சனி, ஜூன் 19, 2021

சுயநிதிப்பள்ளிகளின் தரம் என்னும் மாயை!

 

சுயநிதிப்பள்ளிகளின் தரம் என்னும் மாயை!

 

மு.சிவகுருநாதன்

 


 

       இன்றைய (18/06/2021) 'இந்து தமிழ் திசை' நாளிதழின் தலையங்கம்  கொரோனாப் பெருந்தொற்றுப்  பொது முடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பால் அரசுப்பள்ளிகளை அதிகம் பேர் நாடுவதைம், அரசுப்பள்ளிகளில் அதற்கான வசதிகள் இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இப்பெருந்தொற்றால் ஏற்பட்ட அனுபவத்திலிருந்து கல்வித்துறை உரிய பாடங்கள் கற்பதும் உரிய நடவடிக்கைகளும் நெகிழ்வான அணுகுமுறைகளும் கைக்கொள்ளப் படவேண்டும் என்பதும் சிறப்பான ஒன்றாக உள்ளது.

 

    அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவை தரமாக இருக்க வேண்டுமே தவிர தனியார் பள்ளிகளின் ‘போலி’த்தரத்திற்கு இணையாக அல்ல. தனியார் (சுயநிதி) பள்ளிகளின் தரம், அதற்கிணையான அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துதல் என்கிற சொல்லாடல்கள் தொடர்ந்துப் பலரால் முன்வைக்கப்படுகிறது. இதில் உண்மைகள்  என்ன என்பதை ஆராய வேண்டுவது அவசியமாகும்.

 

       தரம் என்பது புறத்தோற்றத்தில் இல்லை. பிரமிக்க வைக்கும் புறத்தோற்றங்கள், கட்டட வடிவமைப்புகள், அதன் உயரம், வண்ணப்பூச்சுகள், வாகனங்கள், சீருடைகள் போன்ற எதுவும் தரத்தின் ஓரம்சமாகக் கூட இருக்கவியலாது. பெரிய சுற்றுச்சுவர்கள் பிரமிப்பூட்டலாம்; பள்ளிக்கூடம் என்பது சிறையல்ல. அந்த வளாகங்களின் உள்ளே என்ன நடக்கிறது என்பதே முதன்மை.

 

      தண்ணீர் வசதியுடனான சுகாதாரமான கழிப்பறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், குழந்தைகளை எவ்வகையிலும் சுரண்டாத சூழல், சிறந்த கற்றல் - கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள், முறையான பயிற்சி பெற்றத் திறமையான ஆசிரியர்கள் என்பது போன்றவையே தரத்திற்கான அளவுகோலாக அமைய முடியும்.

 

       தண்ணீர் வசதிகளுடன் கழிப்பறை வசதிகள் வேண்டும் சில தனியார் பள்ளிகளில் அரசுப்பள்ளிகளை விட மேம்பட்டதாக இருக்கலாம். அரசுப்பள்ளிகளில் கட்டடங்கள், கழிப்பறைகள் மிக மோசமாக இருக்கக் காரணம் என்ன?  ஊழல் மட்டுமே காரணமாகும். இவை ஒதுக்கீட்டுத் தொகையில் 40% கமிஷன் 'ஒதுக்கி'க் கட்டப்படுபவை. இவற்றை ஒழித்தால்தான் அரசுப்பள்ளிகளில் தரமான கட்டுமானங்கள் அமையும். இது சாத்தியப்படும் என்று நம்ப இயலவில்லை. பிற அரசுத்துறைக் கட்டடங்கள் ஒப்பீட்டளவில் பள்ளிக் கட்டுமானங்களை விடத் தரமானவை. பள்ளிகளைப் பராமரிக்கும் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியங்கள் ஏனிந்தத் 'தீண்டாமை'யைக் கடைப்பிடிக்கின்றன என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று.

 

       அரசு மற்றும் சுயநிதிப்பள்ளி ஆசிரியர்களையும் ஒப்பிடுவதும் இயலாது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 1 முதல் 8 ஆம் வகுப்பு முடிய பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இவற்றைத் தனியார் பள்ளிகள் பூர்த்தி செய்துள்ளனவா? இல்லையே. 

 

   ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. நியாயமான ஊதியமின்றிச் சுரண்டப்படும் ஆசிரியரின் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வாறு அமையும்?  அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போன்று எவ்விதப் பயிற்சிகளும் இல்லை. தலையங்கம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சியைப் பற்றிப் பேசுகிறது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி என்ற ஒன்றே  கிடையாது. இதுகுறித்து மவுனம் சாதிப்பது ஏன்?

 

  பள்ளியளவில் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் மாணவர்களின் மனப்பாடத்திறனை மேம்படுத்தி அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கும் 'கோச்சிங்' உத்திகள் மட்டுமே. மாறாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இவை வழக்கமான அரசுத் திட்டங்களைப் போலவே  உள்ளன.  அவ்வளவுதான்.  இவற்றை ஒழுங்குப்படுத்தத் தடையேது?

 

      இன்னும் கூட தனியார் பள்ளிகள் சராசரிக்கு குறைவானக் கற்றல் திறனுடையோரை பள்ளியில் அனுமதிப்பதில்லை; நுழைவுத்தேர்வுகள், மதிப்பெண்கள், தனித்தேர்வராக்குதல் எதோ ஒரு வகையில் வெளியேற்றி விடுகின்றன. பெரும்பாலான மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு இங்கு இடமே இல்லை. 

 

    பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பரந்த  இடவசதியோ,  விளையாட்டுத் திடலோ இல்லை. வகுப்பறையில் 40 குழந்தைகள் இருந்தால் மட்டும் போதாது; அவர்கள் புழங்குவதற்கான விசாலமான இடமும் வேண்டும்.

 

  சில விதிவிலக்குகள் தவிர்த்து பெருமளவிலான அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்திற்குள்ளே ஆங்கில வழி சுயநிதிப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதனால் அரசு உதவிபெறும் பிரிவில் படிக்கும் குழந்தைகள் தங்களது வசதிகளைத் தானமளித்துவிட்டு அப்பள்ளி வளாகத்தில் ஒடுங்கிக் கிடக்கின்றனர். ஒரே வளாகத்தில் உதவிபெறும் பள்ளியும் சுயநிதிப் பள்ளியும் செயல்படுவதைச் சட்டம் இயற்றித் தடுக்காதவரை இந்தப் பாகுப்பாட்டிற்குத் தீர்வே கிடையாது.

