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது காங்கிரசுக் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் இவர்”, (பக்,109, சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்)  

     இம்மானுவல் சேகரன் “பள்ளி ஆசிரியர் வேதநாயகத்தின் மகனாகப்” (பக்.168) பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. உன்மையில் இவரது தந்தை பள்ளியாசிரியரா? வழக்கறிஞர் என்றும் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டவர் என்று தெரிகிறது. இவரைப் பின்பற்றி மகனும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு மூன்று மாத காலம் சிறைபட்டது போன்றவற்றை இந்நூல் புறக்கணிக்கிறது. இது சரியா, தவறா என்பதையும் நூல் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.  முத்துராமலிங்கத் தேவரின் மிக நீண்ட அரசியல் பின்னணியில் இம்மானுவல் சேகரனின் வரலாறு கூட காணாமல் போய்விடுகிறது. இந்த ஆளுமைகளை மதிப்பிடுவது நூலின் வேலையில்லை என்று சொன்னாலும் இந்தப் பின்புலம் அவசியமானதாகும். 

     மாவட்ட ஆட்சியர் நடத்தியதாகச் சொல்லப்படும் அமைதிக்கூட்டத்தில் தேவரின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. அரசால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் இம்மானுவல் சேகரனின் பங்கேற்பை முற்றாக மறுக்கும் அதிகாரம் எப்படி வந்தது? இம்மானுவல் சேகரன் (பரமக்குடி), பெருமாள் பீட்டர் (பேரையூர்), வேத மாணிக்கம் (வீராம்பல்), கம்பர் (ஆலங்குடி) ஆகியோரை பள்ளர் பிரதிநிதிகளாக மாவட்ட ஆட்சியர் சி.வி.ஆர். பணிக்கர் அழைத்திருந்த நிலையில், தேவர் பெருமாள் பீட்டரை மட்டுமே முன்னிறுத்துகிறார். அவர் சட்டமன்ற விவாதங்களில் கூட கலந்துகொள்ளவில்லை என்று செய்திகள் சொல்கின்றன. அவர் முழுக்க தேவரின் கட்டுப்பாட்டில் இருந்தது தெளிவாகிறது. இவற்றை எல்லாம் இந்த ஆய்வுநூல் மவுனமாகக் கடக்கிறது.  வெங்கடேஸ்வரன்  ஆணைய விசாரணையில் காரில் அமர்ந்து கொண்டு சாட்சிகளைத் தடுத்தது போன்ற சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்டுகிறது. (பக்.67) 

     இம்மாதிரியான முரட்டுத்தனங்கள் கொண்ட மனிதராக  அல்லாமல், காங்கிரஸ், இந்து மகாசபா, பார்வார்டு பிளாக் ஆகிய கட்சிகளின் தலைவர், குற்றப் பரம்பரையினர் சட்ட எதிர்ப்பு, ஜமீன்தாரி எதிர்ப்பியக்கம், முக்குலத்தோர் தலைவர், தொழிற்சங்கத் தலைவர், தேசியவாதி, ஆன்மீக வாதி, ஹரிஜன சேவா தளத் தலைவர், தலித்களை ஆலயப் பிரவேசம் செய்தவர்  என்ற பொதுப்புத்திக் கண்ணோட்டத்திலேயே, முத்துராமலிங்கத் தேவர் சித்தரிப்பு இருக்கிறது. இத்தகைய இலகுவான தன்மை தலித் சித்தரிப்புகளில் காணக் கிடைக்கவில்லை. 

    “பள்ளர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்பதால், தாங்கள் பறையர், சக்கியர்களை விட மேலானவர்கள் என்று தம்மை கருதிக் கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் பண்ணை அடிமை நிலையில்தான் இருந்தார்கள்”, (பக்.162)  இது மட்டுமல்லாமல் ஆண்ட பரம்பரைப் பெருமிதங்களும் உண்டு. வெறும் மாட்டுக்கறியில் அடங்கி விடுவதல்ல இந்த அரசியல். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் அரசியல் நகர்வுகளும் அட்டவணைப் பட்டியலிலிருந்து மிகவும் பிற்பட்டோர் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் இதனூடாகக் காணலாம். அருந்ததியர்கள் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளபோது பழைய சொல்லைத் தவிர்க்கலாம். 

      ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில், ‘தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்’ என்னும் பாடத்தில் இடம்பெறும் குறிப்பில், “1936 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிடப் பெருந்தலைவர் காமராசர் முன் வந்தார். நகராட்சிக்கு வரி செலுத்தியவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்னும் நிலை இருந்தது. எனவே, முத்துராமலிங்கத்தேவர் ஓர் ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராசர் பெயரில் வரி கட்டி அவரைத் தேர்தலில் போட்டியிட வைத்தார்”, (பக்.59)  என்று எழுதினார்கள். இதற்கான ஆதாரங்கள் எங்கே என்ற எதிர்ப்பு எழுந்தபோது ஒரு சுற்றறிக்கை மூலம் இப்பகுதி நீக்கப்பட்டது. 

    “மாநில அரசியலில் காமராஜரைக் கைதூக்கி விட்ட தங்களது தலைவருக்கு, காமராஜர் துரோகம் செய்துவிட்டதாக தேவரின் ஆதரவாளர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்”, (பக்.145, முடிவுரை) என்ற வரிகளுக்கு அடிக்குறிப்பாக, “தேவர் காமராஜருக்கு ஒரு ஆட்டைப் பரிசளித்தார். காமராஜர் அந்த ஆட்டிற்கு முனிசிபல் வரி கட்டினார். வரி செலுத்துபவர் என்பதால் சென்னை மாகாண பிரதிந்தி அமைப்புகளின் தேர்தல்களின் போட்டியிடும் தகுதியைப் பெற்றார் என்று சொல்லப்படுகிறது”, (பக்.145, அடிக்குறிப்பு)  

    டி.எஸ்.சொக்கலிங்கம், தினகரன் ஆகியோர் எழுதிய நூல்களை ஒருதரப்பானது, முழுமையற்றவை என ஒதுக்கித் தள்ளும் ஆசிரியர் இம்மாதிரி வாய்மொழி ஆதாரங்களுக்கு பெருமளவில் முதன்மையளிப்பது ஏனென்று விளங்கவில்லை. 

     அடிக்குறிப்பாக, “மணலி கந்தசாமி கள்ளர் சமூகத்தில் பிறந்தவர்”, (பக்.80) என்று உள்ளது. இது தவறு. அகமுடையார் என்னும் தேவர் சமூகத்தில் பிறந்தவர். கள்ளர், மறவர், அகமுடையார் என்ற மூன்று பிரிவினரும் முக்குலத்தோர் என வழங்கப்படுகின்றனர். இவர்களின் கள்ளர், அகமுடையார் இருவரும் பிற்பட்ட வகுப்புப் பட்டியலில் (BC) உள்ளனர்.  மறவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் (MBC/DNC) பட்டியலில் உள்ளனர் (நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள்). இதில் பிறன்மலைக் கள்ளர், செம்பநாடு மறவர், பெரிய சூரியக் கள்ளர் போன்ற பிரிவினரும் அடங்குவர். கள்ளர் பிரிவுகளுக்கு தனித்த சாதிப்பட்டங்கள் உள்ள நிலையில் ‘தேவர்’ எனும் சாதிப்பட்டம்  மறவர், அகமுடையார் என இருவருக்கும் பொதுவானதாக உள்ளது. 

