திங்கள், ஜனவரி 30, 2012

எலி அம்மணமாகப் போன கதை!

எலி அம்மணமாகப் போன கதை!
                                                                                     - -மு.சிவகுருநாதன்


இலங்கையில் ராஜ பக்சே யுடன்  அப்துல் கலாம்

    
  இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்கதையாக நீடிக்கிறது.  இதைத் தீர்க்க நமது அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாளாயிருக்கின்றன.  ஒப்பீட்டளவில் பாகிஸ்தானுடன் கூட இவ்வளவு தீவிரமான மீன்பிடித் தகராறு இல்லை என்று கூட சொல்லலாம்.
 

    இரு நாட்டுத்தூதர்கள், அமைச்சர்க்ள, தலைவர்கள், என பலமுறை பேசுகிறார்கள்.  ஆனால் கண்ணியமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.  அண்மையில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா  சுற்றுப்பயணமும் எவ்விதப் பலனின்றி முடிந்துப் போனதுதான் மீனவர்கள் வாழ்வின் சோகக்கதை.

    கூடங்குளம் அணு உலைப் பிரச்சினையில் அணுசக்தித் துறைக்கு ஆதரவுக்கரம் நீட்டி வம்பில் மாட்டிக் கொண்ட நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை என்று திரும்பியிருக்கிறார்.  இருநாட்டு மீனவர்களும் தலா மூன்று நாட்கள் சுழற்சி முறையில் மீன் பிடிக்கலாம் என்றும் ஞாயிறு ஒரு நாள் விடுமுறை விடப்படலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
 

    மீனவர்களுக்கு எல்லைகளை நிர்ணயிப்பது கடினமானது என்று சொல்லும் அப்துல்கலாம் திரளான மீன்களை நோக்கி மீனவர்கள் ஈர்க்கப்படுவது இயல்பானது என்கிறார்.  மேலும், இருநாட்டு மீனவர்கள் அமர்ந்து இப்பிரச்சினைப் பேசித்தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

    பேச்சுவார்த்தை, சுமூக உறவு, உடன்பாடு இல்லாமல் எந்தச் சிக்கலையும் தீர்க்க முடியாது.  சண்டைகளுக்கு எதிரான ஆயுதங்களில்  உரையாடலை விட சிறந்த ஆயுதம் எதுவும் இருக்க முடியாது.  இவ்வளவு அற்புதமான கருத்துக்களை தமிழ்நாட்டு மீனவர்களுடன் பிறந்த கலாம் இவ்வளவு காலம் எங்கே ஒளித்து வைத்திருந்தார் என்று கேட்கத் தோன்றுகிறது.
 

    கலாம் பதவியில் இருந்த 5 ஆண்டு காலத்திலும் அதற்குப் பின்னரும் மீனவர்கள் பிரச்சினைகள் எழுந்தபோது இது குறித்து துளியும் வாய் திறந்ததில்லை.  இப்போது மட்டும் ஏன் அடிக்கடி ஆலோசனை சொல்லக் கிளம்பிவிடுகிறார்  என சந்தேகம் வருவது  இயற்கைதானே!
 

    இங்குதான் அப்துல் கலாமின் சுயரூபம் முழுமையாக வெளிப்படுகிறது.  மீனவர்கள் நவீன படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடல் மீன்பிடிப்பதை ஊக்குவிக்க வேண்டுமாம். அப்படியே தனியார் கம்பெனிகளையும் மீன்பிடித் தொழிலில் இறக்கிவிடும் மறைமுக செயல்தந்திரமிது.  எவ்வளவு பீடிகை போட்டும் அப்துல்கலாமால் பூனைக்குட்டியை ஒளிக்க முடியவில்லை பாருங்கள்.
 

   நமது மக்கள் பணத்தில் இஸ்ரோ ஊழல் விஞ்ஞானிகள் அனுப்பும் செயற்கைக்கோள்கள் மூலம் மீன்வளத்தை அறிந்து மீனவர்களுக்குத் தெரிவிக்கமுடியும். ஆனால் நம் நாட்டில் இது நடக்க வாய்ப்புண்டா? பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்கள் இந்த தொழிலுக்கு வரும்போதுதான் இந்த தகவல்களை அவர்களுக்கு அள்ளி வழங்குவார்கள்.

