புதன், அக்டோபர் 25, 2017

பள்ளிக் கல்வியில் பாலினப் பாகுபாடுகள்


பள்ளிக் கல்வியில் பாலினப் பாகுபாடுகள்

(விவாதத்திற்கான சில குறிப்புகள்)

மு.சிவகுருநாதன்

   நமது அரசியல் சட்டம், கல்வித்திட்டம், கல்விக் குழுக்கள் என அனைத்தும் பாலின சமத்துவத்தை வலியுறுத்துகின்றன. பாலின சமத்துவம் என்பது வெறும் ஆண் – பெண் சமத்துவம் மட்டுமல்ல; மூன்றாம் பாலினமான மாற்றுப் பாலினத்தவருக்குமான (திருநங்கைகள், திருநம்பிகள்) சமத்துவமே நமது இலக்கு. ஆனால் இத எட்டுவதற்கு நமது கல்வி, பள்ளிகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள், அரசுகள் எல்லாம் தடையாக இருப்பதுதான் நடைமுறை உண்மை. 

   “இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்று சொல்லும் ஆதிக்க சாதி மனோபாவத்திற்கு இணையானது இந்த பாலினப் பாகுபாடுகள். இன்னும் நூற்றுக்கணக்கான தீண்டாமை வடிவங்கள் நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன. அதைப் போல பல்வேறு பாலினப் பாகுபாடுகள் நாட்டில் இருப்பதும் யதார்த்த நிலவரம். கல்வியில், பள்ளிகளில் இந்த பாகுபாடுகள் ஒரு மிகப் பெரிய சமூக அவலம். 

   கந்துவட்டித் தடுப்புச் சட்டம் கொண்டு வந்துவிட்டதாலே அது ஒழிக்கப்பட்டுவிட்டதாக கற்பனை செய்யும் அரசுகள் மற்றும் துறைகள் அவற்றைத் தாண்டிச் செயலளவில் சிறு துரும்பையும் அசைப்பதில்லை. அடிப்படை மனநிலை மாறாத வரையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தில் (RMSA) ஆண்டுதோறும் நடத்தும்  (Gender Sensitization) பயிற்சிகளால் யாதொரு பலனுமில்லை. பெண்களுக்கே இந்த நிலை என்றால் மாற்றுப் பாலினத்தவரை நாம் எப்படி அணுகுவோம் என்பது வெளிப்படை.

  அன்றாடப் பள்ளிச் செயல்பாடுகளில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் சிலவற்றைத் தொகுத்துக் கொள்வோம். • ரெட்டைச்சடை. பெண்களின் தலைமயிரை இரண்டாகப் பிரித்து இறுகக் கட்டி வைப்பதன் மூலம் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் மருத்துவரீதியாக நிருபிக்கப்பட்டும் கூட இன்னும் தொடர்வது எதைக் காட்டுகிறது? நமது அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து குழந்தை உரிமை ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையங்களில் இது வழக்காக பதிவாகியிருக்கிறது. அதன் தீர்ப்பு வரும் வரை இக்கொடுமை தீரப்போவதில்லை. இம்முறை குறித்த மூடநம்பிக்கைகளுக்கு அளவில்லை. (கருப்பை நன்கு வளருமாம்!)  ஆண் குழந்தைகளுக்கு இதன் மூலம் ஏதேனும் நடக்குமா? மூடநம்பியாளார்கள்தான் விளக்க வேண்டும். 
 •  வருகைப் பதிவேட்டில் பெண்களின் பெயர்களை சிவப்பு மையால் எழுதுவது. பொதுவாக சிவப்பு நிறம் எச்சரிக்கைக்கும் (நில், நிறுத்து) மதிப்பீடு செய்வதற்கும் பயன்படுவது. மாணவர் வருகைப் பதிவேட்டில் இந்த நிற வேறுபடுத்தல்கள் எதைக் காட்டுகிறது? இப்பதிவேட்டில் சாதியை எழுதும் கொடுமை இன்னொரு புறம். சாதியம், தீண்டாமை, பாகுபடுத்தல்கள் ஆகியவற்றுக்கும் தொடர்பிருப்பது புலனாகிறது. 
 • குற்ற உணர்வூட்டும் நாஃப்கீன் விநியோகம். தரமற்றதாக இருப்பினும் பள்ளிகளில் நாஃப்கீன் வழங்குவது பாராட்டிற்குரியது. ஆனால் இதை மாணவிகளுக்கு வழங்கும் முறை மிகக் கொடுமையானது; பாலினப் பாகுபாட்டை அதிகப்படுத்துவது. மாணவிகள் வகுப்பிலிருந்து புத்தக்கப் பையுடன் வர அழைப்பு விடுக்கப்படும். நாஃப்கீனை புத்தகப் பையுக்குள் ஒளித்து வைத்துக் கொள்ள கட்டளைகள் பிறப்பிக்கப்படும். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வகுப்புகளுக்கு அனுப்பப்படுவர். “நீ வயசுக்கு வந்திட்டியா?”, என்று கேள்வி கேட்கப்பட்டும் அதன் பின்னர் வழங்கப்படுவதும் உண்டு. எல்லாருக்கும் வழங்கினால் வீட்டில் யாரேனும் பயன்படுத்திவிட்டுப் போகட்டுமே. சாதி, வருமானச் சான்றைப் போல இதற்கும் மருத்துவச் சான்று வழங்க வேண்டுமா என்ன? நமது ஆசிரிய சமூகம் ஏன் இப்படி அணுகுகிறது? முறையான பாலியல் கல்வி இல்லாத சூழலில் இம்மாதிரியான நடவடிக்கைகளின் விளைவுகள் எவ்வாறாக இருக்கும்? நமது கல்விமுறை பாலினப் பாகுபாட்டை நடைமுறைப் படுத்த ஏன் தவறுகிறது?
 • பணிப்பங்கீடு. பெண் குழந்தைகளுக்கு துப்பரவு, தண்ணீர் எடுத்தல் போன்ற பணிகள் ஒதுக்கப்படுகின்றன. 
 • விளையாட்டுகளில் பாகுபாடு. உலக அரங்கில் கிரிக்கெட் போன்ற கார்ப்பரேட் விளையாட்டுக்களைத்  (!?) தவிர்த்து பிற அனைத்து விளையாட்டுகளிலும் பாலினப் பாகுபாடு காட்டப்படுவதில்லை. பள்ளிகளில் மட்டும் ஏனிந்தப் பாகுபாடு?
 • ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனி பள்ளிகள். இது மிகவும் மோசமான அவலம். இந்தச் சமூகத்தில் ஆணோ, பெண்ணோ கலந்து வாழவேண்டிய நிலையில் வகுப்பறையை, பள்ளிகளை பாலினம் வாரியாக பிரிக்கும் கொடுமைக்கு முடிவு காணப்பட வேண்டும்.
 • இரு பாலர் பள்ளிகளிலும் குறிப்பாக 9, 10 வகுப்புகளில் ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனி வகுப்புகள். இதற்கு பள்ளிகள், ஆசிரியர்கள் சொல்லும் காரணங்கள் மிக அபத்தமானவை. வளரிளம்பருவச் சிக்கல்களை எதிர்கொள்ள இது சரியான முறையல்ல. முறையான பாலியல் கல்வி, வன்முறையற்ற ஆலோசனைகள், உளவியல் அணுகுமுறை ஆகியன இதற்கு தீர்வாக அமையும்; தனி வகுப்புகள் அல்ல. தனி கழிவறைகள்தான் தேவையே தவிர தனி வகுப்பறைகள் அல்ல. 
 • ஆண்கள், பெண்கள் பேசிக்கொள்ள தடை விதிக்கும் பள்ளிகளும் உண்டு.
 • மதிய உணவு இடைவேளைகளில் இரு பாலரையும்  தனித்தனி இடங்களில் அமரவைத்தல்.
 • சீருடைகளிலும் கட்டுப்பாடு. இப்படித்தான் ஆடைகள் அணிய வேண்டும், கலர் ரிப்பன், ஹேர் பாண்ட், ஹேர்ப்பின், கொலுசு போன்றவற்றிலும் ஆசிரியைகள் சொல்வதைத்தான் அணிய வேண்டும்; அல்லது அணிந்து வரக்கூடாது. 
 • விழாக்களில் வரவேற்பு போன்ற பணிகளுக்கு பெண்களை மட்டுமே பயன்படுத்துதல்.
 • வரவேற்பு, நடனம், பாரத மாதா வேடம் பூணுதல் போன்றவற்றிற்கு நிறம் அடிப்படையில் பெண்களைத் தேர்வு செய்யும் போக்கு.
 • தமிழ்த் தாய் வாழ்த்து, நாட்டுப்பண் பாட பெண்களை மட்டுமே பயன்படுத்துதல்.  
 • ஏதேனும் சிறு தவறுகள் நடக்கும்போது “பொம்புளப் புள்ள இப்படி செய்யலாமா”, என்று கேட்பதன் மூலம் ஆண் முழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எல்லையற்ற சுதந்திரமளித்தல். 
 • ஆண்களை மையப்படுத்தி, பெண்களை ஓரங்கட்டும் நமது பாடத்திட்டங்கள் மற்றும் பாடநூல்கள்.

     
    நுணுகி ஆராயும்போது இன்னும் நூற்றுக் கணக்கான பாகுபாடுகள் காணக் கிடைக்கும்.  கல்வி சார் சமூகத்தின் மனத்தடைகள் அகல்வதும் அதற்கான வழிமுறைகளைக் கண்டடைவதுமே இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும்.

செவ்வாய், அக்டோபர் 24, 2017

புதிய பாடத்திட்டம், பாடநூல் தொடர்பாக…

புதிய பாடத்திட்டம், பாடநூல் தொடர்பாக…மு.சிவகுருநாதன்
 
        புதிய பாடநூல்கள் உருவாக்குவதற்கான பணிகள் அனைத்து மட்டங்களிலும் மிக விரைவாக நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், அதன் தொடர் பணியாகவும் பாடத்திட்டப் பணிமனை அனுபவங்களின் ஊடாகவும் பாடநூல் உருவாக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் தொடர்ந்த விவாதங்களை முன்னெடுக்கவும் கல்வியில் அக்கறையுள்ள தோழர்கள் பலர் விரும்புகின்றனர்.


       இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 21 (21.10.2017) அன்று சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி, லயோலா கல்லூரிப் பேராசிரியர் ஜோசப் பிரபாகர், மதுரை கலகல வகுப்பறை சிவா, இவ்வாண்டின் புதிய தலைமுறை விருதாளர் திருவாரூர் செ.மணிமாறன் ஆகிய தோழர்களுடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் திரு த.உதயச்சந்திரன் அவர்களைச் சந்தித்து பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கம் குறித்த விமர்சனங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டோம்.

      இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கருத்துப் பகிர்வில் பல்வேறு செய்திகள், கருத்துகள் விவாதிக்கப்பட்டன. எங்களது மற்றும் பிற தோழர்களின் கருத்துகளை எழுத்து வடிவிலும் செயலர் அவர்களிடம் வழங்கினோம்.

        பாடநூல்கள் உருவாக்கத்தில் மிகவும் தனிக்கவனம் கொண்டு செயல்படுவதாகவும் ஒவ்வொரு நிலையிலும் முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும் செயலர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதையும் எடுத்துக் காட்டினார்.

      பாடநூல் உருவாக்கம் மிக எளிமையான பணி என்றும் ஆசிரியர்களுக்கான கையேடு, கற்பிக்கும் முறைகள், பயிற்சிகள் என இவற்றை ஆசிரியர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியே கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

      முன்பு எப்போதும் இல்லாத ஒரு சிறப்பு இப்புதிய பாடநூல் உருவாக்கத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடையலாம். தமிழ், வரலாறு, அறிவியல் போன்ற எந்தப் பாடத்திலும் தீவிர வாசிப்பும் கூர்ந்த பார்வையுடைய பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கிடைத்திருப்பதே நமது எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக்குகிறது.

     அரசியல் காரணங்களுக்காக உதயச்சந்திரன் அவர்களது அதிகாரங்கள் குறைக்கப்பட்ட போதிலும் உயர்நீதி மன்ற உத்தரவால் பாடத்திட்டங்கள் உருவாக்கத்தில் இவரது அதிகாரம் நிலை நாட்டப்பட்டுள்ளது.

     இருப்பினும் கல்வித்துறையில் உள்ள அனைவரும் செயலரைப் போன்று தீவிர வாசிப்பும் கூர்ந்த பார்வையுடையவர்களாக இல்லை என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே வரைவுப் பாடத்திட்டம் இணையத்தில் வெளியாகும்போது அவற்றை ஆய்வு செய்து கருத்துரைக்க தோழர்கள் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திங்கள், அக்டோபர் 09, 2017

நமது பாடத்திட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்?நமது பாடத்திட்டங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்?


மு.சிவகுருநாதன்


(செப்டம்பர் 25 முதல் 28 முடிய  நான்கு நாள்கள் மேற்குத் தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மொழி மற்றும் கலைப் பாடத்திட்ட வடிவமைப்புப் பணிமனை அனுபவங்களின் ஊடாக…)

    பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டம், பாடநூற்கள் பற்றிப் பொதுச் சமூகம் என்றுமே கவலை கொண்டதில்லை. ‘நீட்’ (NEET) தேர்வுக்குப் பிறகு இவை பற்றிய கவனம் சற்றுத் திரும்பியிருக்கின்றன. இதுவும் தற்காலிகமானதுதான்.

   ‘நீட்’ போன்ற போட்டித்தேர்வுகள் எந்தப் பாடத்திட்டங்களின் அடிப்படையில் உள்ளதோ அப்பாடத்திட்டமே மேலானது என்கிற கருத்து இங்கு உருவாக்கப்படுகிறது. இது சரியல்ல. ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின்படி இருக்கிறது என்பதால் அதையே நாமும் பின்பற்றலாம் என்பது சுயநலத்தின் அடிப்படையில் எழுந்ததே தவிர, தரத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டதாகக் கருதமுடியாது. 

   தமிழக அரசின் பாடத்திட்டம் 10 ஆண்டுகளைக் கடந்தது என்று வாதிடும் பலர் சி.பி.எஸ்.சி., என்.சி.இ.ஆர்.டி. ஆகிய பாடத்திட்டங்களும் 10 ஆண்டுகளுக்கு முந்தியவை என்கிற உண்மையை எளிதில் மறந்து விடுகின்றனர். இவற்றை அப்படியே தமிழ்நாட்டுப் பாடத்திட்டமாக மாற்றிவிடலாம் என்று பலர் நினைக்கின்றனர். வரும் ஆண்டுகளில் அவைகள் மாற்றப்படும்போது நாம் என்ன செய்வது என்று வினவினால் யாரிடமும் பதிலில்லை. 

   ஒப்பீட்டளவில் சமச்சீர் பாடத்திட்டம் தரமானது என்று சொல்ல முடியவில்லை. ஆறாம் வகுப்பில் உள்ள சில நல்ல அம்சங்கள் பிற வகுப்புகளில் இல்லை. மிகவும் அவசரகதியில் அரசியல் நிலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்ட அவை மோசமானவை என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். அதைப்போன்ற சூழல் மீண்டும் உருவாவதை தடுக்க வழியில்லாத நிலைதான் இன்றும் உள்ளது வேதனைக்குரியது. 

   கணிதவியல், அறிவியல் பாடங்களைவிட மொழி மற்றும் கலைப்பாடங்கள் மிகுந்த சிக்கலுக்குரியவை என்பதோடு ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் இவை தயாரிக்கப்பட்டாக வேண்டும். இப்படிச் சொல்வதன் பொருள் கணிதவியல், அறிவியல் பாடங்களை எப்படியும் தயாரிக்கலாம் என்பதல்ல. சமூக உறவுகள், நல்லிணக்கம், மொழித்திறன், மொழியாளுமை போன்ற பல்வேறு கூறுகளோடு மாணவர்களது மனதைப் பண்படுத்தும் பணி மொழி மற்றும் கலைப்பாடங்களுக்கு உண்டு. 

   தேர்வுகளை மையப்படுத்தி பாடத்திட்டம் வகுக்கும் நடைமுறை 11 ஆம் வகுப்புக்கு மட்டுமே மாற்றம் பெற்றுள்ள நிலையில் பிற வகுப்புகளில் இந்நிலை மாறும் என்று சொல்வதற்கில்லை.

பார்க்க: எனது முந்தைய பதிவு:  
  
பொதுத்தேர்வுகளை முதன்மைப்படுத்தும் கல்விமுறை.

 https://panmai2010.wordpress.com/2016/11/30/07-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa/

    சாதீய முரண்பாடுகளைப் போல பாடங்களுக்கிடையே உற்பத்தியாகும் முரண்கள் சொல்லி மாளாதவை. பாட ஆசிரியர்களின் இந்த உயர்வு, தாழ்வுப் பேச்சுகள் சகிக்க இயலாதவை. இங்கும்கூட கணிதவியல், அறிவியல் பாடங்களுக்குத் தனியே பாடத்திட்டம் உருவாக்கப்பட்டபிறகு மொழி மற்றும் கலைப்பாடங்களுக்கு தனியே பணிமனை அமைக்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது. இவ்வித வேறுபடுத்தல்கள் அனைத்து நிலைகளிலும் தொடர்வது மிக மோசமானது. இவை கல்வியின் அடிப்படையை சீரழிப்பவை. 

    பிற கல்விமுறையின் பாடத்திட்டங்களை ஒப்பிடுவது என்ற பெயரில் பிரதியெடுப்பது எவ்வளவு மோசமானது என்பதை நாம் உணர்வதேயில்லை. நான்கு பேர் உள்ள ஒரு குழுவிற்கே மாற்றுச்சிந்தனைகளை கடத்தவோ, ஒத்த கருத்து உருவாக்கவோ இயலாத நிலையில் பெரும் ஆசிரியர் சமூகத்தை மாற்றையமைக்க முடியும் என்று தோன்றவில்லை. 

     எந்த ஒரு புதிய கருத்துக்கும், சிந்தனைக்கும் உடனடியாக தடை போடப்படுகிறது. இவ்வகையான மனத்தடைகள் உருவாக சிந்தனைத் தெளிவின்மை, இன்றைய கல்வி முறை உற்பத்தி விளைச்சல், ஜனநாயகத்தில் நம்பிக்கையின்மை, சுயதணிக்கை என்று பல காரணங்களைப் பட்டியலிடலாம். 


   இது வரைவுப் பாடத்திட்டமே; இவற்றில் நமது புதிய சிந்தனைகளைத் தரலாம். ஏற்றுக்கொள்ளட்டும் அல்லது புறந்தள்ளட்டும் என்று சொல்லிக் கூட எவற்றையும் ஜனநாயகத் தன்மையுடன் அணுகும் பக்குவம் ஆசிரியர்களிடம் உருவாகவில்லை.    வகுப்பறையில் ஜனநாயகம் நிலவவில்லை என்றால், பிறகெப்படி நாட்டில் ஜனநாயகத் தலைமைகள் உருவாகும், ஜனநாயகம் செழிக்கும் என்று தோழர் சு.மூர்த்தி வினா எழுப்புகிறார். இந்தக் கேள்வி நியாயமானதுதானே. வகுப்பறையை ஜனநாயகப்படுத்த இயலாத ஆசிரியர்களால் எப்படி ஜனநாயகத்தன்மை கொண்ட ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்? சாதீயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் சிக்கல்களை நமது பாடங்கள் பேசாமல், சிந்திக்காமல் வேறு யார்தான் அவ்வேலையைச் செய்ய முடியும்? 

    மூளை மழுங்கடிக்கச் செய்யும் நமது கல்விமுறை கேள்வி கேட்பதை மட்டுமல்லாது சிந்தனையையும் தடை செய்கிறது. ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக தங்களைத் தகவமைத்துக் கொள்ள பயிற்சியளிப்பது நமது வேலையாக இருக்க முடியாது. இப்படித் தயாரிக்கப்பட்டவர்கள் சுயதணிக்கைக்கு ஆட்படுகின்றனர். கல்வியாளர் அருணா ரத்னம் இவற்றைக் கைவிட தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்.

    கல்வியுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி (சமூக அறிவியல்), தீவிர இலக்கிய வாசகர் விசாகன் (தமிழ்), மாற்றுக்கல்வித் தேடல்மிக்க செ.மணிமாறன் (அறிவியல்) போன்று கல்வியில் மாற்றத்தைக் காணத்துடிக்கும் பலர் பங்கேற்ற இப்பணிமனையில் ஏமாற்றமே மிஞ்சுவதாக அனைவரும் உணர்வதே கெட்டித்தட்டிப்போன கல்விச் சமூகத்தை வெளிப்படுத்துவதாக அமையும்.

   பல்கலைக் கழக, கல்லூரி பேராசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர் மட்டும் புதிய பாடத்திட்டம், பாடநூல்கள் ஆகியவற்றை உருவாக்கிட இயலும் என்று நம்புவதைவிட அபத்தம் வேறு ஒன்று இருக்க முடியாது. இவர்களைக் கல்வியாளர்கள் என்று சொல்வதுகூட சரியானதல்ல. மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கநிலை வகுப்புகளுக்கும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கும் பேராசிரியர்கள் மேனிலை வகுப்புகளுக்கும் என்பதான அதிகாரப் படிநிலை (Hierarchy) மிக மோசமாக நடைமுறையாகப் படுகிறது. இக்குழுவை பேராசிரியர்கள்தான் வழிநடத்தமுடியும் என்பது மிகப்பெரிய விந்தை! கல்வி பற்றிய அடிப்படைவாத அணுகல்முறை கொண்ட தனியார் கல்விநிலையச் சார்புடையவர்கள் இக்குழுக்களில் சரிபாதியாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். 

   பாடத்திட்ட உருவாக்கத்தில் மாணவர்களது பங்கு ஏன் இல்லை? அவர்களிடம் கருத்துகேட்டு, அவற்றில் நடைமுறைப் படுத்த முடிந்தவற்றையாவது முயன்று பார்க்கலாமே! கல்விப்புலப் பணியாளர்கள் தவிர்த்த பிறரது பங்களிப்பை மறுப்பது நல்லதல்ல. 

   கருத்துக் கேட்பு கூட்டங்கள், இணைய வழி கருத்து கேட்பு ஆகியவற்றை இதற்கு மாற்றாகச் சொல்ல இயலாது. கல்விப்புலம் சாராத கல்வியாளர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் பாடத்திட்டம் மற்றும் பாடநூல் உருவாக்கத்தில் பங்கு பெறுவது அவசியம். அவர்கள் தனியார் பள்ளி முதலாளிகளாக இல்லாமல் இருக்க வேண்டும். இணைய வழி கருத்துக் கேட்பில் சாமான்யர்களின் கருத்துகள் வெளிவர வாய்ப்பில்லை. . கல்விப்புலப் பணியாளர்கள் தயாரிக்கும் பாடநூல்கள் ஜனநாயகத்தன்மை மிக்கதாக இருக்கும் என நம்பிக்கைக் கொள்ளும் சூழல் இன்று இல்லை. 

   பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரனின் எண்ணங்கள் ஒருபுறமும் அதற்கு எதிரிடையாக போக்கு இருப்பதையும் உணரமுடிகிறது. புரிதல் இடைவெளி இருப்பதை அவதானிக்க முடிகிறது. நமது கல்விமுறை அன்றிலிருந்து இன்றுவரை இம்மாதிரியான மனிதர்களையே உற்பத்தி செய்கிறது. அந்த விளைச்சல்தான் இங்குள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள். பாடநூல், பாடத்திட்டம் தாண்டிய சிந்தனையை நாம் வளர்த்தெடுக்கவில்லை. எனவேதான் இம்மாதிரியான சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    “தமிழ், தமிழர், தமிழ்நாடு”, என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் சொல்வதை, ஆரவாரமற்ற, உண்மையான, அறிவியல், சூழலியல் தன்மை கொண்ட தமிழக வாழ்வியல் என்பதாக நான் புரிந்துகொள்கிறேன். எழுத்தாளர், சூழலியர் நக்கீரன் போன்றோரின் கட்டுரைகள், நூல்கள் வழியே நமது புனைவுகளற்ற இயற்கையோடு இணைந்த வாழ்வியல் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் இங்கு தமிழர்களின் தொன்மை என்பது லெமூரியாக் கண்டம், குடவோலை முறை, பிற்காலச் சோழர்களின் பொற்கால ஆட்சி என்ற  வட்டப்பாதையில் சுழன்றுவருகிறது. 

எனது முந்தைய எச்சரிக்கையைப் பார்க்க: 

 வரவேற்போம்!  ஆனால்…?

https://panmai2010.wordpress.com/2017/05/26/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ 

      உணவருந்தும்போது, “இரவு எட்டு மணி வரை எழுதும் வேலை, குழந்தைகளுக்காகத்தானே!”, பெருமை பொங்க குறிப்பிட்ட ஒரு ஆசிரியையிடம், “தமிழ் எழுத்துகளை எவ்வாறு அறிமுகம் செய்யப் போகிறீர்கள்?”, என்று வினவினேன். தமிழ் நெடுங்கணக்கின்படியே (அகர வரிசை) சொல்லிக்கொடுக்க வேண்டும். என்றார். “இப்போதுள்ள டகர வரிசையில் என்ன சிக்கல்”,  என்று  கேட்டபோது, “எல்லா மொழிகளிலும் நெடுங்கணக்கு வரிசையில்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்தி, ஆங்கிலம் எல்லாம் அவ்வாறு சொல்லிக் கொடுக்கப்படும்போது தமிழில் இவ்வாறு செய்வதால் மாணவர்களுக்கு மொழியறிவு இல்லாமல் போகிறது”, என்று ஆதங்கப்பட்டார். இதற்கு இந்தியே சொல்லிக் கொடுக்கலாம்!  “குழந்தை அம்மா என்றுதான் சொல்கிறது. நெடுங்கணக்கு வரிசையில்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது”, என்றும் சொன்னார். நம்மவர்களுக்கு எப்போதும் அரசாணை வியாதி உண்டு. “இதற்கெல்லாம் அரசாணை போட இயலாது. அரசாணை போட்டு செயல்படுத்தும் காரியத்தை ஏன் இங்கு உட்கார்ந்து மெனக்கெட்டு எழுதவேண்டும்” என்று சொல்லி முடித்துக் கொண்டேன். 

   அய்ந்தாம் வகுப்புத் தமிழில் ‘செருக்கு’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லை நாம் பயன்படுத்துவதில்லை. பிறகேன் குழந்தைகளை வதைக்க வேண்டும், என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் தமது தொடக்க உரையில் குறிப்பிட்டார். கல்வியாளர் ச.மாடசாமி அவர்களிடம் உரையாடியபோது, மனிதர்கள் அழிவதைப் பற்றிக் கவலைப்படாமல் சொற்கள் அழியக்கூடாதென சங்கத்தமிழ்ச் சொற்களை சேர்க்கும் போக்கு இருப்பதைப் பகிர்ந்துகொண்டார்.

   இறுதிநாளில் தொடக்க நிலை வகுப்பு தமிழ் பாடத்திட்டக் குழுவில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் அகர, டகர வரிசை குறித்து கேட்டறிந்ததையும் டகரவரிசைக்கு ஆதரவாக தான் உள்ளிட்ட இருவர் மட்டுமே கருத்து சொன்னதையும் தோழர் விசாகன் (புதுச்சேரி) எங்களிடம் சொன்னார். 

     அறிவியல் பாடத்தில் சூழலியலுக்கு தனியிடம் அளிக்கப் பரிந்துரை செய்தபோது, அது புவியியலில் இருக்கிறது என உடனடியாக மறுக்கப்பட்ட கதையை தோழர் செ.மணிமாறன் முன்பு தெரிவித்திருந்தார். இதை எங்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதல்ல பிரச்சினை, எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதற்குத்தான் சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் எனப் பலர் தேவைப்படுகிறார்கள். புவியியலில் சூழலியல் எவ்வளவு மொண்ணையாக இருக்கிறது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. அறிவியல் உடலியக்கவியல் பாடத்தில் வெறும் உறுப்பு மண்டலமாகச் சொல்லப்படும் பாடங்கள், வளரிளம் பருவச் சிக்கல்களைத் தீர்க்கும் பாலியல் கல்வியாக மலரவில்லை என்பதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

   வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல்  ஆகியவற்றுடன் கூடவே வணிகவியலை சமூக அறிவியலுடன் அறிமுகம் செய்யும் பரிந்துரைகள் ஏற்றுகொள்ளப்படுகின்றன. சூழலியலுக்கு மட்டும் எதிர்ப்பு வருவதன் பின்னணியை விளங்கிக் கொள்ளவேண்டும். உலகமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ற ஆட்களை உற்பத்தி செய்வதுதான் கல்வியின் பணியா? இந்நிலையில்  மெக்காலே மேல் விமர்சனம் வைக்க நமக்குத் துளியும் தயக்கமில்லை. 

   அரசியல் அறிவியலில் சமூகம், சமூகச் சிக்கல்கள், சமத்துவம், அரசியமைப்பு, இறையாண்மை, உரிமைகள், குழந்தை உரிமைகள் பற்றி முறையான பாடங்கள் இருக்க வேண்டும் என்கிற கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை. என்.சி.இ.ஆர்.டி. மற்றும் அதனையொட்டித் தயாரிக்கப்பட்ட பிற மாநிலப் பாடத்திட்டங்களின் இவை முக்கியத்துவம் பெற்றிருப்பதை இவர்கள் கவனிப்பதேயில்லை. என்.சி.இ.ஆர்.டி. பாடநூல்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டவை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய செய்தி. 

   வரலாற்றுப் பாடத்தில் எதையும் வரிசைக்கிரமமாக (Chronological Order) சொல்லித்தர வேண்டும் என்பதை மாற்ற விரும்புவதில்லை. இதை மாற்றினால் கொலை விழும் போலிருக்கிறது? இதனால் இடைக்கால இந்திய வரலாற்றைப் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் பல அரசுகளையும் பல நூறு அரசர்களையும் படிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாகிறார்கள். பிறகெப்படி அவர்கள் வரலாற்றை விரும்பிப் படிக்க முடியும்?

   இந்த வரிசைக்கிரமம் கூட சரியானதுதானா, நியாயமானதுதானா? சங்ககாலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள் இரண்டையும் ஒன்றுபோலவும் தொடர்ச்சி போலவும் குழம்பி, மாணவர்களையும் குழப்பியும், எது எப்படி போனாலென்ன என்று சோழப்பெருமையை மட்டும் தவறாது விதந்தோதும் தன்மை மட்டும் மாறுவதேயில்லை. மநுநீதிச் சோழன், குடவோலை முறை என்று மாறிமாறிப் பெருமை பேசித் திரிவதை யாரும் நிறுத்தத் தயாரில்லை. 

    கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையுள்ள காலத்தைச் சங்ககாலம் என்று வரையறுக்கிறோம். இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில்   மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களைச் சொல்லிவிட்டு அப்படியே கி.பி. 575 முதல் கி.பி. 850 வரையுள்ள பிற்காலப் பல்லவர்களுக்கோ அல்லது கி.பி. 850முதல் கி.பி. 1299 காலகட்ட பிற்காலச் சோழர்கள் காலத்திற்கோ தாவிவிடுகின்றன நமது பாடநூல்கள். பிற்காலப் பல்லவர்கள் என்றுகூடச் சொல்வதில்லை. பிறகெங்கு காலக்கிரமம் வந்து தொலைக்கிறது? 

   கி.பி. 250 முதல் கி.பி. 575 வரையுள்ள காலகட்ட வரலாற்றையும் சொல்லவேண்டுமல்லவா? அக்காலம் ஏன் இருண்ட காலமாக்கப்பட்டது? களப்பிரர்களைப் பற்றிய பாடம் வைக்க வேண்டுமென்றால், ஆதாரங்கள் இல்லையே என்று பதில் வருகிறது. மயிலை சீனி வேங்கடசாமியின் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்கிற ஒருநூல் போதாதா? 

   மநுநீதிச் சோழன் கதையை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கிறோமே இங்கு நமக்கு வரலாற்று ஆதாரங்கள் ஏன் தேவைப்படவில்லை? உத்தரமேரூர் கல்வெட்டைக் கொண்டு பிற்காலச் சோழர்களின் சாதீயத் திருவுளச்சீட்டு முறையை மக்களாட்சி, தேர்தல் ஆணையம் அளவிற்கு புகழ்ந்து தள்ள, புனைவை வரலாறாக எழுத எந்த ஆதாரங்களை, தரவுகளை நாம் இதுவரைப் பயன்படுத்தினோம்? 

    கி.பி. 250 முதல் கி.பி. 575 வரையுள்ள காலகட்ட களப்பிரர் ஆட்சிக்காலம், அப்போது செழித்திருந்த சமணம், பவுத்தம், ஆசீவகம் போன்ற அவைதீக சமயங்கள் போன்றவற்றைப் நமது பாடநூலில் காண்பதற்கான வழியில்லை. களப்பிரர்களின் தொடர்ச்சியாக செந்தலையை தலைநகராகக் கொண்டு ஆண்ட முத்தரையர்கள், முற்காலப் பல்லவர்கள் ஆகியோரைச் சொல்லாமல் தமிழக வரலாறு முழுமையடையாது.

    கீழடியை பாடத்தில் வைக்க மறுப்பில்லை. ஆனால் சங்ககாலம், கீழடி, களப்பிரர்கள் அனைத்தையும் ஒரே பாடத்தில் சிறு பகுதிகளாக வைக்கலாம் என்றுதான் நமது ஆசிரியப் பெருந்தகைகள் திட்டமிடுகின்றனர். விடுதலைக்குப் பிந்தைய இந்திய, தமிழக வரலாற்றைச் (1947 – 2017) சொல்லவேண்டுமென்று கூக்குரலிட்டாலும் கேட்கத்தான் ஆளில்லை. 

    நமது விடுதலைப் போராட்ட வரலாற்றைச் சொன்னபிறகுதான் அவற்றைச் சொல்லிக் கொடுக்க முடியுமாம்! விடுதலைப்போரைச் சொல்லும் இப்போதைய 10 ஆம் வகுப்பிலும் சமகால வரலாறு ஏதுமில்லை. 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் நிகழ்வுகள், மாற்றங்கள், சிக்கல்கள், சமூக, அரசியல், பொருளாதார நிலை எதையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவிடாமல் ஏன் தடுக்க வேண்டும்? 

   இருக்கின்ற பாடங்களையும் அவற்றின் அமைப்பையும் கொண்டு புதிய பாடத்தைக் கட்ட நினைப்பது அறிவுடைமையாகாது. முற்றிலும் புதிதாக, புதிய கோணம், புதிய சிந்தனையால் இவற்றை உருவாக்க வேண்டும். காலுக்கேற்ற செருப்பே நமது தேவை; செருப்பிற்காக காலை இழக்க முடியாது. இன்றைய சூழல் நம்பிக்கைக் கொள்வதாக இல்லை. இன்னுமொரு தரமற்றப் பாடநூலை நம் குழந்தைகள் கையில் அளிக்க வேண்டாம் என்று அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்வோம்.