வியாழன், ஜூன் 04, 2020

தமிழ்ச் சூழலுக்கானப் பண்பாட்டு உரையாடல்


தமிழ்ச் சூழலுக்கானப் பண்பாட்டு உரையாடல்


 (நூலறிமுகம்… தொடர்: 047)


மு.சிவகுருநாதன்


(அடையாளம் வெளியீடான,  பக்தவத்சல பாரதியின் ‘பண்பாட்டு உரையாடல்:  முன்மொழிவுகள் – விவாதங்கள் – புரிதல்கள்’ எனும்   நூல் பற்றிய  பதிவு இது.)



      தமிழில் மானிடவியல், இனவரைவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ள பக்தவத்சல பாரதி தமிழ்ச்சூழலில் நன்கறியப்பட்ட ஆய்வறிஞர். பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், வரலாற்று மானிடவியல், இலக்கிய மானிடவியல், மானிடவியல் கோட்பாடுகள், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், இலங்கையில் சிங்களவர், தமிழகத்தில் நாடோடிகள் (தொ) ஆகியன இவரது சில நூல்களாகும். 

    ‘பண்பாட்டு உரையாடல்:  முன்மொழிவுகள் – விவாதங்கள் – புரிதல்கள்’ எனும் நூலில் சமூக (5), பாலின (2), இலக்கிய (3)  உரையாடல்கள் என 10 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

  “பண்பாட்டு உரையாடல் நமது வாழ்வாகவும் வாழ்வு முறையாகவும் அமைகிறது, இங்கு உரையாடல் என்பது பேசுவதல்ல; பங்குபணியும் (role) பங்கேற்புமே உரையாடல், ஓர் உயிரினத்தின் (organism) இயக்கம் போன்றதுதான் பண்பாட்டு உரையாடல்களும்”, (பக்.ix) என்று முன்னுரையில் பண்பாட்டு உரையாடல் குறித்த விளக்கம் அளிக்கப்படுகிறது.  

  அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம், அரசறிவியல் பயின்றபோது (1913-15) மானிடவியலை (Anthropology) துணைப்பாடமாக பயின்றதும் சாதி பற்றி ஆய்வுசெய்த பிற கீழத்தேயவியலாளர்கள் அதை புறவய (etic) நிலையில் பார்த்ததும் அம்பேத்கர் அகவய (emic) நோக்கில் ஆய்வு செய்தமையும், அவருக்கும் பிறருக்குமான வேறுபாடுகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. 

  அம்பேத்கரது சாதி பற்றிய நான்கு முக்கியான ஆய்வுகளாக கட்டுரை குறிப்பிடுவது:

  • இந்தியாவில் சாதிகள்: அவற்றின் இயங்குமுறை, தோற்றம், வளர்ச்சி (கொலம்பியா பல்கலை. ஆய்வுரை 1916)
  • சாதி ஒழிப்பு: மகாத்மா காந்திக்கு ஒரு பதில் (லாகூர் ஜாத்-பாத் தோடக் மண்டல் மாநாட்டிற்கு எழுதப்பட்ட உரை 1936, இது நிராகரிக்கப்பட்டது. இதுவே சாதியை அழித்தொழித்தல் எனும் தலைப்பில் வெளிவந்தது. பார்க்க: சாதியை அழித்தொழித்தல் – காலச்சுவடு வெளியீடு)
  • சூத்திரர்கள் யார்? இந்தோ – ஆரிய அமைப்பில் நான்காம் வருணத்தவராக எப்படி ஆக்கப்பட்டனர்? (1946)
  • தீண்டத்தகாதார்: அவர்கள் யார்? அவர்கள் ஏன் தீண்டத் தகாதாராக ஆனார்கள்? (1948)

