செவ்வாய், ஏப்ரல் 24, 2012

தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?

தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?
                                                                      
                                                                                                                  - மு. சிவகுருநாதன்
 
      தேர்வு முறைகள் தொடங்கியதிலிருந்தே காப்பியடிக்கும் பழக்கமும்
தொடங்கியிருக்க வேண்டும்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக நடைபெறும் சிறு நிகழ்வுகள் இப்போது பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றன.  மாணவர்கள்  பார்த்து கேட்டு எழுதுவதை கண்டு கொள்ளாமலிருப்பது, மாணவர்களுக்கு பிட்  சப்ளை செய்வது, நன்றாக படிக்கும் மாணவனின் விடைத்தாளை தேர்வறையில் உள்ள  அனைவருக்கும் வழங்குவது, அறைக்கண்காணிப்பாளர்களே சொல்லித் தருவது,  குறிப்பிட்ட பாட ஆசிரியரிடமிருந்து குறுஞ்செய்தி (SMS) மூலம் விடைகள் அனுப்பப்பட்டு  அவற்றை மாணவர்களுக்கு அளிப்பது என காப்பியடிக்கும்  கலாச்சாரம் கல்வித் துறையில் வெகு வேகமாக வளர்ந்துள்ளது.

       இந்த வகையில் பத்தாம் வகுப்பு கணித வினாத்தாளுக்குரிய விடைகள்
நகலெடுக்கப்பட்டு (XEROX) விநியோகிக்கப்பட்ட நிகழ்வு திருவண்ணாமலை
மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (இந்த மெட்ரிக்
முகமூடியை எப்போது கழற்றுவார்கள் என்று தெரியவில்லை) நடந்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் குறுஞ்செய்தி மூலம் விடைகளை அனுப்பிப் பெற்றளித்த ஆசிரியர் அறைக் கண்காணிப்புப் பணியிலிருந்து
விடுவிக்கப்பட்டார்.  அவர் அடுத்த தேர்வில் வேறு மாற்று வழியை 
கையாளக்கூடும்.

       அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அடிக்கடி வினாத்தாளகள் முன்கூட்டியே நகலெடுத்து விற்பனை செய்யப்படுகின்றன. வினாத்தாள் முன் கூட்டியே வெளியாவது, தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்றவற்றை ஒழிக்க முடியாது என்று  சொல்வதற்கில்லை.  அதிகாரவர்க்கம் இவற்றின் மூலம் பெரும் பயனடைகிறது  என்பதே உண்மை.  தேர்தல் முறைகேடுகளைப் போல தேர்வு முறைகேடுகளும் ஒருவர்  மற்றவரைக் குறை சொல்வதற்கு பயன்படுத்துவார்களே தவிர எந்தத் தரப்பும் அவற்றில் ஈடுபடாமலிருப்பது இல்லை.

       ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர் தனக்கு வந்த மின்னஞ்சல் புகாரை
புறக்கணிக்காமல் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  பள்ளி அலுவலகத்திலேயே விடைகள் நகலெடுக்கப்பட்டது.  அறைக் கண்காணிப்பாளர்களிடம் விடைத் துண்டுகள் இருந்தது,  செல்போன் மூலம்  தேர்வின் போது உரையாடியது, அவர்களின் சட்டைப்பையிலிருந்து பறிமுதல்  செய்யப்பட்ட கவர் பணம் போன்றவை ஊடகத்தின் பார்வைக்கு வந்துள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் இதைப் போல செயல்பட்டால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் பிடிபடும் என்பதில் அய்யமில்லை.

       அடிக்கடி மறதி நோய்க்காட்படும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் இதே
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2008-ல் நடந்த நிகழ்வை நினைவுப்படுத்துவது  மிகப் பொருத்தமாக இருக்கும்.  முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு நடத்திவரும் ஜீவா - வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இவ்விதம் முறைகேடுகளில் ஈடுபட்டு  100/100 தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்றுவந்த நிலையில் 2008 மார்ச் பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கந்தசாமி, நேர்முக  உதவியாளர் சக்கரபாணி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேனிலைப்
பள்ளித் தலைமையாசிரியர் பரசுராமன், ஆரணி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி  வேதியியல் ஆசிரியர் பரிமளா ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தேர்ச்சி விழுக்காடு 67% ஆகக் குறைந்தது.  
 
    இதனைத் தொடர்ந்து அப்போதிருந்த  தி.மு.க. அரசு முதன்மைக் கல்வி அலுவலர் கந்தசாமியை தூத்துக்குடிக்கும் நேர்முக உதவியாளர் சக்கரபாணியை ராமநாதபுரத்திற்கும் தலைமையாசிரியர்  பரசுராமனை ஒட்டப்பிடாரத்திற்கும் வேதியியல் ஆசிரியை பரிமளாவை  நாமக்கல்லுக்கும் இடம் மாற்றம் செய்து பழி தீர்த்துக் கொண்டது.  கும்பகோணம் தீ விபத்திற்குப் பிறகு கல்வி அதிகாரிகள் எடுக்கப்பட்ட  இரண்டாவது பெரிய நடவடிக்கை இதுவாக இருக்கக்கூடும்.

       இத்தகைய நிகழ்வுகள் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.  28.02.2009 அன்று விழுப்புரத்தில் கூடிய மக்கள் கல்வி கூட்டமைப்பு காப்பியடிக்கும் கலாச்சாரத்தை ஒழித்துக் கல்வித் தரத்தை  உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையும்  இங்கு குறிப்பிட வேண்டும். 
 
(பார்க்க: தமிழகப் பள்ளிக் கல்வி பிரச்சினைகளும் தீர்வுகளும் 
(தொ) பேரா. பிரபா. கல்விமணி
 - மக்கள் கல்விக் கூட்டமைப்பு வெளியீடு)

       இந்த மாதிரி நிகழ்வுகள் ஏற்படும் போது அனைவரும் வாய்க்கு வந்தபடி
கருத்துக்களை உதிர்ப்பது வாடிக்கையாகி விடுகிறது.  18.04.2012 அன்று
தினமணி தலையங்கம் இம்முறைகேடுகளுக்குக் காரணம் அரசுப் பள்ளிகள் என்று  சொல்கிறது.  இந்த தனியார் பள்ளியில் காப்பியடிக்கத் துணை போனவர்கள்  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றும், அவர்கள் பள்ளிக்கே வராமல்  மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிக்க இம்மாதிரியான முறைகேடுகளுக்குத் துணை  போவதாகவும் கண்டுபிடித்துள்ளது.

               முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டியது  நடுநிலையாளர்களின் கடமை.  அதற்கு இவர்கள்தான் காரணம் என்று முத்திரை  குத்துவதை ஏற்கமுடியாது.  மனிதன் தவறு செய்வது வாடிக்கையானது.  அந்த தவற்றைச் செய்யத் தூண்டுபவர்களை கண்டு கொள்ளாமல் விடுவது சரியா?

       மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையிடலின் போது அப்பள்ளி அலுவலகத்திலேயே  விடைகள் நகல் எடுக்கப்பட்டது, வகுப்பறையில் அறைக் கண்காணிப்பாளர்கள்  பையில் பணம், கத்தை கத்தையாக விடைத் துண்டுகள், அவர்களிடையேயான செல்போன்  உரையாடல்கள் ஆகியவை நடந்து பலர் கையும களவுமாக பிடிபட்ட போது இங்கு  என்னவிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது?

       அந்தத் தனியார் பள்ளி அலுவலர்கள் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் தொடர்ந்து பணிபுரிந்தனர்.  அறைக் கண்காணிப்பாளர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள்  மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைக்கு ஆணையிடப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.

       இந்த 7 பேரின் நடத்தை மிக இழிவானது.  இதற்குரிய தண்டனை அளிக்கப்பட்டாக வேண்டும். ஆனால் இதற்கு உதவி புரிந்த அப்பள்ளி நிர்வாகம், அலுவலர்கள்,  கல்வி அதிகாரிகள், அலுவர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படையினர் என அனைத்துத் தரப்பினரும் உரிய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  ஆனால் இங்கு என்ன நடக்கும்?  கூடிய  விரைவில் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார் என்பதை  மட்டும் இப்போது அனுமானிக்கலாம்.

       மாவட்டக் கல்வி அலுவலகம் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கிறது. பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் இவர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.  அப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உள்ளிட்டவர்கள்  நியமிக்கப்படுகின்றர்.  தேர்வு நடைபெறும் காலங்களில் அவர்களுக்கு நல்ல கவனிப்பு செய்யப்படுகிறது.  தேநீர், வடை அளித்தாலே மாணவர்கள்  காப்பியடிப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான்செய்கிறார்கள்.  நேர்மையாக செயல்படும் ஒரு சிலரும் நமக்கேன் வீண் வம்பு  என்று நினைத்து பேசா மடந்தையாகி விடுகின்றனர்.  அம்மணமாக இருக்கும் ஊரில்  கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன் என்ற நிலைதான் இவர்களுக்கு.

       அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை
உள்ள அனைத்து வகையான அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி
நிர்வாகங்கள், தனிப்பயிற்சி நடத்துவோர்   (Private Tuition Centres), அரசியல்வாதிகள்,  உள்ளூர் பெரும் பணக்காரர்கள் என்று பல்வேறு
தரப்பினருக்கும் இதில் பங்குண்டு.  இதில் ஏதேனும் ஒரு தரப்பை மட்டும்
குறை சொல்லி தப்பித்துக் கொள்வது இம்முறைகேடுகள் ஆண்டுதோறும் தொடர்வதை  ஊக்குவிப்பதாகும்.

       மாவட்ட ஆட்சியர் இம்முறைகேட்டை கையும் களவுமாக பிடிக்கும்போதே அவர்கள் ஏன் கைது செய்யவில்லை?  கிராம நிர்வாக அலுவலர் ரூ. 100/- பெற்றாலே கைது  செய்பவர்கள், இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் துறைரீதியான  நடவடிக்கைகள், விடுப்பில் செல்ல பரிந்துரைத்தல் என்ற மயிலிறகு சீண்டல்கள்  ஏனென்று தெரியவில்லை.  புதுச்சேரி கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் தேர்வு  முறைகேட்டில் ஈடுபட்டதற்கு தமிழக காவல்துறை பல மாதங்கள் தேடியதே....  ஆனால் கையும் களவுமாக பிடித்த போது ஏன் கைது நடவடிக்கை இல்லை?  இதன் மூலம் பலரைக் காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் கைகள் கட்டப்பட்டிருப்பது
புலனாகிறது.

        யாரும் செயல்படுத்தப் போவதில்லை என்றாலும் வழக்கமான நமது பரிந்துரைகளை கீழே தருகிறேன்.

01. தேர்வில் காப்பியடிக்க உதவும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்
போன்றவர்களுக்கு துறை ரீதியான தண்டனைகளைத் தவிர்த்து பணிக்காலம்
முழுமைக்கும் தேர்வுப் பணிக்கு லாயக்கற்றவர்கள் என்று அறிவிக்கலாம்.
இதைப் போலவே விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு செய்பவர்களை  பணிக்காலம் முழுமையும் திருத்தும் பணியிலிருந்து விடுவிக்கலாம்.  தேர்தல்  பணிகளில் முறைகேடு செய்பவர்களை பணிக்காலம் முழுமைக்கும் தேர்தல் பணியாற்ற  தடை விதிக்கலாம்.

02. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்தல்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு மாற்றுப் பள்ளிகளில் சேர்க்க
வாய்ப்பில்லை என்றால் குறைந்தபட்சம் தேர்வு மையத்தையாவது ரத்த செய்ய வேண்டும்.

03. இப்போது பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சில குறிப்பிட்ட  பாடங்களுக்கு மட்டும் முதன்மைக் கண்காணிப்பாளராக வேறு பள்ளியின் தலைமையாசிரியர்  நியமனம் செய்யப்படுகிறார்.  இது பத்தாம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து அரசு பொதுத்தேர்விற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

04. ஒரு பள்ளியில் தேர்வு நடக்கும்போது அப்பள்ளியின் தாளாளர்,
தலைமையாசிரியர், ஆசிரியர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் யாரும் அங்கு பணியில் இருக்கக் கூடாது என்ற நிலை வேண்டும்.

05. ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு சில குறிப்பிட்ட நபர்களையே தேர்வுப்
பணிக்கு அமர்த்துவதை கண்காணித்துத் தடை செய்ய வேண்டும்.

06. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆசிரியரல்லாத பறக்கும் படை
உருவாக்கப்பட வேண்டும்.  100% தேர்ச்சி காட்டும் பள்ளிகள் தனிக்
கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

07. பள்ளித் தேர்ச்சி 100% எனக்காட்டுவதற்கும் சில குறிப்பிட்ட
பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுப்பதற்கு தனிப்பட்ட மாணவர்களுக்கு சில
கல்வித் தொழிலகங்கள் (?!) உதவி புரிகின்றன.  இவற்றையும் தடுக்க வேண்டும்.

08. தேர்வறைகளில் செல்போன் முற்றிலும் தடை செய்யப்பட்டு, வெப் கேமரா
பொருத்தப்பட வேண்டும்.

09. பன்னிரண்டாம் வகுப்பு கணினித் தேர்வு போல ஒரு மதிப்பெண்
வினாக்களுக்கு OMR  தாள்கள் மூலம் பதிலளித்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்  மாணவர்களிடமிருந்து விடைத்தாளை திரும்பப் பெறலாம்.

10. தொடக்கக் கல்வியை சீர்படுத்தாமல் 10, 12 வகுப்புக்களில் முழுத்
தேர்ச்சி பெற வேண்டுமென அரசுப் பள்ளிகளுக்கு அரசும் அரசு அதிகாரிகளும்
கெடுபிடிகள் செய்வது நிறுத்தப்பட வேண்டும்.  அரசுப் பள்ளித் தேர்ச்சியை
தனியார் பள்ளியுடன் ஒப்பிடும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்.  அரசு,
அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் மாணவர்கள் மீது தொடுக்கும் தேர்வுகள் தொடர்பான உளவியல் தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்.

       தேர்தல் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறும் போது ஆசிரியர் அல்லாத  பிற துறைப் பணியாளர்களைக் கொண்டு தேர்தல் நடத்துவது, வெளி மாநில  போலீசாரைப் பயன்படுத்துவது, ராணுவம் அல்லது துணை ராணுவத்தைப்  பயன்படுத்துவது என்றெல்லாம் கோரிக்கை வைக்கப்படுவதைப் போல இங்கும்  தேர்வுப் பணிகளை ஆசிரியர்களைத் தவிர்த்துப் பிற துறை பணியாளர்களை வைத்து  அரசுத் தேர்வுகளை நடத்தலாம் என்றொரு யோசனையும் முன் வைக்கப்பட வாய்ப்பு
உண்டு.  ஆனால் அது இன்னும் பல்வேறு மோசடிகளுக்கு வழி வகுக்கும் என்பதில் அய்யமில்லை.

       பல வேலைகள் செய்வதை விட கீழ்க்கண்ட இரண்டில் ஏதேனும் ஒன்று செய்தாலே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

* இப்போதுள்ள மனப்பாடத் தேர்வு முறையை முற்றிலும் ஒழித்து
   மேம்படுத்தப்பட்ட புதிய தேர்வு முறையை அமல் செய்தல்
 
                            அல்லது
 
*கல்வி வியாபாரத்தை முழுவதுமாகத் தடை செய்து 
  தனியார் பள்ளிகளனைத்தையும் அரசுடைமையாக்குதல்.
 
மதுக்கடைகளை (TASMAC) நடத்தும் அரசுகளிடம் இதை எதிர்பார்ப்பது எவ்வளவு  பெரிய முட்டாள்தனம்......?

தினமணி - எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் பகற்கொள்ளை

தினமணி - எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் பகற்கொள்ளை
                                  

                                                                            - மு. சிவகுருநாதன்

     தமிழர்களின் கெட்ட காலம், மாற்று இதழுக்கு வேறு வழியின்றி தினமணியை வாங்கிப் படித்தாக வேண்டிய கட்டாயம்.  அதற்காக தினமணியை நம்பகமான  நாளிதழ் என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம்.  பார்ப்பன தினமலரின் அசிங்கங்களை  ஒப்பிடும்போது தினமணி தேவலாம் என்கிற  நிலைதான்.

    எக்ஸ்பிரஸ் - தினமணி குழுமம் இரு நாளிதழ்களுக்கும் சேர்த்து சலுகை ஆண்டு சந்தா என சென்ற ஆண்டு ரூ. 650 என்று நிர்ணயம் செய்திருந்தது.  இவ்வாண்டு ரூ. 950 என சற்று உயர்த்தப்பட்டுள்ளது.  இது தினமணி வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள சேதிதான்.  ஆனால் இவ்வாறு என்னைப் போல ஆண்டு சந்தா செலுத்தியவர்களிடம் விசாரித்தால் எக்ஸ்பிரஸ் - தினமணி நிர்வாகம் தனது முகவர்களுக்காக அப்பட்டமான பகற்கொள்ளையில் ஈடுபடுவது வெளிச்சத்திற்கு வரும்.

    ஒரு கணம் தினமும் தினமணியின் தலையங்கங்களை புரட்டிப் பாருங்கள்.  அவை இவ்வளவு சமூக அக்கறையா என்று நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கும்.  தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் நடக்கும் முகவர்களின் ஏமாற்றுப் பித்தலாட்டங்களை கண்டு கொள்ள மறுக்கும் இவர்கள் ஊருக்கு உபதேசம் சொல்வது நகைப்பிற்கிடமானது.

    திருவாரூரில் நான் ஆண்டு சந்தா கொடுக்கும்போது அந்த நண்பர் சேவைக் கட்டணம் (Service Charge) கேட்பார்கள் என்றார்.  அதனால் என்ன? கொடுத்துவிட்டால் போச்சு என்றேன்.  எவ்வளவு என்று கேட்டதற்கு ரூ. 10 அல்லது ரூ. 20 கொடுத்தால் போதுமென்றார்.  என்னுடன் சேர்த்து எனது நண்பருக்கும் சந்தா அளித்தேன்.  மே மாதம் ஒன்றிலிருந்து இதழ்கள் வந்தன.  10 நாட்கள் மட்டும் தொடர்ந்து வந்தது.  பிறகு திடீரென்று இதழ்கள் வரவில்லை.  மறுநாள் ஏனென்று கேட்கும் போது வரவில்லை என்ற ஒரு வார்த்தைதான் பேப்பர் போடும் பையனிடமிருந்து பதிலாக வரும்.  ஆனால் வராத நாளன்று தினமணி - எக்ஸ்பிரஸ் இரண்டும் கடைகளில் விற்பனைக்குக் காத்திருக்கும்.  பணம்  கொடுத்து வாங்கியாகவேண்டும். வேறு வழியில்லை.

    நமது தொடர்பு விட்டு விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ சில நாட்களில் ஒரு இதழ் மட்டும் நமக்கு பிச்சை போடுவார்கள்.  சராசரியாக மாதத்தில் 10 நாட்கள் இரு இதழ்களும் 10 நாட்கள் ஏதேனும் ஒன்றும் வராமற்போவது வாடிக்கை.

   அன்று தினமணியோ எக்ஸ்பிரசோ படித்தாக வேண்டும் என்று நமக்கு அரிப்பு ஏற்பட்டால் பேருந்து நிலையம் சென்று பணம் கொடுத்து வாங்கிப் படிக்கலாம்.  பேப்பர் போடுபவரிடம்  வரவில்லை என்பதைத் தவிர வேறு எந்த பதிலும்  வராது.  காலதாமதமாக வந்தால் அடுத்த நாள் கொடுக்கலாமே என்றால் அதுவும் இல்லை.

    மாதம் முடிந்த பிறகு சர்வீஸ் சார்ஜ் கேட்ட பேப்பர் போடும் பையனிடம் பேப்பர் போடாத நாட்களின் விவரங்களையும் அதற்குரிய பணத்தில் சேவைக் கட்டணம் போக மீதித் தொகையைத் தருமாறு கேட்டேன்.  பதிலில்லை.  நான் சண்டை போடுவதாக அவர்  முகவரிடம் சொல்லியிருக்க வேண்டும்.

    இதழ் கிடைக்கவில்லையா போன் செய்யுங்கள் என செல்போன் மற்றும் தரைவழி இணைப்பு எண்களை தினமணியில் கொடுத்திருப்பார்கள்.  அவர்களுக்குத் தொடர்பு கொண்டு பலமுறை புகார் செய்திருக்கிறேன்.  கடிதம் எழுதியிருக்கிறேன்.  தினமணி நிர்வாகத்தின் எக்ஸிகியூட்டிகள் பெயர், முகவரி எல்லாம் கேட்டு விட்டு போடச் சொல்கிறேன் என்பார்கள்.  மறுபடியும் அதே நிலைதான் நடக்கும்.

    ஒரு முறை அவர்கள் சொன்ன செல்போன் எண்ணுக்குப் புகார் செய்து
திரு. வேங்கடராமன்    என்பவருடன் பேசியபோது நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கவில்லை என்றார்.  எவ்வளவு என்றேன். ரூ. 20 என்றார்.  தினமும்
ரூ. 1/- வீதம் மாதத்திற்கு ரூ. 30 தருகிறேன்.  தினமும் பேப்பர் போடச் சொல்லுங்கள் என்றேன்.  ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் பேப்பர் போடவில்லையோ அதற்குரிய தொகையை யார் ஈடு செய்வது என்று கேட்டேன்.  நீங்கள் சண்டையிடுவதாக புகார் உள்ளது என்றார்.  எந்தக் காவல் நிலையத்தில் FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டேன்.  இவ்வாறாக நீண்ட விவாதத்தில் அவர் என்னை சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வலியுறுத்தினாரே தவிர தினமும் பேப்பர் வரும் என இறுதிவரை உறுதியளிக்கவில்லை.

    அப்புறம் கொஞ்ச நாள் இதழ்கள் வந்து கொண்டிருந்தது.  சில நாட்கள் இரண்டும் வருவதில்லை.  பல மாதங்களாக ஏதேனும் ஒரு இதழை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தனர். நம் தொடர்பு விட்டு விடக் கூடாது என்பதற்காகவும் ஏதோ பிழைத்துப் போகட்டும் என்றும் இருந்திருப்பார்கள் போலும்.

    எனக்கு மட்டுமல்ல என் நண்பருக்கும் இதே கதைதான்.  அவர் சொன்னார்... நமக்காவது பரவாயில்லை. நமது பள்ளிக்கு முழுதாக 100 நாட்கள் கூட இதழ்கள் வரவில்லை.  இந்த ஆண்டு போய்த் தொலைந்து போகட்டும்.  இனிமேல் இவ்வாறு ஏமாற வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்தார்.  நானும் எனக்குத் தெரிந்து தினமணிக்கு சந்தா கட்டி ஏமாந்தவர்களிடம் விசாரித்தேன்.  அவர்கள் அனைவரும் சொல்வது, தினமும் இதழ்கள் வருவது குதிரைக் கொம்புதான்.  முகவர்கள் விற்பனையாகாமல் மிச்சமிருந்தால் மட்டுமே நமக்குத் தருவார்கள்.  நிதர்சனம் இதுதான்.  சீட்டுக் கம்பெனிகளிடம் பணம் கொடுத்து ஏமாறுவதில்லையா அதுபோலவே இதையும் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    மே 1 (2011) லிருந்து மார்ச் 31 (2012) வரை இந்தப் போராட்டம் 11 மாதங்கள் தொடர்ந்தது.  ஏப்ரல் 2012 முதல் இதழை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள்.  நான் சந்தா கொடுத்த நண்பரிடம் தகவல் தெரிவித்து விட்டு அமைதியானேன்.

    இந்நிலையில் 23.04.2012 அன்று எனக்கு அஞ்சலட்டை ஒன்று வந்தது.  சந்தா தொடக்கம் 01.05.2011 முடிவு 30.04.2012 - ரூ. 950 செலுத்தி சந்தாவைப் புதுப்பிக்கவும் என்று சொன்னது அந்தக் கடிதம்.  அதில் அதே செல்போன், போன் எண்கள்.  இதுதான் கோபத்தைக் கிளறிவிட்டு என்னை இங்கு எழுத வைத்தது.

     பத்திரிக்கை நடத்துபவர்கள் விற்பனை முகவர்களுக்கு உரிய கமிஷ­ன் கொடுக்க வேண்டியது நியதி.   அது குறைவாக இருந்தால் உயர்த்திக் கொடுக்கப்பட வேண்டும்.  அதற்கு மாறாக சந்தா என்ற பெயரில் தொகை வசூலித்து அவர்களுக்கு இதழ்களைக் கொடுக்காமல் வெளியில் அந்த பிரதிகளை விற்பனை செய்து வருவாய் பார்ப்பதற்கு தினமணி - எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தனது விற்பனை முகவர்களுக்கு மறைமுக ஏற்பாடு செய்துள்ளது இதன் மூலம் தெரியவருகிறது.  இது மிகப்பெரிய மோசடியாகும்.  தினமணி இந்த மோசடியை நிறுத்தட்டும்.  இல்லையென்றால் பம்மாத்து தலையங்கமாவது எழுதாமல் இருக்கட்டும்.

    இதழின் பழைய விலைகளின் படி நாள் ஒன்றுக்கு ரூ. 6.50 அல்லது ரூ. 8.50; புதிய விலைகளின் படி நாளொன்றுக்கு ரூ. 8.50 அல்லது ரூ. 10.00.   ஓராண்டிற்கு ஒரு சந்தாதாரரிடமிருந்து ரூ. 800 முதல் ரூ. 1000 வரை இதழ்கள் பிடுங்கப்பட்டு வெளியே விற்பனை செய்யப்படுகிறது.   தினமணி நிர்வாகத்திற்கு சந்தாவும் கிடைத்து விட்டது.  முகவர்களுக்கு பணம் கிடைத்தாகி விட்டது.  ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்.  இந்த முறைகேடான நடைமுறையை நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பதன் பின்னணி விளங்கவில்லை.  எனவே இதுவோர் கூட்டுக் கொள்ளை என்று சொன்னால் மிகையில்லை.
       
    மாதத்திற்கு 10 நாட்களுக்கு மேல் பேப்பர் போடாமல் இருக்கும் முகவர் எதிர்பார்க்கும் சேவைக் கட்டணத்தின் நியாயத்தைப் பேசும் நிர்வாகம் சந்தா கட்டியவருக்கு தினமும் பேப்பர் போக வேண்டிய நியாயத்தைப் பற்றி ஏன் பேச மறுக்கிறது?   அரசுப் பள்ளிகளுக்கு போடும் பேப்பர் மூலம் முகவர்கள் பெருங்கொள்ளை அடிக்கின்றனர்.  நிர்வாகம் கண்டு கொள்ள மறுக்கிறது.  அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் (RMSA) இதழ்களுக்கு அளிக்கப்படும் தொகை இவ்வாறு விரயமாவது கூட லஞ்சம் போலத்தான்.

பல்கிப் பெருகும் சிறுபத்திரிக்கை வீச்சு

சிற்றிதழ் அறிமுகம்: அடவி - 7, ஜனவரி - 2012.
 
 பல்கிப் பெருகும் சிறுபத்திரிக்கை வீச்சு
 
 - மு. சிவகுருநாதன்
 
 
 
 இன்றுள்ள நவீன கணினி யுகத்தில் கிடைக்கும் பலதரப்பட்ட வசதிகளைக் கொண்டு பணம் இருந்தால் மட்டும் சிறுபத்திரிக்கைகளைச் செம்மையாக, அழகுற அச்சிட்டு வெளிக் கொண்டு வர முடியும். அவற்றை வாசகர்களின் கையில் சேர்ப்பது, தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் மீண்டு வருவது போன்ற பல்வேறு படிகளைத் தாண்டி வர வேண்டியுள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து தில்லை முரளி ஆசிரியப் பொறுப்பில் அடவி இதழ் 07 ஜனவரி 2012இல் வெளிவந்துள்ளது.  இந்த இதழில் 
ஜே.பி. சாணக்யா, ஜோஸ் அன்றாயன் ஆகியோரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  ஜோஸ் அன்றாயனின் "இங்கு மூத்திரம் கழிக்காதீர்" கதையில் எள்ளல், பகடி சிறப்பாக வந்துள்ளது.

"உலக ஆட்சிக்கான சிவில் சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதே உலக கார்ப்பரேட் மற்றும் அரசுகளின் நிதி உதவி பெற்று இயங்கும் என்.ஜி.ஓக்கள்" (பக்.04) என்று சொல்லும் ஜமாலன் கட்டுரை (மேலே பூதம் கீழே கடல் - சிவில் சமூகமும் அரசு சாரா சமூகமும்) முதலாண்மை நிறுவனங்களின் உலக ஆட்சிச் செயல்பாடுகளை விளக்குகிறது.

"வர்ண - தர்மத்திற்கு அப்பால் சிவில் சமூகம் என்கிற பொதுவெளி சாத்தியமற்ற நிலையில், சிவில் சமூகம் பற்றிய நிறைய பேச்சுகள் சமீப காலங்களில் பெருக்கப்படுகின்றன.  இந்திய சிவில் சமூகத்தில் சாதியத்தின், சாதியக் குழுக்களின் பங்கு என்ன என்பதைத் தீர்க்காமல், சிவில் சமூகம் என்கிற குடியாண்மைச் சமூகத்தை உருவாக்க முடியாது" (பக். 05) என்று கூறும் ஜமாலன்

"காவல்துறை, இராணுவம், நீதி பரிபாலன சட்ட அமைப்பு உள்ளிட்டவற்றைக் கொண்ட வன்முறை சார்ந்த கருவிகளை வெளிப்படையானதாக வைத்து உள்ளது.   குடும்பம், கல்வித்துறை, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட குடியாண்மைச் சமூகம் கருத்தியல் வழியாக இணக்கமான மனநிலையை உருவாக்குவதாக உள்ளது.  ஓர் அரசமைப்பு வன்முறைக் கருவிகளைக் கொண்டு மட்டுமே ஆள முடியாது, அதிகாரம் செலுத்த முடியாது.  தனது ஆளுகையை ஏற்கக் கூடிய தன்னிலைகளை உருவாக்க வேண்டும்.  அதற்கு இந்த அரசு சாரா, தன்னார்வ, தொண்டு நிறுவனங்கள் பணியாற்றுகின்றன". (பக். 06) என்றும் கணிக்கிறார். 

"சிவில் சமூகம் என்பது அரசிற்குச் சமமான அதிகாரத்தைப் பெற்றதாக முன் வைக்கப்படுகிறது.  இந்தியாவில் அன்னா ஹசாரேவின் அரசியல் அதைத்தான் முன் வைக்கிறது" என்றும் விளக்குகிறார்.

    பத்தி (தக்கார் தகவிலார்) பகுதியில் வல்வில் ஓரி எந்தச் சாதி? என்ற ஆய்வில் ஈடுபடும் பெருமாள் முருகன், அவன் பெயரிலுள்ள அடைமொழிக்கேற்ப கொங்குப்பகுதி வேட்டுவர்களுக்கு ஓரியின் சாதி என்று கொண்டாட உரிமை உள்ளது என்ற முடிவுக்கு வருகிறார்.

கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரிக்கு அரசு விழா எடுக்கிறது.  இவ்விழாவில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்து விடுவதால் அதற்குப் பயந்து அவர்களனைவரும் இவ்விழாவைப் புறக்கணித்து விடுகிறார்கள்.  சென்ற ஆண்டு விழாவில் (02.08.2011) கொங்கு இளைஞர் பேரவையின் சட்ட மன்ற உறுப்பினர் 
உ. தனியரசு மட்டும் கலந்து கொண்ட செய்தியைச் சொல்லியிருக்கிறார்.  தஞ்சை பெரிய கோயில் குறித்தும் இம்மாதிரியான நம்பிக்கை இருப்பதாலும் அங்கு இதே கதைதான்.  இவர்களைத் திருத்தவே முடியாது. 

