செவ்வாய், ஜூன் 30, 2015

குடும்பத்திற்காக வாழ்ந்து அன்பில் கரைந்தவர்



குடும்பத்திற்காக வாழ்ந்து அன்பில் கரைந்தவர்
                                 
                                - மு.சிவகுருநாதன்

(இன்று (30.06.2015) எங்களுடைய  அம்மா திருமதி மு.சாரதா அவர்களுக்கு 75 வது பிறந்த நாள் பவளவிழா. அதற்காக இப்பதிவு.)
  
   1940 இதே நாளில் பிறந்த அவர் தனது 6 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கவும் தனக்கு உதவியாக இருந்த எங்களது அத்தைகள், தாத்தா, பாட்டி போன்ற பலரை இறுதிக்காலத்தில் பராமரிக்கவும் தனது பல்வேறு உடல் உபாதைகளுடன் வாழ்க்கையைக் கழித்தவர். இன்றும் கண்புரை, நீரிழிவு போன்ற தொந்தரவுகளுடன் வாழ்க்கைப் போராட்டம் தொடர்கிறது. இந்தப் பவள விழாவில் நாங்கள் வாழ்த்தி வணங்குகிறோம். அம்மாவின் 75 வது பிறந்த நாளில் அவரது உழைப்பை நினைவு  கூர்வதில் கொஞ்சம் மன நிம்மதி; ஓர் ஆறுதல்.

 
அப்பாவுடன் ஓர் மகிழ்வான தருணத்தில்...

    கரியாப்பட்டினம் திரு. கா. சந்தானம் – சிவக்கொழுந்து தம்பதிகளுக்கு கடைக்குட்டியாக பிறந்தவர் எங்கள் அப்பா திரு. ச.முனியப்பன். சுமார் 2 வயதில் தனது தந்தையை இழந்த அப்பாவின் குடும்பம் வறுமையில் வாடியது. எங்களது பாட்டி, பெரியப்பாக்கள், அத்தைகள் ஆகியோர் மாடு மேய்த்தல், விவசாயக்கூலி வேலைகள் செய்து குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தினர். 

அம்மா மு.சாரதா


    இத்தகைய வறுமைச் சூழலில் அய்ந்தாம் வகுப்பு படித்த எங்களது அப்பா ஆயக்காரன்புலம் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றாக வேண்டும். ஆனால் அங்குள்ள ஆதிக்க சாதிகள் அதை அனுமதிக்கவில்லை. கரியாப்பட்டினத்தில் ஆறாம் வகுப்பு தொடங்கும் வரை மூன்றாண்டுகள் காத்திருந்து எட்டாம் வகுப்பை முடிக்கிறார். அந்த மூன்றாண்டுகள் ஆடு, மாடு மேய்த்தலில் நாட்கள் நகர்கின்றன. 

    அதன் பிறகு தஞ்சாவூர் அரசினர் அடிப்படை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இடைநிலை ஆசிரியர் பயிற்சியினை முடிக்கிறார். அப்பா கடுமையான முன்கோபி; அம்மாவும் அப்படியே. அதன் பாதிப்பு அவர்களுடைய குழந்தைகளான எங்களுக்கும் உண்டு. என்ன செய்வது? பாரம்பரியத் தாக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடரவேச் செய்கிறது.

   சில தனியார் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றுகிறார். அப்பாவின் முன்கோபமும் தன்முனைப்பும் பிறரிடம் பணியாற்றவிடாமல் தடுத்திருக்கவேண்டும். அதனால் தனது சகோதரி திருமதி கண்ணம்மாள்  வீட்டுக்கு வந்து (அண்ணாபேட்டை) அவர் வீட்டிலேயே தொடக்கப்பள்ளி தொடங்கி (1952) நடத்துகிறார். பிறகு அப்பள்ளி தனியிடத்தில் அரசு அங்கீகாரத்துடன் வ.உ.சி. உதவித் தொடக்கப்பள்ளியாக மலர்கிறது. அப்பள்ளி இன்று சுமார் 100 குழந்தைகளுடன் தொடக்கப்பள்ளியாக தொடர்கிறது.

குடும்பத்தினருடன்...


  அத்தை அப்பாவுக்கு பக்கத்து ஊரில் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைக்கிறார். சுயமரியாதைத் திருமணம். அப்போது அம்மாவுக்கு 17 வயதிருக்கலாம். அம்மாவின் குடும்பம் ஒரு காலத்தில் தேங்காய் வியாபாரத்தில் செழித்திருந்தது. வியாபார நெளிவு சுளிவுகள் கைவரப்பெறாத காரணத்தால் பொருளாதாரத்தால் வீழ்ந்தது.

   திருக்குவளைக்கட்டளை வ.மு.முருகையன் – ராஜாமணி தம்பதிகள் அம்மாவின் பெற்றோர். அம்மாவுடன் மொத்தம் மூன்று குழந்தைகள். ஓர் ஆண்; ஒரு பெண்கள். உள்ளூரில் பள்ளி இல்லை. மாமா தியாகராஜன் மட்டும் வெளியூரில் சென்று படித்தார். அம்மாவிற்கு பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. வீட்டிலேயே எழுத, படிக்கக் கற்றுக்கொண்டார். 

    திருமணத்திற்குப் பிறகு சில காலம் குடும்பம் கரியாப்பட்டினத்தில் இருக்கிறது. 1959 இல் முதல் பெண் குழந்தை. அம்மா உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிறார்.

 
அம்மா மு.சாரதா

  சில ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உடல்நலம் மீள்கிறார். அடுத்து முதல் ஆண் குழந்தை. குடும்பத்தில் சிக்கல். நீதிமன்றம் வரை சென்று பின்னர் சமாதானமாகி ஒன்றிணைகின்றனர். சில ஆண்டுகளில் குடும்பம் அண்ணாபேட்டை பள்ளிக்கருகில் இடம் பெயர்கிறது. 

   அப்பள்ளிக்குப் பக்கத்திலேயே கூரை வீடு. பள்ளியிலேயே கிளை அஞ்சலகம் செயல்பட்டது. பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டராகவும் அப்பா இருந்தார். அதன் வேலை நேரம் காலை 7:30 – 9:30 & 12:30 – 2:00.  எனவே அப்பா எப்போதும் பள்ளிக்கூடத்திலேயே குடியிருந்தார். நாங்களும் பகல் முழுக்கப் பள்ளியிலும் இரவில் மட்டும் வீடு என்று வாழ்ந்தோம். 

    அப்பா கண்டிப்பிற்கு பெயர் போனவர். அவருடைய வயதை ஒத்தவர்கள் அவரிடம் படித்ததாகச் சொல்லும்போது எங்களுக்கு வியப்பாக இருக்கும். பள்ளிக்கூடம் தொடங்கியபோது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டதை பிறகு அறிந்துகொண்டோம். அப்பா வீட்டிலும் ஆசிரியராகவே இருந்தார். எனவே உறவு சொல்லி அழைக்கக் கூடிய ஒரே நபராக அம்மா மட்டுமே இருந்தார். 

   எங்கள் ஆறு பேரையும் வளர்க்கவும் குடும்பத்தைப் பேணவும் அம்மா மிகுந்த சிரமப்பட்டார். பெரிய குடும்பம்; குறைவான ஊதியம். ஆகவே பொருளாதார நெருக்கடியும் கூடவே இருந்தது. எங்களது அத்தைகள் மூவரும் கணவனை சிறுவயதிலே இழந்தவர்கள். முதலிரண்டு அத்தைகளான திருமதி லோகம்பாள், திருமதி கண்ணம்மாள் இருவருக்கும் தலா ஓர் குழந்தைகள். மூன்றாவது அத்தை திருமதி காமாட்சி திருமணமான 6 மாதத்திலேயே கணவனை இழந்தவர். எங்களை அம்மாவுடன் சேர்ந்த்து வளர்த்தெடுத்ததில் இவர்களது பங்கு அளப்பரியது. 

