ஞாயிறு, செப்டம்பர் 16, 2018

கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!


கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!


மு.சிவகுருநாதன்


      40 ஆண்டுகாலமாக ஒரு வகுப்புப் பாடங்களைப் படிக்க வேண்டியதில்லை, பொதுத்தேர்வு நடக்கும் வகுப்பை மட்டும் படித்தால் போதும் என்கிற நிலையை மாற்றியதை வரவேற்றோம். இம்முறை அமலான ஓராண்டிலேயே +1 மதிப்பெண்கள் மேல்படிப்பிற்குத் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கல்வியாளர்களின் கோரிக்கை த.உதயச்சந்திரன் கல்வித்துறை செயலாளராக இருக்கும்போது +1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்கிற முடிவும் பாடச்சுமை, மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்க 70, 90 மதிப்பெண்களுக்குத் தேர்வு, மொழி மற்றும் கலைப்பட்டங்களுக்கு 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு என்கிற நல்ல நடைமுறைகள் புகுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மொழிப்பாடங்களுக்கு ஒரு தாள் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. 

    பின்னாளில் உதயச்சந்திரன் பதவியிறக்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறைக்கு முதன்மைச் செயலாளர் நியமிக்கப்பட்டதும் சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவால் பாடத்திட்டச் செயலராக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. பாடத்திட்டப் பணிகள் முடிவடைய இன்னும் இரண்டாண்டுகள் உள்ள நிலையில் உதயச்சந்திரன் தொல்லியல் துறை ஆணையராக மாற்றப்பட்டது, இப்போது எடுக்கப்பட்டிருக்கும் +1 மதிப்பெண்கள் மேற்படிப்புக்குத் தேவையில்லை என்பது கல்வியின்  எதிர்காலத்தை பாழடிப்பதாகவே உள்ளன. பள்ளிக் கல்வியைச் சீரமைக்கும் நடவடிக்கைகளைக் கைவிடுவது மீண்டும் பழைய நிலைமையும் கல்விக்கொள்ளையையும் தொடர அனுமதிப்பது பேராபத்து. 

    கல்வி வியாபாரிகள், கல்விக் கொள்ளையர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய இயக்கங்கள் இப்புதிய முடிவை வரவேற்று, ‘கல்வியாளர்கள்’ என்னும் போர்வையில் அறிக்கை விடுகின்றனர். +1 பாடங்களைச் சரியாகப் படிக்க வேண்டியதில்லை என்னும் நிலை உயர்கல்வியைப் பாதிக்கும். பொறியியல் படிப்புகளில் மாணவர்களது தோல்விநிலை, தற்கொலைகள் ஆகியன மீண்டும் தொடர்கதையாகும். 

   தனியார் சுயநிதிப்பள்ளிகளில் கல்விக் கொள்ளைக்கும் அவர்களது +1 பாடத்தைத் தவிர்த்து ஏமாற்றும் போக்கிற்கு வரவேற்பு அளிக்கும் இம்முடிவு திரும்பப் பெறப்பட்ட வேண்டும். 

   “நீட்” போன்ற போட்டித்தேர்வுகளில் இரு ஆண்டு பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். +1,+2 என்பது தனித்தனி வகுப்பல்ல; ஒருங்கிணைந்த படிப்பு என்பதை உணர மறுக்கும் இந்த ‘போலிக் கல்வியாளர்கள்’ இளநிலைக் கல்லூரி கோரிக்கை வைக்கிறார்களே, ஏன்? மூன்றாண்டு இளங்கலைப் படிப்பிலும் இரண்டாண்டு முதுகலைப் படிப்பிலும் இறுதியாண்டு மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ள சொல்வார்களா, இவர்கள்? உயர்கல்வியில் பிற படிப்புகள் அனைத்திலும் இம்முறையைப் பின்பற்றலாமே! செய்வார்களா? 

   கல்வி, மாணவர்கள், சமூகம் ஆகிய பெரும் பாதிப்புகளுக்கும் உள்ளாகும் போது எவ்வித எதிர்ப்பையும் காட்டாத இவர்கள்  மாணவர்களுக்கு பாடச்சுமை, மன அழுத்தம், மூன்றாண்டுகள் தொடர் பொதுத்தேர்வு என்றெல்லாம் பேசுவது மிகவும் போலியானது மட்டுமின்றி, அபத்தமானதும் கூட. எடுத்துக்காட்டிற்கு ஒன்று மட்டும்.

   1 முதல் 9  வகுப்பு முடிய முப்பருவ முறை, ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (CCE), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடு ஆகிய முறைகளில் படிக்கும் மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் மட்டும் அறிவியல் பாடம் நீங்கலாக பிற பாடங்களுக்கு 100 மதிப்பெண்கள் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்படுவது, அகமதிப்பீடு மறுப்பு, +1,+2 வகுப்புகளுக்கு மொழிப்பாடம் ஒரு தாளாகக் குறைக்கப்பட்டபோதும் 10 ஆம் வகுப்பிற்கு இன்னும் இரு தாள்களாக தொடர்வது, வழக்கத்திற்கு மாறாக முழுப்பாடநூலையும் ஆண்டு இறுதியில் முழுமையாகப் படிப்பது  ஆகியவை மாணவர்களிடம் மன அழுத்தத்தை உண்டு பண்ணுமா, பண்ணாதா என்பதை இந்தப் ‘போலிக் கல்வியாளர்கள்’ விளக்கவேண்டும்.  பத்தாம் வகுப்பு மாணவர்களின் இந்தச் சுமையைக் கண்டுகொள்ளாத இவர்கள் +1 மாணவர்களின் சுமை, அழுத்தம் குறித்துப் பேசுவது கல்வி வியாபாரம், சுயநலம் சார்ந்த முடிவு என்பதில் அய்யமில்லை. 

இளையோர் இலக்கியம் மற்றும் கலைகள்

இளையோர் இலக்கியம் மற்றும் கலைகள்

மு.சிவகுருநாதன்

(செப். 15, 16 2018 ஆகிய இரு நாள்கள் சென்னையில் பாரதி புத்தகாலயம் ஒருங்கிணைக்கும் ‘இளையோர் இலக்கியம்’ குறித்த கலந்துரையாடல் விவாதத்திற்கென சில குறிப்புகள்.) 


     தமிழில் சிறார் இலக்கியம் இல்லை என்கிற குறை தற்போது மெல்ல மெல்ல நீங்கி வருகிறது. இவை போதாது என்ற போதிலும் முன்பைவிட ஏற்பட்டுள்ள நல்ல மாற்றம் வரவேற்கத்தக்கது. இதன் தொடரிழையாக இளையோர் இலக்கியம் (Juvenile Literature / children  Literature / Teen  Literature) பற்றியும் சிந்திக்கவும் அவற்றை தமிழில் படைக்கவும், பரவலாக்க வேண்டிய தேவையும் இன்றைய நிலையில் அவசியமாக உள்ளது.  

    குமரப்பருவம் என்றழைக்கப்படும் 9 – 19 வயதெல்லைக் குழந்தைகளை மையப்படுத்தும் இலக்கியப் படைப்புகளை நாம் இவ்வாறு வரையறுத்துக் கொள்ளலாம். இதில் முன் குமரப்பருவம் 9 – 13 வயதெல்லையைக் கூட சிறார் இலக்கிய வகைப்படுத்தலில் அடக்கினாலும், பின் குமரப்பருவம் (14 - 19) மிகவும் சிக்கலான நெருக்கடியான காலகட்டத்தை மகிழ்வுடன், எளிதாகக் கடக்க அவர்களுக்கு இந்த சமூகம் உதவி செய்யாமலிருப்பது பெருஞ்சோகம்.

     இலக்கியம் தாண்டி இளையோர் கலைகள் (Juvenile Arts / children  Arts / Teen Arts) என்று சற்றுப் பரந்த அளவில் இவற்றைக் கொண்டு செல்வது நல்லது என்று கருதுகிறேன். 

  குமரப்பருவக் குழந்தைகளின் நடத்தை மாறுபாடுகளுக்குத் (தவறுகள் ?!) தீர்வாக இங்கே நல்லொழுக்கக் கல்வி பரிந்துரைக்கப்படுகிறது. மாறாக பாலியல் கல்வி எதிர்க்கப்படுகிறது; புறக்கணிக்கப்படுகிறது. அறிவியல் பாடநூல்களின் உடற்செயலியல், இனப்பெருக்க மண்டலம் போன்றவை பாலியல் கல்வியாக மலர்ந்திருக்கவேண்டும். ஆனால் இவை வெறும் மொண்ணையான அறிவியல் குவியல்களாக உள்ளன.

    பழங்காலத்தில் கோயில் சிற்பங்கள், பண்டிகைகள், கலைநிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் குறிப்பால் உணர்த்தப்பட்டது. உதாரணத்திற்கு கலாச்சார நிகழ்வு ஒன்று: செவ்வாய்ப் பிள்ளையார். (பிள்ளையார் அரசியல், வன்முறை கலவாத நிலையில்…) 

   ஆடி மாசி மற்றும் தை மாத செவ்வாய்க் கிழமை இரவுகளில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் இந்நிகழ்வில் திருமணமாகாத இளம்பெண்களுக்கு முதிர்ந்த பெண்கள் பாலியல் செய்திகளைக் கதையாகக் கூறி அவற்றைப் பல்வேறு வடிங்களில் கொழுக்கட்டை போலச் செய்து ஆவியில் வேகவைத்து அவர்கள் மட்டும் உண்ணும் வழக்கமாகும். இது அக்காலப் பெண்களுக்கான பாலியல் கல்வியாகும். அவர்கள் பாலியல் கற்பனையில் செய்த உருவங்களை ஆண்கள் பார்க்கக் கூடாது என்பதாலே அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தின்றால் ஆண்கள் பலமிழப்பார்கள் என்பதெல்லாம் சாக்குபோக்கு. ஆண்களுக்கு கரகாட்டம், குரவன் குரத்தியாட்டம் போன்ற பல வடிவங்கள் மூலம் பாலியல் கல்வியை உணர்த்த வழியுண்டு. 

   இளையோரை மையப்படுத்தி இலக்கியம் படைப்பது நல்ல முயற்சியே. இவற்றுடன் கூடவே விளையாட்டுகள், கலைகள், கவிதை, கதை எழுதுதல், ஓவியம், கைவினைப்பொருள்கள் போன்றவற்றிலும் இளையோரை ஈடுபடுத்த உரிய திட்டங்கள் தேவை. நாடகம், நடிப்பு, இசை, பாட்டு, ஓவியம் என்று அவர்களுக்குப் பிடித்த துறைகளில் ஈடுபாடு கொள்ள பள்ளி, குடும்பம், சமூகம் ஆகியன தடையாக  இருக்கக் கூடாது.

   பள்ளிகளில் நடைபெறும் போலியான கலை விழாக்கள் மாறவும் படிப்பதற்கல்லாமல் அரங்கேற்றும் வகையிலான நாடகங்கள் ஆக்கப்பட வேண்டும். இளையோர்களை இலக்கியம் படைக்க படைப்பாற்றல் பட்டறைகள் நடத்தப்படலாம். 

   வாசிப்பு, படைப்பாற்றல் ஆகியவற்றை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம். அரசு பொதுத்தேர்வுகளையும் பல்வேறு போட்டித்தேர்வுகளையும் எதிர்நோக்கியுள்ள இவர்கள் பாடநூலைத் தாண்டி வாசிப்பது குற்றச்செயலாகப் பார்க்கப்படும் சமூக அவலம் பெரிதும் மாறிவிடவில்லை. 

   பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளைகள் களவாடப்படுகிறது. வாரத்தில் 40 பாடவேளைகளை பெரும்பாலும் 5 (6-10),  6 (+1,+2)  பாடங்களே ஆக்ரமிக்கின்றன. இவற்றை மாற்றியமைக்க விளையாட்டுப் பாடவேளைகளை அதிகப்படுத்துதல், நுண்கலைகள், வாசிப்பு, தனித்திறன் ஆகியவற்றுக்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யக் கல்வித்துறைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்.  

    குழந்தை இலக்கியம் இன்னும் செழுமையடைய, இளையோர் இலக்கியம் உருக்கொள்ள, குழந்தைகள் மற்றும் இளையோர் படைப்பு மற்றும் நுண்கலைகளில் வல்லவர்களாக உருவானால் இன்றைய அவசர கால உலகின் பிரச்சினைகள், தற்கொலை எண்ணங்கள், பாலியல் பிறழ்வுகள் போன்றவற்றிலிருந்து  வருங்கால சமூகம் காப்பாற்றலாம். எனவே இத்தகைய முயற்சிகள் தொடரவேண்டும்.