   “முதுகுளத்தூர் கலவரத்தின்போது கிழக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் சர்வோதயா மண்டல அமைதிக்குழுவில் காந்தி கிராமத்தில் ஓ.எஸ். ராமசாமியுடன் இந்த சங்கரலிங்கம் ஜெகந்நாதனும் இருந்தார். கிருஷ்ணம்மாள் இப்போது வயது முதிர்ந்த நிலையில், தமிழ்நாட்டில் உழுபவருக்கு நிலம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்”, (பக்.169)

      “பூதான இயக்கத் தலைவரான தேவரினத்தவரான சங்கரலிங்க ஜகந்நாதனும், தலித் பெண்ணான கிருஷ்ணம்மாளும் புரட்சிகரமாக கலப்புத் திருமணம் செய்துகொண்டபோது, அவர்களைப் பாராட்டும் வகையில், இம்மானுவல் தனது முன்னிலையில், தமது கிராமத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த”, (பக்.169) செய்தியும் சொல்லப்படுகிறது. 

     திருமதி கிருஷ்ணம்மாள் தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர். அவர்கள் அத்தகைய அடையாளத்தைப் பேணுவதில்லை என்ற போதிலும் ஓர் ஆய்வு நூல் ‘தலித் பெண்’ என்று குறிப்பது சரியல்ல. காந்திய வழியில் வினோபாவின் பூமிதான இயக்கத்தை முன்னெடுத்த இந்தத் தம்பதியினர் 1968 இல் வெண்மணியில் 44 தலித்கள் உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட பிறகு கீழத்தஞ்சையில் (நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்) தங்களது பணிகளைத் தொடர்ந்தனர். 2013 இல் சங்கரலிங்க ஜகந்நாதன் மரணடைந்த நிலையில் கிருஷ்ணம்மாள் 1981 இல் தொடங்கிய உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom - LAFTI) என்ற திட்டத்தையும் பணிகளையும்  தொடர்கிறார். 

    “ஒரு வேளை தேவர்கள் இம்மானுவல் மீது கோபம் கொள்ள இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். (புரட்சிகர கலப்பு மணம்) அவரது மனைவி கிரேஸ் வெங்கடக்குறிச்சி பள்ளி வளாகத்திலேயே வசித்தார். அங்கு, வீட்டின் ஓடுகளைப் பிரித்து பாறாங்கல்லை அவர் தலையில் போட்டு கொலை செய்ய ஒரு முயற்சி நடந்தது. இது போன்ற அச்சுறுத்தல்கள் கண்டு கலங்காத, இம்மானுவல் தைரியமாகத் தனது அரசியல் பணியைச் செய்துவந்தார்”, (பக்.168&169) என்ற அனுமானமும் மேற்கோளும், 

  1957 செப்டம்பர் 11 இரவு தனது தனது நண்பரும் வழக்கறிஞருமான ஆர்.கே.கிருஷ்ணமூர்த்தியுடம் வெளியே கிளம்பும்போது சேகரனின் மனைவி அமிர்தம் கிரேஸ் எச்சரிக்கையாக இருக்குபடி இறைஞ்சினார்.  சேகரனுக்கு ஏதேனும் ஆபத்து நேரலாம் என்று அவர் அஞ்சிய தகவலும் சொல்லப்படுகிறது. (பக்.13) 

     இதிலிருந்து இம்மானுவல் சேகரன் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தன என்பது வெளிப்படை. இந்தப் படுகொலை திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை மாற்றி ‘எதிர்பாராத படுகொலை’ என்ற முடிவுக்கு இந்த ஆய்வு எப்படி வருகிறது? முதல் தலைப்பிலேயே ஆய்வு தடம் மாறுகிறது. காந்தியின் படுகொலையை. இந்துத்துவ சக்திகள் இவ்வாறுதான் சொல்கின்றன. அதைப்போல இதுவும்  திட்டமிடப்படாத, எதிர்பாராத கொலை என்று சொல்ல முடியுமா? இரண்டும் திட்டமிடப்பட்டு, எதிர்பார்க்கப்பட்ட கொலைதான்! 

