வெள்ளி, ஜூலை 24, 2020

'கொரோனா’ சூழலில் பள்ளிக்கல்வி


'கொரோனா’ சூழலில் பள்ளிக்கல்வி


மு.சிவகுருநாதன்


     ‘கொரோனா’ உலகைப் பெருமளவு புரட்டிப் போட்டுள்ளது. முதலாளியம் இதையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை மற்றும் சுரண்டல்களில் ஈடுபடவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பிலிருந்து ஐரோப்பாவும் அமெரிக்காவும் எளிதில் மீண்டுவிடும். அதன் பொருளாதார பலமும் குறைவான மக்கள்தொகையும் இதற்கு வசதியாக இருக்கும். உலகில் அதிக மக்கள் தொகையுடைய சீனாவும் தனது உழைப்பு மற்றும் பொருளாதார வல்லமையால் எளிதில் தாண்டிச் சென்றுவிடும். 



     மூன்றாம் உலகநாடுகள் என அழைக்கப்பட்ட ஆப்பிரிக்க, ஆசிய, தென் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த ஏழை நாடுகள் ‘கொரோனா’ பாதிப்பிலிருந்து மீள்வது மிகவும் கடினம். உலகில் இரண்டாவது மக்கள் தொகைகளை உடைய இந்தியா பாரதூரமான விளைவுகளை அனைத்துத் துறைகளில் சந்திக்க வேண்டியிருக்கும். 

     பல மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதே எண்ணிக்கையில் வேலையிழப்பு, கல்வியிழப்பு, இடைநிற்றல், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், வறுமை போன்ற பல்முனைத் தாக்குதல்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவில் சற்று அதிகமாகவே இருக்கும். 



     இதிலிருந்து மீள்வதற்கு சமூகம் சார்ந்த தொலைநோக்குத் திட்டங்கள் அவசியம். அதற்குத்தான் மக்கள் நல அரசுகள் தேவை. கெடுவாய்ப்பாக இன்று மக்கள் நல அரசுகள் அழிக்கப்பட்டு புதிய ‘காப்பரேட் நல’ அரசுகள் உருவாகியுள்ளன. எனவே அவை கார்ப்பரேட்களுக்குச் சலுகை அளிப்பது,  முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என முடிவு செய்கின்றன. 

    ‘கொரோனா’ என்பது வெறும் சுகாதார / மருத்துவப் பிரச்சினை அல்ல; மாறாக அரசியல், சமூக, பொருளாதாரச் சிக்கலும் கூட. எனவே மருத்துவர்களின் ஆலோசனைகளே போதுமானது, வேறு எதுவும் தேவையில்லை என்பதைவிட வேறு அபத்தம் இருக்கவியலாது. பலதரப்பு அறிஞர்களின் கருத்துகளும் தொலைநோக்கும் செயல்திட்டங்களும் தேவை. வெற்று முழக்கங்கள், புகழ் பாடல்களுக்குள் இவை அடங்காது.

   கடந்த 4 மாதங்களாகப் பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன. பெற்றோர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கிப் போயிருக்கும் நிலையில் அவர்களுக்கு இதுகுறித்துச் சிந்திக்கக்கூட வாய்ப்பில்லை. குழந்தைகள் கல்வி மற்றும் பள்ளித் தொடர்பை படிப்படியாக இழந்து வருகின்றனர். 

    பெரும்பாலான அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு வழியில்லை. மிகக் காலதாமதமாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன; இதுவும் போதுமானதல்ல.  தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முரண்டு பிடிக்கும் துறையாக மாறிப்போனதுதான் கொரோனாவைவிட பேரவலம். 


     கல்வியாளர்களின் கருத்துகளை முற்றாக செவிமெடுப்பதில்லை. குழந்தைகளுக்கும் கல்விக்கும் எதிரான திட்டங்களை அமல்படுத்துவதிலேயே இவர்களது காலம் கழிகிறது. தனியார் சுயநிதிப் பள்ளி ஆட்களையே கல்வியாளர்கள் என்ற முகமூடிக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்காகவே கல்வித்துறை செயல்படுகிறது. அடித்தட்டு மக்களைப் போலவே, அவர்களது குழந்தைகளுக்கான கல்வியும் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறது. 

   இன்றுள்ள சூழலில் பள்ளிகளைத் திறப்பது சாத்தியமற்றது. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள், முன்மொழிவுகள், திட்டமிடல்கள் பள்ளிக்கல்வித் துறை சார்ந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கெடுவாய்ப்பாக எதுவுமே நடக்கவில்லை. கல்வியாளர்கள் பலர் மாற்று வழிமுறைகளைச் சொல்லி வருகின்றனர். இணையக் கல்வி ஒன்றே மேட்டுக்குடி முன்மொழிவாக உள்ளது. இதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை. 

