ஞாயிறு, செப்டம்பர் 29, 2019

புதிய பாடநூல்களும் ஆசிரியர்களும்


புதிய பாடநூல்களும் ஆசிரியர்களும்

மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 43)  

      புதிய பாடநூற்கள் மாணவர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைவிட அவை ஆசிரியர்களிடம் எவ்வாறு சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறிவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.      ஆசிரியர்களிடம் தேடல், வாசிப்பு அடியோடு குறைந்து போய்விட்டது. இதற்காக யாரும் வருத்தமடைய வேண்டாம். உண்மை நிலை இதுதான். சரியான ஊதியமில்லாத சாமான்யர்களை வாசிக்கச் செலவளிப்பதைவிட ஆசிரியர்களின் வாசிப்புச் செலவு முற்றிலும் குறைவு. அலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள்தான் அறிவுப்புலம் என்ற மூடநம்பிக்கையும் உருவாகியிருக்கிறது.  

    புதிய பாடநூல்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிக் கருத்தாளர்களை பெரும்பாலான ஆசிரியர்கள் நம்பியிருக்கின்றனர். அவர்கள் வழக்கம்போல எங்களுக்கு எதுவும் சொல்லித் தரவில்லை, கருத்தாளர் பயிற்சிக்கு அழைத்தார்கள் என்று சென்று வந்தோம் என வழக்கமான பல்லவியைப் பாடுவதே வாடிக்கையாகிவிட்டது. இப்போது யாருக்கும் ஆழ்ந்து வாசிக்கவோ, சிந்திக்கவோ நேரமில்லை. யாராவது சுருக்கமாகத் தட்டில் சாப்பாடு போல் எடுத்து வைக்கவேண்டும். எனவே நோட்ஸ்கள், கட்டகங்கள், பாடக்குறிப்புகள், விடைக்குறிப்புகள் என எவற்றையும் யாராவது தயாரித்து அளிக்க வேண்டும். அவை சரியா, தவறா என்றுக்கூட யாரும் யோசிப்பதாகத் தெரியவில்லை. 

    ஆசிரியர்கள் தனிப்பயிற்சி நடத்தக்கூடாது, என்கிற தடையைப் போல இங்கு நோட்ஸ்களுக்குத் தடை போட முடியுமா? முடிந்தால்  பெரும்பாலான ஆசிரியர்களின் கை ஒடிந்துவிடும்! நோட்சையாவது விட்டுத்தள்ளுங்கள்; ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தித் தொலைக்கட்டும். பாடக்குறிப்புகளுக்கு அண்மைக்காலமாக நோட்ஸ்கள் அதிகரித்திருப்பது எதனை உணர்த்துகிறது? இது கல்வியின் பேரவலமல்லவா! 

     புதிய பாடநூல்களை  யாரும் முழுமையாக வாசித்துக் கற்றல், கற்பித்தல் செயல்களில் இன்று ஈடுபட வேண்டிய அவசியமில்லை. பாட நோட்ஸ்கள், பாடக்குறிப்பு நோட்ஸ்கள், விடைக்குறிப்புகள் என தனித்தனியே வந்துவிடுவதால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாடநூலைக்கூடப் படிக்க வேண்டியதில்லை என்கிற நிலைமை வந்துவிட்டது. இது கல்விக்கு உகந்ததல்ல. 

    இதுதான் இன்றைய கள யதார்த்தம். சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு விடைக் குறிப்புகளைக் கொண்டு இதனை நன்கு உணரலாம். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சமூக அறிவியல் பாடம் என்றில்லை; அனைத்துப் பாடங்களுக்கும் இதுதான் நிலை.   

  

     9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத்தேர்வு வினாத்தாளுக்குரிய விடைகளாக சமூக வலைத்தளங்களில் கீழ்க்கண்ட விடைகள் பகிரப்பட்டன. இதைக்கொண்டு தமிழகம் முழுதுமோ அல்லது மாவட்டத்திலோ பலர் திருத்தும் பணிகளை முடித்திருப்பர். பாடநூலில் பிழைகள் இருப்பது ஒருபுறம்; நாம் அதனைத் தொடர்ந்து சுட்டிவருகிறோம். இருக்கின்ற பாடநூலைச் சரியாக வாசித்தாலே விடைக்குறிப்பிலுள்ள பல பிழைகளைக் கடக்க முடியும். என்ன செய்வது? உலகம் அவசரகதியில்  ஓடிக்கொண்டிருக்கிறது? நாம் காலத்திற்கொவ்வாத கருத்துகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்?

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத்தேர்வு ஒன்றின் விடைக்குறிப்புகள்:

சரியான விடையைத் தேர்வு செய்க.

1.A
2.D
3.C
4.B
5.A
6.B
7.A
8.D
9.C
10.C
11.D
12.A
13.D
14.D

29. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.ஹைரோகிளிப்பிக்
2.கீழடுக்கு
3.நேரடி
4.ஜனவரி, 25
5.புது டெல்லி

30. பொருத்துக

1.அச்சூலியன்
2.எகிப்திய அரசர்
3.மொகஞ்சதாரோ
4.கல்வெட்டு குறிப்பு
5.முதல் தீர்த்தங்கரர்

31. பொருத்துக.

1.சிமா
2.பனியாற்றின் செயல்பாடு
3.கடல் செயல்பாடு
4.மழை மறைவு பிரதேசம்
5.ஆஸ்திரேலியா


3. பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன  மனிதனின் நேரடி முன்னோர்  ____________  ஆவர்.

அ) ஹோமோ ஹேபிலிஸ்
ஆ) ஹோமோ எரக்டஸ்
இ) ஹோமோ சேபியன்ஸ்
ஈ) நியாண்டர்தால் மனிதன்    (பக்.14)

         என்ற வினா வரலாறு முதல்பாடத்தில் மூன்றாவது வினா. இதுவே வினாத்தாளில் முதல் வினாவாக இருக்கிறது. முதலில் இந்த வினாவே மிக அபத்தமாக உள்ளது. குரங்கிலிருந்து மனிதன் என்பதைப்போல என்பதைப் போல இதுவும் இருக்கிறது. இம்மாதிரி வினா கேட்பது பொருளற்றது.

  முதலில் பாடநூல் சொல்பவற்றைக் கொஞ்சம் கவனிப்போம்.

    தொல்பழங்காலம்:  ஆஸ்ட்ராலோபித்திஸைனிலிருந்து  ஹோமோ எரக்டஸ் வழியாக  ஹோமோ சேப்பியனின் வளர்ச்சி”  (பக்.03) என்ற தலைப்பின் வழியாக பாடநூல் பல்வேறு கருத்துகளை உரைக்கிறது.

    “மனிதர்களின் மூதாதையர்கள்  ஹோமினின் என்றழைக்கப் படுகின்றனர்.  இவர்களின் தோற்றம் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவினார்கள் என்ற கருத்து அறிஞர்களால் ஏற்கப்பட்டுள்ளது. இந்த ஹோமோனின்கள் இனம் சுமார் 7 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது”, (பக்.03, 04)

    “உடற்கூறு அடிப்படையில் மனித மூதாதையர்கள் பல்வேறு இனங்களாகப் பிரிக்கப்படுகிறார்கள்.

     ஹோமினிட்: நவீன மற்றும் அழிந்து போன  அனைத்து பெருங்குரங்கு இனங்களும் (கிரேட் ஏப்ஸ்) ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன.  இது மனிதர்களையும் உள்ளடக்கிய வகையாகும்.

     ஹோமினின் எனப்படும் விலங்கியல்  பழங்குடி இனம் மனித மூதாதையர்களின்  உறவினர்களையும் அதன் தொடர்புடைய நவீன  மனிதர்களையும் (ஹோமோ சேப்பியன்ஸ்)  குறிக்கும். இதில் நியாண்டர்தால் இனம், ஹோமோ எரக்டஸ், ஹோமோ ஹெபிலிஸ்,  ஆஸ்ட்ரலோபித்திசைன்கள் ஆகியன அடங்கும்.  இப்பழங்குடி இனத்தில் மனித இனம் மட்டுமே இன்றளவும் வாழ்கின்றது. இந்த இனம் நிமிர்ந்து  இரண்டு கால்களால் நடப்பதாகும். இந்த இனத்திற்கு பெரிய மூளை உண்டு. இவை கருவிகளைப் பயன்படுத்தும். இவற்றில் சில  ஆஸ்ட்ரலோபித்திசைன்கள் தகவல் பரிமாறும்  திறன்பெற்றவை. கொரில்லா எனப்படும் மனிதக் குரங்குகள் இப்பழங்குடியில் அடங்காது.

     ஆப்பிரிக்காவில் சுமார் 2.6 மில்லியன்  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ ஹெபிலிஸ் என்ற இனம்தான் முதன்முதலில் கருவிகள்  செய்த மனித மூதாதையர் இனமாகும். சுமார்  2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ  எரக்டஸ் என்ற இனம் உருவானது. இந்த இனம்  கைக்கோடரிகளைச் செய்தது. சுமார் 2 மற்றும் 1  மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் இந்த இனம்  ஆப்பிரிக்கா, ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும்  பரவியது”. (பக். 04)

     “உடற்கூறு ரீதியாக ஹோமோ சேப்பியன்ஸ் என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் சுமார்  3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு  முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர்  இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது. சிம்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி  (பொனபோ) வகை இனங்கள்  நமக்கு நெருக்கமான, தற்போதும்  உயிர்வாழும் உயிரினங்களாகும்.

    தொல்பழங்காலப் பண்பாடுகள் மனித மூதாதையரின் புதைபடிவ  எலும்புகள் ஹோமோ எபிலிஸ், ஹோமோ  எரக்டஸ், நியாண்டர்தாலென்சிஸ் என்று பல்வேறு  இனங்களாகப் பிரிக்கப்படும் அதே சமயத்தில், கற்கருவிகளின் பண்பாடுகள் அடிப்படையில்  தொடக்க கால கற்கருவிகள் சேர்க்கை, ஓல்டோவான் தொழில்நுட்பம், கீழ் (Lower), இடை (Middle), மேல் (Upper) பழங்கற்கால (Palaeolithic)  பண்பாடுகள் என்றும் இடைக்கற்காலப் (Mesolithic)  பண்பாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன”. (பக்.04)

    “தற்காலத்திற்கு சுமார் 3,98,000  ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் கற்கருவித் தொழில்நுட்பத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தக் காலகட்டத்தில் ஹோமோ எரக்டஸ் இனம் வாழ்ந்து வந்தது. உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்கள் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கூறப்படுகிறது”.

     “மனித மூதாதையர்கள்  (ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள்) சுத்தியல்  கற்களை பயன்படுத்தின”,

    “ ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ் ஆகிய மனித மூதாதையர்களின் பண்பாடு கீழ்ப் பழங்காலப் பண்பாடு என்று குறிக்கப்படுகிறது”. (பக்.05)

   “தற்காலத்திற்கு சுமார் 3,98,000  ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் கற்கருவித்  தொழில்நுட்பத்தில் மேலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.  இந்தக் காலகட்டத்தில் ஹோமோ எரக்டஸ் இனம்  வாழ்ந்து வந்தது. உடற்கூறியல் ரீதியாக நவீன  மனிதர்கள் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கூறப்படுகிறது”. (பக்.05)

   தொல்பழங்காலத் தமிழகம் கீழ்ப் பழங்கற்காலப் பண்பாடு ஹோமினின் என அழைக்கப்படும்  மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட கற்காலக் கருவிகளிலேயே காலத்தால் முந்தைய பகுதியைச் சேர்ந்த கற்கருவிகள் தமிழ்நாட்டில்தான்  உருவாக்கப்பட்டன”.

     “கொசஸ்தலையாறு உலகில் மனித மூதாதையர்கள்  வசித்த மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.  இங்கு வாழ்ந்த மனித மூதாதையர்கள் ஹோமோ  எரக்டஸ் என்ற வகையைச் சேர்ந்தவர்கள்”. (பக்.08)


   மனிதப் பரிணாமத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள நான் பரிந்துரைப்பது சு.கி. ஜெயகரன் எழுதிய ‘மூதாதையரைத் தேடி…’ எனும் நூலாகும். (காலச்சுவடு வெளியீடு) இந்நூலில் சொல்லப்பட்ட சில கருத்துகள்:

    ஆஸ்ட்ரேலோபிதஸீன், ஹோமோ ஹெபிலைன், ஹோமோ எரக்டஸ், ஹோமோ ஹெய்டெல்பெர்க்கென்ஸிஸ் ஆகியன தற்கால மனித இனத்தில்  முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.
  
     இராமாபிதஸைன்களைவிட   ஆஸ்ட்ரேலோபிதஸீன் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடையது. ஹோமோ ஹெபிலைன் பரிணாம வளர்ச்சியில் மேம்படாத இனம். இதனுடன் ஒப்பிடும்போது நெருப்பைப் பயன்படுத்தத் தெரிந்த ஹோமோ எரக்டஸ் (நேராக நின்ற மனிதன்) பரிணாம வளர்ச்சியில் ஒருபட உயர்ந்தது. இவற்றைவிட பரிணாமத்தில்  சற்று உயர்ந்த, இறுதிச் சடங்குகள் செய்த  நியாண்டர்தாலினம் வாழ்விடப் போட்டியால் அழிந்திருக்கலாம். மேலும் இனக்கலப்பால் தனது சாயலை இழந்திருக்கலாம். 

நியாண்டர்தால். டெனிஸோவன், ப்ளோரெஸியன்ஸிஸ் ஆகிய இனங்கள் ஒன்றாக வாழ்ந்து, வேட்டையாடியவை; ஈமச்சடங்குகள் செய்தவை; நெருப்பின் பயனை அறிந்தவை. இவைகள் ஹோமோ ஹெய்ட்டெல்பெர்க்கை விட முன்னேறியவை என்பதால் ஹோமோ செபியன்கள் என்று மானிடவிலாளர்கள் அழைக்கின்றனர்.

தற்கால மனித இனத்தின் பெயர் ஹோமோ செபியன்ஸ் செபியன்ஸ் (Homo sapiens sapiens).

      மனிதப் பரிணாமம் மிகவும் சிக்கலான ஒன்று. ஒன்றுடன் ஒன்றுடன் பின்னிப் பிணைந்தது. குரங்கிலிருந்து மனிதன், மனிதனின் நேரடி முன்னோர் என்றெல்லாம் சொல்வது சாத்தியமில்லை. இவற்றில் ஊடுபாவுமாக நிறைய கலப்புகள் உண்டு. பண்புகள், பழக்கவழக்கம் அடிப்படையில் இவற்றை வலை அல்லது சங்கிலிகள் போன்றே இணைத்துக் காட்ட முடியும்.

“8. கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து  இருந்தது

அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம்  சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை”. (பக். 14)

       பாடநூலில் 14 வது வினாவாக இடம்பெற்ற மேற்கண்ட வினா தேர்வில் ஐந்தாவதாக உள்ளது.

