வெள்ளி, டிசம்பர் 10, 2021

ஓசோன் கற்பனைகள்

 ஓசோன் கற்பனைகள்

மு.சிவகுருநாதன்

 


      ஏதேனும் ஒன்று சிறப்பு எனில் அதை எல்லாவற்றிலும் இட்டு நிரப்பி, ‘எல்லாம் வல்ல ஒன்றாக’ மாற்றும் போக்கு இங்கு காணப்படுகிறது. வேம்பின் மருத்துவக் குணத்திற்காக அதன் குச்சியை பல்துலக்கும் பிரஷ் ஆகப் பயன்படுத்தச் சொல்லித் தவறான பழமொழியை எடுத்துக்காட்டுவது உண்டு. வேம்பின் சாறு வாயில் படுவதைத் தவிர வேறு ஒன்றும் பலனில்லை. இதன் கடினத்தன்மை பற்கள் மற்றும் ஈறுகளைப் பாதிக்கும்.  (ஆலும் வேலும் பல்லுக்குறுதி; வேல் – கருவேல மரம், வேம்பு அல்ல.) இதைப்போலவே துளசியின் மருத்துவக்குணம் ஓசோன் வாயுவை உற்பத்தி செய்வதல்ல. இங்கு பகுத்தறிவு, அறிவியல் எல்லாம் மறந்து மீண்டும் ஒருவித மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படுவதைப் பார்க்கிறோம். அரசியல், சமூகம் என அனைத்திலும் இவ்வியாதி நிறைந்துள்ளது. இத்தகைய புனைவுகள் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் வலம் வருகின்றன. இவை படிப்படியாக தமிழக அரசு தயாரிக்கும் பாடநூல்களில் கூட நுழைந்துவிடுகின்றன.

     ஆண்டுதோறும் செப்டம்பர் 16 உலக ஓசோன் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அண்மையில் இதைக் கடந்தபோது சமூக ஊடகங்களில் சில செய்திகள் கண்ணில் பட்டிருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக சில:  

  • துளசிச் செடி இரவிலும் ஆக்சிஜனை வெளியிடும். 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடும்.
  • பெண்கள் கோலமிடுவது, துளசி மாடத்தைச் சுற்றுவது; ஆண்கள் அந்நேரத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றால் அதிகாலை நேரங்களில் பெருமளவு கிடைக்கும் ஓசோனை சுவாசிக்க முடியும்.
  • அரச மரமும் மூங்கில் மரமும்  24 மணிநேரமும் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிவிடும்.
  • வேம்பு மற்றும் புங்கை மரங்கள் அதிகளவு ஆக்சிஜனை வெளியிடும்.

     மேற்கண்ட கருத்துகள் எதுவும் அறிவியல்பூர்வமானது அல்ல. எனினும் அறிவியல் என்கிற பெயரில் இவை தொடர்ந்துப் பரப்பப்பட்டு வருகின்றன. 

        “மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் (O3)  ஆன மூலக்கூறுகளைக் கொண்ட ஓசோன் ஒரு நச்சு வாயுவாகும். இது வளிமண்டலத்தில் மிக அரிதாகக் காணப்படும் வாயுவாகும். வளிமண்டலத்தின் ஒவ்வொரு பத்து மில்லியன் மூலக்கூறுகளில் ஓசோன் மூன்று மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஓசோன் படலம் உண்மையில் ஓர் வளிமண்டல அடுக்கு அல்ல. இது படுகையடுக்கில் (Stratosphere) 19 முதல் 30 கி.மீ. வரை பரவிக் காணப்படுகிறது”, என்று  ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் (2018) சொன்னது. அடுத்த ஆண்டே (2019) இவ்வரிகள் இடம்பெற்ற மாசுறுதல் (Pollution) தலைப்பின் கீழுள்ள சில பக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன. இது தவறான செய்தி என்பதால் நீக்கப்பட்டது என்றுகூட பலர் நினைக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. உண்மைகள் பல நேரங்களில் நிலைநாட்டப்படுவதில்லை; மாறாக கற்பனைகளும் நம்பிக்கைகளும் கோலோச்சுகின்றன.

     இத்தகைய தவறான நம்பிக்கைகளின் அடிப்படையில் தரங்கம்பாடி கடற்கரைக்கு ஓசோன் கடற்கரை என்று சொல்லி,  அறிவியலுக்குப் புறம்பாக, தரங்கம்பாடி நூற்றாண்டு லயன்ஸ் சங்கத்தின் சார்பில்  “Ozone Rich Beach – அதிகமாக வீசும் ஓசோன் காற்று”, என்னும்  வாசகங்களுடன்  அறிவிப்புப் பலகையும் வைத்திருக்கின்றனர்.  அறிவியல் தவறான புரிதலுடன் கையாளப்படுவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

    +2 அறவியலும் இந்தியப் பண்பாடும் நூலில் ‘இந்தியப் பண்பாடும் சுற்றுச்சூழலும்’ என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அதில் அரசமரம், “பகலிலும் இரவிலும் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுவதால், இம்மரம், ‘மரங்களின் அரசன்‘என்றும் அழைக்கப்படுகிறது”. (பக்.228) தொற்றுநோயாகப் பரவும்  இத்தகைய அபத்தங்களை எளிதில் தடுக்க முடியும் என்று தோன்றவில்லை.  

     காற்று ஒரு கலவை என்றும், அதில் நைட்ரஜன் (78%), ஆக்சிஜன் (21%), பிற வாயுக்கள் (1%) என்றும் பாடநூல்களில் படித்திருப்போம். இந்த ஒரு விழுக்காட்டில் அதிகளவு (0.93%) இருப்பது ஆர்கான் மட்டுமே. எஞ்சியவை மிகக்குறைவான அளவிலேயே கலந்துள்ளன. 0.04% – கார்பன் டை ஆக்சைடு, 0.0018% – நியான், 0.0005% – ஹீலியம், 0.00006% – ஓசோன், 0.00005% – ஹைட்ரஜன் என்கிற அளவில்தான் இருக்கின்றன. நீராவியின் அளவு (0-0.4%) மாறுபடும் ஒன்றாக உள்ளது. 

     வளிமண்டலத்தில் நாம் வசிக்கும் கீழடுக்கில் (Troposphere) துருவங்களில் 8 கி.மீ. உயரத்திலும் நிலநடுக்கோட்டுப்பகுதிகளில் 18 கி.மீ. உயரத்திலும் பரவியுள்ளது. இதற்கு அடுத்துள்ள படுகையடுக்கு அல்லது மீள் அடுக்கில் (Stratosphere) தான் ஓசோன் நிரம்பியுள்ளது. 

     கீழடுக்கில் ஒருவேளை ஓசோன் வாயு இருந்தால் அதை சுவாசிக்கும் நாம் பாதிப்படைவோம். நமக்கு புற்றுநோய் மற்றும் சுவாசக் கோளாறுகளும் ஏற்படலாம். கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமைக்குடில் வாயுகளைப் போல ஓசோனும் இங்கு அதிகரிப்பது  மாசாகும்.   

      கார், பைக் எஞ்சின்களில் வடிவமைப்பில் ஓசோன் வாயு அதிகளவில் உற்பத்தியாகாமல் இருக்க கவனம் செலுத்தப்படுகிறது. பல்வேறு வழிகளில் கீழடுக்கில் சிறிதளவு உற்பத்தியாகும் ஓசோன் வாயுவும் சுமார் 20-50 கி.மீ. உயரத்திற்குச் செல்லவும் முடியாது. அதைப்போல அங்குள்ள ஓசோன் கீழிறங்கி வரவும் இயலாது. மூன்று ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட ஓசோன் ஆக்சிஜனைவிட குறைவான நிலைப்புத்தன்மை உடையது. இவை எளிதில் ஈரணு ஆக்சிஜனாக மாற்றமடையும். புற ஊதாக்கதிர்களை உறிஞ்சுவதில் இரண்டணு ஆக்சிஜனும் மூன்றணு ஓசோனும் இணைந்து பங்காற்றுகின்றன.

      20 முதல் 50 கிமீ உயரத்தில் மீள் அடுக்கில் ஓசோன் இருப்பது மட்டுமே பூமிக்கும் நமக்கும் நன்மையாகும்.  மாறாக கீழடுக்கில் ஓசோன் உற்பத்தியானால் அது ஒரு நச்சு வாயு; அது உயிரினங்களுக்குப் பெருந்தீமையாகும். எந்தத் தாவரமும்  ஓசோனை வெளியிடுவதில்லை. இவர்கள் சொல்வதைப்போல துளசிச்செடி விடியற்காலைப் பொழுதில் ஓசோனை வெளியிடுமானால் அது பார்த்தீனியத்தைப் போன்று நச்சுச்செடியாகும். அச்செடி வளர்ப்பதைத் தடை செய்ய வேண்டியிருக்கும்!

       ஓசோன் வாயுப் படலம் இந்த புவிப்பந்தைப் புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது என்பது உண்மைதான். அதனால் அந்த வாயுவை நாம் சுவாசிக்க வேண்டும் என்பதில்லை. அதன் பயன்பாடு வேறு.  பாம்பின் நஞ்சு ஒரு புரதம், மருந்து தயாரிக்க உதவும் பொருளும் கூட. அது நமது ரத்தத்தில் கலந்தால் நமக்கு நஞ்சாகிறதல்லவா! அதைப்போலவே ஓசோன் வாயுவும், சுவாசிக்க ஏற்றதல்ல. ஆக்சிஜனைத் தவிர பிற எந்த வாயுவும் உயிரினங்கள் சுவாசிப்பதற்கானது அல்ல.      

       ஒரு தாவரம் 24 மணி நேரமும் ஆக்சிஜனை எப்படி வெளியிட இயலும்?  அறிவியல் அடிப்படையற்ற தவறான புரிதலும் இதற்குக் காரணமாகிறது. நாம் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறோம்; தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்கின்றன என்று எளிமையாகச்  சொல்லித்தருவது சரியல்ல.  இதில் தாவரங்கள் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் தேவையில்லை என்பதாகவும் பொருள் கொள்ளப்படுவதும் நடக்கிறது. இக்குழப்பங்கள் உண்டாகப் பள்ளிப் பாடநூல்களுக்கும் பெரும்பங்கு உண்டு.

     எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் ‘புவி வெப்பமயமாதல்’  என்ற தலைப்பில் கீழ்க்கண்ட வரிகள் காணப்படுகின்றன.

    “நாம் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை சுவாசித்து  கார்பன் டை ஆக்சைடை கழிவுப் பொருளாக வெளியிடுகிறோம். அதேவேளை   மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்துக்கொண்டு ஒளிச்சேர்க்கையின் போது   ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன”.  (பக்.274, திருத்திய பதிப்பு:2021)  இங்கு சுவாசித்தலும் ஒளிச்சேர்க்கையும் இணைக்கப்படுகின்றன. திருத்தத்திலும் தெளிவு இல்லை. இவ்வரிகள் முந்தைய பதிப்பில் (2019) கீழக்கண்டவாறு இருந்தன.

     “வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை நாம் உள்ளிழுத்து கார்பன் டை ஆக்சைடை கழிவுகளாக வெளியிடுகிறோம். இதையொட்டி  மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி  நமக்கு ஆக்ஸிஜனை வழங்குகின்றன”.  (பக்.110)     

      ஆறாம் வகுப்பு முதல் பருவ ஆங்கிலப் பாடத்தின் இரண்டாவது அலகில் “When the Trees Walked”  என்ற Ruskin Bond  எழுதிய பாடம் உள்ளது. அப்பாட எழுத்துப் பயிற்சி ஒன்றில் “take in carbon dioxide and give out oxygen”, என்று குறிப்பிடப்படுகிறது (பக்.123). இங்கு ஒளிச்சேர்க்கை (photosynthesis), சுவாசித்தல் (respiration)  பற்றி எதுவுமில்லை.  இம்மாதிரியான தகவல்களும் பாடங்களும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன. 

     நான்காம் வகுப்பு அறிவியல் மூன்றாம் பருவத்தில் ‘நாம் சுவாசிக்கும் காற்று’ (அலகு 3) என்ற பாடம் உள்ளது.  இத்தலைப்பே சிக்கலாக உள்ளது. ‘நாம்’ என்பது தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்காதுதானே!  ‘உயிரினங்கள் சுவாசிக்கும் காற்று’ அல்லது வெறுமனே ‘காற்று’ என்றுகூட தலைப்பு இருக்கலாம்.

   இப்பாடப் பயிற்சிகளில் ‘முயல்வோம்’ என்ற தலைப்பில், ‘பின்வருவனவற்றை வகைப்படுத்துக’, என்று ‘ஆக்ஸிஜனைக் கொடுப்பவை / கார்பன் டை ஆக்சைடை வழங்குபவை’ எனப் பிரிக்கச் சொல்கிறது.

    “நாய், பூனை, தென்னை மரம், குரங்கு, கத்திரிக்காய் செடி, பப்பாளி செடி” ஆகியன பட்டியலில் உள்ளன. இந்த ஆறில் உள்ள ‘நாய், பூனை, குரங்கு’ ஆகிய  மூன்று விலங்குகளை ‘கார்பன் டை ஆக்சைடை வழங்குபவை’ என்றும் ‘தென்னை மரம், கத்திரிக்காய் செடி, பப்பாளிச் செடி’ ஆகிய மூன்று தாவரங்களையும் ‘ஆக்ஸிஜனைக் கொடுப்பவை’ என்றும் வகைப்படுத்துமாறு பாடநூல் சொல்கிறது.

    ‘நாய், பூனை, குரங்கு’ போன்ற விலங்குகளும்  என்றும் ‘தென்னை மரம், கத்திரிக்காய் செடி, பப்பாளிச் செடி’ போன்ற தாவரங்களும்  கார்பன் டை ஆக்சைடை வழங்குபவைதானே! சுவாசத்தின்போது ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டால்  கார்பன் டை ஆக்சைடு வெளியிட்டுத்தானே ஆகவேண்டும்? ‘கார்பன் டை ஆக்சைடை வழங்குபவை’ பட்டியலில் ஆறும் இடம் பெறவேண்டுமல்லவா! ஆனால் பாடநூல் இதைக் கணக்கில் கொள்ளவில்லை.

    இவற்றைப் படிக்கும் குழந்தைகள் கட்டாயம் குழம்பித்தான்  போவார்கள். விலங்குகள் ஆக்சிஜனை சுவாசிக்கும்; தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கும் என்கிற எளிய சமன்பாட்டிற்கு வந்துவிடுவார்கள். பெரும்பாலும் இதுதான் நடக்கிறது. உயிரினங்கள் அனைத்தும்  ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கின்றன. தாவரங்கள் மற்றொரு பணியாக, உணவு தயாரிக்கப் (ஒளிச்சேர்க்கை) கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்துகின்றன என்கிற உண்மையை  தெளிவாகக் குழந்தைகளிடம் உணர்த்தப் பாடநூல்களும் தவறிவிட்டன.     

      சுவாசிக்கும் போது மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களும் ஆக்சிஜனை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. அப்போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. சுவாசித்தலில் கழிவாக வெளியான கார்பன் டை ஆக்சைடு மட்டுமல்லாது வளிமண்டலத்தில் உருவாகும் கார்பன் டை ஆக்சைடையும் சேர்த்து தாவரங்கள் ஒளிச்சேர்க்கை எனப்படும் உணவு (ஸ்டார்ச்) தயாரித்தலில் பயன்படுத்துகின்றன. அப்போதுதான் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கின்றது. இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படுகிறது. காடழிப்பு மற்றும் அதிகளவிலான எரிபொருள் பயன்பாட்டால் காலநிலை மாற்ற விளைவுகளை நாம் எதிர்கொள்கிறோம். 

        தாவரங்கள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபட சூரிய ஒளி, பச்சையம், நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியன தேவைப்படுகிறது. தாவரங்கள் எதுவும் பகலில் மட்டுமே ஒளிச்சேர்க்கையில் ஈடுபட முடியும். ஒரு தாவரம் அதிகளவு ஆக்சிஜனை வெளியிடுகிறது என்றால் அத்தாவரம் அதிக உணவைத் தயாரிக்கிறது என்று பொருள். இது பச்சையம் போன்ற இதர காரணிகளையும் உள்ளடக்கியது. தாவங்கள் பகலில் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடும். அதைப்போல இரவிலும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொள்ளவும் வழியில்லை.  24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுவதெல்லாம் அதீதக் கற்பனையன்றி வேறில்லை.

     நம்பிக்கைகள் மனிதர்களுடன் இணைந்துப் பிறந்தவை. பகுத்தறிவும் அறிவியலும் இவற்றின் மெய்ப்பொருள் காண நமக்கு உதவுகின்றன.  இத்தகைய நம்பிக்கைகள் மீது அறிவியல் முலாம் பூசி ஏமாற்றும் சூழ்ச்சி இதில் அடங்கியிருக்கிறது. இதன் பின்னால் சாதி, மத, இன வெறுப்பை வளர்க்கும் மறைமுகத் திட்டங்கள் இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

 

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ், டிசம்பர் 2021

வெள்ளி, நவம்பர் 26, 2021

விமர்சனங்களுக்கு அப்பால்...

 

விமர்சனங்களுக்கு  அப்பால்...

 

 

மு.சிவகுருநாதன்

 


 

 

 

          எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் (நமது மாணவர்கள் – நவ. 23/2021) வாசகி ஒருவரின் மடலுக்குப் பதிலாக எழுதிய குறிப்பொன்றில் அரசுப்பள்ளிகளையும் மாணவர்களையும் (பொறுக்கிகள்) என்று விமர்சித்தது இன்று விவாதப் பொருளாகியுள்ளது. இது குறித்த மூன்று எதிர்வினைகளை மூத்த தோழர் வே.மு. பொதியவெற்பனார் எனும் திருவாளர் பொதிகைச் சித்தர் முகநூலில் பதிவிட்டு என்னையும் அதில் இணைத்திருந்தார். அதில் எனது கருத்தாக கீழ்க்கண்ட எதிர்வினையாற்றியிருந்தேன். 

 

        "ஜெமோவின் அரசியல் எல்லாரும் அறிந்ததுதான். பெரும்பாலான ஆசிரியர்கள் அவரை படைப்பாளியாகவோ  அல்லது வலது சாரியாகவோ  அறிந்திருக்கவில்லை என்றே கருதுகிறேன்.

 

        ஜெமோவின் கருத்துகளில் நமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் கண்ணியமற்ற எதிர்வினைகள் நமக்கும் அவருக்குமான இடைவெளிகளைக் குறைக்கின்றன என்று கருதுகிறேன். 

 

  ஜெமோ காலந்தோறும் இம்மாதிரியான வசைகளை உற்பத்தி செய்யும் படைப்பாளி என்பதை நாம் உணரும் மற்றொரு தருணம் இது. அவ்வளவே!

 

          இதே ஜெமோ தனது மகன் +1 வகுப்பில் அரசுப்பள்ளியை விரும்பித் தேர்வு செய்தபோது, அரசுப்பள்ளிகளைப் பாராட்டி எழுதியதும் உண்டு".

 

(மு.சிவகுருநாதன்)

 

      இதன் பொருட்டு சினங்கொண்ட தோழர் திருவாளர்  பொதிகைச்சித்தர் அவர்களது எதிர்வினையாகவும், பின்னர் தனிப் பதிவாகவும்  கீழ்க்காணும் பத்தி வெளியானது. 

 

      "கல்வியாளர் சிவகுருநாதர் முனியப்பர் அகராதியில் வலது சாரிப் படைப்பாளி   திரு. ஜெயமோகனார் அவர்கள்; மாபெரும் மனித குலப் பேராசான்களை இழிவுபடுத்தி அவதூறு தூற்றினாலும்  அதற்குப் பெயர் வசை, அவ்வளவுதான். ஆனால் அதற்கு நாம்  உடனடியாக எதிர்வினை புரிந்திட நேர்கையில் ஒருமையில் பேசவோ 'அவையல் கிளவி'களையோ பாவிக்க நேர்ந்தால் அதற்குப்பெயர் 'கண்ணியக்குறைவு'. சரிங்க அப்படியே இருந்துட்டுப் போறோம். தாங்களே அவருடன் தங்கள் கண்ணியம் மீதூர்ந்த மாபெரும் உரையாடல்களை நட்பு முரண்பாட்டோடு நடாத்தி அவரை வென்றெடுப்பீர்களாக!

 

பார்வை:

 

 

சிவகுருநாதன் முனியப்பன் 

 

       மன்னிக்கணும் இங்கு அர் விகுதியைப் பாவிக்க இயலாமைக்காக. அவ்வாறு பாவித்தால் தங்கள் பெயரைக் 'கொளுவி' விட முகநூலார் இடந்தாரார்". (பொதிகைச் சித்தர்)

 

       நான் ஒன்றும் கல்வியாளர் இல்லை. கல்விப்புலத்தில் பணி செய்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்!

 

   'ஜெய்பீம்' படத்தின் எதிர்வினைகள் அதன்  மையப்புள்ளியை விட்டு எங்கோ நகர்ந்துவிட்டதுபோலவே இங்கும் நடக்கிறது. இதுதான் நம் சூழலின் அவலம் போலும்! 

 

       இதன் மறுதலை ஜெயமோகனை ஆதரித்துக் கொண்டாடுதல் என்பதல்ல. அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எதையும் புனிதப்படுத்துவதும் விமர்சனத்திற்கு ஆட்பட்டதாக மாற்றுவதும் மிக மோசமானச் சூழலாகும். 

 

  அரசுப்பள்ளிகளும் ஆசிரியர்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ‘குரு’வை விமர்சிக்கக்கூடாது என்பது வலதுசாரி சித்தாந்தமே. முன்பொருமுறை 'ஆனந்தவிகடன்'  இதழில் தோழர் பாரதிதம்பி எழுதிய கட்டுரைத் தொடர் ஆசிரியச் சமூகத்தால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. ஆனால் சமஸ் எழுதுபவை கொண்டாடப்படுகின்றன. இந்த இடைவெளியை, உள் அரசியலை, நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளும் நிலையில் தமிழ் அறிவுலகம் இல்லை.  

 

     இன்று  ஜெயமோகனது பதிவு கடும் எதிர்ப்பை ஆசிரியர்கள் மத்தில் உண்டாக்கியிருக்கிறது. ஆசிரியர்கள் பெருமளவுப் பயன்படுத்தும் சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் பல ஆசிரியர்கள பொங்கி எழுந்ததைப் பார்க்க முடிந்தது. இதை  திரு பொதிகைச்சித்தர் தனது பார்வையில்,  "பகை முரண்பாட்டை பூனை குட்டியைக் கவ்வுவது போலக் கையாளக் கூடாது, எலியைக் கவ்வுவது போலவே கையாளவேண்டும்", என்கிறார். மேலும் அவர், "முகநூற் பதிவுகளும் பின்னூட்டங்களும் அவ்வப்போதைய

மன அவசங்களின் 'ரேண்டம்' எதிரீடுகளே",  என்று இலக்கணமும் வகுக்கிறார். இதே வரையறைகளைப் பின்பற்றி ஜெயமோகன்கள் தப்பிவிடும் அபாயமும் இருக்கிறது.

 

    'பென்னம்பெரிய'  சிந்தனையாளரும் விமர்சகருமான யமுனா ராஜேந்திரன் (மன்னிக்க: சித்தரின் வாக்குப்படி ராஜேந்திரர் என்று குறிப்பிடாமைக்கு.) அவர்களது  வசைச் சொற்களையும் கடந்துவிடலாம் என்றால் ஜெயமோகனை விமர்சிக்க வேண்டிய தேவையே இல்லையே.  பிறகு ஜெயமோகனுக்கும் நமக்குமான வேறுபாடுகள்தான்  என்ன?  இதுதான் எனது எதிர்வினையின் மையமாகும்.

 

      ஜெயமோகன் பேராசான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற உலகம் போற்றும் ஆளுமைகளை அவதூறு செய்தே தனது பிம்பத்தைப் பெரிதாக்கிக் கொண்டவர். மார்க்சிய அறிஞர்கள் எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றோரையும் வசைபாடுவதும் அவதூறு செய்வதையும் தனது படைப்பிலக்கிய பணிகளில் ஒன்றாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர். சிறுபான்மையினர், அடித்தட்டு மக்கள் மீது வன்மம் கொண்டவர். நம்மிடம் ஜெயமோகனைக் கொண்டாட ஏதுமில்லை. நமக்கு அவரது படைப்பில் கூட கடும் விமர்சனமே எஞ்சியுள்ளது.

 

       திரு பொதிகைச்சித்தர் வெளியிட்ட பதிவின் (உமா மகேஸ்வரி) முதல் விமர்சனம், ஜெயமோகன் அரசுப்பள்ளிகளைச் சென்று பார்த்திருக்கிறாரா? அவரது குழந்தைகளை அங்குப் படிக்க வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகளை எழுப்புகிறது. இது ரொம்ப அபத்தம். அவரது மகன் +1, +2 வகுப்புகளை அரசுப்பள்ளியில் முடித்தவர்.

இதுகுறித்தும் அரசுப்பள்ளிகள் குறித்தும் சிலாகித்து எழுதியுள்ளார்.  அரசுப்பள்ளி மாணவர்கள் ‘பொறுக்கிகள்’ என்றால் அது அவரது மகனையும் சேர்த்தே பொருள் கொள்ள வேண்டும்.

 

      இவரைவிடவும்  சமகாலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியரும் படைப்பாளியுமான ஒருவரது மகளை மேனிலை வகுப்பில் சேர்த்தது ஊடகங்களில் பெருத்த விளம்பரத்தைப் பெற்றுத் தந்தது. இங்கு பிரச்சினை அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது பற்றியல்ல. மாவட்ட ஆட்சியர், முதன்மைக்கல்வி அலுவலர்கள் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது இங்கு தலைப்புச் செய்தி. மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு  குழந்தை பெறுதலும் அவ்வாறே. இவர்கள் பெறும்  கவனிப்புகளைச்  சாமான்ய மக்கள் பெற இயலுமா என்பதே நாம் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி.

 

      இரண்டாவது விமர்சனம் யமுனா ராஜேந்திரனுடையது. எலியைக் கவ்வும் இந்த விமர்சனத்திற்கு அவர் ஏற்கனவே பதில் அளித்துவிட்டராம். எனவே அதுபற்றி மீண்டும் கதைக்கக்கூடாது என்பது திருவாளர் சித்தரின் நிலைப்பாடு. நான் அந்தப் பதிலைப் பார்க்கவில்லை. ஒரு பதிவை  திருவாளர் சித்தர் மீளப் பதிவிடும்போது மீண்டும் எதிர்வினைகள், பதில்கள் தொடரத்தானே செய்யும்?

 

        மூன்றாவது பதிவு 'இல்லம் தேடிக் கல்வி'த் திட்டத்தை சந்தடி சாக்கில் புகழ்ந்து வைக்கிறது. ஜெயமோகன் மீதான விமர்சனம் இந்தப் போற்றிப் பாடுதலில் நிறைவது நல்ல முரண் நகை.  இத்திட்டத்திற்கு முதல்  எதிர்க்குரலாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கும் இந்நாள் மார்க்சிஸ்ட்கள் (சி.பி.எம்.) ஆதரிக்கும் 'இல்லம் தேடிக் கல்வி'யை முன்னாள் மார்க்சிஸ்ட் (சி.பி.எம்.) திருவாளர் சித்தர் வழிமொழிய இதைப் பயன்படுத்துகிறார் போலும்!

 

      தமிழகத்தை ஆண்ட, ஆளும்  என இரு கட்சிகளும் கல்வியை பல வழிகளில் சீரழித்துள்ளன. பொதுக்கல்வி மிக மோசமாக உள்ளது. ஒன்றிய அரசை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களது செயல்திட்டங்களை மறைமுகமாக அமல்படுத்துகின்றனர். இவர்கள் சொல்லும் சமூக நீதி பல சமூகங்களுக்கு அநீதியாக உள்ளது. (எ.கா.) 10.5% உள் ஒதுக்கீடு)

 

     மது, கஞ்சா, குட்கா போன்றவை இன்று கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புழங்கும் ஒன்றாக மாறியுள்ளது. கள்ளச் சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனை என்கின்றனர். ஆயினும் கள்ளச்சாராயம் ஒழிந்தபாடில்லை. கள்ளப்பணத்தையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவே பணமதிப்பிழப்பு என்றாரே மோடி. அதைப்போலத்தான் இதுவும்!

 

       கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா போன்ற போதைப்பொருள்களின் புழக்கம் அதன் வலைப்பின்னலை அழிக்க  தமிழக காவல்துறையால் முடியாதா?  பள்ளி மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்தும் அளவிற்கு போனதெப்படி?  கொரோனாவிற்கு முன்பே இவை தொடங்கிவிட்டது. இன்று இது மிகவும் அதிகரித்துள்ளது. 

 

     சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வசிக்கும் பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்புப் பயிலும் மாணவன் ஒருவன் அருகிலுள்ள அரசு டாஸ்மாக்கில் மதிய உணவு இடைவேளையில் பள்ளிச் சீருடையுடன் சென்று பீர் பாட்டில் வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டு சைக்களில் செல்லும்போது பீர் பாட்டில் வெடித்துச் சிதறி உயிரிழந்தார்.  இவ்வளவிற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இவ்வளவும்  நடந்தது.  யார் மீதும் எந்த நடவடிக்கைகளும் இல்லை.

 

      சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் குற்றங்களில் பதின் பருவத்தினர் ஈடுபடுவது உயர்ந்துள்ளது. பெண் குழந்தைகள் மட்டுமல்லாது ஆசிரியைகளும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக நேரிடுகிறது.  இத்தகைய சூழல்கள் அரசு, உதவிபெறும், சுயநிதிப் பள்ளிகள் எல்லாவற்றிலும் காணப்படுகிறது. விழுக்காடு அளவில் மட்டும் வேறுபாடு இருக்கலாம். 

 

     பணியிடங்களில் பெண்களுக்கான ‘விசாகா’க் குழுவின் நிலை எவ்வாறு உள்ளது? பள்ளிகளில் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாம் ஏட்டளவில்தான்.

 

     தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கு ஆதரவாகவே இங்கு அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அமைகின்றன. சுமார் 30 மாவட்டங்கள் கனமழைக்காக விடுமுறை விடப்படும் சூழலில் பள்ளிகளை விரைவாகத் திறந்தது தனியார் பள்ளிகளின் பொருளாதார நலம் சார்ந்த நடவடிக்கையாகும். அரசு வகுத்த கட்டணங்களை வசூலிப்பதை கண்காணிக்க விரும்பாத அரசும் கல்வித்துறையும் கொரோனா காலத்திலும் எதையும் கண்டுகொள்வதில்லை. இன்றும் வசூல் வேட்டைகள் தொடர்கின்றன.

 

      பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை. 45 நாள்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்பது போன்ற உத்தரவுகள் அரசுப்பள்ளிகளை மட்டும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. தனியார் பள்ளிகள் அவர்களது விருப்பப்படி செய்துகொள்ளலாம். இதற்கேற்ற உத்தரவுகளையும் கல்வித்துறையே பிறப்பிக்கிறது.

 

       வருகைப்பதிவு கட்டாயமில்லை. ஆனால் அரசுப் பொதுத்தேர்வுகள் உண்டு. இதன் விளைவு என்னவாக இருக்கும்? பள்ளி மூடிக்கிடந்தபோது வேலைக்குச் சென்ற குழந்தைத் தொழிலாளர்கள் அப்பணியைத் தொடர்கின்றனர். இதைத் தடுக்க ஏன் முடியவில்லை?

 

       குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்கு அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? பெண் குழந்தைகளைப் பாதுகாக்க உதவும் ‘போக்சோ’ சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா? குழந்தைத் திருமணங்களைத் தடுக்க அரசும் கல்வித்துறையும் எடுத்த முயற்சிகள் என்ன?

 

       கல்வித்துறையை இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்தான் பள்ளிக்கல்வித் துறையைக் கட்டிக்காக்க முடியும் என்கிற ஒன்றிய அரசின் முடிவுக்கு மாநில அரசும் வந்துள்ளது. கேட்டால் அப்படியெல்லாம் இல்லை என்பார்கள். இதுவரையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் நலப்பள்ளிகள் அந்தந்த துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் என  இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் நிர்வாகத்தில் இவ்வளவு ஊழல்களுடன் ஒப்பீட்டளவில் அரசுப்பள்ளிகளை விட மிக மோசமான நிலையில் சீரழிந்து கிடக்கிறதே, இதற்கு யார் காரணம்? சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த விளிம்பு நிலைச் சமூகங்களுக்குக் கல்வி கிடைக்க யார் தடையாக இருக்கிறார்கள் என்பது அரசுக்கும் ஆள்வோருக்கும் தெரியாதா? இதுவும் ஒரு ஒருவகையான் ‘குலக்கல்வி’ அணுகுமுறைதானே! இந்நிலை என்று மாறும்?  

 

     ஜெயமோகன் மிக மோசமான ஆள் என்பதில் அய்யமில்லை. அவரது கருத்தியலும் அவற்றை நியாயப்படுத்தும் சொற்பயன்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை. இதற்கென நாம் அவரது வசைமொழியைக் கைக்கொள்ளத் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்தாகும்.  அதற்கு மாறாக தமிழகப் பள்ளிக்கல்வியின் சீரழிவுகளையும் ஊழல்களையும் அமபலப்படுத்தி உண்மையில் அனைவருக்குமான கல்வி கிடைக்கவும், அது அரசின் பணியாக இருக்கவும்  இந்த எழுத்தாளர்கள், விமர்சகர்கள், இயக்கவாதிகள் செயல்படுவதே சரியாக இருக்க முடியும்.

 

 

(எழுத்தாளர் ஜெயமோகன் அரசுப்பள்ளிகளையும் மாணவர்களையும் விமர்சித்தது குறித்த எதிர்வினைக்கான பதில்.)

வெள்ளி, நவம்பர் 19, 2021

ஒரு நினைவுக் குறிப்பு

 ஒரு நினைவுக் குறிப்பு


                               மு.சிவகுருநாதன்

 



            வேதாரண்யம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் (1983-1986)  நான் 6-8 வகுப்புகளைப் படித்தேன். அப்பள்ளி இன்று மேனிலைப்பள்ளி.  அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பிற்கு மாவட்ட அளவிலானப் பொதுத்தேர்வு உண்டு. அத்தேர்வை அருகிலுள்ள உயர்நிலை அல்லது மேனிலைப் பள்ளிகளில்தான் எழுத வேண்டும். நாங்கள் தகட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் (இப்போது அது மேனிலைப்பள்ளியாக உள்ளது.)  எட்டாம் வகுப்புத் தேர்வுகளை எழுதினோம்.  

 

       ஒன்பதாம் வகுப்பிற்கு எங்கள் வீட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள தகட்டூர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இது வேதாரண்யம் வட்டத்தில் உள்ளது. மற்றொரு வாய்ப்பு, 5 கி.மீ. தூரத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த இடும்பாவனம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது. (இதுவும் இப்போது மேனிலைப் பள்ளிதான்.)

 

        அண்ணாப்பேட்டை, துளசியாப்பட்டினம் பகுதியிலிருப்பவர்கள் மிதிவண்டிகளில் செல்ல இடும்பாவனம் பள்ளியைதான் தேர்வு செய்வது வழக்கம். அருகிலிருப்பது உள்ளிட்ட வேறுசில காரணங்களும் இதற்குண்டு.  எனது அண்ணன்களும் இங்குதான் படித்தனர். மேனிலைப்பள்ளிக்கு ஆயக்காரன்புலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய மூன்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்தாக வேண்டும். அன்று வேறு மேனிலைப் பள்ளிகள் இல்லை.

 

       அப்போது இடும்பானம் உயர்நிலைப் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு ஒற்றை இலக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே அப்பா என்னை அப்பள்ளியில் சேர்க்க விரும்பவில்லை. மேலும் அன்று எனக்கு சைக்கிள் ஓட்டவும் தெரியாது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முடித்தபின் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது தனிக்கதை.

 

        அன்றே நல்ல பள்ளிகளைத் தேடும் படலம் தொடங்கிவிட்டது. இன்றைய சுயநிதிப்பள்ளிகளின் இடத்தை அன்று உதவிபெறும் பள்ளிகள் பிடித்திருந்தன. அன்றைய காலத்தில் எங்களது ஊரைவிட அருகிலிருந்த கற்பகநாதர்குளம் கிராமத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிகமிருந்தது. அங்கிருந்த அதிக ஆசிரியர் குடும்பங்கள் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

 

       எனது தந்தையாரின் ஆசிரிய நண்பர் கற்பகநாதர்குளம் திரு மாரிமுத்து அவர்கள் தனது இளைய மகனை திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள பள்ளங்கோயில் செயின்ட் ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் சேர்த்திருந்தார். தொலைவிலிருப்பதால் சென்றுவர இயலாது; விடுதிதான். தொண்டியக்காட்டைச் சேர்ந்த ஆசிரியர்  ஒருவரும் தனது பிள்ளையை அங்கு சேர்த்திருந்தார்.  கிழவன் சேதுபதி எனும் ரகுநாத சேதுபதியால் பிப்ரவரி 04, 1693 இல் இராமநாதபுரம் ஓரியூரில் தலைவெட்டிக் கொல்லப்பட்ட போர்ச்சுகீசிய கத்தோலிக்க மதபோதகர் ஜான் டி பிரிட்டோ பெயரிலான இப்பள்ளி தமிழில் புனித அருளானந்தர் உயர்நிலைப் பள்ளி என்றும் அழைக்கப்பட்டது. 

 

       அப்பா என்னை பள்ளங்கோயில் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். பள்ளியில், விடுதியில் இடம் கிடைக்குமா என்ற கவலை அப்பாவிடம் நிறைய இருந்தது. அப்பா தனது நண்பர் மாரிமுத்து மூலம் அப்பள்ளி  இடைநிலை ஆசிரியர் திரு அய்யாவு அவர்களிடம் முன்பே சொல்லியிருந்தார். 

 

       அன்று நுழைவுத்தேர்வு நடத்தினார்கள். சேர வருபவர்களுக்கு  அவ்வப்போது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. நாங்கள்  சென்றபோது சுமார் 25 பேர் அந்த நுழைவுத்தேர்வை எழுதினோம். 50 மதிப்பெண்களில் நான் வாங்கியது 30 தான் அதிக மதிப்பெண். எவ்வித சிரமமுமின்றி விடுதியிலும் இடம் கிடைத்தது. விடுதிக்கட்டணம் குறைவு. சாப்பாடு மிக மோசமாகவே இருக்கும். ஆனால் பள்ளி நல்ல பள்ளி; 400 மதிப்பெண்கள் பெற உதவும் பள்ளி.

 

       விடுதியிலிருந்து மாதத்தில் ஒரு சனி, ஞாயிறு வீட்டுக்குச் சென்று வருவோம். ஊரிலிருந்து காலை வேளையில் திரும்புகையில் திருத்துறைப்பூண்டி தேனாம்பிகா உணவகத்தில் சிற்றுண்டி. ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர் அனுமதி உண்டு. அன்று வீட்டிலிருந்து உணவு மற்றும் தின்பண்டங்கள் கொண்டு வருவார். திருத்துறைப்பூண்டி கோகுல் மிக்சர் கண்டிப்பாக இருக்கும்.  சில நாட்களில் அண்ணனை அனுப்பி வைப்பார். விடுமுறை நாள்களில் உணவுக்குப்பின் படிக்க அமர்த்தப்படுவோம். பார்வையாளர் வந்தால்தான் ஞாயிறன்று சற்று விடுதலை கிடைக்கும்.

 

      அப்பா கிளை அஞ்சலகப்பணியிலும் இருந்ததால் ஞாயிறு மட்டுமே விடுமுறை. வேறு பயணங்கள் இருந்தால் இங்கு வர இயலாது. மாதத்தில் ஒரு வாரம் நான் சென்று விடுவேன். ஒரு வாரம் அப்பா வருவார். இரண்டு வாரங்கள் எப்படியோ ஓடிவிடும்.

 

     விடுதியின் உணவு, அடக்குமுறைகள் எல்லாம் மோசமானதாகவே  இருந்தன. ஆயினும் பள்ளி நன்றாகச் செயல்பட்டது. அருட்திரு அந்தோணிசாமி தலைமையில் சோமசுந்தரம், பாலகிருஷ்ண மூர்த்தி, அல்போன்ஸ், ஜோசப் ராஜ், ஷேக் மைதீன் போன்ற பல ஆசிரியர்கள் விடுதி மாணவர்கள் மீதும் பள்ளி மீதும்  கூடுதல் கவனமெடுத்துச் செயல்பட்டனர்.  

 

     வீட்டுக்கவலையுடன் நாள்தோறும் ‘தினமணி’  படிக்க இயலாத கவலையும் தொற்றிக் கொண்டது. ஐராவதம் மகாதேவன் ஆசிரியப் பொறுப்பில் தினமணிச்சுடர், தமிழ்மணி என ‘அநுபந்தங்கள்’ வந்த காலமது. அக்கவலையை கடியாச்சேரி கடைத்தெருவிலுள்ள ஒரு சைக்கிள் கடை தீர்த்து வைத்தது. மதிய உணவு இடைவேளையில் விரைந்தோடிச் சென்று விடுவது எனது வழக்கமானது.

 

     அப்பாவின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தேனா என்று தெரியவில்லை. பத்தாம் வகுப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் +1,+2 வகுப்புகளில் இதேபோல் இன்னொரு விடுதி கிடைத்தால் நல்லது என்ற எண்ணம் அப்பாவிற்கு இருந்தது. அதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

 

    கல்லூரிப் பட்டப்படிப்புகளை விரும்பாத அப்பா பள்ளி இறுதிக்குப் பிறகு பணி வாய்ப்புள்ள சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை மட்டுமே எங்களுக்காகத் தேர்வு செய்வது வழக்கமாக இருந்தது. இதன் மூலம் அரசு வேலை, சொந்தக்காலில் நிற்பதற்கு உதவுதல் என்கிற அளவில் அவரது திட்டங்கள் இருந்தன. இதுதான் எங்களை இன்றும் வாழ வைக்கிறது.

 

(நவம்பர் 19, 2021 - இன்று அப்பாவின் 16-வது நினைவு நாள்.)

புதன், நவம்பர் 10, 2021

உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்?

உரிமைப் போராட்டங்களின் எதிர்காலம்?

 

மு.சிவகுருநாதன்

 


 

 

      உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் பேரணியாக சென்ற விவசாயிகளில்  நால்வர்  ஒன்றிய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோரப் படுகொலைகளை பதிவு செய்த உள்ளூர் பத்தரிக்கையாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். உடன் நிகழ்ந்த வன்முறையில் மேலும் நால்வர் பலியாயினர். 

     சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் இது போன்ற, திட்டமிட்டு நிகழ்த்தப்படும்  பல்வேறு வன்முறை வெறியாட்டங்களை பட்டியலிட முடியும். ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் இந்த விவசாயிகள்  குடியரசு நாளான்று டிராக்டர் பேரணி நடத்தியபோதும் தாக்குதல் நடைபெற்றது. 'பண்டோரா' பேப்பரில் அம்பலமாகியிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் 'தேசபக்தருமான'  டெண்டுல்கர் போராடும் விவசாயிகளை தேச விரோதிகள் என்றார். அங்கு வன்முறையைத் தூண்டியவர்கள் தேசபக்தர்களாகும் 'ரசவாதம்' இவ்வாறுதான் நிகழ்கிறது.

      ஒன்றிய அரசின் குடியுரிமைச் சட்டங்களை எதிர்த்து மிகவும் அமைதியாக அறவழியில் ஷாகின் பாக்கில் அதிகளவு பெண்கள் பங்கேற்புடன்  நடந்த போராட்டங்கள் காவிக் கலவரக்காரர்களால் ஒடுக்கப்பட்டன. துப்பாக்கி ஏந்திய  மதவெறியனின் வன்முறையை காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க. விற்கு ஒரு வித்தியாசமும் இல்லை என்கிற உண்மை  உலகிற்கு உறைத்தது.

     சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்கள் தமிழக காவல்துறையினரின்  அரச வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இதைப்போலவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் 13 உயிர்களைக் குடித்த அரச வன்முறையால் முடித்து வைக்கப்பட்டது. இன்னும் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டினால் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட அரச வன்முறை நமது பார்வைக்கு வரலாம்.  இப்படியாகத் தொடர்ந்துப்  பின்னோக்கிப் பயணித்தால்  ரவுலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக்கில் பலியான எண்ணற்ற உயிர்கள் வரலாற்றில் உறைந்து போயிள்ளதையும்  அறிய முடியும்.

        1919 ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்குப் பின்னர் மகாத்மா காந்தி உண்மையறியும் குழு அமைத்து  விரிவான அறிக்கையை  வெளியிடுகிறார். சில மாதங்களிலேயே காங்கிரஸ் பஞ்சாப் சப் கமிட்டியார் விசாரணை ரிப்போர்ட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு 'பஞ்சாப் துயரம்' என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக  வெளியிடப்படுகிறது.  அதிலுள்ள காந்தியின் வாக்குமூலத்தில் சத்தியாகிரகம் எனும் அகிம்சைப் போராட்டத்தின் வழிமுறைகளாக கீழ்க்கண்ட செய்திகளை எடுத்துரைக்கிறார். 

   "சத்தியாக்கிரகிகளுக்கு பொறுமையும் அபிமானமும் இன்றியமையாத குணங்கள். அதாவது பிறருக்குத் தீங்கு செய்யாமல் சகல கஷ்டங்களையும் தாமே சகித்துக் கொண்டிருப்பது சத்தியாகிரகிகளுக்கு அழகு. ராஜியத்துறையில் சத்தியாகிரகத்தைத் தாராளமாய் அனுஷ்டித்துப் பார்க்கலாம். அநீதமான சட்டங்களை எதிர்த்துப் போராட சத்தியாகிரகம் ஓர் ஒழுங்கான ஆயுதம். மனுக்களின் மூலமாயும் மகஜர்களின் மூலமாயும் ஒருவருடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் போனால் அவருக்கு அப்பால் இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று பலாத்காரமாகப் பிரவேசித்துக் காரியத்தை சாதித்துக் கொள்ளுதல்; மற்றது எக்கஷ்டங்களையும் உற்சாகமாகச் சகித்துக் கொண்டு சட்டத்தை மீறி நடத்தல். அநீதமான சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதிருப்பது குற்றமாகாது. சத்தியமே நமக்குப் பெரிது. ஒரு குறிப்பிட்ட சட்டத்தை மீறி நடப்பதனால் சமூகத்திற்கு நன்மை உண்டாகும் என்று தெரிந்தால் தைரியமாக அச்சட்டத்தை மீறி நடக்க வேண்டியது சத்தியாக்கிரகிகளின் கடமை. கவர்ன்மெண்டின் காரியங்களில் தங்களுக்குள்ள அதிருப்தியையும் வெறுப்பையும் வெளிப்படையாக காட்டும் பொருட்டு சத்தியாக்கிரகிகள் அதிகார கவர்ன்மெண்டாரோடு ஒத்துழையாமல் இருந்தும் அவர்கள் சட்டத்திற்கு கீழ்படியாதிருப்பதும் ஒத்துழையாமலிருப்பதும் சத்தியாக்கிரக தர்மங்களில் சில ஆகும்". (பக்.129, பஞ்சாப் துயரம் - இரண்டாம் பாகம், வெளியீடு: 1920, எஸ்.கணேசன் அண்டு கோ, திருவல்லிக்கேணி, சென்னை)  

      கூடங்குளம் அணு உலைக்கு எதிரான இடிந்தகரையில் நடைபெற்ற அறவழிப் போராட்டங்கள், கதிராமங்கலம், நெடுவாசல் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டங்கள், சேலம் எட்டு வழிச்சாலை  என அனைத்தையும் முடித்து வைக்க அரசுகளும் அரசாதரவுக் குண்டர்களும் இத்தகைய வன்முறை வழிகளை மிகத்தெளிவானத் திட்டங்களுடன் கையாள்கின்றனர். 

      1919 ஆம் ஆண்டின் ரவுலட் சட்டத்தைப் போன்ற கொடிய சட்டங்களே குடியுரிமை மற்றும் புதிய வேளாண் சட்டங்களாகும். இத்தகைய சட்டங்களைக்  காலனித்துவ பிரித்தானிய அரசு மட்டும்தான் கொண்டுவரும் என்பதில்லை. மக்களாட்சி அரசுகளும் இத்தகைய கொடுஞ்சட்டங்களை அமல்படுத்தலாம். அவற்றை எதிர்ப்பது நமது அடிப்படை உரிமை.

     இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் நடக்கும் உரிமைப் போராட்டங்கள் எதுவும்  தேசிய, மாநிலக் கட்சிகளால் நடத்தப்படுபவை அல்ல. அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள் போன்றவற்றில் எதிர்க்கட்சிகளின் ஆதரவு கூட கிடைப்பதில்லை. மிகவும் குறைவான பலம் கொண்ட அழுத்தக் குழுக்கள்தான் (Pressure Groups)  இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்து நடத்துகின்றன. விவசாயிகள் சங்கங்கள், சிறுபான்மையினர் அமைப்புகள், அணு உலை, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்புகள், சூழலியல் இயக்கங்கள், வணிகர்கள் போன்ற பலமற்ற அமைப்புகள் தான்  இவற்றை ஒருங்கிணைக்கின்றன.  ஒருவகையில் இவை பேருரு அரசியல் சாராத வெகுமக்கள் இயக்கமாகவே வளர்கின்றன. சில நேரங்களில் அரசியல் - கருத்தியல் நிலைப்பாடுகள் இன்றியும் போராட்டங்கள் தொடங்குகின்றன. பின்னர் அதன் பாதையில் கருத்தியல்கள் உருக்கொள்கின்றன. 

     காந்தி உரிமைப் போராட்டங்களுக்கான ஆயுதமாக நமது அவைதீகப் மரபிலிருந்து அகிம்சையைத் தெரிவு செய்தார். அதனடிப்படையிலேயே இந்திய விடுதலையை நோக்கிய அவரது செயல்பாடுகள் அமைந்தன. நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த அகிம்சைப் போர்முறை உலகளவில் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. 

      அதிநவீன ஆயுதங்களையும் படை வலிமையையும் நிரம்பப் பெற்றுள்ள அதிகாரத்துவ அரசுகளிடம் போராட எந்த ஆயுதங்களும் இணையில்லாத நிலையில் அகிம்சை ஆயுதத்தையே நாமும் கண்டடைய வேண்டியுள்ளது. 

    மக்களாட்சியின் மாண்புகள் சிதைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் பதிலளிக்கும் நிலையே இன்றில்லை. ஜனநாயக நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன. கருத்துரிமை மறுக்கப்பட்டு UAPA போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் ஏவப்படுகின்றன. தள்ளாத வயதிலும் நோயாலும் மனித உரிமைப் போராளிகள் சிறைச்சாலைகளில் மரணமடைகின்றனர். அவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுக்கின்றன. 'தேச பக்தி'  ஆட்சியாளர்களின் ஏகபோகமாகிப்  பிறரை தேசவிரோதிகளாகக் கட்டமைக்கவும் செய்கிறது. 

     நீதிமன்றங்கள் மக்களைப் போராட வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். ஏதோ ஒருவகையில் இவை அரசுகளிடம் சரணடைகின்றன. மக்களாட்சியின்  நான்காவது தூணாக மதிக்கப்பட்ட ஊடகங்கள் அரசு மற்றும் கார்ப்பரேட்களின் ஊதுகுழலாய் மாறியிருக்கின்றன. 

     இந்த நிலையில் மக்களாட்சியின் பெயரால் அரச வன்முறையை எதிர்கொள்ளும் சூழலில் அகிம்சை ஆயுதம் மட்டும் நமக்குப் போதுமானதுதானா? இதற்கான மாற்று வழிமுறைகளையும் செல்நெறிகளை இதுவரையில் நான் கண்டடைந்திருக்கிறோமா?   பிளவுபடுத்துவது ஆளும், அதிகார வர்க்கத்திற்கு ஏதுவான செயலாக உள்ளது. சாதி, மதம், மொழி, தொழில்  போன்ற கூறுகளை இவர்கள் தங்களது ஆயுதங்களாகப் பாவிக்கின்றனர். 

     விவசாயிகள், மீனவர்கள்,  வணிகர்கள், பழங்குடிகள், சிறுபான்மையினர் என தனித்தனியே பிரிந்திருப்பதும் பிரித்து அணுகுவதும் ஒற்றுமையை கேள்விக்குள்ளாகுகிறது. பஞ்சாப் விவசாயிகளின் பிரச்சினை பற்றி காவிரி டெல்டா விவசாயிகளுக்குக் கவலையில்லை; எட்டுவழிச்சாலை பற்றி தமிழகத்தின் பிறபகுதி விவசாயிகள் கவலைப்பட வேண்டியதில்லை என்ற நிலை இருப்பதால் போராட்டங்கள் அனைத்தும் உள்ளூர் அளவிலேயே சுருங்கி விடுகின்றன. வெறும் அடையாள அளவில் இல்லாமல் பரந்த நிலையில் இந்த ஒருங்கிணைப்பு உண்டாக வேண்டும். பெருந்திரள் மக்கள் எழுச்சியே சர்வாதிகார மக்களாட்சியை கொஞ்சமாவது அசைக்கும். இதற்கான வேலைத்திட்டங்களும் குறைந்த பட்ச செயல்திட்டங்களும் உருவாக வேண்டும்.

    பிரச்சினைகளைப் பொதுவானதாக உணரும் நிலை வேண்டும். பெருமளவில் மக்கள் பங்கேற்பு இல்லாத எதுவும் இங்கு தோற்றுப்போகும். இப்போராட்டங்கள் பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டும்.  இத்தகைய இயக்கங்கள் தேர்தலில் எதிரிகளை அம்பலப்படுத்தி எதிர்கொள்ள வேண்டும். அகிம்சை என்பது அடிவாங்கி, குண்டடிபட்டு சாவதல்ல; மாறாக அதனுள்ளும் போர்க்குணம் அடங்கியுள்ளது. அந்தப் போர்க்குணமே நமக்கான விடுதலையைப் பெற்றுத்தரும்.

    பாசிச அரசுகளுக்கும் சட்டங்களுக்கும் எதிராக பொதுத்தேர்தல்களைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்த முடியும். நமது பிளவுகள், ஏழ்மை, கல்வியறிவின்மை, குழுவாதம் போன்றவை இவ்வாயுதத்தைச் சரிவரப் பயன்படுத்தத் தடையாக இருக்கின்றன. இன்றிருக்கும் தேர்தல் முறைகள் மோசமானவைதான். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட மாற்று வழிகள் அனுமதிக்கப்படாத வரையில் சிக்கல் தொடரவே செய்யும். அதற்குத் தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே தீர்வாக அமைய முடியாது. 

       நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றொரு பரப்புரை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. யார் நல்லவர் என்பதற்கு எந்த வரையறையும் இல்லை.  நல்லவர் என்று அனுமானிக்கக் கூடியவர் பாசிசத்தின் பிரதிநிதியாகக் கூட இருக்கலாம். எனவே கருத்தியல்கள் தான் முக்கியமே தவிர தனிப்பட்ட குணநலன்கள் அல்ல.  நம்மை மேலும் பிளவுபடுத்த தேர்தல்களின் போது புதிய அணிகள் உருவாக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பாசிச, ஆளும் வர்க்கங்கள் இருக்கின்றன. இத்தகைய சூழ்ச்சியும் தேர்தல் ஆயுதத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் செய்கின்றன. 

       பல்வேறு வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வுகள், முடிவுகள் என்று  இருக்கவியலாது. குறைந்த பட்ச செயல்திட்ட அடிப்படையிலேயே அரசும் பொதுமக்களும் இயங்க முடியும். பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் ஒரு குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் ஒருங்கிணைக்கப் படவேண்டும்.  இந்த அழுத்தக் குழுக்கள் ஆளும், அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் ஆற்றலுடையதாக மாற வேண்டும். பெருந்திரள் மக்கள் சக்தி வீணாக்கப் படாமல் பயன்படுவது அவசியம்.

 

நன்றி: 'பேசும் புதிய சக்தி' – மாத இதழ், நவம்பர் 2021