   முதல் அக்கா மட்டும் அப்போதைய பி.யூ.சி. ஐ திருச்சி சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தார். அதன் பிறகு நாங்கள் யாரும் கல்லூரிக்கு சென்றதில்லை. பள்ளியிறுதி வகுப்பை முடித்ததும் ஏதெனும் வேலை சார்ந்த படிப்புகளுக்கு அனுப்பப்பட்டோம். அப்பா குழந்தைப்பருவம் முதல் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதால் அவருக்கு நிரந்தர வருமானம், பணி குறித்தான பார்வையே இருந்தது. அதனால் நாங்கள் இருவரைத் தவிர நால்வர் நிரந்தர வருமானத்திற்கான பணியில் சேர்க்கப்பட்டோம்.

குடும்பத்தினருடன்...


   1970 களில் குடும்பம் பள்ளியை விட்டு இடம் பெயர்ந்தது. பள்ளி விட்டதும் ஆடு, மாடு மேய்ப்பது, விவசாய வேலைகள் என நாங்கள் அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டோம். ஆசிரியரான அப்பா வீட்டில் வேலைகள் இருப்பின் பள்ளி செல்லவேண்டாம் என்று உடனே சொல்லிவிடுவார். அம்மாவின் வேலைகளுக்கு அளவே இருக்காது. எங்களுக்கு சோறு போட்டுவீட்டு நாங்கள் சாப்பிட்டவுடன் அவர் வேறு வேலைக்குப் போய்விடுவார். பல நேரங்களில் சாப்பிடாமலும் நேரம் தவறிச் சாப்பிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடிக்க முடிக்க எங்களுக்கு பரிமாறிக்கொண்டிருப்பார். இறுதியில் அவருக்கு ஒன்றுமிருக்காது. இதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

   எங்களின் தந்தை வழிப் பாட்டி சிவக்கொழுந்து நான் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார் என்று நினைக்கிறேன். எனது அத்தைகள் கண்ணம்மாள், காமாட்சி ஆகிய இருவரும் தங்களது கடைசிக் காலத்தை அம்மாவின் பராமரிப்பில் இருந்து மறைந்தனர். அம்மாவி அம்மா திருமதி ராஜாமணி  ஜனவரி 02, 1994 ஓர் அறுவடை நாளில் மாரடைப்பால் எங்கள் இல்லத்தில் மரணமடைந்தார். 

   திருவாரூரில் ஓர் தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மாமாவிற்கு எங்களது வீட்டிலேயே சுயமரியாதைத் திருமணத்தை அப்பா நடத்தி வைத்தார். அவர் உடல் நலமின்றி 1999 இல் இறந்தார். தாத்தா வ.மு.முருகையன் அவர்களது இறுதிக்காலமும் எங்கள் வீட்டில்தான். அம்மாவின் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் மிகுந்த சிரமத்துடன்  2001 இல் தாத்தா மரணமடையும் வரை பார்த்துக்கொண்டார். இரண்டாவது பெரியம்மா திருமதி மணியம்மாள் இதற்கு உதவி புரிந்தார்.

   இதற்கிடையில் அப்பாவின் உடல்நலமும் சரியில்லாது போனது. அப்பாவைக் கவனிக்க முடியாமற்போகும் என்பதால் தனக்கு மாத்திரை எடுத்துக் கொள்வதை அம்மா முற்றிலும் தவித்து வந்தார். தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு அப்பாவைக் கவனிப்பதுதான் தனது முழுநேர வேலையாக அம்மா இருந்தார். மாத்திரை மருந்துகள் சாப்பிடாமலும் குறித்த நேரத்தில் உணவுண்ணாமலும் தனது உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டார்.

   நவம்பர் 19,  2005 இல் அப்பாவின் மரணம் அம்மாவின் உடல் மற்றும் மனத்தைப் பெரிதும் பாதித்தது. அதன் பிறகு மெல்ல துக்கத்திலிருந்து மீண்டு எங்களது வற்புறுத்தல்களுக்கு இணங்க மருத்துவத்திற்கு ஒப்புக்கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை பத்தாண்டுகள் மருத்துவமனை, மருந்து, இன்சுலின் ஊசி என அவரது வாழ்க்கை ஓடிக்கொண்டுள்ளது.

   இப்போது சிறிய அக்கா திருமதி மு.மங்கையர்க்கரசியின் அரவணைப்பில் அவர் வாழ்ந்த இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வாழ்வின் 75 ஆண்டுகளில் சில ஆண்டுகளைத் தவிர பிறந்த ஊரிலேயே வாழக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. வாழத்துகிறோம். வணங்குகிறோம். நன்றி.

திங்கள், ஜூன் 29, 2015

திருநெல்வேலி கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை உண்மை அறியும் குழு அறிக்கை

                             உண்மை அறியும் குழு அறிக்கை

 
    திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பத்தமடை முன்னீர்ப்பள்ளத்திற்கு அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த சுப்புக்குட்டித் தேவர் – அம்பிகாவதி ஆகியோரின் மகன் கிட்டப்பா (34). இவர் திருநெல்வேலி சுத்தமல்லிக்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிர்புறம் உள்ள தற்போது கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் நாசர் என்பவரின் வீட்டில் வைத்து என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டார் என்கிற செய்தி மிக விரிவாக அனைத்து நாளிதழ்களிலும், புலனாய்வு இதழ்களிலும் வெளி வந்தது.

  தேடப்பட்டு வந்த குற்றவாளியான கிட்டப்பாவைப் பிடிக்க அமைக்கப்பட்டிருந்த காவல்துறை சிறப்புக் குழுவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் முதலானோருக்கு மேலே குறிப்பிட்டுள்ள வீட்டில் கிட்டப்பாவும் அவரது சகாக்கள் நரசிங்கநல்லூர் லெஃப்ட் முருகன், ராமையன்பட்டி மணிகண்டன் ஆகியோருடன் பதுங்கி இருப்பதாகச் செய்தி கிடைத்து அவர்களைப் பிடிக்கச் சென்றபோது நடந்த மோதலில் அவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அது மோதலில் நடந்த கொலை அல்ல என கிட்டப்பாவின் உறவினர்கள் கூறி,

   கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை உடலை வாங்க மறுத்ததோடு பேருந்துகள் மீது கல்வீசிப் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.

இது தொடர்பான உண்மைகளை அறிய மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பின்’ (National, Confederation of Human Rights Organisation -NCHRO) சார்பாகக் கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:
  1. அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பு (NCHRO),
  2. கோ.சுகுமாரன்,  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (Federation for People’s Rights- FPR), புதுச்சேரி,
  3. கு.பழனிச்சாமி, மனித உரிமை ஆர்வலர், மதுரை,
  4. எம்.ஆரிஃப் பாட்சா, வழக்குரைஞர், திருநெல்வேலி,
  5. என்.இலியாஸ், மாவட்டச் செயலர், PFI, திருநெல்வேலி,
  6. 6. கே.அப்துல் பாரிக், சட்டக் கல்லூரி மாணவர், மதுரை,
  7. அ.பீட்டர், இனப் படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு, திருநெல்வேலி,
  8. பக்கீர் முகமது, PFI, திருநெல்வேலி.

    இக்குழுவினர் நேற்றும் இன்றும் கான்சாபுரத்தில் உள்ள கிட்டப்பாவின் மனைவி இசக்கியம்மாள் (23), தம்பி கருணாநிதி (30), அம்மா அம்பிகாவதி (60), மாமியார் துரைச்சி (45) ஆகியோரையும், திருநெல்வேலி ராஜீவ்காந்தி இரத்ததான சங்கத்தைச் சேர்ந்தவரும் தகவல் உரிமைச் சட்டப் போராளியுமான வழக்குரைஞர் பிரம்மநாயகம், வழக்குரைஞர் காந்திமதி நாதன் ஆகியோரையும், ‘மோதல்’ நடந்தபோது கிட்டப்பா குழுவினரின் தாக்குதலால் காயமடைந்ததாகக் கூறி இன்னும் ஹைகிரவுன்ட் மருத்துவமனையில் உள்ள  உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் சரவணசுந்தர், கிருஷ்ணசாமி ஆகியோரையும் சந்தித்தனர். அப்போது பணியில் இருந்த செவிலியர்களிடம் மூவரின் உடல் நிலை குறித்தும் அறிந்து கொண்டனர். சித்தமல்லி காவல் நிலையத்திற்குச் சென்று முதல் தகவல் அறிக்கை விவரங்களைத் தெரிந்து கொண்டதோடு, கிட்டப்பா தரப்பினரால் பேட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வாகனத்தையும் பார்வையிட்டனர். பின் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் வீட்டுக்குச் சென்று கிட்டப்பா சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தைப் பார்வையிட்டதோடு அவ்வீட்டைக் கட்டிக் கொண்டுள்ள நாசர் (த/பெ ஷேக் பாசல், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், அச்சன்புதூர்) மற்றும் அப்பகுதியில் அந்த மோதல்’ நடந்தபோது இருந்த மக்கள் சிலர் ஆகியோரையும் சந்தித்தனர். டி.ஐ.ஜி முருகன் அவர்கள் விரிவாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்குத் தொலைபேசியில் விளக்கமளித்தார்.
காவல்துறை கூறுவது

   சென்ற ஜூன் 13 அன்று மாலை,  சுத்தமல்லி காவல்நிலையத்திற்கு அருகிலுள்ள  K.M.A நகரில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த  கதவில்லாத வீடொன்றில் தேடப்பட்ட கிட்டப்பா தன் சகாக்களுடன் மறைந்திருப்பதாகக் காவல் துறைக்குச் செய்தி கிடைத்தது. உடன் சிவராமகிருஷ்ணன் தலைமையில் ஷண்முகவேல் (SSI), தலைமைக் காவலர் தங்கம், முருகன் (ARPC), மற்றும் காவலர்கள் கருப்புசாமி, முருகேசன், ஆல்வின் பாபு, ஓட்டுநர் சரவணசுந்தர் ஆகியோர் வாகனமொன்றில் அங்கு விரைந்து சென்றனர். வீட்டினுள் நுழைந்த காவலர்கள் சரவணசுந்தர் மற்றும் கிருஷ்ணசாமி இருவரையும்  கிட்டப்பா அரிவாளால் வெட்டியவுடன் அவர்கள் ரத்தக் காயங்களுடன் வெளியே வந்தனர். உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்னன் உள்ளே நுழைந்தபோது அவரையும் கிட்டப்பா வெட்டினார். உயிரைக்காத்துக் கொள்ள சிவராமகிருஷ்ணன் கிட்டப்பாவைச் சுட நேர்ந்தது. தலையில் குண்டடிபட்டு அவர் செத்தார். பக்கத்து அறையில் பதுங்கியிருந்த முருகன், மணிகண்டன் மற்றும் ஒருவர் பெட்ரோல் குண்டு ஒன்றைப் போலீஸ் வாகனத்தில் வீசித் தப்பி ஓட முயற்சித்தபோது முருகன் மணிகண்டன் ஆகிய இருவர் மட்டும் அகப்பட்டுக் கொண்டனர்.. இப்போது அவர்கள் இருவரும் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    [சித்தமல்லி காவல்நிலயம் மு.த.அ. 119/2015, 13- 06- 2015, குற்றப் பிரிவுகள் இ.த.ச 332,176, 307, TN PD DL Act 4, வெடிமருந்துப் பொருள் சட்டம் 415, குற்ற நடைமுறைச் சட்டம் 176, (1 A) (c)]

கிட்டப்பாவின் உறவினர்கள் சொல்வது

     பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் சிறையிலிருந்து விடுதலை ஆன கிட்டப்பா வீட்டில்தான் இருந்தார். திருந்தி வாழும் நோக்குடன் விவசாய வேலைகளையும் செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் கோடகநல்லூரில் உள்ள தன் மாமியாரின் வீட்டில் மனைவி குழந்தைகளுடன் இருந்துள்ளார். ஒரு இரு சக்கர வாகனத்தில் சாதாரண உடையில் வந்த இருவர் விசாரணை ஒன்றுக்காக ஒரு அரை மணி நேரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அதே இரு சக்கர வாகனத்தில் கிட்டப்பாவையும் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். நஞ்ஞாரஞ்சேரல் என்னும் இடம் வந்தவுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் அவர் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.. அதன் பின் இரவு 7 மணி அளவில் தொலைகாட்சிச் செய்திகள் மூலமே கிட்டப்பா கொல்லப்பட்டதை மனைவி, மாமியார், அம்மா ஆகியோர் அறிந்துள்ளனர். அதற்குச் சற்று முன்னதாக ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் என்பவர் சொன்னதாக கிட்டப்பாவின் தம்பி கருணாநிதியிடம் அவரது மாமா உறவுள்ள ஆதிசுப்பிரமணியன் என்பவர் கிட்டப்பா கொல்லப்பட்ட தகவலைக்  கூறியுள்ளார். போலீஸ் அழைத்துச் செல்லுமுன் மாலை 4 மணி வாக்கில் கிட்டப்பா கருணாநிதியிடம் செல்போனில் பேசியுள்ளார்.

‘மோதல்’ நடந்த இடத்தில் உள்ளோர் சொல்வது:

      மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாசரின் வீட்டில் அன்று பூச்சு வேலை நடந்துகொண்டிருந்தது. அருகில் வசிக்கும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்று ஊரில் இல்லை. கிட்டப்பா யார் என்று அவர்களுக்குத் தெரியாது. இதற்கு முன் அவர் இங்கு வந்ததோ ஒளிந்திருந்ததோ கிடையாது,

     13 அன்று மாலை சுமார் 6 மணி அளவில் டெம்போ டிராவலரில் வந்து நாசரின் வீட்டில் இறங்கிய சாதாரண உடையில் இருந்த சுமார் 10 அல்லது 12 காவலர்கள்  கத்திக்கொண்டே திபு திபுவென கும்பலாகச் சிலருடன் நாசரின் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் அஞ்சி ஓடியுள்ளனர். வாகனத்தில் வந்து இறங்கியவர்களில் இரண்டு மூன்று பேர் சாரம் (கைலி) அணிந்திருந்தனர். சில நிமிடங்களில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் இருவர் கைகளைக் கட்டி இழுத்து வரப்பட்டனர், வாகனத்தில் வந்து இறங்கிய காவலர்களில் ஒருவர் பெட்ரோலை எடுத்து வாகனத்தில் ஊற்றிப் பின் தீ வைத்துள்ளார். தீ பரவு முன் அவர்களே அதை அணைத்துவிட்டு கிட்டுவின் உடலையும், கைகள் கட்டப்பட்ட இருவரையும் வாகனத்தில் ஏற்றி மற்ற காவலர்களும் சென்றனர்.

    திருநெல்வேலியில் ஆர்.டி.ஐ போராளியாக அனைவரும் அறிந்துள்ள வழக்குரைஞர் பிரம்மநாயகம் இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்குப் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது மோதல் சாவு அல்ல. திட்டமிட்ட படுகொலை என்கிறார் அவர். முன்னதாக கிட்டப்பாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து ஆய்வாளர் சாகுல் தலைமையில் சென்ற சிறப்புக் காவல்குழு கைது செய்ததாகவும் அப்போது சுமார் 450 பவுன் நகைகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், அதை காவல்துறை கைப்பற்றிய கணக்கில் காட்டவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு நகைகள் கைப்பற்றப்பட்டது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரம்மநாயகம் விவரங்களைக் கேட்டபோது ஆய்வாளர் சாகுல் சிறிதுகாலம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுப் பின் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்..

எங்கள் பார்வையில்

1.சுட்டுக்கொல்லப்பட்ட கிட்டப்பா கொலைக் குற்றங்கள் உட்படப் பல கிரிமினல் வழக்குகளில் உள்ளவர். தனது தந்தையின் மரணத்திற்குப் பின் சென்ற பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் மதுரை சிறையிலிருந்து விடுதலையான அவர் காவல்துறைக்குப் பயந்து திரிந்தபோதும் அப்படி ஒன்றும் அவர் தலைமறைவாக இல்லை. வெளிப்படையாக விவசாய வேலைகளைச் செய்து கொண்டு இருந்துள்ளார். கொலை வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் சென்ற ஆண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணையை அப்போது பத்தமடை சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த நங்கையார் என்பவர் சென்ற மாதம் கோடகநல்லூரில் கிட்டப்பா இருந்தபோது சந்தித்து வழங்கியுள்ளார்.

2. சுத்தமல்லி K.M.A நகர் என்பது. காவல் நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் உள்ள  ஒரு குடியிருப்புப் பகுதி. அங்கு கட்டப்பட்டுக் கொண்டுள்ள ஒரு கதவு இல்லாத வீட்டில், கொத்தனார்கள் செய்து கொண்டிருந்த கட்டுமானப் பணிகளுக்கு மத்தியில் கிட்டப்பா தன் சகாக்கள் மூவரோடு போலீசுக்குப் பயந்து. ஒளிந்துகொண்டிருந்தார் என்பது முற்றிலும் நம்ப முடியாத ஒன்று. அப்படி அவர் அங்கு வந்து போனதாக வீட்டுக்காரரோ இல்லை யாருமோ சொல்லவில்லை. கிட்டப்பாவையும் இதர இருவரையும் சிவராமகிருஷ்ணன் தலைமையில் வந்த காவல் படையினர் அவர்களது டெம்போ டிராவெலர் வாகனத்திலேயே கொண்டு வந்திருக்க வேண்டும்.

3. தாம் வந்திறங்கிய  டெம்போ டிராவலரில் போலீஸ்காரர்களே பெட்ரோல் ஊற்றி எரித்துப் பின் அணைத்ததை நேரடியாகப் பார்த்தவர்கள் எங்களிடம் சாட்சியங்கள் பகர்ந்துள்ளனர். அந்த வாகனத்தை (TN 72 G 0855) நாங்கள் பரிசீலித்தபோது குண்டு வீசப்பட்டுத் தாக்கப்பட்டதற்கான எந்தத் தடயங்களும் அதில் இல்லை. குண்டு வீசித் தாக்கி இருந்தால் கண்ணாடிக் கதவுகள் உடைதிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் உடையவில்லை.

4. மருத்துவமனையில் தற்போது உள்ள சிவராமகிருஷ்ணன் மற்றும் இரு காவலர்களையும் சந்தித்து அவர்களின் காயங்களைப் பரிசீலித்தபோது அவை மிகச் சிறிய காயங்கள் என்பதும், பெரிய அரிவாளால் வெட்டப்பட்டவை அல்ல என்பதும் தெரிகிறது. மிகவும் கவனமாக அவர்களே அதிகம் ஆழமில்லாமல் வெட்டிக் கொண்ட காயங்களாகவே அவை உள்ளன. இது தொடர்பான நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்தால் இவை தாக்குதல் நோக்குடன் கூடிய அரிவாள் வெட்டுக் காயங்கள் இல்லை என்பது வெளிப்படும். இப்போது அந்தச் சிறிய காயங்களும் குணமாகி உரிந்து தழும்புகளாகி விட்டன. அவர்கள் பூரண நலத்துடன் உள்ளனர் எனவும் வேறு யாராக இருந்தாலும் அப்போதே அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்து அனுப்பப் பட்டிருப்பார்கள் எனவும் இவர்களை 21 நாட்கள் வரை வைத்திருக்குமாறு காவல்துறை கூறியுள்ளதால் அவர்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் சொல்லப்பட்டது.

5. கிட்டப்பாவுடன் இருந்த மூவரில் ஒருவர் தப்பி ஓடி விட்டதாகக் காவல்துறைத் தரப்பில் சொல்லப்படுவதும் உண்மையாகத் தெரியவில்லை. ஒன்று அப்படி யாரும் இல்லாமலிருக்க வேண்டும் அல்லது அந்த நபரைக் காவல்துறையினர் ஏதோ காரணங்களுக்காகச் சட்ட விரோதக் காவலில் வைத்திருக்க வேண்டும்.

6. எங்கள் அய்யங்களை நாங்கள் டி.ஐ.ஜி முருகன் அவர்களிடம் தெரிவித்தபோது அவர் இப்போது மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்துகொண்டிருப்பதால் எதுவும் பேச இயலாது என்றார். என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் கொடுத்துள்ள நெறிமுறைகள் முழுமையாகக் கடைபிடிக்கப் படுவதாகவும், இந்த வழக்கு விசாரணையைத் தாங்கள் மேற்கொள்ளாமல் சி.பி.சி.ஐ.டி யிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், விசாரணையில் கிட்டப்பா வீட்டார் கொடுத்துள்ள புகார்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கூறினார்.

எமது கோரிக்கைகள் 
  1. இது மோதல் கொலை அல்ல. மேலிருந்து திட்டமிட்ட படுகொலை. கிட்டப்பா மாமியார் வீட்டிலிருந்து அழைத்து, வரப்பட்டு கதவில்லாமல் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலையில் பங்குபெற்ற உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். 13ந் தேதி காலை முதல் கிட்டப்பா தன் தொலைபேசியில் யார் யாருடன் பேசியுள்ளார், அதேபோல என்கவுன்டர் செயத உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் யார் யாரிடம் பேசியுள்ளார் என்கிற விவரங்களை தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்.  
  2. இந்தக் கொலை விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும். கிட்டப்பாவின் மனைவி, அம்மா ஆகியோர் கொடுத்த புகாரைக் கணக்கில் எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும்.
  3.  கிட்டப்பாவுக்கு இளம் மனைவியும், ஒன்றரைவயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. கிட்டப்பாவின் கொலையில் ஐயம் கொண்டு அவரது உறவினர்கள் அடுத்த ஒரு வாரம் உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்தபோது மாவட்ட நிர்வாகம் கிட்டப்பாவின் மனைவிக்கு இழப்பீடும், அரசுப்பணியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.  அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.. குடும்பத்திற்கு 25 இலட்ச ரூ இழப்பீடும் மனைவிக்குத் தகுதிக்கேற்ற அரசுப் பணியும் அளிக்க வேண்டும்.
  4. முற்றிலும் குணமான இந்த மூன்று காவலர்களையும் மருத்துவமனையில் வைத்திருப்பது மருத்துவ அறப்படி குற்றம். அரசுப் பணம் வீணாவது தவிர இதர மூன்று ஏழை எளிய மக்களின் மருத்துவ வாய்ப்பும் இதனால் பறிபோகிறது. ஒரு வெளி நோயாளியாக வைத்து சிகிச்சை செய்து அனுப்பப்பட்டிருக்க வேண்டிய இவர்களை போலீசின் வற்புறுத்தலை ஏற்று இவ்வாறு மருத்துவமனையில் தொடர்ந்து தங்க அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு: அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20.
செல்: 9444120582

செவ்வாய், ஜூன் 23, 2015

ஜெயகாந்தன் விருது பெறும் சிவகுமார் முத்தய்யா



ஜெயகாந்தன் விருது பெறும் சிவகுமார் முத்தய்யா                            
                                   -  மு.சிவகுருநாதன்
சிவகுமார் முத்தய்யா


     கணையாழி மாத இதழ் வழங்கும் 2014 ஆம் ஆண்டுக்கான சிறுகதை விருது இளம் படைப்பாளி சிவகுமார் முத்தய்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயரில் அளிக்கப்படும் இவ்விருதுக்கான தேர்வை மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமி செய்துள்ளார். ரூ. 10000 பரிசு வழங்கப்பட இருக்கிறது.

    இளம் எழுத்தாளர்கள் பலருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.  ரூ. 10000 பரிசு என்பது மிகக்குறைவாக இருந்தபோதிலும் ஜெயகாந்தன் பெயரில் வழங்கப்படும் இந்த விருது ஓர் இளம்  எழுத்தாளருக்கு வழங்கப்பட உள்ளதை வரவேற்போம். சிவகுமார் முத்தய்யாவைப் பாராட்டுவோம். அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று இக்கணத்தில் வாழ்த்துவோம்.

   தோழர் சிவகுமார் முத்தய்யா திருவாரூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்த இவர் இன்று வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர். இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தபோதிலும் தமிழ் எழுத்துலகில் போதுமான கவனிப்பைப் பெறாதவராக உள்ளார். சென்ற வாரம் வெளியான ஆனந்தவிகடன் இதழில் (ஜூன் 24, 2015) இவரது ‘மழை பெய்யட்டும்’ சிறுகதை ஒன்று வெளியாகி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 
கிளி வரும் போது…



    நண்பர் சிவகுமார் முத்தய்யா காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவர் தற்போது  திருவாரூரிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'பேசும் பதிய சக்தி' மாத இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார். இவ்விதழில் அரசியல், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி குறித்த பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார்.

 
செறவிகளின் வருகை

   இவரது முதல் தொகுப்பான  ‘கிளி வரும் போது…’ ஐ முற்றம் டிசம்பர் 2008 இல் வெளியிட்டுள்ளது. (விற்பனை உரிமை: நிவேதிதா புத்தகப்பூங்கா). ‘செறவிகளின் வருகை’ என்ற இரண்டாவது தொகுப்பை ஜனவரி 2014 இல் சோழன் படைப்பகம் வெளியிட்டிருக்கிறது. (விற்பனை உரிமை: தோழமை வெளியீடு). 

   இன்றுள்ள பதிப்பக அரசியல் மற்றும் ‘லாபி’யில்  முகமறியாத புதிய வெளியீட்டகங்களுக்கு இந்நிலைதான் போலும்! இவரது படைப்புலகம் குறித்து பிறிதோர் நேரத்தில் பார்க்கலாம். இப்போது மீண்டும் வாழ்த்துக்கள்.

வியாழன், ஜூன் 11, 2015

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு உண்மை அறியும் குழுஅறிக்கை

நெல்லிக்குப்பம் சுப்பிரமணியன் காவல்நிலைய சாவு
உண்மை அறியும் குழுஅறிக்கை

ஜூன் 10, 2015
கடலூர்

       கடலூரில் இருந்து பண்ரூட்டி செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில்உள்ளது மேல் பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம். இந்த ஊரில் ரயில்வே கேட் அருகில் ரயில்பாதையை ஒட்டி அமைந்துள்ள தலித் குடியிருப்பு ஒன்றில் வசித்தவர் சுப்பிரமணியன் (35)த/பெ. ஏகாம்பரம். ஐ.டி.ஐயில் ஃபிட்டர் பயிற்சிப் பெற்ற இவர் நிரந்தர வேலையின்றி பல்வேறுகூலி வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். கடந்த ஒரு மாதமாக நெய்வேலியில் ஒப்பந்த ஊழியராகபணி செய்துக் கொண்டிருந்தார். இவரது மனைவி ரேவதி (28). இவர்களுக்கு சுபாஷினி (8), நிவாஷினி(5), சோனா (3), வர்ஷித் (1) என்கிற நான்கு குழந்தைகள். நிரந்தர வருமானம் இல்லாத வாழ்க்கை.

      நெய்வேலிக்கு வேலைக்குச் செல்லும் போது அங்குள்ள அவரது தூரத்துஉறவினர் சபா அம்மா எனப்படும் எலிசபத்  என்பவரின்வீட்டிற்கு அவர் செல்வது வழக்கம் எலிசபத்தின் வீட்டிற்குப் பக்கத்தில் (3வது பிளாக்)குடியிருந்த முகமது யூசுப்பின் மனைவி மும்தாஜ் (47) என்பவரை சென்ற மே 23 அன்று யாரோகொலை செய்து நகைகளைப் பறித்துக் கொண்டு உடலை எரியூட்டிவிட்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாகநெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று (குற்ற எண். 179/15) இதச 302,380 ஆகிய பிரிவுகளின்கீழ் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையஆய்வாளர் ராஜா விசாரித்து வருகிறார். சென்ற மே 28 அன்று இதுதொடர்பாக சுப்பிரமணியனைஅவரும் அவருடன் வந்த காவலர்களும் அழைத்துச் சென்று சுமார் ஒரு வாரம் சட்டவிரோத காவலில்வைத்துக் கடுமையாக சித்திரவதை செய்ததாகவும், அதன் விளைவாக அவர் சாகும் நிலையில் புதுச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சென்ற ஜூன் 6 அன்று அதிகாலை 4 மணிக்கு மரணமடைந்ததாகவும்ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.

    இதுகுறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்டவாறு ஓர் உண்மை அறியும்குழு அமைக்கப்பட்டது

1 பேரா. அ. மார்க்ஸ், தலைவர்,  மனித உரிமைகளுக்கான  தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisationas- NCHRO), சென்னை,

2. கோ. சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for Peoples Rights – FPR), புதுச்சேரி.

3. இரா. முருகப்பன், (இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் -SASY), திண்டிவனம்,

4. இரா. பாபு, மனித உரிமை ஆர்வலர், கடலூர்,

5. வழக்குரைஞர்  விஜயசங்கர், சென்னை

6. மேத்யூ, HR Foundation, சென்னை,

7 வழக்குரைஞர் இல.திருமேனி, கடலூர்,

    இக்குழுவினர் ஜூன் 9, 2015 நேற்று முழுவதும் பி.என். பாளையத்தில்உள்ள சுப்பிரமணியனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி ரேவதி மற்றும் குழந்தைகள், சுப்பிரமணியனைகாவல்துறையினர் அழைத்துச் சென்றதற்கு நேரடி சாட்சியாக உள்ள அருகில் வசிக்கும் கருணாகரன்,சத்தியசீலன், அன்பழகன் முதலானவரை சந்தித்து நடந்த சம்பவங்களை விரிவாகப் பதிவு செய்துக்கொண்டனர். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த உதவிஆய்வாளர் சு.அன்பரசனை சந்தித்து இதுதொடர்பாகப் பேசினர். சுப்பிரமணியத்தின் மரணம் தொடர்பாகவழக்குப் பதியப்பட்டுள்ள நெல்லிக்குப்பம் காவல்நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த எஸ்.எஸ்.ஐஉதயகுமாரை சந்தித்து சுப்பிரமணியனின் மரணம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகுறித்த விவரங்களைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் சுப்பிரமணியனை அழைத்துச் சென்று காவலில்வைத்து விசாரித்த நெய்வேலி டவுன்ஷிப் ஆய்வாளர் ராஜா, துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்ஆகியோரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினர். ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவகண்காணிப்பாளர் டாக்டர் பாலச்சந்தர், மருத்துவ துணைக் கண்காணிப்பாளர் அம்புரோஸ், சுப்பிரமணியனுக்குசிகிச்சை அளித்த டாக்டர் ஜெகதீசன் ஆகியோரிடம் விரிவாகப் பேசினர். ஜிப்மர் மருத்துவமனையின்புறக்காவல் நிலையத்தில் பொறுப்பாக இருந்த அதிகாரியிடமும் பேசினர்.

நடந்தசம்பவம்

தொடர்புள்ள அனைவரையும் விசாரித்த வகையில் நடந்த சம்பவம் குறித்துநாங்கள் அறிந்தது:

மே 23 அன்று நெய்வேலி டவுன்ஷிப் 3ம் பிளாக்கில் குடியிருந்தமும்தாஜ் என்கிற பெண்மணியை நகைக்காக யாரோ கொலை செய்கின்றனர். இவரது பக்கத்து வீட்டில்இருந்த எலிசபத் வீட்டாருடன் இவருக்குப் பகை இருந்துள்ளது. எலிசபத் வீட்டிற்கு அடிக்கடிவந்து செல்லும் சுப்பிரமணியனை சந்தேகித்த நெய்வேலி டவுன்ஷிப் ஆய்வாளர் ராஜா ஒரு பெண்போலீஸ் உட்பட சாதாரண உடையில் இருந்த சுமார் 10, 12 காவலர்களுடன் மே 28 அன்று இரவு சுமார்2 மணி அளவில் சுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்துள்ளார். கூட எலிசபத்தையும் அழைத்து வந்துள்ளார்.எலிசெபத்தை அழைக்கச் சொல்லி, கதவைத் திறந்த சுப்பிரமணியனைப் பிடித்து அங்கேயே அடித்துள்ளனர்.பயந்துக் கதறிய ரேவதி மற்றும் குழந்தைகளையும் மிரட்டியுள்ளனர். கொலை செய்ததை ஒத்துக்கடா,கொலை செய்ததை ஒத்துக்குங்கடி என இருவரையும் மிரட்டியுள்ளனர் பிள்ளைகள் பயந்துக் கத்தியுள்ளன.அந்த நேரத்தில் சத்தம் கேட்டு வெளியே வந்த அருகில் வசிக்கும் டிரைவர் சத்தியசீலனை மிரட்டிஅகன்று போகச் சொல்லியுள்ளனர். பின்னர் சுப்பிரமணியனை மட்டும் அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.அருகில் வசிக்கும் சத்தியசீலன், ஆறுமுகம், அன்பழகன், கருணாகரன், அழகேசன் முதலியோர்இதற்கு நேரடி சாட்சிகள்

சுப்பிரமணியனின் உடலில் பலகாயங்கள் இருந்தன என்பதையும் அவரதுகால், கை நகங்கள் பிய்க்கப்பட்டு இருந்ததையும் நாங்கள் பலரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டோம்.  

அடுத்த நாள் காலை 9 மணியளவில் 4 காவலர்கள் வந்து ரேவதியையும்4 குழந்தைகளையும் டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று மிரட்டியுள்ளனர். சின்னஞ்சிறுகுழந்தைகளையும் தனியே பிரித்து மிரட்டியுள்ளனர். மாலையில் ரேவதியையும் அவரது பிள்ளைகளையும்ஒரு வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அடுத்தஒரு வாரம் இப்படி நடந்துள்ளது. சுப்பிரமணியனை வீட்டுக்கு அனுப்பாததோடு மனைவி மக்கள்கண்ணிலும் காட்டவில்லை

இடையில் மே 31ம் தேதியன்று ரேவதி தன் கணவர் இவ்வாறு சட்டவிரோதக்காவலில் வைக்கப்பட்டது குறித்து எழுத்துமூலம் புகார் ஒன்றை கடலூர் காவல் கண்காணிப்பாளரிடம்கொடுக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். காவல் கண்காணிப்பாளர் அன்று விடுப்பில்இருந்ததால் புகார் கடித்தத்தை அங்கிருந்த யாரோ ஒரு அதிகாரி பெற்றுக் கொண்டுள்ளார்.சற்று நேரத்தில், அந்த அதிகாரி எங்கோ வெளியில் சென்றுவிட்டார். நீண்ட நேரம் காத்திருந்தபின் ரேவதி வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

சுமார் ஒரு வாரத்திற்குப் பின் ஜூன் 4ம் தேதி வியாழக்கிழமை அன்றுரேவதியை அவசரமாக நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர்சுப்பிரமணியனுக்கு உடல் நலமில்லை என்றும், அழைத்துச் சென்று வைத்தியம் செய்யுமாறும்கூறியுள்ளனர் சுப்பிரமணியனின் உடல் எல்லாம் அடிபட்டு வீங்கி இருந்தது எனவும் கை, கால்விரல் நகங்கள் பிடுங்கப்பட்டிருந்தன எனவும் ரேவதி எங்களிடம் கூறி அழுதார்.

வைத்தியம் செய்ய வசதியில்லை என ரேவதி அழுதவுடன் ஒரு டாடா சுமோவில்அவரையும் சுப்பிரமணியனையும் ஏற்றிக் கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் புதுச்சேரி ஜிப்மர்மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அட்மிஷன் போடும் போது எப்படி அடிபட்டது என்றகேள்விக்கு சுப்பிரமணியன் பதிலளிக்க முனைந்த போது போலீசார் அவரை நோக்கி முறைத்துள்ளனர்.சுப்பிரமணியன் பயந்துக் கொண்டே ஏதோ முணு முணுத்துள்ளார். மருத்துவமனையில் வழக்கமாகபதிவு செய்வதைப் போல் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளனர்.

உடனடியாக ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் உரிய சிகிச்சையை தொடங்கியுள்ளனர்எனினும் அடுத்த நாள் உடலில் மூத்திரம் தேங்கி வயிறு உப்பி சுப்பிரமணியன் கதறத் துவங்கியுள்ளார்.தன்னை லாடம் கட்டித் தொடர்ந்து அடித்ததாகவும், முந்திரி மரத்தில் தலைக்கீழாக கட்டிவைத்து அடித்துச் சித்திரவதை செய்ததாகவும் சுப்பிரமணியன் ரேவதியிடம் கதறியுள்ளார்.டாக்டர்களின் தீவிர சிகிச்சைப் பலனளிக்காமல் ஜூன் 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவர்உயிர் பிரிந்துள்ளது. அன்று மாலை 6 மணியளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சுப்பிரமணியனின்உடல் அவரது வீட்டில் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 7ம்தேதி மாலை அவரது உடல்பெட்டியில் வைத்துப் புதைக்கப்பட்டது

இடையில் அப்பகுதியில் உள்ள மக்கள் நீதி வேண்டி கடலூர் பண்ரூட்டிசாலையில் மறியல் செய்தனர். அப்போது பண்ரூட்டி மற்றும் கடலூர் துணைக் கண்காணிப்பாளர்கள்,ஆர்.டி.ஓ. ஆகியோர் நேரில் வந்திருந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ரேவதிக்கு ஒரு அரசுவேலை, குழந்தைகளின் படிப்பிற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, சுப்பிரணியனின் மரணத்திற்குக்காரணமான ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தல் ஆகியஉறுதிமொழி அளிக்கப்பட்ட பின் சாலை மறியல் போராட்டத்தை அப்பகுதி மக்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

சுப்பிரமணியனின் வீடு நெல்லிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குள்உள்ளதால் சுப்பிரமணியன் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்துள்ளதாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் 174 (1) பிரிவின் கீழ் வழக்கு (மு.த.எ. 269/15) பதியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் சொல்லப்படுவது:

மும்தாஜ் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியும் சுப்பிரமணியனைஒரு வார காலம் சட்ட விரோதக் காவலில் வைத்துக் கடும் சித்திரவதைகளைச் செய்தவர் எனக்குற்றம் சாட்டப்படுபவருமான ஆய்வாளர் ராஜாவிடம் நாங்கள் இது குறித்துக் கேட்டபோது தான்அவரை விசாரித்தது உண்மைதான் எனவும், ஆனால் ஒவ்வொரு நாளும் அவரை மாலையில் வீட்டுக்குஅனுப்பி விட்டதாகவும், அவரைச் சித்திரவதை செய்ததாகச் சொல்லப்படுவது பொய் எனவும் கூறினார்.ஜிப்மர் மருத்துவமனையில் அவரைத் தாங்கள் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை எனவும், சுப்பிரமணியன்தானாகவே போய் சேர்ந்து கொண்டார் எனவும் கூறினார்.

நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்திற்குப் பொறுப்பான துணைக் கண்காணிப்பாளர்கலைச்செல்வனிடம் நாங்கள் கேட்டபோது அவரும் இவ்வாறு சுப்ப்பிரமணியனைத் தாங்கள் சட்டவிரோதக்காவலில் வைத்து விசாரிக்கவில்லை என்றார். சுப்பிரமணியனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும்அதன் விளைவாகவே அவர் செத்தார் என்றும் கூறினார். உங்கள் போலீஸ்காரர்கள்தானே சுப்பிரமணியனைஜிப்மர் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர் எனக் கேட்டபோது அது தனக்குத்தெரியாது என்றார்.

நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் பணியில் இருந்த துணை ஆய்வாளர்அன்பரசனைக் கேட்டபோது சுப்பிரமணியனை விசாரித்தது உண்மைதான் எனவும், ஆனால் அப்போது மூன்றுநாட்கள் தான் சி.சி.டி.வி பயிற்சிக்காகச் சென்றுவிட்டதாகவும், சுப்பிரமணியனுக்கும்மும்தாஜ் கொலைக்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது என்றும் கூறினார்.

இன்று காலை கடலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.ராதிகாஅவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது பிரேத பரிசோதனை அறிக்கை வரும்வரை அது காவல்நிலயச் சித்திரவதையினால் ஏற்பட்ட மரணம் எனவும் அந்த அடிப்படையில் கொலை எனவும் கருதஇயலாது எனக் கூறினார்

சுப்பிரமணியனுக்குச் சிகிச்சை அளித்த ஜிப்மர் மருத்துவமனையின்மூத்த மருத்துவர் ஜெகதீஷ் அவர்கள் திடீரென மூத்திரக்காய் செயலிழந்ததால் சிகிச்சைப்பலனின்றி அவர் இறந்து போனார் எனவும் தாக்குதலின் விளைவாகத்தான் அப்படி நேர்ந்ததா என்பதுபிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என்றார்.

எமது பார்வைகள்

1. சுப்பிரமணியம் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருந்தவர், அவருக்குமஞ்சள் காமாலை நோய் அல்லது சிறுநீரகம் பழுதுபட்டிருந்தது என்பதெல்லாம் முழுப் பொய்.திடீரெனச் சிறுநீரகம் பாதிக்கப்படுகிற அளவிற்கு அவர் வயதானவரோ இல்லை சக்கரை நோய் முதலானவற்றால்பாதிக்கப்பட்டவரோ இல்லை. மும்தாஜ் கொலைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மே23 முதல் 25 வரை அவர் குடும்பத்துடன் வேளாங்கன்னி கோவிலுக்குச் சென்றுள்ளார். 28 நள்ளிரவில்அவரை ஆய்வாளர் ராஜா தலைமையில் வந்த காவலர்கள் அடித்து இழுத்துச் சென்றதற்கு நேரடி சாட்சிகளாகபி.என்.பாளையம் சத்தியசீலன், கருணாகரன், நெய்வேலி எலிசபத், சுப்பிரமணியனின் மனைவி மற்றும்குழந்தைகள் உள்ளனர். மே 28 இரவு அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணியன் மீண்டும் ஜூன்6 மாலைதான் பிணமாகக் கொண்டுவரப்பட்டார் என்பதற்கு பி.என்.பாளையத்தில் சுப்பிரமணியனின்வீட்டைச் சுற்றி வாழும் மக்கள் அனைவரும் சாட்சிகளாக உள்ளனர். சுப்பிரமணியனை ஒருவாரகாலம் ஆய்வாளர் ராஜாவும் அவரது காவலர்களும் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதைசெய்ததும் அதன் விளைவாகவே அவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பதும் உண்மை.

2. தன்னுடைய கணவர் சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதைசெய்யப்படுவது குறித்துப் புகாரளிக்க கடலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குமே 31 அன்று ரேவதி சென்றுள்ளார். கண்காணிப்பாளர் விடுப்பில் இருந்ததால் அவரது மனுவைஅங்குள்ள அதிகாரி ஒருவர் பெற்றிருக்கிறார். காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ரேவதியின்மனு மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கண்காணிப்பாளர் விடுப்பு முடிந்துதிரும்பிய பின்னும் எந்த நடவடிக்கையும் இல்லை இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்தமனுவின் மீது கண்காணிப்பாளர் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றுசுப்பிரமணியன் இறந்திருக்க மாட்டார். அவரது மனைவியும் நான்கு பச்சிளங் குழந்தைகளுக்இப்படி அனாதைகளாகியிருக்க மாட்டார்கள். கடலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராதிகா அவர்கள்இது போன்ற விடயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்பவர் என்பதைப் பலரும் கூறினர்.

3. தமிழகமெங்கும் தொடர்ந்து காவல் நிலையச் சாவுகள் நடைபெற்றுவருகின்றன, விசாரணைக்கு அழைத்து வந்தவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, 12 வயதுச்சிறுவனை வாய்க்குள் பிஸ்டலை வைத்துச் சுடுவது என்பதெல்லாம் கடந்த சில ஆண்டுகளில் இங்குநடந்தவை. திருக்கோவிலூரில் நான்கு இருளர் பெண்களைக் காவலர்கள் பாலியல் வன்புணர்ச்சிசெய்தனர் இத்தகைய குற்றங்களில் குற்றவாளிகளான காவலர்களைக் காப்பாற்றுவதைத் தமிழக அரசுஒரு கொள்கையாகவே வைத்துச் செயல்படுகிறது. கைது செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு வழக்கில் அளித்துள்ள நெறிமுறைகளை எந்தக் காவல் நிலையமும் அதிகாரிகளும் கடைபிடிப்பதில்லை.இந்நிலை தொடரும் வரை அப்பாவிக் குடிமக்கள் கொல்லப்படுவது குறையப் போவதில்லை.

கோரிக்கைகள்

1.   சுப்பிரமணியனைச்சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து அவரது மரணத்திற்குக் காரணமான நெய்வேலிடவுன்ஷிப் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுஅவர்கள் மீது சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது, மரணம் நேரும் வகையில் சித்திரவதைசெய்தது ஆகிய குற்றங்களுக்காக கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட வேண்டும்.
2.   இந்த வழக்கைதமிழகக் காவல்துறை விசாரித்தால் எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை. எனவே இந்த வழக்குவிசாரணையை சி.பிஅய்யிடம் ஒப்படைக்க வேண்டும்

3.   சுப்பிரமணியனின்மனைவியும் நான்கு பச்சிளம் குழந்தைகளும் இன்று அனாதைகளாகியுள்ளனர். கடந்த இரு வாரங்களாகஅவர்கள் கடும் மனச் சிதைவுகளுக்கும் ஆளாகியுள்ளனர், இது தொடர்பாக நடந்த சாலை மறியலின்போதுஅரசு அதிகாரிகள் வாக்களித்தபடி சுப்பிரமணியனின் மனைவி ரேவதிக்கு அவரது தகுதிக்கு ஏற்றஅரசுப்பணியும் 25 இலட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும். நான்கு குழந்தைகளின்கல்விச் செலவிற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்.


தொடர்பு:

அ மார்க்ஸ்,
3/5,முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,சென்னை- 20,

நன்றி:
செல்: 9444120582

நன்றி: அ மார்க்ஸ்

புதன், ஜூன் 03, 2015

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடையான நகலெடுக்கும் கலாச்சாரம்



தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடையான நகலெடுக்கும் கலாச்சாரம்                         
                                      - மு.சிவகுருநாதன்

      மே 29 (29.06.2015) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ஓர் கால்பக்க வண்ண விளம்பரம் வந்திருந்தது. அதில் “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பினை ஒரு கண்ணோட்டமாக ஆய்வு செய்து அதைப் புத்தகமாக உருவாக்கி இந்திய குடியரசுத்தலைவரின் மாளிகையில் அவரது பொற்கரங்களால் பெறப்பட்டு தமிழ் மண்ணுக்கு அற்பணித்து தம் தாய் நாட்டுக்கு நற்பெயர் சேர்த்த அரசியலமைப்பு சட்டத்தின் விடியலே” என்கிற நீண்ட வரிகளைப்படித்த பிறகு பெரும் குழப்பமே  தோன்றியது. எனவே இந்தப்பதிவு.

     இந்த விளம்பரம் குறித்து நமக்கு ஒன்றும் சிக்கலில்லை. அதிலுள்ள வாசகங்களே இங்கு பேசுபொருள். இதைப் படிக்கும்போது பல அய்யங்கள் தோன்றுவது இயல்பு. அவற்றுள் சில.

1.   இது எந்தக் கண்ணோட்டத்திலான ஆய்வு?
2.   இப்புத்தகத்தை உருவாக்கியது யார்?
3.   இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?
4.   குடியரசுத்தலைவரிடம் அளித்தது யார்?
5.   அவர்  கேட்டுப் பெற்றாரா அல்லது இவராக அளித்தாரா?
6.   தமிழ் மண்ணுக்கு அர்ப்பணித்தது யார்?
7.   இது தமிழ்நாட்டுக்கான தனி அரசியல் சட்டமா?
8.   இந்தியா முழுமைக்கும் அர்ப்பணிக்க முடியாதா?
9.   இங்கு தாய்நாடு என்பது எது? தமிழ்நாடா அல்லது இந்தியாவா?
10. இந்தியா என்றால் தமிழ்நாட்டிற்கு நற்பெயர் கிடையாதா?

    ஒரு காலகட்டத்தில் இங்கு தமிழ்மொழி சிதைக்கப்பட்டபோது அதனை எதிர்த்து தனித்தமிழியக்கமும் திராவிட இயக்கமும் அவற்றிற்கு எதிராக பணி செய்தது. அதற்கான தேவையும் இருந்தது.
  
   அண்ணா போன்றவர்களின் அடுக்குமொழி நடை இத்தகைய தேவையை ஓட்டியே எழுந்த்தது. ஆனால் இவர்கள் இதைப் ‘பாணி’யாகத் தொடர்ந்து பின்பற்றித் தேங்கிபோயுள்ளனர். இந்த நகலெடுப்பு மொழிவளர்ச்சிக்குத் தடையாக இருப்பதுதான் நகைமுரண்.  

   இன்றும் இவர்கள் முற்றுப்புள்ளிகளின்றி அடுக்குமொழிச் சொற்களை கொண்டே பாசாங்கு செய்து அதைப் பெரும் திறமையாகக் கட்டமைத்துள்ளனர். இதற்கு உடனடியாக நினைவிற்கு வரும் உதாரணங்கள்:  மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், வைகோ, நாஞ்சில் சம்பத், வைரமுத்து போன்றோர்.

  இவர்களது அரசியல் கூட்டங்களின் பேச்சு நடை இலக்கிய கூட்டங்களிலும் தொற்றிக்கொண்டது. பவுத்த, சமணக் கொடையான பட்டிமண்டபம் என்கிற தொன்மையான வடிவம் சீரழிந்தது இதன் தொடர்ச்சிதான். 

  இவர்களது பாணி பேச்சுக்கலையே பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இதனை நகலெடுக்கும் போக்கை அனைத்து தரப்பும் கைக்கொள்கிறது. விதிவிலக்கு: நவீன, சிறுபத்தரிக்கை இலக்கியவாதிகள். ஆனால் இவர்களை அரசோ பெரும்பான்மை மக்களோ ஏற்றுக்கொளவது கிடையாது.

   எழுத்தில் இவர்களை நகலெடுப்பவர்கள் இங்கு இலக்கியவாதிகளாகவும் அனைத்துவகையான  விருது, பட்டங்களுக்குத் தகுதியானவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். இந்த வர்க்கம் அரசியல் தரகு வேலைகளையும் கவனிக்கிறது. 

   இத்தகைய நகலெடுப்பின் ஓர் வடிவமே முன் சொன்ன விளம்பர வாசகங்கள். இவை மொழிக்கு எந்த ஏற்றத்தையும் தராது என்பதுடன் மொழியின் வளர்ர்ச்சிக்குத் தடையாக இருப்பது தெளிவு.

  இந்த நகலெடுக்கும் கும்பல்கள்தான் நவீன எழுத்து புரியாது என்கிற கற்பித்தத்தை திட்டமிட்டு பரப்பிவருகிறது. உண்மையான மொழியார்வம் உள்ளவர்களுக்கு கோணங்கியின் எழுத்து இதைவிட எளிமையானது மட்டுமல்ல; வலிமையானதும் கூட.