ஞாயிறு, அக்டோபர் 28, 2018

புதிய கருத்துகள் – சிந்தனைகளை எளிய மொழியில் சொல்வதில் என்ன சிக்கல்?


புதிய கருத்துகள் – சிந்தனைகளை எளிய மொழியில் சொல்வதில் என்ன சிக்கல்?


(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 04) 
 
மு.சிவகுருநாதன்

 (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – பொருளியல்  பாடப்பகுதி பற்றிய கருத்துகள்.)

ஒரு முன் குறிப்பு: 


      பாடப்பகுதியை வாசித்து அதிலுள்ள புரியாத மற்றும் புதிய சொற்களை அடிக்கோடிட்டுப் பின்னர் குறிப்பேட்டில் எழுதுவது, இப்போதுள்ள கற்பித்தல்முறையில் ஒரு சடங்காகும். கிரந்த எழுத்துகள் உள்ள இடப்பெயர்கள், அரசர் பெயர்கள் ஆகியவற்றை இப்பட்டியலில் சில மாணவர்கள் இணைத்து விடுவதுண்டு. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட புதிய பாடநூல்களில் சில சொற்றொடர்களே புரியவில்லை என்று எழுதக்கூடிய சூழல் உள்ளது. மொழியாக்கக் குறைபாடுகள், தவறானச் சொற்கள் பயன்பாடு, நல்ல - எளிய சொற்கள் இருக்க அதற்குப் பதிலாக வேறு சொற்களைப் பயன்படுத்துதல் என பக்கமெங்கும் நிரம்பி வழியும் தன்மையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவற்றை ஆசிரியர்கள் எவ்விதம் எதிர்கொள்கிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்று. அச்சிட்டப் பாடநூலே வேத நூல்கள் என எதுவும் பேசாமல் இருப்பது சரியா? இப்பாடநூலைப் பயன்படுத்தும் குழந்தைகள், ஆசிரியர்கள் ஆகியோரை ‘கிள்ளுக்கீரை மனோபாவத்தில்’ அணுகுவது சரியல்ல. 


     ஆறாம் வகுப்பில் ‘பொருளியல் ஓர் அறிமுகம்’ என்னும் பாடமும் ஒன்பதாம் வகுப்பில்  ‘பணம் மற்றும் கடன்’ என்னும் பாடமும் பொருளியல் பாடப்பகுதிகளாக உள்ளன. 

   தொடக்க நிலையிலிருந்து ஆறாம் வகுப்பிற்கு வரும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு உரையாடல் அடிப்படையில் பாடக்கருத்துகள் எளிமையாகப் புரியும்படி அமைக்கப்பட்டிருப்பதைப் பாராட்டலாம். 

     பண்டமாற்று முறையை விளக்க இவ்வாறு எடுத்துக்காட்டுக் கூறப்படுகிறது. “ஒரு மூட்டை அரிசிக்குப் பதிலாகத் தேவையான அளவு துணியைப் பெற்றுக் கொள்வதாகும்”. (பக்.204) பழங்காலப் பண்டமாற்றில் அரிசி இடம்பெறுவதாக கற்பனை செய்வது அபத்தம். நெல் என்பதே சரியாக இருக்கும். தங்களது தேவைக்கேற்ப நெல்லை உரல்-உலக்கை மூலம் அரிசியாக்கிப் பயன்படுத்தினர். 

    “அங்கே என்ன உட்கார்ந்துகிட்டுக் கதை அளந்துகிட்டு இருக்கீங்க. பசங்களையும் அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வாங்க. சாப்பாடு தயாரா இருக்கு”, என்று சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டார், (பக்.207) என்பது போன்ற உரையாடல்களைத் தவிர்ப்பது நலம். பெண்களை சமையறையுடன் முடக்கி, பொதுவெளியில் அவர்களைத் சிந்திக்கவிடாமல் செய்து, அவர்களது அறிவு வரம்பு இதுதான் எனக் கேலி செய்யும் சொல்லாடல்கள்  கண்டிப்பாக மாணவர்களிடம் தாக்கம் செலுத்தும். இப்பாடத்தை ஒரு பெண்ணே விளக்கியிருக்கலாமே! இதற்குப் பொருளாதார ஆசிரியர் தேவையா? பழைய பாடநூல்களில் “அப்பா நாளிதழ் வாசிக்கிறார், அம்மா சமைக்கிறாள், அக்கா வீடு கூட்டுகிறாள் / அம்மாவுக்கு உதவி செய்கிறாள், அண்ணன் விளையாடுகிறான்” என்று இருக்குமல்லவா! அதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. 

   “நன்கு வடிவமைக்கப்பட்ட சாலைகள், துறைமுகம், விமானநிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்கள் எல்லாம் ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடக்கத் துணை புரிகின்றன”, (பக்.208) மேற்கண்ட செயல்பாடுகள் மூலம் கிராமங்களும் சூழலியலும் எவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கிச் சொல்வதும்  பொருளாதாரத்தின் ஒரு பகுதிதானே! சூழலியல் பற்றி   புவியியலில் மட்டுமல்ல; அறிவியல், பொருளியல், மொழிப்பாடங்கள் என வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் சொல்லத்தான் வேண்டும். 


    ‘நுகர்வோர் – பொருட்களைப் பயன்படுத்துவோர்’ என்று கலைச்சொற்கள் பட்டியலில் உள்ளது (பக்.208)  ‘பொருள்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவோர்’ நுகர்வோர் என்பதைச் சற்று அழுத்திச் சொல்லவேண்டிய நிலையில் உள்ளோம். “தற்போது உலகில் தயாரிக்கப்படும் பொருள்களில் 90 விழுக்காடு விற்பனை அல்லது சேவைத்தொழிலை இலக்காகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன”, (பக்.143, 9 பொருளியல்) என்று சொல்லப்படுவதை இங்கு கணக்கில் கொள்ளலாம்.
  
   ‘consumer goods’ என்பதை ‘நுகர்வோர் பொருள்கள்’ என்று மொழியாக்குவதைவிட ‘நுகர்வுப் பொருள்கள்’ என்பதே சரி. ‘நுகர்வு’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்ட நிலையில் இதைப் பயன்படுத்தும்போது புரிதல் தொடர்பான சிக்கல் ஏற்பட வழியில்லை. சேவைத்துறையின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் பொருள்கள் மட்டுமல்லாது சேவையின் தரம் பற்றிய புரிதலையும் உணர்த்த வேண்டியது அவசியம்.
 
    இனி ஒன்பதாம் வகுப்பின் ‘பணம் மற்றும் கடன்’ என்ற பாடம் தொடர்பாக. 

     Ancient money, Natural money ஆகிய இரண்டும் ‘புராதனப் பணம்’ என்று மொழி பெயர்க்கப்படுகிறது. கலைச் சொற்களில் ‘பழங்காலப் பணம்’ என்று விளக்கம் தரப்படுகிறது. இது தேவையா? பழங்காலப் பணம் அல்லது தொல் பணம் என்று புரியும்படி சொல்லலாமே! Natural money ஐ ஓரிடத்தில் ‘இயற்கைப் பணம்’ என்றும் பிறிதோரிடத்தில் ‘புராதனப் பணம்’ என்று எழுதுவது ஏன்?
  