புரட்சி மனம் கொண்ட அழகுமிக்க பிலடெல்பியப் பெண்ணுக்கும் பாகிஸ்தானியக் கவிஞரான அரசியல் நிபுணருக்கு பிறந்த குழந்தை (டேவிட் கோல்மன் ஹெட்லி - 49) இப்படியொரு தீய மயக்கல்கார, அடிப்படைவாதியாகுமென்று யாரும் கண்டறிந்திருக்க முடியாது. (பக். 14) என்று சொல்லும் கையாளுக்கலை (சிகாகோ நீதிமன்றத்தில் தன் உயிரைக் காக்கும் டேவிட் ஹெட்லி) என்ற ஜுலை 2011 த காரவன் கட்டுரையின் முதல் பகுதி விவரிக்கிறது.  போதை மருந்து கடத்தல்காரனான டேவிட் ஹெட்லியை ஒற்றனாக பயன்படுத்திய அமெரிக்கா தற்போது பயங்கரவாத எதிர்ப்பு முகமூடியை அணிந்து கொள்வது வேடிக்கையானது.

'மரண தண்டனை சில சிந்தனைகள்' என்ற கி. பார்த்திபராஜாவின் கட்டுரை (பக். 24) ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.   ராஜீவ் கொலையில் வெளிநாட்டுச் சதி கணக்கில் கொள்ளப்படவில்லை என்பதையும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நடத்தி வரும் நீதிப்போராட்டத்தையும் நமக்கு இக்கட்டுரை நினைவூட்டுகிறது.

மரணத் தண்டனை ஒழிப்புப் போராட்டத்தில் உள்ள பாகுபாடுகளை இக்கட்டுரை வலியுறுத்துவதை ஏற்க முடியாது.  மரண தண்டனையை ஒழிக்கச் சொல்லும்போது அதில் விதி விலக்குகள் ஏற்படுத்துவது நியாயமில்லை.  இந்த மூன்று பேருடன் கூடவே அப்சல் குரு, கஸாப் (நாளை), தர்மபுரி பேருந்து எரிப்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முனியப்பன் உள்ளிட்ட மூவர்  என யாருக்குமே மரணதண்டனை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.  நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்கள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்தவொரு தேசிய இன விடுதலை இயக்கங்களின் மரண தண்டனைகளையும் நாம் எதிர்த்தே ஆக வேண்டும்.

வருங்காலத்தில் நரேந்திர மோடி, ராஜபக்சே, கஸாப், வாரன் ஆண்டர்சன் போன்ற எவருக்கும் அவர்கள் செய்த குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கக் கூடாது என்பதே உண்மையான மரண தண்டனை எதிர்ப்பாக இருக்க முடியும்.  இவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்பதற்கு இவர்கள் செய்த குற்றங்களுக்கு வழக்கு தொடுத்து தண்டனை வழங்காமல் தனி விமானத்தில் வெளிநாடு தப்ப உதவி புரியவேண்டும் என்பது பொருளல்ல.

உயிரைப்பறிக்கும் மரணதண்டனைக்கு சட்டத்தில் இடமிருக்கக் கூடாது.  வாழ்நாள் சிறையை விட ஒரு நிமிடத் தூக்குத் தண்டனை உண்மையான தண்டனையாகவோ குற்றங்களை குறைப்பதாகவோ இருக்க முடியாது என்பதே நிதர்சனம்.  

திரைப்பகுதியில் தார்க்கோவஸ்கியின் 'இவானின் குழந்தைப் பருவத்தை'  ஜி. முருகன் அறிமுகம் செய்கிறார். " பன்னிரண்டு வயதுச் சிறுவனின் ஆன்மாவில் போர் என்ற ராட்சதன் வரைந்த ஒரு காலத்தின் சித்திரம்" இப்படமெனச் சொல்லும் இக்கட்டுரை இப்படத்தின் அனுபவமும், பார்வையும் அந்த்ரே ரூப்ளே படத்திற்கான அஸ்திவாரமாக அமைந்ததையும் வெளிப்படுத்துகிறது. 

"எது நடந்ததோ......"  என்ற குறும்படம் குறித்த பதிவு ஒன்று உள்ளது.  இதழ் தொடர்ந்து வெளிவருவது தமிழ்ச் சூழலுக்கு நல்லது. 

பக். 48 விலை ரூ. 15  
 
 
தொடர்பு முகவரி: 
 
15- மாரியம்மன் கோவில் தெரு,
பவித்திரம் - 606 806,
திருவண்ணாமலை.
 
தொலைபேசி: 99948 80005
மின்னஞ்சல்: adavimagazine@gmail.com 

போராளி கென் சரோ விவா

போராளி கென் சரோ விவா
                                   
                                   - மு. சிவகுருநாதன்(2009இல் 'பயணி' வெளியீடாக யூமா. வாசுகி மொழி பெயர்ப்பில் வெளியான 'ஒகோனிக்கு எதிரான யுத்தம் - ஷெல்லின் கொலைக்களம் - கென் சரோ விவா' நூல் பற்றிய அறிமுகப்பதிவு)   
  
    200 -க்கு மேற்பட்ட இனங்களைக் கொண்ட நைஜீரியா நாட்டின ஒகோனி (Ogoni) இன மக்கள் வசிக்கும் நைகர் நதி பாயும் 404 சதுர மைல் பரப்பு, ஒரு சதுர மைலுக்கு 1500 மக்கள் அளவில் மிக அதிகமான மக்களடர்த்தி உள்ள பகுதியாகும்.  இப்பகுதியில் 1958-ல் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுகிறது.  எனவே இப்பகுதி பிரிட்டிஷ் எண்ணெயக் கம்பெனியான செல் (shell)  மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் கொள்ளை பூமியாக மாறிப்போனது.
  
 ஒகோனி சின்னாபின்னமான கதையை கென் சரோ விவாவின் வார்த்தைகளால் கேட்போம்.

    "ஷெல்லின் துளையிடும் இயந்திரங்கள் ஒகோனியின் இதயத்தை ஆழமாகப் பிள்ககத் தொடங்கின.  அவர்களது இயந்திரங்கள் ஒகோனிகளின் விவசாய நிலத்தை சின்னாபின்னமாக்கின.  வாயுச் சுவாலைகளைத் தேடின.  அவற்றிலிருந்து வெளிவந்த கார்பன் மோனாக்சைடும் மற்ற விஷவாயுக்களும்  என் மக்களின் சுவாச உறுப்புகளில் புகுந்து திணிந்தன."
       
    எண்ணெய் வளம் கொள்ளையடிக்கப்பட்டதால் குடிக்க குடிநீர் இல்லை.  சுவாசிக்க நல்ல காற்று கூட இல்லை.  எனவேதான் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை இன உரிமைச் சங்கம் (Ethinic Minority Rights Organisation of Africa - EMIROAF)  உயிர் வாழ்விற்கான ஒகோனி மக்கள் இயக்கம் (Movement for the Survival of the Ogoni People - MSCOP) ஆகியன தோற்றுவிக்கப்படுகின்றன.

    தூய காற்று, தூய குடிநீர், தூய இருப்பிடம் ஆகியவற்றைக் கேட்டு ஒகோனி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் எழுத்தாளர், மனித உரிமையாளர், கவிஞர், பதிப்பாளர், சூழலியாளர், நாவலாசிரியர், குழந்தை எழுத்தாளர், பத்திரிக்கையாளர், நாட்டுப்புற பாடல் தொகுப்பாளர், நாடகாசிரியர் போன்ற பல்வேறு முகங்கள் கொண்ட போராளி கென் சரோ விவாவின் தலைமையில் வீறு கொண்டெழுந்தது.

    1994இல் எண்ணெய் நிறுவனங்களும் நைஜீரிய ராணுவ அரசு ஒகோனி மக்கள் போராட்டத்தை ஒடுக்கி பல்லாயிரக்கணக்கான ஒகோனி மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.  1994 ஜுனில் கென் சரோ விவா கைது செய்யப்படுகிறார்.

    விவா சிறையில் இருக்கும் போது அரசோடு இணங்கிய ஒகோனித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கான சதித் திட்டத்தை தீட்டினார் என்று பொய்க் குற்றஞ்சாட்டி பல நாடுகள், தலைவர்கள், அமைப்புகள், அறிஞர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தும் நைஜீரியாவின் ராணுவ அரசு  கென் சரோ விவாவை 1995 நவம்பர் 10 அன்று தூக்கிலிட்டுக் கொலை செய்தது.  கூடவே எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர்.  உடன் நைஜீரியா காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட போதும் லண்டனின் காரோட்ட ஒகோனி எண்ணெய் இன்றும் பயன்படுவதை பதிப்புரை பதிவு செய்கிறது.

    சிறையில்  கென் சரோ விவாவால் எழுதப்பட்ட அரசியல் அறிக்கையின் சுருக்கம் யூமா.வாசுகியால் அழகாக மொழி பெயர்க்கப்பட்டு பயணி வெளியீட்டால் சிறப்பாக வெளியிட்டுள்ளது.

    மொசோப்-(MSCOP) ன் வன்முறையற்ற போராட்டங்கள் உயிர் வாழ்வுச் சூழலுக்கான உரிமைகள், மனித உரிமைகள், தனித்த குழுக்களின் உரிமைகள் என மூன்று தத்துவங்களைச் சார்ந்திருப்பதாக  கென் சரோ விவா குறிப்பிடுகிறார். (பக். 38).  ஒகோனியின் உரிமைப் பத்திரமே (Ogoni Bill of Rights - OBR) மொசோபின் (MSCOP)  பைபிளாக மதிக்கப்படுகிறது.  அதன் முக்கிய ­ரத்துகள்

01. நைஜீரியாவுக்குள் ஒகோனிகளுக்கு சுயாட்சி உரிமை.
02. அனைத்து நைஜீரிய அரசு நிறுவனங்களிலும் ஒகோனிகளுக்குப் போதுமான பிரதிநித்துவம்.
03. ஒகோனி வளங்களின் நியாயமான பங்கை ஒகோனி மேம்பாட்டிற்குப் பயன்படுத்துதல்.
04. ஒகோனியின் உயிர் வாழ்வுச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கான உரிமை ஒகோனிகளிடம் நிலையாக இருக்க வேண்டும்.
05. ஒகோனியில் ஒகோனி மொழிகளைப் பரப்பவும் பயன்படுத்தவும் உரிமை. (பக. 38, 39)

    மிகவும் சாதாரண இந்த அடிப்படை உரிமைகளைக் கூட ஒகோனி மக்களுக்குத் தர ஐரோப்பிய, அமெரிக்க ஆதரவு பெற்ற நைஜீரிய ராணுவ ஆட்சியாளர்களால் முடியவில்லை.  மாறாக அடக்குமுறையைத்தான் தந்தார்கள். இந்தியாவெங்கும் தற்போது இதுதானே நடக்கிறது.  இந்நூல் வெளிவருவதற்கான தகுந்த தருணந்தான் இது.
   
    கென் சரோ விவா அகிம்மை முறையிலான அறப்போராட்டங்களையே ஆதரிக்கிறார்.  "புரட்சி மாற்றத்தைக் குறிக்கிறது. அது ஒரு போதும் வன்முறையில் ஈடுபாடு உடையதல்ல" என்று சொல்லும் விவா, "யுத்தங்கள் ஒரு பிரச்சினையையும் தீர்ப்பதில்லை.  கலாச்சாரத்தையும் மக்களின் ஆத்ம ஞானத்தையும் பின்தள்ளுவதைத்தான் செய்கின்றன"  என்று போருக்கெதிரான நிலை எடுக்கிறார்.

    கொல்லப்பட்ட ஒகோனித் தலைவர்கள் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.  "கொபானி எனது நெருங்கிய நண்பர்.  நட்சத்திர விளையாட்டு வீரராயிருந்தார் பேதே.  அவர் ஒரு ஒகோனியாக இல்லாதிருந்தால் நைஜீரியாவின் உயர் பதவிகளை அடைந்திருப்பார்.  எஸ்.என். ஒரேக்-உடன் எனக்கு மிக நல்ல உறவு இருந்தது.  டி.பி.ஒரேக் என் மனைவியின் தந்தையுடைய அண்ணனாயிருந்தார்".  (பக். 69-72) இவர்கள் கொலைக்கான சதித்திட்டம் தீட்டியதற்காகத்தான் விவா பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

    கைதுக்குப் பின்னால் விவா சித்திரவதை செய்யப்பட்டதை அவரே கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

"1994 மே 21ஆம் தேதி நான் கைது செய்யப்பட்டேன்.  உடல் ரீதியானதும் மன ரீதியானதுமான சித்திரவதைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டேன்.  அரசு என்னைத் தனிமைக் சிறையிலிட்டது.  வாரக் கணக்காக உணவளிக்க மறுத்தது.  மாதக்கணக்காகச் சிகிச்சை வசதிகள் கிடைக்கவில்லை.  விசாரணை அதிகாரிகள் என் அம்மாவைச் சாட்டையால் அடித்தார்கள்.  அவரைக் கைது செய்தார்கள்.  அவருக்கு எழுபத்து நான்கு வயது... அவர்கள் என் மனைவியையும் தாக்கினார்கள்.  சிறையிலடைப்போம் என்றும் அச்சுறுத்தல் நிலை நிற்கிறது. என் அலுவலகத்திற்கும் வீட்டிற்குமுள்ள தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்திருக்கிறார்கள்.  மூன்று முறை என் வீட்டையும் அலுவலகத்தையும் விசாரணை அதிகாரிகள் சலித்தெடுத்தார்கள்.  என் சம்பாத்தியங்களையும் அலுவலகக் கோப்புகளையும் ஆவணங்களையும் அவர்கள் தெளிவாகப் பதிவு செய்யாமல் எடுத்துக் கொண்டு சென்றார்கள்". (பக். 87, 88).

    ஒகோனி மக்களின் பூமியையும் மக்களையும் காப்பாற்ற விவாவின் வேதனைக் குரல் படிப்போரை   கலங்க வைக்கிறது.

    "நான் சமாதானத்தை விரும்புவனும் கருத்து வளமுடையவனுமாவேன்.  செழிப்பான நிலப்பகுதியில் தரித்திரர்களாக வாழ விதிக்கப்பட்ட எம்மக்களின் பெருந்துயரம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தது.  அரசியல் ரீதியான ஒதுக்கப்படுதல்களுக்கும் பொருளாதார நசுக்குதல்களுக்கும் உள்ளான எங்களுடைய நிலை எனக்கு வேதனையளிக்கிறது.  பாழ் நிலமாகும் பூமி எனக்குக் கவலையளிக்கிறது.  எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்றும் எங்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றும் நான் ஆசைப்படுகிறேன்".

    "ஆண் - பெண் பேதமில்லாமல் எல்லோரும் அச்சம் நிறைந்தவராயிருக்கின்றனர்.  உடைகளில் ஒட்டுகிற சொந்த மூத்திரத்தைக் கழுவியகற்றுவதற்குக் கூட அவர்கள் அஞ்சுகிறார்கள்.  நைஜீரியாவை ஆபத்திற்குள்ளாக்கியதற்கும் வரும் தலைமுறைகளை அடிமைத்தனத்தில் தள்ளிவிட்டதற்காகவும் நமது செயற்பாடுகள் விசாரணை செய்யப்படும்".
(பக். 93) என்ற கென் சரோ விவாவின் எழுத்துக்களைப் படிக்கும் போது இங்கும் இன்றும் கூட இந்நிலையை தொடர்வதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.  இந்தியாவின் தண்டகாரண்யப் பகுதியில் இயற்கை வளங்களை வேதாந்தா, ஜுண்டால், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ் போன்ற பல்வேறு கம்பெனிகள் கொள்ளையடிப்பதை நம்மால் வேடிக்கைத்தானே பார்க்க முடிகிறது.  வருங்கால தலைமுறையிடம் நாம் விசாரணைக் கூண்டில் நின்றுதான் ஆக வேண்டும்.

    இன்று நமக்கு மின்சாரம் வேண்டுமென்று கூடங்குளம் அணு உலைக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறமோ, அடுத்த பல லட்சம் ஆண்டுகள் அணுக்கழிவுகளை இந்த பூமியில் யார் தலையில் சுமத்தப் போகிறோம்?  இத்தகையப் போராட்டங்கள் வழியே நாம் தான் அதிக பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

    இன்றைய இந்திய - தமிழச் சூழலில் பன்முகப் பரிமாணங்களுடைய கென் சரோ விவாவின் எழுத்துக்கள் அனைத்தையும் தமிழில் வெளிக் கொணர வேண்டும்.  அத்தகைய முன் முயற்சிகளை தமிழப் பதிப்பகங்கள் முன்னெடுக்க வேண்டும்.  அந்த வகையில் இச்சிறிய முயற்சி பெரும் பாராட்டிற்குரியது.

பக். 96 விலை ரூ. 50 ஆண்டு: 2009
 

பயணி வெளியீடு
 

6/11, 4-வது குறுக்குத் தெரு,
எல்லையம்மன் காலனி,
தேனாம்பேட்டை,
சென்னை -  600 086.
 

தொலைபேசி: 94451 24576, 95001 54052.
மின்னஞ்சல்:  
vijay1975@gmail.com

திங்கள், ஏப்ரல் 23, 2012

புத்தகங்களுடனான வாழ்க்கை - பகுதி 0001

புத்தகங்களுடனான வாழ்க்கை - பகுதி 0001  

                                                   -மு.சிவகுருநாதன் 

             (இன்று ஏப்ரல்-23  உலக புத்தக தினம்)

   எழுத்துக் கூட்டிப் படிக்க அப்போது வீட்டில்  'சுதேசமித்திரன் ' கிடைத்தது. அது நின்றுபோன பிறகு அப்பா  'அலைஓசை ' வாங்கினார். பின்னர் அதுவும் மரணிக்க 'தினமணி'க்கு மாறவேண்டிய கட்டாயம் அப்பாவுக்கு. அன்றிலிருந்து தினமணி படிப்பது தலைவிதியாகிவிட்டது. ஏறத்தாழ அனைத்துத் தமிழர்களின் தலைவிதியும் இதுதான். இந்தியாவில் ஆங்கில மொழி நாளிதழ்களுக்கும் வேறுமொழி நாளிதழ்களுக்கும் தேர்ந்தெடுக்க வேறுபட்ட சாய்ஸ் உண்டு. ஆனால் தமிழில் அதிகம் படிக்க விரும்புபவன் தினமணியைத்தான் நம்பியிருக்கவேண்டும். வேறு வழியில்லை. நமது தலையெழுத்து அப்படி. வேறு என்ன செய்வது?

    அப்போதெல்லாம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடைக்கோடியில் இருக்கும் எங்களது குக்கிராமத்திற்கு மாலையில்தான் நாளிதழ்கள் வந்து சேரும். அப்போது தினமணியின் ஆசிரியர் ஏ.என்.சிவராமன். தலையங்கப்பகுதியில் ஏ.என்.எஸ். என்று குறிப்புகள், கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதுவார். இப்போது பக்கமெல்லாம் நிறைக்கும் வைத்தியநாதன் படங்கள் போன்று ஆசிரியரின் படங்கள் நிகழ்ச்சிகள் அன்று வெளியானதில்லை. நூல் மதிப்புரை, வரப்பெற்றோம் பகுதியில் நூல்கள் பற்றிய குறிப்புகள் படிக்கக் கிடைக்கும். 

    குமுதம், ஆனந்த விகடன்  போன்ற இதழ்களை எங்கள் அப்பா வாங்கியதில்லை. அவற்றின் அட்டைப்படம் உள்ளிட்ட சினிமா செய்திகள் அவருக்குப் பிடிக்காத காரணமாக இருக்கலாம். இருப்பினும் சீரியஸ் வாசிப்பிற்கு இவைகள் அன்றெனக்கு உதவவில்லை என்றே சொல்லவேண்டும். அவைகள் இன்றிருப்பதைவிட மோசமான தரத்தில்தான் அன்று இருந்திருக்கின்றன என்கிறபோது இதனால் பெரிய இழப்பொன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

    தினமணி சிலரது ஆசிரியப் பொறுப்பில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்ட காலமொன்று உண்டு. அந்த வகையில் ஐராவதம்  மகாதேவன் ஆசிரியராக இருக்கும்போது தினமணி சுடர், தமிழ் மணி போன்ற அனுபந்தங்கள் வெளியாயின. அதிலுள்ள அறிவியல், தமிழியல் சார்ந்த கட்டுரைகளும் விவாதங்களும் வாசிப்பை மேலும் கூர்மைபடுத்தியதோடு தேடலையும் அதிகப்படுத்தின. பிறகு சிறுவர் மணி வந்தபோது நான் சிறுவனாக இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். தினமணியின் இந்த நிலை கி.கஸ்தூரிரங்கன்  காலகட்டத்திலும் தொடர்ந்தது.

   மாலன் தினமணியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றபிறகு 20 -40 க்குமான இதழ் என்ற போர்வையில் முற்றிலும் வணிகமயமாகிபோனது. இராம.சம்பந்தம் காலத்திலும் இப்போதும் பழ.நெடுமாறன் போன்ற தமிழ் தேசியர்களுக்கும் அர்ஜுன் சம்பத் போன்ற மத வெறியர்களுக்கும் தலையங்கப்பக்கத்தில் அளிக்கப்படும்   முக்கியத்துவம் எஸ்.வி.ராஜதுரை போன்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்கிற ஆதங்கத்தையும் இங்கு பதிவு செய்யவேண்டியுள்ளது. 

     நூலகம் என்றால் என்ன என்று கேட்கக்கூடிய  குக்கிராமப் பின்னணி கொண்ட எனக்கு கிடைத்த ஆசிரியர்கள் நூற்களை வாசிக்கவும் அறிமுகம் செய்யவும் இல்லாத நிலையில் அப்பா முழுவதும் வாசித்தபிறகு தூக்கிப்போடும் தினமணிதான் எனக்குக் கிடைத்த ஒரே சாளரம். அதன் வழியே ஏற்பட்ட இலக்கிய அறிமுகம் நூற்கள் வாசிக்கும் சேகரிக்கும் பழக்கமாக இன்றுவரை ஒருவித போதையுடன் தொடர்வது வேடிக்கையாகத்தானிருக்கிறது.  

                                                                                                   -வாழ்க்கை நீளும்...

ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

அக்னி 5 : 100 கோடி இந்தியர்களின் வயிற்றிலடித்த சாதனை!

அக்னி 5  : 100 கோடி இந்தியர்களின் வயிற்றிலடித்த சாதனை!  

                                                                                       -மு.சிவகுருநாதன்  

      அக்னி 5 ஏவுகணை வெற்றி கிரிக்கெட் வெற்றிக்கு இணையான தேசியப் பெருமிதமாகக் கொண்டாடப்படுகிறது.  ராணுவத்தில் நடைபெறும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளை மறக்கடிக்க இந்தப் போலியான வெற்றிப் பெருமிதம் நமது அரசியல்வாதிகளுக்கு பெரிதும் உதவுகிறது. 

      அக்னி 5 ஏவுகணை ஏவப்பட்டதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா,சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய வல்லரசுகளின் பட்டியலில் நாமும் சேர்ந்துவிட்டோமாம்! வெட்கமாக இல்லை! கல்வி, சுகாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் நாம் எப்போது இவர்களுடன் சேர்வது? 

    அது கிடக்கட்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணில் நாம் என்று 100 இடத்திற்குள் வருவது? லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் பல நம்மை பின்னுக்கு தள்ளுகின்றனவே. ஏன் இலங்கை கூட நம்மைவிட முன்னேதான் இருக்கிறது.

     அக்னி 5 ஏவுகணை முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லி போலிப்பெருமை பேசுவது ஒருபுறமிருக்க , 70 - 80 % மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற வேறோரு செய்தியும் கிடைக்கிறது. நமது அரசியல்வாதிகளும் விஞ்ஞானிகளும் சொல்லிய அணு மின்சாரக் கணக்குதான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. இவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்பதை மக்கள் அனைவரும் உணரும் நாள் விரைவில் வரத்தான் போகிறது.

     10000 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய  அதிகத் திறனுள்ள ஏவுகணைகள் பெரும் வல்லரசுகளிடம் இருக்க வெறும் 5000 கி.மீ. திறனுடைய அக்னி 5 ஏவுகணையை கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடியது என்று சொல்வதுகூட அபத்தமானதுதான். சீனர்களின் உழைப்பை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய நிலையில் அதற்குமாறாக அவர்களுடன் ஆயுதப்போட்டியில் ஈடுபடுவது இந்தியாவை கற்காலத்திற்கு  அழைத்துச் செல்லும் முயற்சியாகத்தான் இருக்கமுடியும்.

