வெள்ளி, டிசம்பர் 13, 2019

வேத மற்றும் குருகுலக் கல்வியைப் போற்றும் பாடநூல்கள்


வேத மற்றும் குருகுலக் கல்வியைப் போற்றும் பாடநூல்கள் 

(தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)


மு.சிவகுருநாதன்


  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 54) 



     எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியின் அலகு 01 இல் ‘இந்தியாவில்  கல்வி வளர்ச்சி’ என்றொரு பாடம் உள்ளது. இதில் இந்தியக் கல்வி என்று வேதக் கல்வியையும் குருகுலக் கல்வியையும் முன்னிறுத்துவதோடு அதன் பெருமைகளை விண்டுரைக்கவும் செய்கிறது. ‘இஸ்ரோ’ கஸ்தூரிரங்கன் குழுவினரை அடியொற்றி பாடநூல்கள் வேத, குருகுலக் கல்வியைப் பரப்புரை செய்வது மிக மோசமானது. கல்வியாளர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மேலும் குருகுலம், பவுத்தம், சமணக் கல்வி குறித்த எவ்விதப் புரிதல்களும் இல்லாது அனைத்தையும்ம் ஒன்றாக்கி இந்துத்துவப் பெருமை பேசுவதும் நடக்கிறது.

   அந்தக் காலத்தில் கல்வி எப்படி இருந்தது தெரியுமா? என்று பீடிகை போட்டுப் பேசும் பெரும்பாலான ஆசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள். போகிறபோக்கில் குருகுலக் கல்வியின் பெருமையைப் பேசுபவர்கள் இவர்கள். இதைத்தான் பாடநூல் அதிகாரப்பூர்வ மொழியில் சொல்லியிருக்கிறது.

அறுபத்தொன்று:

 அறிவு மூன்றாவது கண்ணா?

    “அறிவு என்பது மனிதனின் மூன்றாவது கண்” (பக்.98) என்ற மேற்கோளுடன் பாடம் தொடங்குகிறது. ‘அறிவு’ கண்ணாக இருக்க வேண்டுமா, என்ன? இது சிவனின் நெற்றிக் கண்ணோ, என்னவோ! கண்பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளை  இழிவுபடுத்த வேண்டாம்! வழக்கொழிந்த, சிந்தனையும் புரிதலுமற்ற இவ்வாறான சொற்றொடர்களை ஒழித்துக் கட்டுவது யாவர்க்கும் நலம். பழமொழிகள், பொன்மொழிகள் என்கிற பெயரிலுள்ள பழங்குப்பைகளை கல்விப்புலங்களிலிருந்து முதலில் அகற்றியாக வேண்டும்.

அறுபத்திரண்டு:

வேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்? 

    இந்து மதப் புனித நூல்களிலிருந்து அன்றைய கல்விமுறையை விளக்க சில எடுத்துக்காட்டுகள்:

“பிருஹஸ்பதி ஸ்மிருதியின்படி:

"ஒரு சூத்திரன் மதபோதனையைப் போதித்தாலோ அல்லது வேத வார்த்தைகளை முணுமுணுத்தாலோ அல்லது ஒரு பிராமணனைத் தூஷித்தாலோ அவனது நாக்கைத் துண்டித்திட வேண்டும்",


கௌதம தர்ம சூத்திரத்தின்படி:

 " ஒரு  சூத்திரன் வேதம் ஓதுதலை வேண்டுமென்றே காது கொடுத்துக் கேட்பானேயானால், அவனது இரு காதுகளிலும் ஈயத்தையோ அல்லது அரக்கையோ உருக்கி ஊற்றி நிரப்ப வேண்டும்.

அவன் வேத பாடத்தை ஓதினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். அவன் வேத பாடங்களை நினைவு வைத்திருந்தால், அவன் உடல் இரு துண்டுகளாகப் பிளந்து விட வேண்டும். (பக்.68 & 69)

“சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்”.  (பக். 80 – அம்பேத்கர் – சூத்திரர்கள் யார்? தொகுதி – 13 )

      பாடநூலில் ‘பண்டைய கால இந்தியாவின் கல்வி’, எனும் தலைப்பில், உள்ளவை.