   நீதிமன்றத் தீர்ப்புகள், உத்தரவுகளைக்  கொண்டு மட்டும் சமூக, அரசியல் வரலாறுகளை எழுதிவிட முடியுமா என்பது கேள்விக்குறி. வெண்மணிப் படுகொலையின் தீர்ப்புகளும் இவ்வாறே இருந்தன. (பார்க்க: நின்று கெடுத்த நீதி - வெண்மணி வழக்கு: பதிவுகளும் தீர்ப்புகளும், தமிழில்: மயிலை பாலு, அலைகள் வெளியீட்டகம்) 

    1957 செப்டம்பர் 28 ஆம் தேதி அரசாங்கம் முத்துராமலிங்கத் தேவரைக் கைது செய்தது அனைவரையும் திகைப்பிலாழ்த்தியது”, (பக்.85) என்று சொல்லும் இவ்வாய்வு, “வியப்பூட்டும் வகையில் தேவரின் கைதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படவில்லை”, (பக்.85) என்கிறது.

    “தேவர் சிறையிலடைக்கபட்டதை நாம் விரும்பவில்லை என்றாலும், இப்போதைய சூழலில், தேவர் சிறையிலடைக்கப் படாவிட்டால் ஜாதி மோதல் முடிவிற்கு வந்திருக்காது. தேவர் வெளியில் இருந்தவரை ஜாதி மோதல்கள் குறையவில்லை. அவரது கைதுக்குப் பிறகு குறைந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவரை சற்று முன்னதாகவே தனிமைப்படுத்தியிருந்தால், இத்தனை கடுமையான உயிர்ச் சேதங்களும் சொத்து சேதங்களும் ஏற்பட்டிருக்காது”, (பக்.90, பெரியாரின் மேற்கோள்) 

    கொலையில் நேரடித் தொடர்பு எதுவும் நீதிமன்றம் நிருபிக்கவில்லை என்றாலும் கூட ஆதிக்க சாதிகளின்  சமூகக் கொடுமைகளுக்குக் காரணமாக இருந்ததால் கைது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பெரியார் இதைச் சரியாகவே எதிர்கொண்டார். இடதுசாரிகளுக்கும் இதர எதிர்க்கட்சிகளுக்கும் இருந்த சறுக்கல்கள் போலவே நூலாசிரியரும் ஆய்வில் சறுக்குவதை உணர முடிகிறது. 

   “தேவரின் விடுதலை, சேகரனின் கொலையை அவர்தான் திட்டமிட்டார் என்ற பழியிலிருந்து அவரை விடுவித்தது. பதினான்கு மாத சிறைவாசம் அவரை பெருமளவு சாந்தப்படுத்தியிருந்தது. சிறைவாசத்தின் கடுமை அவரது உடல் நலத்தை பாதித்து விட்டது. எனினும் மோசமான உடல் நலத்தையும் மீறி 1962 மாநிலத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆனால் தமிழ்நாட்டில் அரசியலைத் தொடர அவர் நீண்ட நாட்கள் உயிர் வாழவில்லை. 1963 அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் மரணடைந்தார்”, (பக்.129) என்று  முத்துராமலிங்கத் தேவர் மீது கழிவிரக்கம் கொள்கிறது இந்த ஆய்வு நூல்! 

    1908 இல் பிறந்த தேவரின் தாயாரும், சிறிய தாயாரும் அடுத்தடுத்த ஆண்டுகள் இறத்தல், தாய்வழிப்பாட்டி வீட்டில் வளர்தல், தந்தையுடனான சொத்துப் பிரச்சினையில் அரசு பொதுத்தேர்வை எழுத முடியாத நிலை என்று பல செய்திகள் கூறப்படுவது கழிவிரக்கத்தை மேலும் அதிகரிக்கின்றன. தலித்கள் மீதான வன்கொடுமைகள் மூன்றாம் தரப்புச் சொல்லாடல்கள் என்ற நிலையிலேயே விரிகின்றன. 
   
    மாறாக, இத்தகைய ஒரு கழிவிரக்கத்தை பாதிக்கப்பட்ட தலித் தரப்புக்கும் அளிப்பதுதானே முறையாக இருக்க முடியும்? சமூகவியல் குறித்த தத்துவார்த்த பார்வைகளும் விளக்கங்களும் கூட (எரிக் ஹாப்ஸ்பாம், பாலோ ஃபிரையர்) தலித்களின் தியாகங்களைப் போற்றும் நிலைப்பாடாகவும் அவர்களது எழுச்சியைத் தடுப்பதாகவும் உள்ளது. 