   சாதிகளின் தோற்றம், சாதிகளின் அசைவியக்கம், சாதிகளின் வளர்ச்சி என மூன்று நிலைகளில் தன் கருத்துகளை வெளிப்படுத்தியதும், அதில்   சாதிகளின் தோற்றம் பற்றி மட்டும் இங்கு விவாதிக்கப்படுகிறது. சர் டென்சில் இபட்சன், ஜான் நெஸ்பீல்டு, சர் ஹெர்பர்ட் ரிஸ்லி, ஜே.எச். ஹட்டன், எமிலி செனார்ட், ஜி.எஸ். குர்யே, ஆர்தர் மௌரிஸ் ஹோகார்ட், கிளாட் லெவிஸ்ட்ராஸ், லூயி தூய்மோன், மக்கிம் மாரியாட், பக்தவத்சல பாரதி ஆகியோரது கருத்துகளை எடுத்துக்காட்டி, அகமணமுறையே சாதியத்தின் மூலம், என்ற அம்பேத்கரது வேறுபடும் ஆய்வுப் புள்ளிகளைச் சுட்டுகிறார். 

   அடித்தள சாதியினரிடம் காணப்படும் தொன்மங்கள் வழியே சாதியை ஆய்வு செய்வதன் வழியே வருணக் கோட்பாடுகளை மறுக்கும் நிலை உள்ளது. ஒலிவெல், வீணாதாஸ், சுந்தர் சருக்கய் ஆகியோரின் தத்துவார்த்தச் சொல்லாடல்கள் மூலம் தனது ஆய்வை முன்வைக்கும் ராமாநுஜத்தின் ஆய்வும் (சந்நியாசமும் தீண்டாமையும்) இவ்வகைதான். இதன் மூலம் சாதிக்கும் தீண்டாமைக்கு வருணம் காரணமில்லை என்பதே இவர்களது முடிவாக உள்ளது. சங்குப் பறையர், மத்தியானப் பறையர், முரசுப் பறையர் போன்றவையும் இந்த வகைமையைச் சார்ந்தவைதான். தொன்மங்களை விதந்தோதுவதும் அவற்றைக் கொண்டு ஆய்வு முடிவுகளை உருவாக்குவதும் எதிரிடையான சாத்தியப்பாடுகளை உருவாக்கலாம். தமிழகக் குறவர்களுக்கு இணையான வடநாட்டு ‘தூரி’ எனப்படும் அட்டவணைச் சமூகத்தின் தொன்மம் இங்கு ஆய்வுக்குள்ளாகிறது.

   ஆதி தமிழ்ச் சமூகம் சாதிமுறைக்கு முந்தைய வடிவமாக ‘குடி’ சொல்லப்படுகிறது. (அம்குடி, முதுகுடி, வேட்டக்குடி, பல்குடி, நீள்குடி, வேள்குடி, செழுங்குடி, விழுக்குடி, குரம்பைக்குடி) தொல்காப்பிய திணைசார் வாழ்வில் எவர் உயர்ந்தவர், எவர் தாழ்ந்தவர் என படிநிலைப்படுத்தும் போக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. இது சற்றுக் கூடுதலான மதிப்பீடே.

    சங்க இனக்குழுக்களிடையே புறமண முறை எதிர்ப்பு இல்லாததும் அதற்கும் உரிய இலக்கணம் வகுக்கப்பட்டதை குறிப்பிடுவது சரி. இதற்கு மாறாக ‘மநு’ தர்மத்தில் புறமண முறைகளை இழிவுபடுத்தி சங்கரா, அனுலோமா, பிரதிலோமா, அந்தராளா, விராத்தியா, பாகியா என்று சமூகப் பிரிவுகள் இங்கு ஏற்படுத்தப்படவில்லை என்பது மட்டுமே இங்குள்ள நல்ல சூழல். சங்ககாலத் தமிழ்க்குடிகள் சுதேசித்தன்மையுடம் யாரையும் சாராது ஆதிக்கமில்லாது இருந்ததாகச் சொல்வது ஒரு மிகையான கற்பனையாகவே இருக்கும். 

      அரசர், அந்தணர், வேளிர், வணிகர் என உயர்குடித் திணைகளும், அடியோர், வினைவலர், ஏவலர்  போன்ற ஒடுக்கப்பட்டோரின் திணை வகைப்பாடும் உண்டுதானே! பெண்கள் நிலமாகவும் கற்பு போன்ற  பண்புகள் பெண்களுக்கு மட்டுமே உரித்ததாகவும் ஆண்கள் உடமையாளராகவும் இருக்கின்ற நிலை உள்ளதே!