      “தொடக்க காலத்திலிருந்தே பாரம்பரியமாக கற்றல் மற்றும் கற்பித்தல் இந்தியாவில்  நடைமுறையில் இருந்ததாக, வரலாற்று  ஆதாரங்கள் நமக்கு தகவல்களை வழங்குகின்றன. வேதம் (Veda) என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அறிவு என்று  பொருள். இச்சொல்லானது “வித்” என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள்  ‘அறிதல்’ என்பதாகும். நமது பண்டைய  கல்வி முறை பல நூற்றாண்டுகளுக்கு  முன்னரே உருவானது. இது தனிநபரின்  உள்ளார்ந்த மற்றும் மறைந்திருக்கும்  திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம்,  அவரின் முழுமையான வளர்ச்சியில்  கவனம் செலுத்தியது. இக்கல்வியானது  பணிவு, உண்மை, ஒழுக்கம், சுயச்சார்பு  மற்றும் அனைத்து படைப்புகளின் மீதும்  மரியாதையுடன் இருத்தல் ஆகிய மதிப்புகளை வலியுறுத்தியது”. (பக்.98)

    வேதக் கல்வியும் குருகுலக் கல்வியும் வருணாஸ்மரத்தை நிலைநிறுத்தவும் அவற்றைக் கடைபிடிக்கவும் அமைந்த நிறுவனங்கள். இதை இன்றைய பொதுக்கல்வி போன்று கற்பிதம் செய்வது மடத்தனம்.

    பணிவு யாருக்கு? வருணப் படிநிலையில் உயர்த்தப்பட்ட பிராமணர்களுக்கு. எது உண்மை? நால் வேதங்கள், மநு தர்மம் போன்றவை உரைப்பவை. யார் கட்டமைத்த ஒழுக்கம்? குருதட்சணையாக கட்டைவிரல் கேட்கப்படினும் எதிர்க்காத ஒழுக்கம். சுயசார்பு? வருண அடுக்குகளில் ஒதுக்கப்பட்ட தொண்டூழியம் செய்வது (குலக்கல்வி). பசுவை மட்டும் பேணிக்காத்தல்; பிறகெப்படி, அனைத்து படைப்புகளின் மீதும்  மரியாதையுடன் இருக்க முடியும்?  வேதகாலத்திற்கு முன்பே செழித்திருந்த சிந்துவெளி மக்களது நாகரிகம் கல்வியின்றி சாத்தியப்பட்டிருக்குமா? அதுதான் நமது பண்டைய கல்விமுறை. அதைப் பற்றிய ஆதாரங்கள் சித்திர வடிவ எழுத்துகளைத் தாண்டி இல்லை என்பதாலும் அவற்றை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதாலும் அந்த இடத்தில் வேத, குருகுலக் கல்வியை வைத்திட முடியாது; வைக்கவும் கூடாது.  

  ‘கற்றலுக்கான ஆதாரங்கள்’ என்னும் தலைப்பில், சொல்லப்படுவன:  

     “பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா,  மற்றும் பதாஞ்சலி ஆகிய பெயர்களை நீங்கள் கட்டாயம் கேள்விப்பட்டிருத்தல்  வேண்டும். இவர்களின் எழுத்துக்களும் சரகர்  மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ  குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன”. (பக்.99)

    என்ன வன்முறை பாருங்கள்! “நீங்கள் அறிந்திருக்கலாம் அல்லது நீங்கள் கேள்விபட்டிருக்கலாம்”, என்று சொல்வதுண்டு. ஆனால் இங்கு “நீங்கள் கட்டாயம் கேள்விப்பட்டிருத்தல்  வேண்டும்”, என்று திணிப்பதைப் பாருங்கள். சரகர், சுஸ்ருதர் போன்றோரின் மருத்துவ அறிவு அவர்களின் பிறப்பை ஒட்டி இழிவு செய்யப்பட்டதையும் ஒதுக்கப்பட்டதையும்  நாடறியும். (எ.கா.) ‘அம்பட்டம்  சிகிஸ்தனம்’

