திங்கள், ஆகஸ்ட் 27, 2012

இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்


இன்னும் விலகாத – தொடரும் மர்ம முடிச்சுகள்
                                   – மு.சிவகுருநாதன்
    

     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை எந்தத் தேர்வு நடத்தினாலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகிவிடுகிறது. தொகுதி-2 வினாத்தாள் வெளியான விவகாரம் சந்தி சிரித்து நாறுகிறது. இவ்விவகாரத்தில் வினாத்தாளை வெளிக்கொண்டு வந்தவர்கள் இன்னும் பிடிபட்டபாடில்லை.

         வினாத்தாளை பொறுப்பானவர்களிடமிருந்து வாங்கி விற்றவர், அதை வாங்கித் தேர்வு எழுதியவர்கள் என சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பெரிய இடத்திலிருப்பவர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாக புகார் கூறியுள்ளார். இதற்கு அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கொன்று தொடரப்படலாம். ஆனால் இவ்விஷயத்தில் உண்மை என்ன என்பதுதான் புரியாத புதிராகவும் மர்மமாகவும் உள்ளது.

   தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் வந்தபிறகுதான் தேர்வாணையம் மிகச் சிறப்பாக செயல்படுவதாக மக்களை நம்பவைத்து ஏமாற்றும் தினமணி போன்ற ஊடகங்களும் பிறரும் வாய்திறக்க மறுப்பதன் மர்மம் நமக்கு விளங்கத்தான் செய்கிறது.

  இந்நிலையில் ஜூலை – 12 ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை (23.08.2012) இரவோடிரவாக அவசரகதியில் வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பதவிக்கான பட்டயப் பயிற்சி (D.T.Ed) முடித்தவர்களுக்கான தாள்-1 தகுதித் தேர்வில் எழுதிய 2,83,806 பேரில் 1,735 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விழுக்காடு 0.61%. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வியியல் பட்டம் (B.Ed) படித்தவர்களுக்கு நடத்தப்பட்ட தாள் -2 தகுதித் தேர்வில் எழுதிய 3,83,616 பேரில் வெறும் 713 பேர் மட்டுமே தேர்வாயினர். தேர்ச்சி விழுக்காடு 0.19%. இரு தாள்களையும் எழுதியோர் 57,000 தேர்வர்களில் 83 தேர்வர்கள் மட்டுமே 60% மதிப்பெண்கள் பெற்று தேர்வாயினர்.

  90 நிமிடங்கள் 150 வினாக்களுக்கு பதிலளிக்க போதுமானதல்ல என்பது மட்டுமல்லாது பல்வேறு குளறுபடிகள் காரணமாகவே தேர்ச்சி இந்த அளவிற்கு குறைய நேரிட்டது. இதை அரசும் வாரியமும் நேரடியாக ஒத்துக் கொள்ளாவிட்டாலும் மறு தேர்வு, இனி 3 மணி நேரம் கால அவகாசம் உயர்த்தியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

     இந்த 90 நிமிடத்தில் 150 வினாக்களில் 142 க்கு சரியான விடையளித்து நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பி.சித்ரா என்ற தேர்வர் முதலாவதாக வந்து கின்னஸ், ஒலிம்பிக் சாதனைகளுக்கு நிகரான சாதனை படைத்திருப்பதைக் கண்டு வியப்படையாமல் இருக்கமுடியவில்லை.

     தாள்-1 இல் 150 க்கு 122 பெற்ற எம். திவ்யாவின் சாதனை கூட பரவாயில்லை. பி.எட்., டி.ட்டி.எட். படிப்புகளில் 90% த்திற்கு மேல் வாங்கிக் குவித்தவர்கள் கூட 90 நிமிடத்தில் மூர்ச்சையான போது இது எப்படி சாத்தியமாயிற்று என்று அனைவருக்கும் அய்யம் உண்டாவது தவிர்க்கமுடியாதது. 
 
   TNPSC போன்று இங்கும் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா என்று விசாரிக்க வேண்டியது தற்போதையத் தேவையாகிறது. நள்ளிரவில் அவசர அவசரமாக தேர்வுமுடிவுகளை வெளியிட வேண்டிய அவசியம் குறித்தும் ஆராயவேண்டியுள்ளது. எதையும் சந்தேகி என பெரியோர்கள் சொல்லிருக்கிறார்களல்லவா?

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

ஆசிரியர்களின் தகுதியை எப்படி - யார் நிர்ணயிப்பது?