    இந்தியா ஒரு வல்லரசு என்று பீற்றிக்கொள்ளவும்    ஐ.நா.  பாதுகாப்பு  சபையில் நிரந்தர உறுப்பினர் தகுதி பெறவும்  ஆயுதக் கொள்முதல் மூலம்
பெரும் கொள்ளைகளில் ஈடுபடவும் இந்திய அதிகார வர்க்கம் முனைந்து நிற்கிறது.   அதற்காக இந்திய மக்களின் வரிப்பணத்தின் பெரும் பகுதியை ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்கிறது. இவற்றின் மூலம் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதக் குவிப்பு வேலைகளிலும் பெருமளவிலான ஊழல்களிலும் ஈடுபடுகிறது. 

      இதற்காக கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இந்திய மக்களுக்குச் செய்துதர மறுத்து இவ்விதமான மனிதகுலத்திற்கெதிரான  ஆயுதக் குவிப்பு வேளைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக வறுமையில் வாடும் இந்தியமக்களின் வயிற்றில் அடிக்கும் பணியை மிகச் செம்மையாக செய்துவருகிறது. 

     இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தின்  இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவின் நீண்ட பாரம்பரியப் பெருமையை கேலி செய்வதாக உள்ளன. மகாவீரர், புத்தர், அசோகர், காந்தி ஆகியோர் பிறந்த இந்திய மண்ணின் பெருமையை இவர்களின் போலிப்பெருமைகள் மூழ்கடித்துக்கொண்டுள்ளன.  

திங்கள், ஏப்ரல் 16, 2012

அணு உலை வெறியர்கள் எங்கே போயினர்?

அணு உலை வெறியர்கள் எங்கே போயினர்?  

                                                                               -மு.சிவகுருநாதன் 


       11.04.2012 அன்று தேதி இ‌ந்‌திநேரப்படி பிற்பகல் சுமார் 2.15 மணி‌க்‌கஇந்தோனேஷியாவின் கடல் பகுதியில் பயங்கநிலநடுக்கமஏற்பட்டது. இ‌ந்த ‌நிலநடு‌க்க‌மரிக்டரஅளவுகோலில் 8.9 பதிவானது.  

     இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உணரப்பட்டது. மேலும்  இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் அடுத்தடுத்து இரண்டு தடவை  பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தையொட்டி முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திருப்பப் பெறப்பட்டது. 

     கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடு‌க்க‌த்தின் காரணமாக   சுனாமி ஏற்பட்டதில்  அந்த நாட்டில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் . அந்த சுனாமி இந்தியாவையும் தாக்கியது. சுனாமியில் அந்தமான்- நிகோபர் தீவுகள் மற்றும்  நாகப்பட்டினம், கடலூர், சென்னை மற்றும் தமிழக கடல் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு  பல ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாண்டுபோயினர்.

     இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் பின்னதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் மிக அதிகமாகப் பதிவாயின. சுனாமி அச்சத்திலிருந்து மக்கள் விடுபடுவதற்கு முன்பாக 14.04.2012 அன்று  குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் அன்று காலை 8.53க்கு ஏற்பட்டது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

   குஜராத்தைத் தொடர்ந்து மும்பையிலும், வட கர்நாடகா மாநிலத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.  மேலும் மகாராஷ்டிரத்தில்  உள்ள சதாரா மற்றும் புனே பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் கூறுகிறது.

     அடுத்ததாக  இரண்டாவது நிலநடுக்கம் சதாராவை மையமாகக் கொண்டு காலை 10.58க்கு ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் ரி
க்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. நாசிக், நவிமும்பை, ரத்தினாகிரி, சோலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    இந்தோனேஷியாவின் (Sunda) சன்டா நீர்ச்சந்தியில் இந்திய நேரப்படி 14.04.2012 அதிகாலை 2 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 5.9 என  பதிவானது. சுமத்ரதீவிலஇன்றமாலை (16.04.2012)  மீண்டுமநிலநடுக்கமஏற்பட்டது. இதரிக்டர் அளவுகோலில் 5.7 ஆபதிவாகியுள்ளது. ஆக நிலநடுக்கங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. சுனாமி அச்சத்திலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டபாடில்லை.
 
    11.04.2012 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது மண்சரிவு செங்குத்தாக இல்லாமல் சரிவாக இருந்ததால் அதிக அளவு கடல் தண்ணீரை தள்ளி சுனாமியை ஏற்படுத்தவில்லையென  ஆய்வாளர்கள் கருத்து சொல்லியுள்ளனர். ஆனால் வேறோருமுறையும் இவ்வாறு நடக்கும் என சொல்வதற்கில்லை.

     16.04.2012 தினமணியில் என்.ராமதுரை கட்டுரையொன்று எழுதியிருக்கிறார். ரிக்டர் அளவுகோலில் 8 ஆ உள்ள நிலநடுக்கங்கள் எப்போதாவது நிகழ்வதால் தமிழகத்திற்கு சுனாமி ஆபத்தை உண்டாக்கக்கூடிய நிலநடுக்கங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லி இயற்கை என்ன செய்யும் என்பதை முன்கூட்டியே கூற இயலாது என்றும் சொல்லி முடிக்கிறார். நாட்டில் சோசியக்கரர்கள் அதிகரித்துவிட்டார்கள். என்னசெய்வது? 

     நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும் பகுதியில் அணு உலைகளை அமைப்பது குறித்து இந்தியாவில் அறிவாளிகள் என்று நம்பப்படும் அப்துல் கலாம் போன்ற தரகுச் சமூகம் எவ்வித வெட்கமும் இன்றி நிலநடுக்கம், சுனாமி பற்றிய பொய்களையும் புனைவுகளையும் கட்டமைத்த போலி விஞ்ஞானிகள்  இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? 

    அவர்களுக்கு ஊதுகுழலாகச் செயல்பட்ட ஊடகங்கள்  வாய்மூடி மவ்னம் காப்பது ஏன்? கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய இவர்கள் வருங்கால சந்ததிக்கு என்ன சொல்லப்போகிறார்கள்? சமூகமும் வரலாறும் இவர்களை மன்னிக்காது என்று மட்டும் இப்போது சொல்லிவைக்கலாம்.

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

திருவாரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

 திருவாரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

                                                                          -மு.சிவகுருநாதன்       விடுதலைக்குயில்கள் (கலை இலக்கிய இயக்கம்) நடத்தும் ,
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம் இன்று (15.04.2012) காலை 11  மணிக்கு திருவாரூர் , ராயல் பார்க் ஹோட்டலின் செனட் ஹாலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    காலை அமர்விற்கு தலைமையேற்ற கம்பீரன் வேலூர் மாவட்டத்திலும் தருமபுரி மாவட்டம் அருரிலும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பெரும் கொண்டாட்டங்களுடன் நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். 
 அம்பேத்கரின் நூல் தொகுப்பு - 17  இங்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதைப்போல அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் தொகுப்புகள் விடுதலைக்குயில்கள் அமைப்பின் மூலம் இனிவரும் காலங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார். 


  அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை தவிர்த்துவிட்டு இங்கு மார்க்சியம் பேசமுடியாது என்ற அவர்,  மார்க்சியப் பாதையில் செயல்படும் விடுதலைக்குயில்கள் அமைப்பு அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரை  அறிமுகம் செய்யவிரும்புகிறது என்றும் சொன்னார்.


      தளபதி கிருஷ்ணசாமி - ஓர் ஆளுமை என்ற தலைப்பில்  யாழன் ஆதி உரையாற்றினார். தோழர் வள்ளிநாயகம் தளபதி கிருஷ்ணசாமியை உரிய முறையில் அறிமுகம் செய்துள்ளார் என்றும் எனது உரைக்கும் அதுவே அடிப்படை என்றும் யாழன் ஆதி குறிபிட்டார். காலை அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

     இரு அமர்வுகளிலும்  இரா. ஓவியா, கு.உமாதேவி, தய்.கந்தசாமி
 ஐ.ஜா.ம. இன்பக்குமார்,  மன்னை மகேஷ்குமார், சிவக்குமார் முத்தய்யா, கலைபாரதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இக்கருத்தரங்கில் பேரா.அரச.முருகுபாண்டியன், பேரா.தெ.வெற்றிசெல்வன், வழக்கறிஞர் சிவ. ராஜேந்திரன், 
கவிஞர் விஷ்ணுபுரம் சரவணன், மகேந்திரன்   மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.