புதன், பிப்ரவரி 29, 2012

சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் உண்மை அறியும் குழு – இடைக்கால அறிக்கை

சென்னை வேளச்சேரி என்கவுன்டர் கொலைகள் உண்மை அறியும் குழு – இடைக்கால அறிக்கை

பிப்ரவரி 27, 2012
சென்னை.

       வேளச்சேரியில் கடந்த 22 தேதியன்று இரவு (23 அதிகாலை) நடந்துள்ள என்கவுன்டர் கொலைகளில் ஐவர் பலியாகியுள்ள செய்தி தொடர்பாக தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் பல நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், தலைவர், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.                                                                                                                                              2.பேரா.பிரபா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம் (PEM), திண்டிவனம்.
3.  கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
4.  வழக்கறிஞர் ரஜனி (PUHR), மதுரை.
5.  வழக்கறிஞர் சுப.. மனோகரன், சென்னை
6.  மதுமிதா தத்தா, அமைதிக்கான மற்றும் நீதிக்கான பிரச்சார குழு (CPJ), சென்னை.
7..  சங்கர ராம சுப்பிரமணியன், பத்திரிகையாளர், சென்னை.
8.  வழக்கறிஞர் சையது அப்துல் காதர், மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு    (NCHRO).
9. நிர்மலா கொற்றவை, நிர்மலா கொற்றவை, பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வாதத்திற்கு எதிரான அமைப்பு (MASES)
10.  சந்திரா, எழுத்தாளர், சென்னை.

      நாங்கள் பிப்ரவரி 26, 27 தேதிகளில், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று சுற்றியுள்ள பொதுமக்கள், காவல்துறை ஆணையர் திரிபாதி ஐ.ஏ.எஸ்., ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காவல்துறை ஆய்வாளர்கள் கிறிஸ்டியன் ஜெயசீல் மற்றும் ரவி, கொள்ளையடிக்கப்பட்ட வங்கி அதிகாரி பாலாஜி ஆகியோரை சந்தித்தோம். அருகிலுள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும், ஆணையர் திரிபாதி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்களுக்கும் பல முரண்பாடுகள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. அவை:

1. நாங்கள் சந்தித்த மக்கள் சுமார் 10 அல்லது 10.30 மணியளவிலேயே காவல்துறையினர் அங்கு வந்தனர் எனக் கூறினர். தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் போது சத்தம் கேட்டு வெளியே வந்ததாகவும் காவல்துறையினர் கதவுகளையும், சன்னல்களையும் சாத்தி விளக்கை அணைக்குமாறு எச்சரித்ததாகவும் பலரும் கூறினர். காவல்துறை ஆணையர் என்கவுன்டர்களுக்குப் பின் பத்திரிகைகளுக்கு அளித்த செய்தியில் இரவு 12.30 மணியளவிலேயே கொள்ளையர்கள் ஒளிந்திருக்கும் தகவல் கிடைத்ததாகவும், அதன் பின்னரே அங்கு சென்றதாகவும் கூறியுள்ளார். இந்த முரண் குறித்து நாங்கள் ஆணையர் திரிபாதி அவர்களிடம் கேட்ட போது மேஜிஸ்ட்ரேட் விசாரணை உள்ள நிலையில் தான் பதில் கூற இயலாது எனக் கூறினார். வேறு பல கேள்விகளுக்கு எங்களிடம் விளக்கமாகப் பேசிய ஆணையர் இதற்கு மட்டும் மேஜிஸ்ட்ரேட் விசாரணையைக் காரணமாக சொல்லியது அவரிடம் இதற்குப் பதில் இல்லை என்பதையே காட்டியது.

2. சன்னல் வழியாக ஒளிந்திருந்தவர்கள் சுட்டதாகவும், தாங்கள் தற்காப்பிற்காக சுட்டதாகவும் ஆணையர் சொன்னதைப் பத்திரிகைகள் பல “கதை” என்றே எழுதின. இதற்கு ஆதாரமாகப் பத்திரிகைகள் இரு காரணங்களைச் சுட்டிக்காட்டின. ஒன்று: இருதரப்பிற்கும் பெரிய அளவு நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான வெடிச் சத்தங்களை யாரும் கேட்கவில்லை. இரண்டு: சன்னலிலோ, சன்னல் கம்பிகளிலோ குண்டுக் காயங்கள் எதுவும் கிடையாது. குண்டுகள் பாய்ந்த மட்டத்திலேயே இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியவற்றிலும் குண்டுக் காயங்கள் இல்லை. சுவரிலும் இரண்டு குண்டுக் காயங்கள் மட்டுமே இருந்தன. இரத்தக்கறைகூட தரையில் மட்டுமே இருந்தது. நாங்கள் சந்தித்த மக்களும் சத்தங்கள் கேட்டதென்றாலும், நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்த சத்தம் கேட்டதாக சொல்லவில்லை. வீட்டைப் பார்வையிட எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எங்களால் சண்டை நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தைப் பார்க்க முடியவில்லை. இந்த அய்யங்கள் குறித்தும் ஆணையர் அவர்களிடம் பதில் இல்லை.

      நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றவுடன் அந்த வீடு இருந்த சந்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். மேஜிஸ்ட்ரேட் விசாரணையைக் காரணமாக சொன்னார்கள். அருகில் சென்று சம்பவம் நடந்த வீட்டை வெளியில் இருந்து பார்க்கக்கூட நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையெல்லாம்விட மோசமான விஷயம் என்னவெனில் பக்கம் மற்றும் எதிர் வீட்டிலுள்ள மக்களையும் சந்திக்க விடவில்லை. இப்படிச் சுற்றியுள்ள மக்களைக்கூட சந்திக்க விடாமல் தடுத்தது மர்மமாக உள்ளது. காவல்துறை எதையோ மறைக்க விரும்புவதையே இது காட்டுகிறது.
காவல்துறை இந்த என்கவுன்டர் கொலைகளைப் பற்றிச் சொல்லுகிற செய்தி எல்லாமே வழக்கமாக எல்லா என்கவுன்டர்களிலும் சொல்லுகிற கதையை ஒத்ததாகவே உள்ளது. ‘நாங்கள் சென்று அவர்களைச் சரணடையச் சொன்னோம். அவர்கள் சுட்டார்கள். நாங்கள் தற்காப்பிற்காக திருப்பிச் சுட்டோம். அவர்கள் எல்லோரும் சம்பவ இடத்திலேயே செத்துப் போனார்கள். எங்களில் இருவருக்கு மட்டும் லேசான காயம்’ – என்கிற கதை நாம் வழக்கமாகக் கேட்பதுதான். இங்கும் காவல்துறை அதைத்தான் சொல்லுகிறது. ஒளிந்திருந்தவர்கள் இருந்த வீடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட ஒற்றைப் படுக்கை அறை இல்லம். காவல்துறை சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும்கூட கிட்டத்தட்ட ஒரு பொந்தில் அடைப்பட்ட எலிகளைப் போலத்தான் அவர்கள் ஐவரும் அங்கு அடைந்திருக்கின்றனர். காவல்துறை நினைத்திருந்தால்  அவர்களை முற்றுகையிட்டு, தேவையானால் ஒரிரு நாட்கள் வரை முற்றுகையை நீடித்து அவர்கள் அனைவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம். அல்லது கமாண்டோ படையினரைக் கொண்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களில் ஒரு சிலரையாவது உயிருடன் பிடித்திருக்கலாம்.

      அப்படி உயிருடன் பிடித்திருந்தால் விசாரணையில் மேலும் பல உண்மைகள் நமக்குத் தெரிய வந்திருக்கும்.இங்கொன்றை எமது குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. என்கவுன்டர் நடப்பதற்கு முன்னதாகவே, இண்டாவது வங்கிக் கொள்ளை நடந்த அடுத்த இரண்டாவது நாளிலேயே கொள்ளை அடித்தது பீகாரைச் சேர்ந்த கும்பல்தான் என்று போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாக இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது (பிப்ரவரி 22). இது எப்படி அவர்களுக்குத் தெரிய வந்தது எனில் இதேபோன்ற வங்கிக் கொள்ளைகளைப் பீகாரைச் சேர்ந்த கும்பல் மகாராஷ்டிராவில் பல இடங்களில் நடத்தியதாகவும், அந்தக் கொள்ளையர்களைப் பிடித்து விசாரித்ததில் சென்னையிலும் தங்கள் கைவரிசையை அவர்கள் காட்ட இருப்பதாகச் செய்தி கிடைத்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சுபோத் காந்த் சிங் எனகிற நபர் சில தகவல்களைக் கூறியதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். திங்கட்கிழமைகளாகப் பார்த்துக் கொள்ளையடிப்பது, சி.சி.டிவி கண்காணிப்பு இல்லாத அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைத் தேர்தெடுப்பது, பொம்மைத் துப்பாக்கிகளை வைத்து மிரட்டுவது ஆகியன இந்த கும்பலின் கொள்ளையடிக்கும் முறை (modus operandi) எனவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

     இதில் இரண்டு அம்சங்கள் கவனிக்கத்தக்கன. 

ஒன்று: இந்த உண்மை தெரிந்ததன் விளைவாகவே தமிழக காவல்துறை பீகாரைச் சேர்ந்த கும்பலுடன் இக்கொள்ளையைத் தொடர்புப்படுத்தி விரைவாகத் துப்புத் துலக்க முடிந்தது. 

இரண்டு: தமிழகக் காவல்துறையைப் போல சந்தேகப்பட்டவர்களை என்கவுன்டரில் போட்டுத் தீர்க்காமல் மகாராஷ்டிர காவல்துறை முறையாகக் கைது செய்து விசாரித்ததாலேயே இந்த உண்மை இன்று பயன்பட்டுள்ளது.  யாரையோ திருப்திப்படுத்தவோ அல்லது ஒரு அதிரடி சாதனைச் செய்து தமிழகத்தை இன்று பாதித்துக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசைத் திருப்பவோ செய்த இந்த என்கவுன்டர் படுகொலைகளால் இன்று தமிழக காவல்துறை பல அரிய உண்மைகளை இழந்துள்ளது.

       ஆணையரின் கூற்றுக்களைத் தொடர்ந்து கவனித்து வந்தால் ஒன்று வெளிப்படையாகத் தெரிகிறது. 22 இரவு அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்ற போது ஒளிந்திருந்தவர்கள் உண்மையிலேயே அந்தக் கொள்ளைகளைச் செய்தவர்கள்தானா என்கிற தெளிவு அவர்களிடம் இல்லை. அன்று அவர்கள் வெளியிட்ட படத்தில் உள்ள ஒருவர்  அந்த வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரிப்பதற்காகவே அன்று இரவில் அங்கு சென்றதாக ஆணையர் எங்களிடம் கூறினார். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் சென்றவர்கள் அங்கிருந்த ஐவரையும் கொன்றதற்குச் சொல்கிற ஒரே காரணம் ‘அவர்கள் சுட்டார்கள். நாங்கள் தற்காப்பிற்காகக் கொன்றோம்’ என்பதுதான். இது ஏற்கத்தக்கது அல்ல. பொம்மைத் துப்பாக்கி வைத்துதான் வங்கிக் கொள்ளை அடித்ததாக முதல் நாள் ஆணையர் கூறியுள்ளார். கொள்ளயர்கள் வைத்திருந்ததாக இப்போது காட்டப்படும் துப்பாக்கிகள்கூட நாட்டுத் துப்பாக்கிகள்தான். இந்நிலையில், அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்களைத் தேவையானால் வெளியேற்றிவிட்டு, ஒளிந்திருந்தவர்களை உயிருடன் பிடிக்கும் அளவுக்குத் திறமையுள்ளதுதான் நமது காவல்துறை. அதற்கான முயற்சியில் எள்ளளவும் இறங்காமல், அத்தனை பேரையும் கொன்று தீர்க்கும் நோக்குடன் காவல்படை சென்றுள்ளது என்றே நாங்கள் சந்தேகிக்கிறோம்.

      காவல்துறையினர் கைது செய்யச் செல்லும் போது கைதாக வேண்டியவர்கள் வர மறுத்தால் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமுண்டு. (பிரிவு 46). இந்த வன்முறை கொலை என்கிற அளவிற்குச் செல்வதற்கும் சட்டத்தில் அனுமதியுண்டு. ஆனால், கைது செய்யப்பட வேண்டியவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அளவிற்கு உரிய குற்றத்தைச் செய்தால் மட்டுமே அவரைக் கொல்லலாம் (46 [3]). அன்று கொல்லப்பட்டவர்களைப் பொருத்தமட்டில் இன்று காவல்துறை என்னென்ன கூடுதல் தகவல்களைத் தந்த போதும், அன்றைய அளவில் அவர்கள் வெறும் சந்தேகத்திற்குரிய நபர்களே. அவர்கள் கொலைக் குற்றம் செய்தவர்களும் அல்ல. அவர்கள் ஐவரையும் அன்று கொன்று குவித்தது சட்ட ரீதியில் ஏற்புடையதல்ல. இதுகுறித்து ஆணையரை நாங்கள் கேட்ட போது அவர் சற்றுக் கோபமடைந்தார். எங்கள் உயிருக்கு ஆபத்து வரும் போது எங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லாவிதமான உரிமைகளும் எங்களுக்கு உண்டு என்று கூறினார்.

      உண்மைதான். ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள கொலையும் செய்யலாம். காவல்துறைக்கு மட்டுமல்ல எல்லா குடிமக்களுக்குமே இந்த உரிமை உண்டு. ஆனால், அவ்வாறு கொலை நிகழும்போது அது கொலை வழக்காகவே பதிவு செய்யப்பட வேண்டும். கொலையைச் செய்தவர் நீதிமன்றத்தில் இந்திய சாட்சியச் சட்டத்தின் 105ம் பிரிவின்படி, தான் தற்காப்பிற்காகவே இந்தக் கொலை செய்ய நேர்ந்தது, வேறு வழியே இல்லை என நிறுவும் பட்சத்திலேயே வழக்கில் இருந்து அவர் விடுதலை பெறலாம். இதுவும் குடிமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறைக்கும் பொருந்தும். இதை நீதிமன்றங்களும், மனித உரிமை ஆணையங்களும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. சென்ற ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜுவும், சி.கே.பிரசாத்தும் போலி என்கவுன்டர் கொலைகளில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மரண தண்டனையை நாங்கள் ஏற்பதில்லை. உச்சபட்ச தண்டனை என்ற அளவிலேயே இந்த கருத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

 எமது பார்வைகளும், கோரிக்கைகளும்:

1. சந்தேகத்திற்குரிய ஐவரையும் உயிருடன் பிடித்திருக்கலாம், பிடித்திருக்க வேண்டும். அப்போது பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும். சந்தேகத்திற்குரிய ஐவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பது அற மற்றும் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமல்ல புலனாய்வு நோக்கிலும் தவறானது. கொள்ளைக் கும்பலின் வீச்சு, தீவிரவாதத் தொடர்பு எனப் பல உண்மைகளை அறியக்கூடிய வாய்ப்பு இவர்கள் கொல்லப்பட்டதன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாக்க் கண்டிக்கிறோம். இதில் பங்கு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. இது ஒரு போலி என்கவுன்டர் என்பதற்கான நியாயமான அய்யங்கள் உள்ளன. ஆணையர் திரிபாதி அவர்களால் இவை குறித்துத் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. நாங்கள் தொடக்கத்தில் கூறியுள்ள காரணங்கள் தவிர வேறு சில அய்யங்களும்  முன்வைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட ஒருவர் ஷூ கால்களுடன் கிடந்த படம் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. அறைக்குள் இருந்தவர் ஷூ அணிந்திருக்க வாய்ப்பில்லை. கொள்ளைச் சம்பவங்கள் குறித்த எந்தத் தகவல்களையும் வெளியில் சொல்லக்கூடாது என வங்கி ஊழியர்கள் மிரட்டப்பட்டதாக ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. பெருங்குடி பரோடா வங்கி அதிகாரி திரு பாலாஜி எங்கள் குழுவினர் சென்றபோது ஏதும் பதில் கூற மறுத்துவிட்டார். பேசியவற்றையும் வெளியிடக்கூடாது என வேண்டிக்கொண்டார். இப்படி தகவல்களைத் வெளியே வராமல்  தடுப்பது ஏன் என்று தெரியவில்லை. இதுபோன்ற அய்யங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை ஏற்புடையதல்ல. தமிழக அரசின் கீழுள்ள காவல்துறைப் பிரிவொன்றின் விசாரணை மூலம் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ. புலனாய்வு தேவை. நடந்துள்ள என்கவுன்டரில் ஐந்து இளைஞர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் செயலின் கடுமை கருதி பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபததொருவர் தலைமையில் நீதி விசாரணை தேவை.

3.  தேசிய மனித உரிமை ஆணைய நெறிமுறைகளின்படி ஆணையர் திரிபாதி, இணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன், கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், உதவி ஆணையர் சுதாகர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட என்கவுன்டர் குழு மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட வேண்டும்.

4. 2007 ஆகஸ்ட் 8ல் வெளியிடப்பட்ட தமிழக அரசின் என்கவுன்டர் தொடர்பான நெறிமுறைகளின்படி என்கவுன்டர் கொலைகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தரப்புக் குற்றச்சாட்டுகள் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதன்படி இப்போது கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தரப்பில் ஏதாவது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலோ அல்லது பீகார் அரசுத் தரப்பில் அய்யங்கள் எழுப்பப்பட்டாலோ அது உரிய முறையில் கவனம் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும்.

5. மேற்கூறிய நெறிமுறைகளின்படி என்கவுன்டர் கொலையில் பங்குப் பெற்ற அதிகாரிகளுக்கு வீரப் பரிசுகளோ, ஊக்கப் பதவி உயர்வுகளோ அளிக்கப்படக் கூடாது. இங்கும் அது கடைபிடிக்கப்பட வேண்டும்.

6. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்துக் கொண்டு இன்று தமிழகமெங்கிலும் உள்ள இரண்டு லட்சங்களுக்கு மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளிகள் (migrant labourers) மற்றும் மாணவர்கள் குற்றப்பரம்பரையினர் போல் நடத்தபடுவதாக எமக்குச் செய்திகள் வந்துள்ளன. அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கக்கூடிய திருப்பூரில் சென்ற வாரத்தில் இத்தகைய தொழிலாளிகள் எல்லோரும் காவல்நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரி பகுதியிலும்கூட சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டு ஆங்காங்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள் என அறிகிறோம். வங்கிக் கொள்ளை நடந்த பெருங்குடி முதாலான பகுதிகளில் வாழ்கிற. வடநாட்டார் போலத் தோற்றமளிக்கிற அனைவரும் இன அடிப்படையில் விசாரித்துப் பதிவு (racial profiling) செய்யப்பட்டுள்ளனர். கல்லூரிகளிலும் பிற இடங்களிலும் இவ்வாறு பட்டியல் எடுக்கப்படுவதை ஆணையரே பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். எவ்வகையான தொழில் மற்றும் சங்க உரிமைகளுமின்றி கடுமையாகச் சுரண்டப்படும் இவர்களைக் குற்றப்பரம்பரையினரைப் போல நடத்துவது வருந்தத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், மாணவர்களும் உலகமெங்கும் இவ்வாறு பணி செய்து கொண்டும், படித்துக் கொண்டும் உள்ளனர். உலகமயச் சூழலில் இத்ததைய புலம்பெயர்வுகள் அதிகமாகியுள்ள நிலையில் இத்தகைய நடைமுறை கண்டிக்கத்தக்கது.

7. ஊடகங்களும், சில அமைப்புகளும்கூட இவ்வாறு “வடநாட்டார்” மீது இனவெறுப்பு ஏற்படும் வகையில் எழுதவும் பேசவும் செய்கின்றனர். வடநாட்டைச் சேர்ந்தவர் என நினைத்து இன்று ஒரு ஆந்திர மாநிலத்தவரை மயக்கம் வரும் வரை அடித்துள்ள செய்தி படங்களுடன் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுதல் அவசியம். அரசியல் கட்சித் தலைவர்கள் இந்நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டும்.

8. வேளச்சேரியிலும்  சென்னையின் வேறு சில பகுதிகளிலும் இந்த என்கவுன்டர் கொலைகளைப் பாராட்டி பெரிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இரண்டு அம்சங்கள் இவற்றில் தூக்கலாக ஒலிக்கின்றன. என்கவுன்டர் செய்த போலீசை வானளாவப் புகழ்வது ஒன்று. என்கவுன்டர் கொலைகளுக்கு எதிராகவும் அரசியல் சட்ட ஆட்சியை வற்புறுத்தியும் இயங்குகிற மனித உரிமை அமைப்பினரைக் கடுமையாக கண்டிப்பது அடுத்தது. காவல்துறையின் தூண்டுதலின் அடிப்படையிலேயே இவை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிற அய்யம் ஏற்படுகிறது. நேற்று இதுகுறித்து விசாரிக்க சம்பவம் நடந்த பகுதிக்கு நாங்கள் சென்றபோது எங்களுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் இத்துடன் இணைத்து நோக்கத்தக்கது. நாங்கள் சம்பவம் நடந்த வீதிக்குள் நுழைய காவல் துறையினரால் தடுக்கப்பட்ட போதிலும் சுற்றியுள்ள மக்கள் எங்களுடன் எவ்விதத் தயக்கமுமின்றி உரையாடிக் கொண்டிருந்தனர். நாங்கள் கேட்ட தகவல்களை அவர்களுக்குத் தெரிந்தவரை விளக்கிக் கொண்டிருந்தனர். ஆனால், திடீரென அங்கு வந்த ஒரு சிலர் போலீசைப் புகழ்ந்து பேசியதோடு, எங்களை அவதூறாகப் பேசி அச்சுறுத்தித் தாக்க முயன்றனர். வெளியே போகாவிட்டால் விரட்டி அடிப்போம் என கிட்டத்தட்ட ஒரு தள்ளூமுள்ளூ நிலையே அங்கு ஏற்பட்டது. அங்கு காவலில் இருந்த போலீசார் எங்களிடம் கண்ணியமாக நடந்து கொண்ட போதிலும் கலாட்டா செய்தவர்களை அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதியரசர் ராம சுப்பிரமணியன் அவர்கள் மனித உரிமை அமைப்புகளை ‘மூன்றாவது புலனாய்வு முகமை (third investigation agency)’ எனக் கூறி இத்தகையோர் மேற்கொள்ளும் உண்மை அறியும் பணிகளின் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் பல வெளிவந்துள்ளதைச் சுட்டிக்காட்டியதோடு,, இத்தகைய பணிகளைத் தடை செய்ய முடியாது எனத் தீர்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைப் பாதுகாவலர்களைப் (Human Rights Defenders) பாதுகாக்கும் ஐ.நா. ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி மனித உரிமைப் பாதுகாவலர்களின் பணிக்கு அரசு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். ஆனால், நாங்கள் ஒரு சில வன்முறையாளர்களால் விரட்டப்பட்ட போது காவல்துறையினர் இதைக் கண்டுக் கொள்ளவில்லை. காவல்துறை தூண்டுதலே இதற்கு பின்னணியாக இருக்கலாம் என்கிற அய்யம் எங்களுக்கு உள்ளது. இதுகுறித்து புகார் ஒன்றை நாங்கள் ஆணையரிடம் அளித்துள்ளோம். இதன்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

[தொடர்பு முகவரி: அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை; 600 020. செல்: +91 9444120582]

நன்றி:  அ. மார்க்ஸ்  http://amarx.org/

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்

ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர் புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்
          
                                                                                                - மு. சிவகுருநாதன்
       திருவாரூர் மாவட்டம் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தியானபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கெளசிகன் (15) நேற்று (27.02.2012) மதிய உணவு இடைவேளையின்போது பியர் குப்பிகள் வாங்கிக் கொண்டு சைக்கிளில் செல்லும்போது அப்பாட்டில்கள் வெடித்துச் சிதறி அம்மாணவன் மாண்டு போயுள்ளான்.

       சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வகுப்பறையிலேயே ஆசிரியையைக் கொலை செய்த நிகழ்வை ஊடகங்கள் பெரும் விவாதப் பொருளாக ஆக்கியுள்ள சூழலில் திருவாரூரில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதெல்லாம் 1 லி., 2 லி. என பிளாஸ்டிக் பாட்டில்களில் கோக்கோ, பெப்ஸி ஆகியவை வராத காலம்  என்று நினைக்கிறேன்.  கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு 300 மிலி பெப்ஸி பாட்டில்களை 10  க்கு மேல் குடித்தவுடன் ஓர் மாணவர்  மயங்கி விழுந்து இறந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.

நமது உடலில் - ரத்தத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்ஸைடு குறிப்பிட்ட அளவை விட தாண்டக் கூடாது என்ற பால பாடம் கூட கல்லூரி மாணவர்களுக்குத் தெரியாமற் போனதுதான் வேதனை.  நமது கல்வி முறை ஏட்டுக் கல்வியையும் நடைமுறை வாழ்க்கைப் பயனுடைமையையும் இணைக்காமற் போனதும் ஒரு காரணம்.

இதைப் போலவே சோடா, பியர் போன்ற பானங்களில் கார்பன் - டை - ஆக்சைடு அதிக அழுத்தத்தில் இருக்கும் என்பது தெரியாமற் போனது ஏன்?  கிரிக்கெட் மோகத்திற்கு அடிமையாயிருக்கும் நமது இளைய சமுதாயம் கிரிக்கெட் மைதானங்களில் பீச்சியடிக்கப்படும் புட்டிகளுக்கும் அடிமையாக மாறியிருக்கிறது.  இவர்களுக்கு ஏன் அவ்வாறு பீய்ச்சி அடிக்கிறது என்பதற்கான அறிவியல் காரணங்கள்தான் எட்டுவதில்லை.

      இம்மாணவனின் இறப்புக்குப் பின்னாலுள்ள அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகளை ஆய்வு செய்ய வேண்டிய சமூக அக்கறை உடைய அனைவரின் கடமையும் பொறுப்புமாகும். 

      ஒன்பதாம் வகுப்பு என்பது பள்ளி மாணவர்கள் பியர் குடிக்கப் பழகத் தொடங்கும் பருவமாகும்.  இந்த மட்டுமல்லாது சிகரெட், பான் பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை மற்றும் போதைப் பொருட்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள்.  இத்தகைய பொருட்களை 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று சட்டமிருக்கிறது.  இந்த அறிவிப்பைக் கூட ஒவ்வொரு பெட்டிக் கடையிலும் காண முடியும்.

       இந்த விதிமுறை அரசு கடைகளுக்கு (TASMACTAMIL NADU STATE MARKETING CORPORATION LIMITED ) பொருந்தாமற் போன காரணம் என்ன? இந்த மாணவன் இறப்புக்குக் காரணமான டாஸ்மாக் ஊழியர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமலிருக்க அரசோ,சமூகமோ என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகிறது? இதெல்லாம் எதிர்பார்ப்பது நமக்கு பெருத்த ஏமாற்றமாகவே முடியும்.

இறந்த இம்மாணவன் பள்ளிச் சீருடையில் டாஸ்மாக் சென்று இந்த மதுப்புட்டிகளை வாங்கியுள்ளான்.  அங்குள்ள அரசு ஊழியர்தான் இதை அவனுக்கு விற்றுள்ளார்.  'வயது வந்தோருக்கு மட்டும்' (A - ADULTS ONLY) சான்று பெற்ற இந்திய - தமிழ்த் திரைப்படங்களைக் குழந்தைகள் பார்க்க எவ்விதத் தடையுமில்லை.  ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் ஈழத்தமிழர் ஒருவர் இத்தகைய ஒரு தமிழ்ப் படத்தை குழந்தைகளுடன் சென்று பார்க்க அனுமதிக்காமல் திருப்பியனுப்பியதை தனது கட்டுரையொன்றில்   குறிப்பிட்டிருந்தார்.

இந்த IMFL  (Indian Made Foreign Liquor) மதுக்கடைகளை நடத்தும் (TASMAC) தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு லாட்டரிக்கு தடை விதித்தது போல பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருள்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.  ஆனால் இவ்வுத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் இல்லையெனத் தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.

மாறி மாறி தமிழகத்தை ஆளும் இரண்டு திராவிடக் கட்சிகளும் மதுவிலக்கை அமல் செய்வதில்லை என்பதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.  மதுவிலக்கு அமல் செய்யப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகும் என்று சொல்லும் இவர்கள் பனை, தென்னை மரங்களிலிருந்து இயற்கையாகப் பெறப்படும் கள் எனும் போதை பானத்தையும் தடை செய்திருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் அடிக்கடி கள்ளச்சாராய சாவுகள் நடந்த வண்ணமே உள்ளன.  தமிழக காவல்துறைக்கு இதில் பெரும்பங்கும் வருவாயும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.  டாஸ்மாக்கின்  IMFL சரக்குகளில் போலி, கலப்படம் இல்லையென்று அரசால் உறுதி கூற முடியாது.

புதுச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம், கடலூர், காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புதுச்சேரி தயாரிப்பு சாராயம் ஆறாக ஓடுகிறது.  அத்துடன்  IMFL-ன் போலித் தயாரிப்பு ஆலைகள் இருக்கின்றன.  இந்த போலி சரக்குகள் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளிலும் விற்பனையாகிறது.


குடி நல்லதா கெட்டதா என்ற விவாதங்கள் ஒரு புறமிருக்க இன்றைய யதார்த்த சூழலை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.  கடந்த 10 ஆண்டாக தமிழக அரசு மது விற்பனை வருவாயை மட்டும் நம்பி செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது.  அரசு கள்ளை அனுமதிக்கவோ அல்லது  மதுவிலக்கை அமல்படுத்தவோ  செய்யவோ தயாராக இல்லை. காரணம் இதன்மூலம் கிடைக்கும் அபரிமிதமான வருவாய்ப் பெருக்கமே.

மேலை நாகரிகம் மோசமானது என்று நம்மூர் அடிப்படைவாதிகள் சொல்லிக் கொண்டிருந்தாலும் குடிப்பது உள்ளிட்ட சில செயல்களுக்கு, அந்த நாடுகளில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனின் மகள்கள் பார் சென்று மது அருந்தியதற்கு அபராதம் விதிக்கப்பட்ட செய்திகளை நாம் அறிவோம்.

     நமது நாட்டில் மட்டும் கட்டாயக் கல்வி, குழந்தைத் தொழிலாளர்கள் போன்றவற்றில் வயது நிர்ணயம் பல்வேறு குளறுபடிகளை உள்ளடக்கியதாக உள்ளது.  14 வயது வரை கட்டாயக் கல்வி என்றும் 16 வயது வரை மட்டுமே குழந்தைத் தொழிலாளர் என்றும் சொல்வது மிகவும் மோசமான ஒன்று.  18 வயது பூர்த்தியடையாத வரை குழந்தையாகவே கருத வேண்டும்.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, உள்ளூர் திருவிழாக்கள், பள்ளி ஆண்டு விழாக்கள், கல்வி உதவித்தொகை பெரும் நாட்கள்  போன்றவை பள்ளி மாணவர்களின் கொண்டாட்டத்திற்குரியதாக மாறி விட்டது.  இத்தகைய விழாக்களின் மூலம்தான் மாணவர்கள் முதன் முதலாக ஆல்கஹாலை சுவைக்கத் தொடங்குகின்றனர்.  இவர்கள் இவைகளை வாங்குவதற்கும் நுகர்வதற்கும் சமூகத்தில் எவ்வித தடைகளும் இருப்பதில்லை.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்கள் விடுமுறை நாட்களில் பல்வேறு பணிகளுக்குச் செல்கின்றனர்.  அதன் மூலம் சொற்ப வருவாய் அவர்களுக்குக் கிடைக்கிறது.  இத்தகைய பணத்தினால்தான் மது நுகர்வு அவர்களுக்கு சாத்தியமாகிறது.

தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு முறை சொன்னது போல மிகக் குறைந்த தயாரிப்புச் செலவு கொண்ட இந்த சரக்குகளை அதிக விலைக்கு விற்று நமது அரசு லாபம் ஈட்டுகின்றன.  இந்த கொள்ளை லாபத்தில்தான் தமிழக அரசு இலவசத் திட்டங்களை போட்டிப் போட்டுக்கொண்டு அறிவித்து செயல்படுத்துகின்றன.  இந்த வருவாயில் ஒரு சிறிய தொகையைக் கூட மதுவின் தீமைகளை பரப்புரை செய்ய அரசு செலவிடுவதில்லை.  மது வீட்டுக்கும் நாட்டுக்கும் உயிருக்கும் கேடு என்று மதுப்புட்டிகளில் அச்சிடுவதோடு அரசின் பணி முடிந்து விடுகிறது. எய்ட்ஸ் , புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் துளி கூட மதுவுக்கு எதிராக நடத்தப்படுவதில்லை.   தமிழக அரசு தனது வருவாயை இழக்க விரும்பாததுதான் காரணம்.

அரசு கடைகளைத் திறந்து வைத்துவிட்டு இலக்கு நிர்ணயம் செய்து  விற்பனையைப் பெருக்கும் வழிகளைத்தான் தேடுகிறதே தவிர மதுவின் தீமைகளை பரப்புரை செய்ய மறுக்கிறது.  மதுவிலக்கையும் அமல் செய்யவும் போவதில்லை.  இந்த மாதிரியான இறப்புக்களைத் தவிர்க்க அரசு குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம்.

01. பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போதைப் பொருட்கள்  அரசு, தனியார் என்று எந்தக் கடைகளிலும் விற்பனை செய்யாமலிருக்க நடவடிக்கை தேவை.
02. மதுவின் வருவாயை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கி மதுவுக்கு எதிரான பரப்புரை செய்யவும் மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் செலவிடுதல் வேண்டும்.
03. பள்ளி மாணவர்களுக்கு உளவியல் மருத்துவர்களைக் கொண்டு உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

 04. ஆல்கஹால் போன்று உடலுக்கு அதிகம் தீங்கு செய்யாத பனை, தென்னை மரக் கள்ளுக்கு அனுமதி வழங்கலாம்.
  இதைச் செய்ய எந்த அரசும் முன் வருமென்று நமக்குத் தோன்றவில்லை.  எனவே அரசு இதையாவது செய்யலாம்.  குடிமக்கள் அனைவருக்கும் எப்படிக் குடிப்பது என்பது குறித்த பயிற்சி அளித்தலே அது.
 சளி, இருமல் மருந்துகளில் கூட வயதுக்குத் தகுந்த அளவு, எப்படி உபயோகிப்பது என்ற குறிப்பு இருக்கும். ஆனால்  IMFL போத்தல்களில் எச்சரிக்கை வாசகம் மட்டுமே காணப்படுகிறது.  இது ஏன்?
  வழக்கமாக அரசின் டாஸ்மாக் கடைக்குச் செல்லும் குடிமகன் ரூ. 70க்கு அங்கு வாங்கும் மிக மோசமான, கலப்படம் நிறைந்த அல்லது போலியாக தயாரிக்கப்பட்ட சரக்கை வாங்கி தண்ணீர் கூட கலக்காமல் அப்படியே குடித்து விடுகிறான்.  அடுத்த சில நிமிடங்களில் அவர்களால் சில மீட்டர் தூரமே நடக்க முடிகிறது.  பின்பு அவர் மயங்கி சாலையோர சாக்கடையில் விழுந்து விடுகிறார்.  பல மணி நேரம் கழித்து போதை தெளிந்துதான் அவரால் வீட்டுக்குச் செல்ல முடியும்.  ஏனிந்த நிலை?
 சாராயத்தை விற்கும் அரசு அதைக் குடிக்கும் முறைகளைச் சொல்லித் தருவதில் தவறில்லை.  இல்லையென்றால் மதுவிலக்கை அமல் செய்யட்டும்.  பள்ளி, கல்லூரிகளில் சாராயத்தில் உள்ள வேதிப் பொருட்கள், அது நமது உடலுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை உண்டு பண்ணுகிறது, அதை எப்படி, எவ்வளவு உபயோகிப்பது என்று கூட சொல்லித் தரலாம்.
  வேதியியலில் மெத்தனால், எத்தனால் பற்றி வருகிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.  ஆனால் அவற்றை உட்கொள்ளும் போது நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள், எவ்வளவு அளவு, எந்த முறையில் எடுத்துக் கொள்வது குறித்த பயிற்சிகள், வழிமுறைகள் அதில் இருப்பதில்லை.
  வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் இன்டேன் சிலிண்டர்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் நாம் பியர் பாட்டிலை எப்படித் திறப்பது, எப்படி எடுத்துச் செல்வது, பல்லால் கடித்துத் திறக்கக் கூடாது என்று சொல்வதில் தவறென்ன இருக்கிறது?
  இதைப்படிக்கும் போது சிலர் கோபமடையலாம்.  அமைதியாக யோசியுங்கள்.  பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தனியாரை நடத்தச் சொல்லிவிட்டு மதுக்கடைகளை மட்டும் அரசே நடத்தும் நிலையில் நாம் வேறு என்னதான் செய்ய முடியும்?

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

வேதாந்தா - ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண்டியவர்கள்

வேதாந்தா - ஸ்டெர்லைட்டுடன் சேர்த்து விரட்டப்பட வேண்டியவர்கள்
 
                                                                                                         - மு. சிவகுருநாதன் 
 
(பூவுலகின் நண்பர்கள், எதிர் வெளியீடு ஆகியோர் இணைந்து வெளியிட்ட சூழலியல் குற்றவாளி ஸ்டெர்லைட் (அட்டையில் - விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட்) குறுநூல் பற்றிய விமர்சனப்பதிவு.)

            
 
       வேதாந்தா ரிசோர்சஸ் என்ற பன்னாட்டுத் தொழில் குழுமம் இந்தியாவில் தாமிரம், இரும்பு, நிலக்கரி போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் பெருச்சாளியாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆப்பிரிக்கா கண்டத்திலும் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுகின்றது. நமது பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் போன்றோர் இந்நிறுவனங்களின் கை கூலிகளாகச் செயல்படுகின்றனர். ப. சிதம்பரத்திற்கும் வேதாந்தாவிற்கும் உள்ள தொடர்பை நாடே அறியும். அது  ப.சிதம்பரத்திற்கு வேண்டுமானால் மறந்து போயிருக்கலாம். 

       வேதாந்தா, சீசா கோவா, ஸ்டெர்லைட் என்ற பெயர்களில் இயங்கும் இந்நிறுவனம் சீசா - ஸ்டெர்லைட் என்ற பெயரில் இணைக்கப்பட்டு உலகில் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் ஏழாவது பெரிய நிறுவனமாக மாறவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. 

      நமது அரசுகளின் வளர்ச்சி என்பது ஏழைகளை, விவசாயிகளைக் கொன்று பணக்காரர்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் வாழ வைப்பதுதான். இந்த வளர்ச்சி 8%, 9%, 10% என்றெல்லாம் கணக்கு காட்டும் அரசியல்வாதிகளுக்கு , காந்தீயப் பொருளாதார மேதை ஜே.சி. குமரப்பா அவர்களின் கிராமத்து விவசாயியின் விலா எலும்புகளை வைத்து நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் அளவுகோல் கசப்பாகத்தான் இருக்கும். 

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் அடி வைத்த 1994 ஆம் ஆண்டு முதல் தொடரும் போராட்டங்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க அமைப்பாளர் பி.மி. தமிழ்மாந்தனின் கட்டுரை ஆவணப்படுத்துகிறது. கூடங்குளத்தில் இத்தனை ஆண்டு காலம் தொடரும் போராட்டங்களை கண்டும்  காணாதிருந்துவிட்டு இவ்வளவு ஆண்டுகள் ஏன் போராடவில்லை என்று கூப்பாடு போடுகிறார்களே, அதைப்போல ஸ்டெர்லைட் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் அதிகார கும்பல் இருக்கத்தான் செய்யும். இக்கட்டுரை அவர்களது வாயை அடைக்கும். 
 
        மேலும் இக்கட்டுரையில் தமிழக அரசியல் கட்சிகளின் விலை போன தன்மை, விளம்பர மோகம், ஸ்டெர்லைட் நிர்வாகம் போராட்டக்காரர்களை சாதி ரீதியாக பிளவுப்படுத்த செய்த முயற்சிகள், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்பாடுகள், மக்களை மயக்கும் சலுகைகள், சுற்றுச்சூழலை புறந்தள்ளிய அமைச்சகம், நீதிமன்றங்களும் மக்கள் நலனைப் புறக்கணித்த நிலை போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன. 
 
         1997 முதல் 1999 முடிய ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்துகள் இவற்றிற்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் கட்டிய அபராதத் தொகை போன்றவற்றைப் படிக்கும்போது இப்போராட்டங்களில் பின்னாலுள்ள உண்மை புலனாகிறது. இதிலிருந்து விரட்டப்பட வேண்டியவர்கள் ஸ்டெர்லைட் - வேதாந்தா மட்டுமல்ல; அதற்கு உதவிய ஆளும் வர்க்க முகவர்களையும் விரட்ட வேண்டிய அவசியம் புரியும். 

         சென்னை உயர்நீதி மன்ற உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் (NEERI - National Environmental Engineering Research Institute) அளித்த முதல் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை, தமிழக அரசு, மத்திய அரசுத் துறைகள் செய்த அத்துமீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டு, அதனையொட்டி சென்னை உயர்நீதி மன்ற அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டது. 

       இத்தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம் நம்பிக்கை கீற்று துளிர் விட்டிருப்பதை வழக்கறிஞர் சுந்தர்ராஜன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நீரி (NEERI) மையம், மாசு சுத்திகரிப்புப் பிரிவு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் சுத்திகரிக்கப்பட்ட நீரில் உள்ள ஆர்சனிக், குரோமியம், ஈயம், செலேனியம் போன்றவற்றின் அளவு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ள அளவுகளுக்குள்ளாகவே ஸ்டெர்லைட் ஆலை பராமரித்து வருவதாகவும் இரண்டாவது அறிக்கையில் பொய் சொன்னது. இதற்கு விலை 1.22 கோடி ரூபாய் என சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனின் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. 

     தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம், உச்சநீதிமன்றக் குழு என எல்லாத் தரப்பும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இத்தகைய நிறுவனங்களுக்கு பக்க பலமாகச் செயல்படுவதையும் மேற்கண்ட கட்டுரை விவரிக்கிறது. 

     ஒரு காலத்தில் கிழக்கிந்திய வணிகக் குழுவிற்கெதிராக இரு சுதேசிக் கப்பல்களை இயக்கிய வ.உ.சி.யால் பெருமைமிக்க நகரம் தூத்துக்குடி. இன்று இவ்வூரில் ஸ்டெர்லைட் போன்ற சுதந்திர இந்தியாவின் கொள்ளையிடும் அதிகார  வர்க்கத்தால் அனுமதிக்கப்படும் துயரங்களுக்கு எதிரான அடித்தட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டியுள்ளது. 

       இன்றைய வளர்ச்சிக் கோட்பாட்டின்படி தொழிற்சாலைகளின் விரிவாக்கமும் புதிய தொழிற்சாலைகளின் உருவாக்கமும் உலகெங்கும் நடைபெறுவதால்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி வருகிறது. நீர், நிலம், காற்று மாசுபடுதல், காலநிலை மாற்றம், ஓசோன் மண்டலம் மெலிவு, புவி வெப்பமடைதல், காடுகளின் பரப்பு குறைதல், பனியாறுகள் உருகுதல், கடல் மட்டம் உயர்தல், அரிய விலங்கு - தாவர இனங்கள் அழிதல் போன்ற பல்வேறு சீரழிவுகளை வெ. கஜேந்திரன் பட்டியலிடுகிறார். 

      செம்புத்தாதுவிலிருந்து செம்பை உற்பத்தி செய்ய பாலி மெட்டலர்ஜிக்கல் முறை, ஹைட்ரோ மெட்டலர்ஜிக்கல் முறை ஆகியன பயன்படுத்தப் படுகின்றன. இவ்விரண்டுமே சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துபவை என்று இக்கட்டுரை குறிப்பிடுகிறது. 
 
      வளர்ச்சிக் கோட்பாடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இணைந்து செல்ல வேண்டிய தேவையை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. தொழிற்சாலைகள் லாபத்தை மட்டும் கணக்கில் கொள்வதால் ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதையும் உணர்த்துகிறது. 

      இக்குறுநூலிலுள்ள சிறிய கட்டுரைகள் பூவுலகு சுற்றுச்சூழல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பரந்த வாசகர்களைச் சென்றடைய வாய்ப்பில்லை. எனவே, பூவுலகின் நண்பர்கள், எதிர் வெளியீடு ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கும் இக்குறுநூல் பரந்துபட்ட வாசகர்களை சென்றடைந்தால் மகிழ்ச்சியே. இருப்பினும் இந்நூலை மக்கள் பதிப்பாக அச்சிட்டு குறைந்த விலையில் தமிழகம் தோறும் விநியோகிக்க வேண்டியது அவசியம். 

      தூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை, கம்பம் - தேவாரம் நியூட்ரினோ ஆய்வகம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான  பெரும் மக்கள் திரள்  போராட்டங்களை வெற்றியடைய  வைக்க இத்தகைய நூற்கள் பெரும் பங்காற்றும் என்பதை மறுக்க முடியாது. இம்மாதிரியான வெளியீடுகள் பரவலாக மக்களைச் சென்றடையும்போதுதான் விரட்டப்பட வேண்டியது ஸ்டெர்லைட் மட்டுமல்ல மன்மோகன்சிங்குகளும் ப.சிதம்பரங்களும் என்பதை மக்கள் உணர்வார்கள். 
 
 சூழலியல் குற்றவாளி ஸ்டெர்லைட் 
(அட்டையில் - விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட்)
 
பக். 32                     விலை ரூ. 30/- 
 
 பூவுலகின் நண்பர்கள்,                                                       எதிர் வெளியீடு, 
 ஏ-2, அலங்கார் பிளாசா,                                                    96-நியூ ஸ்கீம் ரோடு, 
 425 - கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை,                              பொள்ளாச்சி - 642002, 
 கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010.         
                                                                                                     பேச: 04259 - 226012 
பேச: 044 - 26461455.    

திங்கள், பிப்ரவரி 27, 2012

மெத்தப் படித்த மூஞ்சுறுகள்

மெத்தப் படித்த மூஞ்சுறுகள்                    -மு.சிவகுருநாதன் 


         கூடங்குளம் அணு உலைப் பிரச்சினையில் முதலில் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏரோ நாட்டிகல் எஞ்சினியரிங் படித்த அப்துல் கலாம் களமிறங்கினார் அல்லது இறக்கப்பட்டார். அணு உலை பாதுகாப்பானது; இதனால் எவ்வித கதிரியக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லையென்றார். நிலவியல் படித்தவர் போல நிலநடுக்கம் வரவே வராதென்றார். பயப்படுபவர்கள் வரலாறு படிக்கமுடியாது என்று சொல்லி தனக்கு சம்மந்தம் இல்லாத அனைத்துத் துறைகளுக்கும்  தானே விஞ்ஞானி என்ற புதிய வரலாற்றைப் படித்தார். இதைப்பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. இனியும் எழுதி நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்றெண்ணுகிறேன்.

       அடுத்து புற்றுநோய் மருத்துவர் சாந்தா களமிறக்கப்பட்டார். ரேடியோதெரபி மருத்துவம் செய்யும் இவர்   back ground radiation,   front ground radiation  குறித்தெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களில் அருளினார். காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை தோற்றது போங்கள்! அணு உலைப்  பகுதியில் இவர் ஏன் புற்றுநோய் மருத்துவமனை திறந்தார் என்ற கேள்விக்கு இன்னும் இவரிடமிருந்து பதிலில்லை. 

       அணு உலை  பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் நிபுணர் குழு பேரா. முத்துநாயகம் குழுவிலும் இடம்பெற்ற பலர் அணு உலைக்கு ஆதரவானவர்கள். எனவே அவர்களின் அறிக்கையும் நாம் எதிர்பார்த்ததுபோல அணு உலைக்கு ஆதரவாகவே இருந்தது.


        தமிழக அரசு அமைத்த அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியன் தலைமையில் அணுசக்திக்கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவொளி , ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகிய நால்வர்  அடங்கிய நிபுணர் குழுவும் தன்னுடைய இரு மணி நேர ஆய்வை முடித்து  பல்வேறு தரப்புக் கருத்துகளையும் கேட்டு, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக்கூட பொறுமையின்றி உடன் தங்களுடைய வரலாற்று சிறப்புமிக்க ஆய்வுமுடிவுகளை வெளியிட்டு சென்னை திரும்பினர். இவர்களும் நிலவியல், புவியியல் நிபுணர்களைப் போன்று நிலநடுக்கம் வராது என்றனர்.

      அணு உலை ஆதரவுக் கும்பலில் லேட்டஸ்ட் வரவு  இந்திய பிரமோஸ் ஏவுகணையின் தலைமை கட்டுப்பாட்டாளர் விஞ்ஞானி டாக்டர் எ.சிவதாணுப் பிள்ளை. தமிழகத்தில் ஒரு பள்ளி விழாவில் பேசும்போது, நமக்கு மின்சாரம் வேண்டும் ; எனவே அணு உலையும் வேண்டும். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது. இவ்விஷயத்தில் நிபுணர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

     2014 இல் நிலவுக்கு ஆட்களை அனுப்பப்போவதாகவும்   தெரிவித்துள்ளார். சந்திராயன் -01 தோல்வியை இவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இன்னும் மக்களிடமும் மத்திய அரசிடமும் பொய்யான தகவல்களைச் சொல்லி சந்திராயன் -02  திட்டத்திற்கு நீதி ஒதுக்கீடும் அனுமதியும் பெறுகிறார்கள்.

       பலகாலம் செயல்புரிந்து இயங்கும் என இவர்களால் சொல்லப்பட்ட சந்திராயன் -01  வெறும் 312 நாட்கள்தான் இயக்கத்திற்குப் பிறகு பழுதடைந்தது. இவ்வளவு குறைந்த நாட்களிலேயே சந்திராயன் -01    90% பணிகளை முடித்துவிட்டது என்று வாய் கூசாது பொய் சொன்னார்கள்.  தமக்குத் தொடர்பில்லாத அணு சக்தித் துறை குறித்தும் பொய்யாக வாய்க்கு வந்தபடி இவர்கள் பேசத்  தொடங்கியுள்ளார்கள். இவர்களின் பிதாமகன் அப்துல் கலாம்!

       கிராமங்களில் மெத்தப் படித்த மூஞ்சுறு கழனிப் பானையில் விழுந்ததாம்!  என்றொரு சொலவடை உண்டு. இன்னும் மெத்தப் படித்த எத்தனை மூஞ்சுறுகள் கழனிப் பானையில் விழுமெனத் தெரியவில்லை.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

என்கவுன்ட்டர் கொலைகள் சாதிப்பதென்ன?

என்கவுன்ட்டர் கொலைகள்  சாதிப்பதென்ன?    -மு.சிவகுருநாதன் 

        சென்னையில் நடந்த இருவேறு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேரை தமிழக காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது.   தேசிய மனித உரிமை ஆணையம்,உச்சநீதிமன்றம் ஆகியற்றின் பல்வேறு தீர்ப்புகள், ஆணைகள் எவற்றையும் இந்தியாவிலுள்ள எந்த மாநில காவல்துறையும் அரசுகளும் மதிப்பதில்லை. நாட்டில் பல மாநிலங்களில் போலி என்கவுன்ட்டர்கள் அரங்கேறுகின்றன.

        என்கவுன்ட்டரில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு வீர தீரப்பரிசுகள், பதவி உயர்வுகள் வழங்கப்படக்கூடாது என்கிற உத்தரவுகள் இருக்கும் நிலையிலும் எந்த அரசும் இவற்றை கடைபிடிக்காத காரணத்தால் நமது ராணுவமும் பாதுகாப்புப் படைகளும் இவ்வாறான போலி மோதல்களில் அடிக்கடி ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.

       சமூகத்தின் பொதுப்புத்தியும்  (common sense) நடுத்தர வர்க்க மனப்போக்கும்  என்கவுன்ட்டரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இது அரசுகளுக்கும் காவல்துறை மற்றும் ராணுவத்திற்கும் மிகவும் வசதியாகவுள்ளது.

    மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி (CBI) ரகோத்தமன்  ஓர் தொலைக்காட்சி விவாதத்தின் பொது காவல்துறைக்கு ஏன் துப்பாக்கிகள் அளிக்கிறீர்கள்? இதை மாற்றாமல் துப்பாக்கிகளை கொடுத்துவிட்டு பிறகு சுடக்கூடதென்பது எவ்வகையில் நியாயம் என்று ரொம்ப அறிவுப்பூர்வமாக வினா எழுப்பினார். குருவிக்காரர்களிடம் (வாக்ரிகள் / நெறிக்குரவர்கள்)  துப்பாக்கிகள் இருப்பதால் அவர்கள் குருவிகளை மட்டும் சுடுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது; நம்மையுந்தான் சுடுவார்கள் என்றார். 

       வாக்ரிகள் / நெறிக்குரவர்கள் என்று தங்களை அழைக்க விரும்பும் gypsy-களை  குருவிக்காரர்கள் என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தது. அது போகட்டும். வாக்ரிகள் / நெறிக்குரவர்கள் எங்காவது மனிதர்களை சுட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதுகூட தெரியாத முன்னாள் சிபிஅய் அதிகாரிக்காக நாம் அனுதாபப்படவேண்டியுள்ளது.

     காவல்துறைக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் இவர்களை உயிருடன் பிடிக்கமுடியவில்லை என்று வழக்கமாக சொல்லும் வாதத்தையை ஏற்கவே முடியாது. ஒவ்வொரு என்கவுன்டரிலும் இவர்கள் இதையேதான் சொல்கிறார்கள். சுடப்பட்டு இறப்பவர் மார்பு மற்றும் தலைப்பகுதியில் குண்டடிபட்டு சாகுபவராகவும் போலீசார் மட்டும் கையில் மட்டும் சிறு காயங்களுடன் தப்பிப்பவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

   

      மனித உரிமை ஆணையங்கள்,உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மனித உரிமைப் போராளிகள் என்று பலதரப்பும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதும் என்கவுண்டர்கள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன.

இந்த என்கவுண்டர்கள் மூலம் அரசும் காவல்துறையும் சாதிப்பதென்ன?

 • நீதிமன்றங்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.

 • நமது அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது.

 • மக்களின் கவனத்தை திசைதிருப்பப் பயன்படுகிறது.

 • அடிக்கடி நிகழும் கொலை - கொள்ளை நிகழ்வுகளை மறக்கவும் மடைமாற்றவும் உதவுகிறது.

 • தன்னுடைய எதிரிகளையும் அப்பாவிகளையும்  பழி வாங்கும் வாய்ப்பாக இது பயன்படுகிறது.

 • காவல்துறை இழந்த தன் மதிப்பை பொதுமக்களிடம் காத்துக்கொள்ள பேருதவி புரிகிறது.

 • காவல்துறை,ராணுவ பயங்கரவாதம் நாட்டில் வல்லாதிக்கத்திற்குதான் வழிவகுக்கும்.

 • அரசிற்கு பிடிக்காதவர்கள் மற்றும் எதிரிகளை பழிவாங்க உதவும்.

 • எப்போதும் உண்மைகள் வெளிவராமல்போகும்.

 • உண்மையான குற்றவாளிகள் யாரென்பது தெரியாமல் போகும்.

 • சில தொடர் சங்கிலி நிகழ்வுகள் முடிமறைக்கப்படும்.

 • அரசியல்வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் உள்ள தொடர்பு புதைக்கப்படும்.

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

மாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி

மாற்று மருத்துவ முறைகளை அழித்தொழிக்கும் முயற்சி     
                                                                                                    - மு. சிவகுருநாதன்

"மேற்கத்திய வைத்திய முறையை முற்றாகப் பின்பற்றவுமில்லாமல் அதன் அறிவியற் செறிவை மட்டும் இறக்கிக்கொண்டு (தொழில் நுட்பத்தையும் நுணுக்க அறிவையும் மட்டும் மையமாகக் கொள்ளாமல்) நமது பாரம்பரிய நாட்டு வைத்திய முறையுடன் இணைக்கப்பட்ட ஒரு வைத்திய முறை இங்கு உருவாக்கப்பட வேண்டும்.  நாட்டு வைத்திய ஆய்வுகட்கு முன்னுரிமை வழங்குவதோடு அதன் இயல்பான சனநாயகத்தன்மை காக்கப்பட்டு மருத்துவ நலச் சேவையில் அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்".                   
                                                                                                                                - அ.மார்க்ஸ்
(" நமது மருத்துவ நலப் பிரச்சினைகள்"   நூலில் மாற்று மருத்துவம் பற்றிய கோட்பாட்டுப் பார்வையின் அம்சங்களில் ஒன்று.)

