ஞாயிறு, ஜனவரி 26, 2020

தமிழகப் பள்ளிக்கல்வி அவலங்கள்: பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் குளறுபடிகள்


தமிழகப் பள்ளிக்கல்வி அவலங்கள்: பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் குளறுபடிகள்


மு.சிவகுருநாதன்





     தமிழகப் பள்ளிக்கல்வியின் இன்றைய நிலை மிக மோசமாக உள்ளது. இத்துறை யாரால் வழிநடத்தப்படுகிறது என்பதும் இது எங்கே போய் முடியும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. நாள்தோறும் முன்னுக்குப்பின் முரணான அறிவிப்புகள், பின்வாங்கல்கள் என சறுக்கல்கள் தொடர்கின்றன. கல்வியில் சிறந்த தமிழ்நாட்டின் நிலை ஏனிப்படி ஆனது?

    5, 8 வகுப்புகளுக்குப் பொதுதேர்வு எனும் பாசிச ஆயுதம் கைகளில் எடுக்கப்பட்டுள்ளது. ‘இஸ்ரோ’ கஸ்தூரிரெங்கன்களை விட தமிழக அரசு விரைவாகச் செயல்படுவது கொஞ்சம் விநோதம். அடுத்த ஆண்டில் மூன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடக்கும்!

    அடித்தட்டு  ஏழைக்குழந்தைகளை பொதுத்தேர்வு என்று வடிகட்டி வீட்டிற்கும் வேலைகளுக்கும் குழந்தைத் திருமணப் படுகுழிக்குள்ளும் தள்ளும் உத்தி இது; நவீன குலக்கல்வித்திட்டம். +1, +2 வகுப்புகளுக்கு 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு வழங்கியுள்ளவர்கள் பத்தாம் வகுப்பிற்கு அவற்றை வழங்க மறுப்பதன் பின்னணியும் இதுவே. 

   இந்தப் பொதுத்தேர்வுகளுக்கு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடுவது என்கிற அபத்தக்கூத்துகளை தேர்வுத்துறை அரங்கேற்றி வருகிறது. 10 ஆம் வகுப்பு சமூக அறிவியலுக்கு 03.08.2019 இல் அலுவலர்கள் சுருக்கொப்பத்துடன் மாதிரி வினாத்தாள் ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் 


  • பகுதி I: வரிசை எண்கள்: 1-14, சரியான விடைகளைத் தேர்வு செய்க. (14X1=14)
  • பகுதி II:  வரிசை எண்கள்: 15-28, இரண்டு மதிப்பெண் வினாக்கள் (10X2=20)
  • (இவற்றில் 14 இல் 10 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். வினா எண் 28 கட்டாய வினா - புவியியல்.)
  • பகுதி III: வரிசை எண்கள்: 29-42, 5 மதிப்பெண்கள் வினாக்கள் (10X5=50)
  • (இவற்றில் நிரப்புக, வரலாறு - புவியியல் பொருத்துக, வேறுபடுத்துக – காரணம் கூறுக, காலக்கோடு, வரலாறு - உலகப்படத்தில் குறித்தல், 8 விரிவான விடை தருக ஆகியன இடம்பெற்றது. வினா எண்: 42  உலக நிலவரைபட வினா கட்டாயமானது.)
  • பகுதி IV: வரிசை எண்: 43, இரண்டு இணை தலைப்பு வினாக்கள் (4+4=8)
  • இவற்றில் ஒரு இணைக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும்.
  •  வரிசை எண்: 44, புவியியல் நிலவரைபடம்: 8 இடங்கள்:  இந்தியா அல்லது தமிழ்நாடு (8X1=8)


    இதன்படி காலாண்டுப் பொதுத்தேர்வு 2019 நடந்தேறியது. இதுதான் வினாத்தாள் மாதிரி என அரையாண்டு மற்றும் பொதுத்தேர்விற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வந்தனர். 



  ஒரு வழியாக அரையாண்டுப் பொதுத்தேர்வும் வந்தது. மாணவர்களுக்குப் பேரிடியாக விழுந்தது வினாத்தாள் மாற்றம். வரலாறு, புவியியல் பொருத்துக 10 மதிப்பெண்களை மாற்றி (இவை ஒரு வகையில் ஒரு மதிப்பெண் வினாக்கள். இவற்றை ஐந்தை ஒன்றாக்கி 5 மதிப்பெண் வினாவாக மாற்றிருந்தனர்.) விரிவான விடை எழுதும் வினாவாக மாற்றி விட்டனர். எவ்வித காரணமோ, முன்னறிவிப்போ இல்லை.

   தலைப்பு வினாக்களுக்குப் பதிலாக 8 மதிப்பெண் வினா என்ற, பாடநூலில் இல்லாத ஒன்றை நுழைத்தனர். 10 அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்கப்படாத பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 18 மதிப்பெண்கள் இழப்பு. எனவே இத்தேர்வில் பலர் 35 மதிப்பெண்கள் பெற இயலாது தோல்வியுற்றனர். 

    கல்வியில் அனைத்தும் விலையில்லாத (இலவசம்) பொருளாகிவிட்ட நிலையில் இந்தத் தேர்வுகளுக்கு மட்டும் கட்டண வசூல் உண்டு. இதைத்தான் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்பார்கள் போலும்!  

   18 மதிப்பெண்கள் மட்டுமல்ல; 28 புவியியல் கட்டாய வினா வரலாறாக மாற்றம் பெற்றது. வரலாறு உலக நிலவரைபடம் ‘இந்தியா’வாக மாறியது. புவியியல் தமிழ்நாடு நிலவரைபடமும் இந்தியாவாகிப் போனது. இதனால் ஏற்பட்ட மதிப்பெண் இழப்பு 15; ஆக மொத்தம் 33 மதிப்பெண்களை மாணவர்கள் இழக்கின்றனர். ஏனிந்த விபரீத விளையாட்டு? கல்வித்துறை அறிவுப்பூர்வமாகச் செயல்படுவது எப்போது? 

   இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு கணம் கலங்கித்தான் போயினர். அவர்களுக்கு முடிந்த அளவில் ஆங்காங்கு அழுது புலம்பியும் கல்வித்துறை, தேர்வுத்துறை என கோரிக்கைகளைக் கொண்டு சேர்த்தனர். வழக்கம்போல இடிமேல் இடிதான் விழுந்தது. அரையாண்டுப் பொதுத்தேர்வு மாதிரிதான் இனி எல்லாப் பாடங்களுக்கும் வினாத்தாள் இருக்கும். பெற்றோர் ஆசிரியர் கழக மாதிரி வினாத்தாள்கள் கூட வேறு மாதிரியாக இருக்கலாம்; அதைக் கண்டுகொள்ள வேண்டாம். அரையாண்டுப் பொதுத்தேர்வு மாதிரிதான் வினாத்தாள் இருக்கும் என்பதை எங்கும் பரப்புங்கள், என்கிற பதில்தான் எங்கும் கிடைத்தது. 

   திருப்புதல் தேர்வு, பொதுத்தேர்வு ஆகியவற்றில் சமூக அறிவியல் வினாத்தாள் எவ்வாறு இருக்கும் என்ற பெரும் பயம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தொற்றிக்கொண்டது. அரையாண்டுப் பொதுத்தேர்வில் மாநிலம் முழுதும் ஒரே வினாத்தாள் என்பது வடிகட்டிய பொய் என்பது பின்னர்தான் தெரியவந்தது. பல்வேறு ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் பகிரப்பட்ட வினாத்தாள்கள் கிடைத்தன. பொருத்துக, தலைப்பு வினாக்கள் கேட்கப்பட்ட, கேட்கப்படாத வினாத்தாள்கள் இருந்தன. இருப்பினும் பொறுப்பான அதிகாரிகள் இன்றுவரை எவ்வித விளக்கத்தையும் அளிக்க முன்வரவில்லை. 

    இதனிடையே 5, 8 வகுப்புகளுக்கும்  பொதுதேர்வு மாதிரி வினா வெளியாகியுள்ளது. சமூக அறிவியல் பாடத்தில் மதிப்பெண்களைக் கூட்டினால் 62 வருகிறது. பிறகு கேள்விகளைச் சரிபார்க்கும்போது (12X1=12)  என்பது (14X1=14) ஆக உருமாறியுள்ளது. தமிழ்ப் பாடத்தில் 74 மதிப்பெண்கள் வருகின்றன. எல்லாம் வெட்டி ஓட்டுவதால் வந்த வினை!  சமூக அறிவியலில் 5 மதிப்பெண்கள் விரிவான விடை எழுதுக வினாவைக் கேட்டு, அதற்கு 3 மதிப்பெண்கள் அளிக்கும் அபத்தத்தை என்னவென்பது? 

       இந்நிலையில் முதல் திருப்புதல் பொதுத்தேர்வு 2020 சமூக அறிவியல் ஜனவரி 25, 2020 அன்று நடைபெற்றது. காலாண்டுக்கு முன்னதாக வெளியான மாதிரி வினாத்தாளை ஓரளவு ஒட்டி இது வெளியாகியுள்ளது. இதில் பொருத்துக  (5X2=10), தலைப்பு வினா (4+4=8), புவியியல் நிலவரைபடத்தில் இந்தியா அல்லது தமிழ்நாடு ஆகியன இடம்பெற்றுள்ளன. கூடுதலாக வரலாறு நிலவரைபடத்தில் உலகம் அல்லது இந்தியா கேட்கப்படுகிறது. இதுவே சரியானதாக இருக்கும். இதுதான் உறுதியான பொதுத்தேர்வு வடிவம் என்ற உத்திரவாதம் எப்போது கிடைக்கும் என்பதுதான் இன்றைய அவலம். பொதுத்தேர்வுகள் முடிவதற்குள்ளாக இதை வெளிப்படையாக அறிவிப்பது அவசியம். கல்வித்துறையும் தேர்வுத்துறையும் விழித்துக்கொள்ளுமா? அல்லது குழந்தைகளின் வாழ்வில், எதிர்காலத்தின் மீது விளையாடுமா? ஒரே ஆண்டில் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு என அனைத்திலும் வெவ்வேறு வடிவங்களில் வினாத்தாள்களை வெளியிட்டு இதுவே பொதுத்தேர்வு மாதிரி என அடம்பிடிப்பதில் என்ன பெருமை இருக்கிறது? கல்விக்கும் அறிவிற்கும் தொடர்பில்லாமல் போனது ஏன்?

    28 வது கட்டாய வினா இம்முறை பொருளியலுக்குச் சென்றுள்ளது. அதைப்போல புவியியல் பொருத்துக வினாவும் பொருளியலுக்குச் சென்றுள்ளது. வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல் பகுதிகளுக்கான மதிப்பெண் பங்கீடு பற்றி ஏதும் தெரியவில்லை. ஒரே பாடத்தில் இருக்கும் பொருத்துக வினாவை அப்படியே கேட்பது பொதுவாக வழக்கமில்லை. ஆனால் இம்முறை வரலாறு அலகு 2 ‘இரு உலகப்போர்களுக்கு இடையே உலகம்’ (தொகுதி:1, பக்.37) பாடத்திலிருந்தும், குடிமையியல் அலகு 4 ‘ இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை’ (தொகுதி:2, பக்.167) பாடத்திலிருந்தும் பொருத்துக தமிழ்ப்பாடத்தின் மனப்பாடப்பகுதியைப் போல அடிபிறழாமல் கேட்டுள்ளனர்.  
 
   உலகப்படத்தில் டார்டனல்ஸ், டெனன்பர்க் ஆகியவற்றைக் குறிக்கச் சொல்வது உலகப்படத்தில் திருவாரூரைக் குறிக்கச் சொல்வதைப்போல. மேலும் இது அறிவுப்பூர்வமாகவும் தெரியவில்லை. இவற்றை அய்ரோப்பா வரைபடத்தில்கூட குறிப்பது சிரமம்.  பாடநூலில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக உலகப்படத்தில் ஹிரோஷிமா, நாகசாகி (தொகுதி 1, பக்.54) ஆகியவற்றைக் குறிக்குச் சொல்வது அறிவீனம். இதிலிருந்து மாணவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது விளங்கவில்லை.  தமிழ்நாடு வரைபடத்தில் சோழமண்டலக் கடற்கரையை எவ்வாறு முழுவதுமாகக் குறிக்க முடியும்? பாடநூலின் வரைபடத்தில் சோழமண்டலக் கடற்கரை கோடியக்கரை – பழவேற்காடு வரையிலானதாக சுட்டப்படுகிறது. விளக்கத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நீண்டுள்ளதாக  மிகத் தவறாகச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணா நதியின் வழிமுகம் வரை நீண்டது சோழமண்டலக் கடற்கரை.  

   மாணவர்கள் 100 க்கு 100 எடுக்கவிடாமல் தடுப்பதற்காக பாடநூல் வினாக்கள் தவிர்த்து, ஒன்றிரண்டு புதிய வினாக்கள்  கேட்கின்றனர். அந்த வகையில் 7 வது வினா, 

கீழ்க்கண்ட வாக்கியங்களில்  சரியானவற்றை தேர்ந்தெடு.

(a) பூகி மற்றும் அசாமிகா காப்பியின் வகைகள் ஆகும்.
(b) அராபிகா மற்றும் ரொபஸ்டா தேயிலையின் வகைகள் ஆகும்.
(c) மஞ்சள் புரட்சி என்பது முட்டை மற்றும் கோழிகளின் உற்பத்தியைக் குறிக்கும்.
(d) வெள்ளி இழைப் புரட்சி என்பது பருத்தி உற்பத்தியைக் குறிக்கும்.

   மேற்கண்ட வினாவிற்கு விடைக்குறிப்புகள் அதாவது மாற்று விடைகள் இல்லை. அத்துடன் இவற்றில் ஒன்று மட்டுமே சரியானது. கேள்வியின் பன்மைக்கு (சரியானவற்றை) இடமேது? 

   எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி வினாத்தாளில் 

“I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து அதன்  குறியீட்டுடன்  விடையினையும்  எழுதுக”, என்ற வகையில் முதல் வினா, 

“1.   பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு ………”, இவ்வினாவிற்கும் விடைக்குறிப்புகள் அல்லது மாற்று விடைகள் இல்லை.

    அவர்கள் சொன்னபடி பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) மாதிரி வினாத்தாளும் வந்துள்ளது. கண்டுகொள்ளாமலிருக்கும் ஒன்றுக்கு ஏனிந்த தெண்டச் செலவு என்று யாராவது யோசித்தார்களா? அரசின் பாடநூல்களை சென்னைப் புத்தகக் காட்சியில் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியதன் பின்னணியிலும் தமிழகக் கல்வியின் அவலம் அடங்கியிருக்கிறது.

    PTA மாதிரி வினா வங்கியில் ஐந்து சமூக அறிவியல் வினாத்தாள்கள் உள்ளன. அவை வெவ்வேறு மாதிரியாக உள்ளன. ‘நோட்ஸ்கள்’ வெளியிடுபவர்களைவிட மோசமாக அரசுத்துறையும் அவை சார்ந்த அமைப்பும் இவ்வாறு மாணவர்களையும் ஆசிரியர்களையும் குழப்பும் வினாத்தாள்களை வெளியிடும் அதிகாரங்களை எப்படி பெற்றனர்? இதற்கு மாதிரி வினாத்தாளை வெளியிடாமலே இருக்கலாமல்லவா! 

   இந்த 5 மாதிரி வினாத்தாள்களின் பொதுவான மற்றும் வேறுபடும் கூறுகள் சில:


  •  ‘சரியான விடையைத் தேர்வு செய்க’ வினாவில் மாற்றமில்லை.
  • 28 வது 2 மதிப்பெண் கட்டாய வினா புவியியலிருந்து கேட்கப்படுகிறது.
  • விரிவான விடையளிக்கும் வினாக்கள் 10. இத்துடன் நிரப்புக அல்லது பொருத்துக, காலக்கோடு, வேறுபடுத்துக & காரணம் கூறுக, உலகம் அல்லது இந்திய நிலவரைபடம் என மொத்தம் 14 வினாக்கள்.
  • ஒன்றில் நிரப்புக மற்றொன்றில் பொருத்துக என மாறி மாறி கொடுக்கப்பட்டது.
  • 2 பொருத்துக வினா இல்லை.
  • 8 மதிப்பெண் வினா உண்டு; தலைப்பு வினா இல்லை.
  • வரலாறு நிலவரைபடத்தில் உலகம், இந்தியா ஆகியவற்றில் ஒன்று மட்டும் கேட்கப்படுகிறது. 
  • புவியியல் நிலவரைபடத்தில் இந்தியா அல்லது தமிழ்நாடு.  


    தமிழ்நாடு படத்தில் அரபிக்கடலைக் குறிக்கச்சொல்லும் அபத்தம் என்று மாறுமோ என்று தெரியவில்லை. ‘Road route connecting Chennai to Bangaluru’ என்பது ‘சென்னை – பெங்களூரு இணைக்கும் தங்க நாற்கரச் சாலை’ என ஆனது எவ்விதம்?  

   பாடத்திட்டம் வடிவமைப்போர், பாடநூல் எழுதுவோர், வினாத்தாள் எடுப்பவர் என எவரும் குறிப்பிட்ட வகுப்பிற்குத் தொடர்பற்றவர்கள். இவர்களுடைய அறிவும் அதிகாரங்களும் நிரம்பி வழியும்போது இவ்வாறு அபத்தங்களை நிறைக்கவே செய்யும்.

   சமூக அறிவியல் பாடத்திற்கு வாரம் ஐந்து பாடவேளை என பல்வேறு நெருக்கடிகள். வரும் கல்வியாண்டு (2020-2021) முதல் +1, +2 வகுப்புகளுக்கு 5 அல்லது 6 பாடமுறைகள் (core) அறிமுகமாக உள்ளன. கிராமப்புறப் பள்ளிகளில் இனி கணிதவியல் என்ற பாடமே இருக்காது. அதைப்போல ஏதேனும் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து 10 ஆம் வகுப்பில் சமூக அறிவியல் பாடத்தையே ஒழித்துவிடலாம். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பதைவிட இது மேலானது.