ஞாயிறு, மே 31, 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா? 
                                          - மு.சிவகுருநாதன்
     ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா? என்று கேட்டால் வாய்ப்பில்லை என்றுதான் பதிலளிக்கத் தோன்றுகிறது. பெங்களூரு உயர்நீதிமன்றம் மே 11 அன்று ஜெயலலிதா மற்றும் மூவரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு நீதியரசர் குமாரசாமியால் வழங்கப்பட்டது.
     இத்தீர்ப்பில் கணிதப்பிழைகள் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அனைத்துவித முகாந்திரங்களும் உடைய வழக்கு என பலதரப்பு சட்ட வல்லுநர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வழக்கின் கர்நாடக அரசுத்தரப்பு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா, கர்நாடக தலைமை வழக்குரைஞர் ரவிவர்ம குமார் ஆகியோர் மேல்முறையீடு செய்ய பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழகத்தில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் இவ்வழக்கில் மேல்முறையீட்டை வலியுறுத்தியுள்ளன. சில கட்சிகள் கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளன. மூத்த வழக்குரைஞரும் மனித உரிமைப் போராளியுமான பொ.இரத்தினம் அவர்கள் கர்நாடக அரசிற்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். 
   தீர்ப்பு வெளியாகி 20 நாட்கள் ஆனபிறகும் கூட சித்தராமய்யா தலமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு எந்த முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது பல்வேறு வகையான ஊகங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருப்பதுடன் ஊழல்களுக்கு எதிரான காங்கிரஸ் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
    கர்நாடக முதல்வர் சித்தராமய்யா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துத் திரும்பியிருக்கிறார். அப்போது இது குறித்து விவாதிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏற்கனவே நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணத்தில் இப்பிரச்சினையைத் தட்டிக்கழிக்கும் தொனியே இருந்தது. நாளை (01.06.2015) நடைபெறும்  அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் நழுவதற்கு உரிய காரணத்தைத் தேடிக் காத்திருப்பது புலனாகிறது.
   ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பெற்றுள்ள நிலையில் மேல்முறயீடு செய்ய தமிழக ஆளுநரின் அனுமதியைப் பெறவேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான வாதம்கூட இங்கு பரப்பப்படுகிறது. இத்தகைய அபத்தத்தை என்ன சொல்ல? இவ்வழக்கை மீண்டும் 20 ஆண்டுகள் பின்னகர்த்த ஆதிக்க சக்திகள் முயலுகின்றன. 
    பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த இந்த சொத்துக்குவிப்பு வழக்கை நீர்த்துப்போகச் செய்ய அப்போதைய பா.ஜ.க. மாநில அரசு அரசுத் தரப்பு வழக்குரைஞரான பி.வி.ஆச்சார்யாவுக்கு  பல்வேறு நெருக்கடிகளை அளித்து அவ்வழக்கிலிருந்து விலக வைத்தது. தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு செய்தால் அவர்கள் தத்தமது பதவிகளில் நீடிக்கலாம் என்கிற திருத்தத்தை ராகுல்காந்தி கிழித்து எறிந்துவிட்டதாலே காங்கிரஸ் ஊழல் எதிர்ப்பில் முன்நிற்கிறது என்று பொருளல்ல. ஓராண்டில் நாங்கள் ஊழலே செய்யவில்லையே என்று அப்பாவித்தனம் (?!) செய்யும் பா.ஜ.க. வினரும் ஊழலுக்கு எதிராக சிறு துரும்பையும் அசைப்பவர்கள் அல்ல.
    தமிழகத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுக்கும் கொள்கைகள், ஊழல்கள் போன்றவற்றில் இம்மியளவும் வேறுபாடு இல்லை. அதைப்போலவே இந்திய அளவில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் இவற்றில் மயிரிழை வேற்றுமையும் இல்லை என்பதுதானே உண்மை. தமிழ்நாட்டில் உள்ள இவ்விரண்டு கட்சிகளையும் மத்தியில் ஆளும்கட்சிகளாக இருக்ககூடியவை எப்போதும் அனுசரித்தே வந்திருப்பது கடந்த 40 ஆண்டுகால வரலாறு. 
   இதையெல்லாம் எப்படி நேரடியாகச் சொல்வார்கள்? கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிடையே பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத காவிரி நதிநீர்ப் பங்கீடு மற்றும் அது தொடர்பான சிக்கல் நீடிக்கிறது. எனவே இரு மாநில மக்களின் மனத்தில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வைக் கணக்கில்கொண்டு இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை என கர்நாடக அரசு கருதுகிறது என்கிற ரீதியிலான அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடிய சாத்தியமே அதிகமாக உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு இன்னொரு சங்கரராமன் கொலை வழக்காக மாறும் நிலை இருப்பதை தற்போதைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்…தமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்…
                                      