“பழங்கற்காலம் 20,00,000 ஆண்டுகள் முன்பு
முதல் கி.மு.  (பொ.ஆ.மு.) 8,000 வரை
கைக்கோடரி, வெட்டுக்கத்தி.
வேட்டையாடுதல்- உணவுசேகரித்தல்

இடைக்கற்காலம் கி.மு. (பொ.ஆ.மு.) 8,000  முதல் கி.மு. (பொ.ஆ.மு.)  1,300 வரை
நுண்கற்கருவிகள் உலோகம் பற்றி இவர்களுக்குத் தெரியாது. 
விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுதல்

புதியகற்காலம் கி.மு. (பொ.ஆ.மு.) 2,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 
1,000 வரை
மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள் நுண்கற்கருவிகள்
விலங்குகளைப் பழக்குதல் பயிரிடுதல் குழுக்களின் பெருக்கம் வேட்டையாடுவோர்- உணவு சேகரிப்போர், மேய்ச்சல் சமூகத்தினர் என இருவிதமான குழுக்களும் ஒரேசமயத்தில் வாழ்ந்தன”. (பக்.10)

    இடைக்கற்காலத்தையும் அதன் முன் பின் காலங்களையும் பாடநூல் அட்டவணை தெளிவாக விளக்குகிறது. எனவே, “ஈ) கூற்றும் காரணமும் தவறானவை”. என்ற விடையே சரி. தமிழகம், நீர்ப்பாசன மேலாண்மை என்றவுடன் ‘சரி’ எனும் முன்முடிவு செயல்படுகிறது. இடைக்கற்காலத்தில் வேளாண்மை இல்லை; வேட்டையாடுதல், கிழங்குகள் சேகரித்தல் போன்ற நிலைதான் சொல்லப்படுகிறது.

   “இந்தியா -------------- மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்”. (பக்.266)

    இந்த வினாவிற்கு பாடநூல் ‘மறைமுக மக்களாட்சி’ என்கிறது. நேரடிக்கு மாற்றாக இவ்வாறு சொல்வது சரியல்ல. ‘பிரதிநிதித்துவ மக்களாட்சி’ என்பதே பொருத்தமானது.

     ஒன்பதாம் வகுப்புப் பாடநூல் வெளியாகி ஓராண்டைக் கட்ந்துவிட்டது. அப்பாடநூலை ஆசிரியர்களே இவ்வாறு எதிர்கொண்டால் மாணவர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பதைச் சொல்வதற்கில்லை. பாடநூலைவிட விரைவாக நோட்ஸ்கள் அச்சாகி வருவதால் அதிலும் பிழைகள் மலிந்துள்ளன. அவற்றையே பலரும் பயன்படுத்துகின்றனர்.

   கடந்த இரண்டாண்டுகளில் எண்ணமுடியாத அளவிற்கு அரசாணைகளையும் சுற்றறிக்கைகளையும் வெளியிட்ட தமிழக அரசும் கல்வித்துறையும் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவமுறையா, அல்லது ஒரு பருவமுறையா என்பதைக்கூட 4 மாதங்களாகச் சொல்லவில்லை. புத்தகங்கள் ஒரே தொகுப்பாக வந்தபோதே புரிந்துகொள்ள வேண்டும் போலும்! அடுத்த கல்வியாண்டில் +1, +2 வகுப்புகளுக்கான 5 பாடமுறைக்கும் அரசாணை வெளியாகிவிட்டபோதும், ஒன்பதாம் வகுப்பிற்கும் ஒரு பருவம், 10 ஆம் வகுப்பிற்குரிய மாதிரி வினாத்தாள் வடிவத்தில் கேள்விகள் இருக்கும் என்று சொல்லத் தடையேது?

   10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் வெளியிட்டபோதாவது சொல்லியிருக்கலாமே! ஏன் சொல்லவில்லை? ஒரே காரணம் ஒன்பதாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள் கிடையாது என்பதே. பல பள்ளிகளில் 10 வகுப்புப் பாடமே 9 ஆம் வகுப்பில் படிக்கின்றனர். அதை இடையூறு செய்யவேண்டாம் என்கிற நல்ல எண்ணமாக இருக்கும்! இதைத் தடுக்கும் எண்ணம் கல்வித்துறைக்குக் கிடையாது. பல ஆண்டுகள் கழித்து ஒன்பதாம் வகுப்புப் பாடங்களைப் படிக்காததால் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று இவ்வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வருவார்கள். இப்போதுள்ள 5, 8, 10, +1, +2 வகுப்புகளுடன் 3, 9 ஆகிய வகுப்புகளுக்கும் விரைவில் பொதுத்தேர்வை எதிர்பார்க்கலாம்.

    இன்னும் சொல்லப்போனால் பொதுத்தேர்வுகளுக்கும் தேர்ச்சியின்மை வழங்குவதற்கும் 90% மேற்பட்ட ஆசிரியர்கள் ஆதரவாகவே உள்ளனர்.  தேர்வு என்னும் ஒற்றைப் பிடியில் தொங்கிக்கொண்டிருக்கும் கல்விக்கு இப்போது விடிவு இல்லை.
 
(இன்னும் வரும்…)

செவ்வாய், செப்டம்பர் 24, 2019

பாடநூல்கள் வேதநூல்களாகும் அவலம்!


பாடநூல்கள் வேதநூல்களாகும் அவலம்!

 மு.சிவகுருநாதன் 

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 42)   


     
           பாடநூல்களில் பல்வேறு பிழைகள் இருக்கிறது என்றால், “குடும்பத்தை விட்டு அல்லும் பகலும் உழைத்தோம், தவறு என்று சொல்ல நீ யார்?”, என்று சண்டைக்கு வருகின்றனர். “இந்தியாவின் ஆட்சிமொழி இந்தியே”, என வம்புக்கு வந்தார் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஒருவர். சென்ற கல்வியாண்டில் (2018-2019) ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்குச் சுற்றறிக்கை மூலம் வெளியிட்ட திருத்தங்கள் கூட திருத்திய பதிப்பு 2019 இல் இல்லை. இவ்வாண்டு 7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்குச் சொல்லப்பட்ட திருத்தங்கள் அடுத்த ஆண்டு பாடநூலில் இருக்கும் என்று சொல்வதற்கில்லை.      கல்வித்துறையில் பிழைத் திருத்தங்களை மாவட்டந்தோறும் ஆசிரியர்களிடம் எழுதிவாங்கும் சடங்கு ஒன்று இருக்கிறது. விழலுக்கு இறைத்த நீராய் இவை குப்பைக்கூடைக்குச் செல்வது உறுதி. சென்ற பாடத்திட்டத்திலும் (சமச்சீர் என்ற சொல்லப்பட்ட) திருத்தங்கள் கேட்டுப் பெறப்பட்டன. அவற்றில் ஒன்றுகூட ஏற்கப்படவில்லை. தந்தை பெரியாரின் பெயரில் இருந்த சாதிப்பட்டத்தை நீக்க பல ஆண்டானது; ஊடகங்களை நாட வேண்டியிருந்தது. இம்முறையும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அப்பணி வழங்கப்பட்டுள்ளது. பணிமுன் பயிற்சியில் யாரும் சேருவதில்லை; பணியிடைப் பயிற்சியும் இல்லை. எனவே அவர்களுக்கு ஏதேனும் பணி வழங்கவேண்டுமல்லவா!   வினாத்தாள் எடுப்பவர்களாவது பகலில் மட்டும் உழைத்து தெளிவான வினாத்தாளை உருவாக்கியிருக்கலாம். என்ன செய்வது? பாடநூல்களே வேதநூல்களாகிவிட்ட பிறகு வேறு வழியில்லை. உயர்சிந்தனை வினாக்கள் (HOT – Higher Order Thinking) கேட்பதற்கும் மாணவனைச் சிந்திக்க வைப்பதற்கும் நாமும் கொஞ்சம் சிந்திக்க வேண்டுமல்லவா! பாடநூலில் இருக்கின்றது என்பதற்காகக் கேட்டு வைப்பதுதான் உயர் சிந்தனையோ என்னவோ?     சமூக ஊடகங்களில் விடைக்குறிப்புகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. யாரும் இதை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. பாடநூலில் வெளிப்படையாக உள்ள பிழைகளைக் கூட ஆசிரியர்கள் கவனிப்பதில்லை. இந்தப்பாடம் நடத்தும் ஒருவர்தானே இவ்வினாத்தாளை தயாரித்திருக்கக் கூடும்?  பாடநூல் இருக்கிறது என்பதற்காக அதை வேதமாக நம்புவதை என்ன சொல்வது? அச்சிட்ட அனைத்தும் உண்மையாகிவிடுமா?     பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் காலாண்டு வினாத்தாளில் பாடநூலில் உள்ள பிழைகளுடன் கூடிய வினாக்கள் அப்படியே கேட்கப்பட்டுள்ளன. பாடநூலில் இடம் பெறும் எவற்றையும் வேதவாக்காகக் கருதும் மனநிலை மிகவும் மோசமானது. பாடநூலில் உள்ள கீழ்க்கண்ட வினா காலாண்டு வினாத்தாளில் இடம் பெற்றுள்ளது. 

“III) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1. i) ராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.
ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
iv) ராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம்  பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

அ) i) சரி
ஆ) i) , ii) ஆகியன சரி
இ) i), ii), iii) ஆகியன சரி
ஈ) i), iii) ஆகியன சரி”, (பக்.88)

 இதில்,  ‘(ஈ) i), iii) ஆகியன சரி’, என்ற விடையைச் சற்றுத் திருத்தி ‘(ஈ) i), iii), iv ஆகியன சரி’ என்று வினாத்தாளில் உள்ளது. வினாத்தாள் வடிவமைத்தவரும் விடைக்குறிப்பு எழுதுபவர்களும் இதை விடையாகத் தீர்மானிக்கின்றனர். உண்மையில் எது சரி?      ராஜா ராம்மோகன் ராய் பற்றிய பாடப்பகுதியில் கீழ்க்கண்ட செய்திகள் இடம்பெறுகின்றன. 

    ராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற  சமயச் சடங்குகளையும்,  கேடுகளை  விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார். இருந்த போதிலும் கடந்த காலத்துடனான தொடர்பை அவர் பாதுகாக்க விரும்பினார்.  தன்னுடைய சமய, தத்துவ சமூகப்பார்வையில் அவர் கோட்பாடு, உருவவழிபாடு எதிர்ப்புஒரு கடவுள்  போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார். 

    உபநிடதங்களுக்குத் தான்கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின், மறைநூல்கள் அனைத்தும் ஒருகடவுள் கோட்பாட்டை அல்லது  ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக்  கூறினார். 

     சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி) குழந்தைத் திருமணம், பலதார மணம்  போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும்  கவலை கொண்ட அவர், அவற்றிற்கு எதிராகச்  சட்டங்கள் இயற்றும்படி ஆங்கில அரசாங்கத்திற்கு  விண்ணப்பித்தார். விதவைப்பெண்கள் மறுமணம்  செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும்  கருத்தை முன்வைத்தார். பலதார மணத்திற்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார். அவருடைய கருத்துகளைப் பழமைவாத இந்துக்கள் எதிர்த்தனர். மக்களைப்பகுத்தறிவோடும், பரிவோடும்,  மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். கல்கத்தாவின் இடுகாடுகளுக்குச் சென்று  விதவைகளின் உறவினர்களிடம் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கைவிடும்படி வேண்டிக்  கேட்டுக்கொண்டார். 1829இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் 'சதி' எனும்  உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம்  இயற்றியதில் ராஜாராம் மோகன் ராய் முக்கிய பங்கு  வகித்தார்”. (பக்.77)

    இதிலிருந்து, “ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்”, என்ற விடை தவறு. அத்துடன், “iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்”, என்ற விடையும் தவறே. எனவே “i), iv ஆகியன சரி’ என்று விடையளிக்க வேண்டும். பாடநூலில் இருப்பதும் வினாத்தாளில் செய்த திருத்தமும் தவறு. 

        அது என்ன சிற்றேடு? சிறு பத்தரிக்கை, சிற்றிதழ் என்பது வேறு; துண்டறிக்கை, துண்டுப் பிரசுரம், சிறு நூல் (tracts) என்பதை இவ்வாறு மொழிபெயர்க்கும் திறமையைப் பாராட்டச் சொற்களில்லை!

   இப்பாடத்தில் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பற்றியும் சொல்லப்படுகிறது.  அவர் தான் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டவர்.

      “ராஜா ராம்மோகன் ராயும்  மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடியபோது  வித்யாசாகர் இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டார். விதவைகளை  எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடைசெய்வதும்  ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறைநூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார். அவர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக்  கொண்ட சிறுநூல்களை வெளியிட்டார். அவர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாவார்”. (பக்.78)

    ஆங்கில வழியில் பின்வருமாறு உள்ளது.

“He published tracts condemning social evils”. (page:78)

“He wrote a number of polemical tracts, and was the pioneer of modern Bengali prose”.  (page: 73)

     புவியியல் பகுதிலுள்ள கீழ்க்கண்ட வரிகளை புவியியல் படித்தவர் அல்லது அறிவியல் மனப்பான்மை உள்ளவர் எழுதியிருப்பார் என்று தோன்றவில்லை. அறிவியல் (வானியல்) நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்றால் பஞ்சாங்கம் பார்க்க வேண்டியதுதானே!

   “பருவக்காலக் காற்றுகள் எளிதில் புரிந்துக்கொள்ள இயலாத ஒரு சிக்கலான நிகழ்வு ஆகும். வானிலை வல்லுநர்கள் பருவக்கால தோற்றத்தைப் பற்றி பல கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர்”. (பக்.111)

      இவையிரண்டு சொற்றொடர்களும் ஒன்றுக்கு ஒன்று முரணானது. இவற்றிற்கிடையே ‘ஆனால்’ அல்லது ‘இருப்பினும்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த வரிகள் அப்படியே கூற்று, காரணம் என வினாவாக கேட்கப்பட்டுள்ளது. இந்த முரணடிப்படையில் விடைகளிலும் முரண் தோன்றுவது இயல்பு. பாடநூல் வரிகளுக்கிடையே விடைகளைத் தேடுவது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

   “கீழ்க்காணும் வாக்கியங்களைக்  கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில்  சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

கூற்று: (A) பருவக் காற்றுகள் எளிதில் புரிந்துகொள்ள இயலாத வானிலை நிகழ்வாகும்.

காரணம்: (R) வானிலை வல்லுநர்கள்  பருவக்காற்றின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு  கருத்துக்களைக் கூறியுள்ளனர்.


அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி”.  (பக்.121)
 
    பாடநூலில் இருகின்ற ஒரே காரணத்திற்காக “அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி”, என்பதை எப்படி விடையாகக் கொள்ள முடியும்? “எளிதில் புரிந்துக்கொள்ள இயலாத ஒரு சிக்கலான நிகழ்வை”, பற்றி எப்படி கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அறிவியலில் இந்தப் பிரமிப்புகள் எதற்கு?


     சென்ற பாடத்திட்டத்திலும் புதிய பாடத்திட்டத்திலும் சமூக இயக்கங்களைப் புறந்தள்ளி, சமய இயக்கங்களுக்கு மட்டுமே முன்னுரிமையும் அதிக பக்கங்களும் ஒதுக்குவது வாடிக்கையாகிவிட்டது. வினா கேட்பதிலும் பாரபட்சம் தொடர்கிறது.

   தலைப்பு வினாவிலும் ராஜா ராம்மோகன் ராய் தான்.  

    “சுவாமி தயானந்தர் பின்னர் தனது கருத்துகளைப் போதிப்பதற்காகப் பஞ்சாபில்  தங்கினார். அவருடைய நூலான ‘சத்யார்த்தபிரகாஷ்’  பெரும்பாலோரால் படிக்கப்பட்டது. குழந்தைத் திருமணம், விதவை மறுமணத்திற்கு மறுப்பு  போன்ற பழக்கங்களும் அயல்நாடு சென்றால்  தீட்டு என்று சொல்லப்படுதலும் மறைநூல்களால்  ஏற்றுக் கொள்ளப்படவில்லை என அறிவித்தார்.  அவர் முன்வைத்த நேர்மறையான கொள்கைகள் கட்டுப்பாடான ஒருகடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல், பிராமணர் மேலாதிக்கம்  செலுத்தும் சடங்குகள், சமூகநடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல் என்பனவாகும். ஆரியசமாஜம்  இந்துமதத்திலிருந்த மூடநம்பிக்கைகளைக்  குறிப்பாகப் புராண இலக்கியங்களை மறுத்தது.  அதனுடைய முழக்கம் ‘வேதங்களுக்குத் திரும்புவோம்’ என்பதாகும். ஆரியசமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த மதமாற்ற  நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை  மேற்கொண்டது. அதன் முக்கியக் குறிக்கோள் ‘எதிர்மத மாற்றம் என்பதாகும்.’ ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிறித்தவ மதத்திற்கும் மாறிய இந்துக்களை மீண்டும்  இந்துக்களாகமாற்ற ‘சுத்தி (Suddhi)’ எனும் சுத்திகரிப்புச்  சடங்கை சமாஜம் வகுத்துக்கொடுத்தது.  (பக்.79)


   “சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல் -------------------------------- நேர்மறைக் கொள்கைகளைப் பட்டியலிடுகிறது”. (பக்.88)

(அ) ராஜா ராம்மோகன் ராய், பிரம்ம சமாஜம்
(ஆ) மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்
(இ) கேசவ் சந்திர சென்னும் இந்தியாவின் பிரம்ம சமாஜமும்
(ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
(உ) பிரார்த்தனை சமாஜம் (ஆத்மராம் பாண்டுரங், எம்.ஜி.ரானடே)

           இவர்களனைவரும் உயர்த்தப்பட்ட சாதியினரிடம் (அதாவது இரு பிறப்பாளர்கள் என்று தங்களை உயர்த்திக் கொண்ட) சில சீர்திருத்தங்களைப் பேசியவர்கள். இவர்கள் வேத மதம் (இந்து மதம்), வேதங்கள், வருணமுறை, வைதீகக் கோட்பாடுகள் போன்ற எதனையும் கேள்விக்குட்படுத்தவில்லை. இந்நிலையில்  சுவாமி தயானந்த சரஸ்வதி நேர்மறைக் கொள்கைகளை வலியுறுத்தியச் சொல்வது அபத்தம். இருபிறப்பாளர் அல்லாத சூத்திரர்களும் தலித்களும் வைதீக வேத சமயத்தில் ‘தீட்டாக’ இருக்கும்போது, இஸ்லாம், கிறித்தவம் போன்ற பிற மதங்களைத் தழுவியவர்களை ‘சுத்திச் சடங்கு’ மூலம் மீண்டும் இந்துவாக்கும் முறைகளைக் கையாண்ட ஒருவருக்கு இவ்வளவு விளம்பரம் தேவையில்லை. அடுத்தபடியாக இராமகிருஷ்ண பரமஹம்சர், ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தர் பற்றி மட்டுமே வினாக்கள் கேட்பார்கள்.

    “சுவாமி தயானந்த சரஸ்வதி முன்வைத்த நேர்மறையான  கொள்கைகள் யாவை?”, (வினா எண்:18) பாடநூலில் இல்லாத வினா ஒன்றும் கேட்கப்படுகிறது. வள்ளலார், அயோத்திதாசர், ஜோதிபா புலே, நாரயண குரு, அய்யன் காளி, வைகுண்டசாமி  போன்ற சமூகச் சிந்தனையாளர்களை தேர்வுகளிலும் கண்டு கொள்ளாமலிருப்பது ஏன்?

   “உலக வர்த்த அமைப்பு ஒப்பந்தம் -------------- இருந்து அமுலுக்கு வந்தது” (பக்.253) என்ற பாடநூலில் இருக்கும் வினா வடிவம். இதன் பதில் ஜனவரி 01, 1995. இதை,   “உலக வர்த்த ஒப்பந்தம் -------------- ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது” (வினா எண்: 42 இல் v) கேட்டுள்ளனர். எனவே ‘1995’ என்று ஆண்டை மட்டும் எழுதினால் போதுமானது. நம்ம பாடநூல் வேதிகள் (சதுர்வேதி மாதிரி இதுவும் ஒண்ணு)  ‘ஜனவரி 01, 1995’ என்றே விடை குறிக்கின்றனர்.

    உலக வர்த்தக அமைப்பு நியாயமானது, அதன் நியாயமானக் கோட்பாடுகள் என்பதெல்லாம் யாருக்காக, எதற்காகச் சொல்லப்படுகின்றன? பாடநூலிலும் வினாவிலும் (எண்:40) இம்மாதிரி அபத்த வினாக்கள் நிறைய உண்டு. நியாயவான்களால் ஏன் ‘எதிர்மறைத் தாக்கம்’ (பக்.251) ஏற்படுகிறது?

    இந்திய வரைபடத்தில் ‘வண்டல் மண் அதிகம் காணப்படும் பகுதிகளில்’ ஆற்றுச் சமவெளிகள் எதையும் குறிக்கலாம். அதைப்போல ‘அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்’ என்பதில் கேரளாவை மட்டும் குறிக்க வேண்டிய அவசியமில்லை. முதலிடம் என்று வினவவில்லை. எனவே தமிழ்நாடு, கோவா, மிஜோரம் என்று வேறு மாநிலங்களையும் குறிக்கலாம். பாடநூலை வேதமாக்கி மதிப்பெண்களுக்கு தடை போட வேண்டாம்.

     காற்றாலை என்றாலே குஜராத் மாநிலத்தை முன்னிறுத்தும் போக்கு உள்ளது (பக்.161, பொருத்துக) இதில் ‘தேசிய அனல் மின் நிறுவனத்தை’ (NTPC) ‘தேசிய அனல் மின் நிலையம்’, என்கிறார்கள். பாடத்தில் சொல்லப்படுவது மாங்கனீசு. ஆனால் வினா, “மெக்னீசியத்தின் பயன்களைக் குறிப்பிடுக” என்றுள்ளது. (பக்.161)

“IV) சரியான கூற்றினைத் தேர்வு செய்க.

(i) இந்தியாவில் சில மாநிலங்கள் மட்டும் சட்ட மேலவையைப் பெற்றுள்ளன.
(ii) மேலவையின் சில உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
(iii) மேலவையின் சில உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

(அ) ii & iv சரி.
(ஆ) iii & iv சரி.
(இ) i & iv சரி.
(ஈ) I, ii & iii சரி.

(iv) விடை - பாடநூலில் கொடுக்கப்படவில்லை.

    இதற்கு விடை என்ன என்று நீங்களே கண்டுபிடியுங்கள்!

   இதைப்போல பாடநூல் வினாக்களில் பல பிழைகள் உண்டு. வினாத்தாள் தயாரிக்கும்போது இவற்றைக் கணக்கில் கொண்டால் நல்லது.
   பத்தாம் வகுப்பில் மட்டுமில்லை; எல்லா வகுப்பிலும் இதே நிலைமைதான். ஏழாம் வகுப்பு வினாவில்,

“-------------- களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது”,

(அ)  சோழர்  (ஆ)  பாண்டியர்  (இ)  ராஜபுத்திரர்  (ஈ)  விஜயநகர அரசர்கள்”,  (வினா எண்.01)

     பாடநூல் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என்று பல இடங்களில் சொல்வதில்லை. இதனால் கால மயக்கம் ஏற்படலாம். அதனாலென்ன சோழப்பெருமைகளில் மூழ்கிவிட்டால் போதாதா?

   எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில், 2.8%,  28% ஆன கதை ஒன்று உள்ளது. அதுவே பருவத்தேர்விலும் எதிரொலிக்கிறது.

“புவியில் உள்ள நன்னீரின் சதவீதம் -------------.
(அ) 71% (ஆ)  97% (இ)  28%  (ஈ)  0.6%”, (வினா எண்: 03, முதல் பருவத்தேர்வு)

    இதே வினா பாடநூலின் 229 ஆம் பக்கத்தில் உள்ளது. இதற்கு விடை 2.8% ஆகும். அதுவே பாடநூலிலும் வினாத்தாளிலும் 28% ஆகியுள்ளது.

    இதைப் பார்க்கும்போது 1.6%,  16% ஆன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. இது கொஞ்சம் பழைய கதை. பசுமைப் புரட்சிக்கென வீரியரக கோதுமை ரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் புரதச்சத்து 16% எனச்சொல்லி பரிசு, விருது எனப் பெரும்புகழ் பெற்ற பிறகு அதிலுள்ள புரதம் 1.6% தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு தனக்கு கீழ் பணிபுரிந்த இளம் விஞ்ஞானிகள் இருவர் காரணம் என்று சொல்லி சமாளிக்கப்பட்டது. அவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அந்த நபர் கிடைத்த புகழ், விருதுகள், பட்டங்கள் மத்தியில்  இவை புதைக்கப்பட்டன. அவர் வேறு யாருமல்ல; எம்.எஸ். சுவாமிநாதன் தான்! (பார்க்க: அழிவின் தத்துவம் – வேர்கள் வெளியீடு, கீழை மார்க்சியம்: வரலாறு-அரசியல்-மெய்யியல் - காவ்யா வெளியீடு – மார்க்சிய அறிஞர் எஸ்.என். நாகராஜன்.)

(இன்னும் வரும்…)