 

    சமச்சீர் கல்வி அமலாக்கத்திற்குப்  பிறகு தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டம் மட்டுமே பின்பற்றப் படவேண்டும்.  ‘மெட்ரிக் பள்ளிகள்’ என்றே பெயருக்கும் இங்கு இடமில்லை. ஆனால் தங்களை வேறுபடுத்திக் காட்டவும் கல்விக் கொள்ளையடிக்கவும் அரசு இவர்களை அனுமதிக்கிறது. 

 

     பெற்றோர்களிடம் வசூல் கொள்ளையிடுவதற்கு சில முலாம் பூசும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ‘மெட்ரிக்’ என்ற பெயருடன் கூடவே இந்தி மற்றும் தனியார் பாடநூல்களை விநியோகித்து தமிழக அரசுப் பாடநூல்களைக் கற்பிக்காமல் ஒதுக்கி வைக்கும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

 

    'மெட்ரிக்' வேடம் கலைந்துபோனதால் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்திற்கு மாறியவர்களும் என்சிஆர்இடி (NCERT) பாடநூல்கள்களைப் புறந்தள்ளிவிட்டு மிகமோசமானத் தனியார் பாடநூல்களைப் பயன்படுத்துகின்றனர். தமிழகப் பள்ளிக் கல்வித்துறையைப் போன்று மத்தியக் கல்வி வாரியமும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை. தமிழக அரசின் பாடத்திட்டமும் பாடநூல்களும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும். 9 மற்றும் + வகுப்புகளில் முறையே 10 மற்றும் +2 வகுப்புப் பாடங்கள் கற்பிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதைக் ‘காப்பி’யடிக்கச் சொல்லும் கல்வி அலுவலர்களின் மனப்போக்கையும் பொதுத்தேர்வு மைய அணுகுமுறையும் ஒழிய வேண்டும்.

 

   தமிழ் நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற நிலைப்பாடு உள்ளபோது சுயநிதிப் பள்ளிகள் எதனடிப்படையில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுத் தருகின்றன? தங்களை வேறுபடுத்திக் காட்டவும்  வசூல்வேட்டைக்கு மட்டுமே இவை பயன்படுகின்றன. இம்முறை தடுக்கப்பட வேண்டும். இம்மாதிரியான கூடுதல் பாடங்களால் விளையாட்டுப் பாடவேளைகள் முற்றாக அபகரிக்கப்படுகின்றன. 

 

     ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் நலப்பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டுக்குள் அல்லது இத்துறை போன்ற நிர்வாக அலகுக்குள் கொண்டுவரப்படவேண்டும். தொடர்புடைய துறைகள் நிதி ஒதுக்கீடு மட்டும் செய்யலாம். கண்காணிப்பு சீரடைய வேண்டும்; ஊழல்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

 

    நமது நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபளிப்பவை அரசுப்பள்ளிகளே. அவை மேலும் திறம்பட வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளை முன்மாதிரிகளைக் கொண்டு அவை எக்காலத்திலும் செயல்பட முடியாது. சூழ்ச்சி, வஞ்சகம், ஏமாற்றுதல், மோசடி, திருட்டு, கொள்ளை என அனைத்து ஒழுங்கீனங்களும் பிரதியெடுக்கப்பட வேண்டியவையும் அல்ல. பணம் கொடுத்துப் பெறுவதால் மட்டும் அது தரமானதாக அமையாது. கொரோனாப் பெருந்தொற்று அரசு மருத்துவமனைகளையும் அரசுப்பள்ளிகளை நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முழுதும் தனியாரை மட்டும் நம்பினால் என்னாகும் என்கிற பாடம் தற்போது கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும்.

 

      தனியார் பள்ளிகளுடன் அரசுப்பள்ளிகளை தரம் சார்ந்த ஒப்பீடு செய்வது மிகவும் அபத்தமான ஒன்று. அதற்குப் பதிலாகத் தர அளவுகோல்களையும் நமது மனச்சாய்வையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

 

(ஜூன் 18, 2021 (18/06/2021) 'இந்து தமிழ் திசை'யில் வெளியான “கூடுதல் மாணவர்களுக்குத் தயாராக இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்” என்ற தலையங்கதிற்கான எதிர்வினை.)

 

நன்றி: www.panmai.in

இணைப்பு: http://panmai.in/2021/06/18/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae/

செவ்வாய், ஜூன் 15, 2021

பார்ப்பனர்களைப் பாதிக்கப்பட்டோராக மாற்றும் தத்துவார்த்தச் சொல்லாடல்கள்

 பார்ப்பனர்களைப்  பாதிக்கப்பட்டோராக மாற்றும் தத்துவார்த்தச் சொல்லாடல்கள்

    

மு.சிவகுருநாதன்

 

(சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை மற்றும் விரிசல் கண்ணாடி (மொ) ஆகிய நூல்கள் குறித்த விமர்சனம்.)

 


 

      தோழர் ராமாநுஜம் தமிழிலக்கிய உலகில் மிகவும் அறிமுகமான எழுத்தாளர்; மொழி பெயர்ப்பாளர், நாடகவியலாளர். ‘ஆடுகளம்’ நவீன நாடகக்குழுவில் இயங்கியவர். ஆறாவது வார்டு, மழை, காட்டு நகரம், நாங்கள் நியாயவாதிகள், நிரபராதிகளின் காலம் போன்ற நாடகங்களை இயக்கி நடித்தவர். காந்தியின் உடலரசியல், தற்கொலைகளைக் கொண்டாடுவோம், சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை ஆகிய நூல்களின் ஆசிரியர். மண்ட்டோ படைப்புகள், அங்கிள் சாமுக்கு (மண்ட்டோ கடிதங்கள்), மௌனவதம் (ஆர்துரோ வான் வாகனோ), தீப்பற்றிய பாதங்கள் (டி.ஆர்.நாகராஜ்), இரண்டு தந்தையர் (சுந்தர் சருக்கையின் மூன்று நாடகங்கள்), விரிசல் கண்ணாடி (கோபால் குரு, சந்தர் சருக்கை ஆகியோரின் 8 கட்டுரைகள்) ஆகிய நூல்களை மொழிபெயர்த்தவர். சந்நியாசமும் தீண்டாமையும் நூலுக்குப் பிறகு சீனிவாச ராமாநுஜம் என அறியப்படுகிறார். இந்நூலின் விரிவு  ‘Renunciation and Untouchablity: The Notional and the Empirical in the Caste Order’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் (சர்வதேசப் பதிப்பு) வெளியாகியுள்ளது. (விலை: 10,587, வெளியீடு: Routledge India) தற்போதைய வெளியீடு (March 31, 2021) 995க்கு கிடைக்கிறது.  சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை, விரிசல் கண்ணாடி (மொ) ஆகிய மூன்று நூல்களின் வாசிப்பனுபவம் இங்கு சொல்லப்படுகிறது. தத்துவார்த்த ரீதியில் எழுதப்பட்ட இவைகளை ஆழமாகப் பயில தத்துவப் பயிற்சியோ ஆங்கில அறிவோ எனக்கு இல்லை. எனவே இதை ஒரு வாசக அனுபவமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.


 

     அவரது எழுத்துகள் மற்றும் சிந்தனைகளிலும் தொடர்ந்து இழையோடும் தன்மைகளை இந்நூல்களிலும் காணமுடிகிறது. நவீனத்துவம், கிருஸ்தவப் பாதிரிகள், அறிவியல்வாதம் குறித்த விமர்சனங்களை அவரது முந்தைய நூல்களிலும் காணலாம். (பார்க்க: ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்’ நூல் - அ.மார்க்ஸ் முன்னுரை) தமிழில் உடலரசியல் குறித்து எழுதிய மிகச்சிலருள் ஒருவர். ஜமாலனின் உடலரசியல் பார்வையிலிருந்து இவருடையது வேறுபட்டதாக உள்ளது. அதாவது பார்ப்பனிய உடல் குறித்த கரிசனமாகவே இருக்கிறது.

     ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூலுக்கு முன்னதாகவே தோழர் ராமாநுஜம் மண்ட்டோ உள்ளிட்ட மொழிபெயர்ப்புகள் வழியே அறியப்பட்டிருந்தாலும் இதன் அரசியலுக்காகவே ஆனந்த விகடன், இந்து தமிழ் திசை ஆகியன விருதளித்துக் கொண்டாடின. ‘சந்நியாசமும் தீண்டாமையும்’, ‘இந்து மதம்: ஒரு விசாரணை’ போன்ற நூல்களின் வழியாக சாதியம், தீண்டாமை குறித்துப் புதிய பார்வைகளையும் விவாதத்துக்கான சாத்தியங்களையும் உருவாக்குவதற்கு முயன்றுவரும் ஆய்வாளர் சீனிவாச ராமாநுஜத்தின் முக்கியமான பங்களிப்பு இந்த மொழிபெயர்ப்பு, என்று இந்து தமிழ் நூல்வெளியில்  ஷங்கர்ராமசுப்ரமணியன் குறிப்பிடுவதையும் அவதானிக்கலாம். (இந்து தமிழ் திசை, மே 01, 2021)

     “சாதியத்தை வர்ணத்தின் விளைவாகவோ, சுத்தம் – அசுத்தம் குறித்த கருத்தாக்கங்களின் விளைவாகவோ என்னால் என்றுமே ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. (…) வர்ணம் – சாதி – தீண்டாமை என்ற நேர்கோட்டிலான ‘பரிணாம வளர்ச்சி’ மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது”, (பக்.09, சந்நியாசமும் தீண்டாமையும்) என்று முன்னுரையிலேயே தெரிவித்து விடுகிறார். 


 

    சுந்தர் சருக்கையின் (Sundar Sarukai) ‘தீண்டாமையின் தோற்றப்பட்டியல்’ கட்டுரையை அடிப்படையாகக் கொண்டும் இதன் போதாமைகள் என்று அவர் கருதுபவற்றை பாட்ரிக் ஒலிவெல் (Patrick Ollivelle), வீணா தாஸ் (Veena Das) போன்றோரைக் கொண்டு நிரப்பியும் தெரிதாவின் பின்துணையாக்கக் கோட்பாட்டைக் கொண்டும்  பார்ப்பனர் என்ற வகைப்பாட்டைப் அர்த்தப்படுத்திப் புரிந்துகொள்வதற்கு ஒரு தத்துவார்த்தக் கதையாடலை நிகழ்த்துகிறார். தொடர்ந்து கோபால் குருவின் (Gopal Guru) சிந்தனைகளும் இதற்கு உறுதுணை புரிகின்றன. அதில் ஒரு தேர்ந்த நாடகக் கலைஞரின் கைவண்ணமிருக்கிறது. மாயமான, கவர்ச்சியான, புதிரான தமது எழுத்துநடைக்குள் நம்மை நுழைத்து அவரது பாதையில் திருப்பிவிட முயல்கிறார்.  

      இந்தக் கதையாடலின் அரசியலை புரிந்துகொண்டுதான் இவற்றைக் கொண்டாடுகிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இதன் தொடர்ச்சியாகவே சமஸ் ‘இந்துமதம்: ஒரு விசாரணை’ நூலை விதந்தோதியதையும் பார்க்கலாம்.     ‘விரிசல் கண்ணாடி’ நூலிலுள்ள ‘தீண்டாமையின் தோற்றப்பாட்டியல்’, ‘தீண்டாமையின் தொல்லியல்’ ஆகிய கட்டுரைகளே இவரது  கருத்துகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. இக்கட்டுரைகளே ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ நூலுக்கான தடமாகிறது. இதன் தொடர்ச்சியாக ‘இந்துமதம்: ஒரு விசாரணை’ என்ற நூலை அவதானிக்கலாம். எனவே இம்மூன்று நூலையும் சேர்த்து வாசிப்பது இதன் உள்ளரசியலையும் நுண்ணரசியலையும் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

       பார்ப்பனர்களை  அரசியல், சமூகப் புலத்திலும் (எ.கா. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட இதுக்கீடு - Economically Weaker Section - EWS) பாதிக்கப்பட்டோராக (victims) மாற்றும் வேலையைப் போன்றே தத்துவ, கல்வியியல் புலங்களிலும் இப்பணியைச் செய்ய இத்தகைய தத்துவார்த்த வியாக்கினங்கள் உதவுகின்றன என்பதையும் உணரவேண்டும்.