                                         - மு.சிவகுருநாதன்

    தமிழகப்பள்ளிகள் நாளை ஜூன் 01 (01.06.2015) வழக்கம்போல திறக்கப்படவிருக்கின்றன. இது ஒவ்வோராண்டும் நடைபெறும் வழக்கமான நிகழ்வுதான். ஒன்றிரண்டு முறைகள் வெயிலின் தாக்கத்தைச் சொல்லி பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 2011 இல்தான் சமச்சீர்க் கல்வி வழக்கின் காரணமாக நீண்ட நாட்கள் பள்ளித் திறப்புத் தள்ளிப்போனது. 

   ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நாள் வேலை நாளாக இருக்கும் பட்சத்தில் அன்றைய தினமே பள்ளிகள் திறப்பது என்பது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை. சிற்சில சமயங்களில் நமது திராவிடப் பகுத்தறிவுப் பூசாரிகள் நல்லநாள் பார்த்து பள்ளியைத் திறந்ததும் தனிக்கதை. 

   எப்போதும் தமிழகத்தைப் பார்த்து செயல்படும் புதுச்சேரி இம்முறை ஜூன் 02 (செவ்வாய்) பள்ளித்திறப்பு என அறிவித்துவிட்டு  பிறகு வெயில் காரணமாக ஜூன் 12 (வெள்ளி) திறப்பதாகச் சொல்லியுள்ளது. நாள், நட்சத்திரம் பார்ப்பதற்கு இதைக்கூட உதாரணமாக சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஜூன் 01 திங்கள் தவிர்க்கப்பட்டது, வார இறுதியான வெள்ளியைத் தேர்வு செய்தது போன்றவை இதைத்தான் நமக்கு நினைவூட்டுகிறது. தமிழகப் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தை மாற்றிவிட்டு மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தைப் (CBSE) பின்பற்றும் முடிவை எடுத்துவிட்ட புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி அதை பள்ளித் திறப்பிலும் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்.

    புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி முந்திக்கொண்டதைத் தொடர்ந்து தமிழகத்து அரசியல் கட்சிகள் இத்தகைய கோரிக்கைகளை எழுப்பின. இதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவும் அதிலுள்ள பல்வேறு ஆசிரிய இயக்கங்களும் புதுச்சேரியைப் பின்பற்றி பள்ளித்திறப்பைத் தள்ளிவைக்கவேண்டும் எனக் கோரியதுதான் வியப்பளித்தது. இன்னும் ஒரு சிலர் ஜூன் 12 க்கு (வெள்ளி) பள்ளித் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என விரும்பினர். சனி, ஞாயிறு என அடுத்த இரு நாட்கள் விடுமுறை என்றபோதும் ஜூன் 12 வெள்ளியன்று ஏன் பள்ளியைத் திறக்கவேண்டும் என்பதை இவர்கள் விளக்கவில்லை. 

    ஆசிரியர் இயக்கங்கள் இதற்கு சொன்ன காரணங்கள்தான் மேலும் வியப்பளிக்கக் கூடியவை. அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிப்பிட, காற்றோட்ட, ஆய்வக வசதிகள் இல்லை; எனவே பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்கவேண்டும் என்பதே இவர்களது கோரிக்கைகள். இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். இக்குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் என இவர்கள் கோரவில்லை. மாறாக பள்ளிகள் திறப்பை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் என்பதே இவர்களது நிலைப்பாடு. இதனை நாம் எப்படி விளங்கிக் கொள்வது?