    “விவசாய சமூகங்களில் விவசாயிகள் அரசாங்கத்தை ஒரு உண்மையான அரசாகக் கருதுவதில்லை, மாறாக, அதன் வரிவசூலிப்போர், போலீஸ், நீதிமன்றம் போன்றவை அவ்வப்போது தம்மீது பாய்வதால் அதை கொள்ளைக் கூட்டத்தின் ஓர் சிறப்பான வடிவமாகத்தான் பார்க்கின்றனர் என்பார் ஹாப்ஸ்பாம்”, (பக்149)

    “சட்டத்திற்குக் கட்டுப்படாத சமூகங்களில் அதிகாரம், போட்டியிடும் பல்வேறு தனிநபர்களிடம் பரவலாக இருப்பதில்லை. மாறாக, உள்ளூர் அதிகார மையத்தில் குவிந்திருக்கும். அதன் வழக்கமான வடிவம் புரவலர் தன்மையாகும். அந்த அதிகாரத்தை வைத்திருப்பவர் தம்மை அண்டிப் பிழைப்போர், அடியாட்கள் சூழ இருக்கும் தலைவராக இருப்பார். அவரது செல்வாக்கின் காரணமாக, மக்கள் தம்மை அவரது பாதுகாப்பிற்குள் உட்படுத்திக் கொள்வார்கள் என்று கூறுகிறார். தேவர் அப்படிப்பட்ட ஒரு தலைவர். முதுகுளத்தூர் பகுதி அப்படிப்பட்ட ஒரு சமூகத்தின் வெளிப்பாடு.

   “ஃபிரையர் குறிப்பிடுவதுபோல, ‘தமது அதிகாரத்தால் ஒடுக்கும், சுரண்டும், கற்பழிக்கும் அடக்குமுறையாளர்கள் அந்த அதிகாரத்தில் தம்மையோ அலது ஒடுக்கப்பட்டோரையோ விடுதலை செய்வதற்கான சக்தியைப் பெறமுடியாது. ஒடுக்கப்பட்டோரின் பலவீனத்திலிருந்து எழும் சக்திதான் இருவருக்குமே விடுதலை தரத்தக்க பலத்தோடு இருக்கும். இந்த வகையில்   பள்ளர்கள் காட்டிய எதிர்ப்புணர்வில் ஒரு முற்போக்கு அம்சம் உள்ளது. இம்மானுவலின் தியாகமும், காங்கிரஸ் அரசாங்கத்தின் நேர்மறைத் தலையீடும் தேவர்-பள்ளர் சமூக உறவுகளில் அடிமைத்தனத்தை ஒழிக்க உதவியிருப்பது உண்மைதான்”, (பக்.150) 

      “உயர் அதிகார மட்டத்தில் தவறான வழிகாடுதல் காரணமாக ஜான் பாண்டியன் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். பாண்டியன் திருநெல்வேலியிலிருந்து பரமக்குடி வந்துகொண்டிருந்தார். அவரது வருகையால் பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்காது. அதற்கு முந்தைய ஐந்தாண்டுகள் அவர் சிறையிலிருந்தார். சிறைவாசத்தால் அவர் நிதானமடைந்திருந்தார் எனினும், தவறான வழிகாட்டுதலால் அவர் கைது செய்யப்பட்டது, பரமக்குடியில் ஏராளமான எண்ணிக்கையில் கூடியிருந்த அவரது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் (த.ம.ம.க.) தொண்டர்களுக்கு ஆத்திரமூட்டியது”, (பக்.11) என்று இதற்கான அடிக்குறிப்பில், “திருநெல்வேலி பகுதியில் வலுவான செல்வாக்கு உள்ள உள்ள அவர் (ஜான் பாண்டியன்) முரட்டுத்தனமான போக்கிற்கு பெயர் பெற்றவர். அதிலிருந்து (1980 களின் மத்தியில்) அவர் இப்பகுதியில் செல்வாக்கு மிக்கவராக உள்ளார்”, என்றும் சொல்வதன் வாயிலாக அடித்தட்டு மக்களின் எதிர்ப்புகள் ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்பதாக இருப்பினும் ‘முரட்டுத்தனமாகவே’ பொதுப்புத்திகளும் ஆய்வுகளும் விளங்கிக் கொள்ளும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகும். 