ஆசிரியர்களின் தகுதியை எப்படி - யார் நிர்ணயிப்பது?
                                  -மு.சிவகுருநாதன்

   ஆகஸ்ட் 13, 14 ஆகிய இரு நாட்களும் சமூகப் பொறுப்பை தாங்களாகவே ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டுள்ள தினமணி தீட்டியுள்ள தலையங்கங்களை மடத்தனத்தின் உச்சம் என்று சொல்லலாம். முன்னது ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பானது; பின்னது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 வினாத்தாள் வெளியானது பற்றியது.

  ஆசிரியர் பணி உள்ளிட்ட எந்தப் பணியானாலும் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியை நிர்ணயம் செய்வது என்ற அடிப்படையே மிகத் தவறானது. மாணவர்களின் மனப்பாடத்திறனை மட்டும் கொண்டு அவர்களின் ஒட்டுமொத்தத் திறன்களை மதிப்பிடுவது எவ்வளவு நம்பகத்தன்மையற்றதோ அதைப்போலத்தான் இதுவும்.

  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எழுத்துத்தேர்வு வைக்கப்பட்டு நியமனம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு தங்களுடைய பணியில் எவ்வித பயிற்சியோ அனுபவமோ இதனால் கிடைப்பதில்லை. பொது அறிவு மற்றும் பாட சம்மந்தமான கேள்விகளுக்கு விடை தெரியும் ஒருவர் அலுவலகப்பணிகளில் திறமையாக செயல்படுவார் என்று எப்படி ஒத்துக்கொள்வது?

   ஆசிரியர் தகுதித் தேர்வு ஒன்றும் அ.இ.அ.தி.மு.க. அரசின் கண்டுபிடிப்பல்ல என்பதை தினமணி முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 இன் கீழ்தான் இத்தகையத் தேர்வு நடத்தப்படுகிறது.  கட்டாய கல்வி உரிமைச் சட்டம்-2009 ஐ கொண்டுவந்த மத்திய அரசுதான் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளையும் ஆசிரியர் பட்டய படிப்பு நிறுவனங்களையும் பல்லாயிரக்கணக்கில் தொடங்க அனுமதிக்கிறது. மாநில அரசும் இந்த முறைகேட்டிற்கு துணை போகிறது.

   புற்றீசல் போல் கிளம்பிவரும் இத்தகைய பயிற்சி நிறுவனங்களில் பயின்றவர்கள் தகுதித்தேர்வில் பெருமளவு தோல்வியடைந்துள்ளார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்லும் தினமணி அவர்கள் அனைவரும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தற்போது பணியாற்றிவருபவர்கள் என்கிற உண்மையை வசதியாக மறந்துவிடுகிறது.

  இவர்கள் இப்படி 5 ஆண்டுகள் வரை தோல்வியடைந்தாலும் பணியில் தொடரமுடியும் என்பதே இன்றைய நிலை. இவர்கள் மட்டுமே தரமான கல்வியை அளிப்பதாக தினமணி கருதும் மடமையை என்னவென்பது?

  தனியார் பள்ளிகளை இங்கு வளர்த்தெடுத்தது யாரென்று தினமணிக்கு வேண்டுமானால் தெரியாமற்போகலாம். ஆனால் அனைவருக்கும் தெரிந்த ரகசியமே இது. 

  தனியார் பள்ளிகள் தரமானவை; அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்று இவர்கள் சொல்லும் வாதங்கள் ஒன்றிற்கொன்று முரணானவை. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிபுத்திசாலிகள்; அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூடர்கள் எனும் இவர்களது வாதம் சிறுபிள்ளைத்தனமானது. தேர்ச்சி வீதம் மட்டுமே தரத்திற்கான அளவுகோலல்ல.

  பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தவேண்டும் என்றெல்லாம் அரசுக்குக் கோரிக்கை வைப்பவர்கள், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் வாய்திறக்க மறுப்பதேன்?  அப்பட்டமான பார்ப்பனீயத்துடன் கருத்து சொல்லும் நேர்மையில்லாதவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

  தமிழக அரசுகள் பலமுறை எழுத்துத்தேர்வு வைத்து ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளன. அப்படிப் பார்க்கும்போது எந்தத் தனியார் பள்ளி எழுத்துத்தேர்வு வைத்து திறமையான ஆசிரியர்களைத் தேர்வு செய்தது என்பது தினமணிக்கே வெளிச்சம்.

 ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் படிக்கவைப்பதில்லை என்றும் சட்டத்தின் மூலம் செய்துவிட்டால் அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்துவிடும் என்பது மடத்தனமான கனவு. தரம் தேர்ச்சி விழுக்காட்டில் இல்லை என்று முன்பே சொன்னோம்.

 டாக்டர் கோத்தாரி கல்விக் குழு அருகாமைப் பள்ளிகள் என்ற உயர்ந்த கருத்தாக்கத்தைப் பரிந்துரை செய்தது. நமது மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனுடைய பலனை நாம் அனுபவிக்கிறோம். கல்வியைத் தனியார்மயமாக்கி முழு வியாபாரத்தை அனுமதித்துவிட்டு தற்போது பெயரளவில் மட்டும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வெறும் வெத்துவேட்டு தலையங்கம் எழுத தினமணியால் மட்டுமே முடியும்.

  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பன்னெடுங்காலமாக ஊழலுக்குப் பேர்போனது. அதன் தலைவராக தமிழக காவல்துறையின் முன்னாள் உயரதிகாரி ஆர். நடராஜ் நியமிக்கப் பட்டதிலிருந்தே அவரைப் பாராட்டி பல தலையங்கங்களை எழுதி குவித்தது தினமணி. இதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 வினாத்தாள் வெளியாகி அந்நிறுவனத்தின் நம்பகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் சமயத்திலும் தினமணியின் பார்ப்பனீயத்திற்கு எல்லையேயில்லை.

   நாட்டில் அனைத்து இடங்களிலும் ஊழல் மற்றும் குற்றங்கள் மலிந்துவிட்டநிலையில் ஓய்வு பெற்ற ராணுவ, காவல்துறை உயரதிகாரிகள் அவற்றை சரி செய்துவிடுவார்கள் என்று ஊடகங்களில் கருத்துத் திணிப்பை செய்வது ஒருவகையான பார்ப்ப்பனத் தந்திரமே.  நமது அரசியல்வாதிகளுக்கு மாற்றாக இவர்களை உருவகப்படுத்தி மக்கள் மனத்தில் பரப்புவது ஓருவகையான நரித்தனமே. இவர்களை அமைச்சர்களாக நியமித்துவிட்டால் நாட்டில் ஊழலும் குற்றங்களும் ஒழிந்துவிடுமா என்ன?

   தேர்வாணையத்தின் அருமை-பெருமைகளை ஊடகங்களில் தினமும் பரப்புரை செய்வதுதான் அந்த அமைப்பின் தலைவருக்கு வேலையென்றால் அமைப்பிலுள்ள குறைகள் எவ்வாறு களையப்படும்? இந்த மாதிரியான சாதிவெறிப் பத்தரிக்கைகளும் இதர ஊடகங்களும் குற்றங்களை மூடிமறைக்க பெரிதும் உதவுகின்றன. இந்தப்போக்கு வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.

 வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவது பல ஆண்டுகளாக நடந்துவரும் நிலையில் இந்த புதிய தேர்வணையத் தலைவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கும் மிகுந்த சிரமப்பட்டுத் தேர்வு எழுதியும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் இல்லாமற்போனதேன்? இவர்களின் துதிபாடிகளான இந்த ஊடகக் கும்பல்களும் இதை உணருவதில்லை.

திங்கள், ஆகஸ்ட் 06, 2012

புத்தர் சிலையின் இப்போதைய நிலை - தொடரும் துயரம்


புத்தர் சிலையின் இப்போதைய நிலை - தொடரும் துயரம்
                
                                             -மு.சிவகுருநாதன்

புத்தர் சிலையை மீண்டும் மறைத்திருக்கும் பிளக்ஸ் தட்டி

அருங்காட்சியக வாசல் நோக்கித் திருப்பப்பட்ட புத்தர் சிலை

புத்தர் சிலையின் முன் தோற்றம்

துயரங்களுக்கு மத்தியில் சாந்தமான புத்தர்

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை துணியால் போர்த்தப்பட்டும் பிளக்ஸ் போர்டால் மறைக்கப்பட்டும் உள்ளதை அ.மார்க்ஸ் உள்ளிட்ட நாங்கள் முகநூலில் படத்துடன் வெளிக்கொணர்ந்தோம். அதன் பின்னர் திருச்சி காலைக்கதிர், சென்னை தினமலர் ஆகிய நாளிதழ்களில் படத்துடன் செய்தி வெளியானது. இதனால் பதட்டமான மாவட்ட நிர்வாகம் சேலை மறைப்பையும் பிளக்ஸ் போர்டையும் தற்காலிகமாக அகற்றியது.

  இது குறித்து எனது முகநூல் மற்றும் வலைப்பூ பக்கங்களிலும் கருத்து தெரிவித்திருந்தேன். திருவாரூர் தியாகராஜர் ஆலய மேற்குக் கோபுர வாசலில் மேற்கு நோக்கி அருங்காட்சியக வாயிலில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்போது வடக்கு திசையை நோக்கி அதாவது அருங்காட்சிய வாசலைப் பார்த்திருக்குமாறு திருப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு வாசல் வழியே நடந்து செல்வோரின் கண்களுக்கு புத்தர் சிலை படக்கூடாது என்பதற்காக கோயில் நிர்வாகத்தின் இலட்சார்ச்சனை விழா அறிவிப்பு பிளக்ஸ் கொண்டு வழக்கம்போல் மறைத்து வைத்துள்ளனர். அவ்விடத்தைக் கடப்பவர்கள் உற்றுப்பார்த்தால் மட்டுமே புத்தர் சிலையின் முதுகைப் பார்க்கமுடியும்.

   புத்தர் சிலையை மறைத்து வைக்கவேண்டும் என்பதில் அரசு எந்திரம் மிகவும் கவனமாக இருப்பது தெரிகிறது. அதற்கான காரணத்தை தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், சம்மந்தப்பட்ட தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறைகள் உரிய விளக்கமளிக்கவேண்டும். புத்தர் சிலையை திட்டமிட்டு மறைத்ததுபோல் இருக்கக்கூடாது என்பதற்காக கோயில் நிர்வாகத்தின் பிளக்ஸ் போர்டு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

   சென்னையில் கண்ணகி சிலை மெரினா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்டபோது தமிழகத்தின் பெரும்பான்மை கட்சிகளும் அமைப்புகளும் கண்டனக்குரல் எழுப்பியதை நாடறியும். புத்தர் சிலை அரசு எந்திரத்தால் அவமானப்படுத்தப் படும்போது யாரும் கண்டுகொள்ளாமலிருப்பது வேதனையளிக்கிறது. மத சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ள நாம் வெட்கபடத்தான் வேண்டும். பாமியான் புத்தர் சிலை தலிபான்களால் தகர்க்கபட்டது போன்ற நிகழ்வுகளைக் கேள்வி கேட்கும் அருகதையைக் கூட நாம் இழந்துவிடுவோம் என்று தொன்றுகிறது. இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் கண்காணிப்பது அரசின் கடமையாகும்.

புத்தர் சிலை அவமதிக்கப்பட்ட நிகழ்வில் நமக்கு எழும் வினாக்கள்

  •  ஓர் இந்து சைவக்கோயிலில்  அருங்காட்சியகம் அமைந்திருந்தாலும் அருங்காட்சியக செயல்பாடுகளை எப்படி அறநிலையத்துறை கட்டுபடுத்தமுடியும்? அருங்காட்சியக வாசலில் வைக்கப்பட்ட சிலையை திருப்ப அல்லது மறைக்க உத்தரவிட்டது யார்? 
  • புத்தர் சிலையை அருங்காட்சியக உள்ளே வைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மூடி மறைக்கவும் திருப்பி வைக்கவும் உடன் நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிர்வாகத்தால் ஏன் சிலையை உள்ளே வைக்கமுடியவில்லை?
  •  புத்தர் சிலையை அருங்காட்சியக வாசலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் யார்? யாரிடமிருந்தாவது எழுத்து மூலமான புகார் பெறப்பட்டுள்ளதா? அரசுப்பணியை செய்ய விடாமல் தடுத்த இவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை?
  • திருக்கோயில் நிர்வாகத்தின் பிளக்ஸ் தட்டி வைக்க வேறிடம் இல்லையா? சிலை போர்த்தப்பட்டிருந்தபோதும் இந்த தட்டிதான் மறைக்கப் பயன்பட்டது. கோயில் நிர்வாகம் அல்லது இந்து மத வெறியர்களின் கோரிக்கைகளுக்கு செவிமெடுக்கும் அரசு நிர்வாகம் மத சார்பற்ற சமூக, மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ள மறுப்பது ஏன்? 
  • தமிழகத்திலுள்ள அனைத்து  அருங்காட்சியகங்களிலும் புத்தர், மாகாவீரர் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளபோது இங்கு மட்டும் ஏனிந்த அநியாயம் நடக்கிறது?
  • இப்போது சிலை பற்றிய குறிப்பைக் காணவில்லை. அருங்காட்சியக வாயிலில் வைக்கப்பட்டுள்ள சிலையின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?
  • புத்தர் சிலையை இவ்வாறு அவமதித்தவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
  • புத்தர், மகாவீரர் போன்ற மகான்கள் குறித்த அரசு அலுவலர்களின் பொதுப்புத்தி சார்ந்த கண்ணோட்டம் காவிச்சாயம் படிந்திருப்பதேன்?
  • புத்தர் சிலையை அருங்காட்சியக உள்ளே வைக்காமலும் வேறிடம் கொண்டு செல்லாமலும் காலம் தாழ்த்துவது ஏன்?
  • புத்தர் சிலையை மாற்றப் போகிறார்களா அல்லது அருங்காட்சியகத்தை வேறிடத்திற்கு கொண்டு செல்லப் போகிறார்களா? தெரியவில்லை.