    இது யாருடைய குரல்.  கண்டிப்பாக மீனவர்களின் குரலல்ல.  ரிலையன்ஸ், டாடா, பிர்லா, வேதாந்தா, ஜிண்டால் போன்ற பன்னாட்டு - உள்நாட்டு முதலாளிகள் இன்னும் காலடி வைக்காத  துறைகள் சில பாக்கியுள்ளதை தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு விருந்து வைக்கவும்  கடல் வளத்தையும் பங்கு போட இம்மாதிரியான யோசனைகள்  அப்துல் கலாம் அவர்களால்  முன் வைக்கப்படுகின்றன.  பல்வேறு கடல் பிராந்தியங்களின் வளத்தைக் கொள்ளையிட்ட பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியப் பெருங்கடல் வளம் சுண்டியிழுப்பது நமக்கும் புரிகிறது.  இப்போது புரிந்திருக்குமே கிராமங்களில் சொல்வார்களே அதுபோல  எலி ஏன் அம்மணமாகப் போகிறது என்று?

அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்தில் இரு நாட்கள்


அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்தில் இரு நாட்கள்                                       
                                               -மு.சிவகுருநாதன்
மூன்றாம் கட்டப் போராட்டத்தில் 80 -வது நாள்


பதிலளிக்கும்  போராட்டக் குழுவினர்

போராட்டக்காரர்களிடம் நிறைய கேள்விகள் 

சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் அவர்களுடன் போராட்டக் குழுவினர்

போராட்டத்தில் பெண்கள் 

உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள்

மூன்றாம் கட்டப் போராட்டத்தில் 81 -வது நாள்

உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள்

உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள்


புதுச்சேரி கோ. சுகுமாரன்

மு.சிவகுருநாதன்

வழக்குரைஞர் ரஜினி

பேரா. அ. மார்க்ஸ்

பத்திரிக்கையாளர் சந்திப்பு 

பத்திரிக்கையாளர் சந்திப்பு

 
         பேரா. அ. மார்க்ஸ், புதுச்சேரி கோ. சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி ஆகியோருடன் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை இரு நாட்கள் அருகிலிருந்து கவனிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.  ஜனவரி 05, 06 (2012) ஆகிய இரு தினங்கள் (தொடர் போராட்டத்தின் 142, 143 -வது நாட்கள்) போராட்டக்காரர்களுடன் பொழுதைக் கழித்த நாங்கள் ஜனவரி 07 (2012) மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினோம்.  அதில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சுப. உதயகுமார் கலந்து கொண்டார்.

       மத்திய அரசின் திட்டமிட்ட காய்நகர்த்தல்கள் மற்றும் திசை திருப்பல் உத்திகள் மூலம் முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினை உருவாக்கப்பட்ட பிறகு ஊடகங்களின் கவனம் கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் இல்லாமற் போய்விட்டது.  ஆனால் மக்களின் போராட்ட உணர்வு எவ்விதத்திலும் மழுங்கிவிடவில்லை என்பதை நாங்கள் நேரில் கண்டோம்.  மத்திய அரசின் பல்வேறு கட்ட அவதூறுப் பிரச்சாரத்திற்கிடையில் இம்மக்களின் ஒற்றுமை மிக்க போராட்ட உணர்வு மெச்சத் தக்கதாய் உள்ளது.  குறிப்பாக பெண்களின் பங்கேற்பு இப்போராட்டத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
 
       உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்களின் பங்கு அதிகம்.  ஆண்கள் பெரும்பாலும் பணிக்குச் செல்வதால் பெண்கள் பெருந்திரளாக உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர்.  நாங்கள் அங்கிருந்து ஜனவரி 05 (2012 ) இல்  சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் சென்னையைச் சேர்ந்த ஒரு இதழியல் கல்லூரி மாணவர்களுடன் வந்திருந்தார்.  அவர்கள் இப்போராட்டக்காரர்கள் பற்றி மத்திய அரசு பரப்பி வருகின்ற, மக்களின் பொதுப்புத்தியில் படிந்துள்ள பல்வேறு அவதூறுகளை கேள்விகளாகக் கேட்டனர்.  கடும் கோபத்தை உண்டாக்கக் கூடிய இக்கேள்விகளுக்கு இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் தெளிவாகவும் பொறுப்பாகவும்  விளக்கமளித்தனர். இவர்கள் அளித்த பதில்களிலிருந்து அணு உலையினால் ஏற்படும் பாதிப்புகளை இவர்கள் மிகத் தெளிவாக அறிந்திருந்தது நன்கு புலப்பட்டது.  இப்போராட்டம் இப்பகுதி மக்களை மிகவும் பண்படுத்தியிருப்பதை உணர முடிந்தது.

      உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டிக் கொண்டும், பீடிசுற்றிக் கொண்டும் பங்கேற்பது இந்தப் போராட்டத்தில் அவர்களுக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. இது இப்போராட்டம் ஓயாது, தோற்காது என்பதை பறைசாற்றுவதாகவும் அமைந்தது. பள்ளிக்குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் முன் நிற்கின்றனர்.
 
      விழிப்புணர்வு மிக்க வீரம் செறிந்த இந்தப் போராட்டத்தை ஆயிரமாயிரம் அப்துல்கலாம்களும், ‘புற்றுநோய்’   சாந்தாக்களும் வந்தால் கூட சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பது திண்ணம்.  அணுஉலைக்கு ஆதரவாக களம் இறங்கும் ‘புற்றுநோய்’ சாந்தா ஏன் தூத்துக்குடியில் புற்றுநோய் மருத்துவமனை திறக்க வேண்டும்?  யாரிடம் வாங்கிய கூலிக்கு மாரடிக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு மக்கள் போராட்டத்தை அவதூறு செய்யும் அருகதை எங்கிருந்து வந்தது?
 
     அணு உலைகளினால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று நம்பியிருந்த கூடங்குளம் பகுதி மக்கள் தற்போது உண்மையை உணர்ந்து கொண்டு விட்டனர்.  இனியும் மத்திய அரசும் போலி விஞ்ஞானிகளும் அவர்களை ஏமாற்ற முடியாது.  பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், ஆயுதத்தரகர்களிடமும் கமிஷன் பெற்றுக் கொண்டு அறிவை அடகு வைக்கும் வேலைகளை விட்டு விட்டு இந்த போலி விஞ்ஞானிகள் சுயமரியாதையுள்ள வேறு வேலைகளுக்குத் திரும்பினால் அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லது.  அணு மின்சாரம், அணுக்கழிவு ஆகியவற்றின் இன்னல்கள் படிக்காத பாமரனுக்குத் தெரிந்த அளவிற்கூட உங்களுக்குத் தெரியவில்லையென்றால் இந்தப் போலி விஞ்ஞானத்தால் உங்கள் உயிரைக் கூட காப்பாற்ற முடியாது.
 
        இப்பகுதிவாழ் பள்ளிக் குழந்தைகளிடம் உள்ள அணுசக்திக்கு எதிரான விழிப்புணர்வை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  மரபுசாரா மாற்று எரிசக்தி தயாரிக்கும் முறைகள், இடர்பாடுகள், செலவுகள் மிக்கவை என்று பாடப்புத்தகங்கள் மூலம் ‘காயடிப்பு’ வேலைகள் செய்யப்பட்டிருந்தாலும் கூட அவையொன்றும் இவர்களிடம் எடுபடப்போவதில்லை.  தனது சுற்றுப்புறங்களில் ஆயிரக்கணக்கான காற்றாலைகளைப் பார்த்து வளர்ந்தவர்கள் இவர்கள்.  மரபுசாரா எரிசக்தி பற்றி இவர்களுக்கு நன்கு தெரியும்.  காற்றாலைகளுக்குத் தேவையான ‘கிரீட்’ அமைப்பு இல்லாததால் இவற்றை இயக்காமல் அணைத்து  வைத்திருப்பதையும் இவர்கள் அறிவார்கள்.
 
      எரிசக்தி ஆய்வுக்கு ஒதுக்கப்படும் பெருந்தொகையை அணுசக்தித் துறை மட்டும் தின்று கொழுக்கிறது.  காற்றாலை, கடல்அலை போன்ற மாற்று எரிசக்தி ஆய்வுகளுக்கு ஏதேனும் செலவுகள் செய்ததுண்டா?  கூடங்குளம் அணு உலையைத் திறக்க இவ்வளவு மூர்க்கம் காட்டும் மத்திய அரசு ஈரானிலிருந்து குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை மட்டும் ஏன் முடக்கி வைத்திருக்கிறது?  இந்தக் கேள்விகளைத் தாண்டி அணு உலைகளை மட்டும் இயக்க மத்திய அரசு முயல்வதில் அர்த்தமில்லை.
 
      கல்பாக்கமும், கூடங்குளமும் தமிழக அழிவின் குறியீடுகள்.  அணு உலைக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களுக்கானது அல்ல.  மனித குலத்தின் பேரழிவிற்கெதிரான இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஏன் இந்தியாவே இணைந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.  ஆனால் இது நடக்கவில்லை.  அரசின் பண உதவி மற்றும் பல்வேறு தூண்டுதல்களால் தமிழகமெங்கும் ஆங்காங்கே அணு உலையை திறக்க தரர்கள் மூலம் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.  இவற்றின் பின்னணியில் அணு உலையை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும், தலைவர்களும், அரசும் இருக்கின்றன.
 
       முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சினைகள் கூடங்குளம் போராட்டத்தை திசை திருப்புவதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன.  இன்னும் பல்வேறு திசை திருப்பு உத்திகள் அரங்கேறலாம்.  இந்தியாவின் இயற்கை வளத்தை அந்நியர்களுக்கு பங்கு வைக்கும் வேலைகளுடன் இந்த மண்ணை - மக்களை வேரறுக்கும் வேலையையும் இவர்கள் ங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் போது நம்மிடையே ஒற்றுமை இல்லாமலிருப்பது வேதனை தருகிறது.  இங்குதான் நமது எதிரிக்கு தற்காலிக வெற்றி கிடைக்கிறது.

       ஒட்டுமொத்த மக்களுக்கான இப்போராட்டத்தில் பங்கேற்காமல் விலகியிருப்பது மனித குலத்திற்கு செய்யும் மாபெரும் வரலாற்றுப்பிழை.  இந்த குற்ற உணர்வு நம்மை வாழ்நாளெல்லாம் துரத்திக் கொண்டிருக்கும்.  அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபடவே இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதாக போராட்டத்தில் பேசும்போது நான் குறிப்பிட்டேன்.  ஒட்டுமொத்த தமிழகமும் இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.காற்றாலை

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்! 
                                                                                                        -மு.சிவகுருநாதன் 
        ஐந்தாண்டுகள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி     (NDA) அரசிலும் 8 ஆண்டுகள்  ஐக்கிய  முற்போக்குக் கூட்டணி   (UPA) அரசிலும் அங்கம் வகித்த தி.மு.க தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக மார் தட்டிக் கொள்கிறது.  இவற்றில் சில உண்மைகளும் இருக்கலாம்.  ஆனால் தமிழகத்திற்கான ரயில் திட்டங்களின் அவலத்திற்கு எடுக்காட்டாய் நிற்பது திருவாரூர் - காரைக்குடி ரயில்பாதை.

      தமிழகத்தில் நடைபெறும் அகலப்பாதைப் பணிகள் மற்றும் திட்ட ஒதுக்கீடு அனைத்தும் ஆமை வேகத்தில் தான் நடக்கிறது.  ஒதுக்கீடும் தவணை முறையில் தான்.  விழுப்புரம் மயிலாடுதுறை வரை வந்த ஒதுக்கீடு 40 கி.மீ தொலைவிலுள்ள திருவாரூரை அடைய பல ஆண்டுகள் ஆனது.  இன்னும் திருவாரூர் மயிலாடுதுறை ரயில் பாதையில் வண்டிகள் இயக்கப்படாதது வேறு கதை.
 

     நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி என அகலமாக்கும் பணிகள் நடைபெற்றதென்னவோ உண்மை தான்.  ஆனால் திருவாரூரிலிருந்து சென்னை செல்ல மயிலாடுதுறை செல்லாமல் இன்னும் ஊர் சுற்றிச் செல்லும் அவலம் நீடிக்கத்தான் செய்கிறது.
 

      காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, தாம்பரம் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற மீட்டர் பாதை தொடர்வண்டி ஓடிக் கொண்டிருந்ததை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு யாரேனும் நினைவுப்படுத்தினால் நல்லது.  அவருக்கு வரவர எதுவும் நினைவில் தங்குவதில்லை.
 

     தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு. கருணாநிதி சொல்லும் ரயில்வே திட்டங்களை விட தி.மு.க நாடாளுமன்ற குழுத்தலைவரும், நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு சொல்லும் திட்டங்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதுதான் இங்குள்ள எதார்த்த நிலை.  நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவராக உள்ள டி.ஆர். பாலு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.  அதைக் கேள்விகேட்கும் அதிகாரம் தி.மு.க  தலைமைக்கு வேண்டுமானால் இல்லாது போயிருக்கலாம்.  இ. காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க போன்றவை என்ன செய்து கொண்டுள்ள?
 

     திருக்குவளையில் துறைமுகம் என்றார்கள்.  வேளாங்கண்ணியிலிருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய வழித்தடம் என்றார்கள்.  இவை அனைத்தும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.  ஆனால் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கு ரயில் விட்டாயிற்று.  2012-13 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இப்பாதையை பட்டுக்கோட்டைவரை நீட்டிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள்.  இப்படிச் செய்துவிட்டால் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி - திருவாரூர் வழித்தடத்தை மூடிவிடலாம் என்றும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.
 

     எனவே, அதற்கேற்றவாறு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து பட்டுக்கோட்டை - வடசேரி  - மன்னார்குடி  வழி புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி இந்த வழியில் கம்பன் எக்ஸ்பிரசை இயக்குவதுதான் தி.மு.க வின் திட்டம்.  இது நடந்துவிடும் என்ற அச்சத்தால் வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிவாழ் பொதுமக்கள், வணிகர்கள் சென்ற மாதத்தில் (டிசம்பர் 2011) ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.  இதற்கு அமோக ஆதரவு இருந்தது.
 

       தஞ்சை - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - மன்னார்குடி போன்ற தொடர்வண்டிப் பாதை இல்லாத இடங்களை அவற்றால் இணைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  அதற்காக இருக்கின்ற வழித்தடங்களை பலியிடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.  எனவே, இருக்கின்ற திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தை முற்றிலும் அகலப்பாதையாக்க வேண்டும்.  கூடவே திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - அகஸ்தியாம்பள்ளி - கோடியக்கரை தடத்தையும் அகலப்படுத்தி பயணிகள் ரயில் போக்குவரத்திற்கும் உப்பு ஏற்றுமதிக்கும் வழிவகுக்க வேண்டும்.
 

     சுற்றுச்சூழல், கடலோர மக்களின் வாழ்வாதாரம் போன்றவை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், இருப்புப்பாதைகள் என தனியார் முதலாளிகள் வளம் கொழிக்க திட்டங்கள் தீட்டும் மத்திய - மாநில அரசுகள், வேதாரண்யம் கடற்கரையில் உற்பத்தியாகும் உப்பை எடுத்துச் செல்வதற்கு இருக்கின்ற இருப்புப் பாதையை அகலப்பாதையாக்க மறுக்கும் மக்கள் விரோதப்போக்கை எப்படிப்புரிந்து கொள்வது?
 

     திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி - கோடியக்கரை வழித்தடங்களை அகலப்பாதையாக்குவதைக் காட்டிலும் வடசேரி கிங் கெமிக்கல்ஸ், அங்கு அமையப்போகும் சாராய வடிப்பாலை  வழியாக ரயில்பாதை அமைப்பதுதான் டி.ஆர். பாலுவிற்கு முக்கியமாகப்படுகிறது.  எனவே தான் இப்பகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.  மு. கருணாநிதிக்கு திருக்குவளையை விட கனிமொழி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்கள் முக்கியம்.  தானொரு கம்யூனிஸ்ட் என்று ஓயாமல் சொல்லி வரும்
மு. கருணாநிதி தானும் பெரு
முதலாளியாகி   டி.ஆர். பாலு போன்ற பெருமுதலாளிகளை உருவாக்க முடிந்ததுதான் வரலாற்றின் மாபெரும் சோகம்.

      உப்பை மட்டும் உற்பத்தி செய்யும் காரணத்தால் இன்று வேதாரண்யம் வெறும் தீவாகிப் போயிருக்கிறது.  கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வேளாங்கண்ணியைத் தாண்டியதும் திருத்துறைப்பூண்டிக்குள் நுழைந்து உள்நாட்டுச் சாலையாகி விடுகிறது.  அகலப்பாதை வசதியுமின்றி பிறப்பகுதிகளிடமிருந்து வேதாரண்யம் துண்டிக்கப்பட்டுள்ளது.
 

       உள்நாட்டுச் சாலையாக மாறிப்போன கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி அருகே ஒரு சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  அதன் கீழே வேதாரண்யம் தொடர்வண்டிப் பாதை செல்கிறது.  நாட்டிலேயே ஓடாத ரயிலுக்கு இங்குதான் சாலை மேம்பாலம் அமைந்துள்ளதை அதிசயமாக பார்க்கக் கூடிய சூழல் வெகு விரைவில் வரலாம்.

சனி, ஜனவரி 07, 2012

கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை உடனே கைவிடு


கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை உடனே கைவிடு


அ.மார்க்ஸ்,  கோ. சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி,  மு.சிவகுருநாதன்

(முகவரி:  ப்ளாட் எண் 80, கே. கே. நகர். மதுரை - 625020. செல்: 9444120582)

     ‘மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்’, தமிழ்நாடு (People’s Union for Human Rights), ‘மற்றும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ புதுச்சேரி (Federation for People’s Rights) ஆகிய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நாங்கள் நால்வரும் இரண்டு மாதங்களுக்குப் பின் இரண்டாம் முறையாக ஜனவரி 05, 06 (2012) தேதிகளில் கூடங்குளம் சென்று மக்களைச் சந்தித்தோம். இடிந்தகரையில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டு நாட்களும் முழுமையாகக் கலந்து கொண்டோம். போராடும் மக்களுடன் விரிவாகப் பேசினோம். முனைவர் சுப.உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் குழுவினரிடமும் உரையாடினோம்.

    சென்ற மாதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள்  ரஷ்யா சென்று அங்குள்ள தலைவர்களிடம் அளித்த வாக்குறுதியை எல்லோரும் அறிவோம். இரண்டு வாரங்களில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதற் கட்ட அணு உலைகள் செயல்படும் என அவர் கூறியிருந்தார். அவர் கூறி இப்போது சுமார் ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்தத் திசையில் ஏதும் வேலைகள் நடை பெறுகின்றனவா, போராடும் மக்களின் மனநிலை இப்போது எப்படி உள்ளது முதலானவற்றை நேரில் கண்டறிவதே எங்களின் நோக்கம்.

     கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் எவ்விதத் தொய்வுமில்லாமல் நடைபெற்று வருகிறது. இடிந்தகரையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் 145 நாட்களாகத் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. தூரப் பகுதிகளிலிருந்து வருகிறவர்களின் சிரமங்களைக் குறைக்கும் பொருட்டு தற்போது கூடங்குளம் மற்றும் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த மக்களை மட்டுமே தொடர் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளுமாறு போராட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் தேவைப்பட்டால் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக் கணக்கில் மக்கள் வந்து கலந்து கொள்ள எப்போதும் தயாராக உள்ளதாகப் போராட்டக் குழுவினர் கூறினர். தொடர்ந்து பல மாத காலங்களாகத் தொழில் செய்யாமல் போராட்டத்தில் கலந்து கொள்வதால் ஏற்படும் வருமான இழப்பைக் குறைக்க வேண்டி தொழில்களுக்குச் செல்லும் ஆண்களுக்கு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொரு நாள் போராட்டத்தின் போதும் அதிக அளவில் பெண்களும் சற்றே குறைந்த எண்ணிக்கையில் ஆண்களும் கலந்து கொள்கின்றனர். 

    நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் சுமார் 300 பேர்கள் உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றிருந்தனர். ஜனவரி 5 அன்று சென்னையிலுள்ள ஆசிய இதழியல் கல்லூரி மாணவர்கள் வந்து போராட்டத்திலிருந்த மக்களிடம் பல கேள்விகளைக் கேட்டனர். இந்த அணு உலையில் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பில்லை என அப்துல் கலாம் போன்றவர்கள் சொல்வது, இப் போராட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது என மத்திய அமைச்சர்கள் பரப்புகிற செய்தி உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய கேள்விகளும் கேட்கப்பட்டன. மிகவும் உணர்ச்சி வசப்பட்டதோடு கடுமையாகவும் உறுதியாகவும் இக்குற்றச்சாட்டுகளை மக்கள் மறுத்தனர். சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்திற்கு எங்களுக்கு எதற்குப் பணம், தேவைப்படும் எனக் கேட்ட அவர்கள், குறைந்த செலவையையும் கூடத் தாங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை விளக்கினர். அணு உலை மற்றும் அதன் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி அம்மக்கள், குறிப்பாகப் பெண்கள் கொண்டிருந்த தெளிவு எங்களுக்கு வியப்பை அளித்தது. போராட்டத்தின் ஊடாக மக்களின் உலகியலறிவு பெரிதும் வளர்ந்துள்ளதை எங்களால் காண முடிந்தது.

    குழந்தைகளுக்குப் பாலூட்டிக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும் தாய்மார்கள், பீடி சுற்றிக் கொண்டே உண்ணாவிரதமிருப்போர் என்பதாகப் போராட்ட அரங்கு காட்சியளித்தது.

    தாங்கள் ஒன்றும் மின் ஆற்றலுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் வரும் ஜனவரி 14 முதல் மின் சிக்கனத்திற்காக, அதிக மின் ஆற்றலைக் கோரும்  குமிழ் விளக்குகள் (bulbs) பயன்படுத்துவதை நிறுத்தப் போவதாகவும் போராட்டக் குழுவைச் சேர்ந்த மில்டன் எங்களிடம் கூறினார்.

    அணு உலை உள்ள வளாகத்திற்குள் போகிற வாகனங்கள், செல்கிற அதிகாரிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை போராட்டக் குழுவினர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அலுவலகத்தில் அமர்ந்தவாறே கண்காணிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பகல் ஷிஃப்டிற்கு 120 அதிகாரிகளும் இரவு ஷிஃப்டிற்கு 60 அதிகாரிகளும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களையும் கூட, அணு உலைக்காகக் கொண்டுவந்து  வைக்கப்பட்டுள்ள யுரேனியம் ஆக்சைட் எரிபொருள் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது முதலான பணிகளுக்காக மட்டுமே அனுமதிப்பதாகப் போராட்டக் குழுவினர் கூறினர். அணு உலையைச் செயல்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒருவர் உள்ளே நுழைந்தாலும் அவர்களைத் தடுத்துப் பிடித்து வெளியேற்றுவோம் என உறுதிபடக் கூறினர். மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரையும் கூடக் கூடுதலாக யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை. தமிழக அரசும் உள்ளே போய்வருவோரைக் கண்காணிக்கிறது. மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அணு உலையைச் செயல்படுத்தக் கூடாது என்கிற சட்ட மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் இக் கண்காணிப்பை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்கிறார். தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என மக்கள் மிக உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளதை நேரில் கண்டோம்.

