ஞாயிறு, டிசம்பர் 29, 2013

திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு உண்மை அறியும் குழு அறிக்கை

திருத்துறைப்பூண்டி காவல்நிலையச் சாவு
உண்மை அறியும் குழு அறிக்கை

                                                                                                                                  திருவாரூர்
                                                                                                               28.12.2013


    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீரக்களூர் சிற்றூராட்சி நங்காளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் (34) என்பவர் சென்ற டிசம்பர் 23 இரவு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் இறந்துபோனதை ஒட்டி அவ்வூர் மக்கள் சாலைமறியல் செய்த செய்தி பத்தரிகைகளில் வந்தது. இது தொடர்பான உண்மைகளை மறைக்க காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் கிடைத்ததையொட்டி இதுகுறித்த உண்மைகளை அறிய மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இதில் பங்கு பெற்றோர்:

01. பேரா. .மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.
02. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.
03. தய். கந்தசாமி, வழக்குரைஞர், திருத்துறைப்பூண்டி.
04. பி.வி. விவேகானந்தன், சமூக ஆர்வலர், திருத்துறைப்பூண்டி..
05. மு. சிவகுருநாதன், சமூக ஆர்வலர், திருவாரூர்.
06. செ. மணிமாறன், சமூக ஆர்வலர், திருவாரூர்.
   இக்குழுவினர் நேற்று (டிசம்பர் 27) முழுவதும் நங்காளி கிராமத்திலுள்ள இறந்துபோன சுந்தரின் பெற்றோர் கா.முருகையன் (75), ராசம்மாள் (65), சகோதரி பிரபா (24), சுற்றியுள்ள வீட்டுக்காரர்களான கந்தசாமி மனைவி வனரோஜா, சுந்தரம் மகன் சண்முகம், கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, நங்காளி கிராமக் கமிட்டி தலைவர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் க.பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி காவல்நிலைய துணைக் கண்காணிப்பாளர் ஆர்.அப்பாசாமி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேட்ரன், மருத்துவமனை புறக்காவல் நிலைய ஆய்வாளர் கோ.ரவிச்சந்திரன் மற்றும் நங்காளி கிராம மக்கள், சாலை மறியலின்போது பேச்சுவார்த்தையில் பங்குபெற்ற சி.பி.எம். கட்சி ஒன்றியச்செயலாளர் சி.ஜோதிபாசு ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினர். திருவாரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் எஸ்.காளிராஜ் மகேஷ்குமார் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினர்.

சம்பவம்

   நங்காளி கிராமத்தைச் சேர்ந்த முருகையன் மகன் சுந்தர் ஓர் டிராக்டர் ஓட்டுநர். இவர் நிரந்தரமாக யாரிடமும் பணி செய்யாமல் ஒரு கால் டிரைவராக (Call Driver) செயல்பட்டுவந்தார். முதிர்ந்த பெற்றோரும் திருமணமாகாத சகோதரியும் அவர் பொறுப்பில் இருந்துள்ளனர். கீரக்களூரைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் மு.கோவிந்தராஜ் என்பவரது டிராக்டர் ஒன்று கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதியன்று காணாமற்போது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பலரையும் விசாரித்துவந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் சென்ற டிசம்பர் 23 ஆம் தேதி இரவு சுமார் 12 மணியளவில் சுந்தரின் வீட்டுக்கு ஒரு டாடா சுமோ காவல்துறை வாகனத்தில் வந்துள்ளனர். திருத்துறைப்பூண்டி காவல்நிலைய ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் வந்த இக்குழுவில் இளங்கோவன், தலைமைக்காவலர்கள் நடராஜன், ரமேஷ் மற்றும் ஒரு ஓட்டுநர் இருந்துள்ளனர்.

சுந்தர்

   கதவைத் தட்டி எழுப்பியவுடன் சுந்தரும் அவரது பெற்றோரும் சகோதரியும் வெளியே வந்துள்ளனர். சத்தம்கேட்டு பக்கத்து வீட்டு வனரோஜா, எதிர்வீட்டு சண்முகம் ஆகியோரும் ஓடிவந்துள்ளனர். சுந்தரை வலுக்கட்டாயமாக தூக்கி காவல்துறை வாகனத்தில் எறிந்து இக்குழுவினர் உடன் அந்த இடத்தைவிட்டு  அகன்றனர். சுந்தர் இவ்வாறு வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி இழுத்துச் செல்லப்பட்ட நிகழ்வை அவரது பெற்றோர்கள், சகோதரி மட்டுமின்றி அண்டை வீட்டுக்காரர்களான வனரோஜா, சண்முகம்
-2-
ஆகியோர் நேரில் கண்டுள்ளனர். நள்ளிரவு நேரமாகையால் அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விடிந்ததும் காவல்நிலையம் செல்லலாமென்று எஞ்சிய இரவு முழுவதும் விழித்தவாறு அமர்ந்திருந்துள்ளனர்.
   24ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில் அவர்களுக்குத் துயரச்செய்தி வந்துள்ளது. விளக்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவர் திருவாரூர் மருத்துவமனையில் சுந்தர் இறந்தநிலையில் கொண்டுவரப்பட்டதை நேரில் பார்த்து கீரக்களூர் பாஸ்கர் என்பவருக்குத் தொலைபேசியில் சொல்ல நங்காளி கிராமத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்துள்ளார். செய்தி உறுதியானவுடன் பெருந்திரளாக நங்காளி, கீரக்களூர், விளக்குடி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாதி மற்றும் கட்சி வேறுபாடுகள் இன்றி மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையிலுள்ள விளக்குடியில் சாலைமறியல் செய்துள்ளனர். இச்செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் படத்துடன் செய்தியாக வெளிவந்துள்ளது. மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார், கோட்டாட்சியர் சுப்பு ஆகியோர் வந்துள்ளனர்.
   கோவிந்தராஜின் டிராக்டர் திருடு போனது தொடர்பாக அவரிடம் சுமார் இரண்டு மாதங்கள் டிரைவராக வேலை செய்த சுந்தரை விசாரிக்க அழைத்துச் சென்றதாகவும், அப்போது அவருக்கு வலிப்பு வந்ததையொட்டி முதலில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் அவரை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கும் கொண்டு சென்றபோது சுந்தர் இறந்துபோனதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
   நீதித்துறை நடுவர் மூலம் விசாரணை நடத்துதல், இரு மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்து வீடியோ படமெடுத்தல், தொடர்புடைய காவல்துறையினர் மீது துறைவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், சுந்தரின் குடும்பத்திற்கு விதிமுறைகளின்படி இழப்பீடு வழங்குதல் என்கிற முடிவுகளைச் சொல்லி  வற்புறுத்தி கிராம மக்களை ஒப்புக்கொள்ளச் செய்தனர்.
    தற்போது நீதித்துறை நடுவர் கே.சிவா விசாரணை தொடங்கியுள்ளார். தஞ்சை டி..ஜி. (பொறுப்பு) அமல்ராஜ் சுந்தரை இழுத்துச்சென்ற நான்கு காவல்துறையினரையும் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.

கவனத்தில் கொள்ளவேண்டிய உண்மைகள்
0
1.  சுந்தருக்கு இதுவரை வலிப்பு நோய் வந்தது கிடையாது. வெளிநாடு செல்வதற்காக அவர் சென்ற ஜூன் 16, 2013 அன்று புதுக்கோட்டை ராஜலெட்சுமி கிளினிக்கில் உடற்பரிசோதனை அறிக்கையை இக்குழு பார்த்தது. அவருக்கு எந்தக்குறையும் நோயும் இல்லை என்பதையும் அவருக்கு வேலைத்தகுதி அளிக்கப்பட்டிருப்பதையும் இக்குழு உறுதி செய்துகொண்டது.
02.  சுந்தர் மீது இதுவரையிலும் காவல்துறையில் எந்தப் புகாரோ வழக்குகளோ இல்லை என்பதையும் இக்குழு உறுதி செய்துகொண்டது.
03.  சுந்தர் நள்ளிரவு 12 மணியளவில் மேற்சட்டைகூட இல்லாமல் வெறும் கைலியுடன் இழுத்துச் செல்லப்பட்டதற்கு அவரது பெற்றோர், சகோதரி தவிர அண்டை வீட்டாராரும் நேரடி சாட்சிகளாக உள்ளனர்.
04.  சுந்தர் மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே இறந்து போயிருந்தார் என்பதை காவல்துறையே ஏற்றுக்கொள்கிறது. திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விபத்துப்பதிவு ஆணையிலும் அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை தலைமைச்செவிலியரும் (மேட்ரன்) மருத்துவமனை புறக்காவல் நிலைய துணை ஆய்வாளர் கோ.ரவிச்சந்திரனும் அவர் இறந்து கொண்டு வரப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
05.  எனவே இது ஓர் அப்பட்டமான காவல் சாவு (Custodial Death) உறுதியாகிறது. ஆரோக்கியமான நிலையிலிருந்த சுந்தர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறையினரால் கடுமையாக அடித்துப்பட்டதன் விளைவாகவே அவர் இறந்துபோயுள்ளார்.
06.  இறந்த சுந்தரின் உடலில் மூக்கருகே ரத்தக்கசிவு இருந்த அடையாளம் இருந்ததெனவும் காதோரம் நரம்புகள் புடைத்திருந்ததாகவும் சுந்தரின் பெற்றோரும் கிராமத்தாரும் கூறுகின்றனர்
-3-
எமது பார்வைகள்

01.  இதுவரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆட்படாத சுந்தரை இப்படி நள்ளிரவு 12 மணிக்கு வீட்டாருக்கு எவ்வித தகவலும் சொல்லாமல் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்க வேண்டிய தேவையேயில்லை. இதுகுறித்து கேட்டபோது காவல் கண்காணிப்பாளர் பகலில் சென்று அழைத்தால் ஓடிவிடுவார் என்பதற்காக அப்படி செய்திருக்கலாம் என்றார். இந்தப்பதில் இம்மியும் ஏற்புடையதாக இல்லை. இதற்கு முன்னதாக சுந்தரை காவல்துறை அழைத்து, அவர் வராமல் போனதாவோ பகலில் வந்தபோது அவர் ஓடிப்போனதாகவோ சம்பவங்கள் இல்லை. தவிரவும் எல்லாவிதமான அதிகாரங்களையும் சட்டங்களையும் கையில் வைத்துள்ள காவல்துறையால் வழமையான குற்றவாளியாக இல்லாத ஒருவரை பகலில் சென்று பிடிக்க இயலாது என்பது அப்பட்டமான பொய்.
02.  இவ்வாறு ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது கடைபிடிக்கவேண்டிய 11 நெறிமுறைகளை புகழ்பெற்ற டி.கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஒட்டப்பட்டிருக்கும் இந்த 11 நெறிமுறைகளில் ஒன்றுகூட சுந்தரின் கைதின்போது கடைபிடிக்கப்படவில்லை.
03.  வலிப்பு நோயின் விளைவாக சுந்தர் இயற்கையாக இறந்துபோனார் என்கிற ரீதியில் இவ்வழக்கை முடித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறையினரை சிறிது காலத்திற்குப் பிறகு பணியில் அமர்த்திவிடலாம் என காவல்துறை முயற்சிப்பது அவர்களது பேச்சிலிருந்து விளங்குகிறது.
04.  டிராக்டர் தொலைந்து போனதாக புகாரளித்த மு. கோவிந்தராஜ் வீட்டில் டிசம்பர் 23 ஆம் தேதி மாலை முதல் சுந்தரை இழுத்துச் சென்ற காவல்துறையினருக்கு விருந்தளிக்கப்பட்டதாகவும் விருந்து முடிந்தபிறகு நேராக நங்காளிக்கு வந்து சுந்தர் இழுத்துச்செல்லப்பட்டார் என உறவினர்களும் கிராமத்தவர்களும் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து இப்படியான புகார் வரும்போது அது உரியமுறையில் விசாரிக்கபட வேண்டும் என்பது நெறிமுறை. இந்த நெறிமுறை கடைபிடிக்கப்படவில்லை. ஆய்வாளர் ராஜகோபால் உள்ளிட்ட நால்வரும் மது அருந்தியிருந்தனரா என்பது சோதனை செய்யப்படவில்லை.

காவல்துறையினரின் கவனத்திற்கு...

01.  காவல்துறையினரின் நலனிலும் மேம்பாட்டிலும் மிக்க அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து காவல்நிலையச் சாவுகளை கண்டித்து வந்துள்ளார். சென்ற மார்ச் 29, 2012 அன்று தமிழக சட்டமன்றத்தில் சி.பி.எம். கட்சி உறுப்பினர் அண்ணாதுரை 9 மாதங்களில் 11 காவல்நிலையச் சாவுகள் நிகழ்ந்ததை கவனத்திற்குக் கொண்டு வந்தபோது தனது அரசு இத்தகைய காவல்சாவுகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமென வாக்குறுதி அளித்தார். சென்ற டிசம்பர் 13, 2013 அன்று காவல்துறை உயரதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர், வீடுகளிலும் பொது இடங்களிலும் பொதுமக்களைப் பாதுகாப்பது காவல்துறையினரின் கடமையென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கையில் காவல்நிலையங்களில் குடிமக்கள் சாவது என்பது நீதியை கேலிக்கூத்தாக்குவது (Travesty of Justice) ஆகும். இங்குமங்குமாக காவலில் செத்துப் போகிறவர்களின் எண்ணிக்கை என்பது காவல்துறையினருக்கு வெறும் புள்ளிவிவரமாக இருந்தபோதும் இறந்தவர்களின் நெருக்கமான உறவினர்களைப் பொருத்தமட்டில் அது வெறும் புள்ளிவிவரமல்ல என்று கூறியுள்ளார்.
02.  இது ஒரு அப்பட்டமான காவல் மரணம். இப்படியான காவல் மரணம் ஒன்றிற்காக மூன்று காவல்துறையினர் சென்ற அக்டோபர் 13, 2013 அன்று சண்டிகாரில் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கும் ஆய்வாளர் ராஜகோபால் உள்ளிட்ட நால்வர் மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யாமல், வலிப்பு நோயால் செத்தார் என இக்குற்றத்தை மூடி மறைத்து, சாவுக்குக் காரணமானவர்களை திருவாரூர் மாவட்டக் காவல்துறை காப்பற்ற முயல்வது நீதியை மட்டுமல்ல; தமிழக முதல்வரின் கூற்றையும் கேலிக்கூத்தாக்குவதாகும்.
 -4-
03.  Custody என்பது ஒருவரை பாதுகாப்பாக வைத்திருப்பது என்ற பொருளைக் கொண்டது. ஒருவர் விசாரணைக்கு காவல்துறையால் அழைத்துச் செல்லப்படுகிறார் என்றால் அவர் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார் என்று பொருள். இப்படி பாதுகாப்பிலுள்ள ஒருவரை அடித்துக் கொல்வது என்பதற்கு நாகரிக சமூகத்தில் இடமில்லை. இத்தகைய காவல்நிலையச் சாவுகளுக்கு, தொடர்புடைய காவல்துறையினரின் இரக்கமற்ற தன்மை என்பதோடு அவசரமாக விசாரித்து முடிக்கவேண்டும் என்கிற அணுகல்முறையும் காரணமாகிறது. Instant coffee என்பதுபோல Instant investigation என்கிற நிலைக்கு காவல்துறை இழிந்துள்ளதாக இதுதொடர்பான ஓர் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது கவனத்திற்குரியது.
04.  சென்ற டிசம்பர் 02 அன்று டி.கே.பாசு வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிக்கஸ் கூரே (amicus curiae) எல்லா சிறைச்சாலைகளிலும் காவல்நிலைய லாக்கப்களிலும் CCTV கேமரா பொருத்தப்பட வேண்டுமென பரிந்துரைத்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் லாக்கப்களிலும் CCTV கேமரா பொருத்தப்பட வேண்டும்.

கோரிக்கைகள்

01.  சுந்தரின் காவல் சாவிற்குக் காரணமான திருத்துறைப்பூண்டி காவல்நிலைய ஆய்வாளர் ராஜகோபால், சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன், தலைமைக்காவலர்கள் ஆகியோர் மீது இ.பி.கோ. 302 பிரிவின்கீழ் கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

02.  இந்தச் சாவு தொடர்பாக குடும்பத்தார் முன்வைக்கும் அய்யங்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும்.

03.  வயதுமுதிர்ந்த பெற்றோர், படித்துக் கொண்டிருக்கும் திருமணமாகாத தங்கை ஆகியோர் இறந்துபோன சுந்தரின் சம்பாத்தியத்திலேயே வாழ்ந்துள்ளனர். இன்று தங்களின் நேசத்திற்குரிய ஒருவரை மட்டுமல்லாமல் வருமானத்தையும் இழந்து அக்குடும்பம் அநாதரவாக நிற்கிறது. இக்குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.

04.  இறந்துபோன சுந்தரின் தங்கை பிரபாவிற்கு அவரது கல்வித் தகுதிக்கேற்ற அரசுப்பணி ஒன்றை வழங்க வேண்டும்.

05.  சென்ற டிசம்பர் 24 அன்று சுந்தரின் காவல் சாவைக் கண்டித்து விளக்குடியில் சாதி மற்றும் கட்சி வேறுபாடுகளின்றி மக்கள் பெருந்திரளாகக் கூடி சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒற்றுமையை இக்குழு மனதாரப் பாராட்டுகிறது. இந்நிலையில் இறந்தவரின் குடும்பத்திற்கு ஒரு தொகையைக் கொடுத்து வழக்கை இல்லாமல் செய்து சாவுக்குக் காரணமான காவல்துறையினரை காப்பாற்ற முயற்சி நடப்பதை எங்கள் குழு அறிந்தது. குறிப்பாக சுந்தர் சார்ந்திருந்த ஓர் அரசியல் கட்சியில் சிலர் இதில் முனைப்பாக உள்ளதாக அறிகிறோம். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அப்படியேதும் நடந்தால் காவல்துறையினரே இதற்கு பொறுப்பாவார்கள். திருக்கோவிலூரில் நான்கு இருளர் பெண்களை வன்புணர்ச்சி செய்த குற்றச்சாட்டிற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து காவலர்கள் அந்த மாவட்டத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என ஆணையிடப்பட்டது போல, இங்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நால்வரும் திருவாரூர் மாவட்டத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என ஆணையிடப்பட வேண்டும்.


தொடர்புக்கு: . மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை – 600020. செல்: 9444120582.

செவ்வாய், டிசம்பர் 24, 2013

தமிழக காவல்துறை செய்த கொலை


தமிழக காவல்துறை செய்த கொலை
                                    -மு.சிவகுருநாதன்
  அண்மையில் சென்னையில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்ற மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்ட்த்தில் லாக்கப் மரணங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியது நினைவிருக்கலாம். உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம், மனித உரிமை ஆணையங்கள் பலமுறை அளித்துள்ள நெறிமுறைகளை காவல்துறை பின்பற்றுவதேயில்லை. தமிழகத்தில் லாக்கப் கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
   
  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலிவலம் காவல் சரகம் கீரக்களூர் சிற்றூராட்சிக்குட்பட்ட நங்காளி கிராமத்தைச் சேர்ந்த்த 34 வயது இளைஞர் சுந்தர் என்பவரை அவருக்குத் தொடர்பில்லாத திருட்டு வழக்கொன்றில் 23.12.2013 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் திருத்துறைப்பூண்டி, ஆலிவலம் காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்டோர் சட்ட விரோதமாக வீடு புகுந்து இழுத்துச் சென்று கடுமையாக தாக்கிக் கொலை செய்துள்ளனர்.

  இக்கொலையைக் கண்டித்து அவ்வூர் மக்கள் திருத்துறைப்பூண்டி – மன்னார்குடி சாலையில் விளக்குடி என்னுமிடத்தில் 24.12.2013 அன்று சாலை மறியல் செய்தனர். அதன்பிறகு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகழ்விடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அம்மக்களிடம் உறுதியளித்துள்ளார். அதன்பின்பு சாலைமறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

  இன்று (24.12.2013) இரவு காவல்துறையால் கொலை செய்யப்பட்ட சுந்தரின் உடல் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீதிபதி முன்னிலையில் மூவரடங்கிய மருத்துவக் குழுவினரால் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

  மரணமடைந்த சுந்தர் சாதாரண ஏழை கூலித்தொழிலாளி. விவசாய வேலைகள், டிராக்டர் ஓட்டுவது போன்ற வேலைகள் செய்து வாழ்க்கை நடத்துபவர். இவருக்கு வயதான பெற்றோரும் மூன்று சகோதரிகளும் உண்டு. இன்று இவர்கள் கவனிக்க ஆளில்லாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடு ஆகியிருந்த்தாகவும் சொல்கிறார்கள். காவல்துறையின் இத்தகைய அத்துமீறல் மூலம் அப்பாவி ஒருவரின் மரணத்துடன் அவரின் குடும்பம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது.

  இனி செய்ய வேண்டியது:

01.இதில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது இ.பி.கோ. 302 பிரிவின்படி கொலைவழக்குப் பதிவு செய்து அவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.

02.உடற்கூராய்வு முறையாக நடைபெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் மீண்டும் உடற்கூராய்வு வேறு மருத்துவக் குழுவினர் கொண்டு நடத்தப்படவேண்டும்.

03.மரணமடைந்த சுந்தரின் குடும்பத்திற்கு ரூ10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.

04.இந்த லாக்கப் மரணம் மற்றும் அதற்குக் காரணமான சுந்தர் மீது போடப்பட்ட வழக்கு குறித்து முறையான நீதி விசாரணை நடத்தப்படவேண்டும்.

05.இனியும்  லாக்கப் மரணம் போன்ற மனித உரிமைகளை காவல்துறை மீறாமலிருக்க உரிய தொடர் நடவடிக்கைகள் அவசியம். எவர் ஒருவரை கைது செய்யும் முன்பு நீதிமன்றங்கள் வலியுறுத்தும் ஆணைகள் பின்பற்றப்பட அரசும் நிர்வாகமும் மெத்தனம் காட்டாமல் செயல்படவேண்டும்.

வியாழன், டிசம்பர் 05, 2013

ஜெயமோகனின் வழக்குரைஞரான புரட்சி எழுத்தாளர்!ஜெயமோகனின் வழக்குரைஞரான புரட்சி எழுத்தாளர்!
-    மு.சிவகுருநாதன்


     இனிய உதயம் டிசம்பர் 2013 இதழில் புரட்சி எழுத்தாளர் பவா.செல்லதுரை அவர்களின் நேர்காணல் வெளியாகியுள்ளது. இலக்கிய உலகில் பேச்சருவி, பேச்சுப்புயல், இடிமுரசு என்றெல்லாம் விளம்பர விரும்பிகள் பெருகிவிட்டார்கள் என்று அங்கலாய்க்கும் இவர் மட்டும் புரட்சி எழுத்தாளரான புதிர்தான் நமக்கு விளங்கவில்லை

      இவரது முன்னோடிகளான சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோர் கூட இம்மாதிரியான பட்டங்களைப் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. இவ்வளவிற்கும் பிறகு மூன்றாம்தர படைப்பாளிகளையும் சினிமாக்காரர்களையும் இலக்கிய உலகம் சகிப்பதை வெறுப்போடு பார்க்கவேண்டுமா? உங்களைப் போன்ற புரட்சி எழுத்தாளர்களையும் ஜெயமோகன்களையும் சகித்துக்கொண்டுதான் பலரும் எதிர்வினையாற்றிவருகின்றனர்.

   இந்த மாதிரியான எழுத்தாளர்கள் தங்களுக்குத் தாங்களே ஒளிவட்டமிட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் என்ன எழுதினாலும் வாசகர்கள் படிக்கவேண்டும். அந்த வாசகனொருவன் ஏதேனும் எழுதிவிட்டால் இவர்களால் பொறுத்துக்கொள்ளமுடிவதில்லை. இதுதான் சுராக்களும் பவாக்களும் ஒன்றிணையும் புள்ளி

     வாசகனை படிக்கக் கட்டாயப்படுத்தும் இவர்கள் எதையும் படிக்கவிரும்புவது கிடையாது. ஜெயமோகனை குற்றம் சொல்பவர்கள் அதற்கான தர்க்க ஆதாரங்களை எழுத்தின்முன் வைக்கவேண்டும் என்று இவர் சொல்லும்போது இவரது வாசிப்பின் ஆழம் நமக்குப் புரிந்துவிடுகிறது. வெறும் படைப்புகளை மட்டுந்தான் வாசிப்பேன் என்று தப்பித்துக் கொள்ளமுடியாது. அப்படியென்றால் இம்மாதிரியான உளறல்களை விட்டுவிடவேண்டும்

   ஜெயமோகனிடம் நட்பாக இருப்பது வேறு; அவரது எழுத்துக்களை மதிப்பிடுவது வேறு. ஒன்றிற்காக மற்றொன்றை பலியிடுவது நியாயமாகாது. கூட்டங்களில் பங்கேற்க பணம் பெறவில்லை, நல்ல அறை போட வலியுறுத்தவில்லை என்பதெல்லாம் அவரது படைப்பை மதிப்பிடக்கூடியதல்ல.

    ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. ஆகியவற்றில் நேரடி உறுப்பினர்கள் மட்டும் இந்துத்துவவாதிகள் என்று சொன்னால் சி.பி.அய்., சி.பி.எம். அல்லது தகஇபெம, தமுஎகச ஆகியவற்றில் இருப்பவர்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்கள் என்றாகும். ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான படைப்பாளிகள் கட்சி அரசியல் சார்ந்து இயங்குவதில்லை. இவர்களை படைப்பின் வழிதான் அணுகவேண்டுமே தவிர உறுப்பினர் அட்டையைக் கொண்டல்ல.

    இன்றுவரை  ஆர்.எஸ்.எஸ். கோட்சேவை தங்களுடைய ஆள் என்று ஒத்துக்கொண்ட்தில்லை. அதைப்போல விடுதலைப்புலிகள் சிவராசனை தங்களுடையவர் என்று சொன்னதில்லை

   ஜெயமோகனை அவரது படைப்புகள், எழுத்துகள் வழியே யாரும் அணுகவில்லை என்பது மிகவும் அபத்தமானது. ஜெயமோகனின் படைப்புகள், கட்டுரைகள் யாவற்றிலும் வெளிப்படும் பாசிசப்போக்கை பல நூறு பேர் பல தளங்களில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.  எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இவற்றை தெரிந்தும் தெரியாததுபோல் பேசுவது பாசிசப்போக்கின் நீட்சியாகவே இருக்கமுடியும்.