நமது மத்திய - மாநில அரசுகள் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, பொது விநியோகம் போன்று மக்களுக்கு சேவை மற்றும் மானியம் அளிக்க வேண்டியதிலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் பணியைச் செவ்வனே செய்து வருகின்றன.  புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற கட்டிடங்களை ஏட்டிக்குப் போட்டியாக உலகத் தரம் வாய்ந்த (!?) மையப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக மாற்றும் வேலைகள் ஒருபுறமிருக்க, மருத்துவச் சுற்றுலா (Medical Tourism) என்று சொல்லி பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்து கம்பெனிகள் கொள்ளை லாபமடிக்க வழிவகை செய்து கொடுப்பதுதான் இன்றைய அரசுகளின் பணியாக உள்ளது.

         இதிலும் தனியார் பெருமளவில் முதலீடு செய்துள்ள அலோபதி மருத்துவத்துறையை மட்டும் வளர்த்தெடுக்க, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற பல்வேறு மாற்று மருத்துவ முறைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட மத்திய, மாநில  அரசுகள் அரசு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.  இதன் ஒரு வெளிப்பாடுதான் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு இவ்வாண்டு அங்கீகாரம் வழங்கப்படாமை மற்றும் முதுநிலை சித்த மருத்துவப் பிரிவிற்கு இடம் குறைப்பு, அது தொடர்பான மாணவர்கள் - பெற்றோர்கள் போராட்டம் எனத் தொடர்கிறது. 

தமிழ் மருத்துவம், சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கி வந்த தொன்மையான அழிந்துவரும் மருத்துவ முறைகளை முறையாக கற்பிப்பதற்காக 1964இல் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி (Government Siddha Medical College) தொடங்கப்பட்டது.  இங்கு அண்மைக்காலம் வரையில் இளநிலை மருத்துவப் படிப்பு (BSMS - Bachelor of Siddha Medicine and Surgery)  100 இடங்களையும் முதுநிலை சித்த மருத்துப் படிப்பு (MD - Siddha) பொது மருத்துவம் -Maruthuvam, குணபாடம்-Gunapadam  (Pharmacology) , சிறப்பு மருத்துவம்-Sirappu Maruthuvam,, குழந்தை மருத்துவம்-Kuzhandai Maruthuvam,  நஞ்சு மருத்துவம்-Nanju Noolum Maruthuva Needhi Noolum, நோய் நாடல்- Noi Nadal (Pathology) ஆகிய ஆறு பிரிவுகளில் ஒரு பிரிவிற்கு தலா 20 பேர் வீதம் 120 பேர் படிக்கக் கூடியதாக இருந்தது.

      பின்னர் தொடங்கப்பட்ட சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இளநிலைப் படிப்பில் (BSMS) 50 இடங்களும்  பொது மருத்துவம்-Maruthuvam,  குணபாடம்-Gunapadam  (Pharmacology),  ஆகிய இரு பிரிவுகளில் தலா 10 பேர் முதுநிலைப் படிப்பும் (MD - Siddha) படிக்க வசதியும் இருந்தது.

     தாம்பரம் சானடோரியம் (அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை) தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் (NIS-National Institute of Siddha) ஆறு முதுகலைப் படிப்பு ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 8 இடங்கள் என மொத்தம் 48 இடங்கள் இருந்தன.  ஸ்ரீபெரும்புதூர், கோவை, கன்னியாகுமரி, மேற்கு தாம்பரம் போன்ற இடங்களில் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்ட போதும் அங்கெல்லாம் முதுநிலைமருத்துவப்படிப்பு  (MD-Siddha)  இல்லையென்பது   
இங்கு கவனிக்கத்தக்கது. 

      இதர மாற்று மருத்துவ முறைகளுக்காக மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் இளங்கலை படிப்பு (BHMS - (Bachelor of Homoeopathic Medicine and Surgery)  50 இடங்களும் நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு(BAMS - Bachelor of Ayurvedic Medicine and Surgery) 48 இடங்களும் உள்ளன.யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ( BYNS-Bachelor of Naturopathy and Yogic Sciences), யுனானி  (BUMS - (Bachelor of Unani Medicine and Surgery) ஆகிய மாற்று முறை மருத்துவப்  பட்டப்படிப்புகளை   இந்தியாவிலுள்ள   பல தனியார் கல்லூரிகள் அளிக்கின்றன.   
  
        தமிழகத்தில்  அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.  இதுதான் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினைக்கு மூலகாரணம் என்று சொல்லலாம்.

மாற்று முறை மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும் அதன் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜனும் மாற்று மருத்துவ முறைகளை ஒழிக்க திட்டமிட்டு செயல்படுவதற்கு பல உதாரணங்களைக் காட்ட முடியும்.


01. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் போன்ற மாற்று மருத்துவ முறைகளின் பாடத்திட்டத்தில் பெருமளவில் மாற்றம் கொண்டு வருவது. இம்மாற்றம் அலோபதி மருத்துவத்தை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை அழிக்கும் செயல்தந்திரம்.

02. உடற்கூற்றியல்(Anatomy), உடலியங்கியல் (Physiology), உயிர் வேதியியல் 
(Bio chemistry), நுண்ணுயிரியல்(Micro-biology) , நோய் நாடல் (Pathology) போன்ற பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து அறவே அகற்றுதல்.

03. சித்தா இளங்கலைப் பட்டம் முன்பு BIM (Bachelor of Indian Medicine) என்று பட்டம் வழங்கப்பட்டது.  அது தற்போது BSMS ஆக மாறியுள்ளது.  மேலே குறிப்பிட்ட பாடங்கள் நீக்கப்படுவதால் BSMS என்பதை BSM என்று மாற்றி பட்டமளிக்கப் போவதாக தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தன்னிச்சையாக முடிவெடுத்தது.  இதைப் போலவே BHMS, BAMS, BUMS, BNYS ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளை முறையே BHM, BAM, BUM, BNY என மாற்றவும் திட்டமிட்டது.

       மாற்று முறை மருத்துவப் படிப்புக்களின் பெயர், பாடத்திட்டங்கள் ஆகியவற்றை மாற்றுவதற்கு  தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு   அதிகாரம் இல்லையென மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (CCIM- Central Council of Indian Medicine) எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இம்முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

04. நவீன பாடத்திட்டம் (Modern Syllabus) இவர்களுக்குத் தேவையில்லை என்று சொன்னதோடு, மருத்துவருக்கு உள்ள அடையாளங்களான வெள்ளை மேலாடை(White over-coat), துடிப்புமானி (Stethoscope) போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது எனவும் சொன்னது.  அலோபதி மருத்துவர்கள், நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும் கூட இன்னமும் செஞ்சிலுவைச் சங்கத்தின் அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்த முடியாத இவர்கள் மாற்று முறை மருத்துவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது கவனிக்கத்தக்கது.

05. மாற்று முறை மருத்துவர்கள் எந்தெந்த நோய்களுக்கு மட்டும் மருத்துவம் செய்யலாம், செய்யக் கூடாது என பட்டியல் வெளியிட்டது.

06. பல்வேறு உரிமைகளுக்காகப் போராடும் மாற்று மருத்துவ முறை மாணவர்களை மிரட்டுவது, இடைநீக்கம் போன்று பெரிய தண்டனைகள் வழங்குவது.

  தமிழக அரசும் மாற்று முறை மருத்துவமுறையை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு தன்னால் இயன்ற பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது.  அவற்றைப் பட்டியலிட பக்கங்கள் போதாது. 

01. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியாகட்டும் நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேதக் கல்லூரியாகட்டும் கற்பிக்கப் போதுமான பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை நியமனம் செய்வதில்லை.  ஒப்பந்த அடிப்படையில்தான் பணி நியமனம் நடக்கிறது. முதல்வர் பணியிடம் காலியாகவே உள்ளது.பல ஆண்டுகளாக பொறுப்பு முதல்வர்தான் பணியில் உள்ளார்.நிரந்தர முதல்வர் நியமனம் இல்லை. அரசு அலோபதி மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்குழு வரும்போது போலியான ஏற்பாடுகள் செய்யப்படுவதுண்டு.  ஆனால் இங்கு அதைக் கூடச் செய்யாமல் அங்கீகாரம் ரத்தாவதற்கு தமிழக அரசு உதவி செய்திருக்கிறது.

02. கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கத் தேவையான கட்டிடங்கள், படுக்கைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளன.  மாவட்டந்தோறும் அரசு அலோபதி மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப் போவதாகச் சொல்லும் நமது அரசுகள் இரண்டு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் தலா ஒரு ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு ஓர் இடையீடு:

  அலோபதி மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து மட்டங்களில் போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இருப்பதாக யாரும் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.  அலோபதி மருத்துவ முறைக்கு ஏதேனும் செய்யும் அரசுகள் மாற்று மருத்துவ முறைகளை  கை கழுவ முடிவு செய்துள்ளன. அலோபதி மருத்துவ முறையிலும் தனியாரை வளர்க்க அரசு மருத்துவமனைகள் பலியிடப்படுகின்றன.

03. பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள சித்த மருந்து ஆராய்ச்சிப் பிரிவு, மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு ஆகியவற்றை சேலத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு தாரை வார்த்திருக்கிறார்கள்.  இங்கு ஆயிரக்கணக்கான  உலர்தாவரத் தொகுப்புகளும் (Herbarium) தாவர மாதிரிகளும் (Specimen)  சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.  தென் தமிழ்நாட்டின் பலவகையான மூலிகைத் தாவரங்கள் பற்றிய ஆய்வுகள் செய்யக்கூடிய இப்பிரிவுகளை ஏன் அரசு தனியாரிடம் வழங்க வேண்டும்? இப்பிரிவுகள் சித்த மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமின்றி தாவரவியல் படிக்கும் மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த ஆய்வுகளுக்கும் பெரியதும் பயன்படக் கூடியவை.

04. நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக் கட்டிடத்தில்தான் செயல்படுகிறது.  இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.  இக்கல்லூரிக்கென்று மூலிகைப் பண்ணை அமைக்க இடம் ஒதுக்கப்பட்ட போதும் அங்கு மூலிகைகளை வளர்க்க எந்தப் பணியும் நடைபெறவில்லை. 

05. 2004  இல் தாம்பரம் சானடோரித்திலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (NIS-National Institute of Siddha) தொடங்கப்பட்டது.  இதன் கட்டிட விரிவாக்கப் பணிகளுக்கு 2007-ல் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்ட போதும் இன்னமும் கட்டிடங்கள் வந்தபாடில்லை.  இங்கு 120 படுக்கைகள் கொண்ட அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டால்தான் இங்கு படுக்கை வசதிகளை அதிகரித்து இங்குள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு (MD - Siddha) இடங்களான 48  ஐ தக்க வைக்க முடியும்.

  இந்த (MD - Siddha) 48 இடங்கள் இவ்வாண்டு 25ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆறு முதுநிலைப் பிரிவுகளில் நான்கில் மட்டும், அதாவது MD - Siddha (பொது மருத்துவம்) - 6 இடங்கள், MD - Siddha (குணபாடம்) -  5 இடங்கள் MD - Siddha (சிறப்பு மருத்துவம்) - 7 இடங்கள் MD - Siddha (நஞ்சு மருத்துவம்) - 7 இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது  MD - Siddha (குழந்தை மருத்துவம்), MD - Siddha (நோய்நாடல்) ஆகிய பிரிவுகளில் இரு  மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என மத்திய இந்திய முறை  மருத்துவக் கவுன்சில் ( CCIM ) அறிவுறுத்தியுள்ளது.  இதைப்போல நாடெங்கும் சுமார் 120 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.

06. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிலவற்றில் மட்டும் சித்த மருத்துவப் பிரிவு உள்ளது.  அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைப் பிரிவுகளை ஏற்படுத்தினால்தான் உரிய தீர்வு கிடைக்கும்.  

07. மருத்துவர்கள், பிற பணியாளர்கள், மருந்துகள், படுக்கை வசதிகள் போன்றவை சரியாக இல்லாத மாற்றுமுறை மருத்துவமனைகள் நோயாளிகளைத் தூரப்படுத்தும் வேலையைத்தான் செய்கின்றன. பிறகெப்படி நோயாளிகள் இம்மருத்துவமனைகளை நாடுவர்? இம்மருத்துவமனைகளை இழுத்து மூட நோயாளிகள் வரவில்லை என்பது காரணமாக அரசால் சொல்லப்படுகிறது. இது திட்டமிட்ட சதிச்செயல் என்பதில் அய்யமில்லை.

  அலோபதி மருத்துவ முறைக்கு ஆதரவாகச் செயல்பட்டு மாற்று மருத்துவத்தை ஒழிக்கக்  கிளம்பியுள்ள   தமிழ்நாடு அரசு மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ஒரு புறமிருக்க, மரபு வழி சித்த மருத்துவர்களும் இந்தப் படிப்புக்களுக்கு பெரும்பாலும் எதிராக இருக்கிறார்கள்.  இவர்கள் தங்களுடைய பிழைப்புக்குக் கேடு  வருமென இவர்கள் இந்த அரசுப் படிப்புகளை ஒழிக்க எண்ணுகிறார்கள்.  இவர்களில் சிலர் தனியாக சித்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்குகிறார்கள்.

பரம்பரை சித்த வைத்தியர்கள் என்று சொல்லப்படும் மரபு வழி சித்த மருத்துவர்கள் மருத்துவ நுணுக்கங்களையும் அவற்றின் தொழில் நுட்பங்களை தங்களின் வாரிசைத் தவிர வேறு எவருக்கும் சொல்லித் தர விரும்புவதில்லை.  இன்றுள்ள உலகமயச் சூழலில் அவர்கள் கல்லூரிகள் தொடங்குவது கூட மிகச் சிறந்த வியாபார உத்தியாகத்தான் இருக்க முடியும்.

இன்று மாற்று மருத்துவ முறைகளுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை உணர்ந்துள்ள சிலர் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளனர்.  சித்தா, ஆயுர்வேதம், யுனானி,யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் தனியாரால் தொடங்கப்படுகின்றன.  இவர்களுக்கு  அரசு மூலிகை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளைத் தானமாக வழங்குகிறது. 

      இந்த மரபு வழி சித்த மருத்துவர்களுக்கும் பட்டப்படிப்பு படித்த (academic study)
 மருத்துவர்களுக்கும் உரையாடல் சாத்தியப்படவேண்டும். ஒருவர் மற்றவரை எதிரியாகப் பார்க்கும் போக்கு நல்லதல்ல. இந்த இரு தரப்பும் தங்களது அறிவுச் செல்வத்தை பரிமாறிக் கொள்வது இம்மருத்துவ முறையை மேலும் செழுமையாக்கும்.

  சேலம் சிவராஜ் சித்த மருத்துவக்கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் வேலுமயில் (40), கோயம்புத்தூர் RVS (30), கன்னியாகுமரி ADSVS (50),  மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் (40) ஆகிய தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் (40) மட்டும் இவ்வாண்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.  (அடைப்புக்குறிக்குள் அனுமதிக்கப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கை.)

சேலத்தில் ஒரு தனியார் ஹோமியோபதி கல்லூரி (50), ஸ்ரீபெரும்புதூரில் தர்மா ஆயுர்வேதக் கல்லூரி (40) ஆகியன தொடங்கப்பட்டுள்ளது.  இவ்விரு கல்லூரிகளுக்கும் இவ்வாண்டு அனுமதி கிடைக்கவில்லை.

48 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்காத அனுமதி மேற்கு தாம்பரம்  ஸ்ரீசாய்ராம் சித்த மருத்துவக்கல்லூரிக்கு மட்டும் கிடைத்ததெப்படி? இந்தத் தனியார் கல்லூரி அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் பெற்று CCIM-ன் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்து செய்தது என்றால் 48 ஆண்டுகால ஒரு அரசுக் கல்லூரியால் ஏன் இதைச் செய்ய முடியவில்லை?  தமிழ் என்று சொல்லி மொழி, இனப் பெருமை பேசி வரும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. அரசுகள் தமிழுக்கும் தமிழ் மருத்துவத்திற்கும் எதிராக எடுத்த நடவடிக்கையின் பலன்தான் இது. 

மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (CCIM- Central Council of Indian Medicine) கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்லூரிகளுக்கு,  ஆயுஷ் துறையின்  (AYUSH -  Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy) இந்திய மருத்துவக் குழு  ஆய்வு செய்து அனுமதி வழங்குகிறது. பல்கலைக்கழகம்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சோதனை செய்து தரம் நிர்ணயிக்கும்  தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின்  ( NAC -  National Accreditation Committee)  செயல்பாடுகள் நாமறிந்ததுதான்.

2012 - 2013 ஆம் கல்வியாண்டிற்கான அனுமதி வழங்க இக்குழு பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்துள்ளது. வரும் கல்வியாண்டிற்கு அனுமதி கிடைத்து விடும் என்று செய்திகள் வருகின்றன.  நடப்புக் கல்வியாண்டில் (2011 - 2012)  என்னென்ன குறைபாடுகள் இருந்தன, ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்ற விவரத்துடன் வரும் கல்வியாண்டில் (2012 - 2013) அனுமதி வழங்குவதற்கான காரணங்கள், இவர்கள் சொன்ன என்னென்ன நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டன என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும்.   தமிழக அரசு இப்பிரச்சினை குறித்து வெள்ளை அறிக்கையொன்றை வெளியிட வேண்டும்.

     மத்திய இந்திய முறை  மருத்துவக் கவுன்சிலிடம்  ( CCIM ) உரிய அனுமதி பெறாமல் இளநிலை (BSMS) மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு (MD -siddha) எப்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதென்று தெரியவில்லை?  இந்த மாணவர்கள்தான் தங்கள் பெற்றோருடன் வகுப்புகள் தொடங்கக் கோரி கல்லூரி வளாகத்தில் பிப்ரவரி 06, 2012 முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.  மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் உடன் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பாத தமிழக அரசு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, நீதிமன்ற வழக்கு என்று காரணம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்கிறது.

சித்த மருத்துவ முதுகலைப் படிப்புக்கு (MD - Siddha) அனுமதி மறுத்த மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக வேதாரண்யம் டி. அருள்செல்வம் என்ற மாணவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  மாநில அரசு கூடங்குளம் பிரச்சினையில் மத்திய அரசிடம் கை காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டதைப் போல இப்பிரச்சினையிலும் நடப்பது வேதனைக்குரியது.  

01. தமிழக அரசு தனது பொறுப்பை உணர்ந்து முந்தைய, தற்போதைய ஆட்சியின் குறைகளை நிவர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  அனுமதி கிடைக்காததற்குக் காரணமான சுகாதாரத்துறை அதிகாரிகள், சித்த மருத்துவக் கல்லூரிகள் சீர் குலைய பெரும்பங்கு வகித்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவர் மீது விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

02. தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (அலோபதி மருத்துவம்) கட்டுப்பாட்டிலிருந்து மாற்று முறை மருத்துவக் கல்லூரிகள் உடன் விடுவிக்கப்படவேண்டும். இந்திய மாற்று முறை மருத்துவத்திற்கென்று தனிப் பல்கலைக்கழகம்  தொடங்கவேண்டும்.

03. மாற்று முறை மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  மருத்துவமனைகளை மேம்படுத்தி விரிவாக்க வேண்டும்.

04. அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்று முறை மருத்துவப் பிரிவுகள் தொடங்கி மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை உடன் நியமிக்க வேண்டும்.

05. மையப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளை உருவாக்குவதைத் தவிர்த்து அனைத்து மருத்துவ முறைகளை கையாளும் பன்மைத் தன்மையான  (treatment of plurality) சிகிச்சைமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

06. நான்கு மாவட்டத்திற்கு ஒன்று என மாற்று முறை மருத்துவக் கல்லூரிகளை அனைத்து வசதியுடனான  மருத்துவமனையுடன் இணைத்துத் தொடங்கப்பட வேண்டும். இதில்    சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்திற்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இங்கு அப்பகுதியிலுள்ள வட்டாரத் தாவர மூலிகைப் பண்ணை அமைத்து ஆய்வு செய்ய வழிவகுக்கவேண்டும்.

07. போலி டாக்டர்களை கைது செய்வது என்ற போர்வையில் உண்மையிலேயே மாற்று மருத்துவ முறைகளைப் பின்பற்றும் மருத்துவர்களையும் கைது செய்யும் போக்கு நிறுத்தப்படவேண்டும்.

08. தொன்மையான தமிழ் மருத்துவம் (மூலிகை மருத்துவம்) மதம் மற்றும் ஆன்மிகத்துடன் இணைக்கப்பட்டு காவிமயமாகி வருவதைத் தடுத்து உண்மையான சித்த மருத்துவமாக மாற பாடத்திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். நவீன மருத்துவ அறிவியலின் தன்மைகளை உள்வாங்கவேண்டும். தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் செய்வது போலின்றி  இந்த நோக்கில் பாடத்திட்டங்கள் (syllabus) மாற்றப்படவேண்டும்.

09. இந்திய மாற்று முறை மருத்துவர்கள் மற்றும் ஹோமியோபதி   மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்கள் போலில்லாமல் வணிகமயமாவதை  தடுத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றவேண்டும். இவற்றிலும் பன்னாட்டுக் கம்பெனிகள் நுழைந்து விட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் விழிப்போடு இல்லாவிட்டால் அலோபதியைப் போல மாற்று மருத்துவத்தையும் சீரழித்து விடுவார்கள்.

   கோட்டூர்புரம் அண்ணா நினைவு நூலகம் உலகத்தரமான குழந்தைகள் மருத்துவமனையாகவும் புதிய தலைமைச் செயலகம் உலகத்தரம் வாய்ந்த அரசு பொது மருத்துவமனையாகவும் மாற்றப்போவதாகச் சொல்கிறார்களே! உலகத்தரத்தின் பொருள் என்ன? பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி ஓரிடத்தில்  மையப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளை (Multi speciality Hospitals)  உருவாக்குவதால் யாருக்கு பலன் கிடைக்கும்?  எளிய மருத்துவ வசதியில்லாத குக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் நிலை என்ன?