     “சந்நியாச உபநிடதங்களில் முற்காலத்தில் படைக்கப்பட்டவற்றில் ஒருசில தவிர, பார்ப்பனியத்தில் துறவறம் குறித்த தனித்த நூல்கள் ஏதுமில்லை. (பல பிரதிகள் இருந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் அவை தொலைந்து போயிருக்க வேண்டும் என்றும் தர்மசூத்திரங்கள் மற்றும் தர்மசாஸ்திரங்களில் சில தகவல்களை வைத்து ஒலிவெல் அனுமானிக்கிறார்.) (பக். 70&71, சந்நியாசமும் தீண்டாமையும்)

     வேதமதத்தில் துறவறத்திற்கான இடமில்லை. இது பவுத்த, சமணத் தாக்கங்களால் நிகழ்ந்த ஒன்றாகவேப் பார்க்க இயலும். திருமணமற்றத் துறவு (ஸ்ரமணத்துறவு) என்பது அறவே இல்லை. பிரம்மச்சரியம் (16 – 24 வயது), கிரகஸ்தம் (56 வயது வரை), வனப்பிரஸ்தம், சந்நியாசம் (துறவுநிலை) என்றுதான் வேதமதம் வரையறுக்கிறது. எனவே சந்நியாசம் என்பது செயலூக்கமான ஒன்றல்ல; இறுதிக்காலத்தின் பாதை. பவுத்தம், சமணம் போன்ற அவைதீக சமயங்களின் தாக்கமே அதிகம் என்பது உணரக்கூடியது. வைதீகத் துறவறத்திலுள்ள சந்நியாசிகளின் பண்பாக தீண்டாமைப் பார்ப்பது சரியானதல்ல. இதனுடைய நீட்சி சமண, பவுத்த அவைதீக சமயங்களே தீண்டாமையின் தோற்றுவாய் என்பதில் போய்முடியும். இந்தப் புறச்சமயத்தினர் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டதை மறுத்து, அவர்கள் தீண்டாமைக்குக் காரணமானவர்கள் என்று மறைமுகமாகச் சொல்கின்றன இவ்வாய்வுகள்.  

   “நாம் பார்ப்பனியத்தின் வெற்றி என்று எதையேனும் சொல்லலாம் என்றால் இறையியல் தளத்தில் பல முரண்களை ஒன்றிற்கு ஒன்றை அடைத்ததைச் சொல்லலாம் என்றேன். ஆனால் உண்மையில் அது பார்ப்பனியத்தின் தோல்வி என்றே தோன்றுகிறது. ஒரு வகைப்பாட்டிற்குள் பல நிலைப்பாடுகளை ஒன்றிணைத்து அதை எல்லாமாகவும் எதுவும் இல்லாததாகவும் ஆக்கிவிடுகிறது”. (பக். 85, சந்நியாசமும் தீண்டாமையும்)

    பிற கருத்தியல்கள் பலவற்றை உள்வாங்கியதால் ஏற்பட்ட விளைவன்றி, இதைப் பெருமிதமாகக் காண இயலாது. இந்த முரண்களுக்கு தத்துவார்த்தச் சொல்லாடல்களை உற்பத்தி செய்வதற்கு முன்பாக அவற்றைப் பிரித்தறிதல் அவசியம். பெரும்பாலும் இத்தகைய  முரண்கள் பிற தத்துவங்களிலிருந்து கடனாகப் பெற்றவையே.

    “பார்ப்பனக் குழுமங்கள் ‘தீண்டப்படாதவர்கள்’ என்ற வகைப்பாட்டோடு தொடர்புப்படுத்திதான் அவற்றிற்கான அர்த்தத்தைப் பெறுகின்றன”. (பக்.91, சந்நியாசமும் தீண்டாமையும்)

   “சமஸ்கிருதமும் கணிதவியலும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. கணிதத்தின் உள்ளியல்பான கட்டமைப்பு எவ்வாறு ஹிரோஷிமாவையும் நாகசாகியையும் கொடுத்ததோ அதுபோலவே சமஸ்கிருத மொழியின் உள்ளியல்பான கட்டமைப்பு தீண்டாமையைக் கொடுத்தது”. (பக்.242, சந்நியாசமும் தீண்டாமையும்)

   “விளிம்பில் உள்ளவர்கள் அதாவது மகாபாவங்கள் செய்தவர்கள், பிரேதாவாக இருப்பவர்கள், சமூகக் கட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள், மாதவிடாயில் உள்ள பெண்கள் எல்லாரும் நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு சந்நியாசிக்குப் பார்ப்பனர்கள் உட்பட எல்லாரும் நிரந்தரமாகத் தீண்டப்படாதவர்களாகிறார்கள்”.  (பக்.173, சந்நியாசமும் தீண்டாமையும்)

   வன்முறைக்கும் அழகியல் உண்டு என்பதைப்போல பாசிசம், தீண்டாமை போன்ற கொடூரங்களுக்கும் தார்மீக அறம் உண்டு என்கிறார். (மேலது, பக்.184)

  “கீழைத்தேயவாதமும் ஆங்கிலேயவாதமும் சாதியத்தை ஒரு முறைமையாக வடிவமைத்தன. இவை முன்வைத்த கதையாடல்களில் சாதிய முறைமையை உருவாக்கியவர்கள் இந்துமதப் பாதிரிமார்களான பார்ப்பனர்கள்”. (பக்.105, இந்து மதம்: ஒரு விசாரணை)

   “பௌத்தமும் சமணமும் துறவறத்தை முன்வைத்து பார்ப்பனர்கள் கோரியதை எதிர்த்தன என்றால், பக்தி சமயங்கள் குடும்பஸ்தர்களை முன்வைத்து பார்ப்பனர்கள் கோரியதை எதிர்த்தன. இவற்றுக்கு நிகராகக் கத்தோலிக்கப் பாதிரிமார்களின், பிராட்ஸ்டன்ட்  பாதிரிமார்களின் முன்வைப்புகள் இந்தியாவில் உள்ள பல்வேறு சமயப் பார்வைகளில் மேலும், ஒரு சமயப் பார்வையாக மாறியது. இந்தப் பார்வையே ‘முற்போக்கு’ பார்வையாக மாறிவிட்டது”. (பக்.106, இந்து மதம்: ஒரு விசாரணை)

    “கீழைத்தேயவாத முன்வைப்புகள் இந்தச் சமூகத்தில் கத்தோலிக்க, பிராட்டஸ்டன்ட் பாதிரிமார்கள் பெற்ற அனுபவரீதியானதை ஒழுங்கமைத்தனவே தவிர நம் சமூக யதார்த்தத்தைப் பிரதிபளிக்கவில்லை என்றால், கீழைத்தேயவாத முன்வைப்புகளைப் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதவர்களும் விமர்சனமற்று ஏற்றுக்கொண்டதை”, ஜப்பானிய நாவலொன்றின் துணைகொண்டு நிறுவுகிறார். (பக். 108&109, இந்து மதம்: ஒரு விசாரணை)


 

    “கீழைத்தேயவாதிகளும் ஆங்கிலேயவாதிகளும் சாதிகளுக்கு இடையேயான பௌதிக, மீபௌதிக உறவை ஒரு முறைமையாக்கினார்கள்; சாதிகளை இந்து மதத்தின் நிறுவனமாக்கினார்கள். பார்ப்பனர்கள் இந்து மதப் பாதிரிமார்களானர்கள் என்றால் தலித்துகள் மட்டுமே தீண்டப்படாதவர்களானார்கள். பௌத்தம், சமணம் இரண்டுமே இந்து மதத்தையும் பார்ப்பனர்களையும் பார்ப்பனியத்தையும் எதிர்க்கும் மதங்களாயின. பார்ப்பனியம் பார்ப்பனியர்களின் வாழ்க்கைமுறையானது. அதுவும் புரோகிதர்கள், பூசாரிகளோடு மட்டுப்படுத்தப்பட்டதானது. சந்நியாசிகள் இந்தச் சட்டகத்துக்கு அடைபடாதவர்களானர்கள். இதன் விளைவாக, பார்ப்பனரல்லாத சாதிகளும் தலித் சாதிகளும் பார்ப்பனியத்துக்கு வெளியே இருப்பவையாயின. பார்ப்பன் சந்நியாசிகள் இந்தச் சட்டகத்தில் புலப்படாதவையாக இருப்பதுபோலவே, பார்ப்பனரல்லாத குமுகங்களில், தலித் குமுகங்களில் உள்ள புரோகிதர்களும் பூசாரிகளும் சந்நியாசிகளும் துறவிகளும் புலப்படாதவர்களானார்கள். இதனாலேயே நாம் அசமூகரீதியானதாக வரையறுத்துக்கொள்ளும் சமயம்/சாதி மடங்களை நம்மால் சாதிகள் குறித்த கதையாடல்களுக்குள் கொண்டுவர முடியவில்லை. மொத்தத்தில் பார்ப்பனியம் என்பது பார்ப்பனப் புரோகிதர்களோடும் பூசாரிகளோடும் சுருங்கிப்போனது. இது கத்தோலிக்க, பிராட்டஸ்டன்ட் கீழைத்தேயவாதங்கள் நமக்குக் கொடுத்தது”. (பக். 111&112, இந்து மதம்: ஒரு விசாரணை)

    அறிவியல், நவீனத்துவம், கீழைத்தேயவாதம், ஆங்கிலேயவாதம்,  கத்தோலிக்க, பிராட்டஸ்டன்ட் கிருஸ்தவப் பாதிரியார்களின் முன்வைப்புகள் போன்றவை இங்கு நிராகரிக்கப்பட வேண்டியாகவும் மிகத் தவறான பார்வைகளாகவும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. இதற்கு மாற்றாக இந்தியச் சிந்தனை மரபு முன்வைக்கப்படுகிறது. நவீனக் கருத்தாக்கங்களுக்கு மாற்றான தொன்மை இந்திய மரபை எவ்வாறு அடையாளம் காணுவது, அது ஒரு ஒருபடித்தான ஒற்றைத் தன்மையுடையதா  என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

   “சாதிகளை விமர்சனபூர்வமாக அணுகுவதற்குப் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே போதுமானதல்ல. ஏனெனில் பார்ப்பனர்களும் சாதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்”. (பக். 121, இந்து மதம்: ஒரு விசாரணை)

    “தீண்டாமையை எழுவாயின் பண்பாகப் பார்க்க வேண்டும்”. (பக்.122, மேலது) என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அதற்கு பார்ப்பனியப் புராணங்களிலிருந்து சாதகமான விளக்கங்கள் கண்டடையப்படுகின்றன.

     வேத (இந்து) மதத்தின் வருண வகைப்பாட்டையும் வேறுபாட்டையும் மறுத்து தீண்டாமைக்கு புது விளக்கமளிப்பதும் பார்ப்பனர்களை பாதிப்பட்டோராகச் சித்தரிப்பதும் இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகளை விளங்கிக் கொள்ள முயல்வதும் இதன் பின்னாலுள்ள இன்றைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. 

    தீண்டாமை மற்றும் அசுத்தங்களை ஸ்தூலமானவை (literal) சூட்சுமமானவை (notional) என வேறுபடுத்திக் காட்டும் இவ்வாய்வு பிறப்பினடிப்படையிலான வருணங்கள், சாதித் தீண்டாமைகள், இயற்கைப்பொருள்கள், திசைகள் மீதானத் தீண்டாமைகளைக் கண்டுகொள்ளாமல் மவுனிப்பது வியப்பிற்குரியது.

   மாதவிலக்கான பெண்கள், பிராமணப் பெண்கள், பிராமணர்கள் (மடி) சூத்திரர்கள், தலித்கள் (அவர்ணர்கள்) போன்றோரது தீண்டாமைகள் இங்கு ஒருபடித்தானது அல்ல. பெண்கள் மற்றும் பிராமணர்களின் தற்காலிகத் தீண்டாமையை தலித் தீண்டாமையோடு ஒப்பிடுவது மிக மோசமான ஒன்றாகும். வேத இந்து மதத்தின் வருணங்களுக்குள் அடங்காத பெருந்திரள் மக்கள் தொகுதியின் (பஞ்சமர்கள் – அவர்ணர்கள்) மீது தீண்டாமை மடைமாற்றப்படுவதான சொல்லாடல்கள் உற்பத்தி செய்வது பார்ப்பனியத்தைக் காப்பாற்றும் மடைமாற்றமாகவே (உத்தி) அவதானிக்க வேண்டியுள்ளது.

    தீண்டாமை அசுத்தம் சார்ந்தவையில்லை என்பதே வெளிப்படை. இதற்குப் பெரிய தத்துவ ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. இது அசுத்தம் சார்ந்ததாக இருந்தால் நீரைக்கொண்டு நீக்கலாமே! இந்தத் தீட்டைக் கழிப்பதற்கு நீரைவிட அக்னி (தீ), யாகங்கள், சம்ஸ்கிருத மந்திரங்கள், பட்டு, மாட்டு மூத்திரம், நெய் போன்றவற்றையே பார்ப்பனியம் நம்பியிருப்பதிலிருந்தே சுத்தம், அசுத்தம் சார்ந்ததல்ல என்பதை எளிதாக முடிவு செய்யலாம்.

     பர்ப்பனர் உள்ளிட்ட யாவருமே தங்களது மலத்தை கைகளால் சுத்தம் செய்பவர்களே. அதை அடுத்தவர்கள் செய்யும் போதும் மட்டும் அசுத்தம், இழிவு, தீட்டு என மாற்றுவது வருணபேதம். இதை எப்படி எழுவாயின் பண்பாகக் காண முடியும்?   

     திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ‘மத்தியானப் பறையர்’ என்றொரு புராணக்கதை இருக்கிறது. (பார்க்க: பண்பாட்டு அசைவுகள் – தொ.ப.) இதை எப்படிப் பார்ப்பனத் தீண்டாமையாக வகைப்படுத்த முடியதோ அதைப்போன்று பார்ப்பனப் புராணங்களைக் கொண்டு தீண்டாமை என்று சொல்வது சரியாக இருக்குமா? இப்புராணக்கதைக்கு மாற்றாக பறையர்களின் உரிமைகளைப் பறித்தமைக்கு ஒரு சமரச ஏற்பாடாக ‘யானையேறும் பெரும் பறையர்’ என்ற நிகழ்வு திருவிழாக் காலங்களில் கடைபிடிக்கப்படுவதாகவும் சொல்லப்படுவது காண்க. 

     பார்ப்பனர்கள் எதிரில் வரக்கூடாது என்றொரு சகுனம் (நிமித்தம்) தமிழகக் கிராமங்களில் உண்டு. இதனால், கண்டால் தீட்டு என்ற நிலையில் பகலில் நடமாட முடியாமல், இரவாடிகளாக வாழ்ந்த புதிரை வண்ணார்கள், புலையர்கள் போன்றவர்களைப் போலப் பார்ப்பனர்களும் தீண்டாமையின் கோரப்பிடியில் இருந்தனர் என்று தத்துவார்த்தச் சொல்லாடல்கள் உருவாவது எப்படி இருக்கும்? 8, 16, 32, 64 அடி தூர எல்லைக்குள் வந்துவிட்டால் தீட்டாகும் எனச் சமூகங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. இதை பார்ப்பனச் சடங்கான ‘மடி’யுடன் தொடர்புப் படுத்தி, “பாருங்கள்! பார்ப்பனர்களும் தீண்டாமையை அனுபவிக்கிறார்கள்”, என்று சொல்வது அபத்தம். சந்நியாசிகளின் பிரேதா நிலை மற்றும் தீண்டாமை, தங்களைத் தாங்களே ஒதுக்கி வைத்துக் கொள்ளுதல் என்பதெல்லாம் மிகச்சிறந்த புனைவுருவாக்கமாக இருக்கின்றன. இங்கும் ஏரணம் (logic) இடிக்கிறது.

    இங்கு ஐந்து மூலகங்கள் (பூதங்கள்), திசைகள், உணவுகள், தாவரங்கள், விலங்குகள் என எதிலும் கட்டமைக்கப்பட்டத் தீண்டாமையை (பார்க்க: சூழலும் சாதியும் – நக்கீரன்)  எந்த எழுவாயின் பண்பாக பார்க்க வேண்டும் என்பதும் நமக்கு விளங்கவில்லை. இங்குத் தீண்டாமை வெறும் தொடுதல் சார்ந்ததாக மட்டும் இல்லை; உயிரற்றப் பொருள்களிலும் இருக்கிறது. எனவே தொடுதல் பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் இங்கு பக்கங்களை மட்டுமே நிரப்புகின்றன.

    பிராமணரிடமிருந்து நாயர் 16 அடி, ஈழவர் 32 அடி, புலையர் 64 அடியும், நாயரிடமிருந்து ஈழவர் 16 அடி, புலையர் 32 அடியும், ஈழவரிடமிருந்து புலையர் 6 அடியும் விலகியிருக்க வேண்டும் என்பது அய்யங்காளி காலக் கேரள நிலைமை. மலைசாதியினர் பிராமணர் பார்வையில் பட்டாலே தீட்டு ஏற்பட்டுவிடும். இத்தகைய எல்லைக்குள் நெருங்க நேர்ந்தால் ‘தீண்டல்’ என்றும் தொட்டுவிட்டால் ‘தொடீல்’ என்றும் அவர்கள் தீட்டை வரையறுத்திருந்தனர். (பார்க்க: மகாத்மா அய்யங்காளி – காலச்சுவடு வெளியீடு)  ‘தீண்டல்’ பற்றிய விரிவான ஆராய்ச்சிகளில் இவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை.   

   ‘வர்ணங்கள் – சாதிகள் – தீண்டாமைகள்’ என்ற கண்ணியை ‘பார்ப்பனர் – சந்நியாசம் – தீண்டாமை’ என்ற வேறொரு புனைவை நிகழ்த்துவதன் மூலம் பார்ப்பனர்களைப் பாதிக்கப்பட்டோராகவும்  பரிதாபத்திற்குரியவர்களாகவும் நிறுத்தும் வேலையை இந்நூல்கள் செய்கின்றன. சந்நியாசியும் தீண்டப்படாதவரும் ஒன்று எனக் கட்டமைப்பதன் வாயிலாக தீண்டாமைக் கொடுமைகள் புனிதமாக்கப்படுகின்றன. பார்ப்பனியப் புராணங்கள் மற்றும் சொல்லாடல்களைக் கொண்டே இவற்றை நிறுவிக்கொள்ள முயல்வது ஆய்வின் ஆபத்தான போக்காகும்.

      “இந்தியாவில் சமூக அறிவியல் துறையில் நன்கு அறியப்பட்டவர்களாக இருப்பவர்கள் எல்லாருமே அவர்களது ஆய்வுகளை ஆங்கிலத்தில் எழுதுகிறவர்களாகவே இருக்கிறார்கள். பன்மை மொழி, பன்மைப் பண்பாடு கொண்ட சமூகத்தை அர்த்தப்படுத்துவதற்கு ஒரு மொழியை முற்றிலும் சார்ந்திருப்பது பல பிரச்சினைகளைக் கொண்டிருப்பதாகிறது”. 

   “நூலாசிரியர்களான நாங்கள் இருவரும், மராத்தியிலும் கன்னடத்திலும் எழுதியிருக்கிறோம் என்றாலும், வெகுஜன ஊடகங்களில் எழுதியிருக்கிறோம் என்றாலும் இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியதைப் பொருத்தமட்டில் நாங்கள் குற்றவாளிதான்.” (விரிசல் கண்ணாடி முன்னுரை, கோபால் குரு & சருக்கை) என்று சொல்வதன் வாயிலாக ஆங்கிலம், அம்மொழியில் செய்யப்படும் ஆய்வுகள், இந்தியாவிற்கு வெளியிலிருந்து செய்யப்படும் ஆய்வுகள் ஆகியவை பற்றிய ‘நவீனத் தீண்டாமை’ உருவாக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்தத் ‘தீண்டாமையின் தோற்றப்பாட்டியல்’ இந்திய விவாதம், இந்திய ஆய்வு, இந்தியச் சிந்தனை என்று மையங்கொள்வதை உணர முடிகிறது.

     இதற்கு மாற்றாக எந்த இந்திய மொழியில் சமூகவியல் ஆய்வுகள் அமைவது நன்றாக இருக்கும்? மராத்தி (கோபால் குரு), கன்னடம் (சருக்கை), ராமாநுஜம் (தமிழ்) இவற்றில் எதோ ஒன்றில் எழுதுவது சரியாக இருக்குமா? அல்லது ஒற்றை இந்திய அடிப்படையில் சமஸ்கிருதத்தில் மட்டும் எழுதப்பட வேண்டுமா? நவீனத்துவம், ஆங்கிலம் ஆகியவற்றில் அனைத்து பலன்களையும் பெற்றுவிட்டு அவற்றை நிராகரிப்பதுதான் இவர்கள் சொல்லும் இந்தியச் சிந்தனை போலும்! ஆங்கிலத்தை நிராகரிப்பது, இந்தியச் சிந்தனை, மொழி என்றெல்லாம் சொல்வதன் பின்புலத்திலுள்ள ஸ்தூலமான வேறுபாடுகளை இவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. எனவே இந்துத்துவச் சொல்லாடல்களுக்கும் இவற்றிற்கும் வித்தியாசங்கள் இருப்பதில்லை.  

     தலித் கோட்பாட்டாக்கத்தை அவர்களே செய்ய வேண்டும் என்பது நியாயமானதே. எனவே தீண்டாமை பற்றிய கோட்பாடு உருவாக்கத்தையே அதை அனுபவிக்கும் பஞ்சமர்களான (அவர்ணர்கள்) தலித்களே செய்ய முடியும். இந்த ஆய்வுகளின்படி, “எழுவாயின் பண்பான தீண்டாமையை முழுதும் சுமக்கும்”  தலித்கள் ஒருவகையில் இந்து – பார்ப்பனியச் சட்டகத்திற்குள் வராதவர்கள். நால்வருண அமைப்பில் பிராமண, சத்திரிய, வைசிய இருபிறப்பாளர்கள் (துவிஜர்) ஒரு பிறப்பாளர்களான சூத்திரர்கள் மட்டுமே அடங்குவர். ஐந்தாம் வருணத்தவர் என்ற பெயரில் அழைக்கப்படும் பஞ்சமர்களாகிய தலித்கள் இந்த வருண வகைப்பாட்டில் அடங்காதவர்கள். இந்த அவர்ணர்கள்  மீதும் பார்ப்பனியச் சட்டகத்தில் உள்ளடக்கப்படும் சூத்திரர்கள் மீதும் தீண்டாமை செயல்படுவதைக் காணலாம். இந்த உள்ளும் வெளியிலானத் தீண்டாமையில் அளவு, தூர வேறுபாடுகள் மட்டும் உண்டு.

      Untouchable என்ற சொல்லாராய்ச்சி (not-touchable, touch-unable)  நடத்துவதற்கு மட்டும் ஆங்கிலம் தேவைப்படுவது விந்தையே.   இதன் வழியே பார்ப்பனர்கள்  தீண்டும் திறன் அற்றவராக (touch-un-ablity) கட்டமைக்கிறது. “தீண்டாமையைப் பொருத்தமட்டில், இது ‘தீண்டுபவரின்’ போதாமையைக் குறிக்கிறதே தவிர, தீண்டப்படும் நபரின் போதாமையை அல்ல என்பது தெளிவாகுகிறது. ஆக, தீண்டாமையின் புலம் தீண்டப்படாதவரைத் தீண்ட மறுக்கும் நபரிடம்தான் உண்மையிலேயே காணப்படுகிறது”. (பக்.228, விரிசல் கண்ணாடி) 


 

    தீண்டாமையை எழுவாயின் பண்பாகக் காணவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. வருணங்கள் – தொழில்கள் – சாதிகள் – தீண்டாமைகள் என்று சொல்வதெல்லாம் கதைக்குதவாது என இந்திய விவாதம் என்ற தலைப்பில் இவை முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் இவை இந்துத்துவ – சம்ஸ்கிருத – பார்ப்பனிய விவாதமாக எஞ்சுகின்றன. இந்திய விவாதம், இந்திய சிந்தனை, இந்திய மொழி என்று சொல்லும்போது இயல்பிலே சிக்கல் எழுகிறது.

     அறிவியலின் புறவயப்பார்வையை எள்ளி நகையாடும் இவர்கள் மறுபுறம் அகவயப்பார்வையை புறவயப்பார்வையாக மாற்றும் சமையற்குறிப்புகளையும் அளிப்பதையும் கவனிக்கலாம்.

     புறவயமான பார்வை என்ற ஒன்று சாத்தியம் என்று மேற்கத்திய அறிவியல்வாதம் நம்மை நம்ப வைத்துள்ளது. புறவயமான அனுபவம், அகவயமான அனுபவம் என்று அனுபவத்தைத் துல்லியமாக வகைமைப்படுத்துவது சாத்தியமானதுதானா என்ற புள்ளியிலிருந்து நமது இதுவரையிலான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறது இந்த நூல்”, (ஷங்கர்ராமசுப்ரமணியன், இந்து தமிழ் நூல்வெளி)

      “அனுபவத்தைச் சமூகமயமாக்குவதற்கு, அதை அந்தரங்கமானது, தனிமனிதர் சார்ந்தது என்பதிலிருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டியுள்ளது. நாம் இதை இரண்டு வழிகளில் செய்ய முடியும்: முதலாவதாக, அனுபவத்தை அகவய நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அதைப் பொதுவான அனுபவமாக ஒன்றுபடுத்த வேண்டும்”, (பக்.155, விரிசல் கண்ணாடி, கோபால் குரு)

     ஆர்.எஸ்.எஸ். ஒரு இந்து மடமாகச் செயல்படுகிறது. இதைப்போலவே பார்ப்பன, சூத்திர, தலித் மடங்களனைத்தும் எதிர்க்கப்பட வேண்டியவையே என்கிறார். இந்த  ‘நாக்பூர்’ மடத்திற்கு பார்ப்பனரல்லாத ஒருவர் தலைவராக இயலுமா? காஞ்சி சங்கர மடத்தைப் போலத்தானே இதுவும். பலதரப்பிலிருந்தும் பக்தர்கள் அல்லது தொண்டர்கள் (குண்டர்கள்) குவிவார்கள். ஆனால் அவர்களுக்கான இடம் எது? இந்திரா காந்தி, அப்துல் கலாம், பொன்.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் இங்கு ஒரே மாதிரியாக அணுகப்படுவதில்லையே! குன்றக்குடி மற்றும் நந்தனார் மடங்களை ஒன்றாகக் கருத முடியுமா?

    வருணத்தின் அடிப்படைகளை மறுத்து, அதன்மூலம் உருவாக்கப்பட்ட தீண்டாமையை வேறு தளத்திற்கு மாற்றி, எழுவாயின் பண்பாகவும் பார்ப்பனர்களின் தீண்டவியலா ஊனம் என்று கட்டமைத்து இப்பார்வைகளின் வழியே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை சொல்லப்படுகிறது. மிக மோசமான “கீழைத்தேயவாத, கிறித்தவ, ஆங்கிலேய முன்வைப்புகளை பார்ப்பனர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டதைப்போல”, இதையும் ஆர்.எஸ்.எஸ். முன்னாள், இந்நாள் ஊழியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், என்பதே இதன் சூட்சுமத்தை ஒருசேர விளக்குவதாக உள்ளது.    

      மேலும், “நம்முடைய கடந்த காலத்தை முற்றிலுமாக நிராகரிக்காமல் நம் சமகால பிரச்சனைகளை அணுகவேண்டும் என்று முனைப்புக்காட்டி வருபவர்களில் மூத்த தோழர்களான எஸ்.என்.நாகராஜன் மற்றும் கோவை ஞானி ஆகியோரை முக்கியமானவர்களாகக் கருதுகிறேன். இப்புத்தகத்தில் முன்வைக்கப்படும் நிலைப்பாட்டை இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வாறு சிந்திக்கவே கூடாது என்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல மாட்டார்கள்”, பக்.13, சந்நியாசமும் தீண்டாமையும்) என்று நூலை சமர்ப்பிக்கிறார்.

   “மானுடர்களாகிய நாம் இந்த உலகத்தின் உள்ளார்ந்த பகுதியாக இருக்கிறோம் என்றாலும், நம்மை இதிலிருந்து செயற்கையாக விலக்கி வைத்துக் கொள்ளாமல் அறிவியல் அறிவு (புறவயத்தன்மையிலான அறிவு) ஒன்று சாத்தியமா”, என்று எஸ்.எஸ்.என்னின் கேள்வியை மீண்டும் எழுப்பி, “அறிவியலின் அறம் குறித்து எஸ்என்என் எழுப்பிய கேள்வியானது மார்க்ஸிய அறத்தோடு இணைந்தது; பிறகு, அதிலிருந்து அவருடைய மரபான தமிழ் வைணவத்துக்குள் அதற்கான வேர்களைக் கண்டெடுக்கச் சென்றார். எஸ்என்என் அளவில் வைணவமானது இந்து மதம் என்ற குடையின் பகுதியாக வெளிப்படவில்லை; இந்த மண்ணில் தோன்றிய சமயமாக வெளிப்படவில்லை; அது சமூக வெளிப்பாடாக வெளிப்படுகிறது. அவரைப் பொருத்தவரை, வைணவத்தில் அறிவியல்ரீதியான அறமும் சமூகரீதியான அறமும் முழுமையாக ஒன்றிணையும் புள்ளிகளாகின்றன”, என்றும் அஞ்சலிக்கட்டுரை ஒன்றில் கணிக்கிறார். (சீனிவாச ராமாநுஜம், இந்து தமிழ் திசை மே 28, 2021)

    அண்மையில் காலமான எஸ்என்என் மார்க்சியம், மாவோயியம் ஊடாக கைங்கர்ய மார்க்கம் என்ற வைணவ மார்க்சியத்தைப் பேசினார் (கீழை மார்க்சியம்). மார்க்சியத்தை விமர்சித்தல், சுற்றுச்சூழல் குறித்த கரிசனம் போன்ற அம்சங்கள்  எஸ்என்என்னிடம் இருந்தபோதிலும் வைணவக் கருத்தியலுடன் ஒருகட்டத்தில் தேங்கிப்போனார். இவரது கருத்துகளையும் விமர்சனங்களையும் ஒருசேரத் தூக்கிச் சுமந்தார் மறைந்த கோவை ஞானி. ஒரு வகையில், கடந்த காலத்தை நிராகரிக்கக் கூடாது என்று சொல்லிச் சமகாலத்தை முற்றிலும் நிராகரித்தவராகவே அவர் இருந்தார். புரட்சி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதைப்போல வைணவத்தை ஒரே தீர்வாக முன்வைத்தார்.

     தேசியங்கள் பேசுவோர் (தமிழ், இந்துத் தேசியம் எதுவானாலும்), கலாச்சாரம், மரபு, வேர்களைத் தேடுவோர், ஆங்கிலம், நவீனத்துவ – மேலை அறிவியலை மறுப்போர் அனைவரும் ஒன்றிணையும் புள்ளி ஒன்றுள்ளது. அதுவே மதவாதப் பாசிசம். இந்த நோக்கில் நண்பர் ராமாநுஜத்தின் சிந்தனைகளை தடம்மாறிச் செல்வதை தமிழ் அறிவுலகிற்கான பேரிழப்பாகவே அடையாளம் காண வேண்டியுள்ளது.

      

நூல்களின் விவரங்கள்:

சந்நியாசமும் தீண்டாமையும்:  சமூக வகைப்பாடுகள், சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள் - ராமாநுஜம்

முதல் பதிப்பு: புலம் (மே 2016) பக். 244 விலை 200

இரண்டாம் பதிப்பு: மாற்று

விற்பனை உரிமை:

பரிசல் புத்தக நிலையம்,

216 முதல் தளம்,

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,

திருவல்லிக்கேணி,

சென்னை – 600005.

தொடர்புக்கு:

9382853646

மின்னஞ்சல்: parisalbooks@gmail.com

தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை – ஆர் எஸ் எஸ் – பார்ப்பனர் – சாதிகள்  - சீனிவாச ராமாநுஜம்

முதல் பதிப்பு: நவம்பர் 2020

பக். 126, விலை 150

விரிசல் கண்ணாடி: அனுபவம், கோட்பாடு குறித்த ஓர் இந்திய விவாதம் – கோபால் குரு & சுந்தர் சருக்கை

தமிழில்: சீனிவாச ராமாநுஜம்

முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2020

பக்.292 விலை 450

மேற்கண்ட இரு நூல்களும் எதிர் வெளியீடு

தொடர்பு முகவரி:

எதிர் வெளியீடு,

96, நியூ ஸ்கீம் ரோடு,

பொள்ளாச்சி – 642002.

தொலைபேசி: 04259 226012,  9942511302

 மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

 நன்றி: www.panmai.in