   “வரலாறு, தர்க்கம், பொருள்  விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம்,  வர்த்தகம், வணிகம், கால்நடைவளர்ப்பு  மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு  துறைகள் கற்பிக்கப்பட்டன. உடற்கல்வியும்  ஒரு முக்கியமான பாடத்திட்டமாக இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளில்  பங்கேற்றனர். கற்றலின் அனைத்து  அம்சங்களிலும் வல்லுநராவதற்கு குருக்களும்,  அவரது மாணவர்களும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு  இணைந்து பணியாற்றினர். மாணவர்களின்  திறன்களை மதிப்பீடு செய்வதற்காக இலக்கிய  விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில்  மேம்பட்ட நிலையிலுள்ள மாணவர்கள்  இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர். சக மாணவர்களுடனான குழுக் கற்றல் முறை  நடைமுறையில் இருந்தது”. (பக்.99)

   இன்றைய பொதுக்கல்வி முறை போன்று அக்காலத்திலும் வேத, குருகுலக் கல்வி இருந்ததாகச் சொல்லும் அபத்தத்தை என்ன செய்வது? நால் வர்ணத்தாருக்கும், “வரலாறு, தர்க்கம், பொருள்  விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம்,  வர்த்தகம், வணிகம், கால்நடைவளர்ப்பு  மற்றும் வில்வித்தை”, ஆகியன போதிக்கப்பட்டதா? இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா? குருவின் மனச்சாட்சிக்கு, துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டிப் பெற்றதைக் குறிப்பிடலாமல்லவா!

அறுபத்து மூன்று: 

வேத, குருகுலக் கல்வியும் பவுத்த, சமண அவைதீகக் கல்வியும் எப்படி ஒன்றாகும்? 

   ‘பண்டைய கால இந்தியாவில் கல்வி முறை:  ஒரு வாழ்க்கை முறை’ எனும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகிறது.

     “பண்டைய இந்தியாவில் முறையான  மற்றும் முறைசாரா கல்வி இரண்டுமே இருந்தன. இல்லங்கள், கோயில்கள்,  பாடசாலைகள், குருகுலங்கள் ஆகியவற்றில்  அப்பகுதிக்கேற்றவாறு கல்வி வழங்கப்பட்டது.  வீடுகள், கிராமங்கள் மற்றும் கோயில்களில்  இருந்த மக்கள், சிறு குழந்தைகளுக்கு பக்தியுடன்  நேர்மையான வாழ்க்கை முறைகளை வாழ  ஊக்குவித்தனர். கல்வி அளிப்பதிலும், கற்றல்  மையமாக செயல்படுவதிலும் கோயில்கள்  முக்கிய பங்கு வகித்தன. மாணவர்கள்  தங்கள் உயர்படிப்புக்காக விகாரங்கள் மற்றும்  பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர்.  வாய்வழியாகவே கற்பித்தல் இருந்தது.  குருகுலங்களில் கற்பிக்கப்பட்டவைகளை மாணவர்கள் நினைவிலும், ஆழ்சிந்தனையிலும்  வைத்திருந்தனர். பல குருகுலங்கள் முனிவர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டன”. (பக்.99)

    ‘முறையான  மற்றும் முறைசாரா கல்வி’ என்று கதையளப்பதைப் பாருங்கள்! இல்லங்கள் (வீட்டுப்பள்ளிகள்), குருகுலங்கள்  ஆகியவற்றில் முறைசாராக் கல்வியும்  கோயில்கள்,  பாடசாலைகள் போன்றவற்றில் முறையான கல்வியும் இருந்ததாகச் சொல்ல வருகின்றனர். பொதுவான கல்வித்திட்டம் ஏதேனும் இருந்திருக்க முடியுமா? சமஸ்கிருதம் தவிர்த்து பிற மொழிகளைக் கற்க வழியுண்டா? பாலி, பிராகிருதம் போன்ற மொழிகள் பவுத்த, சமண அவைதீகக் கல்வியில்தான் சாத்தியப்பட்டது.  