பிரும்மாண்டமான கட்டிடங்களைக் கட்டும், வடிவமைக்கும் ஒப்பந்தக்காரர்கள், அவர்கள் மூலம் பலனடையும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், கருவிகள் மற்றும் சாதனங்கள் உற்பத்தி செய்யும் / விற்கும் பெரிய நிறுவனங்களுக்கு மக்கள் பணம் அள்ளிக் கொடுக்கப்படப் போகிறது.  இறுதியில் மக்களுக்கு எந்தப் பலனும் விளையப் போவதில்லை. 

உலகிலேயே அலோபதி மருத்துவமுறைதான் அனைத்து நோய்களுக்கும் சர்வரோக நிவாரணி என்று ஒன்றை அதிகார மையமாக இருப்பதை நமது மக்கள் நல அரசுகள் (Welfare States) என்று சொல்லிக் கொள்பவர்கள் விரும்புவதுதான் நகைமுரண்.  இவர்களுக்கு மக்கள் நலன் குறித்த  கவலைகள் இல்லையென்பது உலகறிந்த ரகசியம். 

அரசு மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அவருக்கு முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்த பிறகு அவருக்கு இருக்கும் நோய்க்குறிகளுக்கு ஏற்ப அலோபதி, சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா-இயற்கை மருத்துவம் ஆகிய பல்வேறு மருத்துவ முறைகளில் எது பொருத்தமானதோ அந்தப் பிரிவிற்கு அனுப்பி மருத்துவம் செய்யும் முறை இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கும் போது எவ்வித பக்க விளைவுகளுமற்ற மற்றொரு  மருத்துவ முறைகளுடன் இணைந்த ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கும் (comprehensive  treatment) வாய்ப்பையும் நாம் மறுக்கக் கூடாது.  ஒரு மருத்துவ முறையைப் பயின்றவர்கள் நோய்கள் மற்றும் நோயாளிகளின் தன்மைகளுக்கேற்ப பிற மருத்துவ முறைகளைப் பரிந்துரை செய்வதும் பக்க விளைவுகள் அற்ற மாற்று மருத்துவ முறையின் கீழ் ஒருங்கிணைந்த - பரந்த ஜனநாயகப்பூர்வமான நோயாளிகளை முதன்மைப்படுத்தும் முறைகளே நமக்கு தற்போது தேவை. 

சித்த மருத்துவர்கள் துடிப்புமானி (Stethoscope) பயன்படுத்தாமல் நாடி பார்த்துதான் மருத்துவம் செய்ய வேண்டுமென்பது எவ்வளவு பெரிய வன்முறை?  இது மருத்துவத் துறையில் பன்மைத்துவத்தை (Plurality) அழிக்கும் முயற்சி.  இவற்றை மட்டுமல்ல, அனைத்து களங்களிலும் பன்மைத்தன்மையைப் பாதுகாக்க நாம் போராடியே தீரவேண்டும். இப்போது கட்டுரையின்  தொடக்க மேற்கோளை மீண்டும் ஒரு முறை படியுங்கள். 

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

சோதிடம் சொல்லும் விஞ்ஞானிகள்


 சோதிடம் சொல்லும் விஞ்ஞானிகள்          - மு.சிவகுருநாதன்


(ஓர் முன் குறிப்பு:- 

                பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று கூலிக்கு மாரடிக்கும் பலர் விஞ்ஞானிகளாக இருப்பதில்லை என்பதே நடைமுறை உண்மை. திறந்த மனத்துடன் ஆய்வு செய்யும் மனப்போக்கு அறிவியலின் அரிச்சுவடி என்பதைக் கூட தெரியாதவர்களை எப்படி விஞ்ஞானிகள் என்று சொல்வது?   கூடங்குளம் விவகாரத்தில் அப்துல் கலாம் உள்பட விஞ்ஞானிகள் என்று நம்பப்பட்ட பலரது முகமுடிகள் கழன்று விழுந்துகொண்டே இருக்கின்றன. 'விஞ்ஞானிகள்' என்று இங்கு நான் குறிப்பிடுவது பொதுவான ஒரு பயன்பாட்டுக்கு தானே தவிர உண்மையான  விஞ்ஞானிகளை குறிக்க அல்ல. )   


      கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்தைத் தொடர்ந்து   மத்திய அரசு பேரா.முத்துநாயகம் தலைமையில் ஓர் குழுவை அமைத்தது. அக்குழுவில் இடம்பெற்ற அனைவரும் அணுஉலை ஆதரவாளர்கள். எனவே அவர்கள் அளித்த அறிக்கை நாம் எதிர்பார்த்ததுபோல் அணுஉலைக்கு ஆதரவாகவே இருந்தது.

        இதைப்போலவே அப்துல் கலாம் சுமார் 40 பக்கங்கள் நிறைந்த கட்டுரையுடன் கூடங்குளம் வந்து ஒருசில மணி நேரத்தில் பேராய்வு செய்து தனது ரெடிமேட் ஆய்வறிக்கையை வெளியிட்டு பெரும்புகழ் பெற்றார். இதைக் கண்ட இ.காங்கிரசார் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக ஆக்க உதவி புரியாததை நினைத்து மிகவும் வருந்தியிருப்பார்கள்.

      தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியன் தலைமையில் அணுசக்திக்கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவொளி , ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகிய நால்வர்  அடங்கிய நிபுணர் குழுவை  அமைத்தார். இக்குழுவில் அணுசக்திக்கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் இடம்பெற்றது பலரின் கண்டனத்திற்கு ஆளானது. நமக்கு இந்த நால்வர் குழு மீதும் பெரிய நம்பிக்கைகள் ஏதுமில்லை.

      இந்த நால்வர் குழு நேற்று  (18.02.2012) கூடங்குளம் அணுஉலையில் ஆய்வு செய்து  அணு விஞ்ஞானிகளுடன் உரையாடியது. இன்று  (19.02.2012) இந்த நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்களுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

        தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், இது ஓர் தொடக்கம்தான் என்று சொல்லியிருக்கிறார். கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களை தமிழக  நிபுணர் குழு நேரிடையாக சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்கவேண்டும். போராட்ட குழுவின் நிபுணர் குழுவையும் தமிழக நிபுணர் குழு சந்தித்துப் பேசவேண்டும் என்ற இரு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

      பேச்சுவார்த்தைக்குப் பிறகு  நிபுணர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், இனியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கீழ்க்கண்ட முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்.

 • கூடங்குளம் அணுஉலை மிகவும் பாதுகாப்பானது. இங்கு ஏழு அம்ச பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
 • கூடங்குளத்தில் சுனாமிபேரலை  வந்தாலும், 6.5 என்ற அளவில் நிலநடுக்கம்  வந்தாலும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆபத்து இல்லை
 • கூடங்குளம் அணு உலை கடல் மட்டத்திலிருந்து 25 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனை விட  உயரமாக அணுஉலை அமைக்கப்பட்டுள்ளது.
 • மூன்றாவது தலைமுறையை சேர்ந்த மிகவும் முன்னேறிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • கூடங்குளம் அணு உலையில் அதிக சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு  இருந்ததை ஆய்வின் போது பார்த்தோம்.
 • மின்சாரம் தடைபட்டாலும் கூட கூடங்குளத்தில் இயற்கையாக குளிரூட்டும் வசதி உள்ளது.
 • கடல் நீர் வெப்பமடைய வாய்ப்பே இல்லை. எனவே  ஒரு மீன் கூட சாகாத வகையில் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.
 • விஞ்ஞானிகளுடன் விரிவான ஆலோசனைகள்  நடத்தப்பட்டன.
 • போராட்டக்காரர்கள் மூலமாக மக்களின் உணர்வுகளை அறிய முடிந்தது.  

  நம்முன் எழும் கேள்விகள்:-

 • ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் மட்டுமே இந்த அணுஉலை பாதுகாப்பானது என்ற முடிவுக்கு ஒரே நாளில் நிபுணர் குழு வந்ததெப்படி?
 • அப்துல் கலாம் ரிக்டர் அளவுகோலில் 6 அளவிற்கு நிலநடுக்கம் வந்தாலும் பாதிப்பில்லைஎன்றார். இவர்கள்  6.5 என்ற அளவில் நிலநடுக்கம்  வந்தாலும் பதிப்பு கிடையாது என எதன் அடிப்படையில் சொல்கிறார்கள்?
 • சுனாமிப் பேரலையாலும் ஒன்றும் ஆகாதென  சோதிடம் எப்படி இவர்களால் முடிகிறது?
 • சுனாமிப்பேரலை 25 கி.மீ. க்கு மேல் வராது என்ற நம்பிக்கை இவர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?
 • மூன்றாவது தலைமுறை தொழில்நுட்பம் குறைபாடு அற்றது என அறுதியிட்டு எப்படி கூறமுடியும்?
 •  ஜப்பானில் அதிக சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் இல்லையா? அதனால்தான் புகுஷிமா  அணு உலையில் விபத்து ஏற்பட்டதா?
 • பேரிடர் நிகழும்போது  உங்களது தானியங்கி வசதிகள் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும்?
 •  அணுஉலை இயங்காதபோது மீன்கள் சாகாது என எப்படி இவர்களால் உறுதிப் படுத்தமுடிந்தது?    
 • அணு மின் நிலையம் கட்டுமானம், பாதுகாப்பு குறித்த ஆவணங்கள் தங்களிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதை சென்னை சென்று ஆய்வு செய்து அறிக்கை தருவதாகவும் சொல்லும் இவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அணு மின் நிலையப் பாதுகாப்பை உறுதி செய்வதெப்படி? 
 • அணு உலையை மட்டும் ஆய்வு செய்து அணு விஞ்ஞானிகளின் கருத்துக்களை மட்டும் கேட்கத் தெரிந்த இவர்களால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்களை சந்திக்க முடியாதது ஏன்? 
 • ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கவேண்டியவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டதெப்படி?  இக்குழு அமைக்கப்பட்டவுடன்  இந்த முடிவுதான் செய்யவேண்டுமென முன்கூட்டியே வலியுறுத்தப்பட்டதா? இதன் பின்னணியில் தமிழக அரசு இருக்கிறதோ என ஐயுறவேண்டியுள்ளது. 
   
    விஞ்ஞானிகள் என்று சொல்லப்படுபவர்கள் ஆளும் வர்க்கத்தின் முகவர்களாகவும் துளியும் அறிவியல்பார்வை அற்றவர்களாகவும் இருப்பது கூடங்குளம் விஷயத்தில் தெளிவாகிறது. இவர்களை விஞ்ஞானிகள் என்று சொல்வது மனித குலத்திற்காக பல்வேறு இன்னல்கள் பட்டு, உயிரையும் விட்டு எண்ணற்ற கண்டுபிடிப்புக்களை உலகிற்கு அளித்த பல அறிவியல் அறிஞர்களை இழிவு செய்வதாகும்.

       விஞ்ஞானிகள் என்ற போர்வையில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளைப் பார்க்கும்போது அப்துல் கலாம் ஆய்வு முடிவுகள் பற்றி அ.மார்க்ஸ் 'தீராநதி' (டிச.2011 ) இதழில் இறுதியாகக் குறிப்பிட்ட பாரதியின் வரிகளை மீண்டும் சொல்லத்தோன்றுகிறது.


“படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் 

                                                                          அய்யோண்ணு போவான்”