    “இம்மானுவல் சேகரனின் கொலை பள்ளர்களைத் தூண்டிவிட்டது என்றால், கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து தேவர்களை காவல்துறையினர் கொன்றது தேவர்களைத் தூண்டிவிட்டது”, (பக்.41) இத்தகைய ஒப்பீடுகள் பொருத்தமற்றவை என்பதே அடுத்த பத்தியே உணர்த்துகிறது. 

     “மாவட்ட ஆட்சியரின் கூற்றுப்படி மோதல், கலவரங்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் 18 பேர் பள்ளர்கள் 8 பேர் தேவர்கள். அரசு அறிவிப்பின்படி, தீக்கிரையான வீடுகளில் 2735 வீடுகள் பள்ளர்களுக்கும், 107 வீடுகள் தேவர்களுக்கும் சொந்தமானவை”, (பக். 42) எனவே இது சமநிலையான, சம பலம் பொருந்திய இரு சாதிகளுக்கிடையேயான மோதல் அல்ல என்பது தெளிவாகும்.   

     “அந்த நேரத்தில் இப்பகுதியில் ஒரு புரட்சிகரமான  நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டிருந்தால் ஒடுக்கப்பட்டோர் விடுதலையை அது முழுமைப்படுத்தியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு முற்போக்கான நடவடிக்கை இல்லாததால், அத்திசை நோக்கிய முன்னேற்றம் தாமதமாகிவிட்டது”, (பக்.150) 

    அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தக் கலவரத்தைத்  தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டது என்றாலும் அதன் பலனை பின்னாளில் அறுவடை செய்தவர்கள் தி.மு.க., அ.இ.அதி.மு.க. ஆகிய பெரியகட்சிகளாகும் கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகள் ஓரணியில் முத்துராமலிங்கத் தேவரை எதிர்க்க இயலாமலும் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ ஆதரித்து, தலித்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கைக்கொண்டனர். பள்ளர்கள் ஊரைவிட்டு செல்லாமல் இருந்தது, கலவரத்தின் பிற்பகுதியில் அவர்களுக்கு முழுமையாக காவல்துறை பாதுகாப்பு இருந்ததைக் காட்டுவதாகவும் (பக்.83) சொல்லப்படுகிறது. 

    இன்றைய சாதி, மத மோதல்களில் இரு தரப்பிலும் சம எண்ணிக்கையில் கைதுகள், வழக்குகள் என்பதான ஒரு முறையியலை காவல்துறை கையாள்கிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர், பாதிப்பு ஏற்படுத்தியவர் அனைவரையும் சமமாக அணுகும் பாவனை காட்டப்படுகிறது. இதை அன்று செய்யாமலிருந்த காவல்துறையை பாராட்டலாம். அதன்பிறகு காவல்துறை உயரதிகாரிகளில் முக்குலத்தோர் ஆதிக்கம் அதிகரித்ததும் இன்று நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

     “கடைசியாக, சென்னை காவல்துறைத் தலைவராக பொன் பரமகுரு வந்த பிறகு, தமிழ்நாட்டின் காவல்துறை வடிவம் மாறிவிட்டது. காமராசர் முதல்வராக இருந்தபோது, காவல்துறையிலும் பாதுகாப்பிலும் தேவர்களின் இடத்தை சரியாகப் பார்த்துகொண்டார். கலவர நேரங்களில் தென் மாவட்டங்களில் தேவர்களை மரத்தில் கட்டி வைத்து சுட உத்தரவிட்டார். ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபிறகு இந்த நிலைமை அப்படியே மாறியது. இவர், முக்குலத்தோர் பக்கம் தனது அரசியலைத் திருப்பினார். இடை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, பொன் பரமகுரு தேவர்களை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சேர்த்தார்”, (பக்.193&194, தலித் விடுதலையும் திராவிட இயக்கமும்: மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும் – எழுத்து வெளியீடு) என்று காவல்துறையிலிருந்து ஓய்வுபெற்ற தி.பெ. கமலநாதன் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.   

     அரசின் துப்பாக்கிச்சூடுகள் அன்றிலிருந்து இன்றுவரை நியாயப்படுத்தப்பட்டே வந்துள்ளன. பரமக்குடி (2012 செப். 11), தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. கீழ்தூவல் துப்பாக்கிச் சூடு காவல்துறை மற்றும் மாநில அரசின் அத்துமீறல் என்றாலும், இந்த நிகழ்வில் ஒரு பெரும் வேறுபாட்டை அவதானிக்க முடிகிறது. எப்போதும் அதிக்க சக்திகளின் பக்கமிருக்கும் அரசு எந்திரம் இதில் மட்டும் பெருமளவு பாதிக்கப்பட்ட தலித்களின் சார்பாக நின்றதே அது. முத்துராமலிங்கத் தேவருக்கும் காமராஜருக்கும் இருந்த தனிப்பட்ட பகை அல்லது தேர்தல் அரசியலைத் தாண்டிய ஒன்றாக இதனைப் பார்க்கலாம். 

    “ஹரிஜன் பள்ளிக்கூடம், மறவர் பள்ளிக்கூடம் என்று இப்போது வழங்கப்பட்டு வரும் சொல்லாடல்களை ஒழித்து மக்கள் நல பள்ளிக்கூடம் என்று பொதுவாக அழைக்கப்பட வேண்டும் என்றார்”, ஆட்சியர் பணிக்கர். (பக்.122)

    “இப்பகுதி இளைஞர்களை இந்த ஜாதி மோதல்களிலிருந்து திசை திருப்பி, அவர்களது சக்தியை ராணுவத்திற்கு நல்ல நோக்கத்திற்குப் பயன்படுத்தும் வகையில் முதுகுளத்தூர் தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது”. (…) 

     “மொத்தத்தில் எதிர்க்கட்சிகள், பத்தரிக்கைகளின் விமர்சனங்களைக் கண்டு கொள்ளாமல் காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக, கே.காமராஜ், எம்.பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் ஆகியோர் இப்பிரச்சினையை மிக நிதானமாகக் கையாண்டார்கள்”,  (பக்.122) என்று இந்த நூல் பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.  
  
   ‘உயர்சாதி, உயர்சாதியினர் என்கிற சொல்லாடல்கள் நூல் முழுதும் பயன்படுகிறது. உயர்த்தப்பட்ட சாதி, உயர்த்தப்பட்ட சாதியினர் என்பதாக மாற்றிப் பயன்படுத்துவது அவசியம். தாழ்ந்த சாதி என்பதையும் மாற்றவேண்டியுள்ளது. 

   முதுகுளத்தூர் படுகொலை குறித்த ஆய்வு நூல்கள் இல்லாத குறையை இந்நூல் போக்குவதாகச் சொன்னாலும், இன்னும் விரிவான நடுநிலையான ஆய்வைப் பெற இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் போலும்!  

நூல் விவரங்கள்:

 முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும் 

கா.அ. மணிக்குமார்
தமிழாக்கம்: ச. சுப்பாராவ்

வெளியீடு: 

பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு: ஜூலை 2018
இரண்டாம் அச்சு: நவம்பர் 2018
பக்கங்கள்: 176
விலை: 150

 தொடர்பு முகவரி: 

 பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

 தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com

 (இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 08/06/2020 அன்று வெளியானது.)

 நன்றி:  https://bookday.co.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக