புதன், ஜூன் 17, 2020

குழந்தைகள் சொன்ன குட்டிக் கதைகள்!


குழந்தைகள் சொன்ன குட்டிக் கதைகள்!  

  
  (நூலறிமுகம்… தொடர்: 051)


மு.சிவகுருநாதன்

  
(குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம் வெளியிட்ட  சிறார் சொன்ன கதைகள்: 1, 2 & 3’  என்ற குட்டி நூல்கள் வரிசை  பற்றிய  பதிவு.)



 
      எவ்வளவு நாள்கள்தான் குழந்தைகள் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது? அவர்கள் படைப்பாளிகளாக மலர வேண்டாமா? மேலும் இருக்கின்ற கதைகளில் நிலவுகின்ற முறையியலை, நீதியைத் தலைகீழாக்கும் தன்மை அவர்களது படைப்பூக்கத்திலிருந்து கிடைக்கிறது. 



    குழந்தைகள்  எழுத்துகளை ஓவியமாக உணர்வதைப்போல எந்த நிகழ்வுகளையும் கதையாக உணர்கிறார்கள்; நினைவு வைத்துக் கொள்கிறார்கள். எந்தக் கதையைக் கேட்டாலும் வாசித்தாலும்  அதனூடாக அவர்களது கதைகளை எழுதிப் பார்க்கிறார்கள். வயது செல்லச்செல்ல கதைகளின் தன்மை மாறுகிறது. ஆனால் கதை கேட்டல், சொல்லல், வாசித்தல், எழுதுதல் என்று கதைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. 

   அனைத்து நாளிதழ்களும் சிறுவர்களுக்கான இணைப்பிதழ் (மாயாபஜார், சிறுவர்மணி, சிறுவர் மலர்) வெளியிடுகின்றன. துளிர், தும்பி என்று பலவகைப்பட்ட சிறுவர் இதழ்கள் இருக்கின்றன. இவைகளில் பஞ்சுமிட்டாய், குட்டி ஆகாயம் போன்ற இதழ்கள் குழந்தைகளை எழுத வைக்கவும் அவர்களின் படைப்புத் திறனை வளர்க்கவும் மேம்படுத்தவும் பெருமுயற்சிகள் செய்கின்றன. 


   அந்த வகையில் ‘குட்டி ஆகாயம்’ சிறார் பதிப்பகம் வெளியிட்டவைதான் இந்த மூன்று சிறார் சொன்ன கதைகள் ஆகும். பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ரன் புத்தகப் பரிசுப் பெட்டி, புத்தகப் பூங்கொத்து, வண்ணப்படக் கதைகள், கதைப் புதையல் 1, கதைப் புதையல் 2 என பலவரிசை நூற்களை வெளியிட்டுள்ளது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. மொழிபெயர்ப்புகளும் இருமொழிக் கதைகளும் இதிலடங்கும். 

   ‘ஒரு சின்ன விதை’ காட்டிற்குள் நடந்து சென்று கொண்டிருந்தது. “எங்கே நாம் வளர ஆரம்பிக்கலாம்” என்ற யோசனையில் புதர்களுக்கிடையே போய்க் கொண்டே இருந்தது”, என்று கதை அழகாக, இயல்பாக ஆனால் புதிராகத் தொடங்குகிறது.  


  மரங்களிடம் இடம் கேட்டுக் கிடைக்காத நிலையில் தண்ணீரிடம் யோசனை கேட்க ஆற்றங்கரைக்குச் செல்கிறது. ஒரு பறவை விதையை பறவைகள் கூட்டத்திற்கு எடுத்துச் சென்றது. “நீ தானாகவே முளைத்து விடுவாயே, ஏன் இப்படி ஒவ்வொருவராகச் சென்று கேட்டுக் கொண்டிருக்கிறாய்?”, என்று பறவைகள் விதைக்கு வழிகாட்டுகின்றன. 

   திரும்பி நடக்கத் தொடங்கிய விதை பள்ளத்தில் விழுந்து, மழை நீரோடையில் ஓடி ஒரு பாறையிடுக்கில் சிக்கிக் கொண்டது. ஒரு சிறுவன் விதையைக் கையில் எடுத்து சமவெளியில் நட்டான்; விதை மரமானது. பெரிய மரமான அதனிடம் பழைய கதைகளைச் சொல்லி நினைவிருக்கிறதா? என்று கேட்டுக் கொண்டிருந்தான். 

   கதிர் படிக்கும் பள்ளியிலுள்ள ஒரு செடியில் இலை ஒன்று அழகாக இருக்கும். தினமும் அதைப் பார்த்துக் கொண்டே இருப்பான். ஒரு நாள் ஆசிரியர் அந்த இலையை நீயே எடுத்துக் கொள் என்று சொல்கிறார். 

   வீட்டிற்கு எடுத்துச் சென்ற அந்த இலை திடீரென்று வண்ணங்களால் நிறைந்தது. கதிர் அதைக் காட்டில் வீசினான். இப்போது மழை பெய்தது. சில மாதங்களுக்குப் பிறகு அது மரமானது; வண்ண வண்ண இலைகளால் ஆனதாக அம்மரம் இருந்தது. கதிர் தனது நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்தான். அனைவரும் அம்மரத்திற்கு ‘வண்ண மரம்’ என்று பெயரிட்டனர்.


     சூர்யாவுக்கு அவனது ஒரு கதைப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார். இரவு உணவுக்குப் பின் அப்புத்தகத்தைப் பார்க்க எண்ணி, திறந்தான். அதில் எழுத்துகள் எதுவுமில்லை. ‘வாய்’ போன்ற உருவம் வரையப்பட்டிருந்தது. அதைத் தொட்டான். அது உடனே கதைகள் சொல்லத் தொடங்கியது. தினமும் மூன்று கதைகள் கேட்பது வழக்கமாயிற்று.

   ஒரு நாள் புத்தகம் காணாமல் போய்விட்டது. வீடு முழுக்கத் தேடிவிட்டு தூக்கம் வந்ததால் தூங்கிவிட்டான். கனவில் வந்த புத்தகம் நேற்று உன் நண்பனைப் பார்க்கச் செல்லும்போது என்னையும் எடுத்து வந்து அங்கேயே மறந்து வைத்துவிட்டாய் என்று சொன்னது. புத்தகத்தை எடுத்து வந்து பத்திரமான வைத்துக் கொண்டான். அந்த ‘பேசும் புத்தகம்’ அவனுக்கு தினமும் மூன்று கதைகள் சொல்லியது.

    முதல் கதை குழந்தைகள் பலர் இணைந்து உருவாக்கியது. இரண்டு மற்றும் மூன்றாவது கதைகள் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஶ்ரீஹரியால் உருவாக்கப்பட்டது. 

   குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்வதும் வாசிக்கச் செய்வதும் கூட அவர்களையும் படைப்பாளிகளாக்கும். இம்முயற்சிகள் தொடர வேண்டும்; இன்னும் பரந்து விரிய வேண்டும். குழந்தைகளைப் பாடநூல் சிறைகளிலிருந்து விடுவிக்க வேண்டும். அதற்கு இம்மாதிரியான முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும்.   


நூல் விவரங்கள்:

 சிறார் சொன்ன கதைகள்: 1, 2 & 3 

1.ஒரு சின்ன விதை – கோவை ஜி18 அமைப்பின் நிகழ்வில் குழந்தைகள் இணைந்து உருவாக்கிய கதை 

 முதல் பதிப்பு: டிசம்பர் 2018

2.வண்ணமரம் - ஶ்ரீஹரி

முதல் பதிப்பு: ஜூலை 2019

3.பேசும் புத்தகம்  - ஶ்ரீஹரி

 முதல் பதிப்பு: ஜூலை 2019
வெளியீடு: 

குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம்

பக்கங்கள்: 16 (ஒவ்வொன்றும்) 

விலை: 20 (ஒவ்வொன்றும்)

தொடர்பு முகவரி: 

வானம் அமைப்பு,
7 / 40 L5, பாடசாலை தெரு,
இடையர்பாளையம் ரோடு,
சுந்தராபுரம்,
கோயம்புத்தூர் – 641024.

அலைபேசி: 9843472092   9605417123

மின்னஞ்சல்: vaanamtheexistence@gmail.com
வலைப்பூ: www.kuttiaagaayam.blogspot.com

 (இக்கட்டுரை  https://bookday.co.in/  இணையதளத்தில் 13/06/2020 அன்று வெளியானது.)

 நன்றி:  https://bookday.co.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக