செவ்வாய், பிப்ரவரி 18, 2020

பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்

பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்

 
மு.சிவகுருநாதன்
         எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவத்தில் 'காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை' என்றொரு பாடம் உண்டு.

       இப்பாடத்திலும் நமது பாடமெழுதிகள் இந்துத்துவச் சொல்லாடல்களையும் இஸ்லாம் வெறுப்பையும் எப்படியெல்லாம் உற்பத்தி செய்கின்றனர் என்று பாருங்கள்.

    "ரிக்வேத காலத்தில்  மனைவியின் நிலை போற்றுதலுக்குரியதாக
இருந்தது. குறிப்பாக மதச் சடங்குகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வது
ஏற்றுக்கொள்ளப்பட்டன". (பக்.157)

        இவ்வாறாக உச்சத்தில் இருந்த இந்தியச் சமூகம் இடைக்கால இஸ்லாமியப் படையெடுப்புகளில் மிக மோசமான நிலையை அடைவதாக 'பாடநூல் இந்துத்துவவாதிகள்' கதையாடல்களை நிகழ்த்துகின்றனர்.

"இடைக்காலம்

     இடைக்கால சமூகத்தில் பெண்களின்  நிலை மேலும் மோசமடைந்தது. சதி, குழந்தை திருமணங்கள், பெண்சிசுக்கொலை, பர்தா முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற பல  சமூக தீமைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்". (பக்.157)

இதன் தொடர்ச்சியாக,

       "முஸ்ஸீம் படையெடுப்பின் விளைவாக  பர்தா முறை பிரபலமானது. இடைக்காலத்தில்  விதவையின் நிலை பரிதாபமாக மாறியது", (பக்.157) என்கின்றனர். ஆனால் 'சதி'யில் தாங்களாகவே விரும்பித் தீவைத்துக் கொண்டனராம்!

     "இடைக்காலத்தில் கல்விமுறை ஆரம்ப  கட்டத்தில்தான் இருந்தது". (பக்.157)

       ஆனால் வேதகாலத்தில் கல்வி உச்சத்தில் இருந்தது போலும்!

     "குழந்தைத் திருமணம் பழங்குடியினரிடையே வழக்கத்தில் இருந்தது". (பக்.158)

      இந்தியச் சமூகத்தில் அன்று லட்சக் கணக்கில் ஒரு வயதுப் பெண் விதவைகள் பிராமணர்களில் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

       பிராமணர்கள் எப்பொழுது பழங்குடிகள் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்? இவ்வாறு தமிழகப் பாடநூல்கள் உருவாக்கும் புனைவுகள் எண்ணற்றவை.

'சதி' யைப் பற்றிய இவர்களது பார்வை:

    "இந்திய சமூகத்தில் நிலவிய  மற்றொரு சமூகதீமை சதி ஆகும். குறிப்பாக
ராஜபுத்திரர்களிடையே இப்பழக்கம்  காணப்பட்டது. அப்போதிருந்த நிலப்பிரபுத்துவ சமூகம் சதி எனும் சடங்கை ஆதரித்தது. இதன்  பொருள் 'கணவனின் சிதையில் தானாக  முன்வந்து விதவைகள் எரித்துக்கொள்ளுதல்'
ஆகும். ஆரம்ப காலத்தில் தாமாகவே முன்வந்து செய்துகொண்டனர் ஆனால்
பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலால்  சிதையில் அமர்ந்தனர்". (பக்.159)

       பெண்களது விருப்பத்தை ஏன் ஆங்கிலேய அரசு தடை செய்ய வேண்டும்? ராஜாராம் மோகன் ராய் ஏன் ஒழிக்க முயற்சித்தார்?

     'தேவதாசி முறை' குறித்தும் இவர்களது ஆய்வின் வெளிப்பாட்டையும் காணுங்கள்.

    "தேவதாசி (சமஸ்கிருதம்) அல்லது தேவர் அடியாள் (தமிழ்) என்ற வார்த்தையின் பொருள் “கடவுளின் சேவகர்” என்பதாகும். பெண் குழந்தையை கோவிலுக்கு நேர்த்தி கடனாக  அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் கோயிலைக் கவனித்துக்கொள்வதோடு  மட்டுமல்லாமல், பரத நாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய இந்திய கலைகளையும் கற்றுக் கொண்டனர். அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையையும் அனுபவித்தனர். பிற்காலங்களில் அவர்கள் மோசமாக  நடத்தப்பட்டு அவமானப் படுத்தப்பட்டனர்". (பக்.159)

      தேவதாசிகள் பெற்ற சமூக உயர்நிலைகள் எவை? அத்தகைய நல்லப் பழக்கத்தை ஏன் சட்டம் மூலம் தடுக்க வேண்டும்?

     இச்சட்டம் கொண்டுவர பெரியாருடன் சேர்ந்து ராஜாஜி தார்மீக ஆதரவு கொடுத்தாராமே! (பக்.160)

     தீரர் சத்தியமூர்த்தி அய்யர் கொடுத்த வெளிப்படையான ஆதரவை ஏன் பாடநூல் இருட்டடிப்பு செய்கிறது?

இன்னும் விரிவாக...

பின்னர் காண்போம்...

எதையும் கேட்போம்! எப்படியும் கேட்போம்!!

எதையும் கேட்போம்!

எப்படியும் கேட்போம்!!


மு.சிவகுருநாதன்


      10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வில் இவ்வாண்டு (2019-2020) முதல் "எதையும் கேட்போம்! எப்படியும் கேட்போம்!!", என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே! 

     அதற்கு முன்னோட்டமாக திருப்புதல் தேர்வுகளில் படத்தில் இருக்கும் தமிழ்நாடு நிலவரைபடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரபிக்கடல், சோழமண்டலக் கடற்கரை போன்றவற்றைக் குறிக்க வேண்டும்.

     அந்தக்காலத்திலிருந்தே "இந்தியப் படத்தில் குறிக்கவும்", என்ற வினாவில் இலங்கையைக் (ஸ்ரீலங்கா) குறிக்கச் சொல்லிக் கேட்பதுண்டு. என்னே! அகண்ட பாரதக் கனவு!!

 படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 
       அதைப்போலவே இங்கும் தமிழ்நாடு படத்திலும் கூட ஸ்ரீலங்கா, அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத் தீவுகள், மாலத்தீவுகள், மினிக்காய் தீவு, மலபார் கடற்கரை போன்றவற்றையும் குறிக்கச் சொல்லிக் கேட்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

         "எதையும் கேட்போம்! எப்படியும் கேட்போம்!!", என்ற கொள்கை முடிவுக்கு இது மேலும் வலுவூட்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறேன். இம்மாதிரியான எளிய நிலவரைபட வினாவை மிக எளிதாகக் கையாண்டு, அனைவரும் தேர்ச்சியடைந்து தொலைத்துவிடுவதால் வடிகட்ட (Screening) இயலாமற்போவது கல்வித்துறைக்கே பேரழிவாக இருப்பதனால், இனி வருங்காலத்தில் நிலவரைபடத்தைத் தாங்களே வரைந்து இம்மாதிரி 'குண்டக்க... மண்டக்க...' என்று கேட்கப்படும் இடங்களைக் குறிக்க வழிவகுத்து, அதற்குரிய கொள்கை முடிவுகளை உடனே எடுக்க வேண்டுமாய் வேண்டுகிறோம்!!!

திங்கள், பிப்ரவரி 17, 2020

மநுதர்மத்தைக் கொண்டாடும் பாடநூல்கள்!


மநுதர்மத்தைக் கொண்டாடும் பாடநூல்கள்! 


(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)


மு.சிவகுருநாதன்


  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 59) 


7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:      நான்காம் வகுப்பு இரண்டாம் பருவ தமிழ்ப் பாடநூலில்  'மநுநீதிச் சோழன் நாடகம்'  பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

   திருவாரூர்காரர்களுக்கு இப்படி ஒரு பெருமிதம் கற்பிக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உள்ளிட்டவர்கள் கூட இதிலிருந்து தப்பவில்லை. திருவாரூரில் மணிமண்டபம் கூட கட்டியாயிற்று. அப்படி ஒரு மன்னன் இருந்தற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. அது வெறும் புனைவு; அதாவது தொன்மம். அதுவும் மநு தர்மத்தை எளிய மக்களிடம் கொண்டுசேர்க்கப் பார்ப்பனியம் உருவாக்கிய கதையாடல். இது ஊருக்கு ஊர்  ஒரு மன்னன்  வம்சப்  பெயருடன் விரியும் தன்மை கொண்டவை. 

    மனிதர்களை இழிவுபடுத்தவும் கதைகள் மூலமாக, வருணாஸ்ரம தர்மத்தை  தூக்கி நிறுத்தவும் அதைக் கொண்டாட முயல்வதும் ஒரு விதமான பாசிச மனநிலை. அதில் குழந்தைகளை ஈடுபடுத்துவது மிக மோசமானது. 

  பாடம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

 "8 . பசுவுக்குக் கிடைத்த நீதி    (நாடகம்)

முன்கதைச் சுருக்கம்

      சோழ மன்னர்களுள் ஒருவன் மனுநீதி. முறைமை தவறாது  ஆட்சி புரிவதையே தன் நோக்கமாகக் கொண்டவன். ஆயினும்,  அவன் ஆட்சிக்காலத்தில் வாயில்லாப் பசுவுக்கு ஏற்பட்டது ஒரு  பேரிழப்பு. அதற்குக் காரணமானவன் வேறுயாருமல்லன்,  அரசனின் மகனே. இப்போது, அரசன் என்ன செய்வான்? தன்  மகன் என்று அவனைக் காப்பாற்றுவானா? அல்லது தன் கன்றை இழந்து வாடும் அந்தப் பசுவுக்கு உரிய நீதியை வழங்குவானா?  வாருங்கள் தெரிந்துகொள்ள அரங்கத்துக்குள் நுழைவோம்", (பக்.46)
(…………………………………………………………………………..)
     (தவறிழைத்தவன் தன் மகனே யானாலும், குற்றம் குற்றமே என்று  எண்ணியதோடல்லாமல், அந்தத் தவற்றுக்குச் சரியான தண்டனையும் வழங்கிப்  பசுவின் துயர் துடைத்து, வரலாற்றில் அழியா இடம்பெற்றான் மனுநீதிச் சோழன்.)

(திரை விழுகிறது.)”,  (பக்.50)

     இது குழந்தைகளுக்குச் சொல்லப்படும்  ஒருவித கதைதானே என்று சிலர் கேட்கலாம். அந்தக் கதை குழந்தைகளிடம் எதை விதைக்கின்றது என்பது முதன்மையானது. 

     70 வயது முதியவர் ஏதேனும் ஒரு முறைகேட்டில் ஈடுபட்டாலும், "பார்த்தீர்களா, பள்ளிகளில் நல்லொழுக்கம் / நீதிபோதனைப் பாடவேளைகள் இல்லை. அதனால்தான் இவ்வாறு நடக்கிறது", என்று ஒரு கூட்டம் கிளம்பிவிடுகிறது. 

     இவர்கள் சொல்லும்  நீதிபோதனைகள் அனைத்தும் மனுநீதிச் சோழன் தரத்திலானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பழிவாங்குதல், சூழ்ச்சி, வஞ்சகம், பொறாமை, சதி, மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் பாகுபடுத்தி இழிவுபடுத்தும் வக்கிரங்கள் நிறைந்தவை இவை. 

    "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்", என்கிற வேதகாலப் பழக்கங்கள் இன்றெப்படிப் பொருத்தமாகும்? இந்தப் பழிவாங்கும் உணர்வு குழந்தைகளை எதை நோக்கி இட்டுச்செல்லும்?

     பாடத்தின்  இறுதியாக கீழ்க்கண்ட  சிந்தனை உசுப்பல்கள் இடம்பெறுகின்றன.

"வாங்க பேசலாம்

    நீங்கள் மனுநீதிச் சோழனாக இருந்தால், பசுவின் துயரத்தை எப்படிப் போக்குவீர்கள்?

சிந்திக்கலாமா!

   வீட்டிற்குப் போகும் வழியில் ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சிலர் துன்புறுத்துகின்றனர். அவர்கள் செய்தது சரியா அந்தச் செயலை நீங்கள் எப்படித் தடுப்பீர்கள்?"  (பக்.50)

    குழந்தை ஏன் மநுநீதிச்சோழனாக இருக்க வேண்டும்? ஊராட்சி, பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றின் தலைவராக இருக்கக் கூடாதா?
    
  விலங்குகளைத் துன்புறுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்க இக்கதை எவ்விதம் உதவும்? 

    எருமை, காகம் போன்ற கருமை நிறமுடைய  'விளிம்பு நிலை விலங்குகள்' பற்றிய கதைகள் எப்போது பாடத்திட்டத்தில் இடம்பெறும்?

    மொழிப்பாடத்தில் இடம்பெறும் ஒன்றை இவ்வளவு விமர்சிக்க வேண்டுமா? என்றும் சிலர் வருத்தப்படவும் கூடும். 

     இந்த வருணாஸ்ரம பாசிச மனநிலை மிகச் சாதாரணமான ஒன்றல்ல. எட்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் (குடிமையியல்) பாடத்தைப் படிக்கும்போது இதை உணர்வீர்கள். 

    எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் அலகு: 02 நீதித்துறை. இதில் ‘பண்டைய காலத்தில் நீதித்துறை’ எனும் தலைப்பில் மநுதர்மத்தின் பெருமை பேசப்படுகிறது. அப்பகுதி பின்வருமாறு: 

    “பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து  சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது.  அரசர் நீதியின் மூலாதாரமாக விளங்கினார்.  பெரும்பாலான அரசர்களின் அவைகளில்  தர்மத்தின் அடிப்படையில் (நன்னடத்தை,  கடமை) நீதி வழங்கப்பட்டது. இவை மரபார்ந்த சட்டத் தொகுப்புகளாகும். தர்மத்தின் சட்டங்கள் தனிமனிதனை மட்டுமல்லாது சமூகத்தையும்  நிர்வகித்தது.

ஸ்மிருதி இலக்கியங்கள்

    பண்டைய இந்தியாவில் ஸ்மிருதிகள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தன. அவை மனுஸ்மிருதி,  நாரதஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி  போன்றவையாகும்”. (பக்.224)
“Evolution of Indian Judiciary

a. Judiciary during ancient period

    During ancient times, the concept of justice was linked with religion. The king was regarded as the fountain head of Justice. Most of the Kings’ courts dispensed justice according to ‘dharma’, (righteousness and duty) a set of conventional laws, Dharmic laws governed not only the individual but also the society.

Smiritis

    In ancient India Smiritis defined the social duties for the individual. There are Manusmiriti, Naradasmiriti, Yajnavalkya smiriti etc.”,  (Page: 187)

    “ஸ்மிருதி - சமூக கடமைகள்” என்று பொருத்தவும் சொல்கிறது (பக்.232). 'சமூகக் கடமைகள்' என பாடநூல் எங்கும் வல்லினம் மிகுவதேயில்லை. வருணாஸ்ரமத்தை உயர்த்திப் பிடிக்கும், கொண்டாடும் பாடநூல்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை? ஒட்டுமொத்த தமிழகத்தையும் சங்கிகளின் கூடாரமாக்க பள்ளிக் கல்வித்துறை எடுக்கும் முயற்சியை அனைவரும் கண்டிக்கவும் அவற்றை நீக்கவும் கோரவேண்டும்.

 “III. பொருத்துக. (தமிழ் வழியில்)

1 உச்ச நீதிமன்றம் – சமூக கடமைகள்
2 உயர்  நீதிமன்றம் - விரைவான நீதி
3 லோக் அதாலத் - இறுதி மேல்  முறையீட்டு  நீதிமன்றம்
4 சர் எலிஜா  இம்ஃபே - மாநிலத்தின்  உயர்ந்த நீதிமன்றம்
5 ஸ்மிருதி - முதல் தலைமை  நீதிபதி”,  (பக்.232)

“III. Match the following. (ஆங்கில வழியில்)

1. Supreme Court - social duties 
2. High Court - speedy justice
3. Lok Adalat - highest court of appeal
4. Sir Elijah Impey - highest court in the States
5. Smiritis - chief justice”  (Page: 193)

  ‘இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி’யில் ‘பண்டைய காலத்தில் நீதித்துறை’ பற்றிய குறிப்புகளில்தான் இந்தக் கூத்துகள். தொடர்ந்து கணங்களைப் பற்றிச் சொல்வதைக் கேளுங்கள். 

     “கனங்களின் குடியரசுகள் தங்களுக்கென சட்ட அமைப்பைக் கொண்டிருந்தன. இதில்  குலிகா எனும் நீதிமன்றத்தை நாம் காணலாம் வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரிக்கும் எட்டு குலிகாக்களைக் கொண்ட வாரியம் இருந்தது. மேல்முறையீடானது குல நீதிமன்றத்திலிருந்து கன நீதிமன்றத்தில்  மேற்கொள்ளப்பட்டது. (பக்.224&225)

    ‘கணங்கள்’ கனமாகிவிட்டன. இதைத் தாண்டி அசோகர் (கி.மி. 302 – கி.மு. 233) காலத்திய நீதி வழங்கும் முறை சொல்வதற்கு ஒன்றுமில்லையோ!  

     “அசோகரது ஆட்சியில் இருவகை அதிகாரிகள் இருந்ததை இந்தச் சாசனங்களிலிருந்து அறிகிறோம். ‘ராஜ்ஜுக்கள்’ எனும் அதிகாரிகளின் பணி. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வது, நீதிபரிபாலனம் செய்வது முதலியன இவர்களின் பணி. ‘தர்ம மகாமாத்திரர்கள்’ என்போர் இன்னொரு வகையினர். இவர்கள் மதம், மற்றும் நீதிபரிபாலனத் துறைகளுக்கான மேற்பார்வை அதிகாரிகள் (Department of Religious and Judicial Affairs) எனலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறைச்சாலைகளைப் பார்வையிடல், கைதிகளைச் சந்தித்து அவர்களின் நிலை அறிந்து உதவுதல், விடுதலை செய்தல் முதலியன இவர்களின் பணியாக இருந்துள்ளன.

இனி  சாசனங்களில் காணப்படும் நீதி வழங்கல் மற்றும் கைதிகள் நலன் குறித்த சில வாசகங்கள்:
  1. நீதிவழங்குவோர் நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடந்து கொள்ளல் பற்றி:
“தேவனாம்பிரிய மன்னர் நீதிபரிபாலிக்கும் பணியில் உள்ள மகாமாத்திரர்களுக்கு இவ்வாறு ஆணையிடுகிறார்: ‘நீங்கள் இதைக் கவனத்தில் இருத்த வேண்டும். சட்டத்திற்குப் பணிந்து நடக்கும் சிலரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கொடுமையாக நடத்தப் படுகின்றனர். காரணமில்லாமல் கொல்லவும் படுகின்றனர். இதனால் மக்கள் துயருறுகின்றனர். ஆகையால் நீங்கள் சார்பின்றி நேர்மையாக நடக்க வேண்டும்’..”

“….இந்தச் சாசனம் கீழ்க்கண்ட நோக்கத்திற்காக இயற்றப்படுகிறது: நகரங்களில் நீதிபரிபாலனம் செய்யும் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். அவர்களது அதிகாரத்தின் கீழுள்ள மக்கள் நேர்மையற்ற முறையில் சிறையில் அடைக்கப்படுவது, அல்லது கொடுமையான தண்டனைகளுக்கு ஆட்படுத்தப்படுவது முதலியவற்றால் துன்புறாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை. உங்கள் முழு வலிமையையும் பயன்படுத்தி இதைச் செயல்படுத்த வேண்டும்..” (கலிங்கத்துப் பாறைச் சாசனம் எண் 1)

2.சிறைக் கதிகள் நலன் அறிதல் மற்றும் முன்கூட்டி விடுதலை செய்தல், பொது மன்னிப்பு அளித்தல் ஆகியன பற்றி”

“அவர்கள் (தர்ம மகாமாத்திரர்கள்) சிறைக் கைதிகள் சரியான முறைகளில் நடத்தப்படுகின்றனரா என்று கண்காணிக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். ‘இந்தக் கைதிக்கு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு உள்ளது’, ‘இந்தக் கைதி மன அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்’, ‘இவருக்கு வயதாகிவிட்டது’ என்றெல்லாம் இவர்கள் கருதினால் அந்தக் கைதிகளின் விடுதலைக்காகவும் அவர்கள் செயல்படுவார்கள். (பாறைச் சாசனங்கள் எண் 5.)

“எனது முடிசூட்டுக்குப் பிந்திய இந்த 26 ஆண்டுகளில் இருபத்தைந்து முறைகள் சிறைவாசிகள் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.” (கற்தூண் சாசனங்கள் எண் 5)
  1. மரணதண்டனைக் கைதிகளுக்குத் தண்டனை குறைப்பு பற்றி
“மக்களின் வேண்டுதல்களைக் கேட்டு நீதியை நிலைநாட்டும் பொறுப்பு ராஜ்ஜுகர்களுடையது. அவர்கள் அச்சமின்றியும் அக்கறையோடும் தம் கடமையை நிறைவேற்ற வேண்டும். சட்டத்தைச் செயல்படுத்துவதிலும், தண்டனை வழங்குவதிலும் (ஏழை / பணக்காரர் , உயர்ந்தோர்/ தாழ்ந்தோர் என்கிற வேறுபாடுகள் இன்றி) அனைவர்க்கும் பொதுவாக நீதி பரிபாலிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இன்னும் ஒருபடி மேலே சென்று நான் ஒன்றைச் சொல்வேன். முறையாக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை உடனே தண்டனையை நிறைவேற்றாமல் அவர்களை மூன்று நாட்கள் வரை சிறையில் அடைத்திருக்கலாம். இந்த நாட்களில் அவர்களின் உறவினர்கள் அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்க யாரும் இல்லையெனில் அடுத்த உலகில் புண்ணியம் தேடிக் கொள்வதற்கு அவர்கள் தானங்கள் செய்யலாம். அல்லது உபவாசம் இருக்கலாம். எஞ்சியுள்ளது கொஞ்ச காலமே ஆனாலும் அதை அடுத்த உலக வாழ்க்கைக்கு நன்மை தேடப் பயன்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் தம்மப் பயிற்சி, தானம் செய்யும் பண்பு, சுய கட்டுப்பாடு ஆகியவை வளர வேண்டும் என்பதே என் விருப்பம்.” (கற் தூண் சாசனம் 4)

தேவர்களுக்கு உகந்த மாமன்னராகிய  அசோகரது நீதிபரிபாலனம் மற்றும் சிறைக் கைதிகளின் நலன் குறித்த அணுகல்முறைகளை மேற்கண்ட சாசனங்களிலிருந்துக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்:

ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் மிகவும் நேர்மையாக நீதிபரிபாலனம் செய்யப்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது, சிறைவாசிகளை தொடர்ந்து அதிகாரிகள் சந்தித்துக் குறைகளை அறிந்து, தேவையானோருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும். ஆண்டுதோறும் பொது மன்னிப்பு அளித்து சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மரணதண்டனைக் கைதிகளுக்கு தண்டனை உடனே நிறைவேற்றப்படாமல் அவர்களின் தண்டனை குறைப்பிற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்”. (தீராநதி மார்ச் 2017 – நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – கட்டுரைத்தொடர் – அ.மார்க்ஸ்)

   ‘இடைக்கால இந்தியாவில் நீதித்துறை’ எனும் தலைப்பில் 

      “துக்ளக் ஆட்சிகாலத்தில் உரிமையியல்  நடைமுறைச் சட்டங்கள் தொகுக்கப்பட்டதைக்  காண முடிகிறது. இது ஃபைகா-இ-பெரோஸ்-ஷாகி என அழைக்கப்பட்டது. இச்சட்டம்  பல்வேறு விவகாரங்களில் சட்டம் மற்றும்  நடைமுறை விவரங்களைப் வழங்கியது.  இது அரபு மொழியில் எழுதப்பட்டு பின்னர்  பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.  இது ஔரங்கசீப் காலத்தில் 1670ஆம் ஆண்டு ஃபட்வா-இ-ஆலம்கிர் என்ற சட்டத்  தொகுப்பின்படி மாற்றி அமைக்கப்பட்டது”. (பக்.225)

     இஸ்லாமியர் ஆட்சிக்காலம் எனும்போது அரபு, பாரசீகம் என்று மொழிகளைப் பற்றிப் பேசுவதேன்?  ‘ஸ்மிருதி இலக்கியங்கள்’ சமஸ்கிருதத்தில் இருந்ததை மட்டும் ஏன் மறைக்க வேண்டும்? இதன் பின்னாலுள்ள அரசியல் மற்றும் பாசிச மனநிலை என்ன?

    வேத – இந்துமத சட்டத் தொகுப்புகளை தனிமனித, சமூகக் கடமைகளாக மாற்றி குழந்தைகளின் மனதில் இந்துத்துவாவை திணிக்கும் வெறித்தனம் வீழ்த்தப்பட வேண்டும். இதர சிறுபானமை மதங்களின் சட்ட நடைமுறைகளை இவ்வாறு பொதுமையாக்குவார்களா? 

     “ஸ்மிருதி - சமூக கடமைகள்” என்று எழுதும் ஆசிரியர்களும் மாணவர்களும், இந்த ‘ஸ்மிருதி இலக்கியங்கள்’ என்ன பேசின, எத்தைகைய கடமைகளையும் நன்னடத்தைகளையும் வலியுறுத்தின என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? 

        இந்து சட்ட மூலங்களில் மநு தர்ம சாஸ்திரமும் (மநு ஸ்மிருதி) ஒன்று. இது ஒருவரால் எழுதப்பட்டதல்ல. பலரால் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலே. கி.மு. 150 க்கும் கி.பி. 100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாக இருக்குமென ஆய்வாளர் ஜெய்ஸ்வால் கணிக்கிறார்.

     அண்ணல் அம்பேத்கர் மனுஸ்மிருதி, ஆபஸ் தம்ப தர்ம சூத்திரம், வாசிட்டதர்ம சூத்திரம், விஷ்ணு ஸ்மிருதி, கௌதம தர்ம சூத்திரம், பிரஹஸ்பதி ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி போன்ற பிராமண சட்ட  நடைமுறைகள் சூத்திரர்களுக்கு எதிரான சொன்னவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்தளிக்கிறார்.

1. சூத்திரர்கள் சமுதாய வரிசையில் கடைசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
2. சூத்திரர்கள் தூய்மையற்றவர்கள். அதனால் புனிதச் செயல்களை அவர்கள் பார்க்கும்படியோ, கேட்கும்படியோ செய்யக்கூடாது.
3. மற்ற வகுப்பினருக்கு மதிப்பு கொடுப்பது போல் சூத்திரர்களுக்கு மதிப்பு கொடுக்கக்கூடாது.
4. சூத்திரனுடைய உயிருக்கு எவ்வித மதிப்பும் கிடையாது. அதனால் அவனுக்கு எந்தவித நஷ்டஈடும் கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிடலாம். அப்படி ஏதாவது நஷ்ட ஈடு கொடுப்பதாயின் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியருக்காகக் கொடுப்பது போலல்லாது மிகச் சிறிதளவே ஒரு தொகையைக் கொடுத்தால் போதும்.
5. சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்.
6. ஒரு சூத்திரன் சொத்துக்களைச் சேர்க்கக் கூடாது. ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்டி எடுத்துக்கொள்ளலாம்.
7. சூத்திரன் அரசாங்க பதவியில் இருக்கக் கூடாது.
8. சூத்திரனது கடமைகளும், மீட்சி பெறுவதும் மேல் சாதிக்காரர்களுக்குப் பணியிடை செய்வதில் தானிருக்கிறது.
9. மேல் சாதிக்காரர்கள் சூத்திரர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ளக் கூடாது. மேல் சாதிக்காரர்கள் சூத்திரப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சூத்திரன் ஒரு உயர் சாதிப் பெண்ணைத் தொட்டு விட்டாலோ, அவன் கடுமையான தண்டணைக்கு உள்ளாகவேண்டும்.
10. சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்; எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன் (பக். 80-81).
(பக். 80,81 – அம்பேத்கர்சூத்திரர்கள் யார்? தொகுதி – 13 )
         மேலும் விஷ்ணு ஸ்மிருதியின் படி சொல்லப்படும் தண்டனைகளில் சில.  (அம்பேத்கர் நூலில் குறிப்பிடப்படுபவை.)
        ஒருவன், அவனைவிட மேலானவன் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குச் சமமாக உட்காருவேனேயானால் அவனுடைய புட்டத்தில் சூடு இழுத்து அடையாளம் இட்டு அவனை நாடு கடத்திட வேண்டும்.
ஒருவன் தன்னினும் மேலானவன் மீது துப்புவானேயாயின், அவனது இரண்டு உதடுகளையும் இழக்க வேண்டும்.
அவன் அவர்களுக்கு எதிராக, வாயு பிரியவிட்டால், அது வந்த அவனது பின் பாகத்தை இழக்க வேண்டும்.
அவன் வசைமொழிகளை உபயோகப்படுத்தினால் அவனது நாவை இழக்கவேண்டும்”.
(பக். 68, அம்பேத்கர்சூத்திரர்கள் யார்? தொகுதி – 13 )

      இம்மாதிரியான சட்டங்களை மக்களிடம் பதியவைக்க / திணிக்க / மேலாண்மையை நிறுவ உள்ளூர் மொழிகளில் வழக்காறுகளில் நிறைய கதைகள், புராணங்கள் உற்பத்தியாயின. அந்த வகையில் கட்டப்பட்ட புனைவுதான்மநு நீதிச் சோழன்என்னும் புராணம். ‘மநு நீதியுடன் உள்ளூர் அரச வம்சமானசோழன்என்கிற அடைமொழி இணைக்கப்படும்போது இவர்களது நோக்கம் நிறைவேறிவிடுவதைக் காணலாம்.

    இதைச் சரியாக உணந்தவர் பெரியார் மட்டுமே. அவர் பெயரைச் சொல்லி ஆட்சியதிகாரத்திற்கு வந்த பிழைப்புவாதிகள் தங்களை ராஜராஜன் என்றும், மநுநீதிச் சோழன் என்றும் சொல்லிக்கொள்வதில் சிறிதும் வெட்கப்படாதவர்கள். மேலும் களப்பிரர்கள் காலத்தில் தமிழ் மொழி அழிக்கப்பட்டது என கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுபவர்கள். கீழடி போன்ற தமிழர்களின் தொன்மைகளுக்கு எதிராகவும் தமக்கானவற்றையும்  திருவள்ளுவர்,  தமிழன்னை சிலை என உருவாக்கிக் கொள்பவர்கள்.

      இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்மநுநீதிச் சோழனுக்கு சிலை நிறுவுவார்கள்; ‘மநுநீதிச் சோழன்’ நாடகத்தையும் பாடத்தில் நுழைப்பார்கள்,  
        ஒரு சத்திரியன் கொலை செய்யப்பட்டிருந்தால், பிராமணனைக் கொலை செய்தற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் நாலில் ஒரு பங்கு தான் சரியான பிராயச்சித்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைசியனாக இருந்தால் எட்டில் ஒரு பங்கும், ஒரு சூத்திரனைக் கொலை செய்துவிட்டால் அதுவும் அச்சூத்திரன் நற்குணவானாக வாழ்ந்திருப்பின் பதினாறில் ஒரு பங்கும் தான் சரியான பிராயச்சித்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இரு பிறப்பெடுத்தவர்களில் உயர்ந்தோன் (பிராமணன்) சத்திரியனைத் தன்னிச்சையில்லாது கொலை செய்துவிட்டால் அதிலிருந்து அவனை விடுவித்துக் கொள்வதற்கு நூறு பசுவும் ஒரு காளையும் அவன் கொடுக்க வேண்டும்.

அல்லது 

     மூன்று ஆண்டுகள் தலைமுடியை முடிந்துகொண்டு புலனுணர்வுகளை அடக்கிக் கொண்டு பிராமணனைக் கொலை செய்த ஒருவன் கடைபிடிப்பதைப் போலவே அவனும் கடைபிடித்துக் கொண்டு நகருக்கு வெளியே வெகு தூரத்தில் வசித்துக் கொண்டிருக்க வேண்டும். மரத்தின் அடியில்தான் அவன் வசிக்கத்தக்க இடமாகும்”.

(பக். 67, அம்பேத்கர்சூத்திரர்கள் யார்? தொகுதி – 13 )

      இதன் காரணமாகவே முதலாம் ராஜராஜன் தன்னுடைய அண்ணன் ஆதித்திய கரிகாலனைக் கொன்ற (கி.பி. 969) பிராமணர்களைப் பிடித்துத் தண்டிக்கும் நிலை வரும்போது அந்தக் கொலையாளிகளுக்குமநுநீதிப் படிதான் தண்டனை வழங்கப்பட்டதை அறியலாம். அவர்களது நிலங்களை பறிமுதல் செய்து கோயிலுக்கு உரிமையாக்கிய பின், அவர்களை நாடு கடத்துகின்றனர்.

      இந்து மதப் புனித நூல்களிலிருந்து அன்றைய கல்விமுறையை விளக்க சில எடுத்துக்காட்டுகள்:

பிருஹஸ்பதி ஸ்மிருதியின்படி:

     ஒரு சூத்திரன் மதபோதனையைப் போதித்தாலோ அல்லது வேத வார்த்தைகளை முணுமுணுத்தாலோ அல்லது ஒரு பிராமணனைத் தூஷித்தாலோ அவனது நாக்கைத் துண்டித்திட வேண்டும்”,

கௌதம தர்ம சூத்திரத்தின்படி:

   ஒரு  சூத்திரன் வேதம் ஓதுதலை வேண்டுமென்றே காது கொடுத்துக் கேட்பானேயானால், அவனது இரு காதுகளிலும் ஈயத்தையோ அல்லது அரக்கையோ உருக்கி ஊற்றி நிரப்ப வேண்டும்.

   அவன் வேத பாடத்தை ஓதினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். அவன் வேத பாடங்களை நினைவு வைத்திருந்தால், அவன் உடல் இரு துண்டுகளாகப் பிளந்து விட வேண்டும். (பக்.68 & 69)

   “சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்”. (பக். 80 – அம்பேத்கர்சூத்திரர்கள் யார்? தொகுதி – 13)

        மேற்கண்ட இந்துமத பாசிசச் சட்டத்தொகுப்புகளை சமூகக் கடமைகள், நன்னடத்தை, தனிமனித மற்றும் சமூக ஒழுக்கம் என தமிழகப் பாடநூல்கள் பிதற்றுவதைக் கண்டும் காணாமலும் இருப்பது வருங்காலத் தலைமுறையைப் புதைகுழிக்குள் தள்ளுவதற்கு ஒப்பானது.  10 ஆம் வகுப்பில் ஆர்.எஸ்.எஸ். பற்றிய உண்மையான தகவலுக்கு நீதிமன்றம் சென்று அவ்வரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். இஸ்லாமியருக்கு எதிரான கருத்துகள், மநுதர்மத்தை இந்திய தர்மமாக்குவது போன்ற பலவற்றையும் நீக்குவது எப்போது?

(அபத்தங்கள் தொடரும்…)