   ஶ்ரீவராகப் பெருமாள் கிள்ளையில் எழுந்தருளும் (மாசிமகம்) முன்பு தைக்கால் கிராமத்தில் இஸ்லாமியர் வரவேற்பு, திருக்கண்ணபுரம் ஶ்ரீசௌரிராஜப் பெருமாள் பட்டினச்சேரிக்கு கடலாட வருகை, கந்தூரி விழாக்கள் (மதுரை, ஏர்வாடி, நாகூர், முத்துப்பேட்டை) போன்றவற்றில் இந்து-முஸ்லீம் ஓர்மை எடுத்துக் காட்டப்படுகிறது. ஆனால் இத்தகைய ஓர்மையுடன் கந்தூரி நடக்கும் இடங்களில் மதவாத சக்திகள் தலைதூக்குவதும் வெறுப்பரசியல் விதைப்படுவதும் இன்று காணக்கூடியதாக இருப்பது பெரும் வேதனையாகும்.

    ஆதித் தொல்குடிச் சமூகத்தின் பெண்ணின் சுயாட்சி நிலையும் பெண்ணே முதல் விவசாயியாக இருந்ததும் அடுத்த கட்டுரையில் இந்த சுயாட்சி தேய்மானமடைந்ததும் பாலின உரையாடல்களாக விளக்கம் பெறுகின்றன. வேட்டைச் சமூகத்த்தில் பெண்கள் சேகரிப்பாளர்களாகவும், பிந்தைய வேளாண் சமூகத்தில் பெண் முதல் விவசாயியாக படிமலர்ச்சியடைந்த நிலையில், விதை ஊன்றப் பயன்படும் தோண்டுகழி , களையெடுக்கும் வடிவம் மாறி இன்று தாய்த் தெய்வங்களின் கைகளிலுள்ள சூலமானது விளக்கப்படுகிறது. (பக்.70) இன்றுபோல் அன்றும் பெண்கள் உணவு சேகரிப்பாளர்களாக மட்டுமே இருந்திருக்க முடியுமா? வேட்டையில் இவர்களுக்குப் பங்கில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. பாலினத் தொழிற்பகுப்பு இருந்தது என்றால் சமத்துவ, சுயசார்பு நிலை என்றெல்லாம் சொல்வது பொருளற்றதுதானே! 

   தென்னிந்திய, வட இந்திய மணமுறைகளுக்குள்ள வேறுபாடுகள், அகமணமுறைக் கூறுகள், ஒரே சாதிக்குள் படிநிலை உறவைக் கட்டமைக்கும் தன்மைகள் பேசப்படுகின்றன. அகமணமுறையை ஒழிப்பதே சாதியத்திற்கான தீர்வாகவும் முன்வைக்கப்படுவது சிறப்பு. 

    தமிழில் வட்டார நாவல்களை எடுத்துக் கொண்டு சுதேசி இனவரைவியல் குறித்த ஆய்வை ஒரு கட்டுரை செய்கிறது. இத்தகைய நாவல்கள் சுயசாதிப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்பனவாகவும், பெருமிதச் சூழலுக்குள் முழ்கடிப்பனவாகவும் இருப்பது கண்கூடு. வெறும் இனவரைவியல் என்ற பார்வை மட்டும் போதாது. இதன் சமூகத் தாக்கம், வீச்சு ஆகியவனவும் கணக்கில் கொள்ளபட்டு ஆராயவேண்டும். 

    எஸ்.பொ., தேவகாந்தன், குணா கவியழகன் நாவல்களை ஈழப்பிரச்சினை என்ற வகையினத்தில் நிறுத்தும்போது அங்குள்ள சாதிய, வட்டார, இனவரைவியல் கூறுகள் மறைக்கப்படுகின்றன. டேனியல் நாவல்கள் தலித் வகைக்குள் உள்ளது. இவர்கள் அனைவரையும் ஒரே இனவரைவியலுக்குள் அடக்க இயலுமா? இமையத்தின் கோவேறு கழுதைகள் புதிரை வண்ணார் (தீண்டா வண்ணார்) குறித்தது. வண்ணாரும் இவர்களும் ஒருவரல்ல. கண்மணி குணசேகரன், தேனி சீருடையான் பெயர்கள் சரிசெய்யப்பட்ட வேண்டும். 

     “கி.ரா.வின் படைப்புலகம்தனியானது. முழுக்க முழுக்க நாட்டாரியல் சார்ந்தது; வாய்மொழி சார்ந்தது”. (பக்.124)
(…)
  “கி.ரா.வின் நாட்டார் கதையாடல் பண்பு பேச்சு வகையை மையமிட்டது. பேச்சின் ஊடாக அவர் செய்துவந்துள்ள பண்பாட்டு நெசவு தனித்துவமானது. இத்தகையதொரு நெசவினைக் கி.ரா. தம் வாழ்நள் முழுவதும் செய்திருக்கிறார்”, (பக்.137) என்ற  கி.ரா.வின் எழுத்தியல் பற்றிய கட்டுரை குறிப்பிடுகிறது.

    இறுதி இயலில், சங்கக் கலைகளும் கலைஞர்களும் ஆய்வுப்பொருளாகின்றன. ஐந்திணைக் குடியினர் தவிர்த்து இவர்களை நாடிச்சென்று பரிசில் பெற்று வாழ்ந்த ‘அலைக்குடியினர்’ தனித்த  ‘பாண் சமூகமாக (பாணர் சமூகம்) இருந்தது சுட்டப்படுகிறது. (பக்.140) இதையே சங்ககால சமத்துவ, சுயசார்பு சமூகத்திற்கு விதிவிலக்காக காட்டலாமல்லவா! தன்னிறைவு பெற்ற தமிழ்க்குடிகளுக்குள் அப்பாற்பட்டு சிலர் பிறரிடம் பரிசில் பெற்று (யாசித்து / இரந்து) வாழும் நிலை எப்படி சிறப்பானதாக இருக்க முடியும்? அன்றையத் தமிழ் அறிவுலகம் (புலவர்கள்) வறுமையில் சுயசார்பில் இல்லாதபோது அவர்களது இலக்கியம் எப்படி காலக் கண்ணாடியாக அமையும்? 

   சங்ககால கலைகள் 30 பட்டியலிடப்படுகின்றது. (பக்.140-143) இந்தக் கலைஞர்களை ஊர் சுற்றும் வல்லுநர்கள் (travelling specialists) என்று பொருள் மயக்கினாலும் இவர்கள் நாடோடிகள். இவர்களது கலைப்பயணம், சேவை, பண்பாட்டுப் பாலம் என சிறப்புகள் உயர்வு நவிற்சியாக கூறப்படினும் இவர்களது சமூக நிலை குறித்த முழுமையான ஆய்வு மற்றும் பார்வையாக இது இருக்க இயலாது. இக்கலைகள் அரசியல், சமூகம், பொருளியல் தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள், சம்ஸ்கிருத மரபுகளுடன் நிகழ்ந்த ஊடாட்டம் போன்றவையும் விரிவாகப் பேசப்படுகின்றன. 

    பண்பாடு குறித்த விரிவான விவாதத்திற்கான களமாக இந்நூல் விளங்குகிறது. நாட்டார் / வட்டார மரபுகளை அணுகுவதில் எச்சரிக்கையும் அதன் வழியே உருவாகும் சாதி / இனப் பெருமிதங்களும் இன்றைய வாழ்வியலை சிதைப்பதாக உள்ளதையும் நாம் கவனிக்க தவறக்கூடாது. சங்க இலக்கியப் பெருமித உணர்வுகளைத் தாண்டி இன்னும் விரிவாக ஆய்வுகள் செய்யப்பட மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

நூல் விவரங்கள்: 

 பண்பாட்டு உரையாடல்:  முன்மொழிவுகள் – விவாதங்கள் – புரிதல்கள்
 பக்தவத்சல பாரதி 

 முதல் பதிப்பு:  2017
பக்கங்கள்: 178
விலை: 160  
 
 வெளியீடு:

 அடையாளம்,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம் – 621310,
திருச்சிராப்பள்ளி – மாவட்டம்.

பேச:   04332 273444, 9444772686
மின்னஞ்சல்: info@adaiyaalam.net

(இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 03/06/2020 அன்று வெளியானது.)
 நன்றி:  https://bookday.co.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக