ஞாயிறு, செப்டம்பர் 13, 2020

தலைமுறை நினைவுகள்

தலைமுறை நினைவுகள்

மு.சிவகுருநாதன்

 

      எங்களது மூத்த பெரியம்மா திருமதி முத்துலெட்சுமி அம்மாள் 11/09/2020 அன்று மதியம் வயது முதிர்வால் காலமானார். இன்று மதியம் (12/09/2020) அவரது உடலைத் தகனம் செய்து திரும்பினோம். அவரது வயது கண்டிப்பாக 90 ஐத் தாண்டும். அதன் வழியே மூன்று தலைமுறைகளின் கதையும் விரியும். பல்வேறு இன்ப, துன்பங்களைத் தாங்கிப் பெருவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கரியாப்பட்டினம் கா.சந்தானம் - சிவக்கொழுந்து தம்பதிகள் எங்களது தந்தைவழி தாத்தா - பாட்டி. இவர்களுக்கு மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் என 7 குழந்தைகள்; பக்கிரி, இராமையா, முருகையன், முனியப்பன், லோகாம்பாள், கண்ணம்மாள், காமாட்சி  என...

     எங்களது அப்பா ச.முனியப்பன் கடைக்குட்டி. அவரது சிறுவயதிலேயே 1930 களின் மத்தியில் தந்தையை இழந்தது இக்குடும்பம். மூத்த பிள்ளைகளின் தோளில் குடும்பச்சுமைகள் விழுந்தது.

     கூலிவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற மூத்தப்பிள்ளை பக்கிரி பெரும்பாடுபட்டார். மாடு மேய்த்தல், மர ஏறுதல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார். 1990 களில் தொடக்கத்தில் அவர் காலமானார். அவருக்கு வாழ்க்கைத்துணையாக வந்தவர்தான் இந்த முத்துலெட்சுமி அம்மாள். குடும்பச் சுமையை இவரும் சேர்ந்தே சுமந்தார்.

     தந்தையை இழந்த சோகமும் அவர் மீதான அன்பும் பக்கிரி, இராமையா ஆகிய இரு பெரியப்பாக்கள் தங்களது ஒரே ஆண் குழந்தைக்கு முறையே சந்தானம், சந்தான கிருஷ்ணன் என்று பெயரிட்டதில் வெளிப்படுகிறது. சந்தான கிருஷ்ணன் ஓராண்டிற்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

 மிகுந்த சிரமங்களிடையே கரியாப்பட்டினத்தில் இருவரும் அண்ணாப்பேட்டையில் இருவருமாக நால்வருக்கும் சேர்த்து தலா 11 ஆண், பெண் குழந்தைகள் என பிற்காலத்தில் இருந்தது.

    பெரியம்மாவிற்கு 15 வயதில் திருமணம் நடந்திருக்கும். அப்போது எனது அப்பாவிற்கு 10 வயது இருந்திருக்கலாம். 'சின்ன பிள்ளை' என்றழைத்து இன்னொரு தாயாக கவனித்துக் கொண்டவர் இவர். அடுத்தடுத்த அண்ணிகளைப் பற்றிச் சொல்லும்போது சிந்தாமணி, மணியம்மா என்று பெயரைக்குறிப்பிட்டுப் பேசும் எனது தந்தை இவரை மட்டும் 'கோடியக்கரை ஆச்சி' என்று மரியாதையுடன் விளிப்பது வழக்கமாக இருந்தது.

    மூன்று அத்தைகளும் சில ஆண்டுகளில் விதவையாயினர். ஒரு அத்தை திருமணமான சில மாதங்களில் கணவனை இழந்து இவர்களோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தம். அந்தத் துயரங்களையும் குடும்பம் சேர்ந்தே கடந்தது.

    பெரியப்பா - பெரியம்மாவின் முதல் மகள் கலைமணியை அத்தை மகன் மதியழகனுக்கு மணம் முடித்தனர். இன்று அவர்கள் இருவரும் உயிருடன் இல்லை.

     எங்கள் குடும்பத்தின் முதலும் கடைசியுமான நெருங்கிய உறவுத்திருமணம் அது. அந்த அண்ணாப்பேட்டை அத்தையின் வீட்டில்தான் அப்பா முதலில் பள்ளியைத் தொடங்கினார் (1952). அந்த அத்தைதான் தனது தம்பியான எங்கப்பாவிற்கு பக்கத்து ஊரில் (திருக்குவளைக்கட்டளை) எங்கம்மாவைப் பெண் பார்த்துத் திருமணம் செய்துவைத்தார்.

      எங்கள் அப்பா மீது சினங்கொள்ளும் நேரங்களில கண்ணம்மா அத்தையை அம்மா திட்டுவதும், நல்ல தருணங்களில் கனிவுடன் நினைவு கூர்வதும் அம்மாவின் வழக்கம் என்பதைப் பலதடவைக் கண்டுள்ளேன். காமாட்சி, கண்ணம்மா ஆகிய இரு அத்தைகளில் இறுதிக்காலம் எங்கள் வீட்டில் எங்களுடன் கழிந்தது. அவர்களையும் தனது தாய் தந்தையரையும் கவனித்துக் கொள்ளும் பெரும்பேறு பெற்றார் அம்மா.

     20 கி.மீ. தூரத்திலுள்ள எங்கள் ஊருக்கு எளிதாக நடந்தே வந்துவிடுவார் பெரியப்பா. பெரியம்மா இறுதிக்காலத்தில் மறதி நோயால் அவதிப்பட்டார். (அல்சைமராகக் கூட இருக்கலாம்.)

     வீட்டை விட்டு வெளியே சென்று கால்போன போக்கில் நெடுந்தொலைவு சென்று விடுவதும் பிறகு தேடிச் சென்று அழைத்து வருவதும் தொடர்கதையானது.

     எல்லாருக்கும் முதுமை ஒரு கொடுமையாகவே இருக்கிறது. நடமாட்டத்தில் இருந்தாலும் படுக்கையிருந்தாலும் சிக்கலாகத்தான் இருக்கிறது.

     பெரியம்மா நடமாட்டத்தில் இருந்தார். எங்களது அம்மா இரண்டாண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இரண்டுமே ஒரு வகையில் சோகமயமாகவே உள்ளது.

      இறுதி ஆண்டுகளில் அவரைச் சென்று பார்க்காமலிருந்தது குற்ற உணர்வாய் எஞ்சி நிற்கிறது. வேறு எந்த குறிப்பிட்ட நோய்த்தொந்தரவும் இல்லாத நிலையில் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வார் என்று நினைத்திருந்தேன். இயற்கை அவரது வாழ்வை முடித்துக் கொண்டது.

     எங்கள் குடும்ப வழியில் ஒரு மூத்த உறுப்பினர் என்ற வகையில் அவருடன் பழங்கதைகளை உரையாடி அறிய முடியாமற்போனது பெரும் இழப்பு. மூன்று தலைமுறை நினைவுகளுடன் அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார். எங்களது அம்மாவின் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

கார்மேகங்களின் நடனம்

 கார்மேகங்களின் நடனம்

மு.சிவகுருநாதன்  









 

 

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி / வெப்பச் சலனம் காரணமாக கோடை மழை பரவலாக தமிழகத்தை ஈரப்படுத்தியுள்ளது. இந்த கொரோனா காலத்தில் இது மட்டுமே ஒரே ஆறுதல்.

    ஆனால் திருவாரூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை, மாவட்டத்தின் பிற பகுதிகளான திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் போன்றவற்றை ஒப்பிடும்போது குறைவு என்றே சொல்ல வேண்டும்.

     வெப்பநிலை உயர்வு காரணமாக இருக்க முடியுமா? இந்த சிறுநகரத்தில் தொழிற்சாலைகள் அதிகமில்லை. வாகனப் பெருக்கமும் குறைவு. ஓ.என்.ஜி.சி. எரிவாயு / எண்ணைய்க் கிணறுகள் எரிவது, ரியல் எஸ்டேட் பெருக்கம், விளைநிலமழிப்பு போன்றவை காரணமாக இருக்குமோ?

   நேற்று (10/09/2020) மாலை 6 மணியளவில் திருவாரூர் பகுதியில் கார்மேகங்களின் நடனக் காட்சிகள்; ஆனால் மழையில்லை.

ஆன்லைன் வகுப்புக் கொடுமைகள்!

 ஆன்லைன் வகுப்புக் கொடுமைகள்!

மு.சிவகுருநாதன்

ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு வாரம் விடுமுறையாம்! (செப்.21 முதல் செப்.25 முடிய)

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை வாரத்திற்கு மூன்று வகுப்புகள் என்று வரையறுத்த கொடுமை என்ன சொல்வது?

6-14 வயதெல்லைக் குழந்தைகளை ஒன்றாகக் கருதுவது சரியா?

1-5 க்கு ஒரு வகுப்பு

6-8 க்கு இரு வகுப்புகள்

9,10 க்கு மூன்று வகுப்புகள்

+1,+2 க்கு நான்கு வகுப்புகள்

என்றாவது வரையறுத்திருக்கலாம். இதெல்லாம் நிபுணர்கள் குழு செய்கிறதாம்! நம்புங்கள்!!

இப்போது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் இன்னும் எட்டாத குழந்தைகள்...!?

இது சமத்துவமற்ற நடைமுறை. பேரளவு குழந்தைகள் இதற்கு அப்பாலிருக்கும்போது இதைப் பற்றி மட்டும் கவலைப்படுவது ஏன்?

இதற்குள் வராத குழந்தைகளுக்கு ஏற்படும் அழுத்தங்கள், சுமைகள் வேறுவிதமானது. இதைப் பற்றி கவலை கொள்வது இங்கு பலரும் அறிய விரும்பாதது.

சமத்துவமற்ற, மன அழுத்தம் உண்டாக்குக்கிற முறையை ஒழிப்பதே நல்லது. கெடுவாய்ப்பாக மத்திய, மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் குழந்தைகளுக்காகதாக இல்லை.

வரும் மாதங்களில் பள்ளி திறப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது ஆன்லைனில் இணைந்த, இணையாத என இரு தரப்பு இருக்குமே. அவர்களுக்குள் எவ்விதச் சமநிலை பேணப்படும்?

கொரோனா அனைத்து தரப்பு மக்களையும் பாதித்திருக்கிறது. இம்மாதிரியான செயல்பாடுகள் மூலம் இடைவெளி இன்னும் அதிகரிக்கிறது.

புதிய கல்விக்கொள்கையை ஆராயும் குழுக்கள்?

 புதிய கல்விக்கொள்கையை ஆராயும் குழுக்கள்?

மு.சிவகுருநாதன்

உயர்கல்விக்குழு:

 

புதிய கல்விக்கொள்கையை ஆராய தமிழக உயர்கல்வித்துறை சார்பில் அதிகாரிகள், முன்னாள் துணைவேந்தர்கள் அடங்கிய குழு காலம் கடந்து அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் கல்வியாளர்கள் என்றால் முடிவு எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

'முன்னாள்'களை விட்டால் வேறு ஆள்கள் கிடையாதா?

பள்ளிக்கல்வியில் புதிய கல்விக் கொள்கை இல்லையோ!

அதை யார் ஆய்வு செய்வது?

தனிக்குழு அமைக்கப்படுமா?

பள்ளிக்கல்விக் குழு:

புதிய கல்விக்கொள்கை 2020 இல் பள்ளிக்கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய 13 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஐந்து IAS அலுவலர்கள், 3 முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், ஒரு தனியார் பல்கலை. வேந்தர், ஒரு முன்னாள் இயக்குநர் என்ற போகும் இப்பட்டியலில் பள்ளிக்கல்வி சார்ந்து ஒரு தமிழ் ஆசிரியை மட்டுமே இருக்கிறார். அதுவும் சாகித்ய அகாடமி (மொழிபெயர்ப்பு) விருதாளர் என்பதால் இணைத்துள்ளனர் போலும்!

உயர்கல்விக்கு அமைக்கப்பட்ட குழு போலவே இதுவும் இருக்கிறது.

பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி அதிகாரிகளும் துணைவேந்தர்களும் முடிவு செய்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்? இது நியாயமா?

குழு உடன் மாற்றியமைக்கப்பட வேண்டும்...

வெறும் சடங்கான ஆசிரியர் தினம்

 வெறும் சடங்கான ஆசிரியர் தினம்

மு.சிவகுருநாதன்

 

ஆசிரியர் தின வாழ்த்துகள் பரிமாறப்படுகின்றன.

இது ஒரு சடங்காக மாறிப்போனது கல்வியின் பெருஞ்சோகம்.

இன்று கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மிக அதிகம்.

புதிய கல்விக்கொள்கை 2020 நமது கல்வியை இதுவரை அடைந்த வளர்ச்சியை சில நூறாண்டுகள் பின்னோக்கி இழுக்கிறது.

இந்துத்துவமும் பாசிசமும் கல்விக்கு எதிரானது; ஆளும் இந்துத்துவ அரசு கல்வியை மக்களிடமிருந்து பறிக்கத் திட்டமிடுகிறது.

ஆசிரியர்கள் இதை வெறுமனே வேடிக்கை பார்க்க இயலாது.

தில்லி தயவிலும் அவர்களது ஆதிக்கத்தின் கீழ் பணிபுரியும் மாநில அரசு கேள்வி கேட்க, நமது உரிமையை நிலைநாட்டத் தயங்குகிறது.

ஆசிரியர்களும் இயக்கங்களும் அவ்வாறு இருக்க முடியாது.

இந்தச் சடங்குக் கொண்டாட்டங்களை விடவும் நமது கல்வி, உரிமை, எதிர்காலம் ஆகியவற்றிற்காகப் போராடும் பெரும்பணி ஆசிரியர் சமூகத்தின் முன்நிற்கிறது.

மக்களுடனும் அனைத்துத் தோழமை சக்திகளுடனும் இணைந்து பாசிச கல்விக்கொள்கை 2020 ஐ முறியடிக்க வேண்டும்.

'இந்துத்துவா தமிழி'ன் லீலைகள்!

 'இந்துத்துவா தமிழி'ன் லீலைகள்!

மு.சிவகுருநாதன்



 

 

   'இந்துத்துவா தமிழை'த் தெரியாதவர்கள் இருக்க முடியாது. (அதாங்க 'இந்து தமிழ் திசை'; முன்பு 'தி இந்து') தமிழ் நாளிதழ்களில் 'தின மல'த்திற்குப் போட்டியாக வளர்ந்து வரும் நாளிதழ் இது.

   வாசகர் கடிதப்பகுதி முற்றிலும் நீக்கப்பட்டு, எப்போதாவது ஒரு கடிதம் பிரசுரமாகிறது. 'தின மலம்' எதோ ஒரு பெயரில் தானே தயாரித்து வெளியிட்டுக் கொள்ளும். அதே உத்தியை 'இந்துத்துவா தமிழும்' பின்பற்றத் தொடங்கியுள்ளது.

   வாஞ்சிநாதனின் கர்ப்பிணி மனைவியை கூண்டு வண்டியில் சென்று காப்பாற்றிய 3 வயது முத்துராமலிங்கத் தேவர் கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்!

   இன்றைய (26/08/2020) இதழில் தலைமை நீதிபதி பாப்டேவிற்கு ஆதரவாக, பிரசாந்த் பூஷண் டிவிட்டில் உண்மையில்லை என்பதாக அந்த மின்னஞ்சல் கடிதம் சொல்கிறது.

   சைடு ஸ்டேண்ட் போட்ட அந்த விலையுயர்ந்த பைக்கில் (50 லட்சமாம்!) அமர்ந்திருந்த நீதிபதிக்கு பைக் ஓட்டத் தெரியாது என்ற வாதம் கூட இப்படி முன்வைக்கப்படலாம்.

   அருகில் பலர் முகக் கவசம் அணிந்திருக்கையில் பைக்கில் உட்கார்ந்திருப்பவர் ஏன் அணியவில்லை என்றால் ஓடாத பைக்கில் உட்காந்திருப்பவர் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்? என்றும் கேட்கலாம். தலைக் கவசத்திற்கும் இதே பதிலும் கிடைக்கும்.

   நாடே முடங்கிய போது நீதிமன்றங்களும் முடங்கித்தான் போயின. வழக்கமான எண்ணிக்கையில் வழக்குகள் காணொலி வாயிலாக விசாரிக்கப்பட்டன என்று சொல்ல முடியுமா?

   பிரசாந்த் பூஷண் இந்துக்களின் மனதைப் புண்படுத்தினாராம்! விஜயபாரத்தில் வரவேண்டிய இக்கடிதம் எப்படி 'தமிழ் இந்து'வில்?

  தமிழில் செய்தி ஊடகங்களே இல்லை என்று இருந்திட வேண்டியதுதான். இந்த நடுநிலை 'இந்துத்துவா'க்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வியாழன், செப்டம்பர் 10, 2020

'கொரோனா' காலத்தில் கல்வி

 'கொரோனா' காலத்தில் கல்வி

மு.சிவகுருநாதன்

   'கொரோனா'விலிருந்து மீண்டாலும் அதன் தாக்கங்களிலிருந்து மீள்வது நெடுங்காலம் பிடிக்கும். இதன் தாக்கம் எல்லாத்துறைகளைப் போன்று கல்வியிலும் எதிரொலிக்கவேச் செய்யும்.

  பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பதை இன்று முடிவு செய்ய முடியாத சூழல் தொடர்கிறது. இந்தக் கல்வியாண்டை நிறுத்திவைக்கும் (zero academic year) முடிவை எடுக்க மத்திய அரசு தயாராக இல்லை. அதைத் தாண்டி மாநிலங்கள் ஏதாவது செய்திடுமா என்ன?

  சில மாதங்களாவது பள்ளிகளைத் திறந்து பள்ளிகளில் ஒரே தேர்வு, கல்லூரிகளில் ஒரு செமஸ்டர் தேர்களையாவது நடத்திவிடுவது என்கிற முடிவில் இயங்குவதாகத் தெரிகிறது.

  கல்வியாண்டின் நாள்கள் குறைவதால் பாடப்பகுதிகளைக் குறைக்க வேண்டியது முதன்மையானப் பணியாகும். மத்தியக் கல்வி வாரியம் (CBSE) இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்குப் பிடிக்காத, இந்துத்துவக் கருத்தியலுடன் உடன்படாதப் பகுதிகளை நீக்கிவிட்டனர். இது மட்டுமா, இந்தக் 'கொரோனா' காலத்தில் நாம் எதிர்கொண்ட அறமற்ற செயல்கள் அதிகம்.

   தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவதில் காட்டிய வேகம், அதன் பின்வாங்கலுக்குப் பின் கல்வித்துறை முட்டுச்சந்தில் நிற்பதைப் போல இருக்கிறது.

  மிகத் தாமதமாக மாணவர் சேர்க்கை, பாடநூல் வழங்கல் நடந்தேறியுள்ளது. பாடப்பகுதிகள் குறைப்பிற்கு ஒரு குழு அமைப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

  இணையக் கல்வி அறிவிப்பு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாகச் சுருங்கிப் போனது. அனைவருக்கும் இணையக் கல்விக்கான சம வாய்ப்புகள் அறவே இல்லை. தனியார் சுயநிதிப் பள்ளிகளில்கூட 100% இணையக் கல்வி சாத்தியமே இல்லை.

  இருப்பினும் பெற்றோர்களிடம் பணம் வசூலிக்க 'online' ஆயுதம் அவர்களுக்கு உதவுகிறது. மத்திய மாநில அரசுகள் இணையக் கல்வியை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன. இதற்குப் பின்னாலிருக்கும் வணிக உத்திகள் அனைவரும் அறிந்தது.

  1 முதல் 8 முடிய உள்ள வகுப்புகளுக்கு நாள்தோறும் 3 'online' வகுப்புகள் இருக்கலாம் என்றது மாநிலக் கல்வித்துறை. 5-14 வயதெல்லைகளை ஒன்றாக்கி எல்லாருக்கும் 3 வகுப்புகள் என்று அறிவித்தக் கொடுமையை என்ன சொல்வது?

  'நீட்' தற்கொலைகளைப் போன்று, 'online' தற்கொலைகளும் தொடர்கின்றன. இதெல்லாம் வெறுமனே செய்திகளாகக் கண்டு நகர்கிறது நமது சமூகம்.

  தனியார் பள்ளிகளைப் பாதுகாக்கவே மாணவர் சேர்க்கையை முடிந்த வரையில் தள்ளிப் போட்டனர். தற்போது மாணவர் சேர்க்கை தொடங்கி அரசுப் பள்ளிகளில் கூட இடங்கள் நிரம்பிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. அங்கு கடைபிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு என்னாயிற்று என்று தெரியவில்லை.

  மாணவர்களிடம் விண்ணப்பம் பெற்று அவற்றைப் பரிசீலிக்காமல் எப்படி உடனே இடங்கள் முடிந்துவிட்டது என அரசுப்பள்ளிகளில் சொல்ல முடியும் என்பது விளங்கவில்லை.

   பாடநூல்கள் பெற்ற மாணவர்கள் குறிப்பாக 10, +1, +2 வகுப்புகளில் படிப்போர் ஏதோ ஒரு வழியில் பொதுத்தேர்விற்கு தயாராகக் கூடும். அந்த மாணவர்களுக்கு மட்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஏதோ தங்களால் இயன்ற வழிகளில் அவர்களது எல்லைகளுக்குட்பட்டு தேர்விற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றனர். வேறு வழியற்ற சில மாணவர்கள் சுயமாகக் கற்கவும் வாய்ப்புள்ளது.

  இந்நிலையில் இவ்வாண்டு நீக்கப்படும் பாடப்பகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாதது வியப்பைத் தருகிறது. அவற்றை விரைவில் வெளியிடுவது நல்லது.

   அப்போதுதான் அவற்றைத் தவிர்த்து பிற பகுதிகளில் உரிய கவனம் செலுத்த முடியும். கல்வித் தொலைக்காட்சி, இணைய வகுப்பு, சுய கற்றல் என அனைவருக்கும் இது இன்றியமையாதது. மூன்று மாதங்கள் முடிவடையும் நிலையில் உடன் செய்திருக்க வேண்டிய பணியிது.

இந்தியை நுழைக்கும் முயற்சி

 இந்தியை நுழைக்கும் முயற்சி

மு.சிவகுருநாதன்

 

    கோவை மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் ஒன்று வெளியாகியுள்ளது.

    இதில் "மூன்றாவது மொழி (ஹிந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாக எடுத்துக் கொள்ள விரும்புகிறாரா?", என்று கேட்கப்பட்டுள்ளது.

   மூன்றாவது மொழி அதுவும் ஹிந்தி எங்கு எப்படி நுழைந்தது? கைத்தொழில் எங்கு வந்தது?

    "இது எங்களால் வழங்கப்படவில்லை முதல் வகுப்புச் சேர்க்கைக்கு விண்ணப்பமே இல்லை", என்று மாநகராட்சி ஆணையர் மறுக்கிறார்.

    தலைமையாசிரியர் வழங்கியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.

    முதல் வகுப்பில் சேர விண்ணப்பம் தேவையில்லை என்றால் குழந்தைகள் பற்றிய விவரங்களை எப்படிப் பதிவு செய்வார்கள்?

    உயர்நிலை, மேனிலை வகுப்புகளுக்கு மட்டும் விண்ணப்பம் தேவையில்லாமல் இருக்கலாம். அவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் (TC) இருக்கும். ஆனால் முதல் வகுப்பு சேர வருபவர்களுக்கு தகவல்களை எப்படிப் பெற முடியும்?

   இவ்விண்ணப்பத்தில் முதல் மொழியின் கீழ் மாணவர் எடுத்துக் கொள்ள விரும்பும் மொழிகள் என்றும் உள்ளது.

   முதல் மொழி ஒன்றாகத்தானே இருக்க முடியும்? பிறகேன் ' மொழிகள்'?

   பெரியம்மை வடுக்கள் இருக்கின்றதா? என்று கேட்பதெல்லாம் ரொம்ப அபத்தம்.

   இப்போது பெரியம்மை முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டது. யாருக்கும் அந்தத் தடுப்பூசிகள் போடுவதில்லை. பிறகு அம்மைத் தழும்புகளுக்கு எங்கேப் போவது?

   விண்ணப்பம் என்பது இங்கு வணிகம். யாரோ ஒருவர் அச்சடித்து விற்பனை செய்கிறார். அதை கேள்விகள் இன்றி அனைவரும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

   பள்ளிகளில் பலகாலம் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் பதிவுத்தாளை வழங்கி வந்தனர். இப்போதுதான் அது ஒழிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் இவ்வாறு படிவங்களை புழக்கத்தில் விடுகின்றனர் கள்ள நோட்டைப் போல.

   அரசும் கல்வித்துறையும் இதைக் கண்டுகொள்வதில்லை. அவர்கள் உரிய படிவங்களை, தகுந்த நேரத்தில் வெளியிட்டால் இம்மாதியான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

காவல்துறையும் ரவுடியிசமும்

 காவல்துறையும் ரவுடியிசமும்

மு.சிவகுருநாதன்

 

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுவெடி குண்டு வீசி காவலர் படுகொலை என்று செய்தி வந்தது...

   சில மணி நேரத்தில் வெடிகுண்டு வீசிய நபரும் பலி என்று சொல்கிறார்கள்.

   உண்மையில் என்னதான் நடந்தது? தற்போது மோதல் படுகொலைகளுக்கு நாட்டு வெடிகுண்டும் பயன்படுகிறதா?

   போக்கிரிகளை உருவாக்குவதும் அவர்களைப் பாதுகாப்பதும் தேவைப்படும்போது போட்டுத் தள்ளுவதும் காவல்துறையின் பணியாக இருக்க முடியாது.

   இரு கொலை மற்றும் 5 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை ஏன் இவ்வளவு நாளாக கைது செய்யவில்லை?

   அவர்களை கைது செய்ய உரிய பாதுகாப்புடன் ஏன் காவல்துறை செல்லவில்லை?

   இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அப்பாவிக் காவலர் பலிகடா ஆக்கப்பட்டாரா?

   அப்பாவிகள் அடித்துக் கொல்லும் காவல்துறை கிரிமினல்களிடம் அதிகாரத்தைக் காட்டத் தயங்குவதேன்?

   பெண் ஊடகவியலாளர்களை இழிவாகப் பேசிய, சித்தரித்த, எஸ்.வி.சேகர், கிஷோர் சாமி, சசிகுமார் போன்றவர்கள் மீதும், நீதிமன்றத்தை மிக மோசமாக இழிவுபடுத்திய ஹெச்.ராஜா போன்றவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை. பொறுக்கிகளும் போக்கிரிகளும் இங்கு எவ்வித பயமின்றிச் சுதந்திரமாகச் செயல்படலாம் என்பதே காவல்துறையின் சட்டமாக உள்ளது.

  உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுத்திருந்தால் அப்பாவிகள் பலியாகாமல் தடுத்திருக்கலாம்.

    சி.பி.சி.ஐ.டி. போன்ற உரிய அமைப்புகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.