     Automated Teller Machine (ATM) (பணம் எடுக்கும் இயந்திரம்), Debit card (தானியங்கி பணம் வழங்கும் அட்டை) என்று மொழி பெயர்க்கும்போது நமக்கு இயல்பாகவே ஒரு அய்யம் எழுகிறது. இங்கு தானியங்கியாகச் செயல்படுவது இயந்திரமா? அட்டையா? என்பதே அது. மேலும் நமக்கு, நமது, நாம் என்கிற சொற்பயன்பாட்டில் திளைக்க பாடநூல் பத்தியைக் கீழேத் தருகிறேன்.

“Now this practice is gradually vanishing. Instead, one can easily withdraw the necessary amount from an Automated Teller Machine (ATM), with the held if an ATM debit card. One can easily withdraw the money needed at any time at ATMs located everywhere”. (page 126)

“வங்கிச் சேமிப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்கு நேரடியாக வங்கிக்குச் சென்று படிவம் நிரப்பி அல்லது காசோலை வழங்கி, பெறுவதற்குப் பதிலாக, பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை பயன்படுகிறது. இதன்மூலம் ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ள பணம் எடுக்கும் இயந்திரம் மூலம் எந்த நேரமும் நமக்குத்தேவையான பணத்தினை நமது கணக்கிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளலாம்”. (பக்.141)

    பேச்சு வழக்கில் ATM card என்று சொல்கிறோமல்லவா! Debit card என்பதை ATM debit card என்றே எழுதி ‘தானியங்கி பணம் வழங்கும் அட்டை’ என்று மிக நீளமாக மொழிபெயர்ப்பதை என்னவென்பது? என்னே மொழிப்புலமை! 


  Debit card தான் ‘தானியங்கி’ என்று மீள்பார்வையில் மீண்டும் விளக்குகிறார்கள். அய்யம் நீங்கித் தெளிவு பிறக்கிறது! அந்த வரிகள் பின்வருமாறு:

“ATMs help a person to withdraw money at any time of the day”. (page 131)

“தானியங்கி பணம் வழங்கும் அட்டையின் (ATM) மூலம் ஒருவர் எந்த நேரத்திலும் தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்”. (பக். 146)

“இதேபோல் வங்கிக்குச் செல்லாமலேயே நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதி சில வங்கிகளில் உள்ளது”. (பக்.141)

   தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (Automated Teller Machine - ATM) தானியங்கி பணம் பெறும் இயந்திரமாகவும் (Cash Deposit Machine - CDM) செயல்படும். பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் இவ்வசதிகள் உண்டு. நமது கணக்கில் மட்டுமல்லாமல் பிறரது கணக்கிலும் பிற வங்கிகளின் கணக்கிலும் பணம் செலுத்தும் வசதியும் இதில் உண்டு. இதைப் பிறகு யார்தான் சொல்லிக் கொடுப்பது? ஆனால் பாடநூல் இது போதுமெனக் கருதுகிறது. மேலும் தேவையின்றிக் குழப்புகிறது. 
 
    கடன் அட்டை, அலைபேசி மூலம் மின்னணுப் பணப்பரிமாற்றம் ஆகியவற்றைக் குறிப்பிடுபவர்கள் அட்டையைத் (Debit card) தேய்த்துப் (swipe) பணம் செலுத்தும் முறையைக் கூறாதது வியப்பு! தானியங்கிக் குளறுபடியால் வந்த வினையோ!

  “Currency is the medium of exchange in a country. The Indian currency is called the Indian Rupee (INR). In a country the foreign currency is called foreign exchange”. (page 128)

“நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது. உள்நாட்டில் அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி என அழைக்கப்படுகிறது”. (பக்.143)

    பணம் மற்றும் செலாவணி இரண்டும் பாடத்தில் குழப்பமேற்படும் விதத்தில் சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு கீழ்க்கண்ட வரிகளைக் கவனியுங்கள்.

“Money, i.e. paper currency is a value. Money is recognized as a standard record for the payment of a thing or service. Using this currency, people can purchase things, pay taxes and repay debts”. (page 126)

“பணம் என்பது அதாவது காகிதப்பணம் என்பது ஒரு மதிப்பு ஆகும். எந்த ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாகவும் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும் ஒரு குறிப்பிட்ட நாடு முழுவதும் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு சரிபார்க்கப்பட்ட ஆவணம் ஆகும்”. (பக்.142)

“A government has the responsibility to regulate the money supply and oversea circulation”. (page 131)

“பணப் பரிமாற்றத்தினைக் பராமரிப்பதும் கண்காணிப்பதும் அரசின் கடமைகளாகும்”. (பக்.146)

   ‘oversea’ என்பது தவறு; oversee என்று இருக்க வேண்டும். ஒழுங்குபடுத்துவதும் (regulate) பராமரிப்பதும் (maintain)  ஒன்றல்ல. ஒழுங்குபடுத்துவது என்பதே சரியான சொல்லாட்சி.

“A government has the responsibility to regulate money supply and oversee the monetary policy. Hoarding of money must be avoided at all costs in the country's economy. Only then money can be saved in banks”. (page 127)

“பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது.  பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது”. (பக்.142)

    மேலே குறிப்பிட்ட மொழியாக்கச் சிக்கல் இங்கும் தொடர்கிறது. “monetary policy” என்னும் ‘பணவியல் கொள்கை’ ஏன் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது?

All major and important banks were nationalised (1969) in India. The Reserve Bank of India (RBI) regulates the circulation of currency in India. (page 127)

“இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டதை (1969) அறிவோம். இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது”. (பக். 142)
 
   இங்கு ‘ஒழுங்குபடுத்துதல்’ இருக்கிறது. ஆனால், 1969 க்குப் பிறகு இந்தியாவில் எதுவும் நடக்கவில்லையா? பொருளாதாரச் செயல்பாடுகளை 1969 உடன் நிறுத்திவிடுவது சரியாகாது.

   கலைச் சொற்பட்டியலில் ‘முறைசாரா நிதி நிறுவனங்களை’ ‘அரசுடையாக்கப்படாத நிதி நிறுவனங்கள்’ என்று சொல்கிறது பாடநூல் (பக்.146). தனியார் வங்கிகள் (ஐ.சி.ஐ.சி.ஐ., சிட்டி யூனியன் வங்கி லிட்., கரூர் வைஸ்யா வங்கி போன்றவை) அரசுடைமையாக்கப்படாதவை. இருப்பினும்  அவை இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் முறையான நிதி நிறுவனங்களே. அரசுடைமையாக்கப்படாத நிதி நிறுவனங்கள் அனைத்தும் முறைசாரா நிதி நிறுவனங்கள் என்பது அபத்தத்தின் உச்சம்.

      1969 க்குப் பிறகும் 1991 உலகமயத்திற்குப் பிறகும் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. இன்று அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுடன் தனியார் வங்கிகளும் உள்ளன. இப்போது புதிதாக ‘payment bank’ கள் (கட்டண வங்கிகள்) 11 க்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இவையனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. இந்திய அஞ்சல், ரிலையன்ஸ், ஏர்டெல், ஆதித்யா பிர்லா, சோழமண்டலம், வோடபோன், டெக் மஹிந்திரா போன்றவை புதிய ‘பேமண்ட் வங்கி’களுள் அடக்கம்.

    இவைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து தொடக்கத்தில் ரூபாய் ஒரு லட்சம் வரை வைப்புத்தொகைகளை பெறலாம். மேலும் இணைய வங்கிச் சேவை, பணப் பரிமாற்ற வசதி, ஆயுள் காப்பீடு, பரஸ்பரநிதி  போன்ற சேவைகளை அளிக்கலாம்.  ஆனால் கடன் அட்டை (Credit card) இல்லை; பணமெடுக்கும் அட்டை (Debit card) வழங்கலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) கணக்கு தொடங்க இயலாது. முக்கியமாக கடன் வழங்குதல் போன்ற இதர வங்கிச்சேவைகள் இவற்றில் இல்லை. மூலதனம் திரட்டுபவன் எப்படி கடன் வழங்குவான்? 

   இவற்றைக் ‘கட்டண வங்கிகள்’ என்று சொல்லலாமா? இருப்பினும் வங்கி என்னும் சொல் இவற்றிற்குப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இவற்றை வங்கி என்று சொல்வது அபத்தம். நம்முடைய பணத்தை வைத்துக் கொண்டு நமக்குத் தேவைப்படும்போது பணம் அல்லது பரிமாற்றம் செய்வதே இவற்றின் பணி. பெருநிறுவனங்கள் இனி மூலதனத் திரட்டலுக்கு அரசையோ அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை. பெருமளவு மூலதனத்தை இந்தப் பெயரில் வங்கிகள் திரட்டிக்கொள்ள முடியும். வாராக்கடனில் சிக்கி விஜய் மல்லய்யா, நீரவ் மோடி போன்றோர் போல் ஓடி ஒளிய வேண்டியதில்லை. வங்கி திவாலாகிவிட்டது என்று இங்கே நடமாடலாம்; அரசின் உதவிகளும் கிடைக்கும். 

   இவற்றையெல்லாம் இங்கு பேசவேண்டிய அவசியம் என்ன? என நீங்கள் கேட்பது புரிகிறது. “பெரிய தொழில் நிறுவனங்கள்கூட தங்கள் புதிய திட்டங்களுக்காக கடன் பெறுகின்றன”. (பக்.145) அந்தோ பரிதாபம்! நாட்டில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் மொத்தக்கடனில் பெரும்பகுதியும் வாராக்கடனில் பெரும்பகுதியும் பெருநிறுவனங்கள் பெற்றவையே. உண்மை இப்படியிருக்க,  “அய்யோ, பாவம்! அவர்கள் கூட கடன் வாங்குகிறார்கள்”, எனப் பாடநூல் நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? 

   அரசு வங்கிகளில் பெருந்தொகை கடன் பெற்று அவற்றை முறையாகத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் இந்த ‘கட்டண வங்கி’க்கான அனுமதி பெறுவதையும் இணைத்துப் பார்க்கலாம். ரிலையன்ஸ், ஏர்டெல், ஆதித்யா பிர்லா, வோடபோன், டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் அனைத்தும் வாராக்கடன் வைத்திருப்பவையே. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாரக்கடன் வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயம் மற்றும் கல்விக்கடன்களை வசூல் செய்ய ரிலையன்ஸ் ரெக்கவரி (Reliance Recovery) என்னும் கடன் வசூல் கம்பெனி வைத்திருப்பதைக் கவனியுங்கள். இந்நிறுவனம் குண்டர்கள் மூலம் மிரட்டிக் கடன் வசூல் செய்கின்றது. அதற்கு வங்கிகள் ஊதியம் அளிக்கின்றன. இவர்கள் வாங்கிய கடனை யார், எப்படி வசூல் செய்வது?

    இந்திய அஞ்சல் துறையும் இருக்கிறதே என்று கேட்பீர்கள். ரயில்வேயும், அஞ்சலும் எவ்வளவு காலத்திற்கு அரசிடம் இருக்கப் போகிறது? பி.எஸ்.என்.எல். 4ஜி உரிமம் இன்றி  முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலை தெரியுந்தானே! இனி தொலைத் தொடர்புத் துறையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் – ஐடியா ஆகிய மூன்றின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும். பி.எஸ்.என்.எல். கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடியும். 

    கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்! பணமதிப்பிழப்புக்குப் (Demonetization) பிறகு  பணமில்லாதப் பரிவர்த்தனை (cashless transactions) எனக் கூப்பாடு போட்டார்களே, எதற்கென்று இப்போதாவது புரிகிறதா? உங்களது கட்டணங்களைச் செலுத்த ஜியோ, ஏர்டெல், வோடபோன் – ஐடியா ஆகியவற்றைத் தாண்டி இந்திய அஞ்சல்துறைக்காக செல்லப்போகிறீர்கள்? இன்னும் paytm போன்ற பல நிறுவனங்களும் உள்ளன. 

    கடன்களைப் பற்றிச் சொல்லும்போது நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் வட்டிக் குறைவு என்று கூறப்படுகிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வேளாண் ஈட்டுக்கடன் வட்டிவீதம் குறைவு என்பதை ஏற்கலாம். ஆனால் கூட்டுறவு வங்கிகள் அப்படியல்ல. ஒப்பீட்டளவில் அவை அரசு வங்கிகளைவிட அதிக வட்டி வசூலிக்கின்றன. கடன் தள்ளுபடி, மானியம் போன்ற சலுகைகள் மட்டுமே அங்குண்டு. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் பெருநிறுவனங்களின் கடன் வாராக்கடன்கள் பட்டியலுக்குப் போகும்போதே அது கிட்டத்தட்ட தள்ளுபடிதான். வேளாண் இடுபொருள்களான விதைகள், வேதியுரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம் வேளாண் நிறுவனங்களுக்கே செல்கிறது. இதனால் விவாசாயிகள் அடையும் பலன் மிகக்குறைவு. எனவே நாடெங்கும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் ஏற்படுகிறது. கூட்டுறவே இப்படியென்றால் முறைசாரா நிதி நிறுவனங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிறுவனங்களை அரசுகள் ஏன் கட்டுப்படுத்துவதில்லை? 

    பாடத்தில் கல்விக்கடன் பற்றி பெரிதாகப் பேசப்படுகிறது. பிணையில்லாத கடன் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. பெரும்பாலும் வேலைவாய்ப்பற்ற படிப்புகளுக்கு வாங்கும் கடன் கட்ட முடியாமற்போய், தற்கொலை அவலம் இங்கும் நடக்கிறது. பொறியியலில் சான்றிதழ் (ITI) , பட்டயப் (Diploma) படிப்புகளைத் தவிர்த்துப் பட்டப் படிப்புகளை மட்டுமே நாடியதால் பல பொறியியல் பட்டதாரிகள் இன்று கடன் வலையில் சிக்கியுள்ளனர். எனவே இக்கடனும் தனியார் கல்வி நிறுவனங்கள் பலனடைந்த அளவிற்கு மாணவர்கள் அடையவில்லை என்பதே உண்மைநிலை. இவற்றெல்லாம் பாடநூல்கள் பேச இயலாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உண்மைக்கு மாறான தகவல்களை அரசின் விளம்பரங்களைப் போல பாடநூல்கள் தயாரிப்பது சரியா என்னும் கேள்வி தவிர்க்க முடியாதது.  

   உனக்குத் தெரிந்த அரசு மற்றும் தனியார் வங்கிகளைப் பட்டியலிட செயல்பாடு அளிக்கலாம். மேலும் இப்பாடத்தில் வாழ்வோடு இணைந்த பல்வேறு செயல்பாடுகள் வழங்க இடமுண்டு. ஆனால்,  “நீ வெளிநாட்டிற்குச் சென்று கட்டிடக்கலை வல்லுநருக்கான மேற்படிப்பைப் பயில கல்விக்கடன் பெறும் வகையில் வங்கி மேலாளருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக”, என செயல்பாட்டு வினா கொடுக்கப்பட்டுள்ளது. மொழிப்பாடம் தோற்றது போங்கள்!

“There is a close relationship between the growth of money supply and inflation. Price controls play a very important role is played by the Central Bank of our country, RBI in India”. (page 128)


“பண விநியோக வளர்ச்சிக்கும் நீண்டகால விலை வீழ்ச்சிக்கும் இடையிலான நெருங்கிய உறவினை நாம் காணமுடியும். ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் விலைக் கட்டுப்பாட்டுக்கு முக்கியப் பங்களிப்பு உள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கி இதனைக் கண்காணித்து வருகிறது”. (பக்.143)

    ‘inflation’ என்பது ‘நீண்டகால விலை வீழ்ச்சி’ என்று மொழிபெயர்ப்பாகிறது. ‘பணவீக்கம்’ ஏன் தவிர்க்கப்படுகிறது?  “the Central Bank of our country, RBI in India” என்பதற்குப் பதிலாக “the RBI” என்று சொல்லிவிட்டுப் போகலாமே. ‘Central Bank India’ என்று அரசு வங்கி ஒன்று உள்ளது. நல்லவேளை, மொழிபெயர்ப்பாளர் கண்ணில் படவில்லை!

“Informal financial institutions are easily approachable to the customers with flexible procedures. But there are issues like the safety of items pledged high rates of interest and modes of recovery”. (page 130)

“முறைசாரா தனியார் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் அணுக எளிதாக இருப்பதும் ஏதுவாக உள்ளதும் சாதகமான அம்சங்களாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் அதிக வட்டி, ஈடு வைக்கப்படும் பொருளின் பாதுகாப்பு மற்றும்  வசூலிக்கும் முறைகள் ஆகியவற்றில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன”. (பக்.145)

    ‘financial institutions’ களில் ‘நிதி’ காணமற்போய் வெறும் ‘தனியார் நிறுவனங்களாகி’ விடுகிறது.  “நெகிழ்வான நடைமுறைகளுடன் வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும் நிலையில் முறைசாரா நிதி நிறுவனங்கள் இருக்கின்றன”, என்றுத் தெளிவாக மொழிபெயர்த்தால் என்ன  குடியா மூழ்கிப் போய்விடும்?  (நீங்கள் இன்னும் எளிமையாக மொழிபெயர்க்கலாம்.)  

Functions of Money

“When money replaced the barter system, a lot of practical issues were solved. Money acts a medium of exchange, a unit of measurement, a store of value and a standard of deferred payments. It plays an important role in transactions”. (129)

பணத்தின் செயல்பாடுகள்

  “பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் உதவி வருகிறது. பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமாகவும், ஒரு கணக்கின் அலகாகவும் மதிப்புச் சேமிப்பாகவும் மாறுபடும் பண வழங்கீடுக்கான தரப்படுத்தலாகவும் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”. (பக். 144)

   இவ்வளவு திருகலாக, சிக்கலாக மொழிபெயர்க்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதன்மூலம் தமிழ் வழியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் படும் துயரைப் புரிந்துகொள்ளுங்கள்.
    
  Cash reserves in the RBI (page 130)  ரிசர்வ் வங்கி வைப்புத்தொகை (பக். 145) Deposit என்பதே வைப்புத்தொகை; Cash reserves என்பது இருப்புத்தொகை அல்லது கையிருப்பு. இம்மாதிரியான எளிய சொற்களைகளைக் கூட தவறவிடுவது மோசம். 

 “This money was without form and people started saving habit of the people”. (page 124)

“இந்த உருவமற்ற பணமும் வங்கிகளில்   சேமிக்கும் வழக்கமும்  வெகுவாகப் புழக்கத்திற்கு வந்தன”. (பக்.141)

    காகிதப்பணம் உருவமற்றதா? நாணயங்கள் மட்டும் உருவமுள்ளவை, பணத்தாள்கள் உருவமற்றவை என்றால் மின்னணுப் பணப்பரிமாற்றத்தை எவ்வாறு அழைப்பது? 

“The Great Economic Depression was also prompted the saving habit of the people”. (page 124)

“அப்போது உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்தமும் இதற்கான காரணங்களில் ஒன்று”. (பக்.141)

    அப்போது என்ன வகையான பொருளாதார மந்தம் உலகில் எந்த நாடுகளில் ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டுமல்லவா! காகிதப் பணம் உலகமெங்கும் ஒரே நேரத்திலா புழக்கத்திற்கு வந்தது?

    ‘விளை பொருள்கள்’ விலைபொருளாகும் (பக்.146), ஆப்பிரிக்கா கண்டம் நாடாகும் (பக்.144) போன்ற சிறுசிறு பிழைகளையும் தவறவிடுவது அறமாகாது.
“Though the RBI has the power to print up to ten thousand rupee notes, at present a maximum of upto rupees two thousand is printed”. (page 128)

“பத்தாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பு வரையிலான பணத்தை மட்டுமே அச்சடிக்கிறது”. (பக்.144)
என்னே கருணை!

      பணமதிப்பிழப்பு (Demonetization) நடவடிக்கைக்கு முன்பு வரை உயர்மதிப்பாக ரூபாய் 1000 இருந்தது. கருப்பு மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி 500, 1,000 போன்ற உயர்மதிப்புப்  பணத்தாள்கள் மதிப்பிழக்க வைக்கப்பட்டன. அதற்கு எதிரான 2,000 ரூபாய் தாள்களைப் பின்னர் வெளியிட்டனர். இந்த நடவடிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி நம்பகம் கேள்விக்குள்ளானது. ரூ.10,000 வரை பணத்தாள் வெளியிட அதிகாரம் இருப்பதாகச் சொல்வது ரூ.2,000 வெளியீட்டை நியாயப்படுத்துவதாக உள்ளது. அப்படியென்றால் பணமதிப்பிழப்பு பற்றியும் பாடம் பேசியிருக்க வேண்டும். ஏன் பேசவில்லை? “ரிசர்வ் வங்கியை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காவிட்டால் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும்”, என ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள செய்தியையும் இத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.

     புதிய பள்ளிப் பாடநூல்களில் மொழிப்பாடங்கள், வரலாறு, பொருளியல், குடிமையியல் என்று பல்வேறு பாடங்களில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் அண்ணல் அம்பேத்கர் அறிமுகப் படுத்தப்படுகிறார். இது பாராட்டிற்குரியது.

    ஒன்பதாம் வகுப்புப் பொருளியல் பாடப்பகுதியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கீழ்க்கண்டவாறு இடம்பெறுகிறது.

“Dr.B.R.Ambedkar's Ph.D. thesis on 'The Problem of the Rupee - Its origin and solution' was the reference tool and provided guidelines for the Reserve Bank of India Act of 1934”. (page 127)

“டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 'பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்' (The Problem of the rupee and its Solution) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில்தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934 ல் உருவாக்கப்பட்டுள்ளது”. (பக்.142)

   முதல் பருவத்தில் அமர்த்திய சென் நூல்; இப்போது அம்பேத்கரின் ஆய்வேடு. அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முனைவர்  (Ph.D.) பட்டம் பெற்றார். 1923 இல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics) 'The Problem of the Rupee - Its origin and solution'  என்ற ஆய்வேட்டிற்கு D.Sc. (Doctor of Science) பட்டம் பெற்றார். இதைத் தமிழில் ஒரு மாதிரியும் ஆங்கிலத்தில் வேறு மாதிரியும் எழுதப்படுவது ஏன்? 

   “குறைந்த மதிப்புள்ள உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன”. (பக்.141) ஆனால் குறைந்த மதிப்புள்ள உலோகம் எது என்று சொல்லவில்லை. செம்புதான் அது. ஆங்கில வழியில் copper என்று சொல்வதால் பிரச்சினையில்லை. தமிழ் வழியில் செம்புடன் சேர்த்து தாமிரம் என்பதையும் சொல்வது நலம். மேலும் ஒரு உலோகத்தை மட்டும் கொண்டு நாணயம் செய்ய இயலாது. குறிப்பாக தங்கத்துடன் தாமிரத்தைச் சேர்த்து கலவையாக்கி நாணயங்கள் செய்தனர். இவை உலோகக் கலவைகள் என்பதையும் உணர்த்துதல் அவசியம். (எ.கா) பித்தளை (தாமிரம் + துத்தநாகம்), வெண்கலம் (தாமிரம் + வெள்ளீயம்)

   ஷெர்ஷா சூரி, 1545 மே 22 இல் ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான சாந்தலர்களின் கலிஞ்சார் கோட்டை முற்றுகையின்போது ஆயுதக் கிடங்கு தீவிபத்தில் மரணமடைந்தார். ஆனால் ஷெர்ஷா சூரின் பதவிக்காலம் 1540 – 1546 என்று பாடத்தில் உள்ளது (பக். 139) 

  பாடநூல்களில் மொழிபெயர்ப்புக் குளறுபடிகள் நிறைந்திருப்பதற்குப் பாடங்கள் நேரடியாகத் தமிழில் எழுதப்படாததே காரணம். எனவே பாடங்களைத் தமிழில் எழுதுங்கள் என்று பல்லாண்டாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அச்செயல் நடைபெறுவதேயில்லை. தமிழக மாணவர்களில் பெரும்பான்மையினர் தமிழ் வழியில் படிப்பவர்கள். எனவே தமிழில் பாடங்கள் எழுதப்படுவதே அறமாக இருக்கமுடியும். 

   தமிழில் மூலநூல்கள் இல்லை என்பது எடுபடாத வாதம். பள்ளிக் கல்விப் பாடநூல்கள் எழுத தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் அறிந்த, குழந்தைகளுக்கு உகந்த மொழிநடைத் திறன்மிக்கவர்களே தேவை. பேராசியர்கள், ஆசிரியர்கள் பாடங் கற்பிக்கும் பணியைச் செய்யட்டும்.  பேராசியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்குச் சற்று ஓய்வளித்து மொழித்திறன் மிகுந்த எழுத்தாளர்களால் பாடநூல்கள்  எழுதப்படவேண்டும். கல்வியாளர்களும், அரசு, கல்வித்துறை, SCERT போன்றவையும்  இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

                                   (இன்னும் வரும்...)

வியாழன், அக்டோபர் 25, 2018

பார்வைகளை விசாலமாக்குவதும் கற்பிதங்களை அகற்றுவதும் கல்வியின் பணி

பார்வைகளை விசாலமாக்குவதும் கற்பிதங்களை அகற்றுவதும் கல்வியின்  பணி


(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 03
 

மு.சிவகுருநாதன்


 (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல்புவியியல்  - பற்றிய கருத்துகள்.)
      வளங்கள் பற்றிய வழமையான பார்வையில் எவ்வித மாற்றங்களையும் காணமுடிவதில்லை. கீழ்க்கண்ட கூற்றுகள் அவற்றை உறுதிப்படுத்துகின்றன

மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்”, (பக்.157, 6 ஆம் வகுப்பு)

ஒரு பொருளின் பயன்பாட்டினைக் கண்டறிந்த பின்புதான் அப்பொருள் வளமாக மாறுகிறது”, (பக்.158, 6 ஆம் வகுப்பு

உலகில் காணப்படும் உயிருள்ள பொருள்கள் மனிதனால் அடையாளம் காணப்பட்ட பிறகுதான் உயிரியல் வளங்களாக அறியப்பட்டன”, (பக்.160, 6 ஆம் வகுப்பு)

இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனித வளம் என அழைக்கப்படுகிறது”, (பக்.163, 6 ஆம் வகுப்பு)  (தனிநபர் அல்லது குழுக்கள் என்றிருக்கவேண்டும்) 

    மனிதனின் பார்வையில் மட்டும் புவியை, இயற்கையை அணுகியதன் விளைவல்லவா இவை! நமது சிந்தனைகள் இவ்வாறு இருந்தால் வளப்பாதுகாப்பு சாத்தியமே இல்லை. இத்தகைய அணுகுமுறையுடன் நிலையான வளர்ச்சி என்று பேசுவதெல்லாம் வெற்று முழக்கமே.

   “ஒரு பொருளின் பயன்பாட்டினைக் கண்டறிந்த பின்புதான் அப்பொருள் வளம்”, என வரையறை செய்துவிட்டுமறைந்திருக்கும் வளம்”, என்று பேசுவது முரண்தானே!

  இந்தப் பூமியும் இயற்கையும் மனிதனுக்கானவை என்கிற ஒற்றைப் பார்வையில் உருவாகும் வழமையான கருத்தியல்கள், கற்பிதங்கள் மாற்றம் பெறுவது காலத்தின் கட்டாயம். நுகர்வியம் சார்ந்து வளங்களை வரையறுப்பதும் அவை சார்ந்த சொல்லாடல்களும் மாறவேண்டியது அவசியம்

    “காற்று வேகமாக வீசக்கூடிய இடங்கள் இன்னமும்  அடையாளம் காணப்படாமல் உள்ளன”, (பக்.161, 6 ஆம் வகுப்பு)

   “மும்பை ஹை பகுதியில் 20 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன”, (பக்.84, 9 ஆம் வகுப்பு புவியியல்) ஆகிய தரவுகள் இத்தகைய வளங்களை நமது அரசுகள் எவ்வித  அணுகுகின்றன என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. வளங்களை அடையாளம் காணுவதன் பின்னணி அரசியல் மிகவும் வெளிப்படையானது. இந்திய அணுசக்தி முதலீட்டில் சிறுதுளிகூட மரபு சாரா எரிசக்திக்கு செலவிடுவதில்லை என்பதை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்    மனித வளம் குறித்த பார்வையும் மிக மோசமாக உள்ளது. மூளை உழைப்பை உன்னதப்படுத்தியும் உடலுழைப்பை கீழிறக்கும் வேதகாலப் பார்வையில் எவ்வித மாற்றமும் இன்றி இருப்பது கல்வியாகுமா?

   “மனிதன் ஒரு மதிப்புமிகு வளமாக பார்ப்பதற்குக் காரணம் அவனிடம் உள்ள கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும். (.கா.) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்”, (பக்.163, 6 ஆம் வகுப்பு) என்ற கூற்றுக்கு செயல்பாடாக, திருவள்ளுவர், ஐன்ஸ்டின், மேரி கியூரி, போக்குவரத்துக் காவலர், நெல்சன் மண்டேலா, பேருந்து ஓட்டுநர் ஆகிய படங்கள் கொடுக்கப்பட்டு, “சிறப்பு வாய்ந்த மனிதர்களையும் தொழில் சார்ந்த மனிதர்களையும் அடையாளம் காண”, வலியுறுத்தப்படுகிறது

   மனிதவளம் பற்றிய இத்தகைய பார்வைகளின் தாக்கம் என்னவாக இருக்கும்? மனிதர்களை இவ்வாறு பாகுபடுத்துவது ஏன்? அறிவு சிறப்பானது என்றால் உடல்திறன், உழைப்பு இழிவானதா? எதனடிப்படையில் இப்பார்வைகள் உற்பத்தியாகின்றன
 
       நீர்க்கோள’ வரையறையில் இறுதியாக ‘நிலக்கோளம்’ என்று தவறாகச் சுட்டப்படுகிறது. இதைப்போன்ற எழுத்துப்பிழைகள் ஏராளம். “புவியின் மேற்பரப்பில் 97 சதவீத நீரானது கடல்களுக்கு உட்பட்டதாகவும் 3 சதவீதத்திற்கும் குறைவான நீரானது ……………….. காணப்படுகிறது”, (பக்.79) என்றுள்ளது. ஆனால் விளக்கப்படத்தில் 97.5% உவர்நீர் என்று குறிக்கப்பட்டுள்ளது (பக்.80). நன்னீர் 2.5% என்பது இல்லை. பனிமுகடு மற்றும் பனியாறுகள் 79% நிலத்தடிநீர் 20% போக எஞ்சிய 1% குறிக்கப்படவில்லை. இவையிரண்டும் தனித்தனியே உருவாக்கப்பட்டது என்று காரணம் சொல்லாமல் பாடத்திற்கும் படத்திற்குமான வேற்றுமைகள் களையப்படவேண்டும்.   “ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று பின்லாந்து அழைக்கப்படுகிறது”, (பக்.80, 9 ஆம் வகுப்பு) என்று சொல்லிக்கொடுக்கும் நாம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் (முந்தைய செங்கற்பட்டு மாவட்டம்) ‘ஏரி மாவட்டம்என அழைக்கப்பட்டதையும் அங்கு ஆயிரக்கணக்கில் ஏரிகள் இருந்ததையும் அவை சென்னை மாநகர விரிவாக்கத்தால் அழிக்கப்பட்டன என்பதையும் எப்போது உணர, உணர்த்தப் போகிறோம்
                                                                                                                                                                                                                                                                                                
   சுந்தா நிலப்பகுதி’, (பக்.102, 9 ஆம் வகுப்பு) சுண்டா பள்ளம் (பக்.82) சுந்தா அகழி (பக்.93) என்று (sunda land, sunda deep) மாற்றிமாற்றிச் சொல்லாமல் ஒரே சொற்களைப் பயன்படுத்துவது நலம். ‘பள்ளம்என்பதைவிட அகழியே (trench) பொருத்தமானது

   உலகில் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு ‘The Great Barrier Reef’ அறிமுகமாகிறது (பக்.92). இங்கு மன்னார் வளைகுடாவையும் சொல்வது அவசியம். கடற்களஞ்சிய விளக்கப் படத்திலும் சொல்லப்படவில்லை


   “இச்சத்தை ரொட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது”, (பக்.160, 6 ஆம் வகுப்பு) ஈஸ்ட் என்பது ஒரு நுண்ணுயிரி. தாவர வகைப்பாட்டில் பூஞ்சைகள் (காளான்கள்) என்னும் பிரிவில் வைக்கப்படுபவை.  (எத்தினால் அல்ல; எத்தனால்)

   “கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்), இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக 2010 –ல் அறிவிக்கப்பட்டது”, (பக்.92, 9 ஆம் வகுப்பு) கங்கை வாழ் ஓங்கிலை நீர்வாழ் விலங்காக அடையாளப் படுத்தியுள்ளனர்

    “The Ganetic Dolphin was declared the National Aquatic Animal in 2010” (page 80) என்றுதான் ஆங்கில வழியில் உள்ளது. ‘National Aquatic Animal’ என்பது எப்படிகடல்வாழ் உயிரினம்ஆனது என்று தெரியவில்லை. இதுதான் பாடநூல்கள் மொழியாக்கத்தின் நிலை

   நான்கு வகையான நன்னீர் (ஆற்று) ஓங்கில்கள் (டால்பின்கள்) உலகில் காணப்படுகின்றன. அவை கங்கை (இந்தியா), சிந்து (பாகிஸ்தான்), யாங் சி (சீனா), அமேசான் (தென் அமெரிக்கா) ஆகிய ஆறுகளில் காணப்படுவனவாகும். இவற்றில் அமேசான் ஓங்கில்கள் மிகப் பெரியவை. பாகிஸ்தானும் சிந்து ஓங்கிலை தேசிய நீர்வாழ்  விலங்காக அறிவித்துள்ளது.  

    நீர்வாழிடம் நன்னீர் வாழிடம் (fresh water), கடல்நீர் வாழிடம் (marine)  என இரண்டாகப் பிரியும். கங்கை நதியில் வாழும் ஒரு வகை ஓங்கிலை (டால்பின்) நன்னீர் விலங்காகவே வகைப்படுத்த வேண்டும். பிற்காலத்தில் கடல்நீர் உயிரினமாக வேறொன்றை அறிவிக்க நேரலாம்! ரிக்டர் அளவுகோல் என்றால் என்ன? எனக்கேட்ட அறிவியல் தொழிநுட்பத்துறை அமைச்சரைக் கொண்ட நாடு இது! மேலும் வேதங்கள்புரணங்களில்  இருக்கும் உண்மைகளை விண்டுரைக்கும் இவர்களது திறமை அறிவியலில் வசப்பட வாய்ப்பே இல்லை

      ‘ரான் ஆப் கட்ச்பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. (தனி ஆய்வு: பக்.88) இதனுடன் ராணுவ வீரர்களின் இன்னல்கள் பேசப்படுகின்றன. சதுப்புநிலம் என்றால் உவர்நிலம் என்கிற கற்பிதத்தை  முதலில் உடைக்கவேண்டும். சதுப்புநிலங்களில்கூட நன்னீர், உவர்நீர் சதுப்புநிலங்கள் உண்டு. கங்கையின் தராய் நன்னீர் சதுப்புநிலமாகும். ரான் ஆப் கட்ச், சுந்தரவனக்காடுகள், பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையத்திக்காடுகள் (கண்டல்கள்) போன்ற ஆறுகளின் கழிமுகப் பகுதிகளில் காணப்படுவது உவர் சதுப்புநிலங்களாகும். Estuary என்பது பொங்குமுகம், கழிமுகம், முகத்துவாரம்  எனப் பலவாறு  மொழிபெயர்க்கப்படுகிறது

   சதுப்புநிலங்கள், காடுகள், பாலைவனங்கள், பனிமலைகள், கடல்கள் ஆகிய பகுதிகளில் ராணுவத்தினர் படும் சிரமங்களைப் பட்டியலிடும்போது நமக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் உயிர்வாழ முடியாத பகுதி என்று நினைக்கும்  இவ்விடங்களில் பழங்குடி மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வருவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இவை சூழலியல் குறித்த நமது பார்வைகளைச் சற்று விரிவாக்கக்கூடும்

    பழங்குடியினர், மீனவர்கள் போன்றவர்களை அவ்விடங்களை  வீட்டு அப்புறப்படுத்தும் சூழலே இங்குள்ளது. அவர்கள் அங்கு வசிப்பதே பாதுகாப்புக்கும் சூழலியலுக்கும் அச்சுறுத்தல் என்கிற மனநிலை மிக மோசமானது. இப்பகுதிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்க அவர்களை அப்புறப்படுத்துவதுதான் இந்தியாவெங்கும் நடக்கிறது. எல்லைப் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, பாலைவன மேம்பாடு, சதுப்புநிலப் பாதுகாப்பு, ஓதசக்தி உற்பத்தி, இமயமலை (கார்கில், சியாச்சின்) என்று வரும்போது அங்குள்ள பழங்குடியினர், உள்ளூர் மக்கள் திரளைப் பயன்படுத்தாமல் அவர்களை விரட்டியடிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிலை மாறவேண்டும். இவைகளைப் பற்றிக் கற்பிதம் செய்யப்பட்ட நூலறிவைவிட அம்மக்களுக்கு இயற்கை மீதான் அனுபவ அறிவு அதிகம் என்பதை அங்கீகரிக்கும் மனநிலை வேண்டும். கார்கில் ஊடுருவலை இந்திய உளவுத்துறையோ, செயற்கைக் கோள்களோ கண்டுபிடிக்கவில்லை. அங்கு ஆடுகள் மேய்க்கும் பழங்குடியினர் பார்த்துத் தெரிவித்த பிறகுதான் ஊடுருவல் இந்திய ராணுவத்தின் கவனத்திற்கு வந்தது.

    அதைப்போல சுந்தரவனக் காடுகளில் மக்கள் வசிக்க முடியாத பகுதிகளில் அகதிகளாகக் குடியேறி வாழ்ந்த தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்ட மக்கள் (நாமசூத்திரர்கள்)  மேற்குவங்க அரசால் அழித்தொழிக்கப் பட்டனர். (பார்க்க: மரிஜிச்சாபி படுகொலைகள், கருப்புப்பிரதிகள் வெளியீடு) வனப்பாதுகாப்பு, கடற்கரை மேலாண்மை, எல்லைப் பாதுகாப்பு போன்றவை வனவாசிகள், மீனவர்கள், பழங்குடியினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படவேண்டும். ஆனால் அத்தகைய பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்பதே யதார்த்தம்.
    
         மன்னார் வளைகுடாவின் இருப்பிடம்இந்தியாவின் தென்கிழக்குப் பகுதிக்கும் இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கும் இடையே சோழமண்டலக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது”, (பக்.108) என்று படத்தில் குறிக்கப்படுகிறது. தெற்கே கோடியக்கரையில் தொடங்கி வடக்கே கிருஷ்ணா நதியின் கழிமுகம் வரை சோழமண்டலக் கடற்கரை என்பது உள்ளது. சோழமண்டலக் கடற்கரைக்குத் தெற்கே அல்லது கீழே தென் தமிழகக் கடற்கரைப்பகுதியில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது

    அவிசீனியா, ரைசோபோரா போன்றவை உவர் சதுப்புநிலத் தாவரங்களாகும். மாங்குரூவ் என்ற பெயரில் தாவரம் ஏதும் உண்டா? சதுப்புநிலக்காடுகளை ‘mangrove forest’ என்றழைக்கிறோம். இதுவே தாவரமாகிப் போனதோ?

    ஆங்கில மற்றும் தமிழ் வழிப் பாடநூல்களில் விளக்கப்படத்தில் கீழ்க்கண்டவாறு இடம்பெறுகிறது

Flora

    They consist of species belonging to the mangrove, Rhizophora, Avicennia, Bruguiera, Ceriops and Lumnitzera genus. (page 95, IX Std.)

தாவரங்கள்

இப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் மாங்குரூவ், ரைசோபோரா, அவிசேனியா, புருஃவீய்ரா, செரியாப்ஸ் மற்றும் லூம்நிட்ஜெரா ஜெனஸ் (தமிழ் வழி)

Fauna 

     Indo - Pacific bottle nose dolphin, Spinner dolphin, Common dolphin, Melon - headed whale and critically endangered whale species. (page 95, IX Std.)

விலங்குகள்

பாட்டில் மூக்கு, ஸ்பின்னர், பொதுவான டால்பின்கள், மெலன் ஹெட் திமிங்கிலம் மற்றும் அழியும் நிலையில் அருகிவரும் உயிரினங்கள். (தமிழ் வழி)

   இந்த மொழியாக்கங்களை வாசிக்கும்போது நகைப்பிற்கிடமாக இருக்கிறது. ‘Common dolphin’ டால்பின் என்று சொன்னால் போதுமே! பொதுவான டால்பின் என்று சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்க வேண்டுமா? இந்திய - பசுபிக் பகுதிகளில் காணப்படும் பாட்டில் மூக்கு டால்பின், ஸ்பின்னர் டால்பின் (சிறியவகை) ஆகியன இங்கு சொல்லப்படுகிறது.  “இந்திய - பசுபிக் பகுதி” யை தமிழில் காணவில்லை.

     Vizhinjam - விழிஞ்சம் என்பதைவிழிஞ்சியம்’ என்று எழுதக்கூடாது. இதைப்போலவே இனயம்  என்பது இணையம் என்று மாற்றி எழுதுவதும் உண்டு. (அன்னா ஹசாரே ஐ அண்ணா ஹசாரே என்று சொல்வதைப்போல) Hydro turbines – விசைப்பொறி உருளை பொருத்தமாக இல்லை. (பக்.87) Hypsometric curve என்பதை உயரவிளக்கப்படம் என்று சொல்வதேப் போதுமானது. உயரங்காட்டு வளைவு என  பயங்காட்ட வேண்டாம். (பக்.84) 
     
         கேரள மாநிலம் விழிஞ்சம் என்னுமிடத்தில் சுமார் ரூ. 7000 கோடி செலவில் பன்னாட்டுத் துறைமுகத்திட்டம் செயல்படுத்துவது அம்மாநில மக்களின் எதிர்ப்பால் தடைபட்டுள்ளது. அதை தமிழ்நாட்டு கடற்பகுதியான குளச்சலுக்கு அருகே இனயம் (இணையம் அல்ல) என்னுமிடத்திற்கு மாற்ற நடந்த முயற்சியும் தமிழக மக்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது. சேது சமுத்திரம், பன்னாட்டுத் துறைமுகம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தும்போது இப்பகுதிகளில் உள்ள பவளப்பறைகள் வறண்டு, ஆக்சிஜன் குறைந்து கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கமுடியாத பகுதியாக மாறும் அபாயம் உள்ளது. 

    ஆனால் பாடநூல்கள் என்ன சொல்கின்றன? ‘கடல் வளங்களைப் பாதுகாத்தல்’ (பக்.92, 9 ஆம் வகுப்பு) என்னும் தலைப்பின் கீழ் எண்ணெய் வளம், பெருங்கடல் மீன்பிடிப்பு, சுற்றுலா, பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் மூலம் வர்த்தக மேம்பாடு, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஆகியன பேசப்படுகிறது. இவையனைத்துமே கடல்வளம் மற்றும் சூழலியலுக்கு எதிரான செயல்பாடுகள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

   ஒரு உள்ளூர் உதாரணம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் வாஞ்சூரில் (தமிழ்நாட்டு எல்லையான நாகூர் அருகில்) மார்க் (MARG) தனியார் துறைமுகம் 2006 இல் அமைக்கப்பட்டது. வேதியுரங்கள், சிமென்ட் போன்றவற்றை இறக்குமதி செய்வதாக முதலில் சொன்ன இந்நிறுவனம் தற்போது இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை மலைபோல் குவித்து வைத்துள்ளது. இத்துறைமுகம் புதுச்சேரிக்குட்பட்ட காரைக்காலில் இருப்பினும் ஒப்பீட்டளவில் பாதிப்பு தமிழகப் பகுதிகளுக்கே அதிகம். இதைப்போலவே விழிஞ்சம், இனயம் என எந்தப்பகுதியில் துறைமுகம் அமைக்கப்பட்டாலும் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் பாதிப்படையும். 

    இங்கிருந்து கருப்பு மணல் போன்றிருக்கும் நிலக்கரி (சாம்பல்) சரக்குத் தொடர்வண்டிகள், லாரிகள் என இருப்புப்பாதைகள் மற்றும் சாலைகள் வழியே மூடாமல் கொண்டு செல்லப்படுகின்றன. நிலக்கரித்துகள்கள் எங்கும் படிந்து எங்கும் கருமை படர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் சூழலியல், சுகாதாரப் பாதிப்புகள் ஏராளம்.  எண்ணூர் துறைமுகத்தால் வடசென்னைக்கு ஏற்பட்ட நிலை மார்க் துறைமுகத்தால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டப் பகுதிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலைவிட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

    கடலிலும் இதன் பாதிப்பு மிகுதி. காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகள்  உடனடியாகப் பாதிப்படையும். இப்பகுதியிலுள்ள சதுப்புநிலக் காடுகள் (அலையத்திக்காடுகள்) பெருமளவு அழியும். நாகூர் பகுதி மக்கள் இதற்காக பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மக்கள்திரள் மற்றும் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர்.

   ஆர்க்டிக் தூந்திர உணவு வலையில் grasses என்பது புல்வெளி என தமிழ்ப் படுத்தப்படுகிறது. Grasslands தானே புல்வெளிகள்? Grasses புற்கள் என்ற சொல்ல ஏது தடை?  lichen - லிச்சென்களை - பாறைச்செடி என்று சொல்வது சரியா?  (பாறைகள் மீது ஒட்டி வாழும் ஆல்காக்கள் லித்தோஃபைட்கள் எனப்படும்.) லிச்சென்கள் என்பவை  பூஞ்சைகள் ஆல்காக்களுடன் கூட்டுயிரி வாழ்க்கை நடத்தும்  முறையாகும்.  இதில் பூஞ்சைகளும் பாசிகளும் இணைந்து வாழ்கின்றன. இவையே வடதுருவப் பகுதியில் (ஆர்க்டிக்) காணப்படுகின்றன. எனவே இது பாறைச்செடிகள் அல்ல.

      National Institute of Oceanography (NIO) தேசிய கடல்சார் நிறுவனம்’, என்று சொல்லலாமா? ‘தேசியப் பேராழியியல் நிறுவனம்’, என்று சொல்லலாமே! Sea, Ocean  இரண்டையும் கடல் என்றே மாறி மாறி குறிப்பது சரியல்ல

    “There are places on earth that are both biologically rich and deeply threatened”,  (page 94, IX Std.)

     “புவியின் சில பகுதிகளில் அதிக உயிரின வளங்கள் மற்றும் அதிக உயிரினப் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளும் உள்ளன”, (பக்.107)  இப்படித்தான் சொற்றொடர் அமைப்புகள் உள்ளன. எளிமையற்ற மொழியாக்கங்கள் குழந்தைகளையும் பெற்றோர்களையும் ஆங்கில வழிக்குத் துரத்தவேச் செய்யும். கீழே இன்னொரு மொழிபெயர்ப்பு அதிசயம்!

“A person who studies ecology is referred to as an Ecologist”, (page 88, IX Std.)

     “சூழலியல் பற்றிப் படிப்பவர் சூழலியலாளர் (Ecologist) எனப்படுகிறார்”, (பக்.99) study என்னும் சொல்லுக்குத் தமிழில் ஆய்வு என்றும் பொருள் உண்டல்லவா? “person who studies or is an expert in Ecology”, என்று ஆக்ஸ்போர்டு அகராதி சொல்கிறது. “சூழலியல் பற்றி ஆய்வு செய்பவர் அல்லது  வல்லுநர்”, என்பதே பொருத்தமாக இருக்க முடியும்

      சுரங்கத் தொழில்தான் அனைத்துப் பொருளாதாரச் செயல்பாடுகளிலும் முன்னிலை வகிப்பதாக”, (பக்.160, 6 ஆம் வகுப்புசொல்லப்படுகிறது. இதன் பாதிப்புகள், சூழலியல் கேடுகளை விளக்காமல் வளப்பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்பதை  உணரவேண்டும்.

      மேலும் உயிரினப் பன்மை அழிதல், கடல் வளப் பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி ஆகியன பற்றி விளக்கும் போதெல்லாம் மக்கள்தொகைப் பெருக்கம் மட்டுமே காரணமாகச் சுட்டப்படுகிறது. கங்கை மாசுபட்டதில் அதன் கரைகளில் இருக்கும் தொழிற்சாலைகளுக்குப் பங்கில்லையா? மக்கள் பெருக்கத்தின் காரணமாகவே இங்கு தொழிலகங்கள் நிறுவப்படுகின்றனவா? இங்குள்ள கார், தோல், பின்னலாடை போன்ற  தொழில் உற்பத்தியில் உள்நாட்டு நுகர்வு எவ்வளவு? மக்கள்தொகையைக் காரணம் காட்டுவது தப்பிக்கும் போக்கு. இவ்வகை மனநிலை மாற்றம் பெறவேண்டும். இது கல்வியில் நடைபெறவில்லை என்றால் வேறெங்கும் சாத்தியமில்லைஒரு பின் குறிப்பு

     ஒன்பதாம் வகுப்பு குடிமையியல் - மனித உரிமைகள் பாடத்தில் மட்டும் சில திருத்தங்களை SCERT செய்துள்ளது. மலாலா உரையின் விடுபட்ட பகுதி, போக்ஸோ (POCSO), பெண்களுக்கான ஒதுக்கீடு 30%, பழங்குடியினர் ஒதுக்கீடு 1% ஆகியவற்றைத் தவிர எஞ்சியவை பிழைகளாகப் படவில்லை போலும்! அடுத்த ஆண்டில் முழுவதுமாக பிழைகள் களையப்படும் என்று நம்புவோம்.

                                   (இன்னும் வரும்...)