புதன், நவம்பர் 30, 2016

07. பொதுத்தேர்வுகளை முதன்மைப்படுத்தும் கல்விமுறை.

07. பொதுத்தேர்வுகளை முதன்மைப்படுத்தும் கல்விமுறை.

 மு.சிவகுருநாதன் 
      குழந்தைகளின் வயதுக்கேற்ற பாடத்திட்டம், அதற்கேற்ற பாடநூல்கள் வடிவமைக்கப்படுவதுதானே சரியாக இருக்கமுடியும். ஆனால் இங்கு நடப்பது என்ன? பொதுத்தேர்வு நடக்கும் வகுப்பாக இருந்தால் எளிமையான பாடநூல்களும் இல்லையென்றால் கடுமையான பாடங்களும் என்கிற அபத்தமே இங்கு நிலவுகிறது.

      உதாரணமாக சமூக அறிவியல் பாடத்தை எடுத்துக் கொள்வோம். 8,10,12 ஆகிய வகுப்புப் பாடங்கள் எளிமையாக இருக்க, இவற்றை ஒப்பிடும்போது 7,9,11 வகுப்புப் பாடநூற்கள் கடுமையானதாக உள்ளது. எட்டாம் வகுப்பிற்கு தற்போதும் தனித்தேர்வர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு உண்டு என்பதை நினைவிற்கொள்க.

      7,9 வகுப்புப் பாடங்கள் குறிப்பாக, 7 –ம் வகுப்பு வரலாறு, புவியியல், 9 –ம் வகுப்பு அய்ரோப்பிய வரலாறு மாணவர்களை சிரமத்திற்கு உள்ளாக்குபவை. இருந்தால் என்ன? இவர்கள் பொதுத்தேர்வு எழுதப்போகிறார்களா என்ன? 9,11 வகுப்பை படிக்காமல் தாண்டும் உத்தியை இதனால்தான் கண்டுபிடித்தார்களோ என்னவோ!

      பாடத்திட்டம் - பாடநூல் வடிவமைப்போர், அரசு, அலுவலர்கள் ஆகிய தரப்பு இவ்வாறு நினைக்கும்போது ஆசிரியர்கள் மட்டும் என்ன மாற்றியா யோசிக்கப் போகிறார்கள்? அவர்கள் பொதுத்தேர்வு நடக்கும் வகுப்புகளை மட்டும் கவனித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அரசுக்கும் அலுவலர்களுக்கும் 100% தேர்ச்சி கொடுத்தால் போதும் என்பதே நிலை. இத்தகைய அவலங்களும் அபத்தங்களும் என்று ஒழியுமோ?

      பாடநூல் பிழைகளைத் திருத்தும்போது கூடவா இந்தப் பாகுபாட்டைக் கடைபிடிக்கவேண்டும்? 05.02.2015 ஆம் நாளிட்ட ‘தி இந்து’ கட்டுரையின் விளைவாக 10 –ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் உள்ள சில பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. பிற வகுப்பிலுள்ள பிழைகள் பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை. திருத்தப்பட்ட சிலவற்றை மட்டும் கீழே பட்டியலிடுகிறேன்.

   வரலாறு (அடைப்புக்குறிக்குள் திருத்தத்திற்கு முன்பிருந்த வடிவம்)

பக். 31 ஹிட்லர் ஓவியர் (பெயிண்டர்)

பக். 46, 47 பன்னாட்டுப் புனரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி – IBRD (உலகவங்கி, பன்னாட்டு கிராமப்புற வளர்ச்சி வங்கி)

பக். 52 அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பட்டியல்

28 நாடுகள் (27 நாடுகள்) சேர்க்கப்பட்ட நாடுகள்: லாட்வியா, குரேசியா

நீக்கப்பட்டது: ஆப்பிரிக்க நாடான லைபீரியா

பக். 72 அம்பேத்கரின் இயக்கம் பஹிஷ்கிரித் ஹிதகரிணி சபா (Bahiskrit Hitakarani Sabha) (பகிஷ்கிருத்திகாராணி சபா)

பக். 110, 116 ஈ.வே.ராமசாமி (ஈ.வே.ராமசாமி நாயக்கர்)


புவியியல் (அடைப்புக்குறிக்குள் திருத்தத்திற்கு முன்பிருந்த வடிவம்)


பக். 175 அணுமின்சக்தி உற்பத்தியளவு 3% (272 மெகாவாட்)

பக். 201, 202, 206, 212, 213 மின்னணுவியல் (மின்னியல்)

      பத்தாம்வகுப்பைத் தவிர்த்துப் பிற வகுப்புப் பாடநூற்களில் உள்ள பிழைகள் பெரிதாக கணக்கில் கொள்ளப்படுவதில்லை. காரணம் அவர்கள் பொதுத்தேர்வு எழுதப்போவதில்லை என்பதே. இதற்கு நீதிமன்ற வழக்கா வரப்போகிறது என்ற மெத்தனபோக்கும் காரணம்.

      பிழைத்திருத்தம் செய்வதிலும் இவர்களுக்கு உள்ள மனத்தடைகளை உணர முடிகிறது. Fax எனபதை ‘பிரதிகள்’ என்று மொழிபெயர்த்துவிட்டு, அதை ‘தொலைநகல்’ என்று திருத்தம் செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே ‘பிரதி அஞ்சல்’ என்று திருத்துகிறார்கள். அதுவும் ஓரிடத்தில் மட்டுமே. பிறிதோரிடத்தில் ‘பிரதிகள்’ என்றே இருக்கிறது. ‘தொலைநகல்’ என்னும் பழக்கத்தில் உள்ள சொல்லில் என்ன குற்றம் கண்டனரோ?

      பெரும்பான்மையான வழக்கில் உள்ள ஒரு சொல்வழக்கை பாடநூலில் பயன்படுத்த என்ன தடை அல்லது சட்டச்சிக்கல் என்று தெரியவில்லை. எனவேதான் இதை மனத்தடை என்று குறிப்பிடுகிறேன். இப்படித்தான் தொடக்கநிலை வகுப்புகளில் ‘வயது’ என்று சொல்லாமல் ‘அகவை’ என்று சொல்கிறார்கள் அல்லவா!

     ‘வேலூர் புரட்சி’ என்று சொல்வதிலும் இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று விளக்கவேண்டும். இன்னும் ‘வேலூர் கலக’மாகவே இது நீடிக்கிறது. இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

      வினாத்தாள்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெளியிடப்படும் தேர்வுக்கான கட்டகம் மற்றும் கையேடுகளில் இப்பிழைகள் திருத்தப்பட்டதற்கான அறிகுறியே இல்லை.

     இவற்றில் ஈ.வே.ராமசாமி நாயக்கர், மின்னியல் என்றே இன்னமும் இருக்கிறது. வினாத்தாள்களிலும் இந்நிலை தொடர்வது வேதனைக்குரியது. ஆனால் பாடநூலில் ஈ.வே.ராமசாமி, மின்னணுவியல் என்று திருத்தப்பட்டுவிட்டது. இதற்கு என்ன காரணம்? இந்தத் திருத்தங்களை ஆசிரியர்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது?

     ஆசிரியர்களுக்குப் பாடநூல்கள் வழங்கப்படுவதில்லை. கடைகளிலும் பாடநூல்கள் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் திருத்தப்படாத பழைய பாடநூல்களை வைத்தே காலம் தள்ள வேண்டியுள்ளது.

      ஆசிரியர்களுக்குப் பாடநூல் பிரதிகள் அளிப்பதில் என்ன சிக்கல்? மாவட்டந்தோறும் மீந்துபோன பாடநூற்கள் மலைபோல் குவிக்கப்படுள்ளனவே! இவற்றை அடுத்த ஆண்டிற்கோ அல்லது பருவத்திற்கோ பயன்படுத்த முடியாது. மறு சுழற்சிக்குத்தான் பயன்படும். பணம் பெற்றுக்கொண்டாலாவது இதை ஆசிரியர்களுக்கு வழங்க முன்வருமா பள்ளிக்கல்வித்துறை?

      வகுப்பு மற்றும் பாடநூல் வாரியாக எந்தெந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை சுற்றறிக்கை மூலம் சொல்லலாமே! இங்கு இன்னொன்றையும் சொல்லவேண்டியது அவசியம். தேசப்படங்களை உரிய அளவுகளின்றி அச்சிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தேர்வுகளின்போது விதவிதமான அளவுகளில் தேசப்படங்கள் வழங்கப்படுகின்றன. பொதுத்தேர்வுகளில் மட்டுமே சரியாகச் செய்வோம் என்றால் பிறவற்றுக்கு தேர்வுகள் ஏன்?

      முன்பெல்லாம் கல்வி ஆசிரியர் மையமாக இருக்கிறது, அதை குழந்தை மையக் கல்வியாக மாற்றவேண்டும் என்றோம். இப்போது பொதுத்தேர்வுகள் மையக் கல்வியாக மாறிவிட்டது. இந்நிலையை மாற்றாத வரையில் கல்வியில் மறுமலர்ச்சி சாத்தியமில்லை.

செவ்வாய், நவம்பர் 29, 2016

58. ‘மக்கள் நல அரசு’களின் கார்ப்பரேட் சேவை

58. ‘மக்கள் நல அரசு’களின் கார்ப்பரேட் சேவை(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)மு.சிவகுருநாதன்     (நமது சுழலியலாளர் நன்னிலம் நக்கீரன் எழுதிய விகடன் பிரசுர வெளியீடான ‘கார்ப்பரேட் கோடரி – மண் மீதான வன்முறையின் வரலாறு’ என்ற நூல் குறித்த அறிமுகப்பதிவு இது.)
       ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் காலனிய சுரண்டலுக்கு உள்ளானவை. இவை இன்றும் கார்ப்பரேட் என்னும் நவகாலனிய சுரண்டலுக்கு உள்ளாவதை இந்நூல் விளக்கமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த சுரண்டல் வன்முறை வெளிப்படையாக அல்லாது மிக நுணுக்கமாக நாம் அறியாமல் நடக்கும் ஒன்று. இதன் பின்னாலிருக்கும் அரசியலையும் நக்கீரன் வெளிப்படுத்துகிறார்.

      நைட்ரேட் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி நியூயார்க் வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரத்தை தகர்க்க முயன்றால் அது பயங்கரவாத நடவடிக்கை. அதே நைட்ரேட் உரங்களைக் கொண்டு மண்ணையும் மனிதர்களையும் அழித்தொழித்தால் அது கார்ப்பரேட்களின் ‘வளர்ச்சி’ மற்றும் புரட்சிகர செயல். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறதல்லவா? இதைத்தான் நக்கீரன் இந்நூலில் நுணுக்கமாக விவரிக்கிறார்.

      நகரமயமாதலால் மனிதக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாமல் ஆறுகள் சாக்கடைகளாக மாறிய கதை, தழைச்சத்து உரப்பற்றாக்குறை, அதை ஈடுசெய்ய கல்லறை எலும்புகளை வேட்டையாடல், பறவை எச்சங்களை எடுக்க லத்தீன் அமெரிக்கக் குட்டித்தீவுகளைக் கொள்ளையடித்தல், பெரு, பொலிவியா நாடுகளின் நைட்ரேட் வயல்களுக்காக பிரிட்டன் முதலாளிகளுக்காக சிலி நடத்திய பசுபிக் போர் (நைட்ரேட் போர்), இறுதியாக ஃபிரிட்ஸ் ஹாப்பர் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தி நைட்ரேட் தயாரிக்கும் முறையைக் கண்டடையும் வரலாறு இங்கு பேசப்படுகிறது.

     ஃபிரிட்ஸ் ஹாப்பருக்கு நோபல் பரிசு கிடைக்கிறது. இவர் சைக்ளோன் – பி என்கிற நச்சு வாயுவையும் கண்டுபிடிக்கிறார். இதுதான் ஹிட்லரின் வதைமுகாம்களில் யூதர்களைக் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப் பயன்பட்டது. இதன் காரணமாகவே இவரும் இவரது குடும்பமும் அழிந்த கதை வியப்பானது.

       அறிவியல் கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். நமது நாட்டிலும் ‘விஞ்ஞானிகள்’, ‘பொருளாதார நிபுணர்கள்’ என்னும் பெருங்கூட்டம் கார்ப்பரேட்களுக்கும் அவை சார்ந்த அரச நடவடிக்கைகளுக்கும் சேவையாற்றி வருகிறது. இவர்களால் கறிவேப்பிலைகளாக பயன்படுவதை அவர்கள் உணருவதாகத் தெரியவில்லை. இந்திய அணு விஞ்ஞானிகளின் தொடர் மர்ம மரணங்கள் நாமறிந்த ஒன்றுதானே!

       தென் அமெரிக்கக் கண்டம் ஏண்டிஸ் மலைத்தொடர்ப் பகுதியில் (பெரு) தொல்குடி மக்களின் ‘சாக்ரா’ வேளாண்மை, ‘பச்சமாமா’ என்னும் பூமித்தாய், ஆழ்ந்த சூழலியல் (Deep Ecology) ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர்களை வீழ்த்திய நவீன வேளாண் அறிவியல் வன்முறை விளக்கப்படுகிறது. 1500 வகையான ‘கின்வா’ தானியங்களையும், 330 வகையான ‘கேனிவ்வா’ தானியங்களையும், 228 வகையான ‘டார்வி’ பயறு வகைகளையும், 250 வகையான உருளைக்கிழங்கு வகைகளையும் பயிரிட்டு உலகிற்கு அளித்த இவர்களைக் காலி செய்த அமெரிக்காவின் கோடரிதான், இந்திய பாரம்பரிய வேளாண்மையையும் வெட்டியது.

     ‘சாக்ரா’வை அழித்த அமெரிக்கர்கள் தோற்றும் திருந்தாமால் சோயாவைத் திணித்த செயல் இவர்களது வெறித்தனத்தை அம்பலமாக்குகிறது. நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு, மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும் பொருளான சோயாவை ஃபோர்டு நிறுவனம் கார் தொழிற்சாலைக்கானப் பொருளாக மாற்றியது. சோயா எண்ணையிலிருந்து தயாரிக்கப்பட்ட பெயின்ட் மற்றும் மசகை கார்களில் பயன்படுத்தத் தொடங்கினர்.

      கருப்பர்களைக் குரங்காய், கண்டத்தை இருண்ட கண்டமாய் கற்பிதம் செய்த ‘வெள்ளை’ப் புனைவுகளுக்கு மாற்றாக வெள்ளையர்கள் பற்றிய கருப்பர்களின் எண்ணங்கள் எப்படியிருந்திருக்கும்? “புதைகுழியிலிருந்து பாதியில் எழுந்து வந்துவிட்ட தோல் வெளுத்த பிணங்கள்” (ஆவிகள்), ஆவிப்பயம் போனபிறகும் பன்றி வகையாகக் கருதியதும் இங்கு சொல்லப்படுகிறது.

     பன்றி உணவாக அய்ரோப்பியர்கள் கருதிவந்த நிலக்கடலையை புரதச்சத்து மிகுந்த உணவு என்று ஜார்ஜ் வாஷிங்டன் கார்வார் சொன்னபிறகு, நிலக்கடலைச் சாகுபடிக்கு பிரிட்டனின் தட்பவெப்பநிலை ஒத்துவராததால், ராணுவ டாங்குகள் புல்டோசர்களாக மாற்றப்பட்டு தான்சானிய விளைநிலங்கள் பாழாக்கப்பட்ட வரலாற்றை விளக்குகிறார்.

     கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே மயன் நாகரிகச் சடங்குகளில் கோக்கோ பானங்கள் முதன்மை இடம் பிடித்தன. நிகரகுவா நாட்டிலிருந்து கோக்கோவை கொலம்பஸ் அய்ரோப்பாவிற்கு கொண்டு சென்றான்.

     மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கானா, ஐவரிகோஸ்ட் ஆகியன கோக்கோ உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றின் பொருளாதாரம் மேம்பட்டிருக்க வேண்டாமா? விடுவார்களா கார்ப்பரேட்கள்! குழந்தைக்கடத்தல், விற்பனை, கொத்தடிமை ஆகியன இங்கு ‘கார்ப்பரேட் அற’மாக உள்ளதையும் இவற்றைப் பயிரிடுவதன் மூலம் உலகில் பழமையான மழைக்காடுகள் அழிக்கப்பட்டன என்றும் சொல்கிறார்.

      மனித இனம் முதன்முதலில் தோன்றிய எத்தியோப்பியாவில்தான் காப்பியும் தோன்றி உலகம் முழுக்க பரவியிருக்கிறது. காப்பி கண்டுபிடிக்கப்பட்ட விதம் சுவையாக விளக்கப்படுகிறது. தூக்கத்தை விரட்டும் இந்த விழிப்புப் பானத்தை தங்களது ‘இரவு வழிபாட்டுக்கான கண் விழிப்பு’க்கு அவசியம் என்பதால் பாபா புதான் என்னும் சூஃபி குடகு மலைக்குக் கொண்டுவந்தார். (பக். 56)

      எத்தியோப்பிய மக்கள் தன் மண்ணுக்காகப் போராடி வென்றதையும் இந்தியா பாசுமதி, மஞ்சள் ஆகியவற்றின் அறிவுசார் சொத்துரிமைக்காக எதும் செய்யாமல் வேடிக்கைப் பார்த்ததும் வந்தனா சிவா, நம்மாழ்வார் போன்ற தனிநபர்கள் முன்முயற்சி எடுத்ததும் இங்கு பதிவாகிறது.

      வெள்ளைத்தங்கம் என்று சொல்லப்பட்டாலும் பலகோடி மக்களின் குருதியில் வளர்க்கப்பட்டதால் பருத்தியின் உண்மையான நிறம் சிவப்பு என்றே சொல்லவேண்டும் என்கிறார் நக்கீரன். உண்மைதான். பாரம்பரிய பருத்தி தரமற்றது என்று பி.டி. ரக வீரியரக பருத்தி வகைகள் இன்று விவசாயிகளின் உயிரைக் குடிப்பது நாமறிந்ததுதானே.

      ஏரல் கடலுக்கு நீர் அளிக்கும் அமுர் தாரியா, சிர் தாரியா என்ற இரு ஆறுகள் நீர்வரத்து நின்றதால் இன்று வறண்டுபோய் உப்புப் பாலைவனமாக (அரால்கம்) மாறியுள்ளது.

      சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்தோனேசியாவின் காட்டுத்தீயால் பாதிப்பு உண்டாகும்போது அந்நாட்டுக்கு எவ்வளவு பாதிப்புண்டாகும்? மழைக்காட்டை அழித்து செம்பனை விவசாயம் செய்யப்படுகிறது. தொல்குடிகளிடம் ‘காட்டெரிப்பு வேளாண்மை’ உண்டு. ஆனால் மர்மமாக உண்டாகும் காட்டுத்தீ கார்ப்பரேட்டுகளால் உண்டாக்கப்பட்டு அங்கு தோட்டங்கள் உருவாகின்றன.

      போர்னியோ காட்டிலுள்ள ஒராங்ஊத்தான் (Orangutan) மனிதக்குரங்குகள் உள்ளிட்ட பல விலங்குகள் அழிவுக்குச் சென்றுவிட்டன. காட்டை அழித்து தயாரிக்கப்படும் பாமாயில் கொழுப்பு அதிகமானது என்பதால், சோப்பு, ஷாம்பு, சலவைத்தூள், பற்பசை, லிப்ஸ்டிக், லேஸ், குர்குரே போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தும் நாம் கொஞ்சம் சிந்திப்போமா?

.     உணவு உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கும்போது ஏன் பஞ்சம், பட்டினி ஏற்படவேண்டும்? மரபணுமாற்றம் செய்யப்பட்ட சோளம் மூலம் எத்தனால் தயாரிப்பில் கார்ப்பரேட்கள் ஈடுபடுகிறார்கள். பங்குச்சந்தை முதலீட்டாளர் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் -க்கு பிரேசிலில் எத்தனால் ஆலையும் நாமறிந்த பில்கேட்ஸ் -க்கு அமெரிக்காவில் ஆலையும் உள்ளது. மேலும் இந்நூல் சொல்லும் 1 லிட்டர் எத்தனால் தயாரிப்பிற்கு 17,000 லிட்டர் நீர் (மறைநீர்) தேவை என்பது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்! ஆனால் உண்மை அதுதான்.

      கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்க சோளம், கரும்பு, கோதுமை, கிழங்குகள், நெல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உத்திகள் மூலம் மறுசுழற்சி செய்யப்படும் ‘உயிரி பிளாஸ்டிக்’ என விளம்பரம் செய்யப்படுகிறது. இவற்றிற்கான மறைநீர் கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதும் சொல்லப்படுகிறது.

      Degradable, Bio- Degradable ஆகியற்றிற்கு வேறுபாடு உண்டு என்று சொல்லும் நூலாசிரியர், Oxy Degradable – மட்கும் பிளாஸ்டிக் என்பதெல்லாம் பம்மாத்து என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இதில் 1:1 என்ற அளவில் பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் பாலி புரோபலைனும் கலக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் நமக்குக் கிடைக்கிறது.

        எத்தியோப்பியாவில் உழவர்கள் அவர்களது பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவ்விடங்கள் கார்ப்பரேட்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. அம்மக்களை எவ்வித வசதியுமற்ற இடங்களின் குடியமர்த்துவது ‘கிராமமயமாக்கல்’ என்ற அழைக்கப்படும் அபத்தம் பாருங்கள்! மோடி கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் இதன் வேறு வடிவமே என்பது விளக்கப்படுகிறது.

       கார்ப்பரேட்களை எதிர்கொள்ள சூழலியல், அரசியல் அறிவு தேவையென வலியுறுத்தப்படுகிறது. குடகு மலையைச் சீரழித்துத் தேயிலையும், சோலைக்காடுகளை அழித்துத் தைலமரங்களையும் நட்டபோது காவிரிப்படுகை விவசாயிகள் கவலப்படவில்லை. அதன் விளைவு இன்று காவிரியில் தண்ணீர் இல்லை என்ற நிதர்சனம் இந்நூல் மூலம் புரிகிறது. தொழிற்சாலைகள், இறால் பண்ணைகள் ஆகியவற்றினால் கடல்நீர் உட்புகுந்து நன்னீர்க்குள் ஊடுருவும் அபாயமும் நடக்கிறது.

      மன்னர்களும் சர்வாதிகாரிகளும் இந்தக் கார்ப்பரேட்களிடம் கொண்டுள்ள உறவு புரிந்துகொள்ளக் கூடியது. மக்களாட்சி என்று சொல்லிக்கொண்டு இவர்களுடன் இந்தியா போன்ற நாடுகள் கார்ப்பரேட்களுக்கு சேவை செய்வது நாட்டையும் மக்களையும் படுகுழியில் தள்ளும். உலகமயத்தில் மக்களாட்சியும் பொருளிழந்துவிட்டது. உலக வர்த்தக நிறுவனம் தனது இணையதளத்தில் ‘நல்ல ஆட்சியயை ஊக்குவித்தல்’ என்பதை ஒரு நோக்கமாக வரையறுப்பதை, தனக்குச் சாதகமான ஆட்சியைக் கொண்டுவருதல் என்பதாகப் புரிந்துகொள்வதில் ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்ல.


கார்ப்பரேட் கோடரி – மண் மீதான வன்முறையின் வரலாறு

சுழலியலாளர் நக்கீரன்

முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2016

பக்கம்: 96

விலை: ரூ. 100வெளியீடு:

விகடன் பிரசுரம்: 962,

757, அண்ணா சாலை,

சென்னை – 600002.பேச: 044 42634283 / 84

மின்னஞ்சல்: books@vikatan.com

ஞாயிறு, நவம்பர் 27, 2016

57. தமிழவனின் படிம நாவல் முஸல்பனி

57. தமிழவனின் படிம நாவல் முஸல்பனி(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்)மு.சிவகுருநாதன்(அடையாளம் வெளியீடாக டிசம்பர் 2014 –ல் வெளியான, தமிழவனின் நாவல் ‘முஸல்பனி’ பற்றிய பதிவு இது.)
பகுதி: ஒன்று

தமிழவன் என்னும் கோட்பாட்டாளர்


    முனைவர் எஸ்.கார்லோஸ் என்கிற தமிழவன் பெங்களூரு பல்கலைக்கழகம், போலந்து வார்சா பல்கலைக் கழகம், குப்பம் திராவிடப் பல்கலைகழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றியதால் என்னவோ வழமையான தமிழ்ப்புலச் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவர்.

    அமைப்பியல்வாதம் (Structuralism) குறித்த அறிமுக நூலொன்றை ((ஸ்ட்ரக்சுரலியம் – பாரிவேள் பதிப்பகம், 1982) வெளியிட்டு தமிழ்ச்சூழலில் பெரும் விவாதங்களுக்கு வழி ஏற்படுத்தினார். அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும் (காவ்யா வெளியீடு, 1991), தமிழும் குறியியலும் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1992), தமிழ்க்கவிதையும் மொழிதல் கோட்பாடும் (காவ்யா வெளியீடு, டிசம்பர் 1992), படைப்பும் படைப்பாளியும் (காவ்யா வெளியீடு), இருபதில் நவீனத் தமிழ் விமர்சனங்கள் (காவ்யா வெளியீடு, டிசம்பர் 2000) ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நூற்கள்.
    “இன்றைய தமிழாய்வு ஒருவிதத்தில் தேங்கியுள்ளது என்று கூறலாம். தமிழ்ச் சிறுபத்தரிகை இயக்கத்தினர் இருத்தலியல்வாதம் (Existentialism) பற்றியும், அமைப்பியல்வாதம் (Structuralism) பற்றியும் நூல்கள் எழுதிய பின் பல்வேறு சர்ச்சைகள் தமிழகத்தில் நடக்கின்றன. அந்த விவாதங்கள் தமிழ்க்கல்வி நிறுவனங்களை வந்தடைந்தால் தமிழாய்வைப் புதுத்திசையில் கொண்டு செல்லமுடியும்”, (தமிழும் குறியியலும் என்னுரையில்.) என்று தமிழவன் குறிப்பிடுகிறார்.

   இலக்கியவியல், தமிழ்க்கல்வியியல், மார்க்சீயவியல் ஆகிய திறனாய்வுப் போக்குகளின் இடைவெளிகளை அமைப்பியல் திறனாய்வின் மூலம் நிரப்பப் படமுடியும் என்றும் அதற்கு அமைப்பியலுடன் குறியியலும் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும் என்று இவர் கருதுகிறார். ஃபெர்டினணான்ட் டி சசூரின் மொழியியல் (Linguistics) மற்றும் குறியியல் (Semiology or Semiotics) கருத்துகள் உதவும் என்று தமிழவன் விளக்குகிறார்.

    படைப்பை ‘பிரதி’ யாக அணுகுதல், ‘ஆசிரியன்’ இறந்து போனான் போன்ற சிந்தனைகளை அமைப்பியல் முன்மொழிந்தது. மையமழிதல் (Deconstruction) என்கிற ழாக் தெரிதாவின் சிந்தனைகள் பின் அமைப்பியல் (Post Structuralism) என்று வழங்கப்படுகிறது.

 

    “என் கருத்துப்படி ஐந்திணைக் கோட்பாடு உலகளாவிய மானுடவியல் பாகுபாட்டு முறைகளோடு (Classification among Tribes) ஒப்பிடப்பட்டுப் புது உருவம் பெற்றால் இன்றைய அமைப்பியல் தரவுகளுடன் இணைக்கப்படமுடியும். உதாரணமாக, குறிஞ்சி என்பதை ஒருவித குறி என்று எடுத்துக்கொண்டு முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பனவற்றை அதன் துணைக்குறிகளாகக் கொண்டு இன்றைய அமைப்பியல் போல் ஐந்திணைக் கோட்பாடு, இன்றைய இலக்கியத் திறனாய்வுக்குச் சமைத்தெடுக்க முடியும். பிறர் மத்தியில்கூட தமிழர்கள் கொடையாக இத்தகைய ஐந்திணைக் கோட்பாட்டைக் கொண்டு செல்லமுடியும்” , (பக். 92, அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும்) என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்.


     தமிழ்க்கவிதைகளை நான் X நீ என்ற எதிர்வுகள் அடிப்படையில் அணுகியும், மேலும் ஆத்மநாம், விக்ரமாதித்யன் கவிதைகளை புதிய வெளிச்சத்திலும் அணுகினார். திருப்பாவையை அமைப்பியல் அடிப்படையில் ஆராய்ந்து ஒரு கட்டுரையும் எழுதினார்.

    பல்வேறு சமயங்களில் எழுதப்பட்ட 32 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘இருபதில் நவீனத் தமிழ் விமர்சனங்கள்’ என்ற நூல் வெளியானது. “’நான்’ எப்போதும் – கூட்டங்களிலும் வகுப்பிலும், படைகளிலும் கடைசியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதில் சந்தோஷம் காண்பவன்”, என்று பதிவு செய்கிறார். (மேலே குறிப்பிட்ட நூல்) இதைப்போலவே இவரது படைப்புகளும் தமிழ்ச்சூழலில் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

 

    படிகள், மேலும், வித்யாசம் ஆகிய சிறுபத்தரிக்கைகளில் பங்கேற்று நிறைய கோட்பாடு அலசல்களைத் தமிழுக்குத் தந்தவர். தற்போது வெளியாகும் ‘சிற்றேடு’ இதழிலும் எழுதி வருகிறார். குமுதம் தீராநதியில் தொடர்ந்து பத்தி (வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்) எழுதிவருகிறார். இதன் முதல் தொகுதி நூலாக்கம் பெற்றுள்ளது. இவரது முன்னய எழுத்திற்கும் தற்போதைய எழுத்திற்கும் ‘வித்யாசம்’ இருப்பது உண்மையே. இணையக் கட்டுரைகளின் தொகுப்பு “தமிழுணர்வின் வரைபடம்; என்றானது.

பகுதி: இரண்டு

தமிழவன் என்னும் கதை சொல்லி


    கோட்பாட்டு ரீதியாகவும் லத்தீன் அமெரிக்கா போன்ற பிற மொழி எழுத்துக்களின் வாசிப்பனுபவத்தின் வாயிலாகவும் புது வகை எழுத்து முயற்சிகளில் சளைக்காது ஈடுபட்டு வருகிறார். குறிப்பிடத் தகுந்த நாவல்களையும் பல சிறுகதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது கதை சொல்லும் முறை எளிமை, பூடகம், படிமம் ஆகிய பல கூறுகளால் இணைந்தது.

 • ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
 • சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
 • ஜி.கே. எழுதிய மர்ம நாவல்
 • வார்ஸாவில் ஒரு கடவுள்
 • முஸல்பனி

ஆகிய நாவல்களும்

 • தமிழவன் கதைகள்
 • இரட்டைச் சொற்கள்
 • நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்

ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் இதுவரை வெளியாகியுள்ளன.

    ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ‘One Hundred Years of Solitude’ பாதிப்பில் எழுதப்பட்டது சிலாகிக்கப்பட்டது. ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே, ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றோரின் பாதிப்புகள் எந்த ஒரு படைப்பாளிக்கும் இருப்பது இயல்புதான். அவற்றை தமிழ்ச்சூழலுடன் இணைப்பது தமிழவனின் புதுவகை எழுத்தைச் செழுமைப்படுத்தியுள்ளது.    1993 –ல் வெளியான ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ நீண்ட நாள்களுக்குப் பிறகு மறுபதிப்பு கண்டுள்ளது. இந்நாவல் போஸ்ட் மாடர்னிச / பாலிம்ஸெஸ்ட் சரித்திரம் என்ற வகைப்படித்தி வெளியானது. ‘தெகிமொலா’ என்ற கற்பனை தேசத்தின் ஊடாக சொல்லின் பொருள், காலத்தை வென்றவள், அம்மிக்குழவி, எறும்பு ராணிகள், பச்சை ராஜன், மலை மீது ஒளி, ஒற்றைக்கண்ணன் போன்ற குறியீட்டுக் கதை மாந்தர்கள் வழியே நாம் காணும் தமிழக அரசியலை புது மொழியில் எழுதினார்.

    ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவலும்’ மர்ம நாவல் பாணியை புது வகை எழுத்தில் கொண்டுவந்தது. வார்சா அனுபவம் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலில் பதிவானது. இந்த நாவல்கள் அதனதன் அளவில் குறிப்பிடத் தகுந்தவை.

   இவரது சிறுகதைகள் நம்மை வெறொரு உலகிற்கு அழைத்துச் செல்பவை. வாசிப்பில் சுவாரசியம் தரக்கூடியவை இவை. சிறுகதைக்கென்று தனித்த பாணியைப் பின்பற்றி எழுகிறார். நாவலில் வெளிப்படும் பன்முகப்பார்வைகள் சிறுகதைகளிலும் விரிகின்றன.

பகுதி: மூன்று

படிம நாவல் முஸல்பனி


     புதுவகை எழுத்தின் சிறப்பு என்னவெனில் யதார்த்தத்தின் போதாமைகளை இட்டு நிரப்பப் படுவதுதான். ‘சரித்திரத்தில் படிந்த நிழல்களை’ப் போலவே ‘முஸல்பனி’யும் ‘தெகிமொலா’வின் சரித்திரத்தைப் பேசுகிறது. இவ்விரு நாவல்களையும் இணைத்து வாசிக்கவும் முடியும். ‘முஸல்பனி’யின் 25 அத்தியாயங்களும் கதை சொல்லலும் நேர்கோட்டுப் பாணியில் அமைவதில்லை. எனவே நமது வசதிக்கேற்பே எங்கு தொடங்கி வேண்டுமானாலும் வாசிக்கலாம் “பின்பக்கத்திலிருந்து வாசிக்கப்படும் தெகிமொலா சரித்திரம்” போல.

     அத்திரிக்கப்பா முதலாவது தெகிமொலா அரசன். 3333 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவன். இவன் ஒரு வடிவமா, நிகழ்வா, தனிநபரா, ஒலியா, இசையா என்ற குழப்பம் உண்டு. அத்திரிக்கப்பாவுக்கு எட்டுத்திசைகள் இருப்பினும் பெயர்கள் கிடையாது. அத்திரிக்கப்பா 10 அறைகளில் ஒரே நேரத்தில் வசிப்பவன். அவன் ஒரு அறையில் தூங்கும்போது ஆவி 9 அறைகளில் தூங்கும். 7 பார்பர்கள் வரவழைக்கப்பட்டு முகச்சவரம் செய்யும் வரையில் நிஜ முகம் யாருக்கும் தெரியாது. இவனது முன்னோர்கள் 105 பேரில் பலர் பார்பர்களால் திட்டமிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது கதைப்பாடல் மூலம் தெரியவருகிறது. கொன்றனும் கொலை செய்யப்பட்டனும் அத்தரிக்கப்பா.

      இலக்கணம் ஒன்று போல் இன்னொன்று எழுதப்படும். ஆனால் இரண்டும் வேறானவை. பின்பக்கத்திலிருந்து வாசிக்கப்படுவது தெகிமொலா சரித்திரம். ஊர் முழுதும் குள்ளமான சிலைகள். 113 அடி ஞானவான் சிலை மட்டும் பெரிது. சூத்திரங்கள் ‘என்ப’ என்னும் பழைய சொல்லை எண்ணிடங்கா அர்த்தத்தில் பயன்படுத்தின. இந்த சூத்தரத்தை வாசிக்கும் தருணங்களில் இமை திறந்து கண்களால் பார்த்தன. சில சூத்திரங்களுக்கு இமையுடன் மீசையும் முளைத்தன. புணர்ச்சியின் இலக்கணம் கூறியபோது எழுத்துகள் வியர்த்தன. இறுதியாக எழுத்திலிருந்து உயிர்கள் பிறந்தன.

     அத்திரிக்கப்பாவின் மகள் முஸல்பனி. இரண்டு கால்களும் சம அளவு கொண்டவளல்ல. இவள் அத்திரிக்கப்பாவுக்கு 3300 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த அருமை மகள். அவளுக்கு 15 காதலர்கள். அவள் தனது ஆடையில் அவர்களின் ஓவியங்களைத் தீட்டச் சொல்கிறாள். அவள் மூன்று பாகமாக வாழ்கிறாள். மேலும் இவள் கார்க்கோடன் என்று ஆண்பெயரிலும் முஸல்பனி என்ற பெண் பெயரிலும் ஆட்சி செய்தவள். எனவே எதிரிகளால் இவளைக் கொல்லமுடியவில்லை. மீனவன், வெள்ளி முளைத்தவன் ஆகியோர் இவளது காதலர்கள். இவளை வெள்ளி முளைத்தவன் திருமணம் செய்துகொண்டு, மந்திர தந்திர மாயவித்தைகள் பலசெய்து நூலேணியில் நாண்டுகொண்டு செத்தவன் என கதை முடிவடைகிறது.

    இக்கதையின் ஊடாக பல்வேறு கிளைக்கதைகளையும் வந்து போகின்றன. இவற்றில் தொடர்பு இருக்கவும் இல்லாமலும் இருப்பதை கதை சொல்லி முன்னுரையில் சுட்டுகிறார். போர்ஹே, ஜாய்ஸ், கால்வினோ போன்றோரின் கதைகளைப் போல தமிழில் உருவாக்க வேண்டிய தேவை வலியுறுத்தப்படுகிறது.

    “ஏற்கனவே படித்ததை வைத்து மதிப்பிடும் அராஜகத்தைச் செய்யாதீர்கள். மீண்டும் மீண்டும் படியுங்கள். சில தொனிகள், சித்திரங்கள், மனத்தில் எழும் கற்பனைகளை அனுபவம் ஆக்குங்கள். இது நெட்வொர்க்கின் தன்மை மட்டுமே கொண்டது .இது கணினி யுகம்”, என்று தமிழவன் முன்னுரையில் சொல்வதைக் கேட்கலாம்.

    இந்த புதுவகை எழுத்தில் தேடல் மிக்கவர்கள் நிறைய கண்டடைய முடியும் என்று மட்டும் இப்போது சொல்லிவைப்போம்.முஸல்பனி – நாவல்

தமிழவன்

முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2012

பக்கம்: 102

விலை: ரூ. 65வெளியீடு:

அடையாளம்,

1205/1, கருப்பூர் சாலை,

புத்தாநத்தம் – 621310,

திருச்சிராப்பள்ளி – மாவட்டம்.பேச: 04332 273444

மின்னஞ்சல்: info@adaiyaalam.net

சனி, நவம்பர் 26, 2016

ஃபிடலுக்கு செவ்வணக்கம்!

ஃபிடலுக்கு செவ்வணக்கம்!   

   மு.சிவகுருநாதன்          கியூபப் புரட்சியாளர், போராளி ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90 வது வயதில் 25.11.2016 வெள்ளி இரவு மரணமடைந்தார். அவர் பிறந்த நாள்: 13.08.1926. மறைந்த கம்யூனிசப் போராளிக்கு செவ்வணக்கங்கள்… அவருக்கு அஞ்சலியாக…ஃபிடலிற்கு ஒரு பாடல்

- எர்னஸ்டோ சே குவேரா
பிடல்,

சூரியன் உதித்தே தீருமென்று

சொன்னீர்களே!

நாம் திரும்பிச் சென்று விடலாம்.

வரைபடங்களால் புரிந்துகொள்ள முடியாத

பாதைகளைத் தாண்டி

நீங்கள் விரும்புகிற அந்த பச்சை முதலையை

விடுதலை செய்ய

நாம் முன்னேறலாம்.இருண்ட

புரட்சிக்காரர்களான நட்சத்திரங்கள்

எரிகிற விழிகளால்

எல்லா அவமானங்களையும்

துடைத்தெறிந்துவிட்டு

நாம் ஒன்று வெற்றி பெறுவோம்

அல்லது,

மரணத்தை வெல்வோம்.முதல்வெடி முழக்கத்திலேயே

காடு முழுக்க புது எழுச்சியின் சுடர்கள் படரும்

அந்த நிமிடம், உங்கள் அணியில்

அமைதியாக நாங்கள் இருப்போம்.உங்களது சத்தம் நான்கு தீவிர வாதங்களாக

விவசாயப் புரட்சிக்காகவும்

நீதிக்காகவும்

அப்பத்திற்காகவும்

சுதந்திரத்திற்காகவும்

பலமாக அடிக்கும்போது

ஒரே சுரத்தில் அடிபிறழாமல்

நாங்கள் உங்களோடிருப்போம்.இறுதியில்

பகலின் முடிவில்

அம் மகா வன்முறையாளனுக்கு

எதிரான உமது படை

வெற்றிக் கொடியை நாட்டும்போது

இறுதிப் போருக்குத் தயாராக

நாங்கள் உங்களோடிருப்போம்.கியூபாவின் கூரம்பு

ஆழப்பதித்த காயத்தை

நக்கித் துடைத்து

அக் கொடுஞ் சிறுத்தை அடங்கும்போது

அலையடிக்கிற இதயத்துடன்

நாங்கள் உங்களோடிருப்போம்.பிடல்,

பேராசைச் சிரிப்புடன்

துள்ளி நடக்கிற அந்தப்

புள்ளித்தோல் கொண்ட தெள்ளுப்

பூச்சிகளுக்கு

ஊற்றிக் கொடுப்பதற்கானதல்ல எங்கள்

ஆவேசம்…

எங்களுக்கு வேண்டியது அவர்களது

துப்பாக்கிகளும் தோட்டாக்களும் தான்.

அது மட்டும் தான்.முடிவில்,

நாங்கள் எங்களது வழியை

எதிர்த்து நிற்கிற

இரும்பு ஈட்டிகளில்

மாட்டவேண்டி வந்தால்

எங்களுக்கு வேண்டியது ஒன்றுதான்.அமெரிக்க வரலாற்றுக்கான

பயணத்தின் நடுவே

தகர்ந்துபோன

எங்களது

கொரில்லா எலும்புகளுக்கு

போர்த்த வேண்டி

கியூபாவின் கண்ணீரால் நெய்த

ஒரே ஒரு கம்பளம்.தமிழாக்கம்: உமர்

(செகுவேராவின் கடிதங்கள், புலம் வெளியீடு: டிசம்பர் 2011, விலை: ரூ. 40)

நன்றி:

உமர்,

புலம்.


ஒரு பின் குறிப்பு:

            அர்ஜென்டீனாவில் பிறந்து கியூபாவின் மகனாக மாறிய எர்ன்ஸ்டோ சே குவேரா பொலிவியா வில் அமெரிக்கப்படைகளால் கொன்று புதைக்கப்பட்டார். அவரது எலும்புக்கூடு சான்டா கிளாரா நினைவிடத்தில் 17.10.1997 –ல் முழு அரசு மரியாதைகளுடன் புதைக்கப்பட்டது.

எங்கும் பாசிசமயம்!

எங்கும் பாசிசமயம்!

மு.சிவகுருநாதன்

       பாசிஸ்ட்களின் கூச்சல்கள் நாஜிகளின் வெறித்தனத்திற்கு ஈடாக உள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவாக இவர்கள் சொல்லும் அபத்தங்களுக்கு அளவில்லை.

     எஸ்.பி.அய். வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா எளிய மக்களை இழிவு செய்யும் கருத்தொன்றை திமிருடன் வெளிப்படுத்தியுள்ளார்.

     100 ரூபாய் நோட்டுக்களை யாரும் செலவு செய்யாமல் பத்திரப்படுத்துவதால் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படுகிறதாம்!

      பார்த்தீர்களா! மோடியின் ஆட்சியில் எல்லாரும் மோடியைப் போல் சில்லறைத் தனமாகவே பேசுவார்கள் போலும்!

     எளிய மக்கள், பெண்கள் படும் இன்னல்களை அருந்ததி போன்ற உயர்த்தப்பட்ட வர்க்கத்தினர் எப்படிப் புரிந்து கொள்வார்கள் அல்லது புரிந்து கொள்ளமுடியும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

      1000 ரூபாய் நோட்டுக்கு 2000 ரூபாய் நோட்டு மாற்றல்ல என்பதை அருந்ததிக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலாம்.

     15 நாட்கள் ஆனபிறகும் 500 நோட்டை விநியோகிக்க வக்கற்ற அரசு எளிய மக்கள் மீது பழி போடும் ஈனத்தனத்தை முதலில் விட்டொழிக்கட்டும்.
500 ரூபாய் நோட்டுக்களை எதோ கருமாதி பத்தரிக்கைப் போல அவசரகதியில் அச்சடித்து குழப்பத்தை ஏற்படுத்துவது, விநியோகிக்க மறுப்பது போன்ற அநியாயங்களை நிறுத்திவிட்டு அப்புறம் எங்கள் மீது குறை சொல்லுங்கள்.

     இந்த பாசிச உலகில் நேற்று (24.11.2016) ஒருவர் ஆறுதல் அளித்திருக்கிறார்.அவர் மன்மோகன் சிங். மாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட சூறையாடல்; சட்டப்பூர்வமாக்கப்பட்ட கொள்ளை எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

      மன்மோகன் சிங் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதிலும் இந்த நிலைப்பாடு நேர்மையானது.

    மக்கள் தங்கள் பணத்தைச் சொந்தக் கணக்கில் செலுத்திவிட்டுத் திரும்பப் பெற முடியாத சூழல் வேறு எந்த நாட்டிலும் உண்டா? இது ஒன்றே இதைக் கண்டிக்கப் போதுமானது என்கிறார்.

     நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என்ற கோட்பாட்டை சொல்பவர்களுக்கு காலப்போக்கில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

      மொத்த உள்நாட்டு உற்பத்தி 2% குறையும் என்றும் இந்தக் குளறுபடிக்குக் காரணமான ரிசர்வ் வங்கி மீது வைக்கும் விமர்சனம் நியாயமே என்றும் பேசியுள்ளார்.

     50 நாட்கள் அவகாசம் ஏழை, எளிய மக்களின் வாழ்வில் மிக மோசமான அவலத்தை உண்டாக்கிவிடும் என்ற உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
அமைச்சரின் அதிகார வரம்பை மீறி அறிவிப்பு செய்த மோடி, இன்று மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல மறுப்பது ஏன்?

    இப்போது மட்டும் பதிலளிக்க நிதியமைச்சர், நிதித்துறைச் செயலரை நாடுவது ஏன்?

      உலகில் பாசிசம் நீண்ட காலம் வென்றதில்லை. எவ்வளவு காலம் இந்தப் பாசிசத்தைப் பொறுத்திருப்போம்?

     கார்ப்பரேட் களுக்கும், பணக்காரர்களுக்குமான அரசு ஜனநாயக அரசாக எப்படி விளங்க முடியும்?

புதன், நவம்பர் 23, 2016

56. காட்சியூடக அடிமைகளா குழந்தைகள்?


56. காட்சியூடக அடிமைகளா குழந்தைகள்?மு.சிவகுருநாதன்(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)(புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள ‘ஆயிஷா’ இரா. நடராசனின் புனைவு ‘டோரா வரை… கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு’ என்ற சிறார் நூல் குறித்த பதிவு.)


       முந்தைய தலைமுறைகளில் காமிக்ஸ், சித்திரக்கதைகள் பிடித்திருந்த இடத்தை இன்று கார்ட்டூன்கள் ஆக்ரமித்துள்ளன. ஒரு வித்தியாசம் என்னவென்றால் அச்சு வடிவிலான அவை குறிப்பிட்ட சிறு பகுதியினரை மட்டும் சென்றடைந்தது. ஆனால் இன்று அடிப்படை வசதிகளற்ற எளிய குக்கிராமத்தையும் பெப்சி, கோக்கைப் போல தொலைக்காட்சி மூலம் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் சென்றடைந்துள்ளனர். ‘சக்திமான்’ படுகொலைகள் சிறு கிராமங்களிலும் நடந்ததே இதை நமக்கு உணர்த்தும். (இதைத் ‘தற்கொலை’ என்று சொல்வதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்!)        இதனுடைய வீச்சு முன்பைவிட அதிகமானது. வாசிப்பு கொஞ்சம் விவரமறிந்த குழந்தைகளுக்கானதாக இருந்தது. ஆனால் இன்று எழுதப்படிக்கத் தெரியாத சிறு குழந்தையும் தொலைக்காட்சியைக் கண்டுகளிக்க எந்தத் தடையுமில்லை. எனவே குழந்தைகள் காட்சியூடக அடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.      கீழ்க்கண்ட 25 கார்ட்டூன் நாயகர்களை குழந்தைகள் நேர்காணல் செய்வதாக இந்நூல் புனையப்பட்டுள்ளது.
 1. பென் டெனிசன்
 2. பப்பாய்
 3. ஸ்பைடர் மேன்
 4. டாம் & ஜெர்ரி
 5. ரிச்சி – ரிச்
 6. ஸ்கூபி டூ
 7. சோட்டா பீம்
 8. ஆஸ்டிரிக்ஸ் அண்டு ஆப்லிக்ஸ்
 9. ஹெய்டி
 10. டின் டின்
 11. பவர் பஃப் கேர்ல்ஸ்
 12. டெனிஸ்
 13. காட்ஸிலா
 14. பிலின்ஸ்டோன்
 15. கிருஷ்ணா அண்டு பலராம்
 16. ஹீ – மேன்
 17. பார்பி
 18. மிக்கி மவுஸ்
 19. லூனிட்டூன்
 20. சூப்பர் மேன்
 21. தி சிம்சன்ஸ்
 22. போக்கி மான்
 23. பேட் மேன்
 24. ஆஸ்வால்டு
 25. டோரா         ஆகிய கார்ட்டூன் நாயகர்களுடன் குழந்தைகள் நடத்தும் நேர்காணல் புனைவே இந்நூல். அந்தக் கதாபாத்திரங்களின் உருவாக்கம், இயக்குநர், உருவான பின்னணி போன்றவை இந்த கற்பனை நேர்காணல்கள் மூலம் விளக்கப்படுகின்றன. 1928 –ல் வால்ட் டிஸ்னியும் அவரது மனைவி லில்லியனும் ரயிலில் வரும்போது கூத்தடித்த எலியின் கற்பனை உருவாக்கமே மிக்கி என்பது சொல்லப்படுகிறது (பக். 70).

“பாதகம் செய்பவரைக் கண்டாம் நாம் பயம்

கொள்ளல் ஆகாது பாப்பா

மோதி மிதித்து விடு பாப்பா – அவர் முகத்தில்

உமிழ்ந்துவிடு பாப்பா “, என்று பாரதியார் பாடியதைத்தான் நீங்கள் மின் வைக்கிறீர்கள். உங்கள் வெற்றி தொடரட்டும்”, (பக். 32) என்று சோட்டாபீமை வாழ்த்துவதாக உள்ளது.

        பாதகம் என்பதற்கு பீமின் அளவுகோல்கள் என்ன? டோராவில் வரும் குள்ளநரி மட்டும் ஏன் திருடுகிறது? 1974 –ல் நமது நாட்டில் அறிமுகமான கார்ட்டூன் உலகம் ஏன் புராணக் குப்பைக்குள் சிக்கிக் கொண்டது? இவை இல்லாமல் குழந்தைகளின் மாயஉலகைக் கட்டமைக்க முடியாதா என்ன? என்பது போன்ற கேள்விகள் வெறும் கேள்விகள் அல்ல. இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய கரிசனமே நம்முன் நிற்கிறது.

      ஆனால் இந்த கற்பனை உலகம் குழந்தைகளின் உலகிலும் அவர்களுடைய அக உலகிலும் ஏற்படுத்தும் பாதிப்புகளை சிறிதுகூட கோடிட்டுக் காட்டவில்லையே என்ற வருத்தமே மிஞ்சுகிறது. இவற்றை அணுகும் முறை குறித்தப் புரிதல்கள் நம்மிடம் இருகிறதா? குழந்தைகளை அதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவா? என்று வினா எழுப்பினால் என்ன விடை கிடைக்கும்?

      தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள் மூலம் கட்டமைக்கப்படும் உலகை , பியர் பூர்தியு வெளிப்படும் முறையைப் பாருங்கள். இதுவே இப்படியென்றால் கார்ட்டூன், புராணங்கள் எவ்வளவு பாதிப்பைத் தரும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!       “தொலைக்காட்சியை அன்றாடம் பார்ப்பதில் பொதிந்து கிடக்கும் அரசியல் ரீதியிலான அபாயங்கள் எதனால் ஏற்படுகின்றன என்றால், திரையில் தோன்றும் காட்சிக்கு இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடும் யதார்த்தத் தன்மையை உண்டு பண்ணும் விசேஷத் திறன் உண்டு என்பதால்தான். ஒன்றைப் பார்க்கச் செய்து, தான் பார்க்கச் செய்ததை நம்பவைக்கும் தன்மை. மனக்கண்முன் நிறுத்தும் இந்தச் சக்திக்கு அணிதிரட்டும் ஆற்றல்கள் உண்டு. கருத்துகள், அவற்றின் வடிவாக்கங்கள் தவிர, சில குழுக்களையும் இருத்தல் பெறச்செய்ய இந்தச் சக்தியினால் முடியும். இனவெறி, வேற்று நாட்டவரை வெறுப்பது, வெளி தேசத்தவரிடம் பயம் – வெறுப்பு போன்ற, பெரும்பாலும் எதிர்மறையான தீவிர உணர்ச்சிகளை உசுப்பிவிடுவதற்குச் சாதகமான, தார்மீக, அரசியல் உள் அர்த்தங்கள் சாதாரணத் துணுக்குச் செய்திகளிலும், அன்றாட நிகழ்வுகளிலும், விபத்துகளிலும் செறிந்திருக்க வாய்ப்பு உண்டு”, (பக். 36, 37, தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம், பியர் பூர்தியு, பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில்: வெ.ஶ்ரீராம், க்ரியா வெளியீடு: ஜனவரி 2004, விலை: ரூ.100)

      வால்ட் டிஸ்னி உருவாக்கிய ‘டிஸ்னிலேண்ட்’ மாயாஜால கனவுலகக் குறியீடு. இதைப் பற்றியும் இதர காட்சியூடகங்களையும் விமர்சனப் பூர்வமாக அணுகும் பிரஞ்சு நாட்டு பின் நவீனத்துவ சிந்தனையாளர் ழீன் பூதிலார் (Jean Baudrillard) பின்வருமாறு கூறுகிறார்.

      “டிஸ்னிலேண்ட் மூன்றாம் வரிசை நகலியத்தை மூடி மறைக்க உதவுகிறது. டிஸ்னிலேண்ட் ஒரு கனவுலகமாகும். இந்த டிஸ்னிலேண்ட் தான் நிஜமான அமெரிக்கா. இந்த உண்மையை மறைத்துக் கொண்டு நிற்கிறது. டிஸ்னிலேண்ட் கற்பனை உலகம் என்று சொல்வதால், டிஸ்னிலேண்ட் தவிர மீதியனைத்தும் உண்மை என்று நம்பவைக்கப்படுகிறது. நிஜத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள அமெரிக்கா இனியும் உண்மையானதாக இல்லை; அவை நகலிய வரிசைமுறைக்குள் நுழைந்துவிட்டன. அவை ‘மிகையதார்த்தம்’ சார்ந்துள்ளன. இது யதார்த்தத்தின் தவறான சித்தரிப்பு (மார்க்ஸ் வார்த்தையில் கருத்துருவம்) பற்றிய கேள்வியன்று. மாறாக யதார்த்தம் இனியும் யதார்த்தம் அல்ல என்ற உண்மையை மறைப்பது; அதன்மூலம் மீண்டும் யதார்த்தக் கொள்கையைக் காப்பாற்ற முடிகிறது.” (பக். 139, உடலே திரையாக… தகவல் தொடர்பு ஊடகங்கள், சிவக்குமார், காவ்யா வெளியீடு: டிசம்பர் 1995, விலை: ரூ. 30)      அவர் மேலும் “டிஸ்னிலேண்ட் கற்பனை உலகு” – இது உண்மையானதும் அல்ல; பொய்யானது அல்ல. அது பின்வாங்கும் எந்திரம் (a deterrence machine). யதார்த்தத்தின் புனைவை மீண்டும் தலைகீழாகப் புதுப்பிப்பதற்கான பின்வாங்கும் எந்திரம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சுற்றி டிஸ்னிலேண்டும் இன்னும் அதைப்போன்ற பல்வும் (மேஜிக் மவுண்டன், மெரின் வோர்ல்டு) உள்ளன. லாஸ் எஞ்சல்ஸ் இப்படி கற்பனை உலகங்களால் உட்செலுத்துகின்றன. இந்த நகரம் குழந்தமை சமிக்ஞைகளால் ஆன பழைய கற்பனையை நாடி நிற்கிறது”, (பக். 140, மேலே குறிப்பிட்ட நூல்.)

       தோற்ற வரிசைகளாக (Orders of Appearance) கள்ளவுரு (counterfeit), உற்பத்தி (Production), நகலியம் (Simulation) ஆகிய மூன்றைச் சுட்டும் ழீன் பூதிலார் புராணீகப் புனைவுகள் இணைக்கப்படுவதையும் கூறுகிறார்.

       “ஒவ்வொரு கட்டமாக முன்னேற முன்னேற யதார்த்தம்/உண்மை மறைகின்றது. கடைசியில் நிஜம்/பொய்; பொருள்/குறி; யதார்த்தம்/சித்தரிப்பு என்பதெல்லாம் மறைந்து ‘நகலியம்’ (Simulation) பரவுகின்றது. யதார்த்தம் இனியும் இல்லை எனும்போது பழமைப் பற்றார்வம் (Nostalgia) முழு அர்த்தம் பெறுகின்றது. யதார்த்ததின் தோற்றம், குறிகள் பற்றிய புராணீகப் புனைவுகள் (Myths) அதிகமாகின்றன என்கிறார் பூதிலார்”, (பக். 138, மேலே குறிப்பிட்ட நூல்.)

       புராணப் புனைவுகள் மிக அதிகளவில் குழந்தைகள் மனத்தை சிதைக்கவும் வெறுப்பை உண்டாக்கவும் பயன்படுகிறது. கார்ட்டூன் நாயகர்கள் ஏற்கனவே குழந்தைகளுக்கு நல்ல அறிமுகம் உள்ள நிலையில் இந்நூலின் தேவை கேள்விக்குறியே! அவற்றிற்கு அடிமையாகாமல் தப்பவும், அந்தக் கனவுலக மாயையிலிருந்து விடுபடவும், அதே சமயம் இந்தக் கனவுலகத்தை படைப்பூக்கத்தடன் அணுகவும் யோசித்தால் அதுவே இன்றைய நிலையில் போதுமானதும், அவசியமானதுமாகும்.டோரா வரை… கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு

புனைவு: ‘ஆயிஷா’ இரா. நடராசன்

வெளியீடு:

புக் ஃபார் சில்ரன்

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..முதல்பதிப்பு: ஜூலை 2016

பக்கம்: 96

விலை: ரூ. 70


தொடர்பு முகவரி:பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

திங்கள், நவம்பர் 21, 2016

55. தேர்வுகள் - மதிப்பெண்களில் மூழ்கிய கல்வி


55. தேர்வுகள் - மதிப்பெண்களில் மூழ்கிய கல்வி

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) 

(அகரம் வெளியீடாக வந்துள்ள நா. முத்துநிலவன் எழுதிய ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!’ என்ற கல்விச் சிந்தனைகள் – கட்டுரைத் தொகுப்பு நூல் குறித்த பதிவு.)     கல்வியைப் பற்றி இந்தச் சமூகம் கவலைப்பட்டேயாக வேண்டும். ஆனால் அப்படியான கவலை பெரும்பாலானோருக்கு இல்லை என்பதே உண்மை. கல்வி பற்றிய கவலைகள் இங்கு தேர்வுகள், மதிப்பெண்கள் பற்றியதாக மடைமாற்றம் பெற்றுள்ளது. கல்வியென்பது இவற்றில் மட்டும் இருப்பதான பாவனை இங்கு நிகழ்கிறது.

     கல்வி குறித்த தப்பெண்ணங்கள் நமக்கு அதிகம். கோணிப்பையில் பணத்தை அள்ளிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, அதே பையில் அறிவை வேண்டிய மட்டும் அள்ளிச் செல்வது கல்வி என பெரும்பான்மையான சமூகம் கற்பிதம் செய்துகொண்டுள்ளது. ஆனால் கல்வி, அறிவு என்பதற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென உணர்த்தவேண்டிய கட்டாயம் உள்ளது.

    கோயில்களைப் போல பள்ளிகளும் மிகவும் கெட்டித்தட்டிப்போன இறுகிய அமைப்பாக உள்ளது. இதன் உள்ளேயுள்ள கசடுகள், அழுக்குகள் வெளியாருக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த அமைப்பிற்குள்ளிலிருந்து யாராவது சொன்னால்தான் உண்டு.

    கல்வி குறித்த சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் ஒரு சிலரேனும் கல்வி பற்றித் தொடர்ந்து பேசிவருவது பாராட்டிற்குரியது. சமூக அக்கறை உடைய ஆசிரியர்கள் சிலரின் கல்வி, பள்ளிகள் குறித்த சிந்தனைகள் இந்த அமைப்பைச் சீர்செய்யவும் மறுநிர்மாணம் பண்ணவும் பயன்படலாம். அந்த வகையில் முத்துநிலவன் போன்ற ஆசிரியர்களின் கல்விச் சிந்தனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    தமிழாசிரியர், கவிஞர், பேச்சாளார், தமுஎகச. இயக்கவாதி என்ற பல்வேறு அடையாளங்கள் உடைய நா. முத்துநிலவன் தினமணி, தீக்கதிர், ஜனசக்தி போன்ற நாளிதழ்களிலும் இணையப் பக்கங்களிலும் எழுதிய கல்வி குறித்தான 18 கட்டுரைகளை ‘அகரம்’ நேர்த்தியான வடிவமைப்பில் வெளியிட்டுள்ளது. அழகான அட்டை ஓவியம் ட்ராஸ்கி மருதுவின் கைவண்ணத்தில்.

     ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!’ என்கிற தலைப்புக் கட்டுரை “மதிப்பெண் என்பது அறிவின் அளவீடல்ல, நமது கல்விமுறையில் எந்த அறிவும் சரியாக அளக்கப்படுவதுமில்லை. அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60 மதிப்பெண்ணும், ஓவியம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40 மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக் கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது”, (பக். 67) கல்விமுறை மீது விமர்சனத்தைப் பதிவு செய்கிறது.

    “படிப்புக்குப் பிறகு வேலைக்குப் போனாலும் சரி நீயே உன் திறனுக்கேற்ப உன் வாழ்க்கைத் திட்டமிட்டுக் கொண்டாலும் சரி. எப்படி ஆயினும், கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இந்த உலகத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சிலர்பலரின் சுயநலம், மூடநம்பிக்கை, பொறாமை சூழ்ச்சிகளிடையிலும் நமது தனித்தன்மையை விட்டுவிடாமல் வாழ்வதற்கான கல்வியை முடிந்தவரையில் கற்றுக்கொண்டு வா. சாதாரண மதிப்பெண்களோடும், அசாதாரண புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு வா மகளே!”, (பக். 68) என்றும் மகளுக்கு அறிவுரை கூறுகிறாள். இப்படியான ஒரு தந்தை அனைத்து மகன்களுக்கும் மகள்களுக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்?

     கல்லூரிப் படிப்பாவது பரவாயில்லை. 10, 12 வகுப்புப் படிக்கும் மகன்/மகள் அடையும் தேர்வு நெருக்கடிகள் சொற்களால் வடிக்க இயலாதவை. தேர்வுகள், மதிப்பெண்கள் வன்முறை இங்குதான் அதிகம். இதிலிருந்துதான் அவர்களைக் காப்பாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்?

     அண்மையில் நடந்த கூட்டத்தில் ஒரு பெண் ஆசிரியர் கீழ்க்கண்ட கருத்தைக் கூறினார். “நமது வீடுகளில்/சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டுள்ளது. பெண் முழந்தைகளை படிக்க வலியுறுத்தாவிட்டாலும், அவர்கள் மிகக் கவனமாக படிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை வற்புறுத்தியும் படிக்கவைக்க இயலுவதில்லை”.

     இது மிக ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய கருத்து. பெண் கல்வியை தன் விடுதலைக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். கல்வியின் மூலம் உண்மையான விடுதலை சாத்தியமில்லையெனினும் ஓரளவுக்கான விடுதலையைப் பெறமுடிகிறது. ஆதிக்க உலகில் சஞ்சாரிக்கும் ஆணுக்கு அதற்கான தேவையில்லாமற் போய்விடுகிறது.

     கடந்த நூறாண்டுகளில் வெளிப்படையாகத் தெரியும் வளர்ச்சிகள், முன்னேற்றங்கள் ஒருபுறமிருக்க, சாதியம், மூடநம்பிக்கைகள், பெண் பற்றிய பார்வைகள் போன்றவை மிகவும் இறுகிப்போன பழமைவாத மதிப்பீடுகள் மீண்டும் தலைதூக்குகின்றன. இவை புதிய, புதிய வடிவங்களில் நம்மையறியாமல் நமக்குள் ஒளிந்திருக்கின்றன. கலாச்சாரம் பேசும் மத, இன, மொழிவாதிகள் நம்மை இந்தப் புதைகுழிக்குள் தள்ளியிருக்கிறார்கள். இதிலிருந்து எப்படி, எப்போது மீளப்போகிறோம்?

     பெண்ணுடலைக் கொண்டே இங்கு கலாச்சாரத்தை கட்டமைக்கிறோம்/எழுதுகிறோம். பெண் அதிகம் படிக்காமல் இருப்பது நலம்; ஆண் படிப்பது அவசியம் என்பது போன்ற கற்பிதங்களைத் தகர்க்க வேண்டியது உடனடித்தேவை. ‘முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகனே!’ என்றும் சொல்லவேண்டிய தேவையும் கட்டாயமும் இன்றைய சூழலில் இருக்கிறது. தோழர் முத்துநிலவன் அவ்வாறு வேறுபாடு காட்டுபவர் என்று நாம் சொல்ல வரவில்லை. கல்வியில் காட்டப்படும் பாலினப் பாகுபாடுகளின் விளைவுகள் பாரதூரமானவை. இங்கு கொடுமைகள் நடக்கின்றபோது தூக்குத் தண்டனை அனைத்தையும் ஒழித்துவிடும் என்ற புதிய கற்பிதத்தை உற்பத்தி செய்கிறோமே தவிர, உண்மையான தீர்வுகளின் அருகில் செல்வதேயில்லை.

     “ஆசிரியர் உமாமகேஸ்வரியை வகுப்பறையிலேயே குத்திக் கொன்றது யார்? கல்விமுறை, ஆசிரியர், பெற்றோர், ஊடகம், அரசுகள் ஆகிய நாம் எல்லாருந்தானே?”, (பக். 32) என்று கேட்கிறார். இந்நிலை மாற வழிகண்டோமா? தவற்றை உணர்ந்து திருத்திக் கொண்டோமா? இல்லையே! ‘நீதி போதனை’ இல்லாத காரணத்தைக் கண்டுபிடித்து அதனிடம் சரணடைவது பிரச்சினையைத் தீர்க்குமா? அரிச்சந்திரன், கண்ணகி கதைகள் மூலம் கல்வியில் போதிப்பதற்கு ஒன்றுமில்லை. அதை மீள்வாசிப்பு செய்வதே சரியாக இருக்கமுடியும் (பக். 113-118) என்று முத்துநிலவன் எழுதுகிறார். இவை நடக்கத வரையில் கல்வியில் மாற்றம் சாத்தியமில்லை.

     சமச்சீர் கல்வியின் ஒருபடியாய் இருக்கும் பாடநூற்களை நாம் ஏற்றுக்கொண்டாலும் மிக அவசர கதியில் தயாரிக்கப்பட்ட அவற்றிலுள்ள குறைபாடுகள் களையப்படவேண்டியவை. சமச்சீர் கல்வி மற்றும் பாடநூல்கள் தொடர்பான கட்டுரைகள் இத்திசையில் பயணிக்கின்றன. தமிழ்ப் பாடநூல்களில் தமிழ் படும் பாடுகள், தமிழாசிரியர்களின் தமிழ்நடைப்பிழைகள் என தேவையானதைச் சொல்லும் கட்டுரைகளும் இதன் தொடர்ச்சியாக, தமிழ்ப்பாடத்தில் தேர்ச்சிக் குறைபாட்டை அலசும் கட்டுரை ஒன்றும் உண்டு. இவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.

    கல்வியில் ஜனநாயகம் நிலவ வேண்டியதும், இவற்றிற்கு மாற்றாக இயங்கும் சர்வாதிகாரத் தனியார் பள்ளிகளின் கொடுங்கோன்மையை விளக்கும் கட்டுரைகளும் இருக்கிறது. நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியைத் கொலை/ தற்கொலை செய்துவிட்டு புதுப்புது விளம்பரங்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்ய முடியும், இவற்றின் பிடியிலிருந்து நமது குழந்தைகளைக் காக்கும் சமூக அக்கறை இதில் வெளிப்படுவதைக் காணலாம்.

    விண்ணப்பித்து விருது வாங்கும் முறை ஆசியர்களுக்கு அவமானமில்லையா? என்று வினா எழுப்பி, சுயமரியாதை உடையவர்களுக்கு விருது மாணவர்களால் வழங்கப்படுவது மட்டுமே என்று நிருபிக்கும் கட்டுரைகள் சிறியதாக இருப்பினும் ஆழமானவை. (பக். 136, 137)

    9,11 வகுப்புகள் தேவையில்லை என பெற்றோர்களும் தனியார் பள்ளிகளும் செய்த முடிவு தற்போது அரசுப்பள்ளிகள், ஆசிரியர்கள், அலுவலர்களையும் தொற்றத் தொடங்கியுள்ளது. இவற்றை முறியடிக்கவும், தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்தவும் இம்மாதிரியான கல்விச் சிந்தனைகள் பெருகவேண்டும். சிறு துளியாய் இல்லாமல் பேரியக்கமாக மாறவேண்டும் என்பதை இன்றைய சூழல் நம்மை உந்தித் தள்ளுகிறது.முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!

நா. முத்துநிலவன்

வெளியீடு:

அகரம்

முதல்பதிப்பு: ஆகஸ்ட் 2014

இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2016

பக்கம்: 168

விலை: ரூ. 140தொடர்பு முகவரி:மனை எண் 01,

நிர்மலா நகர்,

தஞ்சாவூர் – 613007.தொலைபேசி: 04362 239289.

வெள்ளி, நவம்பர் 18, 2016

54. குழந்தைமையைக் கொண்டாடும் சூழல்கள்

                               54. குழந்தைமையைக் கொண்டாடும் சூழல்கள்

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) 
 
 
 
 

   (புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள என்.மாதவன் எழுதிய ‘குழந்தைமையைக் கொண்டாடுவோம்’ என்ற நூல் குறித்த பதிவு.)

   “உங்களிடமிருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால் நீங்கள் பார்க்கும் பொருட்கள் எல்லாம் ஆணியாகவே இருக்கும்”, (ஆப்ரஹாம் எச்.மாஸ்லோ)

      என்று பல தேர்தெடுத்த மேற்கோள்கள் இச்சிறு நூலெங்கும் விரவி இருப்பது சிறப்பாக உள்ளது. இவை குழந்தை நேசிப்பின் அவசியத்தை நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

     ஆசிரியர், அறிவியல் இயக்க ஆர்வலர், துளிர் ஆசிரியர் குழு உறுப்பினர் என்ற பல பரிமாணங்கள் கொண்ட என்.மாதவன் 10 சிறிய தலைப்புகளில் குழந்தைமையைக் கொண்டாட வேண்டிய தேவை மற்றும் கட்டாயத்தை எளிமையாக உணர்த்துகிறார். இதற்கு அவருடைய அனுபவங்கள் கைகொடுக்கின்றன.

    வளர்ந்தவர்களின் பார்வையும் குழந்தைகளின் பார்வையும் ஒன்றாக இருப்பது சாத்தியமில்லை. இது அறிவு முதிர்ச்சி என்ற பொருள் கொள்வதல்ல. வயதுக்கும் அறிவுக்குமான தொடர்பு கேள்விக்குரியது. குழந்தைகளின் அறிவினை அவர்கள் தளத்திலிருந்து புரிந்துகொள்ள முயற்சிப்பது நமக்குப் புதிய அனுபவங்களைச் சாத்தியமாக்கும் என்று ஓரிடத்தில் சொல்கிறார்.

    “நம்முடைய பார்வையில் தென்படும் பொருள் ஒன்று குழந்தைக்கு வேறு விதமாகத் தெரிகிறது. நம் கையில் எலுமிச்சம்பழம் பையன் கையில் பந்தாகிறது. கண்ணாடி உடைந்துவிடும் என்ற நமது பதட்டம் குழந்தைக்குச் சுலபமில்லை”, (பக். 04) என்று அணிந்துரையில் பேரா. ஆர்.இராமானுஜம் குறிப்பிடுகிறார்.

    வெற்றி என்னும் வெறியூட்டுதலுக்கு கல்வியில் இன்று முதன்மை இடம் கிடைத்துவிட்டது. இதை அகற்ற, குழந்தைகளைக் காப்பாற்ற, அவர்களைத் தோற்கப் பழக்குவதுதானே சரியாக இருக்கமுடியும்?

    சுயமரியாதை என்பது எதோ பெரியவர்களுக்கானது என்று நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். இது மாபெரும் தவறல்லவா! சுயமரியாதையையும் அடுத்தவர்களை மரியாதையாக நடத்தும் மாண்பினையும் உணர்த்தவேண்டும்; மதிக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்நூல்.

     யாருடன் குழந்தை போட்டி போட வேண்டும்? ஒரு குழந்தையை அடுத்தவருடன் போட்டி போடுவதைவிட, தன்னுடைய சாதனையை தானே முறியடிக்கச் சொல்லச் செய்யலாம் என்ற ஒரு ஆலோசனையையும் வழங்குகிறார். போட்டி போடுவது வேறு; கற்றுக்கொள்வது வேறு. கற்றுக்கொளவதால் பொறுமை கூடும்; நாம் தவறவிடுபவை நமக்குப் புலப்படும் என்பதும் விளக்கப்படுகிறது.

     விளையாட்டு கல்விக்கு எதிரானது என்ற கருத்து பலரிடம் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதைத் தகர்க்கவேண்டும். வீட்டுக்குள் முடங்கும் குழந்தைக்கு சுவாசிக்க தூய்மையான ஆக்சிஜன் கிடைக்குமா என்ன? கணினி போன்ற எந்திரங்களுக்கே புத்துணர்ச்சி (refresh) தேவைப்படும்போது மனிதனுக்கு அது அவசியமில்லையா என்று வினா எழுப்புகிறார். .

     நாம் நினைப்பதுபோல குழந்தைகள் உலகம் சிறியதல்ல. அவர்களுடைய உலகில் நம்முடைய பல சிந்தனைகளுக்கு இடமிருப்பதில்லை. நாளை குறித்த கவலையெல்லாம் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே காலம் நிகழ்காலம்தான் என்றும் சொல்கிறார் (பக். 65).

     குழந்தைகளுக்குத் தேவை போதனைகள் அல்ல; முன்மாதிரி நடத்தைகள்தான் தேவை என்று வலியுறுத்துவதோடு, குழந்தைமை சமூகமயமாகப் பரிந்துரை செய்கிறார்.

     “குழந்தைமையினைக் கொண்டாடுவது என்பது குழந்தைகளின் பிறந்த நாள்களைக் கொண்டாடுவது போன்று ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடுவது அல்ல. மாறாக குழந்தைகளின் இயல்பை உணர்ந்து குழந்தைமையின் மாண்பினை மதித்து நடக்கும் தொடர்ச் செயல்பாடாகும். இதனைத் தொடர்ச்சியாகக் கையாள்வதன் மூலம் நாம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கும் பெருமையை மட்டும் பெறுவதில்லை. மாறாக ஒரு மனிதனாக நாம் அடையவேண்டிய மாண்புகளையும் அடைகிறோம்” (பக். 78,79) என்று குறிப்பிடுகிறார். இதனால் நமக்கும் இனிமைதானே!

     சிக்கலான் உளவியல் விதிகளைக் கூறிப் பயம் காட்டாமல் எளிமையான அனுபவக் கீற்றுகளைக் கொண்டு குழந்தைமையைக் கொண்டாட வலியுறுத்துவது இந்நூலின் சிறப்பாகும்.குழந்தைமையைக் கொண்டாடுவோம்

என்.மாதவன்

வெளியீடு:

புக் ஃபார் சில்ரன்

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..முதல்பதிப்பு: டிசம்பர் 2013

பக்கம்: 80

விலை: ரூ. 50தொடர்பு முகவரி:பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

வியாழன், நவம்பர் 17, 2016

உச்சம் தொட்ட மோடியின் பாசிசம்

உச்சம் தொட்ட மோடியின் பாசிசம்

மு.சிவகுருநாதன்
 
 

     நரேந்திர மோடியின் பாசிசம் நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது.


      நேற்றைய இரு நிகழ்வுகள் மோடி வித்தைகளை அம்பலமாக்கியுள்ளது.

    கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற முட்டாள்தனமான செயலில் இறங்கி நாட்டின் சாமான்ய, நடுத்தர மக்கள் தெருவில் ரூபாய் நோட்டுகளுக்காக அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் நடந்த இது முக்கியத்துவம் வாய்ந்தது.

      ஒன்று. கருப்புபண முதலை விஜய் மல்லையா வின் ரூ. 1201 கோடிக் கடனை எஸ்.பி.ஐ. வங்கி தள்ளுபடி (write-off) செய்துள்ளது.

      இரண்டு. கனிமக்கொள்ளை, கருப்புப் பண முதலைச் சகோதர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டியின் மகளின் ஆடம்பரத் திருமணம் ரூ.650 கோடியில் நடைபெற்றது.

     மோடி எது செய்தாலும் துள்ளிக்குதிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளே, இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

    உங்கள் பாசிசத்திற்கு எல்லையில்லையா?

பள்ளிச் சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் தடைகள்

பள்ளிச் சூழலில் குழந்தைகள் எதிர்கொள்ளும் தடைகள்

மு.சிவகுருநாதன்       (நேற்று நவம்பர் 16, 2016 அன்று மாலை 5.00 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்க’க் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கான தயாரிக்கப்பட்ட சில குறிப்புகள். பள்ளி நேரம் முடிந்து மேலும் 3 மணி நேரம் கல்வி மற்றும் குழந்தைகள் பற்றிய சிந்திக்க சுமார் 30 ஆசிரியர்கள் கூடியிருந்தது மனம் மகிழ்ந்த நிகழ்வு. பெரும்பாலானோர் பெண் ஆசிரியர்கள். அனைவரும் தங்களது குழந்தைகளின் சிக்கல்களைப் பகிர்ந்துகொண்டதும் அதைத் தீர்க்க முனைப்பு காட்டியதும் இனிய தருணங்கள். தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் திரு. பாலசண்முகம் (நாகை பாலா), சங்கத்தின் தோழமைகள், திரு. சு.பாலசுப்பிரமணியன் போன்ற வாட்ஸ் அப் தோழர்கள், அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.)


                                                           பகுதி: ஒன்று

        லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’, பற்றி அ.மார்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில் சிலாகித்து எழுதியிருந்தார். அ,மார்க்ஸ், தய்.கந்தசாமி ஆகியோருடனான ஒரு சந்திப்பில் இதன் இலக்கிய தன்மை பற்றியும் பழைய ஏற்பாட்டை அதன் இலக்கிய ரசனைக்காக வாசிப்பது பற்றியும் பேச்சு வந்தது. அதில் குழந்தைகள் பற்றிய சிறுபகுதியைக் கீழே தருகிறேன். முழுக்க அன்பைச் சுரக்கும்/பொழியும் புத்த, சமண, கிருஸ்தவ பிரதிகளைப்போல மனுஸ்மிருதியையோ, பகவத்கீதையையோ அணுகமுடியாது என்பது உறுதி.

சுவிசேஷங்களில் இயேசு கிருஸ்து சொன்ன அய்ந்து கட்டளைகள்:

1. கோபம் கொள்ளாதீர்கள். அனைத்து மக்களிடமும் சமாதானத்துடனேயே இருங்கள்.

2. விபச்சாரத்தின் மூலம் உங்களை நீங்களே மகிழ்வித்துக் கொள்ளாதீர்கள்.

3. எவரிடத்தும் எக்காலத்திற்கும் எவ்விதமான உறுதிமொழியினை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4. தீமையினை எதிர்க்காதீர்கள். எவரையும் நியாயந்தீர்க்காதீர்கள். மனித சட்டத்தினிடமும் செல்லாதீர்கள்.

5. வெவ்வேறு நாடுகளிடையே பிரிவுகளை உருவாக்காதீர்கள். உங்களுடைய நாட்டு மக்களை நேசிப்பதைப் போன்றே பிற நாட்டவரையும் நேசியுங்கள்.

(பக். 77. சுவிசேஷங்களின் சுருக்கம், லியோ டால்ஸ்டாய், தமிழில்: வழிப்போக்கன், பாரதி புத்தகாலயம் வெளியீடு: மே 2016)

இயேசுவை காண வந்த குழந்தைகளை அவரது சீடர்களை அப்புறப்படுத்துவதைக் கண்டவர், பின்வருமாறு கூறுகிறார்.

     “குழந்தைகளைத் துரத்துவதென்பது தவறானதொருச் செயலாகவே இருக்கிறது. வேறு எவரைக் காட்டிலும் குழந்தைகள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். ஏனென்றால் குழந்தைகளே தந்தையின் சித்தத்தின்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களே பரலோக ராஜ்யத்தினில் வீற்றும் இருக்கின்றனர். எனவே நீங்கள் அவர்களைத் துரத்திவிடக்கூடாது. மாறாக நீங்கள் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தந்தையின் சித்தத்தின்படி வாழவேண்டும் என்றால் நீங்கள் ஒரு குழந்தை எவ்வாறு வாழ்கிறதோ அவ்வாறே வாழவேண்டும்.

       நான் உங்களிடம் தந்திருக்கும் அந்த ஐந்து கட்டளைகளை குழந்தைகள் எப்போதும் நிறைவேற்றுகின்றார்கள். அவர்கள் எவரையும் சபிப்பதில்லை. அவர்கள் எவர் மீதும் வன்மம் கொள்வதில்லை. அவர்கள் விபச்சாரம் செய்வதில்லை. அவர்கள் எதற்காகவும் உறுதிமொழிகளினை ஏற்பதில்லை. அவர்கள் தீமையை எதிர்ப்பது இல்லை. அவர்கள் எவரையும் நியாயந்தீர்ப்பதில்லை. தங்கள் இனத்தவரிடம் இருந்து வேற்று இனத்தவரை அவர்கள் வேற்றுமைப் படுத்திக் காண்பதுமில்லை. எனவே அவர்கள் வளர்ந்த மனிதர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருக்கின்றனர். மாமிசத்தின் விளைவாக எழும் அனைத்துவிதமான ஆசைகளையும் துறந்து இந்தச் சிறு குழந்தைகளைப் போன்று நீங்கள் மாறவில்லை என்றால் பரலோக இராஜ்யத்தினுள் நீங்கள் நுழையமாட்டீர்கள்”. (அத்தியாயம் IX, பக். 177, மேலே குறிப்பிட்ட நூல்.)

       பவுத்தம் ஆசைகளை மட்டுமல்ல; அனைத்து வகையான பற்றுகளையும் அறவே அகற்றச் சொன்னது. அப்போதுதான் பரிநிப்பாணம் கிடைக்கும். பற்றுகளைத் துறந்து பரிநிர்வாணமடையும் சிந்தனா முறை புத்தர் நமக்களித்தது.

       சேதோ விமுக்தி, பிரக்ஞா விமுக்தி என இருவகையான முக்திநிலைகளை தீக நிகாயத்தில் புத்தர் வலியுறுத்துகிறார். அறிவுநிலை மற்றும் உணர்வு ஆகிய இரண்டிலும் உள்ள பற்றுகளை நீக்குதல் இங்கு முதன்மையானது. (பக். 72, தீக நிகாயம் – பௌத்த மறைநூல், தமிழில்: மு.கு.ஜெகந்நாத ராஜா, வெளியீடு: தமிழினி, டிசம்பர் 1988) இதைத்தான் பெரியார் வேறு மொழியில் சொன்னார்.

     “இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பல கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைக்கழகம், கல்லூரி, உயர்தரப்பள்ளி என்பதாக பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை வைத்துக் கல்வி கற்பிப்பதைவிட, பகுத்தறிவுப் பள்ளிகள் மாத்திரம் வைத்து, ‘நிர்வாணமான சிந்தனா சக்தி’ தரும் படிப்பைக் கொடுத்து, மக்களை எதைப்பற்றியும், எந்தப்பற்றுமற்ற வகையில் செல்லும்வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமானால், நாட்டில் இன்று வீணாகும் செல்வம், அறிவு, ஊக்கம், நேரம் முதலியவை பெருமளவு மீதமாகி மக்கள் வாழ்க்கைத் தரமுயர்ந்து, ஒழுக்கம், நேர்மை, நல்லெண்ணம், மனிதாபிமானம், அன்பு, பரஸ்பர உதவி முதலியவை தானாக வளர்ந்து, இவைகளுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும் ‘குறைவற்றச் செல்வத்துடனும், நிறைவற்ற ஆயுளுடனும்’ வாழ்வார் என்பது உறுதி”. (விடுதலை தலையங்கம். பக். 146, பெரியார் கல்வி சிந்தனைகள், தொகுப்பு: அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலய வெளியீடு: டிசம்பர் 2007)

      மனிதன் பற்றற்ற நிலையில் எதையும் சிந்திக்கவேண்டும் என்று சொன்னவர் பெரியார். கூடவே மதம், சாதி, மொழி, தேசம் என நான்கு பற்றுக்களை அழிக்கவேண்டியவையாக அவரால் அடையாளம் காட்டப்பட்டன. இதில் முதலிரண்டும் சமூக சீர்திருத்தவாதிகள் அனைவரும் சொல்கிற ஒன்றுதான். ஆனால் பின்னிரண்டையும் சொல்வதற்கு பெரியார் போன்ற ஆளுமையால்தான் சாத்தியப்படும்.

      கல்வியின் நோக்கம் ஏதேனும் ஒன்றை திணிப்பதல்ல. மாறாக ஏற்கனவே இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்து விடுவித்து அவர்களை நிர்வாணமாக்குவதே கல்வி. எத்தகைய பற்றுகளும் முன்முடிவுகளும் துறந்து நிர்வாணமாவதே கற்றலில் முதல்படி.

      ஜென் பவுத்தக்கதை ஒன்று. குருவைத் தேடி ஒரு சீடன். அவனை அமரச் செய்து குவளையில் தேநீர் தந்து என்ன வேண்டும் என வினவுகிறார். உங்களிடம் கற்றுக்கொள்ள வந்தேன் என்கிறான் சீடன். ஏற்கனவே தேநீர் நிரம்பிய குவளையில் மீண்டும் தேநீரை ஊற்றுகிறார் குரு. குவளை நிரம்பி வழிகிறது. சீடன் ஏனென்று கேட்க, முதலில் உன்னிடம் நிரம்பியுள்ளவற்றைக் காலியாக்கிக் கொண்டுவந்தால்தான் நீ எதையும் நிரப்பிக் கொள்ள முடியும் என்றார் குரு. இங்கு ஆசிரியர்கள் நிரம்பி வழிபவராக அல்லவா இருக்கிறார்?

      ஜே.கிருஷ்ணமூர்த்தி “நீ அறிந்தவற்றிலிருந்து விடுதலை” என்று சொல்கிறாரல்லவா! அதுவும் இந்தப் பொருளில்தான்.

      அலோபதி மருத்துவமுறை நமது உடலை மொத்தத்துவமாக அணுகி நோய்க்குறிகளுக்கான சிகிச்சையைப் பரிந்துரைக்கிறது. ஆனால் மாற்று மருத்துவமுறையான ஹோமியோபதி தனித்தனி கூறுகளைக் கவனிக்கிறது. அதைப்போல எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி வகையினத்தில் அடைப்பது தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்த குண இயல்பைக் கொண்டவர்களாக இருக்க முடியும். ஒரு குழந்தைக்கு நாம் பயன்படுத்தும் உத்தி பிறிதொரு குழந்தைக்கு பலனளிக்காமல் போகலாம்.

                                                           பகுதி: இரண்டு

         மாற்றுக்கல்வியாளர் ஜான் ஹோல்ட் பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பின்வருமாறு கருதுவதாக, அவர் தமது ஆய்வின் மூலம் வெளிப்படுத்துகிறார். (இது குறித்து விரிவான தகவலுக்கு இரு நாட்களுக்கு முந்தைய எனது வாட்ஸ் அப் மற்றும் முகநூல் பதிவைக் காண்க.)

பெற்றோரும் குழந்தையும்

 • · தன் சொத்து (Wealth)
 • · அன்பு, பாசம், செலுத்தும் வடிகால் (Love Object)
 • · அசாதாரண செல்ல, வளர்ப்புப் பிராணி (Super – Pet)
 • · ஆடம்பர, அலங்கார, அழகு சாதனம் (Cute Costly Decoration)
 • · வாழ்வதற்கான ஒரே நோக்கம் (Purpose of their Life)

      பாலோ ப்ரையிரே வின் தற்போதைய வங்கி முறைக்கல்வி குறித்தான் மதிப்பீடு இப்படித்தான் இருக்கிறது. ஆசிரியரும் மாணவரும் முரண் எதிர்வாய் இவ்வாறு தோற்றம் கொள்கின்றனர்.

ஆசிரியரும் குழந்தையும்
 • · அறிந்தவர் X அறியாதவர்
 • · அறிவாளி X முட்டாள்
 • · நிரம்பி வழிபவர் X தெரியாதவர்
 • · சிந்திப்பவர் X நினைப்பவர்
 • · பேசுபவர் X கேட்பவர்
 • · செயல்படுபவர் X செயல்பட வைக்கப்படுபவர்
 • · கட்டுப்படுத்துபவர் X கட்டுப்படுத்தப்படுபவர்
 • · தேர்வு செய்பவர் X ஏற்றுக்கொள்பவர்
 • · மனிதர் X பொருள்

     பாலோ பிரைய்ரே தமது மாற்றுக்கல்வி மூலம் பின்வரும் வாழ்வியல் சாத்தியப்பாட்டை உணர்த்துகிறார்.
 • · உரையாடல்
 • · உறவாடல்
 • · அரசியல்
 • · விடுதலை
 • · அறவாழ்வு
 • · தேடல்
 • · தலையீடு
 • · சமூக மாற்றம்
 • · திசைக்கருவி

குழந்தைகள் பற்றிய சில கல்வியாளர்களின் மேற்கோள்கள்: 


“குழந்தைகளை நல்லவர்களாக மாற்ற அவர்களை மகிழ்ச்சியாக்குவதே ஒரே வழி”.

- ஆஸ்கார் வைல்ட்

“குழந்தைகளுக்குத் தேவையாக இருப்பது வழிகாட்டுதலும் பரிவுணர்வுமே தவிர போதனைக் குறிப்புகள் அல்ல”.

- ஆனி சுலிவன்

குழந்தைகள் எந்த வழியில் செல்லவேண்டும் என்று போதிப்பதற்கு ஒரே வழி, அந்தவழியில் நாமும் பயணிப்பதே”.

- ஜோஷ் பில்லிங்க்ஸ்

“குழந்தைகளை தொடர் முயற்சியின் மூலமே நல்வழிப் படுத்தவேண்டும். கடுமையான கட்டுப்பாடுகளால் அல்ல”.

- டெரென்ஸ்

குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முதல் கடமை அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே. அதனை நாம் செய்யவில்லையென்றால் அவர்களுக்கு நாம் தவறிழைக்கிறோம். மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் அதற்கு ஈடாகாது”.

- சார்லஸ் பக்ஸ்டன் 


                                                                  பகுதி: மூன்று

இந்தியக் கல்வியின் வரலாறு

     1813 –ம் ஆண்டு வெளியான பட்டயச்சட்டம் (Charter of 1813) கிழக்கிந்திய கம்பெனியின் முதல் கல்விச் சாசனம் ஆகும். இந்தியக் கல்விக்கான ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு பின்னாளில் 10 லட்சங்கள் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஆங்கில வழி கிருத்தவ போதனாப் பள்ளிகள் பரவலாக்கம் பெற்றன. 1834 –ல் மெக்காலே பொதுப் போதனைத் துறை (Public Instruction) தலைவராக நியமனம் செய்யப்பட்டார். சில மாதங்களில் அவரது பரிந்துரைகள் அரசால் ஏற்கப்பட்டு அடுத்த ஆண்டே (1835) நடைமுறைக்கு வந்தது.

     1853 –ல் சார்லஸ் வுட் அறிக்கை வெளியானது. இதன் மூலம் பொதுக்கல்வி இயக்குநரகம் (Directorate of Public Instruction) அமைக்கப்பட்டது. கல்வி போதனையாக மாறிய கதை இப்படித்தான் தொடங்கியது. 1882 –ல் வந்த ஹண்டர் குழு அறிக்கை தேர்வுகளைப் பரிந்துரைத்தது. இதுதான் குழந்தைகளுக்கு இன்று சுமையாக உள்ளது.

      காங்கிரஸ் இயக்கத்தின் கல்விக்கொள்கை என்ன? 1909 –ல் கோபாலகிருஷ்ண கோகலே கட்டாய இலவசக் கல்வியை வலியுறுத்தினார். விடுதலைக்குப் பின்பு அது அமலாக்கம் பெற 100 ஆண்டுகள் (2009) ஆனது பெரும் வேதனை. இதுவும் அரசால் தானாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இதற்கான புற அழுத்தங்கள் போராட்டங்கள் ஏராளம்.

     1937 –ல் வார்தாவில் கூடிய காங்கிரஸ் மாகாண கல்வியமைச்சர்கள் மாநாடு கல்வியின் கல்விக்கொள்கைகளை முன்மொழிந்தது.
 • 6-14 வயதுக் குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி.
 • தாய்மொழியில் தொடக்கக் கல்வி.
 • ராட்டை நூற்றல் உள்ளிட்ட தொழிற்கல்வி.
 • சொந்தக்காலில் சுயக்கட்டுப்பாடு உடைய குழந்தைகளை உருவாக்குதல்.

     வலுவான அரசுகள், சிறைச்சாலைகள், தண்டனைகள் கூட வேண்டாம் என்று சொன்ன மகாத்மா காந்தி கூட கல்வி என்றதும் கட்டுப்பாட்டை வலியுறுத்துவது கல்வி பற்றிய சில மரபுவழிப் பார்வைகளை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

    1964 – 66 இல் கோத்தாரி கல்விக்குழு, 1986 –ல்ல் புதிய கல்விக்கொள்கை எல்லாம் பார்த்தாகிவிட்டது. கல்வியில் குழந்தைகளை அணுகுவதில் சிற்சில மாற்றங்களைத் தவிர பெரிய பலன் ஒன்ற்றுமில்லை. புதிய கல்விக்கொள்கை 2016 வரைவு இருக்கின்ற ஒருசில உரிமைகளையும் புதைக்கும் வேலைக்கு வித்திடுகிறது. கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 ஐ (பிரிவு 21 ஏ) திருத்தம் செய்யத் துடிக்கும் இவர்களது முகமுடிகள் கழன்று விழுகின்றன.                                                  பகுதி: நான்கு

குழந்தை உரிமைகள்

       1989 –ல் ஐக்கிய நாடுகள் சபை புகழ்பெற்ற குழந்தைகள் உரிமைப் பிரகடனத்தை வெளியிடுகிறது. அவ்வாண்டு சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்படுகிறது. ஐ.நா. வின் குழந்தைகள் உரிமைப் பிரகடனத்தில் (Charter of Child Rights) 117 நாடுகள் கையெழுத்திட்டன. இதில் முகப்புரை, 4 பிரிவுகள், 54 உட்பிரிவுகள் உள்ளன. குழந்தைகள் முழு மனிதர்கள் (Persons); அரை மனிதர்கள் (Sub – Persons) என்று வலியுறுத்துவதுடன் இவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் சிறப்பு உரிமைகளையும் வழங்க வழிவகுக்கிறது. இவர்களுக்கு 18 வயதுக்குப் பிறகுதான் உரிமைகள் வழங்கப் பட்டுள்ளதான ஒரு மாயை இங்குண்டு. அது வாக்களித்தல் போன்ற இதர உரிமைகள். இவற்றை அடிப்படையான குழந்தைகள் உரிமையோடு குழப்பிக்கொள்ளக்கூடாது.

     குழந்தைகளை எவற்றிலிருந்து பாதுகாப்பது (அனைத்துவகையான சுரண்டல்கள்), எவற்றைத் தருவது (உரிமைகள்), எதில் பங்குகொள்வது (கல்வி) போன்ற உரிமைகள் வழங்குவதற்கான சட்டங்களையும் ஆயத்தங்களையும் செய்ய இது வலியுறுத்துகிறது. ஆனால் இந்தியாவில் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் (Protection of Child Rights – 2005) 2005 இல் தான் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகும் NCPCR, SCPCR போன்ற மத்திய, மாநில குழந்தைகள் ஆணையங்களை அமைக்க அரசுகள் அடம்பிடிக்கவே செய்தன. பெரும்போராட்டங்களுக்குப் பிறகு அமைக்கப்பட்ட இந்த அமைப்புகள் ஏதோ பெயரளவில் இருக்கும் பிற அமைப்புகளைப் போலவே இயங்குகிறது. (உம். மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், தாழத்தப்பட்டோர் ஆணையம், நுகர்வோர் நீதிமன்றங்கள் போன்றவை)

      இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 –ல் கொண்டுவரப்பட்டு, 2010 லிருந்து அமல் செய்யப்படுகிறது. 6-14 வயதுக் குழந்தைகளை மட்டும் கணக்கில் கொள்ளும் இச்சட்டம் 3-5 முன்பருவக் கல்வியை முற்றாக புறக்கணித்து கல்வி வணிகத்தை ஊக்குவிப்பதோடு, குழந்தைகள் உரிமைகளையும் மீறுகிறது.

      குழந்தைத் தொழிலாளர் சட்டங்களில் அபாயகரமான திருத்தத்தைச் செய்ய ஆளும் இந்துத்துவ அரசு தயங்கவில்லை. பெற்றோர்களில் தொழிலகங்களில் குழந்தைகள் பணிசெய்யலாம் என்கிறது திருத்தம். புதிய கல்விக்கொள்கை மூலம் மீண்டும் குலக்கல்வியை நடைமுறைப்படுத்த இவர்கள் துடிப்பதன் பின்னணி நமக்கு விளங்காமலில்லை.                                                           பகுதி: ஐந்து

                                                சில சிக்கல்கள் மட்டும்

சாதிப்பாகுபாடு (தலித்கள்)


மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த (Inclusive Education) கல்வி நடைமுறைப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. அதற்கான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படவேண்டும். ஆனால் இன்னொரு பக்கத்தில் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குழந்தைகள் இன்னும் இப்போதிருக்கும் கல்வியில் ஒருங்கிணைக்க முடியாத போக்கு நிலவுகிறது. ஒவ்வொரு பள்ளியும் அங்குள்ள ஆதிக்கசாதிகளின் பிடியிலும் ஆதிக்கத்திலும் உள்ளது. சில சமயங்களில் ஆசிரியர்கள் கூட சாதியவாதிகளாக மாறும் அவலமும் உண்டு. தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிப்பெயர்கள் இன்றும் ‘அர்’ விகுதி தவிர்த்து ‘அன்’ விகுதியுடன் தான் எழுதப்படுகின்றன. இது ஒன்றும் தற்செயலான நிகழ்வல்ல. இது குறித்த உரிய அரசாணை இருந்தும் அவை வலியுறுத்தப்படுவதில்லை. இது ரகசியமாக வைக்கப்படுவதில்லை. இந்நிலை அம்மாணவர்களை கல்வி மற்றும் பள்ளிச் சூழலிலிருந்து அந்நியப்படுத்தவே செய்கிறது.

பழங்குடியினர்

பழங்குடிக் குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் பயில வாய்ப்பில்லாத சூழல் உள்ளது. பிற மாணவர்களது கேலி, கிண்டல்,ஏளனப் பேச்சுகள் இவர்களைப் பள்ளியை விட்டுத் துரத்துகின்றன. குறிப்பாக இருளர், வாக்ரியர் குழந்தைகள் இம்மாதிரியான நெருக்கடிகளுக்கு உள்ளாவது தொடர்கதை. மாணவர்களிடம் சகிப்புணர்வை வளர்க்க இந்த கல்வியமைப்பு ஏதும் செய்ய இயலாததாக உள்ளது. சாதாரண உணவு முறை, தொழில், நிறம், உருவம் போன்றவை இங்கு எள்ளலுக்குரியதாக கட்டமைக்கப்பட்டு குழந்தைகளின் பொதுப்புத்தியிலும் பதிய வைக்கப்பட்டுள்ள அவலமிது. கல்வியில் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களால் உருவாக்கப்படும் மேல்தட்டு அளவுகோல்கள் குழந்தைகள் மூலம் அடித்தட்டுக் குழந்தைகளையும் அவர்களது கல்வியையும் பாதிக்கிறது.

சிறுபான்மையினர்

ரங்கநாத் மிஸ்ரா ஆணையம். சச்சார் குழு ஆகியவற்றில் பரிந்துரைகள் இஸ்லாமியர்களின் கல்விநிலையை எடுத்துக்காட்டின. இக்குழந்தைகளையும் மற்றவராக (Others) அணுகும் போக்கு பள்ளிகளில் உள்ளது. இஸ்லாமிய பண்டிகைகளுக்கான விடுமுறைக்கு வாழ்த்து சொல்லும் சகிப்புணர்வு கூட நமக்கு இல்லை. ஆசிரியர்கள் மொழியில்கூட சில நேரங்களில் ‘நம்ம’ ‘அவங்க’ என்பதாக மாற இது, அக்குழந்தைகளை மேலும் அந்நியப்படுத்தும்.

குழந்தைகள் மையமின்மை

குழந்தைகள் மையமான பாடம், பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள் இங்கில்லை. மொத்தத்தில் குழந்தைகள் மையமான கல்வி இல்லை. அப்படிச் சொல்லப்பட்டாலும் அது பெரியவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான குழந்தை மையக்கல்வியே. பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கத்தில் குழந்தைகளின் பங்கேற்பு துளியும் இல்லை. அவர்களது கருத்துகள் கேட்கப்படுவதில்லை. மாணவர்களது விருப்பங்கள் யாராலும் கண்டுகொள்ளப் படுவதில்லை. வட்டார அளவிலான மொழி மற்றும் பாடங்கள் இல்லாததும் பெருங்குறையாகும். அந்த வட்டார மொழி வழக்கு அல்லாத ஆசிரியர்களால் தொடக்க நிலை வகுப்புகளுக்கு கற்றுக்கொடுப்பது இயலாத செயல். குழந்தைகளுக்கு இது மேலும் ஒரு சுமை. சுயகற்றல் – சுய மதிப்பீடு, திணித்தல் இல்லாத கல்வி சாத்தியப்படும் போதுதான் குழந்தை உரிமை பாதுகாக்கப்படும்.

வெற்றி மீதான் வெறி – தோல்வியை ஏற்க இயலாமை

பழங்காலத்தில் போருக்குச் செல்வதைப்போல ‘ஜெயித்துக் காட்டுவோம்’ என்று கும்பல்கள் கிளம்பிவருகின்றன. தேர்வுகள், மதிப்பெண்கள், வெற்றி என வெறியூட்டி வளர்க்கப்படும் விலங்குகள் அல்ல குழ்ழந்தைகள். இந்நிலை மாற பொதுத் தேர்வுகள் ஒழிக்கப்படவேண்டும். தோல்விகளை ஏற்க/கடக்க குழந்தைகள் பழக்கப்படுத்தப் படவேண்டும்.

சிறார்கள் குற்றவாளிகள் அல்ல

அவர்களது செயல்பாடுகளுக்குக் காரண – காரியத்தை நாமாகக் கற்பித்துக் குற்றவாளியாக்குவது தவிர்க்கப்படவேண்டும். அவர்களது குழந்தமையைக் கொண்டாடுவோம். குழந்தைகளது சுயமரியாதை, மாண்புகளைக் காப்போம்.

விளையாட்டு கற்றலுக்கு எதிரானது அல்ல.

விளையாட்டு என்பதும் ஒருவகையான கற்றலே. கணினி போன்ற எந்திரத்திரத்திற்கே ‘refresh’ தேவைப்படும்போது மனித உயிருக்கு விளையாட்டு அவசியமல்லவா? இன்று பள்ளிகளில் விளையாட்டு என்பது பெயரளவில் உள்ளது. 9 – 12 வகுப்புகளுக்கு விளையாட்டுப் பாடவேளைகள் ஆக்ரமிப்புக்கு உள்ளாகிவிட்டன.

நமது குழப்பங்கள் / மனத்தடைகள்

குழந்தைகள் பற்றிய நமது எண்ணங்கள் இவ்வாறே உள்ளது. இந்நிலை மாறவேண்டும்.
 • தவறு செய்பவர்கள்.
 • திருத்தப்பட வேண்டியவர்கள்.
 • கண்காணிப்பட வேண்டியவர்கள்.
 • “அடியாத மாடு படியாது”, என்ற கருத்து/நம்பிக்கை.
 • அறிவுக்கும் வயதுக்குமான உறவு தொடர்பு பற்றிய தப்பெண்ணங்கள்.
 • சட்ட உரிமைகள் பற்றிய புரிதலின்மை.

பொதுத்தேர்வுக்கு மட்டுமே முதன்மை தரும் போக்கு.

9,11 ஆகிய வகுப்பு பாடங்கள் தவிர்க்கப்பட்டு 10,12 வகுப்புப் பொதுத்தேர்வுகளுக்குத் தயாரிக்கும் போக்கு பரவலாக உள்ளது. இந்த கல்விக் கொள்ளையை அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. இதன் பாதிப்பு குழந்தைகளுக்குத்தான். 1-8 வகுப்புகளுக்கான CCE மேம்படுத்தப்படவேண்டும். 10-12 வகுப்புகளுக்கும் CCE யுடன் கூடிய பருவமுறை அமலாக்கப்படவேண்டும்.

+1, +2 வகுப்புகளில் இடஒதுக்கீடு மறுப்பு

+1 கணிதவியல் பிரிவில் சேர சில அரசுப்பள்ளிகள் கூட 450 மதிப்பெண்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பொறியியல் சார்ந்த பட்டம் அல்லது பட்டயம் படிக்கும் வாய்ப்பு 300 மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மறுக்கப்படுகிறது. +2 கணிதப்பாடத்தில் 70 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சியடைந்தவர்கள் பொறியியல் படிக்க தகுதி இருக்கும்போது பத்தாம் வகுப்பில் இடஒதுக்கீட்டை மறுத்து மதிபெண்கள் அளவுகோல்கள் ஏன்? அரசு ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை? +1 சேர்க்கையில் தமிழக அரசின் 69% இடஒதுக்கீடு அமல் செய்யவேண்டும்.

                                                                பகுதி: ஆறு

கதைகள் / நாடகங்கள் வழி தீர்வுகள்:

     கதை சொல்லல் ஒரு தொல்குடி வடிவம். ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் அனைத்தும் நமக்கு கதை சொல்பவை. கதை மற்றும் இசை வழியே தீராத நோயைக் குணப்படுத்தும் தொல்குடிப் பண்பாடு இன்றும் உண்டு.

     அதீத கற்பனைக் கதைகள் குழந்தைகளின் கற்பனை வளத்தை பறைசாற்றுபவை. லத்தீன் அமெரிக்க புதிய வகையான மாயாஜால யதார்த்த வகை பாணியிலான கதைகள் இங்கு அறிமுக ஆகியுள்ளன. மகாபாரத, ராமாயாணக் கதைகளிலும் இத்தகையக் கூறுகளைக் காணமுடியும்.

     தமிழவன் எழுதிய சில நாவல்கள் குறிப்பாக ‘சரித்திரத்தில் படிந்த நிழல்கள்’ விடுதலைக்குப் பிந்திய தமிழக – திராவிட இயக்க வரலாற்றை கேலியும் கிண்டலாகவும் அணுகுபவை. இம்மாதிரியான உத்திகள் குழந்தைகளிடத்தில் இயல்பாக வருவது தெளிவு. மணிரத்னத்தின் ‘இருவர்’ சினிமா கூட இவ்வகையிலான ஒரு முயற்சியே. ஆனால் தனிப்பட்ட அரசியல் காய்ப்புகள் நோக்கத்தைச் சிதறச்செய்யும் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு.

      1001 அரேபிய இரவுகள் கதைகள் மூலம் மரணதண்டனை ஒத்திப்போடப் படுகிறது. இங்கு கதை மரணத்திற்கு எதிராக செயலாற்றுகிறது.

     கதை சொல்ல முதலில் வகுப்பறை உரையாடலுக்கான வெளியாக மாறவேண்டும். கதை சொல்லல் இங்கு போதனையாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அது ஓர் அனுபவவீச்சு. ச.முருகபூபதி சொலவதைப்போல, “சுதந்திரத்தின் பன்முகப்பாதைகளைப் புரியவைக்க, சில நாட்களாக குழந்தைகளின் நண்பனாக, சமவயதுக்காரனாக இருக்க முயலவேண்டியது”, அவசியமானது.

     ச. முருகபூபதி, வேலு சரவணன் போன்றோர்கள் பல்லாண்டுகளாக குழந்தைகள் நாடக உலகில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இவர்கள் நாடகங்கள் ‘புரிதல்’ குறித்த கேள்விகள் எழுப்பப் படுவதுண்டு. பெரியவர்களுக்கு வேண்டுமானால் புரியாமற் போகக்கூடும். ஆனால் சிறுவர்களுக்கு எவ்வித புரிதல் சார்ந்த சிக்கல்கள் இல்லை.

     சிறுவர்கள் கதை உலகம் fantasy தன்மை மிக்கது. இந்த மாய உலகில் கதைகளின் சிறகுகள் பறவையென விரிகின்றன. இவற்றைப் புரிந்துகொள்ளவும், இணைந்து பயணிக்கவும் நமக்கு குழந்தை மனநிலை தேவைப்படுகிறது. இது இல்லாதபோது இந்த fantasy உலகம் நம்மை அந்நியப்படுத்துகிறது. இங்குதான் ‘புரிதல்’ பற்றிய சிக்கல் எழுகிறது. அப்போதுதான் நெருக்கடிகள் மிகுந்த இன்றைய யதார்த்த உலகை அவர்கள் கடக்க முடியும்.

     குழந்தைகளின் அகமன உலகம் புதிரானது; மிகவும் எளிமையானது. ஆனால் அவற்றை சிக்கலான ஒன்றாக கற்பனை செய்துகொண்டு, நாம் அவற்றை இழந்துவருகிறோம். அதை உணர நாமும் குழந்தைகளாக மாறுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. வயதாக, வயதாக நாம் குழந்தமையை முற்றாக இழந்துவிடுகிறது. அப்போது குழந்தைகளின் உலகம் நமக்கு மிகவும் அந்நியப்பட்டு விடுகிறது. குழந்தமையை தக்கவைக்க முடிந்த கோமாளி மனங்களால் இதை மீட்டெடுக்க முடிகிறது.

      நமது பள்ளிகள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதைப் பார்த்தால் பெரும்பாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இங்கு விழாக்கள், நிகழ்வுகள் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

     உரை, பேச்சு, சொற்பொழிவு என்பதாகவே இன்று கல்விக்கூட சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அகமன உணர்வுகளையும் கற்பனைத்திறனுக்கும் மீட்டெடுக்கும் நாடகத்திற்காக வாய்ப்பு முற்றாக இல்லாத சூழல்தான் இருக்கிறது.

     இங்கு ‘நாடகம்’ என்ற ஒரு போலியான வடிவம், அதாவது ஒருபக்கம் புராணக் குப்பைகள், ஒன்னொரு புறம் குழந்தைகள் பங்கேற்கும் பெரியோர் நாடகங்கள் நிகழ்த்தப்படுவதையும் சுட்ட முடியும். மேலும் கலை என்பதற்கான புரிதல்கள் கல்விக்கூடங்களில் பெருமளவில், நமது கல்வியமைப்பிலும் பாடத்திட்டங்களிலும் இல்லை. இந்த இடைவெளி குழந்தைகளுக்கு எதிரானவற்றால் பதிலீடு செய்யப்படுகின்றன.

     பலவகையான நீதிக்கதைகள் உண்டு. பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், புராண- இதிகாசக் கதைகள், ராமாயண-மகாபாரதக் கதைகள் ஆகியன அவற்றுள் சில. இவை அனைத்திற்கும் பின்னால் அரசியல் நோக்கம் உண்டு. இக்கதைகள் போதிக்கும் நீதி யாருக்கானது என்பதில் விமர்சனம் உண்டு. இவற்றை அப்படியே படியெடுத்துப் பயன்படுத்தியதுதான் நமது கல்வி வரலாறு.

     தந்திரம், சூழ்ச்சி என்றெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படும் காகம், நரிக் கதைகள் குழந்தைகளிடம் நற்பண்புகளை விடுத்து வேறுவகையான பண்புகளை வளர்ப்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளுக்கு தினமணி நாளிதழின் சிறுவர் இணைப்பில் ஷாஜகான் என்ற எழுத்தாளர் இம்மாதிரியான சிறுவர் கதைகளை மறுவாசிப்பு – மறுகட்டமைப்பு செய்து தொடராக எழுதிவந்தார்.

      பீர்பால் கதைகள் அக்பர் என்ற அறிவார்ந்த, சகிப்புத்தன்மையுடைய முகலாயப் பேரரசரை இழிவு படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இங்கு கட்டமைக்கப்படும் மதம் சார்ந்த முரண் எதிர்வு ஐந்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதற்கு நமது கல்விமுறை காரணமாக அமைந்துவிட்டது. இதைப்போல தெனாலிராமன் கதைகள் தெலுங்கு, சமஸ்கிருத மொழியறிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்த விஜய நகர அரசரான கிருஷ்ண தேவராயரை இழிவு படுத்தும் நோக்கிலானவை.

     இதர புராண-இதிகாசக் கதைகள் அனைத்துமே ஏமாற்றுதல், சூழ்ச்சி, தந்திரம் ஆகிய மற்றுமல்லாது வருணதர்மம், மனுதர்மம், இந்து மேன்மை, கடவுளர்களின் திருவிளையாடல்கள், போர், கொலைகளை நியாயப்படுத்துதல், பிராமண அல்லது சத்திரியக் குலமேன்மை என குழந்தைகளுக்கு ஒவ்வாத தீய சித்தரிப்புக்களைக் கொண்டவை. இவைகளைப் பற்றி எழுதினால் பக்கங்கள் நீளும். இவற்றை ஆழ்ந்து படிக்கும்போது இதிலுள்ள அபாயங்கள் புரியும்.

     புத்த ஜாதகக் கதைகள், முல்லா நஸ்ருத்தின் கதைகள் போன்றவற்றை மேலே கண்டவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம். போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாக புத்தர் சொல்லும் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் ஆகும். மேலே சொன்னவற்றுக்கு மாறாக இக்கதைகளும் பவுத்தம் போல் அறத்தை வலியுறுத்துவதாக இருக்கின்றன. 500 க்கு மேற்பட்ட இக்கதைகள் பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றை இதுவரை நமது நீதிபோதனை வகுப்புகளில் பயன்படுத்தியதே இல்லை. நமது முன்னுரிமை தந்திரம், ஏமாற்றுதல், சூழ்ச்சி, இழிவு செய்தல் ஆகியவற்றில் மட்டுமே இருக்கிறது.

      முல்லா கதைகள் வேறொரு பின்புலத்தில் இயங்குபவை. இதிலுள்ள தன்னைத்தானே பகடி செய்துகொள்ளும் தன்மை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சுய எள்ளலை, கிண்டலை வேறெந்த கதைகளிலும் காணமுடியாது. இது ஓர் வகையில் தமிழ்க் கோமாளி (விதூஷகன்) மரபுடன் ஒன்றியிருப்பதையும் உணரலாம்.

       இன்று காட்சி ஊடகங்களில் குழந்தைகள் அனுமான், கிருஷ்ணா, சக்திமான், ஸ்பைடர்மேன் போன்ற மத அடையாளத்துடனான சாகச நாயகர்களின் பிடியில் சிக்கிச் சீரழியும் போக்கு உள்ளது. இவை குழந்தைகளின் ஆழமனங்களில் வன்மம், பகை, வெறுப்பு போன்றவற்றை வளர்த்தெடுப்பவை. நீதிபோதனைக் கதைகளும் இவற்றில் மறுபதிப்பாக இருப்பதை ஏற்கவே முடியாது. முல்லா கதைகள் போன்றவை நமது குழந்தைகள் இழந்துபோன குழந்தமையை மீட்டெடுக்க உதவும்.

      நீதிபோதனை மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளை உருவாக்கும்போது நமது நாட்டின் பன்மைத்துவத்தையும் குழந்தைகளின் மனநிலையையும் சரியான புள்ளியில் இணைக்கவேண்டும் என்பதே நமது விருப்பம். இதுவரையில் கல்வியில் அத்தகைய மாற்றங்கள் நடைபெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

      தரம், ஒழுக்கம் என்பது போன்ற ராணுவக் கட்டுப்பாடுகள், நிறுவன விதிகள், பாடப்புத்தக சுமை, பயம் உண்டாக்கும் தேர்வுகள், பரிசு, தண்டனை, ரேங்க் வழங்கித் தரம்பிரித்தல், மாணவர்களின் பன்முகங்களை அழித்துப் பள்ளிக்குப் பொருந்தக்கூடிய ஒற்றை முகத்தை பிசைந்து வடித்தல் என்பதான கல்வி அதிகாரங்களை நோக்கி 19 ஆம் நூற்றாண்டில் குரல் எழுப்பிய டால்ஸ்டாய், அவரைப் பின்பற்றிய காந்தி, நவீனத்துவமும் வர்ணாசிரமும் இணைந்து இத்தகைய அடிப்படைக் கல்வியை சீரழித்த வரலாறு இங்குண்டு.

      குழந்தைகள் கேள்வி கேட்கும் ஆர்வம் இயல்பானது. படிப்பது என்பதுகூட மேலும் மேலும் வினாக்கள் கேட்பதே. குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பிறகு நம்மிடம் ஏதேனும் இருந்தால் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்யலாம். குழந்தமையை புரிந்துகொள்ளவும் அதைக் கொண்டாடாவும்கூட நாம் முயலவேண்டும்.

துணை நூற்பட்டியல்:
 1. சுவிசேஷங்களின் சுருக்கம், லியோ டால்ஸ்டாய், தமிழில்: வழிப்போக்கன், பாரதி புத்தகாலயம் வெளியீடு: மே 2016.
 2. தீக நிகாயம் – பௌத்த மறைநூல், தமிழில்: மு.கு.ஜெகந்நாத ராஜா, வெளியீடு: தமிழினி, டிசம்பர் 1988.
 3. பெரியார் கல்வி சிந்தனைகள், தொகுப்பு: அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலய வெளியீடு: டிசம்பர் 2007
 4. எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? – ஜான் ஹொல்ட் தமிழில்: அப்பணசாமி, புக் ஃபார் சில்ரன் வெளியீடு: டிசம்பர் 2007
 5. இது யாருடைய வகுப்பறை, ‘ஆயிஷா’ இரா.நடராசன், புக் ஃபார் சில்ரன் வெளியீடு: செப்டம்பர் 2013.
 6. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை, பாவ்லோ ஃப்ரையிரே, தமிழில்: இரா.நடராசன், புக் ஃபார் சில்ரன் வெளியீடு: 2008.
 7. குழந்தைமையைக் கொண்டாடுவோம் –முனைவர்.என்.மாதவன், புக் ஃபார் சில்ரன் வெளியீடு: டிசம்பர் 2013.
 8. டேஞ்சர் ஸ்கூல்! சமகால கல்வி குறித்த உரையால், இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியீடு: 2012.
 9. மூன்றாம் உலகின் குரல், பவுலோ பிரையரின் கல்விச் சிந்தனைகள், மக்கள் கண்காணிப்பகம் வெளியீடு: நவம்பர் 2009
 10. தமிழகப் பள்ளிக் கல்வி பிரச்சினைகளும் தீர்வுகளும் மக்கள் கல்விக் கூட்டமைப்பு வெளியீடு: 2009

செவ்வாய், நவம்பர் 15, 2016

53. ஆ. குழந்தைகளிடம் கற்பதும் கற்பிப்பதும்

53. ஆ. குழந்தைகளிடம் கற்பதும் கற்பிப்பதும்

(இரண்டாம் பகுதி. நேற்றைய பதிவின் தொடர்ச்சி.)

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.) 
 

(இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து, புக் ஃபார் சில்ரன் வெளியிட்ட, அப்பணசாமி மொழிபெயர்ப்பில் ‘எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?’ என்ற ஜான் ஹோல்ட் நூல் குறித்த பதிவு.)

       ஒரு குழந்தை எவ்வாறு கற்கிறது? ஜான் ஹோல்ட் ஒரு வயலின் கலைஞர். குழந்தைகள் வயலின் கற்பதை வைத்து தனது ஆய்வினைச் செய்கிறார். இதற்கு குழந்தைகள் நீண்ட காலம் எடுத்துக்கொள்வதில்லை.

     “மிகச்சிறிய தரவுகளிலிருந்து கூட தெளிவான முடிவுகளைப் பெறுவதில் வயது வந்தோரைவிட, மிகத்துரிதமாக ஒரு குழந்தை கிரகித்துக் கொள்கிறது அல்லது ஒரு தரவு தமக்கு ஆதரவாக இல்லை என்றால் அதனைத் துரிதமாக நிராகரித்து ஒதுக்குகிறது. ஆனால், அக்குழந்தைகளுக்குக் ‘கற்றுத்தரும்’ நமது ஆர்வக் கோளாறுகளால், இவற்றையெல்லாம் மிகவும் துரிதமாக மோதி அழித்துவிடுகிறோம்”, என்று தமது ஆய்வில் கண்டடைகிறார் (பக். 89).

        காரெத் மாத்யூஸ் எழுதிய ‘தத்துவமும் குழந்தையும்’ என்ற நூலை மேற்கோள் காட்டுகிறார். “குழந்தைகளின் ஆச்சரியமும், கோபமும் கொண்ட பல கேள்விகள், பொதுவாக இவை முட்டாள்தனமானவை என்று நம்மால் புறக்கணிக்கப்படும் இக்கேள்விகள், தத்துவம் தோன்றிய நாளில் இருந்து, மாபெரும் சிந்தனையாளர்களும், ஞானிகளும் விடை காண முடியாமல் போராடிவரும் கேள்விகளாக உள்ளன”, (பக். 117). என்று சொல்லும்போது இந்தியத் தத்துவமரபில் புத்தர் வலியுறுத்திய பரிநிப்பாண சிந்தனா முறை குழந்தைகளுக்கு மட்டும் சாத்தியப்படுவதை உணரமுடிகிறது. குழந்தைகள் மட்டுமே தர்க்கங்களுக்குள் செல்வதும் பெரியவர்கள் அதிலிருந்து விலகுவதும் குழந்தைமையின் தனித்தன்மையாக கருதலாம்.

      “நவீன கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ள வகுப்பறைகளில் கூட பேச்சு முறை பழைய மாதிரியிலேயே உள்ளது. ஆசிரியர்கள்தான் பெரும்பாலான நேரமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு குழந்தைகளிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அதுவும் தமது வகுப்பில் குழந்தைகள் கவனமாக இருந்தார்கள், தாம் கூறியவற்றைப் புரிந்து கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மட்டும்”, (பக். 142). இதுதான் தற்போது மேற்கொள்ளப்படும் கல்விப்புரட்சியாக உள்ளது. சுதந்திரமாகப் படிக்கவும், சிந்திக்கவும், பேசவும் கூட ஒரு இடத்திற்க்கு இந்த சுதந்திர வகுப்புகளை மாற்றுவது போன்ற வழிகளை ஆராய வலியுறுத்துகிறார்.

      வீட்டில் மூத்த குழந்தைகள் இருந்தால் இளைய குழந்தைகள் எளிமையாகக் கற்றுக்கொள்ளும் என்பது நாமறிந்த ஒன்றல்லவா! குழந்தைகளுக்குப் நிரம்பத் தெரிந்த பெரியவர்களைவிட குறைவாகத் தெரிந்த இவர்களையே அதிகம் விரும்புகின்றன. “எனது வகுப்பறைகளில், எனது புல்லாங்குழலைவிட எனது கொம்பு மீதே பெரும்பாலான குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டியது ஏன் என்பது எனக்கு இப்போது புரிகிறது. புல்லாங்குழல் வாசிப்பதில் நான் ஒரு தேர்ந்த இசைக்கலைஞன் என்பதும், கொம்பு ஊதுவதில் நான் தொடக்க கட்டத்திலேயே இருந்தேன். அதாவது ஒரு குழந்தை முயற்சிக்கும் அளவிலேயே எனது திறன் இருந்தது என்பதும்தான் காரணம்”, (பக். 148) என்று சொல்வது இங்கு நோக்கத்தக்கது.

      குழந்தைகள் நம்மிடம் விளையாடுவதற்கான இயல்பான சூழல்கள் எப்போது அமையும்? அக்குழந்தையுடைய சுதந்திரம், நமது மேதமைத்தனம் ஆகியவற்றின் எல்லைக்கோடு இங்கு முதன்மையானது. “இந்த விளையாட்டில், நான் எல்லாம் அறிந்தவன், அவளுக்கு ஒன்றும் தெரியாது என்ற உண்மையை நான் மறைத்துவிட முடியாது. அவள் விலகுவதற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதற்கும் இது ஒன்றே போதுமானது”, (பக். 150) என்று சொல்வதையும் அவதானிக்கலாம்.

      குழந்தைகளிடம் விளையாட்டுக் கற்பித்தல் சாதனங்களை அளித்துவிட்டு, நாம் சற்று ஒதுங்கியிருப்பது நலம். வேறு எந்தக் கேள்விகளையும் கட்டளைகளையும் திணிக்காமல், குழந்தைகள் சுதந்திரமாக அவற்றைக் கையாளவும், சோதிக்கவும், கட்டமைக்கவும் அனுமதிக்கவேண்டும். ஆனால் இது நடைபெறுவதேயில்லை.

     சுய மதிப்பீட்டு முறையை சிலவகையான கற்றல் கருவிகளுடன் அறிமுகமாகியுள்ள மாண்டிசோரி முறை கூட மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, குழந்தைகளின் சுதந்திரம், விருப்பார்வத்தைத் தடைசெய்யும் வகையில் ஆசிரியர்களின் தலையீடு இருப்பதும் இங்கு விவாதிக்க வேண்டிய ஒன்று. குழந்தைகளுக்குக் கற்பிப்பவர்கள், அக்குழந்தைகளிடம் கற்றுக்கொள்பவராகவும், சக குழந்தையாகவும் இருப்பதே போதுமானது.

      இங்கு அனைத்துவிதமான தேர்வுகள், சோதனைகள் மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் மிக மோசமாக சிதைப்பதை எடுத்துக்காட்டுகிறார். நான் வைக்கும் ஒவ்வொரு சோதனையும் குழந்தைகள் மீது கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் . இது குழந்தைகளை வெகுவாகப் பாதிக்கிறது.

     சீனக் குழந்தைகளின் ஓவியக் காலண்டர் ஒன்றைக் குறிப்பிட்டு குழந்தைக் கலைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கிறார். மேலும், “ தம்மைச் சுற்றியுள்ள உலகைக் கண்டுணரவும் அதுகுறித்து தான் உணரந்தவற்றை வெளிப்படுத்தவும் ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்த, தேவையான வழிமுறை என்பதை மீண்டும் ஒருமுறை முன்பைவிட அதிகமாக”, (பக். 218) வலியுறுத்துகிறார்.

      குழந்தைகளின் அகவுலகம் புனைவுத்தன்மை மிக்கது. இவர்களது அதீத புனைவாற்றல் மிகவும் இயல்பான ஒன்று. இவற்றைப் பெரியவர்களால் ஈடு செய்யமுடியாது என்பதில் அய்யமில்லை. “யதார்த்த உலகில் இருந்து விலகுவதற்காக அல்ல; அந்த உலகில் நுழைவதற்காகக் குழந்தைகள் அதீத புனைவுகளைப் (Fantasies) பயன்படுத்துகிறார்கள்”, (பக். 240) என்றும் சொல்கிறார்.

     தமிழ் இலக்கியச் சூழலில் குழந்தைகள் சார்ந்து இயங்கும் சிலர் இத்தகைய அதீத புனைவுகளைத் திறம்பட பயன்படுத்துவதைக் காணலாம். கதைகளைவிட நாடகம் இதற்கேற்ற நவீன வடிவம். வேலு சரவணன், ச.முருகபூபதி போன்றோர் அதீத புனைகளைத் தகுந்த முறையில் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இந்தியச் சூழலில் இவை புராணக்குப்பைகளில் சிக்கிக்கொள்வது மிக ஆபத்தானது. தொலைக்காட்சிகள் உற்பத்தி செய்யும் இன்னொரு ஆபத்தையும் ஜான் ஹோல்ட் சுட்டுகிறார். “இந்தப் போலிப்புனைவுகள் தொலைக்காட்சிகளில் தயாரிக்கப்படும் ஆயத்தநிலை புனைவுகளைப் போல, இந்த உலகில் தமது சொந்த அனுபவங்களிலிருந்தும், அதன் சொந்த உணர்வுகளைப் பெறும் தேவையிலிருந்தும் உருவாகும் உண்மையான புனைவுகளை குழந்தையிடமிருந்து விரட்டியடித்து விடும்”, (பக். 253) என்று ஜான் ஹோல்ட் எச்சரிக்கிறார்.

      குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்னர் பெரும்பாலான அறிவினைப் பெற்றுவிடுகிறார்கள். இதனைக் ‘கற்பித்தல் இல்லாத கற்றல்’ என்று அழைக்கும் பெபர்ட் –ன் மேற்கோள், பள்ளிகளில் கற்பிக்கப்படும் பயனற்ற, அர்த்தமற்ற கணிதத்தை விளாசுகிறது. (பக். 264).

     “பல் சக்கரங்கள், துரும்புகள், இலைகள், குழந்தைகளின் உலகை நேசிக்கின்றன. இதனால் அதைப்பற்றி, அந்த உலகைப் பற்றி கற்றுக்கொள்ள மிகவும் விரும்புகிறார்கள். அது அன்பாக, நேசமாக இருப்பதால், அதில் தந்திரங்களோ, புதிய தொழில்நுட்பச் சிந்தனைகளோ இல்லை. எல்லா கற்றல்களும் இதயத்தில் பதிந்துள்ளன”, (பக். 272) என்று சொல்லும் ஜான் ஹோல்ட் ஒரு குழந்தையாகவே உருவெடுக்கிறார்.

     “குழந்தைகள் குறித்த விஷயங்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அவர்களை நெருக்கமாகப் பார்ப்பதற்கும், அவர்கள் மீது மேலும் நேசம் செலுத்தி, அவர்களிடம் நம்பிக்கையும், உறுதிப்பாடும் கொண்டு, அவர்களுடன் கூடுதலான மகிழ்ச்சி செலுத்துவதை ஊக்கப்படுத்தவே இப்புத்தகம்”, (பக். 268). என்று சொல்கிறார். இதன் நோக்கம் நல்லபடியாக நிறைவேறியிருக்கிறது. இத்தகைய முயற்சிகளை ஆசிரியர்கள், பள்ளிகள், அரசுகள் முன்னெடுப்பதில்தான் இதன் விளைவுகள் தெரியும். அடிப்படைகள் மாற்றமடையாத வரையில் இதுவும் கானல் நீரே!எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

ஜான் ஹோல்ட்

தமிழில்: அப்பணசாமி

வெளியீடு:

இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து

புக் ஃபார் சில்ரன்

(பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..)முதல்பதிப்பு: டிசம்பர் 2007,

மூன்றாம் பதிப்பு: நவம்பர் 2014

பக்கம்: 272

விலை: ரூ. 170தொடர்பு முகவரி:பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com