     எனினும் நேற்று அங்கு நடந்த ஒரு நிகழ்வு மத்திய அரசின் சதி நோக்கத்தையும் மக்களின் உறுதியையும் காட்டுகிறது. உள்ளே உள்ள சுமார் 60 மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கான உணவுக்கான பொருட்களை மட்டும் இதுவரை போராட்டக் குழுவினர் உள்ளே கொண்டு செல்ல அனுமதித்து வந்தனர். திடீரென அதிக அளவில் உள்ளே உணவுப் பொருட்கள் செல்வதைக் கண்டு அய்யப்பட்ட கூடங்குளம் மற்றும் இடிந்தகரையைச் சேர்ந்த  பெண்கள் நேற்று (ஜனவரி 5) அணு உலை நுழை வாயிலில் கூடி போக்குவரத்தைத் தடுத்து மறியல் செய்தனர்.  உள்ளே செல்பவர்களில் கொஞ்சப் பேர்களைத் தினந்தோரும் நிறுத்தி வைத்துள்ளதாகப் போராட்டக் குழுவினரும் மக்களும்  ஐயம் கொண்டு இம் மறியல் போராட்டத்தை நடத்தினர். உடனடியாக மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அங்கு விரைந்து சென்று உள்ளே ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்து நாளைக் காலை (அதாவது இன்று ஜனவரி 7) மக்களிடம் தெரிவிப்பதாக வாக்களித்த பின்னரே மறியல் செய்த பெண்கள் கலைந்தனர்.

    கூடங்குளம் மற்றும் இடிந்தகரை ஊரெங்கும் உளவுத்துறையினர் குவிக்கப்பட்டு வெளியூர்களிலிருந்து வருவோர் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கண்காணிக்கப் படுகின்றனர்.


கோரிக்கைகள்
1. 
 01.தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் சற்றும் மதியாமல் இரண்டு வாரங்களுக்குள் அணு உலை செயல்படுத்தப்படும் என ரஷ்யாவில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அணு உலையைச் செயல்படுத்த அங்கு தற்போது வாய்ப்பே இல்லை. கூடங்குள அணுமின் நிலையத் தலைவர் காசிநாத் பாலாஜி ஃப்ரன்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் உள்ளூர் மக்களின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இல்லாமல் அணு உலையைச் செயல்படுத்த இயலாது என ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கிறோம். உள்ளூர் மக்களின் அச்சம் இம்மியும் குறையவில்லை. எக்காரணம் கொண்டும் அணு உலையைச் செயல்படுத்த அவர்கள் அனுமதிக்கப் போவதும் இல்லை. இந்நிலையைக் கணக்கில் கொண்டு உடனடியாக மத்திய அரசு கூடங்குள அணு உலை நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவிக்க வேண்டும்.

2.  02. தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து உடனடியாக 1000 மெ.வா மின்சாரத்தை அளிக்க வேண்டும்.

3.  03. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழக மக்களின் இவ்விரு கோரிக்கைகளையும் மத்தியில் வற்புறுத்தி நிறைவேற்ற வேண்டும்.

4.   04.அறிவியல் ஆய்வுகளுக்காக ஒதுக்கப்படும் நிதி அளவை அதிகரிப்பதோடு, அதில் பெருந்தொகையை புதுப்பிக்கத்தக்க மாற்று மின் உற்பத்தித் திட்ட ஆய்வுகளுக்காகச் செலவிட வேண்டும்.  மாற்று மின் திட்டங்களைப் பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டும்.

5. 
    05. தமிழகத்தில் ஆங்காங்கு கூடங்குளத் திட்டத்தைச் செயல்படுத்து எனக் கோரிக்கை வைத்துச் சிறிய அளவில் போரட்டங்கள் தூண்டிவிடப் படுவது வருந்தத் தக்கது. தமிழக மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய முல்லைப் பெரியார் அணை குறித்த பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் அளிக்கிற முக்கியத்துவம் பாராட்டுக்குரியது. கூடங்குளப் பிரச்சினையிலும் கவனமாக இருந்து மத்திய அரசின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.  

ஜனவரி 07, 2012
மதுரை