     தமிழக தொலைக்காட்சிகள் மூலம் கல்வி ஒளிபரப்பு செய்வதாக அறிவித்துள்ளது. அண்மையில் சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட மூன்றாம் வகுப்பு மாணவியின் வீட்டில் தொலைக்காட்சி இல்லை; கொலையாளியின் வீட்டில் டி.வி. போடச்சொன்னதால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. கொலையில் வேறு காரணங்கள் இருப்பினும் அக்குழந்தையின் வீட்டில் டி.வி. இல்லை. இதைப்போல பல வீடுகள் உண்டு. டி.வி. இருந்தாலும் குறிப்பிட்ட சேனலைப் பார்க்கும் வசதி, இன்னும் இணைய வாய்ப்புகளற்ற கிராமங்கள் பற்றியெல்லாம் யாரும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. 


    சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முன்பு 5 ஆம் வகுப்பு வரை ஒரு பாடவேளை மட்டும் இணைய வகுப்பு எடுத்தனர். மத்திய அரசின் விதிமுறைகள் வந்தபிறகு 3 பாடவேளையாக மாறிவிட்ட கொடுமையும் நடக்கிறது. இதனால் குழந்தைகளின் உடல், மன நலன்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி யாரும் கவலைகொள்வதாகத் தெரியவில்லை. வகுப்பறைக் கல்விக்கு இதெல்லாம் மாற்றல்ல; முதலாளித்துவத்திற்கு வசதி செய்யும் ஓர் ஏற்பாடுதான். 

    சிறார் இலக்கியவாதியான விழியன் மற்றும் செந்தமிழ்ச் செல்வன் இணைந்து நுண் வகுப்பறைகள் (micro class rooms) என்ற கருத்தாக்கத்தையும் செயல்திட்டத்தையும் முந்தைய அறிவொளி இயக்க அனுபவங்களிலிருந்து உருவாக்கினர். குழந்தைகள் வாழுமிடத்திற்கு அருகே வசதியுள்ள இடங்களில் 5 மாணவர்களைக் குழுவாக ஒன்றிணைத்து ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் ஒரு சில மணி நேரம் கற்றல், கதைகள், பாடல்கள், சிறு விளையாட்டு போன்றவற்றின் மூலம் கல்விக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பை மீள் உருவாக்கம் செய்வது இதன் முதன்மையான நோக்கமாகும். 

   பள்ளி மற்றும் கல்வியின் மீதான குழந்தைகளின் தொடர்புக் கண்ணி அறுபடாமல் காக்க வேண்டியது இன்றியமையாதது. இந்நிலை நீடித்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகும்; கல்வி மீண்டும் அவர்களுக்கு எட்டாக் கனியாகிவிடும்.

      இதன் முழு விவரங்களை அறிய கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

https://m.facebook.com/story.php?story_fbid=10163795524365445&id=800965444

    இந்த மாதிரியைக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசணையில் தாய்த் தமிழ் பள்ளிகள் மூலம் இலவசக்கல்வியும் இலவச மதிய உணவும் வழங்கிவரும் கல்வியாளர் பேரா. பா.கல்யாணி (கல்விமணி) அவர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு சுமார் 11 இடங்களில் நுண் வகுப்பறைகள் அமைத்துக் கற்றல் பணியைத் தொடங்கியுள்ளார்கள். 

    அப்பள்ளி ஆசிரியர்களே இந்தப் பணிகளில் ஈடுபடுகின்றனர். குழந்தைகளின் பெற்றோர்கள் இதில் முழு ஈடுபாட்டுடன் அப்பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் அனைவருக்கும் உதவுகின்றனர். முட்டையுடன் மதிய சத்துணவும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுகிறது. விழியன் மற்றும் தோழர்களின் கருத்தாக்கதிற்கு பேரா. கல்யாணி செயல்வடிவம் கொடுத்துள்ளார். இந்த நுண் வகுப்பறையில் 5 மாணவர்கள் என்பதற்கு மாற்றாக சற்றுக் கூடுதலாக 8 மாணவர்கள் எனத் திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. முகக்கவசம், கிருமி நாசினித் திரவம், கபசுரக் குடிநீர், நில வேம்புக் குடிநீர் போன்றவையும் வழங்கப்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பித்தும் இன்னும் உரிய அனுமதி கிடைக்கவில்லை என்கிறார் கல்வியாளர் கல்யாணி. 154 மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர்.  


    ‘கொரோனா’த் தொற்றுப் பேரிடர் காலத்தில் இப்பணி மிகவும் சிக்கலானது, கவனமுடன் செயலாற்ற வேண்டிய பணியும் கூட. பிற அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பும் அவசியம். இவர்களது பள்ளி ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது முதன்மையானப் பணியாகும். இதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் பங்கேற்கும் அவசியம். இதை அவர்கள் உரிய முறையில் கூட்டங்கள் நடத்தி ஒப்புதல் பெற்று இப்பணியைத் தொடங்கியுள்ளனர். 