   இந்த ஒரு வார காலத்தில் அரசு தாமாக முன்வந்து இவற்றைக் களையும் என்று ஆசிரியர் இயக்கங்கள் எதிர்பார்க்கின்றனவா? இவ்வாறு அரசுக்குக் கோரிக்கைகள் வைப்பது தங்களது பணியல்ல  என்பதை இவர்கள் முன்பே நிருபித்துவிட்டார்கள். அண்மையில் 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நிகழ்த்திய இவர்கள் மருந்திற்கு கூட மாணவர், சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை விடுக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை. இது குறித்து நிறைய எழுதியாகிவிட்டது. 

   அரசுப்பள்ளிகளில் மட்டுமல்ல; அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப்பள்ளிகள் என அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகள் அறவே இல்லை அல்லது குறைபாடுகளுடன் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது. நிதியாண்டு இறுதியில் இருக்கின்ற நிதியை செலவளிப்பதற்காகவே பல வேலைகள் அவசரகதியில் யாருக்கும் பயன்பாடாத கழிப்பறைகள் கட்டுவது முதற்கொண்டு செய்யப்படுவனவற்றைத் தவித்து ஒவ்வொரு கோடை விடுமுறையை பள்ளிகளைச் சீரமைக்கும் நாட்களாக நடைமுறைப்படுத்தினால் நன்றாயிருக்கும். ஆனால் இவற்றைச் செய்வதற்கு அரசோ, கோரிக்கை வைக்க ஆசிரிய இயக்கங்களோ, அரசியற்கட்சிகளோ முன்வராத நிலைதான் இன்றுள்ளது. 

  இவைகள் எவற்றையும் கண்டுகொள்ளாத பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் வழக்கம்போல் ஜூன் 01 பள்ளி கண்டிப்பாகத் திறக்கப்ப்டுமென அறிவித்திருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பள்ளி ஜூன் 01 பள்ளி திறக்கப்படுவதை உறுதிசெய்து, செல்போன் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை  ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளார். 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மதிய உணவு இடைவேளையில்கூட படிக்கவேண்டும் என்று சொல்வர்கள் இப்படியும் சொல்லக்கூடும். “பள்ளிகளில் கழிவறைகள் இருந்தால் மாணவர்கள் அங்கு செல்வதால் அவர்களது படிப்பு பாதிக்கக்கூடும்”. 

எம்மாதிரியான உலகில் நாம் வாழ சபிக்கப்பட்டிருக்கிறோம்?

இவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்!இவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்!
                            - மு.சிவகுருநாதன்

     முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு  அரசியல் நாகரீக விரும்பிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் அய்யமில்லை. தமிழ்நாட்டுக்காரர்களே தில்லியைப் பாருங்கள்! இன்னுமா நீங்கள் திருந்தவில்லை? என்று அடிக்கடி கூப்பாடு போடும் கும்பல் ஒன்று இருக்கத்தானே செய்கிறது? இவர்கள் சந்திப்பதிலும் கூடிக் கும்பியடிப்பதிலும் நமக்கொன்றும் வருத்தமில்லை. இவர்கள் இருவருக்குமான இடைவெளி மயிரிழையை விட குறைவாகத்தான் இருக்கும். 

    மோடி பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு ஆனபிறகுதான் மன்மோகனுக்கு சந்திக்கத் தோன்றியிருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தலைவர் (TRAI) முன்னாள் தலைவர் பிரதீப் பைசால் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது நேரடியான குற்றச்சாட்டு தெரிவித்த பிறகு நடக்கும் இந்தச் சந்திப்ப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுவது இயற்கையானது. 

   இச்சந்திப்பில் என்ன நடந்தது என சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவருவதாகச் சொல்லும் மோடிக்கு உண்டு. சி.பி.அய். இயக்குநர் நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சந்தித்தது இன்று உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் பிரதமருக்கு மட்டும் தனியுரிமையா என்று நாம் கேட்கவேண்டியுள்ளது. 

   ஓராண்டு சாதனையாக ஊழலின்மை எனக்கூறி மோடி சர்க்கார் பரப்புரை செய்கிறது. ரூ 1,76,000, 1,86,000. 2,00,000 கோடிகள் இருந்தால் மட்டுந்தான் அது ஊழலா? இவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எதில் சேர்த்தி என்று நமக்கு விளங்கவில்லை. 2014 பொதுத்தேர்தலின்போது கருப்பு பணம் குறித்த வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு இன்று வரை இருக்கும்  மோடி சர்க்காரின் செயலின்மை நமக்கு எதை உணர்த்துகிறது? 

   பல்வேறு ஊழல்வழக்குகளில் மெத்தனமாகச் செயல்படும் சி.பி.அய். இயக்குநரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் ஏன் தீர்மானம் கொண்டுவரமுடிவவில்லை? அப்பாவி ஏழைகளின் நிலப்பறிப்பிற்கு மசோதாவும் மூன்று முறை அவசரச்சட்டமும் கொண்டுவரும் சங் பரிவார் கும்பல் ஊழலுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் வலிமை இல்லாத நிலை நமது ஜனநாயகத்தை கேலிகூத்தாக மாற்றியிருக்கிறது. 

    இங்கும் (தமிழகம்) ஊழலுக்கு அளவில்லை. ஆனால் அரசியல் நாகரீகந்தான் இன்னும் தில்லி அளவிற்கு முதிர்ச்சியடையவில்லை என்று வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் ஊழல் ஆதரவிற்கு எத்தகைய விளக்கம் வைத்திருக்கிறார்களோ? தெரியவில்லை.

   இதற்கு திருமண அழைப்பு  அரசியல் நாகரீகம் கொஞ்சம் பரவாயில்லை என்றாவது தோன்றுகிறதா? ஜெயலலிதா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்ய தி.மு.க. வும் அழகிரி மீதான கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய அ.இ.அதி.மு.க. வும் இருக்கிறதே! இருக்கட்டும். இதெல்லாம் அரசியல் பழிவாங்கும் நோக்கிற்காக செய்யப்பட்டவை என தீர்ப்பெழுத நிறைய குமாரசாமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புதன், மே 27, 2015

9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும் - அறிக்கை10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா?


 


               அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை

                                                                                                                                                                       சென்னை,

26, மே, 2015.


    இந்த ஆண்டு +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதோடு அதிக அளவில் 200 க்கு 200; 100 க்கு 100 என மதிப்பெண்களைக் குவித்தும் உள்ளனர். +2 தேர்வில் கணிதத்தில் 9,710 பேர்களும் கணக்குப் பதிவியலில் 5,167 பேர்களும் வேதியலில் 1,049 பேர்களும் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதே போல 10ம் வகுப்பிலும் நூற்றுக்கு நூறு வாங்கியோர் எண்ணிக்கை ஏராளம். முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மாத்திரம் 773 பேர்கள். கணக்கில் 27,134 பேர்களும், அறிவியலில் 1,15,853 பேர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


   தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி எனவும் இப்படி 'ரேங்க்' வாங்கியவர்கள் இவ்வளவு பேர்கள் எனவும் தனியார் பள்ளி விளம்பரங்கள் நாளிதழ்களை நிரப்புகின்றன.

கடினமாக உழைத்து இப்படிச் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லும் அதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் கல்வியில் அக்கறையுள்ள அனைவர் முன்னும் சில கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது.

இப்படிக் கடினமாக உழைத்து ஏராளமான மதிப்பெண்களை அள்ளிச் செல்லும் மாணவர்களில் பலர் மேற்படிப்புகளில் முதலாம் ஆண்டில் தோல்வியுறுவது ஏன்? 


   IIT படிப்பிற்கான JEE நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்கள் பின் தங்குவதேன்? 2014ம் ஆண்டு JEE தேர்வில் தமிழ்நாடு 14 வது இடத்தைத்தான் பெற முடிந்தது. முதல் 10 இடங்களை ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், உ.பி, மஹாராஷ்டிரா, டெல்லி, ம.பி, பிஹார், ஹரியானா, ஜார்கன்ட், மே.வங்கம் ஆகிய மாநிலங்கள் தட்டிச் சென்றன. சென்ற ஆண்டு JEE தேர்வு  எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1,58, 981. இதில் 21,818 (14.7%) இடங்களை ஒன்றாக இருந்த ஆந்திரப் பிரதேச மாணவர்கள்  வென்றெடுத்தனர். தமிழக மாணவர்களால் பெற முடிந்ததோ வெறும் 3974 (2.5%) இடங்களைத்தான். 


   இதற்கான காரணங்களில் ஒன்றாக நாங்கள் கருதுவது நமது மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அறிதல் சார்ந்த (Knowledge Based / Objective Type) கேள்விகளுக்குப் பதில் எழுதுவதில் போதிய திறன் பெற்றிருக்கவில்லை என்பதுதான். அதற்குக் காரணம் நம் மாணவர்கள் அடிப்படைகளில் பலவீனமாக உள்ளனர் என்பதுதான்.


  90 சதத்திற்கும் மேல் மதிப்பெண்களை எளிதாகப் பெறும் நம் மாணவர்கள் எவ்வாறு அடிப்படைகளில் பலவீனமாக நேர்ந்தது? 


  நமது பள்ளிகளில், குறிப்பாக ஏராளமாக 'ரிசல்ட்' காட்டுகிற தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைக் கற்றுத் தருவதில்லை என்பது நமது மாணவர்கள் அடிப்படைகளில் பலவீனமாக இருப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது. எட்டாம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பிற்குச் சென்ற உடன், அவர்களுக்கு 9ம் வகுப்புப் பாடங்களைச் சொல்லித்தராமல் 10ம் வகுப்புப் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. அதே போல 11ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 11ம் வகுப்புப் பாடங்களைச் சொல்லித் தராமல்  இரண்டாண்டுகளும் 12ம் வகுப்புப் பாடங்களே சொல்லித் தரப்படுகின்றன. இரண்டாண்டுகளும் ஒரே பாடங்களைப் படித்து, மனப்பாடம் செய்து, பல முறை மாதிரித் தேர்வுகளை எழுதி, நமது மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் மதிப்பெண்களைக் குவிக்கும் எந்திரங்களாக மாற்றப்படுகின்றனர். 


   நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வெண்டும். Higher Secondary என்பது +1 மற்றும் +2 ஆகிய இரு வகுப்புகளும் சேர்ந்த ஒரு ஒருங்கிணைந்த படிப்பு (Integrated Course). +1, +2  என்பன தனித்தனி வகுப்புகள் அல்ல. இயற்பியல் (Physics) என்றொரு பாடத்தை எடுத்துக் கொண்டால் அதில் Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics, Electricity and Magnetism, Atomic Physics, Electronics எனப் பல உட்பிரிவுகளும் இணைந்ததுதான் இயற்பியல். இவற்றில்  Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics ஆகிய பாடங்கள் 11ம் வகுப்பிலும் Electricity and Magnetism, Atomic Physics, Nuclear Physics, Electronics முதலானவை 12ம் வகுப்பிலும் பிரிந்துள்ளன. 11ம் வகுப்புப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படாதபோது Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics முதலானவற்றில் அம்மாணவர் அடிப்படைகளை அறியாதவராகி விடுகிறார். இந்த அடிப்படைகள் இல்லாமல் ஒருவர் இயற்பியலின் மற்ற இயல்களை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.


   இது மற்ற பாடங்களுக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக 9ம் வகுப்புப் புவியியலில் தமிழகப் புவியியல் குறித்த பாடம் உள்ளது. 10ம் வகுப்பில் இந்தியப் புவி இயல் பாடம் உள்ளது. 10வது பாடங்களை மட்டும் படித்து, 9வது பாடங்களைப் படிக்காத ஒரு மாணவர் தமிழகப் புவி இயல் குறித்த அடிப்படைகளை அறியாதவராக ஆகிவிடுகிறார். இப்படி ஒவ்வொரு பாடம் குறித்தும் எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும்.


  இவ்வாறு அடிப்படைகளில் வலுவில்லாமல் வெறும் மதிப்பெண்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும் மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற இயலாதது கூடப் பெரிதில்லை. அவர்கள் அந்தந்தத் துறைகளில் சாதனை படைக்கும் அறிவியலாளர்களாகவும் உருப்பெற இயலாது என்பதுதான் வேதனை. Classical Mechanics ல் வலுவில்லாமல் ஒருவர் எப்படி Quantum Mechanics ஐப் புரிந்து கொள்ள இயலும்? Thermodynamics ன் அடிப்படைகளை அறியாத ஒருவர் எப்படி ஒரு இயற்பியலாளராக இயலும்?


    இந்த ஆண்டு +2 தேர்வில் இயற்பியலில் வெறும் 124 பேர்கள்தான் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 198 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தும் அவர்கள் இந்த இரண்டு மதிப்பெண்களைக் கோட்டை விட்டதற்குக் காரணம் இரண்டு objective type கேள்விகள் 11 ம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும் அடிப்படைகளைப் புரிந்து கொள்பவர்களால் மட்டுமே பதில் அளிக்கக் கூடியதாக இருந்ததுதான்.தனியார் பள்ளிகளின் வணிக நோக்கமே இதன் பின்னணி


    நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க வைக்கிறோம் என விளம்பரப் படுத்திக் கல்வி வணிகம் நடத்திக் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளி 'லாபி' யே இதற்குக் காரணமாக உள்ளது. 


இரண்டு வகைகளில் அவர்கள் இதைச் செய்தனர். 


1. உலகெங்கிலும் இருப்பது போல தமிழகத்திலும் 'ட்ரைமெஸ்டர்' முறை கொண்டு வந்தபோது அதை 9ம் வகுப்புக்கு மேல் கொண்டு வரக் கூடாது என அவர்கள் தடுத்து நிறுத்தினர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் 10ம் வகுப்பில் பொதுத் தேர்வு உள்ளது என்பதுதான். கல்லூரிகளில் பொதுத் தேர்வுகளிலும் செமஸ்டர் முறை கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பள்ளிக் கல்வியிலும் 10,11,12 வகுப்புகளில் ட்ரைமெஸ்டர் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் செமஸ்டர் முறையாவது தொடர்ந்திருக்க வேண்டும். Higher Secondary படிப்பை +1, +2 இரண்டாண்டுகளையும் 4 செமெஸ்டர்களாக்கிப் பொதுத் தேர்வுகளை நடத்தி அந்த அடிப்படையில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிலை இருந்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. 11 ம் வகுப்புப் பாடங்களை ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பது தவிர்க்க இயலாததாக ஆகி இருக்கும்.


2. +2 கேள்வித்தாள்கள்  உருவாக்கம் பற்றிய வல்லுனர் குழு 20 சத மதிப்பெண்கள் Knowledge Based கேள்விகளுக்கு இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தும் அப்படிக் கேள்விகள் அமைந்தால் அது மாணவர்களுக்குக் கடினமாக இருக்கும் எனச் சொல்லித் தடுத்ததும் இந்தத் தனியார் பள்ளி 'லாபி' தான். உண்மையில் அது மாணவர்களுக்குக் கடினம் என்பதல்ல. "100 மார்க்" ஆசையை ஊட்டி வணிகம் செய்பவர்களுக்குத்தான் அது கடினம். கேள்வித் தாள்கள் என்பன ஒரு சராசரி மாணவர் எளிதில் வெற்றி பெறக் கூடியதாகவும், அதே நேரத்தில் ஒரு திறமையான மாணவரை அடையாளம் காட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.


அரசுப் பள்ளிகளையும் தொற்றும் இந்த ஆபத்து


    ஒப்பீட்டளவில் அரசுப் பள்ளிகளில் 'ரிசல்ட்' குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அடித்தள மற்றும் கிராமப் புற மாணவர்கள் அதிகம் படிப்பவையாக அரசுப் பள்ளிகளே உள்ளன. தவிரவும் தனியார் பள்ளிகள் தம் 'வெற்றி வீதத்தை உயர்த்திக் காட்டுவதற்காகப் பல தில்லு முல்லுகளைச் செய்கின்றன. தோல்வியடையக் கூடிய, அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுக்கக் கூடிய மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களை வெளியேற்றுவது, தனிப் பயிற்சி மூலம் படித்தவர்கள் என்பதாக அவர்களைத் தேர்வு எழுத வைப்பது, முறையான ஊதியம் அளிக்காமல் ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவது எனப் பல மோசடிகளைச் செய்துதான் அவை நூறு  சத வெற்றியை எட்டுகின்றன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வெற்றி வீதம் குறைவாக உள்ளது புரிந்து கொள்ளக் கூடியதே. அரசுப் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளைக் களைவது என்கிற நிலையை எடுக்காமல் அரசும் கல்வித்துறையும் இன்று "தனியார் பள்ளிகளைப் போலச் செய்து" அதிக வெற்றி வீதத்தைக் காட்ட வேண்டும் என அரசுப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் இன்று அரசுப் பள்ளிகளிலும் 9. 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.என்ன செய்ய வேண்டும்?


   நமது பள்ளிக் கல்வியில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. தமிழ்வழிக் கல்விக்கு உரிய முக்கியத்துவம் இல்லை. தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வந்த அரசுப் பள்ளிகளிலும் இப்போது ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படுகிறது, சமச்சீர்க் கல்வியில் உள்ள குறைபாடுகளைக் களைந்து அதை மேம்படுத்தவில்லை. Higher Secondary சேர்க்கையில் இட ஒதுக்கீடு கடை பிடிக்கப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளில் அகக்கட்டுமானங்கள் போதுமானதாக இல்லை. காலியான ஆசிரியப் பணி இடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை. ஆசிரியர் அமைப்புகள் அதை வற்புறுத்துவதுமில்லை. +1. +2 பாடத் திட்டம் சமச்சீர்க் கல்விக்குத் தக சீரமைக்கப்படவில்லை. கிராமப் புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் மருத்துவம், பொறியியல் முதலிய படிப்புகள் இன்னும் கிராமப் புற அடித்தள மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருப்பது....

இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் முக்கியமானவை என்ற போதும் தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அக்கறையுள்ள நாங்கள் உடனடியாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளைக் கோருகிறோம்.


1. 11ம் வகுப்பிலும் அரசுத் தேர்வை நடத்தி இரண்டு வகுப்புகளிலும் பெற்ற மதிப்பெண்களை வைத்தே Higher Secondary படிப்பிற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

2. 10, 11, 12 வகுப்புகளில் டிரைமெஸ்டர் அல்லது செமெஸ்டர் முறை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

3. ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வகுப்புகளுக்குரிய பாடங்கள் சொல்லித் தரப்படுகிறதா என்பதைக் கல்வித்துறை  கண்காணிக்க வேண்டும். மீறுகிற பள்ளிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

4. அரசுத் தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களில் 20 சத மதிப்பெண்கள் அறிதல் சார்ந்ததாகவும் (knowledge based), மீதி 80 சத மதிப்பெண்கள் பாடம் சார்ந்ததாகவும் (Text based) கேள்விகள் குறிக்கப்பட வேண்டும்.


இவற்றோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய இதர உடனடி நடவடிக்கைகள்:


4. மாநில அளவில் மருத்துவ, பொறியியல் படிப்புகளிலும், இந்திய அளவில் IIT, NIT முதலான படிப்புகளிலும் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

5. JEE தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும்.

6.அரசுப் பள்ளிகளில் கட்டாய ஆங்கில வழிப் பாடம் கொண்டு வரும் நடவடிக்கை கைவிடப்படல் வேண்டும்.

7.தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை இவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்ற ஆசிரியரே சொலித் தருவது என்பதற்குப் பதிலாக அந்தந்தத் துறைகளில் பட்டம் பெற்றவர்களை அந்தந்தப் பாடங்களைச் சொல்லிதர நியமிக்க வேண்டும்

பெற்றோர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகளும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என நினைக்காமல் அடிப்படைகளில் வலுவுடன் முழுமையாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை உணர்ந்து இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.


இங்ஙனம்,


அக்கறையுள்ள கவியாளர்கள் குழு,


பேரா. பிரபா. கல்விமணி (மக்கள் கல்வி இயக்கம்), முனைவர் ப. சிவகுமார் (முன்னாள் கல்லூரி முதல்வர்), முனைவர் சற்குணம் ஸ்டீபன் (முன்னாள் கேள்வித்தாள் உருவாக்கக் குழு உறுப்பினர்), கோ. சுகுமாரன், பேரா. அ.மார்க்ஸ், பேரா. மு..திருமாவளவன் (முன்னாள் கல்லூரி முதல்வர்), வீ.சீனிவாசன் (சுற்றுச் சூழல் ஆர்வலர்), ஆசிரியர் மு.சிவகுருநாதன், ஆசிரியர் முனைவர் ஜெ. கங்காதரன், ஆசிரியர் த. மகேந்திரன், ஆசிரியர் அ.செந்தில்வேலன்.

தொடர்பு முகவரி: அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை -20

                                 செல்: 094441 20582


 நன்றி:  அ.மார்க்ஸ்