    “காட்டில் அமைதியான சூழலில் அமைந்த குருகுலங்களில், நூற்றுக்கணக்கான  மாணவர்கள் ஒன்றாகத் தங்கி கற்றுக்  கொண்டனர். தொடக்க காலத்தில் ஆசிரியரால்  (குரு / ஆச்சார்யா) தன்னை சுற்றி இருந்த மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டது.  மேலும் குருவின் வீட்டில் குடும்ப உறுப்பினர்  போல வந்து தங்கி கல்வி பயின்றனர். இதுவே குருகுலக் கல்விமுறை எனப்பட்டது. இந்த குருவின் குடும்பமானது வீட்டுப்பள்ளி (அ)  ஆசிரமமாக செயல்பட்டது. அந்த காலக்கட்டத்தில், குருக்களும்  அவர்களுடைய சீடர்களும் (மாணவர்கள்)  ஒன்றாக வசித்து, அன்றாட வாழ்க்கையில்  ஒருவருக்கொருவர் உதவி செய்தனர்.  அக்காலத்தில் முழுமையான கற்றல்,  ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்தல்,  ஒருவரின் உள்ளார்ந்த திறமையை உணர்ந்து கொள்ளச் செய்தல் போன்றவையே கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருந்தது.  மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் சில ஆண்டுகள் வரை தங்கள்  வீடுகளை விட்டு விலகி குருகுலங்களில்  வாழ்ந்தனர். குறிப்பிட்ட காலத்தில் குருவுக்கும்  மாணவனுக்குமிடையேயான உறவு  வலுப்பெறும் இடமாகவும் குருகுலம் திகழ்ந்தது”. (பக்.99)

    பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய துவிஜர்களுக்கு (இருபிறப்பாளர்கள்) குருகுலத்தில் அனுமதியுண்டு. சூத்திரர்களுக்கு (வேசி மக்கள்) குருகுலத்தின் கதவுகள் திறக்குமா? இவை குலக்கல்விக்கூடமாகவல்லவா அன்று இருந்தன. 20 ஆம் நூற்றாண்டில் வ.வே.சு.அய்யரின் குருகுலத்தில் கூட பிராமணர்களுக்கு தனிப்பந்திதான்! பழங்காலத்தில் வருணபேதம் நிலவாத குருகுலங்கள் உண்டோ?

    உயர்த்தப்பட்ட சாதி மாணவனும் குருவின் வீட்டிற்கு ஒரு பண்ணையடிமை போலத்தான் இருந்தான். இந்த குலக்கல்வி முறையில் ‘உள்ளார்ந்த திறமையை உணர்ந்து கொள்ளச் செய்தல்’ என்பது கேலிக்குரியது. குருகுலம் புகட்டும் ஒழுக்கம் வருணப் படிநிலைகளுக்காக வேதங்களும் மநுதர்மம் போன்றவையும் உருவாக்கியவை என்பதை மறுக்க இயலுமா?

     கோயில்களில் நடந்த சமஸ்கிருத வேதக்கல்வியோடு பவுத்த, சமண அவைதீகக் கல்விமுறைகளோடு ஒன்றாக்குவது மிகக் கொடியது; இந்துத்துவம் எல்லாவற்றையும் விழுங்கும் ‘அனகோண்டாவாக’ இருப்பதைப்போல பாடநூல் இருக்கக் கூடாதல்லவா!  

    “மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது முதல்  அவர்களின் பாடத்திட்டங்களை வடிவமைப்பது  வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்களின்  பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  மாணவர்களின் திறனில் ஆசிரியர் திருப்தி  அடையும் போது மட்டுமே அவர்களின் கல்வி  நிறைவடைந்ததாக கருதப்பட்டது. அவரது  விருப்பத்திற்கேற்ப பல மாணவர்களை சேர்த்துக் கொள்வதுடன், மாணவர்கள் எதை கற்க ஆர்வமாக இருந்தனரோ அதையே கற்றுக் கொடுத்தார். விவாதங்கள் மற்றும்  கலந்தாலோசித்தல் ஆகியன கற்பித்தலின்  அடிப்படையான வழிமுறைகளாகும். கல்வியில்  மேம்பட்ட நிலையிலிருந்த மாணவர்கள்  ஆசிரியர்களுக்கு உதவினர்”. (பக்.100)