    தன்னார்வலர்களைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவர்களது தேர்வில் கவனமும் எச்சரிக்கையும் அவசியம். பெரும்பாலும் ஆசிரியர்களைப் பயன்படுத்துவது நல்லது. இணைய, டி.வி. கல்விக்கு மாற்றாக முன்வைக்கப்படும் சிறு திட்டமிது. இதை அப்படியேச் செய்ய வேண்டும் என்பதில்லை. இடம், சூழலுக்குத் தக்கவாறு உரிய மாற்றங்களைச் செய்திட இயலும். 

    பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் இதைச் செயல்படுத்துவது எளிமையானது என்று பேரா. கல்யாணி குறிப்பிடுகிறார். மேலும் அவர்களுக்கு மதிய உணவை உறுதி செய்ய வேண்டியதும் கட்டாயமாகும். 

     பள்ளிகளுக்குப் பாடநூல்கள் அளிக்கப்பட்டநிலையில் 1 முதல் 9 முடிய உள்ள வகுப்புகளுக்கு மாணவர்களுக்குப் பாடநூல் வழங்குவதை அரசு நிறுத்தி வைத்துள்ளது. பள்ளி திறக்கவில்லை என்றாலும் பாடநூல்களை சமூக இடைவெளியைப் பின்பற்றி வழங்குவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? 

     பேரா. கல்யாணி மற்றும் அவரது தோழர்களின் முன்முயற்சியால் தாய்த் தமிழ் பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது; மழலையர் பள்ளியும் உள்ளது. முற்றிலும் இலவசக்கல்வியும் மதிய உணவும் இங்கு அளிக்கப்படுகிறது. தனிநபர்களின் நன்கொடைகளால்தான்  இப்பள்ளி செயல்படுகிறது.  
    
             நான்காம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த நுண் வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக இதை இதர குழந்தைகளுக்கும் விரிவு படுத்தலாம், என்றார். காலையில் வரும் குழந்தைகள் மதிய உணவிற்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். மதியம் வரும் குழந்தைகள் உணவிற்குப் பின் சிறிது நேரம் கற்றலில் ஈடுபடுகின்றனர். சிறிய வகுப்புக் குழந்தைகளுக்கு முட்டையுடன் தரமான மதிய உணவு மட்டும் வழங்கப்படுகிறது என்றும் சொன்னார். 
   

      பேரா. கல்யாணி அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப்  பணியாற்றும்போதே சமூகப்பணிகளிலும் மார்க்சிய இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மக்கள் கல்வி இயக்கம், இருளர் பாதுகாப்புச் சங்கம், தாய்த் தமிழ்ப்பள்ளி என அவரது சமூகப்பணிகளும் மனித உரிமைப்பணிகளும் தொடர்கின்றன. இருளர் இனப் பழங்குடியினருக்காகவும் அவர்களது சமூக, கல்வி உரிமைகளுக்காகவும் தொடர்ந்து இயங்கி வருகிறர். இதற்காகவே  விருப்ப ஓய்வு பெற்று சமூக, மனித உரிமைப் போராளியாக தனது வாழ்வை ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து வருபவர்.

        எல்லா ஊரிலும் கல்யாணிகள் இருக்க மாட்டார்கள். மாறாக கல்வித்தந்தைகளும் கல்வி வள்ளல்களுமே நீக்கமற  நிறைந்துள்ளனர். அரசுதான் இவற்றைச் செய்ய வேண்டும். தமிழ்வழிக் கல்வி, தரமான கல்வி என எதையும்  அரசுகள் வழங்கத்  தவறியதை  எடுத்துக் காட்டவே இவ்வாறு  செய்து காட்டுகின்றனர். 

     ஒவ்வொரு வகுப்புக் குழந்தைகளையும் தனித்தனியே அல்லாமல் சில வகுப்புக் குழந்தைகளைச் சேர்த்து வைக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்களும் பாடத்திட்டத்தோடு இணைந்து உருவாக வேண்டும். பாடநூல் பாடங்களைவிட பொதுவான கதை, பாடல், சிறு விளையாட்டு, வாசிப்பு, அடிப்படைத் திறன்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இது அமையலாம். கல்வியின் தொடர்பு குழந்தைகளிடம் அறுபடாமல், இடைநிற்றல் ஏற்படாமல் காப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைய வகுப்பில் இடமில்லை என்பதைப் போன்றதல்ல இவ்வழிமுறை; சமத்துவ, சமூக நீதிக்கான பாதை.   
    
    ‘கொரோனா’விற்கு முன்பும் தமிழகப் பள்ளிக்கல்வி நல்ல நிலையில் இல்லை; பின்பும் நிலைமை இன்னும் மோசமடைவது கல்விக்கும் சமூக நிதிக்கும் கேடாகவே முடியும். பள்ளிக் கல்வித்துறை சுயநிதிப் பள்ளிகளை மட்டும் சார்ந்து செயல்படாமல் சமூகம், குழந்தைகள் சார்பாகச் செயல்படும் கல்வியாளர்களின் கருத்துகளுக்கு உரிய வழியில் செயல்படிவம் அளிக்கவும் கல்வியில் தமிழகம் அடைந்திருந்த நிலையைத் தக்க வைக்கவும் உடனடியாகச் செயலாற்ற வேண்டிய தருணமிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக