திங்கள், அக்டோபர் 31, 2016

04. தேயிலை செடியா? மரமா?

04. தேயிலை செடியா? மரமா?

-மு.சிவகுருநாதன்

      எளிதாகப் படிக்கவும் அதிக மதிப்பெண்கள் வாங்கவும் ஆங்கில வழியில் படிப்பதும் தேர்வு எழுதுவதும் சிறந்தது என்ற ஒரு கருத்து பலகாலமாகவே இங்குண்டு. இந்தக் கருத்தை நமது பாடநூல்கள் நிருபிக்கின்றன.

      இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். புரிந்துப் படிப்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமே. வெறும் மனப்பாடம் செய்து வாந்தியெடுப்பதுதான் அதிக மதிப்பெண்களுக்கு வழிவகுக்கிறது.

      தமிழ்ப்பாட வழி நூல்களுக்கு நீட்டி முழக்கப்படுகின்றன. எளிமையான மொழிநடை இல்லை. தமிழில் எளிமை. சொற்சிக்கனம் ஆகியவற்றுக்கு வாய்ப்பில்லை என்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

      தமிழ்வழிக் கல்வி, தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்துவோர் இதை கண்டுகொள்ள மறுக்கின்றனர். வெறும் தமிழ் வழிக் கல்வி பற்றி பேசிப் பலனில்லை. இந்தப் பாடநூல்களைகளையும் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும். ஒரு கருத்தைப் பிழையின்றி, எளிமையாக உணர்த்த தமிழால் முடியாதா என்ன?

     தி இந்து, தினமணி போன்ற நாளிதழ்கள்கூட சிறப்பான மொழிவளத்தைக் கையாள்கின்றன. இவை துளியும் இல்லாமல் செயற்கையாக நமது பாடநூல்கள் உருவாக்கப்படுவது தெளிவு. இங்கும் சுட்டப்படும் எடுத்துக்காட்டுகள் இவற்றை உணர்த்தும்.

      நமது பள்ளிப்பாடநூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின்னர் தமிழில் பெயர்க்கப்படுகின்றன. நேரடியாக தமிழில் எழுத வாய்ப்பே இல்லையா? இந்த மொழிபெயர்ப்புகள் ரொம்பவும் அபத்தம். பிழைகள் நிறைந்த இந்த அபத்தக் கூத்துக்கு ஒரு உதாரணமாக எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்.

      “Tea is a beverage made from the leaves of a tropical shrub. Tea is a hardly perennial shrub. The plant is constantly trimmed to a height of 1.5 m. to stimulate the growth of new leaves and to facilitate picking of the leaves”.(பக். 171, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)

      “தேயிலை இலைகள் பானம் தயாரிக்கும் அயன மண்டலச் செடியாகும். தேயிலை, பல வருடங்களுக்குப் பயன்தரக்கூடிய செடி வகையாகும். தேயிலையைப் பறிக்கவும் புதிய இலைகள் தொடர்ந்து முளைக்கவும் தேயிலைச் செடிகள் 1.5 மீ உயரத்திற்கு வெட்டிவிடப்படுகின்றன”.(பக். 183, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, தமிழ் வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)

       தேயிலை இலைகள்!? என்னே அருமையான மொழிபெயர்ப்பு! ‘Shrub’ என்பது ‘செடி’ என மொழிபெயர்க்கப்படுகிறது. ‘plant’ –ம் இங்கும் செடியாகிறது.

       உண்மையில் தேயிலை செடியல்ல; மரம். ‘Camellia sinensis’ (கேமலியா சைனன்சிஸ்) என்ற அறிவியல் பெயரால் வழங்கப்படும் இத்தாவரம் நீண்டு வளரும் மரவகைச் சார்ந்தது. இலைத் தேவைக்காக இம்மரம் வெட்டிவிடப்படுவதால் (கவாத்து) புதர்ச்செடியாக நமக்குக் காட்சியளிக்கிறது.

     இங்கு ஒரு இடையீடு: சவுக்கு மரத்தை அழகுக்காகக் கத்தரித்து வளர்ப்பதைத் பூங்காக்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ‘ஊசியிலைகளைக் கொண்ட, Casuarina equisetifolia’  என்று சொல்லப்படும் சவுக்குமரத்தை யாரும் செடியென்று சொல்வதில்லை. அதைப் போலத்தான் தேயிலை மரமும். பிறகெப்படி இது செடியாகும்?

        இதே பாடத்தில் கரும்பு ஒரு புல் வகை என்று கூறப்படுகிறதே! அது என்ன புல்வகை? சல்லிவேர்த்தொகுப்பைக் கொண்ட ஒருவித்திலைத் தாவரங்கள் அனைத்தும் புல்லினங்களே. தானியங்கள் மட்டுமல்ல; கரும்பு, மூங்கில் போன்றவை புல்வகைகள். ஆனால் தேயிலை மட்டும் செடியானது எப்படி?

      “Sugarcane is a tall tropical grass which grows to a height of 3.5 m. It is cultivated almost everywhere in the tropics and subtropics”.(பக். 171, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)

     “கரும்பு ஓர் உயரமான அயன மண்டலப் புல் வகைத் தாவரமாகும். இது 3.5 மீட்டர் வரை வளரக்கூடிய தாவரமாகும். இது அயன மண்டல மற்றும் துணை அயன மண்டலப் பகுதிகளில் பெரும்பாலன இடங்களில் வளர்க்கப்படும் பயிராகும்”.

      ‘வெப்பமண்டலம்’ என்கிற சொல் வழக்கிலிருக்க, ‘அயனமண்டலம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவானேன்? “பகுதிகளில் பெரும்பாலன இடங்களில்” என்ற மொழிபெயர்ப்பு ரொம்ப அபத்தமாக இல்லை!
(பக். 183, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, தமிழ் வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)

     “A range of crops is grown by humans – some food and other fiber. Cereals form the basic diet of mankind. Cereals are grass like plants which have starchy edible seeds. The most common cereals are rice, wheat, maize and millets”.(பக். 168, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)

      “மனிதனால் பல்விதமான வேளாண்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. சில பயிர்கள் உணவுக்காகவும் சில பயிர்கள் இழைகளுக்காகவும் பயிரிடப்படுகின்றன. தானியங்களே மனிதனது அடிப்படை உணவாகும். மாவுச்சத்துக் கொண்ட விதைகளையுடைய தானியவகைகள் புல்வகைத் தாவரங்களாகும். நெல், கோதுமை. சோளம் மற்றும் தினை வகைகள், பொதுவான தானிய வகைகள் ஆகும்”.(பக். 179, சமூக அறிவியல், எட்டாம் வகுப்பு, தமிழ் வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு: 2016)

      உணவுப் பயிர்கள், இழைப் பயிர்கள் தவிர்த்து வேறு பயிர்கள் இல்லையா? அது போகட்டும். “Cereals are grass like plants which have starchy edible seeds”, என்ற வரியின் மொழிபெயர்ப்பைக் கவனிக்கவும். “மாவுச்சத்துக் கொண்ட விதைகளையுடைய தானியவகைகள் புல்வகைத் தாவரங்களாகும்”.

       ஏன் இவ்வாறு நீட்டி முழக்கவேண்டும்? ஒவ்வொரு தமிழ்வழிப் பாடநூலும் ‘கோனார்’ நோட்சா என்ன? தமிழ் வழிபாடநூல் அதிக பக்கங்கள் கொண்டதாக இருப்பதையும் இங்கு கணக்கில் கொண்டாக வேண்டும். எளிமையாக சுருங்கச் சொல்லும் தன்மை தமிழில் இல்லையா? குறை தமிழில் இல்லை; உங்களது மொழி நடையில் உள்ளது. இப்படிப் படிப்பவர்கள் சிறந்த மொழிநடை உடையவர்களாக மாறமுடியுமா? இதிலிருந்து தப்பித்தோடியவர்களே இன்று மொழியாளுமை மிக்க எழுத்தாளர்களாக ஆகியிருக்கிறார்கள். தமிழில் படிப்பவனை ஏன் இவ்வாறு ஏளனமாக அணுகுகிறீர்கள்?      தமிழ் உள்ளிட்ட அனைத்துப் பாடநூற்களிலும் மொழிக்கொலை செய்ய அனுமதிக்கலாமா? இங்கு கொலை என்பது இலக்கணப் பிழை மட்டுமல்ல; சரளமான மொழிநடை. சிறந்த மொழியாக்கம், படிப்பதற்கு இனிமை போன்ற பல்வேறு காரணிகளைச் சுட்டுகிறேன். தமிழாசிரியர்களே அனைத்துப் பாடங்களையும் எழுதியது போல் இருக்கிறது. மொழியின் வீச்சை உணராதவர்கள் எழுதிய பாடங்களில் இனிமை, தெளிவு, சுருக்கம் இருக்க வாய்ப்பேயில்லை.

வெள்ளி, அக்டோபர் 28, 2016

03. மொழியாக்கப் புலிகள்!

03. மொழியாக்கப் புலிகள்!


- மு.சிவகுருநாதன்


 


        தமிழ் மன்னர்களின் வட இந்திய மற்றும் அந்நிய படையெடுப்புகள், வெற்றிகள், கொள்ளையிடல்கள், மக்கள் சிறைப்பிடிக்கப்படுதல் அனைத்தையும் இங்கு சாதனையாக, வீரமாக, மொழி மற்றும் இனப் பெருமையாகக் கட்டமைக்க நமது பாடநூற்கள் தவறுவதேயில்லை.         ஆனால் மறுபுறம் கஜினி முகமதுவின் சோமநாதபுரம் படையெடுப்புகள், முகமது கோரியின் படையெடுப்புகள் போன்றவைகள் பற்றி வெறுப்புணர்வை ஊட்டும் வகையில் வரலாற்றுப் பாடங்கள் எழுதப்படுகின்றன.          வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் ‘Somanathan The Many Voices of a History’ என்னும் நூலில் வரலாற்றின் நோக்குநிலைகளையும் பலகுரல்கள் ஒலிப்பதையும் பதிவு செய்கிறார். ‘கஜினி முகமது: சோமநாதா படையெடுப்பு – வரலாற்றின் பல குரல்கள்’ நூலை (ரொமிலா தாப்பர் நூலை முன்வைத்து.. சஃபி) பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இதைப் பற்றி வெறொரு சமயத்தில் பார்ப்போம்.         இங்கு கஜினி முகமது தொடர்பான ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள மொழியாக்கக் குளறுபடியை நோக்குவோம்.

      “Muhammad – bin – Baktiyar Khilji, one of the commanders of Muhammad of Ghori, destroyed Vikramasila and Nalanda Universities 1202 – 1023 A.D.

      He also captured Nadia in Bengal and parts of Bihar”.  (page: 138, சமூக அறிவியல், ஏழாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு – 2016)         இப்பாடப்பகுதியை ஒட்டி கோடிட்ட இடங்களை நிரப்புக (Fill in the blanks) வினா ஒன்று கேட்கப்படுகிறது.4. Muhammad – bin – Baktiyar Khilji captured Nadia in ----------. (Answer: Bengal or 1202 – 1203 A.D.)(page: 138, , சமூக அறிவியல், ஏழாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு – 2016)

         இதற்கு மேலே கொடுக்கப்பட்ட இரண்டு விடைகள் சாத்தியமெனினும் “He also captured Nadia in Bengal”, என்ற வரியைக் கொண்டு Bengal என்ற விடையே பொருத்தமானது. மேலும் ‘in’ என்ற இடைச்சொல்லுக்குப் (Preposition) பிறகு கி.மு. (B.C.) அல்லது கி.பி. (A.D.) என்ற குறிப்பு இருந்தால் ஆண்டு மட்டுமே சரியானது என்று சொல்லமுடியும். 2 வது வினா அப்படித்தான் கேட்கப்படுகிறது. அவ்வினாவும் கீழே தரப்படுகிறது.2. Muhammad – bin – Quasim invade sind in --------- A.D. (Answer: 712)(page: 138, , சமூக அறிவியல், ஏழாம் வகுப்பு, ஆங்கில வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு – 2016)         இப்போது தமிழ் வழிப் பாடாநூலுக்குள் செல்வோம்.
 “ முகமது கோரியின் தளபதி முகமது – பின்- பக்தியார் கில்ஜி என்பார், கி.பி. 1202 – 1203 ஆண்டுகளில் விக்ரமசீலா, நாளந்தா ஆகிய பலகலைக்கழகங்களை இடித்துத் தள்ளியதோடு வங்காளத்தில் நடியா பகுதியையும் பீகார் பகுதியையும் கைப்பற்றினார்”(பக். 142, சமூக அறிவியல், ஏழாம் வகுப்பு, தமிழ் வழி, இரண்டாம் பருவம், திருத்தப்பட்ட பதிப்பு – 2016)     இதில் 4 வது வினா கீழ்க்கண்டவாறு மொழியாக்கப்படுகிறது.

4. முகமது – பின் – பக்தியார் கில்ஜி --------------- ஆண்டில் நடியா பகுதியைக் கைப்பற்றினார். (விடை: கி.பி. 1202 - 1203)(4. Muhammad – bin – Baktiyar Khilji captured Nadia in ----------. )       இரண்டாவது வினாவையொட்டி 4 வது வினாவும் ஒரே மாதிரியாக மொழிபெயர்க்கப்படுகிறது. இதில் ஆண்டை தேவையின்றி நுழைக்க வேண்டிய அவசியமென்ன? ஒரே வினாவிற்கும் தமிழில் ஒரு பதிலும் ஆங்கிலத்தில் வேறு பதிலும் இருக்கலாமா? இதுதான் வினாவின் நம்பகமா?


2. முகமது – பின் – காசிம் ------------- ஆண்டில் சிந்து மீது படையெடுத்தார்.

(விடை: 712)2. Muhammad – bin – Quasim invade sind in --------- A.D.      இன்னும் கொஞ்சம். இங்கு ‘parts of Bihar’ என்பது பீகார் பகுதியா அல்லது பீகாரின் சில பகுதிகளா? இவற்றிற்கிடையே நுண்மையான வேறுபாடு உள்ளது. பழங்காலத்திலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் வங்காளத்துடன் இணைந்த பகுதியாகவே பீகார் இருந்தது அல்லவா!       இது ஓர் உதாரணம் மட்டுமே. பாடநூற்களைக் கூர்ந்து அவதானித்தால் நிறைய தட்டுப்படும் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

வியாழன், அக்டோபர் 27, 2016

வாசிப்புப் பண்பாடு

வாசிப்புப் பண்பாடு


மு.சிவகுருநாதன்

திருவாரூர்


இன்றைய, தி இந்து (அக்.26,2016) வில் வெளியான வாசகர் கடிதம்.

அக்டோபர் 22 அன்று வெளியான 'பதிவர்கள் ஏன் சினிமா விமர்சனம் எழுதிக் குவிக்கிறார்கள்' தலையங்கத்துடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

சினிமா பற்றி எழுதிக் குவிக்கும் வலைப்பதிவர்கள் நூல்களைப் பற்றியும் எழுத முன்வரவேண்டும்.

நூல் அறிமுகம் என்பது கடும் உழைப்பை, வாசிப்பை வேண்டுகிற வேலை. இங்கு குழந்தைப் பருவம் தொட்டே வாசிப்புப் பண்பாடு வளர்த்தெடுக்கப்படவில்லை.

காட்சி ஊடகங்களை அணுகுவதும் விமர்சிப்பதும் மிக எளிதாக அமைந்து விடுகிறது.

நான் படிக்கும் நூல்கள் பற்றிய விமர்சனக் குறிப்புகளை எனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நன்றி: தி இந்து

47. பறவைகளை உற்றுநோக்கல்47. பறவைகளை உற்றுநோக்கல்

மு.சிவகுருநாதன்


                (இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)


(புக் ஃபார் சில்ரன் வெளியீடாக வந்துள்ள ஆதி வள்ளியப்பனின் ‘நாராய் நாராய் .. பறவை சரணாலயங்கள் வழிகாட்டி’ சூழலியல் நூல் பற்றிய அறிமுகப்பதிவு.)
     பறவைகளைக் கவனித்தல் அல்லது உற்றுநோக்கல் என்பது இனிமையான ஓர் அனுபவம் மட்டுமல்ல; அது கானுயிர் அறிவியலின் ஒரு பிரிவு.  இதற்கு ஓர் இருநோக்கியும் (Binocular) அதற்கான மனநிலை மட்டுமே தேவை. பறவையியல் அறிஞர் டாக்டர் சாலீம் அலி இவ்வகையில் நமக்கு முன்னோடி.   இயற்கையோடு இணைந்து வாழ, முதலில் அவற்றை உற்றுநோக்க, ரசிக்கக் கற்றுத் தரவேண்டும். இதற்கு கல்வியில் உள்ள இடம் கேள்விக்குறியே. இம்மாதிரியான நூல்கள் அந்த வேலையைச் செய்வதில் முக்கியப் பங்காற்றுவதை மறுக்க இயலாது. 

   பத்தரிக்கையாளரும் கானுயிர் ஆர்வலருமான ஆதி வள்ளியப்பன் தமிழகத்திலுள்ள 12 புகலிடங்களையும் அங்குள்ள பறவைகள் மற்றும் சுற்றுப்புறத்தில் நாம் கவனிக்க மறந்த பறவையினங்கள் பலவற்றை நினைவிற்குள் கொண்டுவருகிறார். இன்னும் விரிவாக எழுதவேண்டிய தலைப்பு என்றாலும் குழந்தைகளுக்கான அறிமுகம் என்ற வகையில் இதன் பயன் உணரப்படும். தமிழகத்தில் 12 பறவைகள் புகலிடங்கள்தான் உள்ளவனா? கோடியக்கரை (நாகப்பட்டினம்) இந்தப் பட்டியலில் இல்லை. 

      தமிழ்நாட்டிலுள்ள 12 பறவைகள் புகலிடங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதுபோல வடுவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இல்லை; திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. கரைவெட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லை;  அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. மாவட்டங்கள் பிரிக்கும்போது அதைக்கணக்கில் கொண்டு திருத்தம் செய்யவேண்டும். அப்போதுதானே உண்மையான வழிகாட்டியாக இருக்கமுடியும்? பாடநூற்களில் இம்மாதிரி நூற்றுக்கணக்கில் பிழைகள் மலிந்துள்ளன. நாமும் அவற்றைக் கடத்தக்கூடாது. 

     இந்த வகைப்படுத்தலிலும் சிக்கல் இருக்கிறது. பறவைகள் புகலிடத்தில் வராத இதர புகலிடங்களுக்கும் பறவைகள் வருவது உண்டுதானே! கோடியக்கரை (நாகப்பட்டினம்)  புகலிடத்திற்கு நூற்றுக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றனவே. அது ஏன் தவிர்க்கப்பட்டது என்று தெரியவில்லை? கானுயிர்களை தனித்தனியேப் பிரித்து அணுகுவதும் முறைதானா என்று சிந்திக்கவேண்டும். 

புகலிடங்களின் பட்டியல்  (அடைப்புக்குறிக்குள் மாவட்டம்)


 • வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)
 • வேட்டங்குடி   (சிவகங்கை)
 • கரிக்கிளி  (காஞ்சிபுரம்)
 • பழவேற்காடு (திருவள்ளூர்
 • கஞ்சிராங்குளம் (ராமநாதபுரம்)
 • சித்திரங்குடி (ராமநாதபுரம்
 • உதயமார்த்தாண்டபுரம்  (திருவாரூர்)
 • வடுவூர்  (திருவாரூர்)
 • கூந்தங்குளம் (திருநெல்வேலி)
 • கரைவெட்டி  (அரியலூர்)
 • வெள்ளோடு (ஈரோடு)
 • மேல்செல்வனூர், கீழ்செல்வனூர் (ராமநாதபுரம்)
 • கோடியக்கரை (நாகப்பட்டினம்)


   சத்திமுத்தப் புலவரின் ‘நாராய் நாராய்.. ‘ எனத் தொடங்கும் சங்கப்பாடலில் செங்கால் நாரை (White Stork), புறநானூற்றில் 67 வது பாடலில் பூநாரை (Flamingo), பரணரின் அகநானூறு 276 வது செய்யுளில் சாம்பல் நாரை  (Eastern Grey Heron)  பற்றிய பதிவுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அறியாமையால் இவைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதையும் தெரிவிக்கிறது.

   பறவைகளை நோக்குதல் மேட்டுக்குடியினரின் பொழுதுபோக்கு போலவே அடையாளப் படுத்தப்பட்டுவிட்டது என்று ஆசிரியர் கூறுகிறார். சூழலியல் கூட மேல்தட்டு அடையாளத்தில்தான் இயங்குகிறது. இதன் காரணமாகவே தொல்குடிகளை இயற்கைக்கு எதிராக நிறுத்தும் போக்கு இன்று அதிகரித்துள்ளது. இதை இயற்கை மற்றும் மக்கள் சார்ந்த சூழலியலாக வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

     திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் புகலிடத்தில் மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork), கூழைக்கடா, நீர்க்காகம், புள்ளிமூக்கு வாத்து, பாம்புத்தாரா, கொக்குகள் என பல பறவைகள் இருந்ததையும் காப்பாளர் (Watcher) ‘பறவை மனிதன்’ பால்பாண்டியின் பறவைகள் பற்றிய பட்டறிவு பெரிதும் பயன்பட்டதைச் சொல்கிறது. வேடந்தாங்கல் ஏரியைவிட கூந்தங்குளம் ஏரி பெரியது. சாலை வசதி, கோபுரம். தொலைநோக்கி இல்லையென்ற குறையைப் பதிவு செய்கிறார். மிகைப்படுத்தப்பட்ட சுற்றுலா முன்னேற்றங்கள் கானுயிருக்குக் கேடாக முடிவதையும் இங்கு நாம் கவனிக்கவேண்டும். 

   பறவைகளின் ஒலிகள், எச்சங்கள், கூடுகளின் மணம் ஆகியவற்றை இம்மக்கள் தொந்தரவாகக் கருதுவதில்லை. ஏரியில் பெருமளவு மீன் பிடிப்பதில்லை. தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது வெடி வெடிப்பதில்லை. இப்படிபட்டக் கட்டுபாடுகளால் பறவைகள் இன்னலுக்கு உள்ளாவதில்லை. கூந்தங்குளம் மக்கள் வெளிப்படுத்தும் பண்புகள், இயற்கையை சுரண்டாமல். அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு, இணக்கமாக வாழும் மூதாதைப் பண்பை வெளிப்படுத்துவதாகக் குறிக்கிறார். இன்னும் ஒருபடி மேலே கரிக்கிளியில் (காஞ்சிபுரம்) வெடி மட்டுமல்ல; மேளம்கூட வாசிப்பதில்லை. வலசைக்காலம் முடிந்தபிறகே ஊர்த் திருவிழா நடத்தப்படுகிறது. 

     மஞ்சள் மூக்கு நாரை, நத்தைக்குத்தி நாரை, சாம்பல் நாரை, குருட்டுக்கொக்கு, இராக்கொக்கு, சின்னக்கொக்க்கு, உண்ணிக்கொக்கு, கூழைக்கடா, நீர்க்காகம், சிறகி, முக்குளிப்பான், அருவா மூக்கன் (அன்றில் – Black Ibis) ஆகிய இனங்களை காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் புகலிடத்தில் காணமுடிந்தது விளக்கப்படுகிறது. மஞ்சள் மூக்கு நாரைகளும் அரிவாள் மூக்கன்களும் கூடுகட்ட பச்சை மரக்கிளைகளை முறித்துச் சென்றதும் சொல்லப்படுகிறது. 

     வேடந்தாங்கல் பறவைகள் புகலிடம் 1798 –ல் அமைக்கப்பட்ட மிகப் பழமையானதாகும். இங்கு வரும் பெரும்பாலான பறவைகள் நீர்ப்பறவைகளே. இவைகளின் எச்சம் மண்ணை வளமாக்குகிறது. மாறாக செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்ல்லிகள் பறவைகளுக்கு எமனாக இருக்கின்றன. எல்லா வலசைப் பறவைகளும் வெளிநாடுகளிலிருந்து வருவதில்லை. உள்நாட்டு வலசைப் பறவைகளும் உண்டு என்பது போன்ற  தகவல்கள் கூறப்படுகின்றன. 

     இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரி (Lagoon) பழவேற்காடு. பூநாரைகள்  (Flamingo) அதிகம் வரக்கூடிய இங்கு இறால் பண்ணைகள், எண்ணூர் அனல்மின் நிலையம், ரியல் எஸ்டேட் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவது பதிவாகிறது. 

     வேட்டங்குடி (சிவகங்கை), வடுவூர் (திருவாரூர்) போன்ற பறவைகள் புகலிடங்களும் பேசப்படுகின்றன. “மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். பறவைகள் இன்றை மனிதர்கள் வாழமுடியாது”, என்கிற சாலிம் அலியின் கருத்து பறவைகளில் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. 

  பின்னிணைப்பாக, மேற்கு வங்க நாரை கிராமம் (ஜாக்யநகர்), கர்நாடக கூழைக்கடா கிராமம் (கோக்கரே பெல்லூர்), ராஜஸ்தான் ‘கொக்குக் கிராமம்’ கிச்சன், நேபாளத்தில் பாறுகள் (பிணந்திண்ணிக் கழுகுகள்) க்காக உணவகம் போன்றவை சொல்லப்படுகின்றன. 

    டைக்ளோபெனாக் மருந்து கொடுக்கப்பட்ட, இறந்த கால்நடைகளை இந்தக் கழுகுகள் உண்பதால் அழிகின்றன. இந்த மருந்து கொடுக்கப்பட்ட கால்நடைகள் இந்த உணவகம் மூலம் அவைகளுக்கு வழங்கப்படுகின்றனவாம். இறந்த மனித உடலை பறவைகளுக்கு உணவாக்குவது நமது தொல்குடி வழக்கங்களுள் ஒன்று. இந்தியாவில் வசிக்கும் பார்சிகள் (ஜொராஸ்டிரிய மதம்) இதைச் செய்வது பற்றிய குறிப்பும் இதில் உண்டு. 

    பறவைகள் புகலிடங்கள் குறித்த விரிவான, முழுமையான வழிகாட்டி என்று சொல்லமுடியாவிட்டாலும், தொடக்கநிலை கையேடு என்ற வகையில் இதன் பயன்பாடு இருக்கும் என்று நம்பலாம். கானுயிர் ஆர்வத்தைத் தூண்டவும், இயற்கையை நேசிக்கவும்  இதுபோன்ற நூல்கள் பயன்படும்.
   

நாராய் நாராய் .. பறவை சரணாலயங்கள் வழிகாட்டி

ஆதி வள்ளியப்பன் 

வெளியீடு: 

பூவுலகு மற்றும் 

புக் ஃபார் சில்ரன் 

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..

முதல்பதிப்பு: ஜூலை 2016
பக்கம்: 64
விலை:  ரூ. 50

தொடர்பு முகவரி: 

பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com


புதன், அக்டோபர் 26, 2016

இந்துத்துவ ஆபத்துகளும் வேத-சமஸ்கிருத-குருகுல-புராண அபத்தங்களும்46. இந்துத்துவ ஆபத்துகளும் வேத-சமஸ்கிருத-குருகுல-புராண அபத்தங்களும்

மு.சிவகுருநாதன்

(இந்நூல் என் வாசிப்பில்… தொடர்.)

(பாரதி புத்தகாலயம் வெளியீடாக செப்டம்பர் 2016 –ல் வந்துள்ள அ.மார்க்சின் ‘புதிய கல்விக்கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும்’  என்ற நூல் பற்றிய அறிமுகப்பதிவு.)      தமிழகத்தில் பெரியாரைச் சொல்லிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் வெறும் பெயரளவிலான எதிர்ப்பு என்ற அளவோடு அடங்கிப்போக, ஆசிரிய இயக்கங்களும்கூட இதன் விளைவுகளைப்  பெரிதும் உணராத நிலையில், எப்போதும் போல வீரியமான விவாதங்கள், நூல்கள், கருத்தரங்குகள் என புதிய கல்விக் கொள்கை குறித்த எதிர்ப்புச் செயல்பாடுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் கல்விக்கொள்கை, குலக்கல்வித்திட்டம், இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்ற எதிர்கொண்ட நீண்ட பாரம்பரியம் உண்டல்லவா! இவற்றில் இடதுசாரி இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் பங்கேற்பு மெச்சத்தக்கது.  முன்னாள் NCERT தலைவர் டாக்டர் அர்ஜூன் தேவ் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்னது இப்போதும் தமிழகத்திற்கு பாராட்டாகிறது (பக். 12).

      அ.மார்க்ஸ் தனக்கே உரித்தான பாணியில் இந்துத்துவக் கல்விக் கொள்கையை அம்பலப்படுத்துகிறார். கல்வியில்,  பாடத்திட்டத்தில் இந்துத்துவ அபாயம் குறித்து தொடர்ந்து கரிசனத்துடன் பல நூல்களை எழுதியுள்ளதை யாரும் அறியாமலிருக்க இயலாது. ஆகஸ்ட் மாதத்தில் அவரது முகநூல் பக்கத்தில் இதிலுள்ள 19 கட்டுரைகளும் வெளியாகி பரவலான கவனிப்பைப் பெற்றது. உடனடி அவசியம் கருதி இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. 

   முன்னாள் அரசு அதிகாரிகள் நால்வரும் ஒரு இந்துத்துவப் பின்புலம் கொண்ட கல்வியாளர் (!?) ஒருவரும் இணைந்து தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்த அபத்தம். தொடக்கக் கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரை சம்ஸ்கிருதம் பயில வசதி என்று ஆட்சியாளர்களின் நோக்கங்கள் வெளிப்படையாகவும், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழிப்பாடம் என்று நோக்கம் இல்லாமல் முன்வைக்கும் தன்மை எடுத்துக்காட்டப்படுகிறது. இந்தியாவில் தற்போது இருக்கும் 1,721 தாய்மொழிகளில் 122 மொழிகளே ஓரளவு வளர்ச்சியடைந்தவை. மீதமுள்ள 1,599 மொழிகளை ஐந்தாம் வகுப்பு வரை பாடமொழியாக்க, நூல்களை உருவாக்க என்ன திட்டம் இருக்கிறது என்று சொல்லாதபோது, இது அவர்களது நோக்கமில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு ஆர்ப்பட்டமான முன்மொழிவுகள், அலங்கார வார்த்தையாடல்கள் ஆகியற்றின் ஊடாக அவர்கள் மறைத்து, நசுக்கி, பூடகப்படுத்தி முன்வைக்கும் உண்மை நோக்கங்களை அறிவது ஒன்றும் கடினமான காரியமில்லை, என்றும் முன்னுரையில் சொல்கிறார். 

    ‘இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ எனப்படும் குஜராத்தில் கல்விச் சீரழிவுக் காரணங்களைப் பின்வருமாறு முன்வைக்கிறது.


 • கல்வியில் ஆர்வமற்ற (ஏழை/அடித்தளச் சாதி) பிள்ளைகள்.
 • கல்வி அறிவற்ற (ஏழை/அடித்தளச் சாதி) பெற்றோர்கள்.
 • ஒழுங்காகப் பணி செய்யாத ஆசிரியர்கள்.
 • பெண் ஆசிரியைகள்.


   “பழியை இப்படி மக்கள் மீது சுமத்திவிட்டு, கல்வியைத் தனியார்மயமாக்குவதும், உள்ளடக்கத்தை இந்துத்துவமயமாக்குவதுமே அதன் நோக்கம்”, (பக். 15) இதன்மூலம் தெளிவாக உணர்த்தப்படுகிறது. 

    “இந்த அறிக்கையில் ஒன்றும் பூதம் இல்லையே!”, என்று சொன்ன மகேஷின் ‘தி இந்து’ கட்டுரைக்கு மறுப்பாக, “இந்திய மரபு ஒற்றை மரபு இல்லை. இந்திய மரபு என்று சொல்வதைக் காட்டிலும் ‘இந்திய மரபுகள்’ என்று சொல்வதே சரி. அவர்கள் சுட்டிக் காட்டும் ஆரிய வைதிக மரபு தவிர தனித்துவத்துடன் கூடிய ஒரு திராவிடத் தமிழ் மரபு இங்கு உண்டு. எண்ணற்ற அடித்தள பழங்குடி மரபுகள் உண்டு. இஸ்லாமிய, கிறிஸ்தவ, சூபி மரபுகள் உண்டு. இராவணனின் கொடும்பாவியை எரித்துக் கொண்டாடும் மரபு ஒருபக்கம் உண்டென்றால், இன்னொருபக்கம் இராவணனைத் தம் ஆதி மூதாதைகளில் ஒருவராக வணங்கிக் கொண்டாடும் கோண்டு இன மரபும் இந்திய மரபுதான். இந்தப் பன்மைத் தன்மையை ஏற்காமல், “ஆர்யபட்டா சாணக்கியா மதன் மோகன் மாளவியா” என ஒரு இந்து மரபைக் கட்டமைப்பது அப்பட்டமான ஒரு இந்துத்துவ அஜென்டா அன்றி வேறென்ன?. என்று வினா எழுப்புகிறார். (பக். 18)

      உள்ளீடுகள் அறிக்கையின் தொடக்கமே மிகப்பெரிய அபத்தம்,  “தொல் இந்தியாவில் முதலில் உருவான கல்வித்திட்டம் வேதக்கல்வி எனப்படும் … ‘குருகுலக்கல்வி’”, என்று  சொல்வதிலிருந்து எளிதில் விளங்குகிறது. குருகுலக் கல்வியில் பெண்களுக்கும் அடித்தளப் பிரிவைச் சேர்ந்த ஏகலைவர்களுக்கும் இடமில்லை. குருகுல முறை  வெறும் அச்சுப்பதிவுகளைத்தான் உருவாக்குமே ஒழிய சிய சிந்தனையுடைய அறிவாளிகளை உருவாக்கும் வாய்ப்பு குறைவு என்பதற்கு உ.வே.சாமிநாதய்யரும் அவரது குருவான மாயூரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் சுட்டப்படுகிறார்கள். 

   “ஒரே நேரத்தில் பல ஆசிரியர்களிடம் பல மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதுதான் சிறந்த கல்விமுறை. வைதீகத்தை மறுத்தெழுந்த நம் அவைதீக பாரம்பரியமான பவுத்த/சமணக் கல்விமுறை அத்தகையதே. அது ஒரு monastic கல்விமுறை”, என்று சொல்லி, “பள்ளி, கல்லூரி எனும் இரு சொற்களும் பாலி மொழியின் கொடையல்லவா? சமஸ்கிருதம் அத்தகைய சொற்களை நமக்குத் தரவில்லையே. அந்தக்  கல்விமுறை சமணம் சார்ந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். உறுதியாக அது பார்ப்பன குருகுல முறை அல்ல”, என்பது விளக்கப்படுகிறது.

      14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குடும்பத் தொழில்களில் வேலை செய்ய அனுமதிக்கும், 1986 –ம் ஆண்டு குழந்தை ஒழிப்புச் சட்டத்திருத்தம் செய்த இவர்களின் முதன்மை நோக்கமே குலக்கல்வி தவிர வேறில்லை, என்பது   வலியுறுத்தப்படுகிறது. மாணவர்களைத் தரம்பிரிக்கும் இக்கொள்கை ஏன் பத்ரி சேஷாத்ரிகளால் கொண்டாடப்படுவதையும், ”மாணவர்களைத் தரம் பிரிப்பது சமூகச் சீரழிவுக்கே இட்டுச் செல்லும்”, என்ற பேரா.ஜோ.போலர் அவர்களின் கருத்தும் விளக்கப்படுகிறது. 

     கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு முடிய (14 வயது) அனைவருக்கும் தேர்ச்சியளிப்பது கல்வியின் தரத்தைக் குறைப்பதாகவும் எனவே மீண்டும் 5 –ம் வகுப்புக்குப் பிறகு ‘ஃபெயில்’ முறை அமலாகும். இச்சட்டம் அமலுக்கு வந்தபோது இந்தியாவெங்கும் இருந்த 12 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்க ஏதும் செய்யாமல், ஃபெயிலாக்கும் நோக்கம், “பெருந்திரளான அடித்தளச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விலக்கி தொழிற்பயிற்சியில் தள்ளுவது”, என்கிற சூழ்ச்சி உணர்த்தப்படுகிறது. 

    ஆர்.எஸ்.எஸ்சின் பரிந்துரைகள் கல்விக்கொள்கையில் இடம் பெறுகிறது. பள்ளிகளில் விழுமியக் கல்வியை (value education) புகுத்துவது, தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது, எட்டாம் வகுப்பு முடிய தேர்ச்சியளிப்பதை ஒழிப்பது, சமஸ்கிருதக் கல்விக்கு ஊக்கமளிப்பது போன்ற பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டுள்ளன.  கல்வி காவிமயமாவதற்கு இதைவிட வெறென்ன சான்று வேண்டும்?  

     சமஸ்கிருதம் என்னும் செத்துப்போன மொழியை, பிணத்தைத் தூக்கிப் பிடிப்பதன் ஊடாக, தாய்மொழிக்கல்வி எனும் தேன் தடவிய நஞ்சை இவர்கள் பரிமாறுகிறார்கள். இது உள்ளூர் தமிழ் தேசியர்களுக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது. தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கும் இவர்கள் மொழிவாரி மாநிலக் கொள்கைக்கு எதிரானவர்களாக இருப்பது, மொழிப்பற்று மற்றும் அடையாளம் மத அடிப்படையில் இந்துக்களைத் திரட்டுவதற்குத் தடையாக இருக்கும் என்ற ஆர்.எஸ்.எஸ். அணுகுமுறையும், குறிப்பிடப்படுகிறது. 

    2009 கல்வி உரிமைச்சட்டத்தின் பிரிவு 12 (1) c பற்றிப் பேசும் கட்டுரையில், சிறுபான்மை மக்களைச் சீண்ட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வலிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்துத்துவ அரசின் விசுவாசமான ஓய்வுபெற்ற அதிகாரிகள், சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை மற்ற பெரும்பான்மை மக்களுடன் பொருளாதாரத்தில் சமநிலை வகிப்பவர்களாக அணுகும் நேர்மையற்ற அணுகுமுறையை சுட்டிக்காட்டுகிறார். சச்சார் குழு, ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் தொடங்கி பல்வேறு ஆய்வுகளில் முஸ்லீம்களின் பின்தங்கிய பொருளாதார நிலை நிறுவப்பட்டுள்ளதை கல்விக்கொள்கை எப்படி மறுக்க இயலும்?

    “எளிய மக்களுக்கு 25 சத ஒதுக்கீட்டை ஏற்பதில் பிடிவாதம் காட்டி பொதுப் போக்கிலிருந்து விலகி நிற்காமல் சிறுபான்மை நிறுவனங்கள் இதை ஏற்று மைய நீரோட்டத்தில் இணைய வேண்டும்”, என்று அ.மா. சொல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

   புதிய கல்விக்கொளகையின் ஆபத்துகள் பற்றி இந்நூல் வெளிப்படுத்தும் இதர அம்சங்களை சுருக்கமாகத் தொகுத்துக் கொள்வோம்.


 • உயர்கல்வியிலிருந்து தொழிற்பயிற்சிக்கு அனுப்புதல், மீண்டும் ஒரு வருணப் பிரிவினை, வருண அடிப்படையில் தொழிற்பிரிவினை ஆகியவற்றை சாத்தியமாக்கும் கருவியாக இது இருக்கும்.
 • திறன் இந்தியா என்கிற பெயரில் சான்றிதழ் இல்லாத திறன் நீக்கம் செய்யப்படும் தொழிலாளிகளாக மாறி, தொழிலாளர் சட்டப் பாதுகாப்பு, குறைந்தபட்ச கூலி முதலியவற்றை இழக்கும் நிலை ஏற்படும்.
 • மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதைக் காரணம் காட்டி அரசுப்பள்ளிகளை மூட வழிவகுக்கும்.
 • பல்கலைக் கழக மானியக்குழுவின் அதிகாரம் பறிக்கப்பட்டு,  முற்றாக ஒழிக்கப்படும்.
 • கல்வியாளர்கள் வெளியேற்றிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். (இந்துத்துவ) ஆதரவாளர்களால் அவ்விடங்கள் நிரப்பப்படும். (IES – INDIAN EDUCATIONAL SSERVICE) உருவாக்கப்பட்டு, கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ ஆட்களால் கல்வித்துறை கல்வி நீக்கம் செய்யப்படும்.
 • மாணவர்களின் கல்வி மற்றும் கருத்துரிமைகள் முற்றாக மறுக்கப்படும். JNU மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அனைத்து கல்வி நிறுவனங்கள் மீதும் நடக்கும்.
 • கல்வியில் இடஒதுக்கீடு என்கிற பேச்சே இருக்காது.
 • அரசே தரம் பிரித்து வேறுபாட்டை அதிகரிக்கும்போது, கல்விக்கூடங்களில் தீண்டாமை போன்ற ஒதுக்கல்கள் அதிகமாகும். இதைப் பற்றியெல்லம் இக்குழு கவலைப்படவில்லை. மாறாக மவுனம் சாதிக்கிறது
 • ஆசிரியர்கள் பலிகடாவாக்கப்படுவார்கள். இவர்கள் கார்ப்பரேட் கலாச்சாரத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.       மொத்தத்தில் பன்மைத்துவ இந்தியாவை மறுதலித்து, ஒற்றை வைதீக இந்துத்துவ கலாச்சாரத்தைப் பேணவும், இந்தியக் கல்வியை வியாபாரமாக்கும் WTO / GATS ஒப்பந்தத்திற்கு திறந்துவிட்டு, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு செவை செய்வதன் தந்திரமே இக்கல்விக் கொள்கை. இதன் ஊடாக தமது கருத்தியல் உள்ளீடுகளைக் கல்விக் கொள்கையின் உள்ளீடுகளாக இணைக்கும் அயோக்கியத்தனத்தை இந்நூல் வெளிப்படுத்துகிறது; நம்மை எச்சரிக்கவும் செய்கிறது. 


புதிய கல்விக் கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும்

அ.மார்க்ஸ்

வெளியீடு: 

பாரதி புத்தகாலயம்

முதல்பதிப்பு: செப்டம்பர்  2016
பக்கம்: 80
விலை:  ரூ. 50

தொடர்பு முகவரி: 

பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com