   சாதிபார்த்து மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை மிக உன்னதமான ஒன்றாக இருக்க இயலாது. இதில் மாணவர்களின் விருப்ப அளவுகோல் ஏதுமில்லை. பாடத்திட்டங்கள், ஒழுக்க வரையறைகள் ஆகியன ஏற்கனவே கட்டமைக்கப்பட்டது. இது என்னமோ, பாவ்லோ பிரைய்ரே அல்லது பின்லாந்துக் கல்விமுறை என்பதாக கதைப்பதை எப்படி பொறுப்பது? குருகுலக் கல்வியின் தோல்விக்கு உ.வே.சா. ஒரு எடுத்துக்காட்டு. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் மட்டுமே அவர் குருகுலக் கல்வி பெற்றிருந்தால் சமண, பவுத்த இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்திருக்காது.
  

அறுபத்தினான்கு:

விகாரைகள் ஏன் விகாரங்களானது? 

   தமிழ் இலக்கணத்தில் ‘விகாரம்’ என்பது இயல்பு மாற்றமாகும். செய்யுளில் எதுகை, மோனைகளுக்காகவும் ஓசை ஒத்திசைவுக்காகவும்  சில சொற்கள் தன் இயல்பு மாற்றத்தோடு கையாளப்படுகின்றன. அவை, வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம், நீட்டல் விகாரம், குறுக்கல் விகாரம், விரித்தல் விகாரம், தொகுத்தல் விகாரம் என வகைப்படுத்தப்படும்.

   மேலும் ‘விகாரம்’ என்பதற்கு கோரம், அவலட்சணம் என்றெல்லாம் பொருளுண்டல்லவா! பவுத்த வழிபாட்டிடமான விகார் (Vihar) என்பதை விகாரை என்று எழுதுவதே பொருத்தமானது. விகாரம், விகாரங்கள் (viharas) என்று எழுதுவது சரியாக இல்லை.

    வேதங்கள், இந்துமத சாஸ்திரங்கள் சொல்வது ஒருபுறமிருக்க, தமிழிலக்கண நூலான நன்னூல் சொல்வதையும் கொஞ்சம் கவனியுங்கள்.
 

“தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற் குரைப்பது நூலே”  (நன்னூல்)

    என்று மாணவர்களுக்குத் தகுதிகளை வரையறுப்பதும்,

“குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை” (நன்னூல்)

    என்றெல்லாம் ஆசிரியர்களுக்கு இலக்கணம் வகுப்பதையும் காண்க. 

     “இந்த காலகட்டத்தில் துறவிகள் மற்றும்  பெண் துறவிகள் தியானம் செய்வதற்கும்,  விவாதிப்பதற்கும், அவர்களின் அறிவு  தேடலுக்காக கற்ற அறிஞர்களிடம் கலந்து  ஆலோசிப்பதற்காகவும் பல மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் அமைக்கப்பட்டன.  இந்த விகாரங்களைச் சுற்றிலும் உயர்கல்வி  கற்றுக் கொள்வதற்காக பிற கல்வி  மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய கல்வி மையங்கள் சீனா, கொரியா, திபெத்,  பர்மா, சிலோன், ஜாவா, நேபாளம் மற்றும்  பிற தூரதேசத்து மாணவர்களையும்  கவர்ந்திழுத்தது”. (பக்.99&100)

     மடாலயங்கள் (mutt)  மற்றும் விகாரைகள் (viharas)  ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் கொடுமை நடக்கிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான கல்வியா வழங்கப்பட்டது?

  “Through monasteries and Viharas  Buddhist scholars carried out the educational  work. As a result, many famous educational  centres came into existence”. (Page:87)

   “மடாலயங்கள் மற்றும்  விகாரங்கள் மூலமாக பௌத்த சமய அறிஞர்கள்  தங்கள் கல்விப் பணியை மேற்கொண்டனர்.  இதன் விளைவாக, பல புகழ்பெற்ற கல்வி  மையங்கள் தோன்றின”. (பக்.100)

   Monastery, mutt ஆகிய இரண்டும் எப்படி ஒன்றாகும்? பவுத்த அறிஞர்கள் மடாலயங்களில் கல்விப்பணியாற்றியதை எவ்வாறு புரிந்துகொள்வது?

    வேதமதம் பெண் துறவிகளை அனுமதித்ததில்லை. திருமணம் செய்யாத துறவிற்கு இந்து மதத்தில் இடமில்லை. பெண்கள் அர்ச்சகர்களாக கூட அனுமதிக்காமல் ‘தீட்டு’ என்று ஒதுக்கி வைக்கும் தீண்டாமையைக் கொண்டது. மடங்களில் பெண் துறவிகள் இருந்ததாக புனைவும் திருட்டும் உருவாவதெப்படி? பவுத்த சமயம் பெண் துறவிகளை அனுமதித்தது. அவர்கள் பிக்குணிகள் எனப்பட்டனர். இது வேத இந்து மதத்தில் இந்நடைமுறை இல்லை. இதுதான் பவுத்தத்திலிருந்து திருடியது. சமயக் கருத்துகளை மட்டுமல்லாது கல்விமுறையைத் திருடும் அவலமும் நடைபெறுகிறது.  

       “ஜாதகக் கதைகள், யுவான் சுவாங் மற்றும்  இட்சிங் (சீன அறிஞர்கள்) ஆகியோரின்  குறிப்புகள் மற்றும் பிற ஆதாரங்களும்  அரசர்களும், சமுதாயமும் கல்வியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தியதாக நமக்கு கூறுகின்றன. மடாலயங்கள் மற்றும்  விகாரங்கள் மூலமாக பௌத்த சமய அறிஞர்கள்  தங்கள் கல்விப் பணியை மேற்கொண்டனர்.  இதன் விளைவாக, பல புகழ்பெற்ற கல்வி  மையங்கள் தோன்றின. அவைகளுள்  தட்சசீலம், நாளந்தா, வல்லபி, விக்கிரமசீலா,  ஓடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா ஆகிய  இடங்களில் தோன்றிய பல்கலைக்கழகங்கள்  மிகவும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.  இந்தப் பல்கலைக்கழகங்கள் விகாரங்களின்  தொடர்புடன் மேம்படுத்தப்பட்டன”. (பக்.100)

    வேதக்கல்வி என்றுமே பொதுக்கல்வியாக இருந்ததில்லை. மாறாக அவைதீகக் கல்விமுறையே (பவுத்த, சமண, ஆசிவக சமயங்கள்) இங்கு பொதுக்கல்வியாக இருந்தது. இவையிரண்டையும் இணைப்பது வன்முறையின்றி வேறில்லை.

  நாளந்தா, காஞ்சி போன்ற பவுத்த மையங்களில் யார் கல்விபெற்றனர்? காசி போன்ற வேதக் கல்வி மையங்களில் யாருக்குக் கல்வி வழங்கப்பட்டது? என்பது இதனைத் தெளிவாக்கும். அக்கால அரசர்களின் ஆதரவு நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும்பொது இவற்றிலும் மாறுதல்கள் உண்டாகியிருக்கின்றன.


     “பனாரஸ்  மற்றும் காஞ்சி ஆகிய இடங்களில் இருந்த பல்கலைக்கழகங்கள் கோயில்கள்  தொடர்புடன் மேம்பாடு அடைந்தன. மேலும்  அவைகள் அமைந்துள்ள இடங்கள் சமூக வாழ்க்கையின் மையங்களாக மாறின. அந்த நிறுவனங்கள் அறிவார்ந்த மாணவர்களின்  தேவைகளை பூர்த்தி செய்தன. அந்த மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் இணைந்து, புகழ்பெற்ற அறிஞர்களிடம் பரஸ்பர  கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர். அது மட்டுமல்லாமல், மன்னரால் கூட்டப்பட்ட சபையில் பல்வேறு விகாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிஞர்கள் சந்தித்து, விவாதித்து தங்கள்  கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்”. (பக்.100)

     கோயில்கல்வி என்பது முற்றிலும் உயர்த்தப்பட்ட வருணத்தாருக்கு மட்டும் வழங்கப்பட்டது. இதனுடன் விகாரைக் கல்வி இணைவு சாத்தியமற்றது. இவையிரண்டிற்குமிடையே விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்; ஆனால் இரண்டும் ஒன்றல்ல. பாடம்  முழுமையும் இரண்டையும் ஒன்றாக்கும் எத்தனங்களும் சூழச்சிகளும் நிறைந்துள்ளன. 

அறுபத்தைந்து: 

தட்சசீலம் – நாளந்தா இரண்டையும் இணைக்கும் கொடுமை!

   ‘பௌத்த சமய காலத்தில் விகாரங்களும்  பல்கலைக்கழகங்களும்’ என்ற தலைப்பில் உள்ள ‘உங்களுக்குத் தெரியுமா?’ பகுதி கீழ்க்கண்டவாறு செல்கிறது.  

    “பண்டைய  இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது  வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது. இது  ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப்  பகுதியாகும். இதனை 1980இல் யுனெஸ்கோ,  உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது.  சாணக்கியர், தனது அர்த்தசாஸ்திரத்தை இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து  தொகுத்ததாக கூறப்படுவது இதன்  சிறப்பாகும். 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர்  கன்னிங்காம் கண்டுபிடித்தார்”.  (பக்.100)  

     ‘கருதப்படும், கூறப்படும், நம்பப்படும்’ செய்திகள் வரலாறாகாது. ‘கல்விக்குழு’ கஸ்தூரிரங்கன் குழுவினரின் நம்பிக்கைகளை ஒட்டி இங்கு வரலாறு எழுதப்படுகிறது.

   “அர்த்த சாத்திரம் குறித்த குறிப்புகள் குப்தர் காலத்தில், விசாகத்தனால் எழுதப்பட்ட முத்ரா ராட்சஷம் என்ற நாடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்கியன் தான் இந்த நாடகத்தின் கதாநாயன். ஆனால் தக்‌ஷசீலா பல்கலைக் கழகத்தை நிறுவப்பட்டதற்கோ, சாணக்கியன் அங்கே படித்ததற்கோ வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இல்லை”, (பக்.63&64, இந்தியக் கல்வியின் இருண்டகாலம், பேரா.ப. சிவகுமார் கட்டுரை, பாரதி புத்தகாலய வெளியீடு) 
 
அதே பக்கத்தில் மற்றொரு ‘உங்களுக்குத் தெரியுமா?’

    “பண்டைய  காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.(பொ.ஆ) 5 ஆம் நூற்றாண்டு முதல்  கி.பி. (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்தது. தற்போதைய  பீகாரில் உள்ள ராஜகிருகத்தில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகம் உலகின்  பழமையான பல்கலைக்கழகங்களில்  ஒன்றாகும். நாளந்தா மகா விகாராவின்  இடிபாடுகளை ஐ.நா. சபையின் யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் உலக பாரம்பரிய  தளமாக அறிவித்துள்ளது. தற்போது  புதுப்பிக்கப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகம்  நாகரிகங்களுக்கிடையிலான தொடர்பு  மையமாக கருதப்படுகிறது. (பக்.100)

    தட்சசீலம், நாளந்தா ஆகியவற்றைப் பாடுபட்டு இணைக்கும் கொடுமைகள் நடந்தேறுகின்றன. வருணக்கல்வியை (குலக்கல்வி) உயர்த்திப் பிடித்த வேத இந்து மதம் பவுத்தக் கல்வியை தனதாக்கிக்கொள்ள மிகுந்த முயற்சிகள் மேற்கொள்கிறது. வரலாற்றெழுதியலை இவ்வாறு இழிவுபடுத்த வேண்டாம். 

(அபத்தங்கள் தொடரும்…)